Wednesday, February 10, 2016

வீர மதராஸி... இந்தியாவின் அரண் மெட்ராஸ் ரெஜிமென்ட்!

டந்த சில நாட்களாக சியாச்சின் பனிச்சரிவு நிகழ்வு பற்றிதான் இந்தியாவே பேசிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் சியாச்சின் அவலாஞ்சி பகுதியில் பனிச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார். உலகிலேயே உயரமான போர்க்களமான சியாச்சினை  பாதுகாப்பதிலும் தமிழர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றர். ஆம் சியாச்சினை பாதுகாக்கும் பொறுப்பு தமிழகத்தை சேர்ந்த மெட்ராஸ் ரெஜிமென்டின் கையில்தான் இருக்கிறது.
இந்திய ராணுவத்திலேயே மிகப் பழமையான ரெஜிமென்டும் இதுதான். இந்தியா எடுக்கும் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையிலும் அல்லது ராணுவம் தொடர்பான எந்த ஒரு ரகசிய நடவடிக்கையிலும் மெட்ராஸ் ரெஜிமென்டின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். இதன் தலைமையகம் உதகை அருகேயுள்ள வெலிங்டனில் உள்ளது. சரி இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் எப்படி உருவானது?

கடந்த 1639-ம் ஆண்டு சென்னை நகரம் உருவானது. தொடர்ந்து 1644-ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை எழுப்பப்பட்டது. 1660-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால்,  முதன் முதலில் மெட்ராஸ் ரெஜிமென்ட் ஈரோப்பியன் என்ற பெயரில் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. எனினும்  1758-ம் ஆண்டுதான் 100 சிப்பாய்கள்  கொண்ட படையாக உருவானது.  மேஜர் லாரன்ஸ் என்பவர்தான் இதன் முதல் தலைவர். பிரிட்டிஷ் வீரர்களுடன் இந்தியர்களும் இந்த படைப்பிரிவில் இருந்தனர். தென்னகத்தில் இருந்த பிரெஞ்சு படையினருடன் போரிடுவதுதான் மெட்ராஸ் ரெஜிமென்டிடம் ஒப்படைக்கப்பட்டமுதல் பணி.

அந்த காலகக்கட்டத்தில் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர்களிலும் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் சுதந்திரத்துக்கு பின், இந்தியாவின் மிக முக்கியமான ரெஜிமென்டாக மெட்ராஸ் ரெஜிமென்ட் உருவானது. இந்தியாவை பொறுத்தவரை எந்த ஒரு ராணுவ நடவடிக்கையும் முதலில் ஒப்படைக்கப்படுவது மெட்ராஸ் ரெஜிமென்டிடம்தான்.
தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள்,  மெட்ராஸ் ரெஜிமென்டில் பணியில் அமர்வதை ஒரு பெருமையாகவே கருதினர்.  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைதான் முதலில் தேர்வு செய்வர். எனினும் தமிழகத்தை தலைமயிடமாகக் கொண்டு இயங்குவதால்,  இந்த ரெஜிமென்டில் தமிழர்கள்தான் அதிகமாக இடம் பெறுகின்றனர். 

பழமை வாய்ந்த இந்த ரெஜிமென்டின் பெருமைக்கு இரண்டே இரண்டு சான்றுகளை கூறலாம்.  ஒன்று இந்தியாவே அலறிய ஆபரேசன் புளூ ஸ்டார். இன்னொன்று உலகமே கதறிய பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு. பஞ்சாப் மாநிலம் அமிர்தரசரஸ் பொற்கோவிலுக்குள் சென்று காலிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடியது இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் படையினர்தான். அடுத்து வாஜ்பாய் அரசில்,  1998-ம் ஆண்டு அப்துல்கலாம் தலைமையில் பொக்ரானில் அத்தனை ரகசியமாக அணுகுண்டு வெடித்து காட்டியதும் இதே மெட்ராஸ் ரெஜிமென்ட்தான்.
அதுமட்டுமல்ல,  இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் பெருமை வாய்ந்த ராணுவத் தலைவர்கள் தங்களது கடைசிகாலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் கழிக்க விரும்புவார்கள். இந்திய ராணுவத்தில் ஜெனரல் கரியப்பா, ஜெனரல் ஷாம் மானக் ஷா ஆகிய இருவர்தான் பீல்டு மார்ஷல் அந்தஸ்த்தை பெற்றவர்கள். இதில் பீல்ட் மார்ஷல் ஷாம் மானக் ஷா,    தனது கடைசி காலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் கழித்தார்.

இப்படி பல பெருமைகளை பெற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள போர்முனையை  பாதுகாத்து வருகிறது.  கிட்டத்தட்ட மைனஸ் 50 டிகிரி  வரை குளிர் வீசும் போர் முனை இது. இந்தியாவில் எத்தனையோ ரெஜிமென்டுகள் இருக்க,  இந்த கடின பணியை மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் ஏற்று செய்து வருகிறது. பாகிஸ்தானும் இங்கு தனது ராணுவத்தினரை நிறுத்தியுள்ளது.  அந்த வகையில் பாகிஸ்தானை முதலில் எதிர்கொள்வதும் இந்தியாவின் வால் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.  

மெட்ராஸ் ரெஜிமென்டின் போர்க்கள வார்த்தை என்ன தெரியுமா? '' ஏ வீர மதராசி... அடி கொல்லு, அடி கொல்லு'' என்பதுதான். ஜெய் ஹிந்த்! 

No comments: