பாகுபலி என்ற பெயர் இன்றைக்கு எல்லோருக்குமே தெரியும். உண்மையில் பாகுபலி என்ற பெயரில் ஒரு மாவீரர் இருந்தார்.
சமண சமயத்தை தோற்றுவித்த ரிஷப தேவரின் பிள்ளைகள் பரதனும், பாகுபலியும். மூத்தவரான பரதனை விடவும் இளையவரான பாகுபலி, சிறந்த வீரனாகவும், அழகும் அறிவும் கொண்டவராகவும் திகழ்ந்தார். இதனால் மக்கள் பரதனை விடவும் பாகுபலியையே அதிகம் விரும்பினர். இதனால், பொறாமை கொண்ட பரதன், தம்பியின் ராஜ்ஜியத்தையும் அபகரித்துக் கொள்ள எண்ணி, பாகுபலியைப் போருக்கு அழைத்தான். ஆனால், போர் ஏற்பட்டால் பலர் இறப்பார்கள் என்பதால் போரைத் தடுக்க விரும்பிய பாகுபலி, பரதனிடம் மல்யுத்தம் செய்யலாம் என்று கூறினார்.
இருவருக்கும் மல்யுத்தம் தொடங்கியது. யுத்தத்தில் பாகுபலியே வெற்றி பெற்றார். யுத்தத்தின் முடிவில் பாகுபலி அண்ணனை அடித்தேக் கொல்லவேண்டும். பாகுபலிக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே, தன் தலைமுடியைத் தானே பிய்த்து எறிந்துவிட்டு, சமணத் துறவியாகக் கிளம்பிச் சென்றவர், பூர்வாசிரமத்தில் தன் தந்தையாக இருந்தவரும், சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரருமான ரிஷப தேவரின் சீடராக ஆனார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சுமார் 160 கி.மீ. தொலைவில் உள்ள 'சரவணபெலகுலா' என்னும் இடத்தில் பாகுபலிக்கு வழிபாட்டுத் தலம் உள்ளது.
No comments:
Post a Comment