Friday, June 24, 2016

சிந்துவெளி நாகரிகம்: 2


அந்த நாகரிகங்கள் திராவிட நாகரிகங்கள் தான் என அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட பல வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகள் மூலம் நிறுவி இருந்தாலும். இன்னும் அந்த நாகரிகம் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.  குறிப்பாக அந்த நாகரிகம் எப்படி அழிந்தது என்பது குறித்த தகவல்கள்.  இன்னும் வரலாற்று ஆய்வாளர்கள் அந்த நாகரிகம் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்கள். அதற்கு சமீபத்திய சான்று ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வு முடிவுகள்.

தமிழகத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், இப்போது ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், முதன்மை நிதிச் செயலாளராகவும் இருக்கிறார். இவர்  தனது 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்னும் ஆய்வு நூலில், ஹரப்பா, மொகஞ்சாதாரோவில் இருந்த  இடப்பெயர்கள் குறித்த ஒரு நெடிய ஆய்வை மேற்கொண்டு தமிழகத்திற்கும், சிந்துவெளிக்கும் உள்ள தொடர்பை நிறுவி உள்ளார். இப்போதும் சிந்துவெளி நாகரிகம் பரந்து விரிந்திருந்த பாகிஸ்தானிலும், அதன் அருகில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானிலும்

- கொற்கை, 
- பாண்டி, 
- கிள்ளி, 
- சேரலா, 
- தோன்றி, 
- குன்று, 
- ஆமூர் 

என்ற பெயர்களில் இடங்கள் உள்ளன என தம் ஆய்வில் எடுத்துரைக்கிறார். 

மொகஞ்தாரோ திரைப்படமும், கோலிவுட்டும்:

நாமும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழனின், பாரதி, காமராஜர் வரலாற்றை சினிமாவாக ஆக்கி இருக்கிறோம் என்கிறீர்களா...? ஆம்தான். ஆனால் அது அனைத்தும் கடந்த காலம். வரலாறு என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த காலத்திலும் நாம் என்ன செய்திருக்கிறோம்?.

நாம் நமது பெருமிதங்களை சினிமாவாக ஆக்க தவறுகிறோம். அதை இன்னொருவர் எடுக்கும் போது,   நம்மை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று நாம் குதிக்கிறோம், போராடுகிறோம். இது எத்தகைய நிலைப்பாடு...?  யூத மக்களின் வலியை உலகமறிய செய்தது சினிமாதான். எத்தனை எத்தனை படங்கள் வந்துவிட்டன. ஏன் நம்மிடமிருந்து அது போன்று படைப்புகள் வருவதில்லை.  இது நம் பிழைதானே...? 

தமிழ் சமூகம் வளமான வரலாறும், அபார கற்பனை திறனும் கொண்டது. அதற்கு எடுத்துக் காட்டு சங்க இலக்கியங்கள். படிப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் உள்ள வர்ணனைகள் அனைத்தும் பிரமிக்கதக்கவை.
வணிக நோக்கில் பார்த்தாலும், நிச்சயம் நம் வரலாறு சுவாரஸ்யமானதுதான் என்பது அப்பாதுரையாரின் குமரிகண்டம் மற்றும் பெ. கோவிந்தசாமியின் சிந்துவெளியும் தமிழர் நாகரிகமும் போன்ற நூல்களை படித்தால் தெரியும்.
வரலாறு தெரியாத இனம் நிச்சயம் வீழ்ந்து போகும். நாம் நம் வரலாற்றை செல்லுலாய்டில் நேர்மையாக பதிவு செய்வோம். வெற்று பெருமைகளை நம் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். நம் உண்மையான பெருமிதங்களையும், வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு சினிமா என்னும் வலிமையான ஊடகம் மூலம் கடத்துவோம். வரலாறு பேசுவது ஒன்றும் அரசியல் அல்ல, அதே நேரம் சினிமாவில் அரசியல் பேசுவதும் தவறு அல்ல.

சிந்துவெளி நாகரிகம்:

மிழர்களுக்கு எப்போதும் தம் வரலாறு குறித்த ஒரு பெருமிதம் இருக்கும். 'தாங்கள்தான் உலக நாகரிகங்களுக்கு எல்லாம் முன்னோடியானவர்கள். ஆதிக்குடி தமிழ்குடிதான்' என்று பெருமைபட்டுக் கொள்வார்கள். மேலும், 'நாங்கள்தான் உலகிற்கு நாகரிகத்தை போதித்தோம். உலகில் பிற இனங்கள் நாகரிகம் அடைவதற்கு முன்பே, தமிழன் நாவாய் கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்து இருந்தான்' என்பார்கள். ஆனால், அந்த வரலாற்றைப் பதிவு செய்வதில் எப்போதும் பின் தங்கி விடுவார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில், லகான் இயக்குநர் அஷுதோஷ் கெளரிக்கர் இயக்கத்தில் வரவிருக்கும் மொகஞ்சதாரோ திரைப்படம்.

சிந்துவெளி நாகரிகம்:
வரலாறு எப்போதும் பல சுவாரஸ்யமான தகவல்களை தன்னுள்ளே கொண்டது. பல வரலாற்றுச் செய்திகள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பிரமாண்டமானதாகவும், பிரமிப்பு தருவதாகவும் இருக்கும். அத்தகைய ஒரு வரலாறுதான் சிந்துவெளி நாகரிக வரலாறு. முதன்முதலில் சிந்துவெளிக் குறித்த தகவல்கள் வெளிவர துவங்கியது 1844 ம் ஆண்டுதான்.
பிரிட்டானிய ராணுவப் பணியை பாதியிலேயே முறித்துக் கொண்டு ஓடிவந்த சார்லஸ் மேசன் என்னும் ஜேம்ஸ் லூயி , பஞ்சாப், ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் ஆகியப் பகுதிகளில் சுற்றி, 'Narrative of Various Journeys in Balochistan, Afghanistan and the Punjab’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் ஹரப்பா நகரச் சிதிலங்கள் பற்றி விவரித்து இருந்தார். அப்பகுதி உள்ளூர் மக்களுடன் உரையாடி, அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், மண்ணிற்கு அடியில் ஒரு நகரம் புதைந்து கிடக்கிறது என்று விவரித்திருந்தார். ஆனால் இது முதலில், படித்தவர்கள் மட்டுமே விவாதிக்கும் பொருளாக இருந்தது. சிந்துவெளி நாகரிகம் குறித்த பிரமாண்ட தகவல்கள் பொது சமூகத்திற்கு தெரியத் துவங்கியது, 1920 களில் தான். ஆம், சர் ஜான் ஹியூபர்ட் மார்ஷல் தலைமையில் 1921 ம் ஆண்டு, சிந்துப் பகுதியில் அகழ்வாராய்ச்சி துவங்கியது. ஹரப்பா, மொகஞ்சாதாரோ உள்ளிட்ட பிரம்மாண்ட நாகரிகம் குறித்த தகவல்கள் அப்போது தான் வெளி உலகத்திற்கு தெரிய துவங்கின.


பிரமாண்ட கட்டடங்கள், மூன்று அடுக்கு வீடுகள்,  நன்கு வடிவமைக்கப்பட்ட நகர கட்டமைப்பு, குளம், குளத்தின் அருகிலேயே உடைமாற்றுவதற்கு இடம் என ஹரப்பாவும், மொகஞ்சாதாரோவும் நாகரிகத்தில் செழித்து இருந்தன என்கிறார்கள் ஆய்வாளர்கள். 


Sunday, May 22, 2016

ராஜாராம் மோகன்ராய்

நவீன இந்தியாவின் முதல் பெருந்தலைவர் என்று ராஜாராம் மோகன்ராயை சொல்வது பொருத்தமாக இருக்கும். 1772 இல் வங்கத்தில் பிறந்தார் இவர். இவரின் குடும்பம் வைணவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. முகலாய ஆட்சியாளர்களின் கீழே வரி வசூல் செய்யும் பணியில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவரின் பால்ய காலத்திலேயே உயர் ஜாதியில் இயல்பாகஇருக்கும் வழக்கத்தால் அவருக்கு இருமுறை திருமணம் செய்துவைக்க பட்டது. முதலில் வங்காளி மற்றும் பாரசீகத்தை கற்று தேர்ந்த பின் பாட்னா போய் அராபிய மொழியை கற்றுக்கொண்டார். அங்கே அவரின் ஆசிரியர்கள் அவருக்கு அரிஸ்டாட்டில்,குரான் மற்றும் பைபிளை அறிமுகப்படுத்தினார்கள். பனாரஸில் அவர் சமஸ்க்ருதத்தை கற்றுத்தேர்ந்தார். இப்படி அவர் கற்ற மொழிகள் மட்டும் ஒரு டஜன் !
அவரின் அண்ணன் இறந்ததும் அவரின் கண் முன்னரே அவரின் எதிர்ப்பையும் மீறி அவரின் அண்ணி சதியால் தீக்கிரையாக்கப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனியில் அதிகாரியாக பல்வேறு ஊர்களில் அவர் பணியாற்றினார். அவரின் முதல் நூல் பாராசீகத்தில் அராபிய மொழியிலான முன்னுரையோடு வெளிவந்தது. அது உருவ வழிபாட்டை தாக்கியிருந்தது. கல்கத்தாவில் வாழ ஆரம்பித்ததும் ஆத்மிய சபையை துவங்கி இந்து மதத்தில் இருந்த மத மற்றும் சமூக தீமைகளுக்கு எதிராக போராட ஆரம்பித்தார்.
பிரம்ம சபையை நிறுவினார் ; பின்னர் அதுவே பிரம்ம சமாஜம் ஆனது. உருவ வழிபாட்டை எதிர்த்ததோடு இல்லாமல் ஜாதிய அமைப்பின் இறுக்கமான தன்மை,அர்த்தமற்ற மத சடங்குகள் ஆகியவற்றை விமர்சனம் செய்தார். ஒரே ஒரு இறைவனை தான் இந்து மதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் வலியுறுத்துவதாக உறுதிபட சொன்ன அவர் இந்திய மதத்தின் பல கடவுள் வழிபாடு,கிறிஸ்துவத்தின் இறைவன்,அவரின் மகன் மற்றும் புனித ஆவி வழிபாடு ஆகியவற்றை நிராகரித்தார். கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தின் தத்துவ வெளிச்சத்தை இந்துக்கள் அறிய வேண்டும் என்று அவர் இயங்கினாலும்,PERCEPTS OF JESUS நூலில் கிறிஸ்துவின் அற்புத செயல்களை சாத்தியமில்லை என்று நிராகரித்தார். இவ்வாறு இரு மதத்து மக்களின் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.
இந்து மதத்தை கிறிஸ்துவ மிஷனரிக்கள் தாக்குவதை தீவிரமாக எதிர்த்ததோடு மத மாற்றத்துக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்தார். மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு பகுதிகளின் தத்துவ சங்கமம் நிகழ வேண்டும் என்று அவர் இயங்கியதோடு எல்லா மதத்தின் நம்பிக்கையாளர்களும் சகோதர்களாக சேர்ந்திருக்க முடியும் என்று நம்பினார். அவரை பழமைவாதிகள் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் ; அதற்கான கூட்டத்தில் இவரை பெற்ற அன்னையே கலந்து கொண்டார். அவரை ஜாதியை விட்டு ஒதுக்கி வைத்தார்கள்.
பதினோரு ஆண்டுகள் சதிக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை அவர் தொடுத்தார். வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை.
மேலும் ஆங்கிலேயே நாடாளுமன்றத்துக்கு சதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சாரார் கடிதம் எழுதிய பொழுது கொண்டு வரக்கூடாது என்று உறுதிபட இவரும் கடிதம் எழுதினார். பல்வேறு இறுதி சடங்கு நடைபெறும் இடங்களில் பெண்கள் தீக்கிரையாக்கப்படாமல் இருக்க உறவினர்களிடம் நெடிய சமரச பேச்சுவார்த்தையை நிகழ்த்துகிற பண்பாளராகவும் அவர் இருந்தார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றும்,பல தார திருமணம் கூடவே கூடாது என்றும் அவர் வாதாடினார்.
ஆண்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளியை துவங்கி அதில் ஆங்கிலம் கற்பிக்க ஆரம்பித்தார். கூடவே இயங்கியல் மற்றும் வால்டேரின் தத்துவங்களை அவர் அங்கே கற்பித்தார். பல்வேறு இதழ்களை நடத்திய இந்தியாவின் பத்திரிக்கை துறை முன்னோடி அவர். வங்க மொழியில் இலக்கணம் சார்ந்து பல்வேறு நூல்களையும் அவர் இயற்றினார். ஜமீன்தார்கள் நிலத்தில் பாடுபடும் தொழிலாளியை சுரண்டுவதை அவர் சாடினார். ஆங்கிலேய அரசு ஒரு நிலத்தில் இருந்து எவ்வளவு வரி பெறப்பட வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை சாடியதோடு இந்திய பொருட்கள் மீதான கடுமையான வரி விதிப்பை நீக்க வேண்டும் என்றும் அவர் முயற்சிகள் எடுத்தார்.
லத்தீன் அமெரிக்காவின் மக்கள் புரட்சி வென்றதும் அவர் ஊரில் உள்ள எல்லாருக்கும் விருந்து போட்டார். அயர்லாந்து மக்களை ஆங்கிலேய அரசு ஒடுக்கிய பொழுது சீர்திருத்த சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக ஆங்கிலேய அரசு நிறைவேற்றா விட்டால் ஆங்கிலேய ஆதிக்கமே இல்லாத பகுதியில் போய் வாழ்வேன் என்று முழக்கமிட்டார். நேப்பல்ஸ் புரட்சி தோல்வியுற்ற பொழுது மனம் வெம்மி முக்கியமான அலுவல்களை ரத்து செய்கிற பண்பும் அவருக்கு இருந்தது. கத்தோலிக்கர்கள் உரிமையோடு பிரட்டனில் வாழ வழி ஏற்பட்ட பொழுது அதை வரவேற்றார்
1831 இல் முகலாய அரசருக்கான ஊக்கத்தொகையை ஆங்கிலேய அரசு ஏற்றித்தர இங்கிலாந்துக்கு பயணம் போன அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். சட்டம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நூல்களை அங்கே இருந்து இயற்றினார். பிரிஸ்டோல் நகரத்தில் தங்கியிருந்த பொழுது மரணமடைந்தார். அங்கே எரிக்க வசதிகள் இல்லாததால் புதைக்கப்பட்டார். அவரின் கல்லறையின் மீது இந்த வாசகங்கள் ஒளிர்கின்றன :
இந்திய மக்களின் சமூக,அற மற்றும் பொருளாதார நிலையை முன்னேற்ற அவரின் ஓயாத உழைப்புகள்,உருவ வழிபாடு மற்றும் சதியை நீக்க அவரின் அக்கறை மிகுந்த முயற்சிகள் இறைவனின் மகிமை மற்றும் மனிதனின் நலத்தை மேம்படுத்துவற்றுக்காக வாதிட்ட ,ஓயாது அவரின் செயல்கள் அவரின் நாட்டு மக்களின் நினைவுகளில் நன்றியோடு நிறைந்திருக்கும்.

எவரெஸ்ட்டை கண்டுபிடித்த இந்தியர் ராதாநாத் சிக்தர் !(Radhanath Sikthar)


ராதாநாத் சிக்தர் என்கிற இந்தப்பெயர் எவரெஸ்ட் சிகரத்தின் கதையோடு உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,துரோகம்,ஆங்கிலேயே ஆதிக்க மனோபாவம் எல்லாமும் அவரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்தன என்பது கசப்பான உண்மை. ஜார்ஜ் எவரெஸ்ட் இந்தியா முழுக்க அளவையியல் செய்கிற பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொழுது அவருக்கு நல்ல கணித மேதைமை உள்ள ஒரு ஆள் தேவைப்பட்டார்.
பத்தொன்பது வயது சிக்தரை கொண்டு வந்து நிறுத்தினார்கள். கோள திரிகோணவியலில் பையன் புலி என்று சொல்லியிருந்தார்கள். அசுர பாய்ச்சல் காட்டினார் அவர். இவரின் திறமையை பார்த்து அசந்து போன எவரெஸ்ட் வேறு வேலைக்கு போகிறேன் என்று சொன்ன இவரை அப்படியெல்லாம் போகக்கூடாது என்று தடுத்து தன்னுடனே வைத்துக்கொண்டார். பின்னர் வானிலைத்துறையில் முக்கிய பொறுப்புக்கு வந்து அங்கேயும் கலக்கி எடுத்தார்.
அவருக்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? ஜார்ஜ் எவரெஸ்ட் ஓய்வு பெற்று வெளியேறியதும் ஆண்ட்ரூ வாக் அப்பதவிக்கு வந்தார். அவரின் கீழே பணியாற்றிய சிக்தர் இமயமலையின் சிகரங்களின் உயரங்களை கணக்கிட்டார். சிக்தர் ஒளிவிலகலை கணக்கில் கொண்டு அளவையியல் செய்வதில் தன்னிகற்றவர்,அவர் ஒரு மனித கணிப்பான் என்றெல்லாம் ஆங்கிலேய அதிகாரிகள் பதிந்திருக்கிறார்கள். ஆறு வெவ்வேறு புள்ளிகளில் இருந்து XV சிகரத்தை அளந்து பார்த்தார் இவர். 8840 மீட்டர் என்று வந்தது ; கடல்மட்டத்துக்கு மேலே உலகின் மிக உயரிய சிகரம் XVஎன்று உறுதியாக வாக்குக்கு அறிக்கை சமர்ப்பித்தார். நான்கு வருடங்கள் காத்திருந்து உறுதி செய்துகொண்டு உலகுக்கு அதை அறிவித்தார் வாக்.
அந்த சிகரத்துக்கு அந்தந்த ஊரின் பெயரை வைப்பது என்பதே வழக்கம். ஜார்ஜ் எவரெஸ்ட்டுக்கு மரியாதை செலுத்த எண்ணிய வாக் எவரெஸ்ட் விரும்பாவிட்டாலும் அச்சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் சூட்டினார். சிக்தருக்கு இன்னொரு அநியாயமும் நடந்தது அளவையியல் வழிகாட்டி நூல் ஒன்றை ஆங்கிலேய அரசு வெளியிட்டது. அதை எடிட் செய்தவர்கள் துலீயர் மற்றும் ஸ்மித் எனும் இரு ஆங்கிலேய அதிகாரிகள். மிகத்தெளிவாக அந்நூலின் கடினமான தொழில்நுட்ப மற்றும் கணித சங்கதிகள் ராதநாத் சிக்தரால் எழுதப்பட்டது என்று குறித்திருந்தார்கள். ஆனால்,அந்த வழிகாட்டியின் மூன்றாவது பதிப்பில் சிக்தரின் பெயரை அப்படியே எடுத்துவிட்டார்கள்.
எவரெஸ்ட் சிகரத்தை கண்டே இராதவரின் பெயரை அது தாங்கி நிற்கிறது. அதனை உலகின் உயரமான சிகரம் என்று கண்டுபிடிதுச்சொன்ன சிக்தரை வரலாற்றின் இருட்டு மூலையில் தள்ளிவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். மிகப்பெரிய திரிகோணவியல் அளவையியல் என்கிற அந்த அளவையியலில் ஈடுபட்ட நைன் சிங் மற்றும் சிக்தர் ஆகிய இருவரின் நினைவாக அரசு ஸ்டாம்ப் வெளியிட்டது.

Saturday, May 21, 2016

கூகுள் அலர்ட்ஸை(Google Alerts) உருவாக்கியவர் விவசாயி ஆனார்...!

லிஃபோர்னியாவில் உள்ள தன் நிலத்தில் அந்த விவசாயி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். வேலையாட்களுக்கு அடுத்தடுத்த உத்தரவுகள் அவரிடமிருந்து பறந்துகொண்டிருக்க,  கையோடு அதை செய்து முடிக்கிறார்கள் அவர்கள். தேவைப்பட்டால் அவரும் நிலத்தில் இறங்கி வேலை செய்கிறார். அதை ஆச்சர்யமாக பார்க்கின்றனர் தொழிலாளர்கள்.
ஒரு விவசாயி தன் நிலத்தில் இறங்கி வேலை செய்வதை மற்றவர்கள் ஆச்சர்யமாக ஏன் பார்க்கவேண்டும் என்கிறீர்களா....? காரணம் அந்த விவசாயி நேற்றுவரை நிற்க நேரமின்றி உலகநாடுகளுக்கு விமானத்தில் பரபரப்பாக பறந்துகொண்டிருந்தவர்...ஆம் கூகுள் அலர்ட்ஸை (Google Alerts) உருவாக்கிய நாக கடாருதான் (Naga Kataru) அந்த நவீன விவசாயி.

இணையத்தில் நாம் உற்று கவனிக்க விரும்பும் விஷயங்களில் வரும் புதிய அப்டேட்கள், செய்திகளை பிரித்து நமக்கு அனுப்பி ‘அலர்ட்’ செய்யும் கூகுளின் ஒரு சேவையின் பெயர்தான் ‘கூகுள் அலர்ட்ஸ்’. உதாரணத்துக்கு நீங்கள் ரஜினி ரசிகர் எனில், ரஜினிகாந்த் பற்றி இணையத்தில் வரும் செய்திகள் மட்டும் தனியாக, (உடனடியாக படிக்க விரும்பினால் இந்த சேவையில் ‘ரஜினிகாந்த்’ பெயரை கொடுத்துவிட்டால்போதும்) அவரை பற்றி இணையத்தில் செய்திகள் அப்டேட் ஆகும்போதெல்லாம் உங்கள் மெயிலில் அந்த செய்திகள் நேரடியாக வந்துவிழும். 

ஆந்திரப்பிரதேசத்தில் ​கம்பலாகுடம் (​Gampalagudem​)​ எனும் ​ஊரில் பிறந்து வளர்ந்தவர் நாக கடாரு.​ ​அவ்வளவாக கல்வியறிவற்ற அந்த கிராமத்தில், தலைமையாசிரியரான அவரது தந்தை கடாருவை கணினி பொறியாளராக ​படிக்க வைத்தார். பிறகு, புகழ்பெற்ற ஐ.ஐ.டி யில் (IIT) கணினி படிப்பு​முடித்தார் கடாரு.

​கூகுள் அலர்ட்ஸ்

2003​ ம் ஆண்டு, ​​கூகுள் அலர்ட்ஸ் வெளியிடப்பட்டது. பெரும் முயற்சி எடுத்து இதை அவர் உருவாக்கியபோது,  இவருடைய ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர்,  இதனை​அங்கீகரிக்கவில்லை. இவரது முயற்சியை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் கடாரு சோர்வடையவில்லை. கூகுளின் அப்போதைய CEO க்களான​ Sergey Bring மற்றும் Larry Page ஐ சந்தித்து தன் கண்டுபிடிப்பை முன் வைத்தார். அதை ஆய்வு செய்த அவர்கள்,  அதன் தனித்தன்மையை உணர்ந்து அவரின் முயற்சியை பாராட்டியதோடு,  நாக கடாருவின் கண்டுபிடிப்பு​மிகவும் பிடித்துபோனதால், கூகுள் நிறுவனத்திலேயே அவருக்கு ஒரு பொறுப்பையும் அளித்தனர். 

இருப்பினும் நாக கடாருவுக்கு தொடர்ந்து கூகுளில் பணியாற்றுவது ஒரு சலிப்பை தந்தது. வித்தியாசமாக ஏதாவது சாதிக்கவேண்டும் என்பதில் விருப்பம் கொண்ட கடாரு,  வெகு சீக்கிரத்தில் கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறி, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தினார்.  ​ ​

இப்போது இவரின் புதிய அவதாரம், ​'​விவசாயி​'​.... ஆம், 2008 ல் தன் வருமானத்தில் கலிஃபோர்னியாவில் 320 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். முதலீடாக வாங்கிப்போட்ட அந்நிலத்தை,  5 வருடங்களுக்குப் பிறகு நல்ல விலைக்கு விற்றுவிடுவதுதான் அவரது திட்டம். ஆனால் விற்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு திடீரென ஒருநாள் உதித்ததுதான் விவசாயம் செய்யும் திட்டம். தன் சொந்த ஊரில் உள்ள பூக்களும், பழங்களின் வாசமும் அவருக்கு நினைவுக்கு வந்ததால், நிலத்தை விற்கும் திட்டத்தை கைவிட்டு உடனே ஒரு முடி​வை எடுத்தார். அந்த நிலத்தை விற்பதற்குப் பதிலாக, அதை பாதாம் தோட்டமாக மாற்றி​ விட்டார். இன்று கலிஃபோர்னியாவில் பெரிய பாதாம் விவசாயியாக கடாரு விளங்குகிறார்.
"எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. காரணம் சிறுவயதிலிருந்தே என்னை என் தந்தை பெரிய படிப்பாளியாக வேண்டும் என்றே திட்டமிட்டு வளர்த்தார். ஆனால், எனக்கு விவசாயம் பிடித்திருந்தது. இன்று விவசாயியாக மாறியிருக்கிறேன். அதனால் தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்கிவிடக்கூடாது என்பதால் நானே முறையாக விவசாயம் பற்றி படித்தேன்​.​ எனது முயற்சியால்  இன்று ​இந்த நிலத்தில் ​பாதாமும், மற்ற சில விளைபொருட்களையும் விளைவிக்கிறேன்.  என் நிலத்தில் 8 பேர் வேலை செய்கின்றனர். வருடத்திற்கு 2.5 மில்லியன் வருமானம்​ கிடைக்கிறது" என்கிறார் விவசாயி நாக கடாரு.

வெற்றிகரமான விவசாயி ஆன பின்னரும் கடாரு, தன் படிக்கும் ஆர்வத்தை விடவில்லை. இப்போது  ​'ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக'த்தில் சூழல் மற்றும் வளங்கள் தொடர்பான மேற்படிப்பை படித்து வருகிறார்.

"விவசாயத்தை இன்னும் தொழில்நுட்ப ​ ரீதியாகக் கொண்டு செல்வதற்கே​,​ இந்த படிப்பை படிக்கிறேன்" என வெற்றிப் புன்னகையை முகத்தில் தழுவ விட்டபடியே சொல்கிறார் நாக கடாரு. 

விவசாயத்தின் மீதான நம்பிக்கை கீற்றை விதைக்கிறார்கள் கடாரு போன்ற நவீன விவசாயிகள்... !

Friday, May 20, 2016

தமிழறிஞர் கால்டுவெல் பற்றி?

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்ததால் தன்னை 'இந்தியன்’ என்றே சொல்லிக்கொண்டவர் கால்டுவெல். 18 மொழிகள் அறிந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுதான் தீராக் காதல். 15 ஆண்டு கால உழைப்பின் பயனாக அவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற ஆங்கில நூல் தமிழ் மொழிக்கும் அதன் திராவிடக் குடும்பமான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்குமான உறவை உலகுக்குச் சொன்னது. அதனால்தான் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கால்டுவெல்லையும் மலையாள மொழியை ஆய்வுசெய்த டாக்டர் குண்டட் ஆகிய இருவரையும், 'அவர்களுக்கு திராவிடம் கடன்பட்டுள்ளது’ என்று சொன்னார்.
நற்கருணை தியான மாலை, தாமரைத் தடாகம், நற்கருணை, பரதகண்ட புராதனம் ஆகிய நூல்களை தமிழில் எழுதும் அளவுக்கு தமிழைக் கசடறக் கற்றவர். கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காகச் சென்னை வந்தார். கிறிஸ்துவம் கற்பிக்கவே தமிழ் படித்தார். அதன் பிறகு தமிழ் அவரை விடவில்லை. எங்கு போனாலும் நடந்தே போகும் பழக்கம் வைத்திருந்தார். சென்னையில் இருந்து நெல்லை வரை பல்வேறு ஊர்கள் வழியாக நடந்துபோய் தமிழ்நாட்டு மக்களை படித்தவர் அவர். ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான தொப்புள் கொடி உறவை முதலில் சொன்னவரும் கால்டுவெல்லே!

Saturday, May 07, 2016

சோழர்களின் நீர் மேலாண்மையும், நதி நீர் இணைப்பு திட்டமும்...!

(முன்குறிப்பு: ஆங்கிலத்தில்  'Romanticize' என்றொரு சொல் உண்டு. அதாவது இருக்கின்ற விஷயத்தை மிகைப்படுத்தி அதை சிறப்பாக கூறுவது. இந்த கட்டுரை அந்த வகையை சேர்ந்தது அல்ல. அதனால் இதை மற்றுமொரு தமிழ் பெருமை பீற்றல் என்று கடந்து விடாதீர்கள்.)

பெரிய திட்டங்களை கண்டு எப்போதும் வியப்பது, அந்த பெரிய திட்டங்கள் நமக்கு வேண்டும் என்று கேட்பது நம் பொதுவான இயல்பு. நீர் மேலாண்மை விஷயத்தில் எடுத்துக் கொண்டால் கூட, நமது கோரிக்கைகள் எப்போதும் பெரிய அணைகளாக, நதி நீர் இணைப்பாக இருந்துகிறது. இந்த இயல்பினால் தான் உலகின் பழமையான அணையை கட்டியவன் சோழன்  என்று பெருமை கொள்கிறோம். ஆனால், அதே சோழர்கள் வெட்டிய லட்சக்கணக்கான குளங்கள், ஏரிகளை  பற்றி பேச மறுக்கிறோம். 

கரிகாலனின் கல்லணை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்தான். இப்போது கட்டப்படும் அணைகள் போலானது அல்ல, சோழன் கட்டிய கல்லணை. சூழலுக்கு அதிகம் தீங்கிழைக்க்காமல், கல், மண் மற்றும் களிமண் கொண்டு கட்டப்பட்ட அணை அது. அதனால்தான், இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் பொறியியலை கண்டு வியந்து கல்லணைக்கு ‘கிரான்ட் அணைகட்’ என்று பெயர் சூட்டினார். இது பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால், சோழர்கள்  அணைகளை மட்டும் கட்டவில்லை. கல்லணைக்கு நிகரான தொழிற் நுட்பம் அவர்கள் வெட்டிய ஏரிகளிலும் இருந்தது. 

ராஜகேசரி பெருவழியும், நொய்யல் ஆறும்:
பிற்காலச் சோழர்கள் நாகப்பட்டினம் முதல் கேரள மாநிலம் கோழிக்கோடு வரை ஒரு பெரும் பாதையை உண்டாக்கி இருந்தார்கள். இந்த பாதை ராஜகேசரி பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த பெருவழியின் பக்கமாக ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஏரிகள்தான் நொய்யலாற்றின் உயிர் நாடி.  

எழுத்தாளர் இரா. முருகவேளிடம் இந்த பெருவழி குறித்து பேசியபோது, “இந்த பெருவழியில் பெரும் வணிக குழுக்கள் பயணித்தன. வணிக குழுக்கள் என்றால் பத்து இருபது பேர் அல்ல. குறைந்தது 1000 மாட்டு வண்டிகளில் தானியங்கள், பஞ்சுகள் மற்றும் பிறச் செலவங்களை ஏற்றிக் கொண்டு வணிகர்கள் பயணித்து இருக்கிறார்கள். கொடுமுடி முதல் பாலக்காடு வரை இந்த பெருவழியை ஒட்டிய பகுதிகள் மிகவும் வறட்சியானதாக இருந்து இருக்கிறது. அதனால், அந்த பாதையில் பயணிப்பவர்களின் நலனுக்காக கோவை பகுதியில் மட்டும் 32 நீர் நிலைகளை உண்டாக்கி இருக்கிறார்கள். இது குறித்த கல்வெட்டு இன்றும் இருக்கிறது. 

கோவை மாநகரத்தில் உள்ள அல்லிக்குளம், குறிச்சி குளம், நாகராஜபுர குளம், முத்தனங்குளம், பனங்காட்டு குளம், வாலாங்குளம் எல்லாம் அவர் வெட்டியதுதான். இந்த நீர் நிலைகள் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவை. நொய்யலாற்றிலிருந்து வரும் நீர் இந்த ஏரிகளை எல்லாம் நிரப்பிவிட்டு மீண்டும் நொய்யலாற்றோடு கலந்துவிடும்.

கோவை மாவட்டம் பீடபூமி பகுதி. அதனால் மற்ற ஆறுகளைவிட நொய்யலாற்றின் வேகம் அதிகமாக இருக்கும். பெரும் மழை பெய்தால் கூட வேகமாக பயணித்து காவிரி உடன் விரைவாக கலந்துவிடும். அதனால், இந்த ஆற்றின் பயன்களை அந்த பகுதி மக்கள், முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து இருக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் வெட்டபட்ட இந்த ஏரிகள், ஆற்றின் வேகத்தை ஆற்றுப்படுத்தியது மட்டும் இல்லாமல்,  அந்த பகுதியையும் எப்போதும் செழிப்பாக வைத்து இருந்து இருக்கிறது.

ஆனால், நாம் நம் மோசமான நீர் மேலாண்மையால், அந்த ஏரிகளையும் மெல்ல கொன்று வருகிறோம். அதன் மூலமாக நொய்யலையும். ஆம் நொய்யல் அழிவிற்கு சாயப்பட்டறைகள் மட்டும் காரணம் அல்ல. இந்த ஏரிகளின் அழிவும்தான். முன்பு ஒரு காலத்தில் நொய்யலில் ஏராளமான நீர் நாய்கள் இருந்து இருக்கின்றன. ஆனால், இப்போது ஒன்றை கூட பார்க்க முடியவில்லை. அந்த நிலை நாளை அதனை ஒட்டி வாழும் நமக்கும் ஏற்படலாம்...” என்கிறார் முருகவேள்.  

நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் வேலையா...?
இந்த நீர் நிலைகளை காக்க வக்கற்ற இந்த அரசும் நாமும்தான் இப்போது நதி நீர் இணைப்பை பற்றி அதி தீவிரமாக பேசி வருகிறோம்.  அனைத்து கட்சிகளும் நம்மை கவர்வதற்காக நதி நீர் இணைப்பு திட்டத்தையும் தம் தேர்தல் அறிக்கையில் முன் வைத்து இருக்கிறது. உண்மையில் இந்த நதி நீர் இணைப்பு சாத்தியமா...பயன் தருமா...? என்ற நம் கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் சூழலியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் பதிலாக இருக்கிறது. 

சூழலியலாளர் பியூஷ், “நதி நீர் இணைப்பு நன்மைகளை தருவதை விட மாநிலங்களுக்கிடையே  பிரச்னையைதான் உண்டாக்கும். இது போல் பெரிய திட்டங்களை நாம் யோசிப்பது மூலமாக, தீர்வை நோக்கி பயணிக்காமல் பிரச்னைகளை மேலும் மேலும் நாம் சிக்கலாக்குகிறோம்.” என்கிறார். 

“ஒரு வேளை இந்த நதிகள் இணைக்கப்படும் பட்சத்தில், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவுக்கு மக்கள் இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு என்ன திட்டத்தை வைத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல், டன் கணக்கில் கான்கீரீட் கலவைகள் ஆற்றில் கொட்ட்டப்படும். இது மேலும் மேலும் ஆற்றை மாசுப்படுத்துமே தவிர, எந்த நல் பயன்களையும் தராது...” என்கிறார் பியூஷ். 

ஏற்கெனவே, மேட்டூர் அணை கட்டப்படுவதற்காக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் இன்றும் கர்நாடக வனப்பகுதிகளில் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், பியூஷின் கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 

ஏறத்தாழ இதே கருத்தை வழிமொழியும், பூவுலகு அமைப்பைச் சேர்ந்த சுந்தராஜன்,  “இன்றைய மதிப்பில், இந்த திட்டத்தை செயல்படுத்த 20 லட்சம் கோடி தேவை. பராமரிக்க வருடத்திற்கு 2 லட்சம் கோடி தேவை. இவ்வளவு நிதி எங்கு இருக்கிறது. இது முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பி ஏமாற்றும் திட்டம்”  என்கிறார். 

அரசின் வாதம்:
இந்தியாவில் சில நதிகளில் மிகவும் செழிப்பாக வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கிறது. சில நதிகளில் பருவகாலத்தில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்கும் போது, அனைத்து நதிகளிலும் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்க செய்து விட முடியும். அதனால் நமது விவசாய பரப்பு 175 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு விரிவடையும்,  34000 மெகாவாட் புனல் மின்சாரம் தயாரிக்க முடியும். -  இது அரசின் வாதம்.

ஆனால், இந்த அடிப்படை புரிதலே தவறு என்கிறார் இந்திய நீர் நிலைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டெல்லி ஐஐடி பேராசிரியர் கோசைன்.
“பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த திட்டத்தை முன்வைக்கிறார்கள். வற்றாத நதிகள் அனைத்திற்கும் ஜீவனாக இருப்பது இமயமலை பனிப்பாறைகள். ஆனால், பருவநிலை மாற்றத்தால் இந்த பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இன்னும் சில காலத்தில்  முழுவதுமாக உருகிவிடும் பட்சத்தில், வற்றாத நதிகள் என்று ஒன்று இல்லாமலேயே ஆகிவிடும். பின்பு, நதிகளை இணைத்து என்ன பயன்...?” என்று அவர் வைக்கும் கேள்விகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. 

நதிகள் இணைப்பிற்கு அரசு சொல்லும் இன்னொரு காரணம், தேவையில்லாமல் கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியும் என்பது. ஆனால், இந்த வாதமும் தவறு என்கிறார் பூவுலகு சுந்தராஜன்.

சுந்தராஜன், ”கடல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் நதிகள் அதன் இயல்பில் கடலில் கலக்க வேண்டும். அதை தடுத்தால் கடல் மரணித்துவிடும். அதற்கு நம் சமகால உதாரணம்  'Dead Sea'. ஜோர்டான் நதியை கடலில் கலக்க விடாமல் செய்ததுதான் அந்த கடல் மெல்ல இறக்க காரணம். அது மட்டுமல்லாமல், நதி கடலில் கலக்கும் கழிமுகத்தில்தான், மீன்கள் குஞ்சு பொறிக்கும், அந்த பகுதியில்தான் அலையாத்தி காடுகள் உண்டாகும். நாம் நதி, கடலில் கலப்பதை தடுக்கிறோமென்றால், இவை அனைத்தையும் அழிக்கிறோம் என்று அர்த்தம்”


பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலேயே தீர்வு காணுங்கள்...?
சரி நம் நீர் பிரச்னைக்கு தீர்வென்ன...? நம் வரலாற்றை மீள்வாசிப்பது மூலமே நம் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியும். ஆம். சோழர்களின் நீர் மேலாண்மை.  

இவர்கள் பெரிய அணைகள், நதிகள் இணைப்பு ஆகியவற்றுக்காக திட்டமிடும் பணத்தில் பத்து சதவீதத்தைக் கொண்டே, நம் அனைத்து குளங்கள், ஏரிகளையும் மீட்டுவிட முடியும் மற்றும் ஆயிரக்கணக்கில் புது நீர் நிலைகளையும் உண்டாக்கிவிட முடியும். அதன்  மூலம் அந்தந்த பகுதியில் நீர் வளம் பெருகும். அந்த பகுதி பிரச்னை அந்த பகுதியிலேயே தீர்க்கப்படும்.

நாம் ஒரு பொருளை ஒரு இடத்தில் தொலைக்கிறோமேன்றால், தொலைத்த இடத்தில் தேடுவோமா அல்லது நமக்கு விருப்பமான இடத்தில் தேடுவோமா...? அது போலதான் நீர் பிரச்னையும். ஒரு இடத்தில் தண்ணீர் சிக்கலென்றால், அதே இடத்தில் அதிக நீர் நிலைகளை உண்டாக்கி தீர்க்க வேண்டுமே தவிர, இன்னொரு இடத்திலிந்து நீர் எடுக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. இது சிக்கலை மேலும் மேலும் அதிகமாக்குமே தவிர, நிரந்திர தீர்வை தராது.
 

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நான்கு ஆண்டுகளுக்கு  முன் சென்னையில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் வந்தது. அப்போது திருவள்ளூரிலிரிந்து தண்ணீர் எடுக்க அரசு முடிவு செய்கிறது. இரண்டு, மூன்று முறை தண்ணீர் எடுக்க அந்த பகுதி விவசாயிகளும் அனுமதித்தார்கள். ஆனால், அதன் பின் எதிர்ப்பு தெரிவித்து, தண்ணீர் எடுக்க சென்ற வண்டியை சிறைப்பிடித்து வைத்து விட்டார்கள். பக்கத்து பக்கத்து மாவட்டத்திலேயே இவ்வளவு சிக்கல் உண்டென்றால், பல மாநிலங்களின் சம்மதம் கோரும் இந்த திட்டத்தில் எவ்வளவு சிக்கல் இருக்கும்....?

இவர்கள் பெரிய அணைகள், நதி நீர் இணப்புகளை முன் வைக்க இன்னொரு காரணம் அதில் விளையாடும் பெரும் பணம் மற்றும் அதை ஒட்டிய ஊழல். அதனால்தான் சுலபமான தீர்வை கண்டு கொள்ள ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள். நாம் எளிய தீர்வை முன் வைத்து, அதை செயல்படுத்த அரசை நிர்பந்திக்கும் போது, இவர்களின் ஊழல்களையும் தடுத்து விட முடியும். இனியாவது நாம், கங்கையையும் காவிரியையும் இணைக்க கோராமல், நம் வசிக்கும் பகுதியில் இருக்கும் குளங்களையும், ஏரியையும், கண்மாயையும் மீட்க, புனரமைக்க, புதுப்பிக்க அரசை நிர்பந்திப்போம்.

தீர்வு எளிமையான ஒன்றாக இருக்கிறது. நாம் எந்த பாதையில் பயணிக்க போகிறோம்...?

Wednesday, April 27, 2016

வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!

கவிப்பேரரசு வைரமுத்து. திரையிசைப் பாடல்களில் கதைக்களத்துக்கு மட்டுமல்லாமல், திரைக்கு வெளியே சமூகத்துக்கும் தன் வரிகள் மூலம் செய்தி சொல்லிக்கொண்டே இருக்கும் 62 வயது இளைஞர். தான் எழுதிய பாடல்களில், சில சுவாரஸ்யப் பகிர்வுகளை அங்கங்கே பகிர்ந்திருந்தார். அவற்றிலிருந்து சில;  


வர் ஐஸ்வர்யா ராய்க்கு எழுதிய பாடல்களில் ஏதாவதொரு இலக்கணக்குறிப்பு வந்துவிடுகிறது. ஜீன்ஸ் படத்தில் இரட்டை கிளவி. ராவணன் படத்தின் ‘கள்வரே கள்வரே’வில் வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள். இதைப் பற்றி சொல்லும்போது ‘காதல் பாட்டில் இலக்கணக்குறிப்பு வைக்கிறபோது அது இளைஞர்களிடத்தில் எளிதாகச் சென்று சேர்வதாய் உணர்கிறேன். இலக்கணக்குறிப்புகளை ஆசியர்கள் சொல்லிக்கொடுத்தால் சுமை. ஐஸ்வர்யா ராய் சொல்லிக்கொடுத்தால் சுவை’ என்கிறார்.

* ‘ஹோஹோ கிக்கு ஏறுதே’ பாடலில் ‘ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமக்குமட்டும் இதுதான்  ரஜினிச்சித்தர் பாட்டு’ என்றுதான் எழுதியிருந்தாராம். இயக்குநர், இசையமைப்பாளர் எல்லாரும் ஓகே சொல்லிவிட, வீட்டுக்கு வந்தவருக்கு ரஜினியிடமிருந்து அழைப்பு. ‘சித்தராவது அத்தனை சுலபமல்லவே.. ரஜினிச்சித்தர் என்பதெல்லாம் வேண்டாமே’ என்று அன்போடு கேட்டுக்கொள்ள ‘இதுதான் ஞானச்சித்தர் பாட்டு’ என்று மாற்றினாராம்.

வைரமுத்து பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் பாடம் நடத்துகிறார். ‘அவன் ஆண் பால். அவள் பெண்பால்’ ஒரு மாணவன் குறும்பாகக் கேட்கிறான்.. ‘குழந்தை எந்தப் பாலில் அடங்கும்?’ ஆசிரியர் திகைக்க, வைரமுத்து பதில் சொன்னாராம்: ‘குழந்தை தாய்ப்பாலில் அடங்கும்’. மின்னலைப்பிடித்து பாடலில் அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்று வார்த்தை விவாதம் நடத்தியபோது இது ஞாபகம் வந்ததாம் கவிஞருக்கு

*  சிங்கப்பூரில் நண்பரோடு நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, ஒரு பெரியவர் வழிமறித்து, ‘நீங்கதானே வைரமுத்து? உங்களோட ஒரு பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று சொல்லி,  ஒரு பாடலை வரிக்கு வரி பாராட்டிவிட்டுச் சென்றாராம். உடனிருந்த நண்பர் கொஞ்சம் மரியாதையாக விலகி நிற்கிறார். ‘யார் இந்தப் பெரியவர்’ என்று வைரமுத்து கேட்க ‘எஸ்.ஆர்.நாதன்’ என்கிறார் நண்பர். ‘என்ன செய்துகொண்டிருக்கிறார்?’ இவர் திரும்பக் கேட்க, நண்பர் சொல்கிறார். ‘சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இருக்கிறார்’. அப்படி ஜனாதிபதி பாராட்டிய பாடல் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’

சில பாடல்கள் கதைக்குப் பொருந்துவதைவிட, வாழ்க்கைக்கு பொருந்திப் போகிறது. முரளியின் படமொன்றில் கதைச்சூழலுக்கு வைரமுத்து எழுதிய பாடலொன்று, முரளியின் இறுதி ஊர்வலத்தின்போது ஒலிபரப்பப்பட்டு கண்ணீர்ச்சூழலுக்கும் பொருந்திப் போனது குறித்து வருந்தியிருக்கிறார் கவிஞர். அந்த வரிகள்: ‘ஒரு ஜீவன் அழைத்தது.. ஒரு ஜீவன் துடித்தது.. இனி எனக்காக அழவேண்டாம் துளி கண்ணீரும் விடவேண்டாம்..’ அதேபோலவே பாடகி ஸ்வர்ணலதாவின் இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட பாடல் ‘போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு..’
னிதன் படத்தின் ‘மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்’ பாடல் நீளம் கருதி படத்தில் இடம்பெறாது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டு விட்டது. பிறகு படப்பிடிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரஜினியின் காதில் இந்தப் பாடல் விழ, ‘நல்லாருக்கே’ என்று இயக்குநரிடம் பேசி டைட்டில் பாடலாக சேர்த்தினார்களாம்.

* தமிழில் ராவணனுக்கு வைரமுத்து எழுத, இந்தியில் ராவனுக்கு குல்சார் எழுதுகிறார். ‘என்னைவிட நிச்சயமாக வைரமுத்துதான் அருமையாக எழுதியிருக்கிறார்’ என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார் குல்சார். இதைக் கேட்ட வைரமுத்து சொன்னாராம்: ‘என்னைவிட நிச்சயம் குல்சார் திறமையான கவிஞர்தான். ஆனால் இந்தியைவிட நிச்சயமாக தமிழ்தான் சிறந்தமொழி என்பதால் என் எழுத்து விஞ்சி நிற்கிறது’ 

விஞர் கிராமத்திலிருக்கும்போது பாரதிராஜா ‘உடனே பாடல் வேண்டும் என்று மெட்டனுப்புகிறார். எழுதிக் கொண்டிருக்கும் கவிஞருக்கு உள்ளூர் ஒலிபெருக்கியின் ஓசை தொந்தரவு கொடுக்கிறது. நண்பர்களை அழைத்து சொன்னபோது ஒலிபெருக்கி நின்று, பாட்டு பிறக்கிறது. 3 மாதம் கழித்து திரும்ப கவிஞர் கிராமத்துக்குப் போனபோது அதே ஒலிபெருக்கியில் அவர் அன்று எழுதிய பாட்டு ஒலித்துக் கொண்டிருந்ததாம். அந்தப் பாடல்: ‘திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா..’

முதல்வன் படத்திற்காக,
‘ஓலைக்குடிசை.. ஒற்றை ஜன்னல்.. துண்டு மேகம்.. தூரத்து வானம்!
கொஞ்சம் வெற்றிலை.. நிறைய மல்லிகை.. கிழிந்தபாயில் கிளியோ பாட்ரா!’  -
என்று வரிகளை எழுதிக்கொடுத்துவிட்டார். பாடி, பாடலும் ரெடி. ஆனால் ஷங்கர் அழைத்து, ‘இவ்ளோ மென்மையான பாட்டு. அதும் க்ளைமாக்ஸ் முன்னால. ரசிகன் எழுந்துபோய்டுவான்’ என்று சொல்ல வேறு எழுதிக் கொடுத்தார். அதுதான்... ‘உப்புக்கருவாடு ஊறவெச்ச சோறு ஊட்டிவிட நீ வேணும் எனக்கு

சூல்ராஜா எம்.பி.பி.எஸ்-ஸில் ரசித்து ரசித்து கவிஞர் எழுதிய பாடல் ‘காடு திறந்தே கிடக்கிறது..’ இசையமைப்பாளர் பரத்வாஜும், இவரும் ‘இந்தப் பாடலை தேசமே கொண்டாடப்போகிறது’ என்று சிலாகித்துக் கொண்டிருக்க, பாடல்கள் வெளியாகி ஒரு குத்துப்பாடல் மற்ற எல்லாப் பாடல்களையும் அடித்துக் கொண்டு போனது. அது ‘சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானா டோய்!’

யக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஒரு சூழல் சொல்லி, ‘இடைவேளைக்கு முன் கதாநாயகி, காதலியாக இருப்பாள். அப்போதும் பொருந்தவேண்டும். இடைவேளைக்குப் பின் அவளே விதவையாக இருப்பாள். தற்கும் பொருந்தவேண்டும்’ என்கிறார். அதற்கு எழுதிய பாடல்தான்; ‘வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே..’

பாடலின் மெட்டுக்கு ‘மெல்லினமா, வல்லினமா எது பொருந்தும்?’ என்ற அறிவியலை அறிந்து அதற்குத் தகுந்தபடி தான் எழுதிக்கொடுப்பாராம் கவிஞர். அதனால்தான் ‘அன்புமிக்க மங்கையே.. ஆசையுள்ள தங்கமே இன்பமெல்லாம் அள்ளித்தாடி..’ என்று எழுதலாமா என்று யோசித்து,  இந்த மெட்டு வல்லினத்தைத்தான் கேட்கிறது என்று விஞ்ஞான பூர்வமாக யோசித்து, ‘ஒட்டகத்தக் கட்டிக்கோ’ என்றெழுதினார்.

விஞர் சின்னவயதில் கேட்ட நாட்டுப்பாடலில் வரும் ‘வாய்க்கா கரையோரம் வந்து நின்னான் அய்த்த மகன் வந்து நின்ன அய்த்தமகன் வாடபட்டுச் சூலானேன்’  வரிகளை ஞாபகப்படுத்திதான் அதன் நீட்சியாக ‘உசிலம்பட்டிப் பெண்குட்டி’ பாடலில் ‘நீ ஓரக்கண்ணால் பாத்தாலே நான் புள்ளத்தாச்சி’ என்று எழுதினாராம். காத்தடித்து கர்ப்பமானது அந்தப் பெண்.. கண்ணடித்தே கர்ப்பமானது இந்தப்பெண் என்பார் கவிஞர்.   

ருபாடல் ஒலிப்பதிவு முடிந்து வந்து ‘முழுப்பாடலையும் கேட்கமுடியுமா?’ என்று கேட்கிறார் எஸ்பிபி. உடன் ஜானகி. இசையமைப்பாளர் வித்யாசாகர் போட்டுக்காட்டியதும், அதே ஒலிப்பதிவுக்கூடத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்து, ‘ஆண்டுக்கு இப்படி ஒரு பாட்டு கிடைத்தால் போதும். வாழ்நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருக்கலாம்’ என்று வித்யாசாகர், வைரமுத்து எல்லாரையும் கட்டிப்பிடித்துப் பாராட்டுகிறார். அந்தப் பாடல் ‘மலரே மௌனமா..’

Monday, April 25, 2016

'நிஜ' பாகுபலி!



பாகுபலி என்ற பெயர் இன்றைக்கு எல்லோருக்குமே தெரியும். உண்மையில் பாகுபலி என்ற பெயரில் ஒரு மாவீரர் இருந்தார். 
சமண சமயத்தை தோற்றுவித்த ரிஷப தேவரின் பிள்ளைகள் பரதனும், பாகுபலியும். மூத்தவரான பரதனை விடவும் இளையவரான பாகுபலி,  சிறந்த வீரனாகவும்,  அழகும் அறிவும் கொண்டவராகவும் திகழ்ந்தார். இதனால் மக்கள் பரதனை விடவும் பாகுபலியையே அதிகம் விரும்பினர். இதனால், பொறாமை கொண்ட பரதன்,  தம்பியின் ராஜ்ஜியத்தையும் அபகரித்துக் கொள்ள எண்ணி,  பாகுபலியைப் போருக்கு அழைத்தான். ஆனால், போர் ஏற்பட்டால் பலர் இறப்பார்கள் என்பதால் போரைத் தடுக்க விரும்பிய பாகுபலி, பரதனிடம் மல்யுத்தம் செய்யலாம் என்று கூறினார்.
இருவருக்கும் மல்யுத்தம் தொடங்கியது. யுத்தத்தில் பாகுபலியே வெற்றி பெற்றார். யுத்தத்தின் முடிவில் பாகுபலி அண்ணனை அடித்தேக் கொல்லவேண்டும். பாகுபலிக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே, தன் தலைமுடியைத் தானே பிய்த்து எறிந்துவிட்டு, சமணத் துறவியாகக் கிளம்பிச் சென்றவர், பூர்வாசிரமத்தில் தன் தந்தையாக இருந்தவரும், சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரருமான ரிஷப தேவரின் சீடராக ஆனார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சுமார் 160 கி.மீ. தொலைவில் உள்ள 'சரவணபெலகுலா' என்னும் இடத்தில் பாகுபலிக்கு வழிபாட்டுத் தலம் உள்ளது.

Thursday, March 24, 2016

பகத்சிங்

ல்ல உயரம், பாந்தமற்ற உடை, அடக்கமான சுபாவம் மற்றும் தன்னம்பிக்கை இல்லாத ஒரு கிராமத்து வாலிபம் போன்ற தோற்றம். அவரை சந்திக்கும் யாருக்கும் முதல் பார்வையில் அவர் மீது உடனே நம்பிக்கை வராது. தேச வரலாற்றில் இந்த இளைஞன் நீங்கா இடம் பெறப் போகிறான் என்று அவரை அப்போது பார்த்த யாரும் நம்பி இருக்க மாட்டார்கள்.  ஆனால், பல தசாப்தங்கள் கடந்தும் அவர் பேசப்படுகிறார். அவரை தவிர்த்து இந்திய வரலாற்றை எழுத முடியாது. ஆம். நான்  பகத்சிங் குறித்துதான் சொல்கிறேன்.

கடைசி மூச்சின் போதும் தன் பாதங்கள், தன் உயிரினும் மேலாக கருதிய இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என்று கருதியவர். தூக்கில் தொங்கி அந்தரத்தில் சாவதை அவர் விரும்பவில்லை. துப்பாக்கி குண்டு ஏந்தி சாவதற்குத் தயாராக இருந்தவர் பகத்சிங். குருதியின் ஒவ்வொரு அணுக்களிலும், தேசத்தின் மீதான காதலும் அதன் விடுதலையும் மட்டுமே நிரம்பி வழிந்தது. தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் இல்லாமல், இந்திய விடுதலையையும், சோஷியலிச சமூகத்தை கட்டியமைப்பது மட்டுமே தன் சுவாசம் என்று கருதிய மாமனிதன் அவர். அவர் மட்டுமல்ல அவர் வயதொத்த ராஜகுருவும், சுகதேவ்வும் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.
சதி வழக்கின் விசாரணையை புரட்சிகரமான முறையில் பயன்படுத்தியவர்:

அப்போது ஊடகங்கள் என்று எதுவும் இல்லை. தன் மனித ஊடகங்கள் மட்டும்தான். செவி வழியாக மட்டுமே செய்திகள் பரவிய காலம் அது. ஆனால், அப்போது லாகூர் சதிவழக்கை தேசமே உற்று நோக்கியது. பகத்சிங்கின் நெருங்கிய நண்பரான, அஜய்கோஷ் சொல்கிறார், “மத்திய சட்டசபையில் குண்டு வெடித்த நாளிலிருந்து, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று வீரர்களும் தூக்குக் கயிற்றில் தொங்கிய நாள் வரையிலும் அந்தக் கைதிகள் மீதும், அந்த வழக்கின் மீதும், அரசியல் கைதிகளின் நல உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், தாங்கள் மேற்கொண்ட இலட்சியத்திற்காகவும் அவர்கள் நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் மீதுமே பொதுமக்களின் முழுகவனமும் இருந்தது. பகத்சிங்கும், அவரது தோழர்களும்  பல வீரக் கதைகளின் நாயகர்களாயினர்....”.   ஆம். இதில் ஊசி முனை அளவும் மிகை இல்லை.  ஊடகங்கள் இமாலய வளர்ச்சி பெற்றுள்ள இந்த காலக்கட்டத்திலும், நாம் இன்னும் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாமல் தான் இருக்கிறோம். ஆனால், பகத்சிங்கும் அவரது தோழர்களும், தங்கள் வழக்கின் ஊடாகவே மக்களை தேச விடுதலை குறித்து சிந்திக்க வைத்தார்கள். சிறைக்கம்பிகளுக்கு பின்னிருந்தும் கைதிகளின் நல உரிமைக்காக போராடினார்கள்.  

“இந்த வழக்கின் விசாரணையைப் புரட்சிகரமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் சர்க்காரின் நீதியின் போலிதனத்தை அம்பலப்படுத்தவும்,  புரட்சிகாரர்களின் உறுதியை சிதறடிக்க முடியாதென்பதை காட்டி கொள்வதற்கும், இந்த வழக்கு விசாரணையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். சர்க்காரை அலட்சியம் செய்ய வேண்டும். சர்க்காரின் போலீஸ், நீதிமன்றம் ஆகியவற்றை எவ்வளவு அலட்சியப்படுத்துகிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலமாக தேச மக்களை விடுதலையை நோக்கி தட்டி எழுப்ப வேண்டும். “ இது வழக்கு நடந்து கொண்டிருந்தபோது பகத்சிங் தம்மை சந்திக்க வந்த தோழர்களிடம் சொல்லியது.

ஏன் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும்...?

எது பகத்சிங்கை விடுதலை போராட்டம் நோக்கி இழுத்தது,  1919-ம் ஆண்டு ஏப்ரல் 13. அப்போது பகத்சிங்கிற்கு 12 வயது. மைக்கேல் டயர் என்கின்ற லெப்டினட் கவர்னர் உத்தரவின்பேரில் ஜெனரல் டயர்,  ஜாலியன் வாலாபாக்கில் 1650 ரவுண்டுகள் சுட்டான். 400 க்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே குண்டடிபட்டு இறந்தனர். கிணற்றுக்கு உள்ளே குதித்துச் செத்துப்போனவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றார்கள். இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது ஜாலியன் வாலாபாக்கில். அங்கு குருதி ஓடிய தியாக மண்ணை, ஒரு ஜாடியில் போட்டு, பகத்சிங் வீட்டுக்கு கொண்டு வருகிறான். அந்த மண்ணை தினமும் பூசிக்கிறான். அந்த அடைக்கப்பட்ட மண் தான், அவன் சுதந்திர வேட்கைக்கு காரணமானது.

அன்று அந்த பன்னிரெண்டு வயது சிறுவனுக்கு இருந்த அரசியல் தெளிவு, இன்று வயது முதிர்ந்த பலருக்கும் இல்லாமல் இருக்கிறது.  நிகழ்வுகளை நாம் வெறும் தட்டையாக மட்டும் பார்க்கிறோம். விடுதலை மட்டுமல்ல.. அந்த இளைஞன், விடுதலைப்பெற்ற பிறகு, இந்திய சமூகம் எப்படி இருக்க வேண்டுமென்று பெருங்கனவு கண்டவன். ஏற்றத் தாழ்வற்ற, இல்லாமை எவருக்கும் இல்லாத, சாதி பேதங்களற்ற சமூகமாக இருக்க வேண்டும் என்று விரும்பியவன்.  அவனின் ஒரு கனவாக இருந்த சுதந்திரம் நமக்கு கிடைத்தது. ஆனால், அவனின் மற்ற விருப்பங்கள் இன்னும் கனவாக மட்டுமே இருக்கிறது.  இந்த சூழ்நிலையில், நாம் அனைவரும் பகத்சிங் குறித்தும் அவனின் தோழர்கள் குறித்தும், அவர்கள் இந்த சமூகம் குறித்து கண்ட கனவுகள் குறித்தும் குழந்தைகளிடம் உரையாடுவது இன்றியமையாதது ஆகிறது.

Saturday, March 05, 2016

வேற்றுகிரகவாசிகள் @ ஏலியன்ஸ்

கண்ட பால்வெளியில் உள்ள ஏதாவது ஒரு கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா இல்லையா என்று பல வருடங்களாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர்.

ஏலியன்ஸ் உண்மையிலேயே உள்ளதா இல்லை கட்டுக்கதையா?  வாங்க விரிவாக அலசலாம்.

பிரான்ஸ் நாட்டின் அன்றைய மன்னன் நெப்போலியன் பானர்பட்டின் மண்டையோட்டில் அரை அங்குலம் அளவுள்ள வெளிப்பொருள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். கி.பி 1794 ஆம் ஆண்டில் அவர் பல நாட்கள் காணாமல் போயிருந்தார். மீட்கப்பட்டபின் நெப்போலியனே, வித்தியாசமான மனிதனால் தான் சிறைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பழங்கால எகிப்தியர்களின் சித்திரவடிவ எழுத்துக்களின் ஆய்வுகள், ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் நைல் பள்ளத்தாக்கிற்கு வந்ததை உறுதி செய்கின்றன. எகிப்தில் காணப்படும் பிரமிட் அமைப்புகள் மனிதனால் உருவாக்கியிருக்க சாத்தியமே இல்லையென்றும், அவையெல்லாம் ஏலியன்களால் உருவானவை என்று கூறுபவர்கள் பலர். 1971 ஆம் ஆண்டு அப்போல்லோ 14 திட்டப்பணியின் அங்கமாக நிலாவில் காலடி வைத்த ஆறாவது மனிதர் என்ற பெயரை பெற்றவர் நாசா விண்வெளி வீரர் எட்கர் மிட்செல்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ரோஸ்வெல் பாலைவனத்தில் 1947- ல் நடந்த விபத்தில் யூ.எப்.ஒ எனப்படும் அன்ஐடெண்டிபைட் பிளைட் ஆப்ஜக்ட், அதாவது பறக்கும் தட்டில் வந்த ஏலியன்கள் இருந்திருக்கின்றனர் என்று மிட்செல் உறுதியாக கூறுகிறார்.

இறந்த ஏலியன் புகைப்படம் ஒன்று அமெரிக்க பத்திரிக்கைகளில் வெளியானது. அது ஒரு குழந்தையின் சடலம் என்று கூறுபவர்கள் பலர். ஆனால் மிட்செல் கூறுகிறார், “ரோஸ்வெல்லில் நடந்த சம்பவத்தை நான் நேரில் பார்த்தேன். என்னுடைய கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்நிகழ்வு நடந்தது. நான் நிலாவிற்கு சென்று வந்ததும் பல கருத்தரங்கில் பேசும்போது 'அது' ஏலியன் தான் ...குழந்தையின் சடலமல்ல ..என்று கூறியிருக்கிறேன்.  அமெரிக்க அதிகாரிகள் ரகசிய இடத்தில் 'அதை' பாதுகாத்து வருகின்றனர். என் குடும்ப நண்பரும் அமெரிக்க விமானப்படையின் மேஜர் ஆகவும் இருந்தவர், இது ஏலியன் தான் என்று உறுதிப்படுத்தினார். நிலாவில் இருந்து திரும்பிய பின், பெண்டகனுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் என்னுடைய கதையை கூறி அவர்களின் கருத்தை கேட்டேன்.

அவர்கள் நியூ மெக்ஸிகோவிற்கு சென்று ஆராய்ந்துவிட்டு, நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே என்றனர். அமெரிக்க அரசு, பறக்கும் தட்டு விபத்தில் உயிருடனும், சடலமாகவும் ஏலியன்களை கண்டுபிடித்தது. ரோஸ்வெல் சம்பவத்தை அமெரிக்கா மூடி மறைப்பதற்கு காரணம், ஏலியன்ஸின் வருகை நம்மை எதிர்க்கின்ற நோக்கத்துடன் இருந்திருக்கலாம் என்றும், சோவியத் ரஷ்யா இதைப்பற்றி கண்டுபிடித்துவிடக்கூடாது என்ற அமெரிக்காவின் விருப்பமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.

தான் நாசாவில் பணியில் இருந்த காலத்தில் பறக்கும் தட்டுக்கள் பூமிக்கு வந்து போயுள்ளதாக மிட்செல் உறுதியாக கூறுகிறார். ஆனால் இவர் 1995 அன்று வெளியிட்ட ஏலியன் பிரேத புகைப்படத்தை போலி என்று மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வானவியல் நிபுணர்கள், சூரிய குடும்பத்திலிருந்து வெகு அப்பாலிருந்து வரும் ரேடியோ சிக்னல்களைக் கொண்டு ஏலியன்ஸ் வாழ்க்கையை அறிய தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை கொண்டு பால்வெளியையும் விண்மீன்களையும் ரேடியோ சிக்னல்கள் பெற முடியுமா என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ஜூலை 21, 2015 அன்று ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர், (break through initiatives) 'சாதனை முறியடிப்பு முயற்சிகள்' என்ற அமைப்பை, பூமிக்கு அப்பால் ஏதேனும் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என கண்டுபிடிக்க 100 மில்லியன்ஸ் டாலரில் ( சுமார் 650 கோடிகள்) உருவாக்கியுள்ளார்.
இது 10 வருட திட்டமாகும். இந்த திட்டத்திற்கு பிரபல வானவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இவர் வேற்றுகிரகவாசிகள்  இருப்பது உறுதியானால், நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே நல்லது என்று கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சாதனை முறியடிப்பு முயற்சிகள்’ அமைப்பானது அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் சூரிய மண்டலத்திற்கு அப்பால், நமக்கு நெருக்கமாக உள்ள 100 விண்மீன் கூட்டங்களில் ஏலியன்ஸ் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை ஆராயும்.

இந்த அமைப்பின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய ஸ்டீபன் ஹாக்கிங் “ஏதோ வேற்று கிரகத்தில் உள்ள ஒரு புத்திசாலி உயிரினம் நம் பூமியில் மின்னும் விளக்கொளிகளை கவனித்துக் கொண்டிருக்கலாம். இதன் அர்த்தம் என்னவென்று அதற்க்கு தெரிந்திருக்கலாம். பூமிக்கு அப்பால் வேற்றுகிரக உயிரினத்தை கண்டுபிடிக்க நாம் தீவிரமாக ஈடுபடும் நேரம் வந்துவிட்டது” என்று கூறினார்.

இந்த அமைப்பின் நோக்கம், வேற்று கிரகத்திலிருந்து ரேடியோ சிக்னல் வந்தால் அதை அதிநவீன தொலைநோக்கியை பயன்படுத்தி கண்டறிவதுதான். வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடித்தபின், அவர்களிடம் எந்த வகையில் செய்திகளை அனுப்பலாம் என்று சொல்பவர்களுக்கு 10 லட்சம் டாலர்கள் ( சுமார் ரூ.6.5 கோடிகள்) பரிசுத்தொகையும் அறிவித்துள்ளது இந்த அமைப்பு.  போட்டியின் முழு விவரங்களை விரைவில் அதன் இணைய தளத்தில் அறிவிக்க உள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் அமெரிக்காவின் நாசா அமைப்பு கடந்த ஜூலை 23, 2015 அன்று ஒரு புதிய கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. பூமியை போலவே உள்ள அந்த கிரகமானது, பூமியை விட 60% பெரியது. கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கோளுக்கு கெப்லர் 452 b  என பெயரிட்டுள்ளது. அது சுமார் 1400 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. அது நமது சூரியனை போன்றே அமைந்துள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவது மட்டுமில்லாமல், பூமியின் சுற்று வட்டப்பாதையின் தொலைவைப்போலவே அதன் தொலைவும் அமைந்து உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா இல்லையா என்று ஆய்வுகளை மேற்கொள்ள இருகின்றனர்.

வரும் காலங்களில் ஏலியன்ஸ் கண்டுபிடிக்கப்படலாம். சாதி,மதம், நாடு கடந்து நடக்கும் திருமணத்தைப்போல கிரகம் கடந்தும் திருமணம் நடக்கலாம்.

Aliens Exist - Stephen Hawking

வேற்று கிரகவாசிகள் நிச்சயம் இருக்கிறார்கள் என்று அடித்துக் கூறுகிறார் ஸ்டீபன் ஹாகிங் (68).


இயற்பியலில் உலக மேதையான இந்த அறிவியல் அறிஞர் பிறப்பிலேயே சில குறைபாடுகளுடன் பிறந்தாலும் அவற்றையெல்லாம் மீறி தன்னுடைய அறிவாற்றலை நிரூபித்து உலகையே வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர்.

இவர் சொன்னால் அது உண்மையாகத்தானே இருக்க வேண்டும். வேற்று கிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அவர் நம்புவதற்கு ஒரே காரணம் கணக்குதான். அது என்ன கணக்கு? உலகில் பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன. நட்சத்திர கூட்டம் என்றால் தனித்தனி சூரிய மண்டலங்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் பூமியில் நாம் எல்லோரும் இருப்பதைப் போல எத்தனையோ கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கு அடிப்படையில் கூறுகிறார்.

அப்படியானால் அவர்களும் நம்மைப்போல நாகரிகம் அடைந்தவர்களா என்று கேட்டால், இருக்கலாம் என்கிறார் ஸ்டீபன் ஹாகிங். நம்மைவிட புத்திசாலிகளாகவும் நம்மைவிட நவீன விண்வெளி வாகனங்களைப் பயன்படுத்துகிறவர்களாகவும் இருக்கலாம், அவர்களுடைய நட்சத்திர மண்டலத்தில் வசதிக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது பிற கிரகங்களை ஆராய்ந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டாலோ பூமிக்கும் அவர்கள் வரக்கூடும் என்கிறார் ஹாகிங்.

வேற்றுகிரகங்களில் பூமியின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததைப் போன்ற சிறிய வகை உயிரினங்கள் இருக்கலாம் என்பது ஒரு எதிர்பார்ப்பு.

வேற்றுகிரகவாசிகளைப் பார்த்துவிட வேண்டும் என்ற குறுகுறுப்பு நமக்கு இருந்தாலும் அவர்கள் நம்மைச் சந்திக்கும் வேளை நமக்கு பேராபத்தாகக்கூட முடியலாம் என்றும் எச்சரிக்கிறார். ஏன் என்றால் அவர்கள் நம்முடைய பூமியைத் தங்களுடைய காலனியாகக்கூட பயன்படுத்த முற்படலாம் என்கிறார்.

டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பவுள்ள குறும்படத்துக்கான விளக்கக் காட்சியில் இடையில் தோன்றும் ஸ்டீபன் ஹாகிங் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதை லண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் நாளிதழ் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது.

Thursday, February 25, 2016

Tale of Man who made forest in dharmapuri, in Tamilnadu

ருமபுரி என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் மனசித்திரம் எப்படி விரியும்...? அது ஒரு பாலை நிலம், பெண் சிசு கொலை அதிகம் நடந்த ஊர், சாதிக் கலவரங்கள், நக்சல் பகுதி... இப்படியானதாகதான் இருக்கும் உங்கள் எண்ணம்.
 
ஆம். எனக்கும் இப்படிதான் அந்த ஊர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அதில் உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால், அது மட்டுமே உண்மையும் இல்லை.... அந்த ஊருக்கென இன்னொரு முகம் இருக்கிறது, யாருக்கும் அதிகம் தெரியாத முகம். பசுமை முகம்.  இந்த கட்டுரை அந்த பசுமை முகத்தை பற்றி அல்ல. அதை விதைத்த ஒரு தனி மனிதனை பற்றி...  ஆம். வரலாறு நெடுகிலும் சில அற்புதங்கள் தனி மனிதர்களால் நிகழ்ந்து இருக்கிறது.
 
அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திய ஒரு மனிதனை பற்றி 
 
 
உங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜாதவ் பயேங்கை தெரிந்து இருக்கும். யாரது என்கிறீர்களா...?  அசாமில் பிரம்மபுத்திரா மணல் படுகையில் ஒரு காட்டையே உருவாக்கியவர். அதற்காக பத்ம ஸ்ரீ விருது வரை வாங்கியவர்.   நம் ஊரிலும் ஒரு ஜாதவ் பயேங் இருக்கிறார்... அதுவும் தருமபுரியில்.  அவரை அறிமுகப்படுத்தவே இந்த கட்டுரை....  
 
தமிழகத்தின் ஜாதவ் பயேங்:
 
ஜாதவ் பயேங் உருவாக்கிய காடு அரசுக்கு தெரிய வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. ஊருக்குள் வந்த யானைகளை துரத்திக் கொண்டே சென்றவர்கள்,  கடைசியில் அடைந்த இடம் ஒரு காடு. தங்கள் வரைப்படத்தில் இல்லாத  காட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், இது எப்படி உருவானது என்ற தேடலுக்கான விடைதான் ‘ஜாதவ் பயேங்’. இதுபோல்தான் எனக்கும் தமிழகத்தின் ஜாதவ் பயேங் அறிமுகமானார்.  வேறொரு வேலையாக தருமபுரி மாவட்ட எர்ரப்பட்டிக்கு சென்று, அரசு வரைபடத்தில் இல்லாத ஒரு கானகத்தில் சிக்கி கொண்டேன். என்னை தொலைத்து அந்த அற்புத கானகத்தை கண்டடைந்தேன்.  அங்குதான் அந்த காட்டை உருவாக்கிய ‘பியுஷ் மனுஷ்’ அறிமுகமானார்... ராஜஸ்தான் பூர்வீகம். போன தலைமுறையில் தமிழகம் வந்து குடியேறியவர். 
 
 தமிழ் ஜாடையில் இல்லாத, ஆங்கிலத்தில் உரையை துவங்கிய அவருடன் என்னால் உடனே ஒட்ட முடியவில்லை. ஆனால் பேச ஆரம்பித்த சில மணிநேரங்களில் அவரின் உற்சாகம், என்னையும் தொற்றிக் கொண்டது. அவருடன் மாலை நேரத்தில் துவங்கிய இந்த உரையாடல் பின்னிரவு வரை நீண்டது...
 
 
காடெனப்படுவது யாதெனில்...
 
இந்த காடு எப்படி உருவானது...? 
 
“2007 ல் இந்த பகுதிக்கு வேறு வேலையாக வந்தேன். இந்த பகுதியின் நில அமைப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போது மழை தொடர்ந்து பல ஆண்டுகள் பொய்த்து இருந்ததால், விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று,  நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டு இருந்தார்கள். சூழலியல் மீது அக்கறை கொண்ட நண்பர்களிடம் பேசி நிதி திரட்டி, இடம்பெயர்ந்து கொண்டிருந்தவர்களிடமிருந்து நிலத்தை வாங்கினேன். ஏறத்தாழ நூறு ஏக்கர். நான் விவசாயி கிடையாது, விவசாயமும் தெரியாது.... ஆனால் கல்லூரிக் காலங்களில் ஆயிரக்கணக்கில் மரங்கள் நட்டு இருக்கிறேன். அந்த  அனுபவத்தில் இந்த வறண்ட நிலத்தில், மரங்கள் நட துவங்கினேம். ஏக்கருக்கு 1300 மரங்கள் வீதம், இது வரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் நட்டேன்...இப்படியாகதான் இந்த கூட்டுறவு காடு உருவானது...” என்று பியூஷ் தன் மழலை தமிழில் சொன்னார்.  
 
காடெனப்படுவது யாதெனில், வெறும் மரங்களின் தொகுப்பு மட்டுமல்ல.... ஓடைகள், குளங்கள், இதெல்லாம் இருக்க வேண்டும். அப்போதுதான் வனவிலங்குகள் வரும்... இப்போது இந்த காட்டில் ஒரு வற்றாத ஓடையும், 8 குளங்களும், 2 ஏரிகளும், 17 தடுப்பணைகளும் இருக்கிறது. அவ்வபோது காட்டு பன்றிகளும், எப்போதும் மயில்களும் வந்து போகிறது...
 
வளங்குன்றா வாழ்வும், பசுமை தொழிற்களும்
 
 
இனி அவருடனான உரையாடலில் இருந்து...
 
வணிக குடும்பத்தில் பிறந்த உங்களை எது சூழலியல் செயற்பாட்டில் ஈடுபடத் தூண்டியது...?
 
நானும் ஒரு வணிகனாகத்தான் என் வாழ்க்கையை துவங்கினேன். கொசு வலை உற்பத்தி செய்யும் ஒரு சிறு தொழிற்சாலை வைத்து இருந்தேன். அப்போது, தினமும் காலையில் மிதிவண்டியில் செடிகளை சுமந்து கொண்டு வீதி, குளக்கரை ஓரங்களில் மரம் நடுவதை பழக்கமாக வைத்து இருந்தேன். ஆனால், இன்னொரு புறம், என் தொழிற்சாலையில் கொசு வலையில் சாயம் ஏற்றுவதற்காக நீர் நிலைகளை மாசுப்படுத்தி கொண்டிருந்தேன். இந்த முரணில் செயல்பட பிடிக்கவில்லை. தொழிற்சாலையை மூடினேன். பிறகு சூழலுக்கு மாசு உண்டாக்காத பசுமை தொழில்களை செய்ய துவங்கினேன். அதன் ஒரு பகுதிதான் இந்த காடும்.

என்ன... காடு உருவாக்குவது ஒரு தொழிலா...? அதிலிருந்து எப்படி வருமானம் வரும் ?
 
ஆம் தொழில்தான்... சொல்லப்போனால் இதுதான் நீடித்த வருமானம் வரும் தொழில். பிற தொழிற்சாலைகள் உற்பத்தியை உண்டாக்குகிறோம் என்று இயற்கையை சுரண்டும் போது, நாங்கள் இயற்கைக்கு கொடுத்து அதிலிருந்து உரிமையுடன் எங்களுக்கு வேண்டியதை பெறுகிறோம்.

புரியவில்லையே...? 
 
நாங்கள் பத்து விதமான பசுமை தொழிற்களை பட்டியலிட்டுள்ளோம். மூங்கிலிலிருந்து மேசை, நாற்காலி உற்பத்தி செய்கிறோம், பழங்களை மதிப்புக்கூட்டி விற்கிறோம், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு என இயற்கையை சுரண்டாத தொழில்கள் செய்கிறோம்...

என்ன விளையாடுகிறீர்களா.... இதிலிருந்து எப்படி வருமானம் வரும் ?
 
உங்களின் இந்த பொது புத்திதான், பலர் இது போன்ற பசுமை தொழில்களுக்கு வராமல் இருப்பதற்கான காரணம். நாங்கள் உற்பத்தி செய்யும் மூங்கில் சாமான்களுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.  சொல்லப்போனால், என்னால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. என்னிடம் ஒரு பெரிய ஜீப் இருக்கிறது, பெரிய வீட்டில் குடி இருக்கிறேன். நம்புங்கள்.... இது  அனைத்தும் இங்கிருந்து கிடைக்கும் வருமானம்தான்... 

ஹோ... பொருட்களை மதிப்புக் கூட்டி விற்றால், வருமானம் வரும் என்கிறீர்கள்...? 
 
ஆம். மதிப்பு கூட்டுதல் மட்டுமல்ல... காலத்திற்கு ஏற்றார் போல் விவசாயத்தையும் நவீனப்படுத்தாமல், விவசாயம் நஷ்டம் தருகிறது என்று கூறுவது வெற்று பிதற்றல் என்கிறேன்.
 
புரிகிறது. ஆனால், இதை எப்படி விவசாயிகள் செய்ய முடியும். அரசு தானே செய்ய வேண்டும்...?
 
ஆம். நான் அரசைத்தான் சொல்கிறேன். பன்னாட்டு நிறுவனங்கள், பல ஆயிரங்கள் முதலீடு செய்கிறது. ஆனால், அவர்கள் தரும் வேலை வாய்ப்பு சில ஆயிரங்கள்தான். ஆனால், நாங்கள் இது போன்ற பசுமை தொழிற்கள் மூலம், சில லட்சங்கள் முதலீட்டில், பல பேருக்கு வேலை தருகிறோம். வளங்குன்றா வாழ்விற்கு, இது போன்ற தொழிற்களே சிறந்தது என நான் நம்புகிறேன். இயற்கையை சுரண்டுவதும் இல்லை, சூழலை மாசுப்படுத்துவதும் இல்லை. இது போன்ற தொழிற்களை ஊக்கப்படுத்த அரசு முன் வர வேண்டும். அதேவேளை, இளைஞர்களும் பசுமை தொழிற் பக்கம் வர வேண்டும். நான் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். மகிழ்வானதும், நிரந்தர வருமானம் வரக்கூடியதும் இதுதான்.
 
இப்போது சூழலியல் குறித்து அதிக விழிப்புணர்வு  ஏற்பட்டு இருக்கிறது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த தளத்தில் மிக உற்சாகமாக வேலை பார்க்கிறார்கள். ஆனால், நான் ஆரம்பத்தில் செய்த தவறையே செய்கிறார்கள், இயற்கையை சுரண்டும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, இயற்கையை காக்க போராடுகிறார்கள்... அவர்கள் பசுமை தொழில் செய்ய முன் வர வேண்டும்.  
 
இரவு அவருடைய கானகத்திலேயே தூங்கிவிட்டு காலை கிளம்பும் போது,  “பசுமை தொழிற்களில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு இந்த கூட்டுறவு காட்டின் வாசற்கள் திறந்தே இருக்கிறது. அவர்கள் இந்த இடத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளாலாம்”  என்று சொல்லி விடை கொடுத்தார்.
 
நுரையீரல் முழுவதும், கானகத்தின் சுத்தமான பிராணவாயுவை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்

Wednesday, February 10, 2016

வீர மதராஸி... இந்தியாவின் அரண் மெட்ராஸ் ரெஜிமென்ட்!

டந்த சில நாட்களாக சியாச்சின் பனிச்சரிவு நிகழ்வு பற்றிதான் இந்தியாவே பேசிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் சியாச்சின் அவலாஞ்சி பகுதியில் பனிச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார். உலகிலேயே உயரமான போர்க்களமான சியாச்சினை  பாதுகாப்பதிலும் தமிழர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றர். ஆம் சியாச்சினை பாதுகாக்கும் பொறுப்பு தமிழகத்தை சேர்ந்த மெட்ராஸ் ரெஜிமென்டின் கையில்தான் இருக்கிறது.
இந்திய ராணுவத்திலேயே மிகப் பழமையான ரெஜிமென்டும் இதுதான். இந்தியா எடுக்கும் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையிலும் அல்லது ராணுவம் தொடர்பான எந்த ஒரு ரகசிய நடவடிக்கையிலும் மெட்ராஸ் ரெஜிமென்டின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். இதன் தலைமையகம் உதகை அருகேயுள்ள வெலிங்டனில் உள்ளது. சரி இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் எப்படி உருவானது?

கடந்த 1639-ம் ஆண்டு சென்னை நகரம் உருவானது. தொடர்ந்து 1644-ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை எழுப்பப்பட்டது. 1660-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால்,  முதன் முதலில் மெட்ராஸ் ரெஜிமென்ட் ஈரோப்பியன் என்ற பெயரில் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. எனினும்  1758-ம் ஆண்டுதான் 100 சிப்பாய்கள்  கொண்ட படையாக உருவானது.  மேஜர் லாரன்ஸ் என்பவர்தான் இதன் முதல் தலைவர். பிரிட்டிஷ் வீரர்களுடன் இந்தியர்களும் இந்த படைப்பிரிவில் இருந்தனர். தென்னகத்தில் இருந்த பிரெஞ்சு படையினருடன் போரிடுவதுதான் மெட்ராஸ் ரெஜிமென்டிடம் ஒப்படைக்கப்பட்டமுதல் பணி.

அந்த காலகக்கட்டத்தில் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர்களிலும் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் சுதந்திரத்துக்கு பின், இந்தியாவின் மிக முக்கியமான ரெஜிமென்டாக மெட்ராஸ் ரெஜிமென்ட் உருவானது. இந்தியாவை பொறுத்தவரை எந்த ஒரு ராணுவ நடவடிக்கையும் முதலில் ஒப்படைக்கப்படுவது மெட்ராஸ் ரெஜிமென்டிடம்தான்.
தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள்,  மெட்ராஸ் ரெஜிமென்டில் பணியில் அமர்வதை ஒரு பெருமையாகவே கருதினர்.  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைதான் முதலில் தேர்வு செய்வர். எனினும் தமிழகத்தை தலைமயிடமாகக் கொண்டு இயங்குவதால்,  இந்த ரெஜிமென்டில் தமிழர்கள்தான் அதிகமாக இடம் பெறுகின்றனர். 

பழமை வாய்ந்த இந்த ரெஜிமென்டின் பெருமைக்கு இரண்டே இரண்டு சான்றுகளை கூறலாம்.  ஒன்று இந்தியாவே அலறிய ஆபரேசன் புளூ ஸ்டார். இன்னொன்று உலகமே கதறிய பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு. பஞ்சாப் மாநிலம் அமிர்தரசரஸ் பொற்கோவிலுக்குள் சென்று காலிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடியது இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் படையினர்தான். அடுத்து வாஜ்பாய் அரசில்,  1998-ம் ஆண்டு அப்துல்கலாம் தலைமையில் பொக்ரானில் அத்தனை ரகசியமாக அணுகுண்டு வெடித்து காட்டியதும் இதே மெட்ராஸ் ரெஜிமென்ட்தான்.
அதுமட்டுமல்ல,  இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் பெருமை வாய்ந்த ராணுவத் தலைவர்கள் தங்களது கடைசிகாலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் கழிக்க விரும்புவார்கள். இந்திய ராணுவத்தில் ஜெனரல் கரியப்பா, ஜெனரல் ஷாம் மானக் ஷா ஆகிய இருவர்தான் பீல்டு மார்ஷல் அந்தஸ்த்தை பெற்றவர்கள். இதில் பீல்ட் மார்ஷல் ஷாம் மானக் ஷா,    தனது கடைசி காலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் கழித்தார்.

இப்படி பல பெருமைகளை பெற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள போர்முனையை  பாதுகாத்து வருகிறது.  கிட்டத்தட்ட மைனஸ் 50 டிகிரி  வரை குளிர் வீசும் போர் முனை இது. இந்தியாவில் எத்தனையோ ரெஜிமென்டுகள் இருக்க,  இந்த கடின பணியை மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் ஏற்று செய்து வருகிறது. பாகிஸ்தானும் இங்கு தனது ராணுவத்தினரை நிறுத்தியுள்ளது.  அந்த வகையில் பாகிஸ்தானை முதலில் எதிர்கொள்வதும் இந்தியாவின் வால் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.  

மெட்ராஸ் ரெஜிமென்டின் போர்க்கள வார்த்தை என்ன தெரியுமா? '' ஏ வீர மதராசி... அடி கொல்லு, அடி கொல்லு'' என்பதுதான். ஜெய் ஹிந்த்! 

Saturday, January 09, 2016

இசைஞானி 40

சைஞானி என அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் மேஸ்ட்ரோ இளையராஜா, இசையமை்பபாளராக 40வது ஆண்டில் அடிவைக்கிறார்.
அவரது இசைச் சாதனைகளை ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. பேசி முடியாத பிரமாண்டம் அவர். 1000 படங்களைத் தாண்டி, இன்னமும் இன்னிசையைத் தந்து கொண்டிருக்கிறார். அவரது சமீபத்திய ருத்ரமாதேவி பாடல்களைக் கேட்டவர்கள், அந்த மெலடியில் கிறங்கி நிற்கிறார்கள்.

ராகதேவனின் 40 ஆண்டுகால இசைப் பயணத்தில், சில துளிகளை இங்கே தந்திருக்கிறேன். இதுபோல இன்னும் ஆயிரமாயிரம் துளிகளைத் தரமுடியும்…
இப்போது இசைஞானி 40…
1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத்
தேவைப்பட்டதில்லை. ‘தென்றல் வந்து தீண்டும்போது…’ என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான். அருகிலிருந்து பார்த்த நாசர் பரவசப்பட்டு இளையராஜாவின் கால்களைக் கட்டிக் கொண்டாராம்!
2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்து முடித்த படம் ”நூறுவாது நாள்”.
3. இளையராஜா பின்னணி இசையில் மிரட்டிய சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களைக் கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது!
4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை ‘பக்கா’ நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.
5. வாசித்துப் பார்த்து அந்த இசைக் கருவியின் ஒலி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதில்லை இளையராஜா. மனதுக்குள்ளேயே அந்த இசையை இசைத்துப் பார்த்து அதை நோட்ஸாக எழுதுகிறார். இந்த அற்புதம் படைத்தவனுக்கு மட்டுமே கைவந்த அதிசயம்.
6. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் ‘தூங்காத விழிகள்
ரெண்டு..’ பாடலை அமைத்து மழையையும் வர வழைத்தவர் இசைஞானி.
7. பாடலின் மெட்டும் அதற்கான 100 சதவீத ஆர்கெஸ்ட்ரேஷனையும் ஒருவரே செய்யும்போதுதான் கிடைக்கும் ஒரு பாடலுக்கான முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு… இவை அனைத்தையும் எந்த இசையமைப்பாளரிடமும் ஒருங்கே காண முடியாது… இளையராஜாவைத் தவிர!
8. இசைஞானி தான் முதல்மgறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் . ‘கவிக்குயில்’ என்னும் படத்தில் பாலமுரளி கிருஷ்ணா மற்றும் ஜானகி குரல்களில் தனித்தனியாக ஒலிக்கும் ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்…’ என்ற பாடல்தான் அது.
9. ‘கவுன்ட்டர்பாயின்ட்’ என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற “என் கண்மணி” என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.
10. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி ‘எலெக்ட்ரிக் பியானோ’ உபயோகபடுத்தினார்.
11. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.
12. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத, ஏன் கற்பனையும் செய்து பார்த்திராத ஒரு விஷயம் இது. ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட ஒரு காட்சிக்கு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றவர் இசைஞானி ( ஹேராம் )
13. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டுக் காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச் சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல் திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக் குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம், வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.
14. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி. சிம்போனி கம்போஸ் பண்ண குறைந்தது
ஆறு மாதங்களாவது ஆகும். ஆனால் வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.
15. இசைஞானி விசிலில் டியூன் அமைத்து அதை ஒலிநாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல், “காதலின் தீபம் ஒன்று”.
16. படத்தின் கதையைக் கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், ‘கரகாட்டக்காரன்’.
17. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளைக் கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜாதான்.
18. ராஜா ரீ-ரெக்கார்டிங் செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தைப் பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பித்துவிடுவார். அவர் ஆரம்பித்து முடிக்கும்போது படம் சரியாக முடிந்திருக்கும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.
19. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’. சவுண்ட்ராக்குகளும் பாடல்களைப் போல ரிக்கார்ட் மற்றும் கேசட்டுகளில் இடம்பெற்றது இளையராஜா இசையமைத்த படங்களில்தான்.
20. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தவர் இசைஞானி
21. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதைப் பெற்றவர் இசைஞானி (பழசிராஜா)
22. இசைஞானி முதன் முதலாக ‘ஸ்டீரியோ” முறையில் பாடல்களை பதிவு செய்த படம் ப்ரியா.
23. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’
24. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் வைதேகி காத்திருந்தாள், இளமைக் காலங்கள், அரண்மனைக் கிளி.
25. இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி (புன்னகை மன்னன்).
26. ‘பஞ்சமுகி’ என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..
27. பொதுவாக 2 அல்லது 3 நாட்களில் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாட்கள் பின்னணி இசைக்கோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி ) தமிழில் ( சிறைச்சாலை).
28. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்குப் பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப்பான உண்மை.
29. இசைஞானியின் பின்னணி இசை மற்றும் ட்யூன்களைக் காப்பியடித்து பெரிய இசையமைப்பாளரானவர்கள் ஏராளம். இல்லாதவன் எடுத்துக்கிறான் என்று ஆரம்பத்தில் சும்மா விட்டுவிட்டார் இசைஞானி. இப்போதுதான் அதற்கு ஒரு தீர்வு கண்டிருக்கிறார்.
30. இளையராஜா இதுவரை நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். பத்மபூஷன் விருதும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
31. உலகின் முக்கிய இசை விற்பன்னர் எனப்பட்ட பால் மரியா, பிரான்ஸ் வந்த இசைஞானியைச் சந்திக்க 5 நிமிடங்கள்தான் முதலில் நேரம் ஒதுக்கினார். ஆனால் சந்தித்த பிறகு, ராஜாவின் மேதைமை வியந்து, 3 மணி நேரம் பேசிக் கொண்டே இருந்தாராம்!
32. ரஜினி, கமல் இருவரின் அதிகப் படங்களுக்கு இசை தந்தவர் இளையராஜாதான்.
33. ரஜினியை எப்போதும் சாமி என்றுதான் இளையராஜா அழைப்பார். ரஜினியும் ராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்.
34. புகைப்படங்கள் எடுப்பதில் நிபுணத்துவம் மிக்கவர் இசைஞானி. இவர் எடுத்த புகைப்படங்களை வைத்து சென்னை மற்றும் கோவையில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. இவரது 100 சிறந்த புகைப்படங்களைத் தொகுத்து தனி புத்தகமும் வெளியாக உள்ளது. இதில் அவரது படங்களைப் பற்றி பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
35. இளையராஜாவின் பிரபலமான பாடல்கள் பலவற்றுக்கு வரிகள் தந்தவர் அவரது தம்பி கங்கை அமரன். ‘இசைக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரம் இளையராஜா’ என்பது அவர் கருத்து.
36. திரைப்படங்களுக்கு பாடல்களே எழுதமாட்டேன் என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்த கவிஞர் சிற்பி, இளையராஜா இசையில் எழுதிய ஒரே பாடல் ‘மலர்களே.. நாதஸ்வரங்கள்…!’ படம்: கிழக்கே போகும் ரயில்.
37. தனது சொந்தப் படங்களின் இசை வெளியீடு, தன் மகன்கள் இசையமைக்கும் படங்களின் இசை வெளியீடுகளுக்குக் கூடப் போகாத இளையராஜா, பாரதிராஜாவின் பொம்மலாட்டம், கமலின் விஸ்வரூபம் படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகளுக்குப் போய்ச் சிறப்பித்தார். இரண்டு படங்களுக்குமே அவர் இசையமைக்கவில்லை. நட்புக்கு அவர் தந்த மரியாதை அது!
38. இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி ஆரட்டோரியோவைக் கேட்ட எழுத்தாளர் சுஜாதா, ‘கடவுளைக் கோயில்களில் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். இளையராஜாவின் திருவாசகத்தைக் கேட்டால் போதும்.. கடவுளைக் காணலாம்!’ என்றார்.
39. தன்னிடம் பணியாற்றிய ஏ ஆர் ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளுடன் நாடு திரும்பினார். அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் இளையராஜா பங்கேற்று ரஹ்மானுக்கு தங்கச் சங்கிலி அணிவித்தார். அப்போது ரஹ்மான், ‘எனக்கு விருது கிடைக்கக் காரணம், எனது முகவர்கள் சரியாக என் இசையை ஆஸ்கர் குழுவுக்குக் கொண்டு சென்றதுதான். ராஜா சார் இதைச் செய்திருந்தால் அவரது இசைக்கு எப்போதோ ஆஸ்கர் கிடைத்திருக்கும்,” என்றார்.
40. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல… அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது ‘குரு’ என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி