Saturday, March 05, 2016

Aliens Exist - Stephen Hawking

வேற்று கிரகவாசிகள் நிச்சயம் இருக்கிறார்கள் என்று அடித்துக் கூறுகிறார் ஸ்டீபன் ஹாகிங் (68).


இயற்பியலில் உலக மேதையான இந்த அறிவியல் அறிஞர் பிறப்பிலேயே சில குறைபாடுகளுடன் பிறந்தாலும் அவற்றையெல்லாம் மீறி தன்னுடைய அறிவாற்றலை நிரூபித்து உலகையே வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர்.

இவர் சொன்னால் அது உண்மையாகத்தானே இருக்க வேண்டும். வேற்று கிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அவர் நம்புவதற்கு ஒரே காரணம் கணக்குதான். அது என்ன கணக்கு? உலகில் பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன. நட்சத்திர கூட்டம் என்றால் தனித்தனி சூரிய மண்டலங்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் பூமியில் நாம் எல்லோரும் இருப்பதைப் போல எத்தனையோ கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கு அடிப்படையில் கூறுகிறார்.

அப்படியானால் அவர்களும் நம்மைப்போல நாகரிகம் அடைந்தவர்களா என்று கேட்டால், இருக்கலாம் என்கிறார் ஸ்டீபன் ஹாகிங். நம்மைவிட புத்திசாலிகளாகவும் நம்மைவிட நவீன விண்வெளி வாகனங்களைப் பயன்படுத்துகிறவர்களாகவும் இருக்கலாம், அவர்களுடைய நட்சத்திர மண்டலத்தில் வசதிக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது பிற கிரகங்களை ஆராய்ந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டாலோ பூமிக்கும் அவர்கள் வரக்கூடும் என்கிறார் ஹாகிங்.

வேற்றுகிரகங்களில் பூமியின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததைப் போன்ற சிறிய வகை உயிரினங்கள் இருக்கலாம் என்பது ஒரு எதிர்பார்ப்பு.

வேற்றுகிரகவாசிகளைப் பார்த்துவிட வேண்டும் என்ற குறுகுறுப்பு நமக்கு இருந்தாலும் அவர்கள் நம்மைச் சந்திக்கும் வேளை நமக்கு பேராபத்தாகக்கூட முடியலாம் என்றும் எச்சரிக்கிறார். ஏன் என்றால் அவர்கள் நம்முடைய பூமியைத் தங்களுடைய காலனியாகக்கூட பயன்படுத்த முற்படலாம் என்கிறார்.

டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பவுள்ள குறும்படத்துக்கான விளக்கக் காட்சியில் இடையில் தோன்றும் ஸ்டீபன் ஹாகிங் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதை லண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் நாளிதழ் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது.

No comments: