Friday, June 24, 2016

சிந்துவெளி நாகரிகம்:

மிழர்களுக்கு எப்போதும் தம் வரலாறு குறித்த ஒரு பெருமிதம் இருக்கும். 'தாங்கள்தான் உலக நாகரிகங்களுக்கு எல்லாம் முன்னோடியானவர்கள். ஆதிக்குடி தமிழ்குடிதான்' என்று பெருமைபட்டுக் கொள்வார்கள். மேலும், 'நாங்கள்தான் உலகிற்கு நாகரிகத்தை போதித்தோம். உலகில் பிற இனங்கள் நாகரிகம் அடைவதற்கு முன்பே, தமிழன் நாவாய் கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்து இருந்தான்' என்பார்கள். ஆனால், அந்த வரலாற்றைப் பதிவு செய்வதில் எப்போதும் பின் தங்கி விடுவார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில், லகான் இயக்குநர் அஷுதோஷ் கெளரிக்கர் இயக்கத்தில் வரவிருக்கும் மொகஞ்சதாரோ திரைப்படம்.

சிந்துவெளி நாகரிகம்:
வரலாறு எப்போதும் பல சுவாரஸ்யமான தகவல்களை தன்னுள்ளே கொண்டது. பல வரலாற்றுச் செய்திகள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பிரமாண்டமானதாகவும், பிரமிப்பு தருவதாகவும் இருக்கும். அத்தகைய ஒரு வரலாறுதான் சிந்துவெளி நாகரிக வரலாறு. முதன்முதலில் சிந்துவெளிக் குறித்த தகவல்கள் வெளிவர துவங்கியது 1844 ம் ஆண்டுதான்.
பிரிட்டானிய ராணுவப் பணியை பாதியிலேயே முறித்துக் கொண்டு ஓடிவந்த சார்லஸ் மேசன் என்னும் ஜேம்ஸ் லூயி , பஞ்சாப், ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் ஆகியப் பகுதிகளில் சுற்றி, 'Narrative of Various Journeys in Balochistan, Afghanistan and the Punjab’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் ஹரப்பா நகரச் சிதிலங்கள் பற்றி விவரித்து இருந்தார். அப்பகுதி உள்ளூர் மக்களுடன் உரையாடி, அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், மண்ணிற்கு அடியில் ஒரு நகரம் புதைந்து கிடக்கிறது என்று விவரித்திருந்தார். ஆனால் இது முதலில், படித்தவர்கள் மட்டுமே விவாதிக்கும் பொருளாக இருந்தது. சிந்துவெளி நாகரிகம் குறித்த பிரமாண்ட தகவல்கள் பொது சமூகத்திற்கு தெரியத் துவங்கியது, 1920 களில் தான். ஆம், சர் ஜான் ஹியூபர்ட் மார்ஷல் தலைமையில் 1921 ம் ஆண்டு, சிந்துப் பகுதியில் அகழ்வாராய்ச்சி துவங்கியது. ஹரப்பா, மொகஞ்சாதாரோ உள்ளிட்ட பிரம்மாண்ட நாகரிகம் குறித்த தகவல்கள் அப்போது தான் வெளி உலகத்திற்கு தெரிய துவங்கின.


பிரமாண்ட கட்டடங்கள், மூன்று அடுக்கு வீடுகள்,  நன்கு வடிவமைக்கப்பட்ட நகர கட்டமைப்பு, குளம், குளத்தின் அருகிலேயே உடைமாற்றுவதற்கு இடம் என ஹரப்பாவும், மொகஞ்சாதாரோவும் நாகரிகத்தில் செழித்து இருந்தன என்கிறார்கள் ஆய்வாளர்கள். 


No comments: