Wednesday, May 06, 2015

அமெரிக்காவில் 'மதுரை வீரன்'!

ரு சனிக்கிழமை காலை. வழக்கம்போல் நான் எழுந்து சேப்பல் சர்வீசுக்கு செல்ல காரை ஸ்டார்ட் செய்தேன். கொஞ்ச நாளாக காலியாக இருந்த  பக்கத்து வீட்டில் வீட்டில், சாமான்கள் யூ ஹாலில் (U-Haul) இறங்கிக் கொண்டிருந்தது.  புதிதாக ஒரு குடும்பம் வருகிறது என்று  தெரிந்தது. எந்த நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்களோ என்ற எண்ணத்தோடு அருகில் சென்றேன். பழுப்புநிற டோயாட்டா கேம்ரியில்,  மெல்லிய  மீசை வைத்த ஒருவர் புகை விட்டுக் கொண்டு இருந்தார்.

நான் அருகில் சென்றதும் புகையை கையால் விரட்டியபடி புன்னகைக்க முயன்றார். காரில் "துஜே தே கா டு யே ஜானா சனம்... " ஒலித்துக் கொண்டிருந்தது. இண்டியன்?  என்று கேட்டேன், ஆமா என்று தலையாட்டிய  அவரைப் பார்த்து, "கியா ஹாலா  ஜி?  " என்று எனக்குத் தெரிந்த ஹிந்தி வார்த்தையை பிரயோகித்தேன். "வாட்" என்றார். சிகரெட் துண்டை எறிந்துவிட்டு.  "துமாரா நாம் கியா ?"  என்று எனக்குத் தெரிந்த அடுத்த  ஹிந்தி  வார்த்தையை சொன்னேன்.

"ஐ டோன்ட் அன்டர்ஸ்டான்ட்",  என்று சொன்னார். "விச் பார்ட் ஆஃப்  இண்டியா யு ஆர் ஃபிரம் ?" என்றேன். அப்போதுதான் சொன்னார்,  அவர் டிரினிடாட் நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர் என்று.

இவர்கள் சாப்பிடுவது அரிசிச்சோறு. பழக்க வழக்கங்கள் நம்மைப் போல, உருவமும் நம்மைப்போலவே. இவர்களில்  இந்துக்களும்,  கிறிஸ்தவர்களும், முஸ்லீமுகளும் உண்டு. கேட்பது ஹிந்திப் பாடல்கள்,  பார்ப்பது ஹிந்திப் படங்கள்,  ஆனால் பேசுவது மட்டும் உடைந்த ஆங்கிலம். இவர்கள் கதை ஒரு பரிதாப கரமான கதை.

பரஸ்பர அறிமுகம் முடிந்தவுடன்,  தான் கன்ஸ்ட்ரக்சன் தொழிலில் இருப்பதாகக் கூறி தன்னுடைய பிஸி னஸ் கார்டைக் கொடுத்தார். அதில் போட்டிருந்த பேரைப் பார்த்ததும் நான் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன். அதில் "Madira viraen  என்று போட்டிருந்தது. அது நம்ம "மதுரை வீரன்" என்று புரிந்து கொள்வதற்கு எனக்கு வெகு நேரம் ஆகவில்லை. இதோ ஒரு தமிழன், அதுவும் மதுரைக்காரன் தன்னுடைய வேரை மறந்து,  மொழியை மறந்து, தான் தமிழன் என்று கூடத் தெரியாமல் ஆனால்  ஏதோ ஒரு மூலையில் கலாச்சாரம் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது. இப்போது நியூயார்க் வாசம். அவர் ஒரு இந்து, இஷ்ட தெய்வம் மாரியம்மன். முக்கிய பண்டிகை தீபாவளி. மனைவி பெயர் Maidile (மைதிலி) மகள் பெயர்  Rada (ராடா என்றார்கள்).

அவருக்கு இந்தியாவில் டெல்லி, பம்பாய் தவிர வேறு ஊர்கள் தெரியவில்லை. ஆனால் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தெரிகிறது. கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் தெரிகிறது. கமல்ஹாசன் தெரியுமா?  என்று கேட்டேன். அவர் சொன்னார். "அவரை ரொம்பப் பிடிக்கும், “ஏக் துஜே கேலியே", பத்துமுறை பார்த்தேன். ஆனால் ஏன் "அவர் நடிப்பதேயில்லை ?" என்றாரே பார்க்கலாம். தமிழ் சினிமாவை அறிமுகப்படுத்தினேன்.

அவருடைய பூர்வீகத்தை கொஞ்சம் கொஞ்சமாக விளங்க வைத்தேன். அவருக்குத்தெரிந்த ஹேமமாலினி , ரேகா, ஸ்ரீதேவி, A.R.  ரஹ்மான் அனைவரும் தமிழ்தான் என்று சொன்னேன். அதன்பின்னர் இதனைக் குறித்து மேலும் அறிய ஆர்வம் மேலிட்டதால், நான் செய்த கூகுள் ஆராய்ச்சியில் தெரிந்து கொண்டவற்றை கீழே கொடுக்கிறேன்.

ஆங்கிலேயர் உலகத்தின் பாதி நாடுகளை ஆக்ரமித்து, ஆண்டு கொண்டிருந்த சமயம் அது. கரீபியன் தீவுகளில் கரும்புத் தோட்டங்கள் வளம் கொழித்தன. பெரும்பாலும் பிரிட்டிஷ் முதலாளிகள், வேலை செய்ய ஆப்பிரிக்க அடிமைகள். அச்சமயத்தில் 1833ல் இங்கிலாந்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதால்,  அவர்கள் ஆண்ட எல்லா நாடுகளிலிருமிருந்த ஆப்பிரிக்க அடிமைகள் விடுதலை பெற்று, தங்கள் எஜமானர்களைத் துறந்து வெளியேறினர்.
வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்ட முதலாளிகளின் மனதில் உதித்த புதிய திட்டம்தான் இந்தியாவில் இருந்து ஆட்களைக் கொண்டுவருவது என்பது.

1838-ல், இரண்டு கப்பல் நிறைய இந்தியர்கள் கல்கத்தாவிலிருந்து பிரிட்டிஷ் கயானா வந்து சேர்ந்தார்கள். அந்தக் கப்பல்களின் பெயர் விட்பி(Whitby) &  ஹெஸ்பரஸ் (Hesperus). இதில் அதிர்ச்சி  என்னவென்றால் ஏஜென்ட்கள் மூலம், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கல்கத்தா வந்த மக்களுக்கு, தாம் என்ன வேலை செய்யப் போகிறோம் என்பது மட்டுமல்லாது,  கடல் கடந்து தாய் வீட்டைவிட்டு வெளி நாட்டுக்குச் செல்லப் போகிறோம் என்பதும் சுத்தமாக தெரியாது.

எனவே இந்த நான்கு மாத கப்பற் பயணத்திற்கு ஆயத்தமாகவும் வரவில்லை என்பதால் மிகுந்த துயரத்துக் குள்ளானார்கள். அதோடு நிறையப்பேர் கடல் பயணத்தில் இறந்தும் போயினர். கரும்புத் தோட்டப்பகுதி களில் வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், அடிமைகளைப் போலவே கடுமையாக நடத்தப்பட்டனர். எதிர்ப்பவர்கள் தீவிரமாகத் தண்டிக்கப்பட்டதோடு, சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

கயானா, ஜமைக்கா, டிரினிடாட், மார்ட்டினிக், சூரிநாம் மற்றும் சில பிரிட்டிஷ்  தீவுகளுக்கு  புலம் பெயர்ந்த  இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 25 லட்சம் பேர். 1838ல் ஆரம்பித்த இந்த புலம் பெயர்தல் 1917 வரை தொடர்ந்தது. இதில் 20% பேர் தமிழ் மற்றும் தெலுங்கர்களாம். மற்றவர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து போனவர்கள். இதிலே பல நாடுகள்,  மே மாதத்தின் ஒரு நாளை இந்தியர் புலம்பெயர்ந்த நாளாக அறிவித்து அரசாங்க விடுமுறை நாளாக அனுசரிக்கிறது.
இப்போது அரசியல் பொருளாதார நிலையில் சிறிது முன்னேறிய இவர்களுள் ஒருவர்தான் நோபல்பரிசு பெற்ற வி.எஸ். நய்பால் (V.S.Naipaul). வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்  முன்னாள்   காப்டன்ஷிவ் நாராயன் சந்தர்பால் இன்னொருவர்.

நாடு, மொழி  மற்றும்  கலாச்சாரமிழந்து வேற்று ஆட்களாக மாறிவிட்ட இவர்களுக்கு முக அடையாளமும் மத அடையாளமும்  மட்டும் அப்படியே இருக்கிறது. இவர்களைக் குறித்து கவலைப்பட்ட எனக்கு, ஒரு காலத்தில் என் பிள்ளைகளும்,  என் பிள்ளைகளின்  பிள்ளைகளும் என்ன ஆவார்கள் என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.

-பரதேசி
( நியூயார்க்)

No comments: