Friday, May 08, 2015

ஏலியன்ஸ்... இருக்காங்களா இல்லையா?

ன்னும் சில ஆண்டுகளில் ‘என்ன மச்சி இவ்ளோ லேட்டு?’ என்று ஏலியன்களின் தோளில் கை போட்டு ஒரு கப் காபி சாப்பிடலாம். ‘இதுதான் நாகரீகமா? உங்க கிரகத்துல உனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தாங்களா?’ என சட்டையைப் பிடித்துக்கொண்டு சண்டை போடலாம். ஏன்? அந்த ஏலியன்களையே காதலித்து, கல்யாணம் செய்துகொள்ளலாம்’ - ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகளைப் பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் பலர் இப்படிச் சொல்ல, ‘அதெல்லாம் கிடையாது. ஏலியனாவது கீலியனாவது. போய் வேலையைப் பாருங்க பாஸ்’ என்கிறார்கள் சிலர். இப்படி ‘வரும்... ஆனா வராது’ ரீதியிலேயே போய்க்கொண்டிருக்கும் ஏலியன்ஸ் விஷயத்தில் ஒரு ஸ்டேட்மென்ட் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. ‘உலக அரசுகள் வேற்றுக் கிரகவாசிகளைப் பாதுகாப்பான ரகசிய இடத்தில் வைத்துக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏலியன்கள் பற்றிய ரகசியங்களை மனித இனத்திடம் இருந்து மறைக்கிறார்கள்’ என்று சமீபத்தில் பேசியிருக்கிறார் கனடாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பால் ஹெல்யர். வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய செய்திகளில் சுவாரஸ்யமான சில தகவல்கள்...!
 விண்வெளியிலிருந்து வெளிவரும் ரேடியோ சிக்னல்கள்தான் ‘மற்ற கிரகங்களிலும் உயிர்கள் இருக்கலாம்’ என்ற வாதத்திற்கு அடிப்படை. உலகம் முழுக்க இதுவரை கணக்கிட முடியாத அதே சமயம் புரிந்துகொள்ள முடியாத அளவில் சிக்னல்கள் கிடைத்திருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் பூமிக்கு விண்வெளியில் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்று வந்திருக்கிறது. அடிக்கடி நடக்கும் சம்பவம்தான் என்றாலும், இப்போது கிடைத்திருக்கும் இந்த சிக்னல்கள் ஒலி அலைகளைவிட மில்லி நொடிக்கும் குறைவான நேரத்தில் பதிவாகியுள்ளதுதான் ஆச்சர்யம். ஏனெனில், இந்த வெளிச்சம் பூமியின் பரப்பில் ஒருநாள் முழுக்க வெளிவரும் ஒளிக்குச் சமமானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதுபோன்ற மர்ம ஓளிகளை இந்தியாவும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது.
 ‘பயிர் வட்டங்கள்’ எனப்படும் குறியீடுகள் இன்றுவரை ஏலியன்களைப் பற்றிய பல பரபரப்பான வாதங்களை முன் வைக்கிறது. பெரும்பாலான பயிர் வட்டங்கள் இங்கிலாந்திலும் அரிதாக வேறு சில நாடுகளிலும் உருவாகிக்கொண்டிருக்கிறது. அதென்ன பயிர் வட்டம்? முழு வயல் பரப்பையும் ஆக்கிரமித்து வரையப்பட்டிருக்கும் இந்த சித்திரங்கள் பயிர்களுக்கு சிறிதும் சேதாரம் இல்லாமல், நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. சாதாரண மனிதர்கள் உழைத்தால் இப்படி ஒரு சித்திரத்தை உருவாக்க பல மாதங்கள் பிடிக்கும். ஆனால், இது நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் திடீரென்று உருவாகுவதுதான் ‘ஏலியன்களின் வேலை’ என்ற யூகத்துக்கு வழி வகுக்கிறது. இதுவரை உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான பயிர் வட்டங்கள் உருவாகியிருக் கின்றன. இந்த பயிர் வட்டங்களின் மர்மத்தை அடிப்படை யாகக்கொண்டு இந்தியாவைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குநரான மனோஜ் நைட் ஷியாமளன் ‘சைன்’ என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
 கென்யா நாட்டில் இருக்கும் என்வைட்டினெட் என்ற பகுதிக்குச் செல்லும் மனிதர்கள் மாயமான முறையில் காற்றில் கரைந்துவிடுவதாக பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தீவுப்பகுதியான இங்கு ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மக்கள் திடீரென காணாமல் போனதாகவும், அவர்களைத் தேடி இந்தத் தீவுக்குச் சென்ற ஒரு குழுவும் திரும்பி வரவில்லை என்றும் இந்தத் தீவுக்கு அருகில் இருக்கும் மக்கள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்விக்கு பதில் இதுதான். ‘‘ஒளி வெள்ளத்துடன் கூடிய தட்டு ஒன்றும், அதிலிருந்து சுழல் ஒன்றும் வருகிறது. இந்தச் சுழல்தான் தீவில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் உறிஞ்சிச் செல்கிறது’’ என்பதுதான். இந்த பதிலுக்கு விடை தேடச் சென்ற விவியன் பஸ்ஸூகக் என்ற ஆராய்ச்சியாளரும் இதே பதிலை சொன்னதுதான் அதிர்ச்சி.
 பறக்கும் தட்டுகளுடனும், வேற்றுக் கிரகவாசிகளுடனும் நேரடித் தொடர்பில் இருக்கும் இடமாக இன்றுவரை கருதப்படுவது அமெரிக்காவில் உள்ள ‘ஏரியா 51’. விமானங்கள் இந்தப் பகுதியில் பறக்கக் கூடாது, மக்கள் நடமாட அனுமதி கிடையாது என ஏகப்பட்ட கண்டிஷன்களுடன் இயங்கும் பகுதி. அமெரிக்காவின் விமானப்படைக்குச் சொந்தமான இந்த இடம், ராணுவ வீரர்களுக்கான பயிற்சி முகாமாகவும் திகழ்கிறது. இன்றுவரை ஏகப்பட்ட மர்மங்களைத் தாங்கி நிற்கும் இந்த ‘ஏரியா 51’ல் 1947-ம் ஆண்டு ரோஸ்வெல் நகரில் விழுந்த பறக்கும் தட்டு ஒன்றும், அதிலிருந்த நான்கு ஏலியன்களில் உயிருடன் பிடிபட்ட ஓர் ஏலியன் இன்றுவரை பாதுகாப்பாக இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 1953 -1963 வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிவிட் ஐசன்ஹோவர் என்பவர் மூன்று முறை ஏலியன்களைச் சந்தித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இதை அப்பல்லோ மிஷனின் பயிற்சியாளராகவும், அமெரிக்க விமானப்படையின் உயர் பிரிவில் பணியாற்றிய கிர்கிலின் மானுவேல் உள்பட பல வீரர்கள் கூறியிருந்ததை அனைத்து அமெரிக்க ஊடகங்களும் வெளியிட்டன.
 இதுதவிர ‘நீர்க்கரடி’ என்ற உயிரினமே வேற்றுக் கிரகவாசியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் பல அறிவியல் அறிஞர்கள். ஏனெனில் அதனுடைய சில குணங்களும் வாழும் தன்மைகளும் பூமியின் எந்த இடத்திலும் இல்லை. தவிர, முப்பரிணாமத்தில் இயங்கும் தன்மையுடைய மனிதர்கள் நாம். ஒருவேளை ஏலியன்கள் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பரிணாமங்களில் வாழும் உயிரினங்களாக இருந்தால் என்று நினைத்தாலே திகிலூட்டும் கோணங்களிலும் வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இப்படி ஏலியன்கள் பற்றி பல வருடங்களாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் சந்தேகங் களுக்குத்தான் முற்றுப்புள்ளி வைக்கச் சொல்கிறார் கனடா முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பால் ஹெல்யர். அவருடைய இந்தக் கேள்விக்கு ஏலியன்களின் பல ரகசியங்களைப் பதுக்கி வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அமெரிக்காவின் ‘நாசா’ ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை விஞ்ஞானிகளில் ஒருவரான எலன் ஸ்ட்ரோபென் இப்படிக் கூறியிருக்கிறார்.
‘‘ஏலியன்கள் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளில் ஏலியன்கள் பற்றிய அனைத்து துல்லியமான தகவல்களையும், ஏலியன்களின் இருப்பையும் உறுதி செய்துவிடலாம்.’’
அப்போ இங்கேயும் ஒரு அவதார்...?

No comments: