Sunday, February 24, 2013

Last days of Buddha...

புத்த மதத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று ஹீனயானம். இந்தப் பிரிவினரின் கூற்றுப்படி, புத்தர் ஒரு அவதார புருஷர் அல்ல. அவர் ஓர் சாதாரண மனிதர். தனது நல்லொழுக்க நெறிகளின் மூலம் உயர்ந்த நிர்வாண நிலையை அடைந்து புத்த​ராக மாறியவர். ஆகவே, அவரது ஞானநெறியைப் பின்பற்றி வாழ்வதே இந்தப் பிரிவினரின் நோக்கம். இரண்டாவது பிரிவு மஹாயானம். இது, ஹீனயானத்​தில் இருந்து மாறுபட்டது. மஹாயானம் என்பதற்கு சிறந்த வழி அல்லது பெரிய வழி என்பது அர்த்தம். இந்தப் பிரிவினரின் கூற்றுப்படி, புத்தர் ஓர் அவதார புருஷர். புத்தரின் போதனைகளைத் தொகுத்து வாழ்வியல் அறமாக மாற்றி புதிய நியதி​களுடன் கட்டுப்பாடுகளுடன் புத்தத் துறவிகளாக வாழும் முறையை மஹாயானமே அறிமுகம் செய்து​வைத்தது.
சீனா, கொரியா, வியட்நாம், தய்வான், திபெத் முதலிய நாடுகளுக்கு மகாயானம் மிக வேகமாகப் பரவியது. மகாயான பௌத்தத்தில் இருந்தே தாந்த்ரீக பௌத்தமான வஜ்ரயான பௌத்தம் தோன்றியது. இது திபெத், பூட்டான், மங்கோலியா போன்ற இடங்களில் பரவிக் காலூன்றியது. மஹாயானமே, புத்தருக்கு சிலைகள்வைத்து வழிபடுவதை முதன்மையாக்கியது. ஹீனயானத்தைச் சேர்ந்தவர்களுக்கு சைவ உணவுக் கட்டுப்பாடு கிடையாது. மான், பன்றி, மாடு உள்ளிட்ட விலங்குகளின் மாமிசத்தைச் சாப்பிடலாம் ஆனால், தங்கள் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடிக் கொல்வதற்கு அனுமதி இல்லை. ஆனால், மஹாயானப் பிரிவில் உணவுக் கட்டுப்பாடு முக்கியமானது. அவர்களுக்கு மாமிச உணவைத் தவிர்க்க வேண்டும் என்பது கட்டாயம். புத்தர் காலத்தில், துறவிகள் மாமிசம் சாப்பிடுவது இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கிறது. 'ரிக்வேத கால ஆரியர்கள்’ என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன், ஆரியர்களில் மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை. பெரிய ரிஷிகள், முனிவர்களுக்கு விருந்து படைக்க மான் மற்றும் பசுவின் மாமிசம் மிகவும் அவசியமான ஒன்றாகும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
புத்தரின் கடைசி நாளைப்பற்றி பரிநிர்வாண சூத்திரத்தின் 16-வது சூத்திரம் குறிப்பிடுகிறது. அதன்படி, சுந்தா என்ற கொல்லனின் மாந்தோப்பில் புத்தர் தங்கியிருந்தார். புத்தருக்கு என்று பிரத்யேக உணவுகள் தயாரிக்கப்பட்டு இருந்தன. அதைத் தனக்குப் பரிமாறும்படி சுந்தாவைக் கேட்டுக்கொண்டார் புத்தர். சுந்தா பரிமாறிய உணவை ருசித்த புத்தர், உணவு கெட்டுப்போய் இருக்கிறது. அதை அப்படியே குழி தோண்டிப் புதைத்துவிடுங்கள் என்று கூறினார். உணவு முழுவதையும் மண்ணுக்குள் புதைத்துவிட்டார் சுந்தா. சாப்பிட்ட சிறிது நேரத்துக்குள் புத்தர் வாந்தி எடுத்தார். கூடவே, வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. சுந்தா தந்த உணவால்தான் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது என்று அவன் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக, தான் பரிநிர்வாணம் அடையும் நேரம் வந்துவிட்டது. ஆகவே, புத்தரது கடைசி உணவைத் தந்த பெருமை அவனுக்கு உண்டு என்று சொன்ன புத்தர், அடுத்த சில மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 80 என்கிறது அந்தச் சூத்திரம்.
சுந்தா தந்த உணவு பன்றி மாமிசம். அது, புத்தருக்கு ஒப்புக்கொள்ள​வில்லை. ஆகவே, அவர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள். இது தவறான தகவல். புத்தர் உண்டது பன்றி மாமிசத்தை அல்ல. அவர் உண்டது காளான் உணவு. அதுவும் நச்சுத்தன்மை உடைய காளான். அவை, காட்டில் பறிக்கப்பட்ட காளான்கள். காளானைச் சமைத்து உண்பது புத்தத் துறவிகளின் வழக்கம். அன்று, புத்தர் சாப்பிட்ட உணவும் காளானே. அது, கெட்டுப்போய்விட்டது என்பதால்தான் வேறு யாரும் சாப்பிட்டுவிடாமல் புதைத்துவிடும்படி புத்தர் சொல்லி இருக்கிறார். சூக்ரமாத்வா என்ற வார்த்தைக்கு பன்றிகள் விரும்பிச் சாப்பிடக்கூடியது என்பதுதான் அர்த்தம். ஆனால், சில வரலாற்று ஆய்வாளர்களால் பன்றி மாமிசம் என்று அர்த்தப்படுத்தப்பட்டுவிட்டது. அது, தவறு என்கிறார்கள் பௌத்தத் துறவிகள். பன்றி மாமிசம் சாப்பிட்டு, புத்தர் இறந்து போனார் என்பதை நிரூபிக்க நேரடிப் பதிவான கல்வெட்டுக்களோ, செப்பேடுகளோ எதுவும் கிடையாது. 19-ம் நூற்றாண்டில்தான் பாலி மொழியில் எழுதப்பட்ட புத்த சூத்திரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போதுதான், இந்தச் சர்ச்சை மேலோங்கத் தொடங்கியது. அதுவரை, புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டாரா, இல்லையா என்ற கேள்வி இந்தியாவிலும் மேற்குலகிலும் முக்கியமாகக் கருதப்படவே இல்லை. இவ்வளவு ஏன்... சீனாவில் எழுதப்பட்ட எந்த புத்த நூலிலும் இப்படியான ஒரு சம்பவமே இடம்பெறவில்லை. உணவு ஒவ்வாமையால் புத்தர் இறந்தார் என்றுதான் சீன பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.
புத்தம் தழைத்தோங்கி இருந்த காலத்தில், இந்தியா முழுவதும் துறவிகள் முழுமையான சைவ உணவுப் பழக்கத்தைத்தான் கைக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எவ்விதமான உணவை யாசகம் பெறலாம் என்பதற்கான குறிப்புகளில் நெய், காய்கறிகள், தேன், அரிசி, ஊறவைத்த பயறு வகைகள், பழங்கள், தயிர், கரும்புச் சாறு, தானியங்கள், பால் முதலியவையே இடம்பெற்று இருக்கின்றன. புத்தர் என்ன உணவுகளைச் சாப்பிட்டார் என்ப​தைப் பற்றி 'சுத்த விபாங்கம்’ உள்ளிட்ட பல நூல்களில் தகவல்கள் காணப்படுகின்றன. பாலில் வேகவைக்கப்பட்ட அரிசி, பார்லி கஞ்சி, வேகவைக்​கப்பட்ட சோளம், மாம்பழத் துண்டுகள் கலந்த சோறு, அவித்த காய்கறிகள், தேன் போட்டுப் பிசைந்த மாவு உருண்டைகள், வேகவைத்த மாமிசம், உலர்ந்த பழங்கள், தயிர், நெய், பழச் சாறுகள், குருணைக் கஞ்சி போன்றவையே அந்த நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவர், பன்றி மாமிசம் சாப்பிட்​டதைப்​பற்றி வேறு எந்த நூலிலும் ஒரு தகவலும் கிடையாது.
ஆகவே, புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டுஇறந்து​போனவர் என்பதை இகழ்ச்சியான ஒரு குற்றச்சாட்​டாக உருமாற்றியது அன்றைய அரசியல் காரணங்களே. மற்றபடி, அவர் சாப்பிட்டது காளானா இல்லை பன்றி மாமிசமா என்பதைத் தெளிவாக்க இன்றும் எவராலும் முடியவில்லை. புத்தர் எப்படி இறந்தார் என்பது முக்கியம் இல்லை. எப்படி வாழ்ந்தார்? என்ன போதித்தார்? அதை ஏன் நாம் கைவிட்டோம் என்பதுதான் முக்கியம். இன்று, அதைப்பற்றி எந்த விவாதமும் இந்தியாவில் நடக்கவில்லை என்பது ஆதங்கமாகவே இருக்கிறது.

No comments: