Saturday, May 21, 2016

கூகுள் அலர்ட்ஸை(Google Alerts) உருவாக்கியவர் விவசாயி ஆனார்...!

லிஃபோர்னியாவில் உள்ள தன் நிலத்தில் அந்த விவசாயி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். வேலையாட்களுக்கு அடுத்தடுத்த உத்தரவுகள் அவரிடமிருந்து பறந்துகொண்டிருக்க,  கையோடு அதை செய்து முடிக்கிறார்கள் அவர்கள். தேவைப்பட்டால் அவரும் நிலத்தில் இறங்கி வேலை செய்கிறார். அதை ஆச்சர்யமாக பார்க்கின்றனர் தொழிலாளர்கள்.
ஒரு விவசாயி தன் நிலத்தில் இறங்கி வேலை செய்வதை மற்றவர்கள் ஆச்சர்யமாக ஏன் பார்க்கவேண்டும் என்கிறீர்களா....? காரணம் அந்த விவசாயி நேற்றுவரை நிற்க நேரமின்றி உலகநாடுகளுக்கு விமானத்தில் பரபரப்பாக பறந்துகொண்டிருந்தவர்...ஆம் கூகுள் அலர்ட்ஸை (Google Alerts) உருவாக்கிய நாக கடாருதான் (Naga Kataru) அந்த நவீன விவசாயி.

இணையத்தில் நாம் உற்று கவனிக்க விரும்பும் விஷயங்களில் வரும் புதிய அப்டேட்கள், செய்திகளை பிரித்து நமக்கு அனுப்பி ‘அலர்ட்’ செய்யும் கூகுளின் ஒரு சேவையின் பெயர்தான் ‘கூகுள் அலர்ட்ஸ்’. உதாரணத்துக்கு நீங்கள் ரஜினி ரசிகர் எனில், ரஜினிகாந்த் பற்றி இணையத்தில் வரும் செய்திகள் மட்டும் தனியாக, (உடனடியாக படிக்க விரும்பினால் இந்த சேவையில் ‘ரஜினிகாந்த்’ பெயரை கொடுத்துவிட்டால்போதும்) அவரை பற்றி இணையத்தில் செய்திகள் அப்டேட் ஆகும்போதெல்லாம் உங்கள் மெயிலில் அந்த செய்திகள் நேரடியாக வந்துவிழும். 

ஆந்திரப்பிரதேசத்தில் ​கம்பலாகுடம் (​Gampalagudem​)​ எனும் ​ஊரில் பிறந்து வளர்ந்தவர் நாக கடாரு.​ ​அவ்வளவாக கல்வியறிவற்ற அந்த கிராமத்தில், தலைமையாசிரியரான அவரது தந்தை கடாருவை கணினி பொறியாளராக ​படிக்க வைத்தார். பிறகு, புகழ்பெற்ற ஐ.ஐ.டி யில் (IIT) கணினி படிப்பு​முடித்தார் கடாரு.

​கூகுள் அலர்ட்ஸ்

2003​ ம் ஆண்டு, ​​கூகுள் அலர்ட்ஸ் வெளியிடப்பட்டது. பெரும் முயற்சி எடுத்து இதை அவர் உருவாக்கியபோது,  இவருடைய ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர்,  இதனை​அங்கீகரிக்கவில்லை. இவரது முயற்சியை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் கடாரு சோர்வடையவில்லை. கூகுளின் அப்போதைய CEO க்களான​ Sergey Bring மற்றும் Larry Page ஐ சந்தித்து தன் கண்டுபிடிப்பை முன் வைத்தார். அதை ஆய்வு செய்த அவர்கள்,  அதன் தனித்தன்மையை உணர்ந்து அவரின் முயற்சியை பாராட்டியதோடு,  நாக கடாருவின் கண்டுபிடிப்பு​மிகவும் பிடித்துபோனதால், கூகுள் நிறுவனத்திலேயே அவருக்கு ஒரு பொறுப்பையும் அளித்தனர். 

இருப்பினும் நாக கடாருவுக்கு தொடர்ந்து கூகுளில் பணியாற்றுவது ஒரு சலிப்பை தந்தது. வித்தியாசமாக ஏதாவது சாதிக்கவேண்டும் என்பதில் விருப்பம் கொண்ட கடாரு,  வெகு சீக்கிரத்தில் கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறி, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தினார்.  ​ ​

இப்போது இவரின் புதிய அவதாரம், ​'​விவசாயி​'​.... ஆம், 2008 ல் தன் வருமானத்தில் கலிஃபோர்னியாவில் 320 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். முதலீடாக வாங்கிப்போட்ட அந்நிலத்தை,  5 வருடங்களுக்குப் பிறகு நல்ல விலைக்கு விற்றுவிடுவதுதான் அவரது திட்டம். ஆனால் விற்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு திடீரென ஒருநாள் உதித்ததுதான் விவசாயம் செய்யும் திட்டம். தன் சொந்த ஊரில் உள்ள பூக்களும், பழங்களின் வாசமும் அவருக்கு நினைவுக்கு வந்ததால், நிலத்தை விற்கும் திட்டத்தை கைவிட்டு உடனே ஒரு முடி​வை எடுத்தார். அந்த நிலத்தை விற்பதற்குப் பதிலாக, அதை பாதாம் தோட்டமாக மாற்றி​ விட்டார். இன்று கலிஃபோர்னியாவில் பெரிய பாதாம் விவசாயியாக கடாரு விளங்குகிறார்.
"எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. காரணம் சிறுவயதிலிருந்தே என்னை என் தந்தை பெரிய படிப்பாளியாக வேண்டும் என்றே திட்டமிட்டு வளர்த்தார். ஆனால், எனக்கு விவசாயம் பிடித்திருந்தது. இன்று விவசாயியாக மாறியிருக்கிறேன். அதனால் தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்கிவிடக்கூடாது என்பதால் நானே முறையாக விவசாயம் பற்றி படித்தேன்​.​ எனது முயற்சியால்  இன்று ​இந்த நிலத்தில் ​பாதாமும், மற்ற சில விளைபொருட்களையும் விளைவிக்கிறேன்.  என் நிலத்தில் 8 பேர் வேலை செய்கின்றனர். வருடத்திற்கு 2.5 மில்லியன் வருமானம்​ கிடைக்கிறது" என்கிறார் விவசாயி நாக கடாரு.

வெற்றிகரமான விவசாயி ஆன பின்னரும் கடாரு, தன் படிக்கும் ஆர்வத்தை விடவில்லை. இப்போது  ​'ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக'த்தில் சூழல் மற்றும் வளங்கள் தொடர்பான மேற்படிப்பை படித்து வருகிறார்.

"விவசாயத்தை இன்னும் தொழில்நுட்ப ​ ரீதியாகக் கொண்டு செல்வதற்கே​,​ இந்த படிப்பை படிக்கிறேன்" என வெற்றிப் புன்னகையை முகத்தில் தழுவ விட்டபடியே சொல்கிறார் நாக கடாரு. 

விவசாயத்தின் மீதான நம்பிக்கை கீற்றை விதைக்கிறார்கள் கடாரு போன்ற நவீன விவசாயிகள்... !

No comments: