Wednesday, February 27, 2013

News About Dwaraka...

5200 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய.. கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை இருந்தது உண்மை தான்!

ராமர் கட்டிய சேது பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளாக ராமேஸ்வரம் கடலில் மூழ்கி இருப்பதைப் போல, மகாபாரத காலத்தில் கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை என்பது நிரூ...பணம் ஆகியுள்ளது.

தொல்லியல் ஆராய்ச்சி: இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியில் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது.
 
பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆய்வின்போது துவாரகையின் ஒருபகுதியான பேட் துவாரகையில் கி.மு.1528ம் ஆண்டைச் சேர்ந்த மண்பாண்டத்தையும், கடற்கரையில் 560மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றையும் கண்டனர். இப்பகுதி கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர். இந்த முடிவுகளை எஸ்.ஆர்.ராவ், தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வு மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது. மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடங்கி, 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால், இந்நகரம் மூழ்கி 5200 ஆண்டுகளாகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

பேட் துவாரகை: கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகாவுக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகை அருகிலுள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்ட கட்டடத் தொகுப்புகள் தென்படுகின்றன. சுவரைக் கட்ட பயன்படுத்திய கற்கள், 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளது. பேட் துவாரகை ஒரு தீவுப்பகுதியாகும். இங்கு தான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுதுபோக்க வந்துள்ளனர். ஆங்காங்கே பூந்தோட்டம், ஏரிகளும் உள்ளன.

மூழ்கிய துவாரகை: கடலில் மூழ்கிய துவாரகையில், அடிப்படை வசதியுள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள், அகன்ற சாலை, அழகான துறைமுகம் இருந்துள்ளன. தங்கம்,வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கட்டடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கியுள்ளன. குரு÷க்ஷத்ர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப்பின், துவாரகை முழுவதும் கடலுக்கடியில் மூழ்கியது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்தியக்கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தைக் கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன.

துவாரகாநாத்ஜி மந்திர்: துவாரகை அழிந்த பிறகு, அங்கு மூன்று முறை கோயில் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாமே கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது பிற சமயத்தாரால் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது உள்ள கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது துவாரகாநாத்ஜி மந்திர் எனப்படுகிறது. மூலவர் கல்யாண நாராயணர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் கல்யாண நாச்சியார். கண்ணனின் எட்டு துணைவியர் (அஷ்ட மகிஷிகள்), அண்ணன் பலராமன், துர்வாச மகரிஷி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கு மன்னராக கண்ணன் வீற்றிருப்பதாக ஐதீகம்.

17முறை போக்: துவாரகை கிருஷ்ணருக்கு தினமும் 17முறை உணவு படைக்கப்படுகிறது. இதை போக் என்பர். உடையும் தொடர்ந்து மாற்றப்படுகிறது. காலையில் சுவாமியை எழுப்பும் நிகழ்ச்சி உடாபன் எனப்படும். கிருஷ்ணனை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் பாடியுள்ளனர்.

இருப்பிடம்: குஜராத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 455 கி.மீ.
 

Sunday, February 24, 2013

About Buddishm - Part 1

'அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உணவாக இருப்பது எது?’ என்ற கேள்விக்கு 'புகழ்ச்சி’ என்று மகா​பாரதத்​தில் விதுரன் பதில் சொல்கிறான். என்ன ஓர் அற்புதமான பதில்!
புகழ்ச்சிதான் அதிகாரத்தில் இருப்பவர்களை சந்தோஷப்படுத்துகிறது. புகழ்ச்சி என்பது தேடிப் பெற வேண்டிய ஒன்று அல்ல. அது, தானே தேடி வர வேண்டிய ஒன்று. புகழ்ந்து பாடுவதற்காகவே அரசவைக் கவிஞர்கள் நியமிக்கப்பட்டனர். சில அரசர்கள் தாங்களும் கவிஞனாக ஆசைப்பட்டுப் புனையும் அபத்தமான கவிதைகளை, இதுதான் உலகின் உன்னதக் கவிதை என்று புகழ வேண்டிய நெருக்கடியும் புலவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், யாரோ எழுதியதை அரசர்கள் தங்கள் பெயரில் வெளியிட்டு பாராட்டுகளை அள்ளிக்கொள்வதும் நடந்து இருக்கிறது. இசை, இலக்கியம் மற்றும் நுண்கலைகளில் தீவிர ஈடுபாடுகொண்ட சில மன்னர்கள், தங்களின் உயர்ந்த படைப்புகளால் மக்களிடம் புகழ்பெற்றதும் இந்திய வரலாற்றில் உண்டு. அரசுக் கட்டிலில் இருந்தபோதும் ஹர்ஷர், ஜகனாரா பேகம், மகேந்திர வர்மன் போன்றவர்கள் எழுதுவதில் ஆர்வம்கொண்டு இருந்தனர். மாமன்னர் ஹர்ஷனும் மகேந்திர பல்லவனும் சமஸ்கிருத நாடகங்களை எழுதி புகழ்பெற்று இருக்கின்றனர். மகாகவி காளிதாசன், பாஷன், பாண பட்டர் ஆகியோருக்கு இணையாக இவர்களது நாடகங்களும் சமஸ்கிருத இலக்கியத்தில் இன்றும் விருப்பத்துடன் வாசிக்கப்படுகின்றன. இருவரது நாடகங்களையும் வாசிக்கும்போது, அரசியல் கொந்தளிப்புகளுக்கு ஊடே எப்படி இவர்கள் இதுபோன்ற நாடகங்களை எழுதினர் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இன்று, சமஸ்கிருத நாடகங்கள் அதிகம் நடத்தப்படுவது இல்லை. ஆனால், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒன்றிரண்டு நாடகங்கள் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன.
பல்லவ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர் மகேந்திர வர்மன். சிம்ம விஷ்ணுவின் மகனான இவர், காஞ்சிபுரத்தை கி.பி. 600 முதல் 630 வரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் மகாபலிபுரத்தில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. ஓவியம், சிற்பம், கட்டடக்கலை என ஆர்வம்கொண்டமகேந்திர வர்மனுக்கு, சித்திரகாரப்புலி என்ற சிறப்புப் பெயரும் இருந்தது. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்றும், பின்னாளில் இவர் சைவ சமயத்துக்கு மாறினார் என்றும் கூறப்படுகிறது. இவரது ஆட்சிக் காலத்தில் சாளுக்கிய அரசன் புலிகேசி, காஞ்சியின் மீது படை எடுத்து வென்றான். பல்லவர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்களின் மூலம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் இன்றும் நிலவுகின்றன. அவர்கள் பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என ஒரு சாராரும், மணி பல்லவத்தில் இருந்து வந்தவர்கள் என சில அறிஞர்களும் கூறுகின்றனர். தொண்டை மண்டலத்தைப் பல்லவர் ஆட்சி செய்தபோது, சமஸ்கிருதமே முக்கிய மொழியாக இருந்தது. பல்லவர்களில் முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என மூன்று பிரிவினர் உண்டு. இவர்களில், பிற்காலப் பல்லவர்களில் சிம்ம விஷ்ணுவின் மரபில் வந்தவர் முதலாம் மகேந்திர வர்மன். மாமல்லபுரம், மாமண்டூர், சிங்காவரம், நாமக்கல் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம் போன்ற இடங்களில் பல்லவர்கள் உருவாக்கிய கோயில்கள் கலைச் சிறப்புகொண்டவை. அன்று, காஞ்சிபுரத்தில் சமண பௌத்த சமயங்களுடன், பாசுபதம், காபா​லிகம், காளாமுகம் போன்ற தீவிர சைவ நெறிகளும் பின்​பற்றப்​பட்டன. திருநீறு அணிந்து சிவனே முழுமுதற் கடவுள் என்று சொல்பவர்களை பாசுபதர்கள் என அழைப்​பார்கள். காபாலிகர் என்ற பிரி​வினர், சிவனின் வடிவமான பைரவரை வணங்குபவர்கள். இவர்கள், கழுத்தில் மண்டை ஓடுகளை மாலைகளாக அணிந்து, பெண்களை சக்தி வடிவமாக வணங்கினர். அதுபோலவே, மந்திரம் சொல்லி உயிர்ப்பலி கொடுத்து சக்தியை அடைய முயன்றவர்கள் காளாமுகர். இந்த சமயப் பிரிவுகளுக்குள் கருத்து மோதல்களும் சண்டைகளும் அதிகாரத்தோடு யார் நெருக்கமாக இருப்பது என்பதிலும் போட்டி நிலவியது. மகேந்திர வர்மன், 'மத்த விலாச பிரகசனம்’, 'பகவதஜ்ஜூகம்’ ஆகிய இரண்டு நாடகங்களை எழுதி இருக்கிறார். இரண்டுமே அங்கத வகையைச் சேர்ந்த நாடகங்கள். மகேந்திர வர்மனின் நாடகத்தைப் புரிந்துகொள்ள அன்றைய சமயச் சூழலை அறிவது அவசியம்.
'மத்த விலாச பிரகசனம்’ நாடகம் காஞ்சிபுரத்தில் நடைபெறுவதுபோல எழுதப்பட்டு இருக்கிறது. நாடகத்தின் பிரதான கதாபாத்திரங்கள் ஐந்து பேர். காபாலிக சமயத்தைச் சேர்ந்த துறவி மற்றும் அவரது காதலி, இருவரையும் வீதியில் சந்திக்கும் ஒரு புத்த துறவி, அவர்களுக்கு நியாயம் சொல்ல வந்த பாசுபத சமயத்தைச் சேர்ந்த இன்னொரு துறவி. இடையிடும் ஒரு பைத்தியக்காரன் என்ற ஐந்து பேரைக்கொண்டு நாட​கம் நடத்தப்படுகிறது. மதத்தின் பெயரால் நடக்கும் குளறுபடிகள், போலித்தனங்கள் இந்த நாடகத்தில் கேலி செய்யப்​படுகின்றன. தமிழகத்தில் 7-ம் நூற்றாண்டில் பௌத்தம் தன்னுடைய செல்வாக்கை இழக்கத் தொடங்கி இருந்தது. பௌத்த மடாலயங்கள் வணிகர்களின் ஆதரவை நம்பி, அவர்களின் ஊதுகுழல்கள் போல செயல்பட்டன. அதே நேரம், சைவம் புத்துருவாக்கம் பெற ஆரம்பித்து இருந்தது. மகேந்திர வர்மன் சமண மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோது இந்த நாடகத்தை எழுதி இருக்கக்கூடும். காரணம், அன்று பல்லவர்களின் ஆட்சிக்கு அடங்காமல் கலகக் குரல் எழுப்பியவர்கள் காபாலிகர்கள் மற்றும் பாசுபத பிரிவைச் சேர்ந்த ஆதி சைவர்கள். அவர்களைக் கேலிசெய்து விமர்சிப்பதே இந்த நாடகங்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
மத்த விலாசம் நாடகம், சூத்ரதாரி எனும் கதை​சொல்லியின் மூலம் தொடங்குகிறது. அரச சபையில் புதிய நாடகம் நிகழ்த்த தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி தன் மீது கோபம்கொண்டுள்ள மூத்த மனைவியை மகிழ்விக்க, வேடிக்கையான ஒரு நகைச்சுவை நாடகம் நடத்தலாம் என்கிறான் சூத்ரதாரி. அதைக் கேட்ட அவனது மனைவி நடீ, 'உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று கோபத்துடன் முறைக்கிறாள். ஆனால் அவனோ, 'உன் நடிப்பில் மகிழ்ந்து நிறையப் பாராட்டும் பரிசும் கிடைக்கும். ஆகவே, நகைச்சுவையான நாடகத்தை நிகழ்த்துவோம்’ என்று அவளை உற்சாகப்படுத்துகிறான். அவளும் சம்மதிக்கிறாள். மன்னர் மகேந்திர வர்மன் எழுதிய, 'மத்த விலாசம்’ என்ற நாடகத்தை, தாங்கள் நிகழ்த்த உள்ளதாகச் சொல்லி நாடகத்தைத் தொடங்குகிறான் சூத்ரதாரி. நாடகத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஓர் காபாலிகன். அவனது பெயர் சத்தியசோமன். காபாலிகர்கள் கையில் கபால ஓட்டை ஏந்தி வீதிவீதியாகப் பிட்சை வாங்கி பிழைப்பவர்கள். இவர்கள் மயானத்தில் வாழ்பவர்கள். பிட்சாடனக் கோலம்கொண்ட ருத்ரனின் வாரிசுகள். நாடகத்தில் வரும் காபாலிகன் மது, மாமிசம், மாது என்ற மூன்றுமே முக்திக்கு வழிகாட்டுபவை என்கிறான். நாடகம் தொடங்கும்போது காபாலிகனும் அவனது காதலி தேவசோமாவும் மிதமிஞ்சிக் குடித்துவிட்டு போதையோடு ஆடியபடியே மேடையில் நுழைகின்றனர். பெண்கள் போதை ஏற்றிக்கொண்ட பிறகு, புதிய அழகு பெறுகின்றனர் என்று பாராட்டுகிறான் சத்தியசோமன். அப்போது, அவள் பெயரை மாற்றிச் சொல்லிவிடுகிறான். உடனே தேவசோமா, அது எந்தப் பெண் என்று சந்தேகப்படுகிறாள். காபாலிகன், அது போதையில் ஏற்பட்ட தடுமாற்றம். இதுபோல வம்புகள் உருவாகும் காரணத்தால் நான் இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்கிறான்.
அதைக் கேட்ட தேவசோமா, இதற்காகப் போய் இன்பம் தரும் குடியை விட்டுவிடாதே... இது உன்னுடைய தவம் என்கிறாள். இருவரும், போதை ஏறவில்லை என்று இன்னொரு மதுக் கடையைத் தேடிப்போகின்றனர். காஞ்சிபுரம் நகரமே ஒரு புளிப்பேறிய மதுவைப் போல தித்திப்பாக இருக்கிறது என்கிறான் துறவி. இன்னொரு மதுக் கடைக்கு செல்கின்றனர். செல்லும் வழியில் சத்தியசோமனின் பிட்சைப் பாத்திரமான கபால ஓடு காணாமல் போகிறது. இப்போது, எங்கே போய் அதைத் தேடுவாய், மாட்டுக் கொம்பில் மதுவை வாங்கிக் குடி என்று அவனை சமாதானப்படுத்துகிறாள் காதலி. அவனோ, திருட்டுப்போன கபால ஓட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தனது துறவித்தன்மை கெட்டுவிடும் என்று கத்துகிறான்.
நகரம் முழுவதும் அதைத் தேடி அலையும் இருவரும் முன்பு தாங்கள் குடித்த இடத்துக்கே மறுபடி வருகின்றனர். தனது கபால பாத்திரத்தில் கொஞ்சம் மாமிசம் மீதம் இருந்தது. ஆகவே, அதை ஒரு நாயோ அல்லது புத்த துறவியோதான் திருடி இருக்க வேண்டும் என்கிறான் சத்தியசோமன். அப்போது, ஒரு புத்த பிக்கு வீதியில் நடந்து வருகிறான். தனது கபால ஓட்டைத் திருடியவன் அவன்தான் என்று கூச்சலிடுகிறான் காபாலிகன். வீதியில் இருவருக்கும் சண்டை நடக்கிறது. அவர்களது வாதத்தின் வழியே, பௌத்தம் மிக மோசமாகக் கேலிசெய்யப்படுகிறது. உன் மண்டையை உடைத்து அதையே தனது பிட்சைப் பாத்திரமாக எடுத்துக்கொள்ளப்போவதாக பிக்குவின் முடியை பிடிக்கத் துள்ளுகிறான் சத்தியசோமன். உன்னைப் போன்ற மூடர்களிடம் நாங்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே தலையை மொட்டை அடித்துக்கொள்ளச் சொல்லி இருக்கிறார் புத்தர். உன்னால் முடிந்தால் செய்து பார் என்கிறான் பிக்கு. இவர்கள் சண்டைக்கு நியாயம் சொல்ல வருகிறான் ஒரு பாசுபதன். நடந்ததைப் பற்றி அவன் விசாரிக்கிறான். வழக்காடு மன்றம் சென்றாலும் புத்த துறவிகள் தங்களுக்கு அரசாங்கத்தில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி உன்னை ஏமாற்றிவிடுவார்கள் என்று குறை சொல்கிறாள் தேவசோமா. அப்போது, கபால ஓட்டைக் கவ்விக்கொண்டு ஓடும் ஒரு நாயைத் துரத்தியபடியே ஒரு பைத்தியக்காரன் ஓடி வருகிறான். அவன், நாயிடம் இருந்து கபாலத்தைப் பறிக்கிறான்.

My India--About Buddhism

து, தன்னுடைய பிட்சைப் பாத்திரம் என்பதைப் புரிந்துகொண்ட காபாலிகன், பைத்தியக்காரனிடம் இருந்து கபால ஓட்டைப் பிடுங்க முயற்சிக்கிறான். ஆனால் பைத்தியக்காரனோ, அதை ஒரு தங்கக் கிண்ணம் என்று சொல்லி காபாலிகனுக்கே பரிசாகத் கொடுத்துவிடுகிறான். உங்களைச் சிரமப்படுத்தியதற்கு மன்னியுங்கள் என்று பௌத்த துறவியிடம் மன்னிப்பு கேட்கிறான் காபாலிகன். அதற்கு, உன்னை சந்தோஷப்படுத்த முடிந்ததற்கு நன்றி என்று பெருந்தன்மையுடன் சொல்கிறான் புத்த துறவி. அவரிடம் இருந்து விடைபெற்று சத்தியசோமன் தன் காதலியோடு புறப்பட்டுச் செல்வதோடு நாடகம் நிறைவுபெறுகிறது. நாய் தூக்கிச் சென்ற கபால ஓட்டை முன்வைத்து புத்த துறவியும், சமணத் துறவியும், காபாலிகர்களும் கேலிசெய்யப்படுகின்றனர். மூவருமே மதத்தின் பெயரால் பிறரை ஏமாற்றுகிறவர்களாக சித்திரிக்கப்பட்டு இருக்கின்றனர்.
பசுவின் கொம்பில் மது வாங்கிக் குடிப்பது, கபாலத்தில் இறைச்சி உண்பது, பெண்களும் மது குடித்துவிட்டு ஆடுவது, பௌத்த பிக்குகள் வணிகர்களின் விருந்தில் கலந்துகொண்டு உல்லாசமாக வாழ்வது, சமணர்களைக் கேலிசெய்வது என, சமூக வாழ்வு துல்லியமாக இந்த நாடகத்தில் பதிவாகி இருக்கிறது.
இந்த நாடகம், மகேந்திர வர்மனின் அரச சபையில் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. ஆகவே, இதன் பார்வையாளர்களாக இருந்தவர்கள் அரசை குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்திருக்கக் கூடும். பொதுமக்கள் இந்த சமஸ்கிருத நாடகத்தைப் பார்த்தார்களா? இந்த நாடகத்துக்கு எவ்வாறு எதிர்வினை செய்தனர் என்ற விவரங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. ஒரு நாயோ அல்லது பௌத்த பிக்குவோதான் கறிக்கு ஆசைப்பட்டு தன்னுடைய பிட்சைப் பாத்திரமான கபால ஓட்டைத் திருடி இருக்க வேண்டும் என்று சத்தியசோமன் சொல்வது பௌத்த சமயத்தை விமர்சிக்கும் குரலாகும். அது வெறும் கேலி அல்ல. மாறாக, பௌத்தர்கள் மீதான வெறுப்பு. அதே வேளையில், வணிகனின் விருந்தை ரசித்துப் பாராட்டும் புத்த துறவி, 'புத்தர் ஏன் மது, மாது இரண்டையும் தனது சங்கத்தில் அனுமதிக்கவில்லை. இது நிச்சயம் கையாலாகாத மூத்தத் துறவிகள் செய்த ஏற்பாடாகத்தான் இருக்கக் கூடும். மூல பாடத்தைத் தேடிப்பார்க்க வேண்டும். நிச்சயம் இதை புத்தர் தடுத்திருக்க மாட்டார்’ என்று ஆதங்கப்படுகிறான். அவனுடைய மனது, ஞானத்தைவிடவும் போகத்துக்காக ஏங்கித் தவிக்கிறது. ஆகவே, பௌத்தம் குறித்த தனது தீவிரமான எதிர்ப்பு மனநிலையை மகேந்திரவர்மன் நாடகமெங்கும் பிரதிபலித்து இருக்கிறான்.
போதையில் கைப்பொருளை மறப்பதும், தெருவில் சண்டை போடுவதும், தனது பொருளை யாரோ திருடிவிட்டனர் என்று அப்பாவியை வம்புக்கு இழுப்பதும், குடிப்பதற்காக இடம் தேடி அலைவதும் 1,000 வருடங்களுக்கு முன்பு இருந்து இன்று வரை ஒரு நீண்ட மரபாகவே நடைபெற்று வருகின்றன போலும்.
மத்த விலாசத்தைப் போலவே, பகவதஜ்ஜூகமும் புத்த மதத்தைக் கேலி செய்கிறது. இந்த நாடகத்தில் ஒரு புத்த துறவி கூடுவிட்டு கூடுபாயும் வித்தை கற்று இருக்கிறான். அவனது சீடன் சாண்டில்யன். இருவரும் ஒரு நந்தவனத்தில் இருக்கும்போது வசந்த சேனா என்ற தாசி, பாம்பு கடித்து இறந்துவிடுகிறாள். அவளை எப்படியாவது பிழைக்கவைக்க சாண்டில்யன் வேண்டுகிறான். அவள் உடலுக்குள் புத்த துறவியின் ஆவி புகுந்துகொள்கிறது. தாசியின் ஆவியோ துறவியின் உடலுக்கு மாறிவிடுகிறது. இந்த மாறாட்டம் ஏற்படுத்தும் வேடிக்கைகள்தான் நாடகம்.
இதிலும் புத்தமதத் துறவிகளைக் கடுமையாகக் கேலிசெய்து இருக்கிறார் மகேந்திர வர்ம பல்லவன். ஒரு மன்னர் பௌத்த சமயத்துக்கு எதிராக எவ்வளவு கசப்பு உணர்ச்சியுடன் இருந்தார் என்பதன் அடையாளமாகவே இந்த நாடகங்கள் இருக்கின்றன. கேரளாவின் கூடியாட்டக் கலையில் மத்தவிலாஸ் இன்றும் நிகழ் கலையாக நடத்தப்பட்டு வருகிறது. மகேந்திர வர்மனைப் போலவே, ஹர்ஷரும் சமஸ்கிருத நாடகங்களை எழுதி இருக்கிறார். 'நாகானந்தம்’, 'ரத்னாவளி’, 'ப்ரியதர்சிகா’ என்ற மூன்று நாடகங்களை இவர் எழுதி இருக்கிறார். இவை, கவிஞர் பாண பட்டரால் எழுதப்பட்டவை என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.
ஆறாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, வட இந்தியா சிறுசிறு மன்னர்களால் ஆளப்பட்டு சிதறிக்கிடந்தது. அவற்றை, ஹர்ஷரே ஒன்றிணைத்து ஆட்சி செய்தார். கி.பி. 590-ல் பிரபாகர வர்தனரின் மகனாகப் பிறந்தார் ஹர்ஷர். அவரது அண்ணன் ராஜீய வர்தன். இவனே ஹூணர்கள் என்ற நாடோடி இனத்தைப் போரிட்டு விரட்டி அடித்தவன். ஹூணர்கள், முரட்டு நாடோடி இன மக்கள். குப்தர்களின் ஆட்சி இவர்களால்தான் அழிந்தது. ஹூணர்களில் இரண்டு பிரிவுகள் இருந்தன. ஒன்று கறுப்பு ஹூணர். மற்றது வெள்ளை ஹூணர். இதில், கறுப்பு ஹூணர்கள் ரோமப் பேரரசைத் தாக்கி ஜெயித்தனர். அவர்களின் தலைவன் அட்டில்லா. ஹெபாத லேட்ஸ் எனப்படும் வெள்ளை ஹுணர்கள், இந்தியாவைத் தாக்கி இங்கிருந்த குப்த அரசை நிலைகுலையச் செய்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானியப் பகுதிகளைப் பிடித்து, தோராமான் தலைமையில் ஆட்சி செய்யத் தொடங்கினர். இந்த ஹுணர்களை ஒடுக்கியதில் ராஜீய வர்தன் முக்கியமானவர்.
ஹர்ஷரின் சகோதரி ராஜஸ்ரீயின் கணவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க ராஜீய வர்தன் சென்றபோது, கௌட மன்னன் சசாங்கனால் சூழ்ச்சிசெய்து கொலை செய்யப்பட்டான். அதற்கு பழிவாங்க ஹர்ஷர் படை எடுத்துச்சென்று சசாங்கனை வீழ்த்தி வங்காளத்தைக் கைப்பற்றினார்.
புத்த கயாவில் இருந்த போதி மரத்தைத் தோண்டி எடுத்துக் கொளுத்தியதோடு, பௌத்த விகாரைகளை இடித்துப் புத்த உருவங்களை சிதைத்தவன் இந்த சசாங்கனே. ஹர்ஷரின் ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டன. கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தன. குறிப்பாக, கொள்ளையரின் வலது கை துண்டிக்கப்பட்டது. ஹர்ஷர், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். அவரது ஆட்சியின்போது நாளந்தா பல்கலைக்கழகம் சிறப்பாக இயங்கியது. அப்போது வந்த சீனப் பயணி யுவான் சுவாங், ஹர்ஷர் காலத்து இந்தியா குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். பௌத்த மதத்தைத் தழுவிய ஹர்ஷர், பௌத்த மடாலயங்களுக்கும் விகாரைகளுக்கும் நிறைய பொருளுதவிகள் செய்து இருக்கிறார். பௌத்த இலக்கியங்களை முறையாகக் கற்றுத்தேர்ந்ததோடு புத்த ஜாதகக் கதையின் கருப்பொருளைக்கொண்டு புதிய நாடகங்களை எழுதி இருக்கிறார். ஹர்ஷர் அறிவைப் பரவலாக்குகிறார். எல்லோருக்கும் கல்வி வழங்குகிறார் என்று உயர் ஜாதியினர் குற்றம் சாட்டி, அவரைக் கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டினர். ஹர்ஷர் தலைமையில் நடக்க இருந்த தத்துவ விவாத அரங்குக்குத் தீ வைத்தனர். ஆனால், ஹர்ஷர் இந்தச் சதியில் இருந்து தப்பிவிட்டார். விசாரணையின்போது, சதியின் பின்னால் பண்டிதர்கள் பலர் இருப்பதை அறிந்து அவர்களை நாடு கடத்தினார் ஹர்ஷர். போரில் தோல்வியே காணாத ஹர்ஷர், தெக்காணத்தை நோக்கிப் படை எடுத்து வந்தபோது, சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியிடம் தோற்றுப்போனார்.
அசோகரைப் போலவே பௌத்த மத வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்தார் ஹர்ஷர். அசோகர், இந்தியாவுக்கு வெளியே கடல் கடந்து புத்த மதம் பரவ வேண்டும் என்பதற்காக, இலங்கைக்குத் துறவிகளை அனுப்பி வைத்தார். அவரைப் போலவே, ஹர்ஷரும் பௌத்த மதம் பரவி இருந்த சீனாவுக்குத் தனது தூதுவர்களை அனுப்பி சீன அரசனுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார்.
ஹர்ஷருக்கு சமஸ்கிருதக் கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவர் முறையாக சமஸ்கிருத இலக்கணங்களைக் கற்றுத்தேர்ந்ததோடு, இசையோடு பாடுவதற்கு ஏற்ற பாடல்களைப் புனைபவராகவும் இருந்தார். அவரது நாடகங்களின் உரையாடல்களும் கவித்துவமாகவே இருக்கின்றன. சமஸ்கிருத நாடக மரபில், உயிரோடு வாழ்ந்த ஒருவரின் வரலாற்றைக் கேலியாக நகைக்கும்படி மாற்றி எழுதும் நாடகங்களை பிரஹசனம் என்பார்கள். அப்படியான ஒரு நாடகம்தான், 'மத்தவிலாச பிரஹசனம்’.
இன்று நமக்கு கிடைத்துள்ள சமஸ்கிருத நாடகங்களில் மிகப் பழமையானது சுபந்து இயற்றிய 'உதயணன் வாசவதத்தை’ என்ற நாடகம். இது, கி.மு. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதே கதையை, கவிஞர் பாஷனும் 'ஸ்வப்ன வாசவதத்தை’ என்ற பெயரில் நாடகமாக எழுதி இருக்கிறார்.
திருமணமான உதயணனை, ரத்னாவளிக்குக் கட்டிவைக்க சதி நடக்கிறது. அதற்காக, வாசவதத்தை காட்டில் இறந்து போய்விட்டாள் என்ற கட்டுக்கதை உருவாக்கப்படுகிறது.
அதை நம்பிய உதயணன், ரத்னாவளியை திருமணம் செய்துகொள்கிறான். ஆனால், முகத்திரை போட்டு முகத்தை மறைத்த காரணத்தால் ரத்னாவளியை உதயணன் நேரில் பார்க்கவே இல்லை. அவர்கள் பயணம் செய்த கப்பல் விபத்துக்கு உள்ளாகி ஆளுக்கு ஒரு பக்கம் சிதறடிக்கப்படுகின்றனர். தன் கணவன் என அறியாமலேயே வேறு பெயரில் ரத்னாவளி அவனுடன் பழகத் தொடங்குகிறாள். அதில் ஏற்படும் விளைவுகளையும் குழப்பத்தையும் விவரிக்கிறது ஹர்ஷரின் நாடகம்.
சமஸ்கிருத மொழியின் முக்கியக் கவியான பாண பட்டர், ஹர்ஷரின் ஆஸ்தானக் கவிஞராக இருந்தார். இவரே, ஹர்ஷர் வாழ்க்கை வரலாற்றை, 'ஹர்ஷ சரிதம்’ என்ற நூலாக எழுதியவர். அதில், ஹர்ஷரின் கொடைத்திறனையும் அவரது அரசாட்சியின் சிறப்புக்களையும் நுட்பமாகப் பதிவுசெய்து இருக்கிறார். ரத்னாவளி எழுதிய ஹர்ஷரைப் போலவே, ஸ்ரீஹர்ஷர் என்ற இன்னோர் அரசர் 12-ம் நூற்றாண்டில் நள சரித்திரத்தை நைஷதம் என்ற பெயரில் எழுதினார். அதை புகழேந்திப் புலவர் நைடதம் என தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். இரண்டு ஹர்ஷர்களும் வேறுவேறு நபர்கள்.
ஹர்ஷரும் மகேந்திர பல்லவனும் கால வெள்ளத்தில் மறைந்துவிட்டனர். ஆனால் அவர்களின் நாடகங்கள் காலத்தின் அழியாத சாட்சிகளாக மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகின்றன. தன்னுடைய வாழ்க்கையை காலவெளியில் நீட்சி பெறச்செய்யவே மனிதன் ஆசைப்படுகிறான். மாமன்னராக இருந்தாலும் மரணம் வாழ்வின் முற்றுப்புள்ளியாகிவிடுகிறது. மரணத்தையும் தாண்டி தன் படைப்புகளின் வழியே வாழ்வது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம். அதுதான், உண்மையான கலைக்குக் காலம் தரும் பரிசு.

ajantha and Ellaora - Part 1

இந்தியக் கலைகள் என்றதுமே நம் நினைவுக்கு வருபவை அஜந்தாவும் எல்லோ​ராவும். இந்தியாவின் சமூக வரலாறு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு அதன் கலை வரலாறும் முக்கியமானதே. கிரேக்கக் கலைகள் எப்படி அதன் உன்னத நாகரிகத்துக்கு அடையாளமாக இருக்கிறதோ, அதுபோலவே, இந்தியக் கலைகள் தனக்கெனத் தனித்துவமான அழகியலுடன் இருக்கின்றன. இந்தியக் கலைகளின் ஊடாக கலைஞனின் ஞானமும் வாழ்க்கை குறித்த தத்துவ​சாரமும் ஒன்றிணைந்து இருக்கின்றன. கலைஞனின் ஆன்ம வெளிப்பாடே, கலையின் உன்னதமாகக் கருதப்படுகிறது.
சாஞ்சியில் ஒரு சிற்பம் உள்ளது. அதில், ஞானம் பெற்ற பிறகு தன் தாயிடம் பிட்சை ஏற்க வரும் புத்தர் பிரமாண்டமாக நிற்கிறார். பிட்சை அளிக்கும் தாயும் அந்த அரண்மனையும் சதுக்கமும் படைகளும் அவரது முழங்காலுக்குக் கீழே இருப்பதுபோல், அந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஞான நிலையின் முன், உலகம் மிகச் சிறியது என்ற கலைஞனின் ஆன்மிக வெளிப்பாட்டின் உதாரணம் இது.
கலையின் வரலாறு, குகையில் வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்​களில் இருந்தே தொடங்குகிறது. கலைகளே இந்தியப் பண்பாட்டின் மகத்தான ஆவணங்கள். ஆதிகாலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தனர், அவர்களுடைய பண்பாடு, நம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பதற்கு இன்றும் ஆதாரமாக இருப்பவை குகை ஓவியங்களே.
அகழ்வாய்வுகளில் கிடைக்கும் மணிகள், தாழிகள், கல்வெட்டுகள் வழியாக நாம் 3,000 ஆண்டுகள் வரைதான் பின்னோக்கிப் போக முடிகிறது. ஆனால், குகை ஓவியங்கள் வழியாக நாம் மொழியின் பயன்பாடு உருவாவதற்கு முந்தைய மனிதர்களின் உலகையே அறிந்துகொள்ள முடிகிறது. அதுதான் கலையின் சிறப்பு. அஜந்தா மற்றும் எல்லோராவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், இதுபோல குகைகளில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் பிரான்சில் உள்ள குரோட்டே சோவெட்டில் உள்ளது. இது, 32 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் குதிரைகள், காண்டாமிருகங்கள், சிங்கங்கள், எருமைகள், மனிதர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. பெரும்​பாலும் இவை வேட்டைக் காட்சிகளாகவே இருக்கின்றன. இதுபோன்ற வேட்டைக் காட்சிகள்கொண்ட குகை ஓவியங்கள் பிரான்ஸ், இந்தியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சீனா, ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன.
தொல்பழங்காலத்தில் வாழ்ந்த குகை மனிதர்கள், வன விலங்குகளின் இயல்பைப் பதிவு செய்வதற்காகவும் நினைவைப் பாதுகாக்கவும் இவை வரையப்​பட்டு இருக்கலாம். அடுத்த தலைமுறைக்கு வேட்டை குறித்த தகவல்களைப் பரிமாறுவதற்காக வரையப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எட்வர்டோ கலியானே என்ற ஆய்வாளர் இது​போன்ற குகை ஓவியங்களைப் பெண்கள்தான் வரைந்து இருப்பார்கள் என்று கருதுகிறார். குகை ஓவியங்களில் மனித உருவங்கள் மிகவும் குறைவாகவே இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டு இருக்கின்றன. வேட்டை​யாடப்பட்ட மிருகங்களை மட்டுமின்றி வலிமையான காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் குகை ஓவியங்களில் காணப்படுகின்றன.
ஓவியங்கள் காணப்படும் பல குகைகளில் மனிதர்கள் வசித்த தடயங்கள் இல்லை. விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டு இருப்பதால், இந்தக் குகைகள் மந்திரச் சடங்குகள் செய்யப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்கின்றனர்.
தமிழகத்தில் குகை ஓவியங்களை ஆய்வு செய்யும் அறிஞர் காந்திராஜன், குகை ஓவியங்​களின் வரலாற்றைப் பற்றி நிறையத் தகவல்கள் தருகிறார். அவர் தனது தொடர்ந்த தேடுதலில் கரிக்கியூரில் காணப்படும் அரிய பாறை ஓவியங்​களைக் கண்டறிந்துள்ளார். இது, கி.மு. 7000-ம் ஆண்டைச் சேர்ந்தது. இவரது கருத்துப்படி நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. தர்மபுரி மாவட்டம் மல்லப்​பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்த ஒரு வீரன் காணப்படுகிறான். கீழ்வாலை என்ற ஊரில் காணப்படும் குகை ஓவியத்தில் செம்மண் வண்ணத்தால் வரையப்பட்டுள்ள பறவையின் முக அமைப்புடைய மனிதர்கள் காணப்​படுகின்றனர். இந்த ஓவியம் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணக்கிடுகின்றனர். சேத்தவாரை என்ற இடத்தில் எழில்மிக்க மான் ஓவியம் காணப்​படுகிறது. ஐயனார் மலையில் எருமை, கரடி, புலி, மீன் போன்ற உருவங்கள் கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளன.
கோயம்புத்தூரில் வெள்ளெருக்கம்பாளையம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினக்குடி, ஆலம்பாடி, பதியாண்டாள், கொல்லூர், மல்லசமுத்திரம் திண்டுக்​கல் மாவட்டம் சிறுமலைக் குகைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற ஊரில் குகை ஓவியங்​கள் இருக்கின்றன. பௌத்தத் துறவிகள் குகைகளில் தங்கி வாழ்ந்தனர். மாணவர்களுக்கு ஞானம் அளிக்கும் கல்விச் சாலைகளும் குகைகளில் இருந்தன. பௌத்தக் கலைஞர்கள் குகைகளில் படுகை​களையும், புத்தரின் சிலைகளையும், புத்த ஜாதகக் கதைகளைப் பற்றிய ஓவியங்களையும், பல்வேறு விதமான கலைச்சிற்பங்களையும் உருவாக்கி இருக்கின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட குகைவரைக் கோயில்கள்தான் அஜந்தாவும் எல்லோராவும்!
7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா ஓவியங்​கள் இயற்கையாக உருவாக்கப்பட்ட சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டு இருக்கின்றன. இவை, பௌத்தக் கலை மரபின் சாட்சிகள். மகாராஷ்டிராவின் ஒளரங்கபாதில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்​கிறது அஜந்தா குகை. இங்கே உள்ள குகைகளில் பாதி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் மீதம் உள்ளவை 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அஜந்தா ஒரு கல்வி நிலையமாகவும் ஞான மார்க்கத்தின் அற நிலையமாகவும் புகழ்பெற்று விளங்கியது. அஜந்தாவை ஒரு கலைத் தொகுப்பு என்றே சொல்லலாம். இங்குள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் இருந்து அந்தக் காலத்தைய உடைகள், நகைகள், இசைக் கருவிகள், நடனமுறைகள், அரண்மனை அழகிகள், சமூக அந்தஸ்து, துறவிகளின் இயல்பு, மன்னர்களின் வாழ்க்கைமுறை எனப் பல உண்மைகளை அறிந்துகொள்ள முடிகிறது.
ஹீனயான பௌத்த மரபு, புத்தருக்கு உருவம் தந்து வழிபடுவது இல்லை. குறியீடுகள் வழியாகவே அவை பௌத்த ஞானத்தை அடையாளப்படுத்துகின்றன. மஹாயான மரபில்தான் புத்த உருவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அஜந்தாவில் இந்த இரண்டு மரபுகளின் சாட்சிகளையும் காணலாம். ஆரம்ப காலக் குகைகளில் புத்த பாதம், போதி மரம் போன்ற குறியீடுகளும் அலங்கார ஸ்தூபங்களும் மட்டுமே இருக்கின்றன. அதன் பிறகே, மிகப் பெரிய புத்தர் உருவங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அஜந்தா குகைகள் கி.பி. 460 முதல் 480 வரை வாகதகர் காலகட்டத்தில் செதுக்கப்பட்டு இருக்கக்கூடும் என்கிறார் வால்டர் எம்.ஸ்பிங் என்ற ஆய்வாளர். வாகதகப் பேரரசர் ஹரிசேனரின் காலகட்டத்தில் இந்தக் குகைகளில் பல ஓவியங்கள் செதுக்கப்பட்டன. கி.பி. 3-ம் நூற்றாண்டில் மகாராஷ்டிர நிலப்பகுதியில் தோன்றிய அரசு வாகதகப் பேரரசு. குஜராத்தின் மால்வா பகுதியையும் தெக்காணத்தின் வடக்குப் பகுதியையும் இணைத்து வாகதகர்கள் ஆட்சி செய்து இருக்கின்றனர்.
வாகதக வம்சம் இந்து தர்மத்தைப் பின்பற்றிய​போதிலும் அஜந்தா குகை ஓவியங்களை நிர்மாணித்​திட உதவி செய்துள்ளது. இது நடைபெற்றது குப்தப் பேரரசின் காலத்தில் என்ப​துடன், வாகதகர்களே குப்தர்களுடன் மண உறவு​கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜந்தாவின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த சாதவாகனர் மற்றும் வாகத​கர்கள் வைதீக நெறியைப் பின்பற்றுகிறவர்கள் என்றபோதிலும், அவர்களின் ஆதரவில் பௌத்தக் கலை, வளர்ச்சி அடைந்து இருக்கிறது. பௌத்தம், இந்தியாவில் வீழ்ந்த பிறகு, அஜந்தா குகைகள் கவனிப்பார் இல்லாமல் சிதிலம் அடையத் தொடங்கியது.
1819-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான ஜான் ஸ்மித், புலி வேட்டை ஆடுவதற்காக காட்டுக்குள் சென்றார். ஒரு புலியைத் துரத்திச் சென்றபோது தற்செயலாக ஒரு குகைக்குள் நுழைந்து இருக்கிறார். அப்போது கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது முற்றிலும் நிரூபணம் செய்யப்படாத தகவல். ஆனால், அவரது முயற்சியால் அஜந்தாவின் ஓவியங்​களும் சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்பது வரலாற்று உண்மை.
அஜந்தாவில் 30 குடைவரைக் கோயில்கள் உள்ளன. அவற்றில் 9, 10, 19, 26 மற்றும் 29 ஆகிய குகைகள் சைத்யங்கள் எனப்படும் பௌத்த வழி​பாட்டு ஸ்தலங்கள். மற்றவை துறவியர் தங்கும் விகாரைகள்.
குகைச் சுவரின் மீது களி மண்ணும் சாணமும் கலந்த கலவையால் வேயப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு இருக்கிறது. அதில் பல்வேறு இயற்கையான நிறங்களைக்கொண்டு அஜந்தா ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. ஐந்து குகைகளில் ஓவியங்கள் இருக்கின்றன. பெரும்பாலான ஓவியங்கள் இன்று சிதைவுற்ற நிலையில்தான் இருக்கின்றன. இதில், புத்த ஜாதகக் கதைகளின் நிகழ்வுகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில் மிகப் புகழ் பெற்றவை பத்மபானி, வஜ்ரபானி போன்ற ஓவியங்கள்.

Ajantha, Ellaroa and Thanjoore

அலங்காரமும் வசீகரமும் மாயமும் கொண்ட இந்த ஓவியங்களை யார் வரைந்தது என்பது தெரியவில்லை. ஆனால், அவற்றை வரைந்த ஓவியன் மகத்தானவன். இங்குள்ள குகைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் மிக அற்புதமானவை. குறிப்பாக, மாபெரும் புத்தர் சிலைகள். அவை, புத்தரின் அடர்ந்த மௌனமும் அழகும் ஒருங்கேகொண்டவை. கல்லில் கசியும் புன்னகையைக் காண வேண்டும் என்றால், இந்தச் சிற்பங்களை ஒரு முறை அவசியம் பாருங்கள். இந்தியக் கலையின் உச்சமே அஜந்தா. அது ஒரு கல்லில் வடிக்கப்பட்ட கனவு. பௌத்தக் கலையின் உன்னதம்.
உலக அளவில் இதற்கு நிகரான சிற்பங்களை நாம் காண்பது அரிது. மேற்குலகின் சிற்பங்கள் யாவும் உடல் தோற்றத்துக்கு முக்கியத்துவம் தந்து, இயல்பான உருவத்தின் நரம்புகள் வரை சித்திரிப்பதில் தனித்துவம் பெற்றபோது, இந்திய சிற்ப மரபு மனிதனின் ஆன்மாவை முதன்மைப்படுத்தி உருவங்களை இயல்பான நிலையில் இருந்து உருமாற்றி, முத்திரைகள், பாவங்கள், குறியீடுகள், சயன நிலைகள் என்று கலையில் இருந்து ஞானத்தை நோக்கி நீள்வதாக அமைந்து இருக்கின்றன. அதன் மகத்தான சாட்சியே அஜந்தா குகைகள்.
அஜந்தா ஓவியங்களில் சிறப்பானதாகக் கருதப்படுபவை புத்தர் வாழ்வோடு தொடர்புடைய ஓவியங்கள். குறிப்பாக, வானுலகத் தேவதை புத்தரை வழிபட பூலோகம் இறங்கி வரும் ஓவியக் காட்சி, கலையின் உச்ச நிலை. இதில் காணப்படும் ஒரே இழுப்பில் வரையப்பட்ட கண்களும் புருவமும் உயிர்ப்புமிக்க கலை வெளிப்பாடு. சிபிச் சக்கரவர்த்தி, புறாவுக்கு ஈடாக தனது சதையை அறுத்துத் தரும் ஓவியமும் அற்புதமான ஒன்றே. நடனமாடும் பெண்களும், யானைகளின் அழகும், தாமரைப் பூக்களின் வசீகரமும், அன்னங்களும் மயில்களும் இணைந்த வளைவுகள் என இந்த ஓவியங்கள் கண்கொள்ளாக் காட்சிகள்.
எல்லோராவின் குடைவரைக் கோயில்கள் ஒளரங்கபாத் நகரில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த சஹ்யாத்திரி மலைத் தொடரில் தெற்கு, வடக்காக அமைந்துள்ள இந்தக் குகைக் கோயில்கள் புத்த மதக் குகைகள், இந்து மதக் குகைகள், சமணர்களின் குகைகள் என்று மூன்று வகையாகக் காணப்படுகின்றன
எல்லோராவின் 34 குடைவரைக் கோயில்களை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று முதல் 12 வரையிலான குகைகள் பௌத்தர்களுக்கு உரியவை. 29 வரையிலான குகைகள் இந்துக்களுக்கு உரியவை. எஞ்சியவை சமணர்களுக்கு உரியவை.
தென்கோடியில் பௌத்தக் குகைகள் அமைந்​துள்ளன. அரை வட்டப் பாதையின் நடுவில் இந்து மதக் குகைகளும், அதன் பின்னர் வடக்கே சமணக் குகைகளும் காணப்படுகின்றன.
பௌத்த குடைவரைக் கோயில்கள் பிரமாண்ட​மான சிற்ப நுணுக்கங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 10 அடி மற்றும் 15 அடி உயரத்துக்கு புத்தர் சிலைகள் இங்கே இருக்கின்றன. இங்குள்ள கைலாசநாதர் கோயில் இந்தியச் சிற்பக்கலையின் மிகச் சிறந்த சாதனை. ஒற்றைக் கல்லில் செதுக்கப்​பட்ட உலகிலேயே மிகப் பெரிய கோயில் இதுவே. ஒரு பெரும்பாறை உடைக்கப்பட்டு ஒரு பக்கம் கோயிலாகவும் அதன் வெளிப்புறம் பிரகாரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அஜந்தா குகை ஓவியங்களின் சாயலில் அமைந்தது தமிழகத்தில் உள்ள சித்தன்னவாசல். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்தக் குடைவரை ஓவியங்கள், சமண ஓவிய மரபைச் சார்ந்தவை. இவை, கி.பி. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கின்றனர். சித்தன்னவாசல் ஓவியங்களில் காணப்படும் அரசன் - அரசி, எருமைகள் நிறைந்த தாமரைக் குளம், மீன்கள், வாத்துகள் போன்றவை ஓவிய நுட்பத்தின் சான்றாகக் காணப்படுகின்றன. அஜந்தா, எல்லோராவின் பாணியில் அமைந்தவை சோழர் கால ஓவியங்கள். இந்த ஓவியங்கள் பிரஸ்கோ வகையைச் சேர்ந்தவை. இவை, தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கருவறை முதல் தளச் சுற்றுச் சுவரில் வரையப்பட்டு இருக்கின்றன. தஞ்சை ஓவியங்களை உற்று நோக்கும்போது அஜந்தா ஓவியங்களின் முகத்தோற்றம் போலவே இருப்பதை உணர முடிகிறது.
அஜந்தா போலவே இந்தியக் கலைச் சிறப்பின் இன்னொரு சாதனையாக, தமிழகத்தில் உள்ள மாமல்லபுரச் சிற்பங்களைக் குறிப்பிட வேண்டும். மாமல்லபுரக் கலைத் தொகுதியை மூன்று வகையாகப் பிரிக்கலாம். குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் ரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவை தவிர, புடைப்புச் சிற்பத்தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன. பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகு மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். இங்குள்ள பஞ்சபாண்டவ ரதங்களை முதலாம் நரசிம்மவர்மன் கட்டியதாகவும் மற்றவை அவனுடைய பேரன் பரமேஸ்வரவர்மனும் மற்றும் இரண்டாம் நரசிம்மவர்மன் கட்டியதாகவும் சரித்திர அறிஞர்கள் கூறுகின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் இந்தியாவிலேயே வேறு எங்கும் காண முடியாதவை. குறிப்பாக, அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகுதி சுமார் 30 மீட்டர் உயரமும் சுமார் 60 மீட்டர் அகலமும் கொண்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட உருவங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்தச் சிற்பத் தொகுதியில் உடல் ஒடுங்கிப்போய் எலும்பும் நரம்பும் தெரிய தவக்கோலத்தில் ஒற்றைக்காலில் நின்று இரு கைகளையும் பூட்டி சூரிய வணக்கம் செய்கிறான் அர்ச்சுனன். கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து நிற்கும் சிவன், சுற்றிலும் பூத கணங்கள். இரு பாறைப் பிளவுகளுக்கு இடையே ஓடிவரும் கங்கை ஆறு. இதன் பாதை ஓரத்தில் காணப்படும் நாகர்கள். காத்திருக்கும் சூரியன், சந்திரன், தேவர்கள், நாகர்கள், கின்னரர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள். அதன் ஒரு பக்கம் ஒரு திருமால் கோயில். அதன் முன் அமர்ந்திருக்கும் முனிவர்கள், யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப்பறவை, உடும்பு, யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது என நுட்பமாகக் காட்சிகள் செதுக்கப்பட்டு உள்ளன. இந்தச் சிற்பத் தொகுதி குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து பேராசிரியர் சா.பாலுசாமி, 'அர்ச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம்’ என்ற அற்புதமான புத்தகத்தை எழுதி இருக்கிறார். தமிழகக் கோயில் கலைகளில் ஆவுடையார் கோயில் சிற்பம் மற்றும் ஓவியம், கழுகுமலைச் சிற்பங்கள், மதுரையைச் சுற்றிய எட்டு சமணக் குன்றுகளில் காணப்படும் சமணச் சிற்பங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தாடிக்கொம்பு, மதுரை போன்ற கோயில்களில் காணப்படும் அற்புதமான சிற்பங்கள், பனைமலை, காஞ்சிக் கைலாசநாதர் கோயில், திருப்பருத்திக்குன்றம், திருவாரூர் கோயில், சிதம்பரம் கோயில், கும்பகோணம், தாராசுரம், பட்டீஸ்வரம், திருமங்கலக்குடி, தஞ்சை, அழகர்கோவில், திருவலஞ்சுழி, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் காணப்படும் கலைப் படைப்புகள் அதிஅற்புதமானவை.
இந்தியாவின் கலை மரபு என்பது முப்பரிமாண முறையில் அமையாத ஒன்று. ஆகவே, இது வெறும் பழங்குடி மரபு என்ற எண்ணம் ஐரோப்பியர்களிடம் இருந்தது. அதை மாற்றி இந்தியக் கலைகளுக்கான தனித்துவத்தை உலகம் அறியச்செய்தவர் டாக்டர் ஆனந்த கே.குமாரசாமி.
கி.பி. 1877 ஆகஸ்ட் 22-ம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்தவர் ஆனந்த குமாரசாமி. இவரது தந்தை முத்துக்குமாரசாமி யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராக இருந்தவர். பொதுச் சேவைக்காக 'சர்’ பட்டம் பெற்ற முதல் ஆசியர் இவரே. இவரது தாய், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எலிசபெத் கிளே. இவரது முழுப் பெயர் ஆனந்த கெண்டிஸ் குமாரசாமி. இந்திய விடுதலை இயக்க ஆதரவாளரான ஆனந்த குமாரசாமி, மகாகவி ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சகோதரி நிவேதிதா ஆகியோரின் நெருங்கிய நண்பர். ஆனந்த குமாரசாமியின் இடைவிடாத எழுத்துப் பணி வழியாகத்தான் இந்தியக் கலைகள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றதோடு, அது குறித்த விழிப்பு உணர்வும் கலை விமர்சகர்களிடம் பரவியது.
ஆனந்த குமாரசுவாமி தேர்ந்த கலை விமர்சகர், ஆய்வாளர். இவர், கீழை தேசத்துக் கலைகளையும் பண்பாட்டையும் மட்டுமின்றி மேலை நாடுகளின் பண்பாட்டையும் கலைகளையும் அறிந்து இருந்தவர். ஆங்கிலம், பிரெஞ்ச், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், சிங்களம், இத்தாலி, பாலி, பாரசீகம், கிரேக்கம் உள்ளிட்ட 14 மொழிகளிலும் புலமைகொண்டு இருந்தார்.
இந்தியக் கலைகளை, பௌத்தம் எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப் பற்றி ஆனந்த குமாரசாமி விரிவாக ஆராய்ச்சி செய்து 'புத்தர் வடிவத்தின் தோற்றுவாய்’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதுபோலவே, இவரது 'சிவனின் நடனம்’ என்ற புத்தகத்தில் நடராஜர் சிற்பத்தின் பின்புள்ள தத்துவத்தை சைவ நெறிகளோடு ஒப்பிட்டு அழகாக விளக்கி இருக்கிறார். மேலை நாட்டில் கலைஞன் என்பவன் ஒரு தனிமனிதன். அவனது கற்பனைகள் உணர்ச்சிகளுக்கு ஏற்ப படைப்புகளை உருவாக்குவான். ஆனால், இந்தியாவில் ஒரு சிற்பியோ, ஓவியனோ தனி நபர் அல்ல. அவன் ஒரு மரபின் தொடர்ச்சி. ஓர் இனத்​தின் அடையாளம். ஆகவே, அவன் தனது படைப்பை உருவாக்குவதில் சமூகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒருவர் இந்தியக் கலைப் படைப்புகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவருக்கு இந்தியப் பண்பாடு முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை வெறும் புறத்தோற்றமாகக் கண்டு கடந்து போய்விட நேரிடும். தாமரை மலர் மீது புத்தர் சிற்பத்தைக் காண்பவன், இது எப்படி சாத்தியம்? என்று யோசித்தால் அது முட்டாள்தனம். தாமரை மலர் என்பது ஒரு குறியீடு. புத்தரின் கை விரல்களில் உள்ள முத்திரை, முகபாவம், அமர்ந்த நிலை ஒவ்வொன்றுக்கும் ஆழமான அர்த்தங்கள் இருக்கின்றன. இந்தியர்களுக்கு தங்களுடைய கலையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் குறித்து இன்னமும் முறையாகத் தெரியவில்லை. ஆங்கில வழிக் கல்வி மேற்குலகின் ரசனையை நமதாக்கிவிட்ட காரணத்தால் நாம் இந்தியச் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை வெறும் பொம்மைகளைப் போல பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் மட்டுமே பழகி இருக்கிறோம். இவை, நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் அற்புதங்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
அதோடு, மலைகள் குவாரிகளாக மாற்றப்பட்டு வருவதால், அங்குள்ள குகைக் கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் அழிக்கப்பட்டு வருவது தடுக்கப்பட வேண்டும். அதுபோலவே, கோயில்களில் காணப்படும் சிறப்பான ஓவியங்கள் அதன் முக்கியத்துவம் அறியாமல் சிதைக்கப்படுவதும், வண்ணம் பூசி அழிக்கப்படுவதும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. முக்கியக் கலைக் கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், பண்டிகைகள், நுண்கலைக் கூடங்கள், அகழ்வாய்வு இடங்கள், இயற்கை வாழிடங்கள், தொல்பழங்காலம் முதல் இப்போது வரை எங்கே என்ன சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்ற அத்தனை தகவல்களையும் ஒன்று திரட்டி பொதுமக்கள் பயன்படும் விதத்தில் ஒரு கல்சுரல் அட்லஸ் வெளியிட்டுள்ளது ஒடிசா மாநிலம். இதை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன். இதுபோன்ற கல்சுரல் அட்லஸ், தமிழ்நாட்டுக்கு உடனடித் தேவை என்றே உணர்கிறேன். வெளிநாட்டவர் நமது கலைச் செல்வங்களை கொள்ளை அடித்துச் சென்றது ஒரு பக்கம் என்றால், நமது அறியாமை மற்றும் சுயலாபங்களுக்கான வேட்கை, இந்தியக் கலைகளின் உன்னதங்களை கண் முன்னே சிதையவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை.

My India...Different Punishments...

உலகிலேயே அதிக நீதி சாஸ்திரங்கள் உள்ள நாடு இந்தியா. ஆனால், இவை எழுத்து வடிவமாக மட்டுமே எஞ்சி இருக்கிறதே அன்றி, அவற்றை நடைமுறைப்படுத்துவது எளிதாக இல்லை. இன்றும் நீதியின் முன்னால் யாரோ ஓர் அப்பாவி மனிதனின் கரங்கள் கட்டப்பட்டு வாய் மூடி தனக்கான நியாயம் கிடைக்கக் கூடும் என்று காத்துக்கொண்டே இருக்கிறான். உலக வரலாற்றின் பக்கங்களில் நியாயம் கிடைக்காமல் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை அதிகம். ஏதென்ஸ் நகரில் இளைஞர்களிடம் மோசமான சிந்தனைகளைப் பரப்பியதாக பொய்க் குற்றம் சாட்டப்​பட்ட சாக்ரடீஸ், விஷம் கொடுத்துக் கொல்லப்​பட்டார். ஐரோப்பாவில் சூனியக்காரிகள் என்று மத சபையால் குற்றம் சாட்டப்பட்டு, அப்பாவி​யான கிராம மருத்துவச்சிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
அறிவியல் கருத்துகளைப் பரப்புகின்றனர் என்று விஞ்ஞானிகள் பலருக்குக் குரூர தண்டனைகள் வழங்கப்​​பட்டு இருக்கின்றன. இதன் உச்சகட்டமாக அறிவியல் அறிஞர் புருனோ உயிரோடு தீவைத்து எரிக்கப்​பட்டார். எகிப்து, லிபியா, அரேபியா போல​வே, இந்தியா​விலும் சிங்கத்துக்கும் முதலைக்கும் மனிதர்​களை பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. வலி இல்லாத மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என, பிரெஞ்சு மன்னன் 16-ம் லூயி, கில்லட்​டின் என்ற தலைவெட்டும் கருவியை அறிமுகப்படுத்தினார். பொதுமக்கள் முன்னிலையில், தலை துண்டிக்கும் தண்டனை பலருக்கும் நிறைவேற்றப்பட்டன. பின்னொரு நாள், அதே கில்லட்டின் கருவி லூயி மன்னனின் தலையையும் வெட்டியது.
இந்திய சமூகத்திலும் இப்படிப்பட்ட கொடூரத் தண்டனை முறைகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக, கழுவில் ஏற்றுதல் என்னும் கொடிய வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தது. கழு மரம் என்பது ஒரு கொலைக் கருவி. கூர்மையாகச் சீவப்பட்ட கழு முனையில் எண்ணெய் தடவி, குற்றவாளியை நிர்வாணமாக்கி, அவன் கால்களை நெஞ்சோடு சேர்த்து மடக்கி குண்டுக்கட்டாகத் தூக்கி ஆசனவாயை கழு முனையில் வைத்து அப்படியே செருகிவிடுவார்கள். உடலின் எடையாலும், கழுவின் கூர்மையாலும், எண்ணெய்யின் வழுக்கலாலும் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக மேலே துளைத்துக்கொண்டு ஏறும். மரம் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் ஏறி, வலி தாங்காமல் கூப்பாடுபோட்டு செத்துப்போவான். இறந்த உடலை பறவைகள் கொத்திக்கொத்தி உண்ணும்.
டிராகுலா என்று நாம் அழைக்கும் டிரான்சில்வேனி​யா மன்னர் விலாட், அதிகார வெறியில் மூன்று லட்சம் பேரைக் கழுவேற்றியதாகக் கூறுகிறார்கள். அதனால்தான் அவனை ரத்தம் குடிக்கும் காட்டேரி என்று மக்கள் அழைத்தனர். அதுபோலவே, பெண்களின் மார்பை அறுக்கும் தண்டனைக் கருவி ரோமில் பிரபலமாக இருந்தது. இந்தக் கருவி பெண் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டது. மத நிந்தனை, விபசாரம், ராஜ துரோகம், அரசியல் சூழ்ச்சி போன்ற குற்றங்களில் ஈடுபடும் பெண்களைத் தண்டிப்பதற்கு இந்தக் கருவி பயன்பட்டது. இந்தக் கருவியை சுவரில் நிலையாக மாட்டி இருப்பார்கள். பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் மார்பை இந்தக் கருவியில் பொருத்துவார்கள். அதன் கூர்மையான முனை மார்பினுள் ஆழமாகச் சென்றதும் ரத்தம் பீறிடும். வலி தாங்காமல் அந்தப் பெண் அலறுவாள். உடனே, அவள் உடலை கருவியைவிட்டு பலவந்தமாக இழுப்பார்கள். அவளது மார்பு துண்டாகிக் கிழிந்துவிடும். இந்தத் தண்டனையைப் பற்றி எழுத்தில் படிக்கும்போதே மனம் பதைபதைக்கிறது. ஆனால், இதை பல நூறு வருடங்களாக பெண்கள் அனுபவித்து இருக்கின்றனர். சித்ரவதை செய்வதுதான் தண்டனையின் முதல் படி. எப்படி எல்லாம் மனிதர்களை விதவிதமாக சித்ரவதை செய்வது என்பதில் ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு விதம். சித்ரவதைக்காக விதவித​மான தண்டனைக் கருவிகள். அந்தக் கருவிகள் காலஓட்டத்தில் வலுப்பெற்று, அழிக்க முடியாத ஆயுதங்களாக நிலைபெற்று விட்டன. 5-ம் நூற்றாண்டில் இருந்து 16-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே கொலைக் கருவிகள் அதிகம் உருவான காலம். ஐரோப்பாவில்தான் அதிகமான கொடுந்தண்டனைகள் கொடுக்கப்பட்டன.
இன்றைய இந்தியாவில் இப்படிப்பட்ட குரூரத் தண்டனைகள் கிடையாது. ஆனால், குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் இருக்கின்றன. நமது காலத்தில் குற்றம் ஒரு தொழிலாகிவிட்டது. குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படுவதோடு, பொது இடங்களில் கௌரவிக்கப்படுவதும், பதவிகள் அடைவதும் வருத்தப்பட வேண்டிய விஷயம். கடந்த காலங்களில் இந்தியா இப்படித்தான் இருந்ததா என்ற கேள்வி சாமான்யன் மனதில் எழுகிறது. கசையடி, சூடு போடுதல், யானைக் காலால் மிதித்துக் கொல்வது, மாறுகால் மாறுகை வாங்குதல், கழுமரம் ஏற்றுவது, கண்களைப் பறித்து பறவைகளுக்கு இரையாகப் போடுவது, கல்லால் அடித்துக் கொல்வது, சுண்ணாம்புக் காளவாசலில் போடுதல் போன்ற குரூரத் தண்டனைகள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன.
ஆனால், இந்தத் தண்டனைகளை யார் உருவாக்​கினர்? எதற்காக இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டன? இவற்றை அறிமுகப்படுத்தியது யார்? இந்தத் தண்டனை முறைகளை எங்கிருந்து கற்றுக்கொண்டனர் என்ற வரலாற்றை அறியும்போது வியப்பான தகவல்கள் கிடைக்கின்றன. தண்ட​னைக் கருவிகளும், தண்டனை முறைகளும் நாடு​விட்டு நாடு பரவிக்கொண்டே இருக்கின்றன. துருக்கியர்களிடம் இருந்து சாட்டையால் அடிக்கும் கசையடி முறையையும், சீனர்களிடம் இருந்து மாறுகால் மாறுகை வாங்கும் தண்டனையையும், பெர்ஷியாவில் இருந்து கெண்டைக்காலில் தடியால் அடிப்பதையும், மூங்கிலை கை, கால்களுக்குள் கொடுத்துக்கட்டி அடிப்பதை ஜப்பான் நாட்டில் இருந்தும், உள்ளங்கையில் பிரம்பால் அடிப்பதை பிரிட்டனிடம் இருந்தும், பல்லைப் பிடுங்கி எடுப்பதை மங்கோலியரிடம் இருந்தும் இந்தியா கற்றுக்கொண்டு இருக்கிறது என, 'பண்டைய இந்தியாவில் குற்றமும் தண்டனையும்’ என்ற புத்தகத்தில் வி.கே.கானே கூறுகிறார்.
சமாதானத்தைப் பரப்புவதற்குத்தான் பெரும் முயற்சிகள் எடுக்கவேண்டி இருக்கிறது. தண்டனைகள் தானே பரவிவிடக் கூடியவை. அறியாமையாலும் ஒழுங்கின்மையாலும் விளையும் கேடுதான் குற்றங்கள் என்கிறது அர்த்த சாஸ்திரம். சூதாடுதல், மதுப் பழக்கத்துக்கு அடிமையாதல், பெண் மோகம், வேட்டையாடுதல் ஆகியவை குற்றத்துக்கான முக்கியக் காரணிகள் என்று வரையறுக்கிறார் சாணக்​கியர். அர்த்த சாஸ்திரம் பண்டைய இந்தியாவின் நீதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஆனால், அவற்றில் தண்டனை முறைகள் சாதிக்குச் சாதி வேறுபடுவது கவனிக்கத்தக்க ஒன்று. ச.சுவாமிநாதன் எழுதியுள்ள, 'பழந்தமிழர்களின் வினோதத் தண்டனைகள்’ என்ற கட்டுரை, தமிழகத்தில் நிலவிய பல்வேறு தண்டனை முறைகள் குறித்துக் கூறுகிறது. குறிப்பாக, அரசன் போரில் வெற்றி பெற்றால் தோல்வி அடைந்த மன்னர்களின் நாட்டைத் தீக்கிரையாக்குவது, ராணியின் கூந்தலை அறுத்துக் கயிறாகத் திரிப்பது, தோல்வி அடைந்த மன்னர்களின் மகுடங்களை உருக்கித் தனது காலடியில் பலகையாகப் போட்டுக்கொள்வது, தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி, அந்த இடத்தில் கழுதையைப் பூட்டி ஏர் உழுவது, எதிராளியின் தலையை மொட்டை அடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது, பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்று பொய் சொன்னவனை மரத்தில் கட்டிவைத்து அவன் உடலில் சாம்பலைப் பூசி சவுக்கால் அடிப்பது, பிடிபட்ட கைதிகள், எதிரிகளின் தலைகளை யானையின் காலால் இடறச்செய்துக் கொல்வது, தவறான செய்தி அளித்த ஒற்றர்களைக் கொலைசெய்வது, தேவதாசிப் பெண்களுக்கு மார்பு மற்றும் தொடையில் சூடு போடுவது என எத்தனையோ விசித்திரமான தண்டனைகளைச் சுட்டிக்காட்டுகிறது அந்தப் புத்தகம்.
அதுபோலவே, 'பண்டைய தமிழகத்தில் சட்டமும் நீதியும்’ என்ற புத்தகத்தில், தமிழகத்தில் நிலவிய சட்டமும் நீதியும் பற்றி கூறுகிறார் சி.வி.கணபதி. அதில், பழந்தமிழகத்தில் நீதி விசாரணை நடக்கும் இடம் அறக்களம் என்றே அழைக்கப்பட்டது. அரசனின் அரண்மனை முகமண்டபமே நீதிமன்றமாகச் செயல்பட்டது என்கிறார். மன்றம், மகாசபை, நியாயத்தார் சபை, எண்பேராயம், ஐம்பெருங் குழு, நாற்பெருங் குழு போன்ற மக்கள் நீதிமன்றங்கள் பழந்தமிழகத்தில் இயங்கி இருக்கின்றன. இவற்றில், மன்றம், மகாசபை, நியாயத்தார் சபை, சித்ரமேழி போன்றவை கிராம நீதிமன்றங்கள். எண்பேராயம், ஐம்பெருங் குழு, நாற்பெருங் குழு போன்றவை மேல் முறையீட்டு நீதிமன்றங்கள். பல்லவர் ஆட்சிக்காலத்தில், அதிகரணம் என்ற குற்றவியல் நீதிமன்றம் இருந்தது. இந்த நீதிமன்றம் இயங்கி வந்த இடம் 'அதிகரண மண்டபம்’. இங்கு பணிபுரிந்த நீதிபதிகள் தர்ம அதிகரணிகர், அதிகரணிகர் மற்றும் அதிகரண போஜகர் என்று அழைக்கப்பட்டனர். தலைமை நீதிபதியின் பெயர் மகாதர்ம அதிகரணிகர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தண்டனைகளின் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கையில், கடுமையான தண்டனைகள் மூலம்தான் குற்றங்களைத் தடுக்க முடியும் என்ற எண்ணம் பிரதானமாக இருந்ததை அறிய முடிகிறது.
தண்டனைகளின் வரலாறு ஆச்சர்யம் அளிக்கக்​கூடியது. கசையடித் தண்டனை அடிமைகள் சமுதாயத்​தில் துருக்கியில் பிரபலமாக இருந்த ஒன்று. அங்கிருந்து கிரேக்கத்துக்குப் போயிருக்கிறது. ரோமானியர்கள் வெளிநாட்டுப் பிரயாணிகள் தவறு செய்யும்போது அவர்களை நிர்வாணப்படுத்தி, கசையடி கொடுத்து இருக்கின்றனர். யூத சட்டப்படி ஒருவரை 40 முறை கசையால் அடிக்க வேண்டும். ஓர் அடி அதிகமாக அடித்துவிட்டால் அடித்தவர்கள் தண்டிக்கப்படுவர். எட்டாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கசையடி தருவது சட்ட​பூர்வமாக மாற்றப்பட்டதுடன், பொது இடத்தில்தான் அந்தத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கசையடித் தண்டனை பிரான்ஸ், ரஷ்யா, ஆப்பிரிக்கா என நாடுவிட்டு நாடு பரவி ஒரு காலத்தில் மிக முக்கியத் தண்டனையாகக் கருதப்பட்டது. இந்தியாவில் இந்தத் தண்டனை முறை இப்போது நடைமுறையில் இல்லை. ஆனாலும், நில உடைமையாளர்கள் தங்களிடம் வேலை செய்யும் கூலிகளுக்கு இன்றும் கசையடி தருவதை பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். சிங்கப்பூர், புரூனே, மலேசியா போன்ற நாடுகளில் கசையடித் தண்டனை இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. யானைக் காலால் மிதித்துக் கொல்வது என்ற தண்டனை இந்தியா உட்பட பெரும்பான்மையான ஆசிய நாடுகளிலும் கொடுந்தண்டனையாக இருந்தது. இந்திய யானைகளைவிட பெரியதாக ஆப்பிரிக்க யானைகள் இருந்தபோதும், ஆப்பிரிக்காவில் யானையை வைத்துத் தண்டனை வழங்கும் முறை இல்லை. இந்தியா மற்றும் இலங்கையில் வரி ஏய்த்தவர்கள், ராஜ துரோகம் சாட்டப்பட்டவர்கள், கொள்ளை அடித்தவர்கள், கொலை செய்தவர்கள் மற்றும் பிடிபட்ட எதிரி நாட்டு வீரர்கள் ஆகியோர் யானையின் காலால் மிதிபட்டு இறந்து இருக்கின்றனர்.

Cholas.. Few .Updates

சோழர்களின் வலிமையான கடற்படை குறித்த மீள்ஆய்வுகள் இன்று நிறைய நடக்கின்றன. தெற்காசிய நாடுகளில் சோழர்களின் தடயங்கள் எங்கெங்கே இருக்கின்றன? சோழர்களுக்கும் சீனர்களுக்​குமான உறவு எப்படி இருந்தது?
சோழர்கள் போரிட்டு ஜெயித்த கம்போடியா, ஸ்ரீவிஜயம் போன்ற நாடு​களில் கிடைக்கும் புதைப் பொருட்கள், கல்வெட்டுக்களின் மூலம் சோழர்களுடைய கடற் படையின் வலிமை குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, சீனாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் நடந்த வணிகம் குறித்துத் தீவிரமான ஆய்வுகள் நடந்து வரும்போது, சீனா​வுக்கும் சோழர்களுக்கும் இடையில் நடந்த கடல் வணிகத் தொடர்புகள் ஏன் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது.
சோழர்களின் கடற்படைத் தொழில்​நுட்பம் எப்படி இருந்தது? அவர்கள் பயன்​படுத்திய கடல் வரைபடங்கள், கப்பல் கட்டும் முறை, மாலுமிகளைத் தயார்செய்யும் விதம், ஏற்றுமதி - இறக்குமதி முறைகள், கடலில் போர் செய்வதற்கு மேற்கொண்ட உத்திகள் யாவும் இன்னும் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. சோழர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் நடந்த விஷயங்களைக் கல்வெட்டுக்களிலும் தாமிரப் பட்டயங்களிலும் முறையாகப் பதிவுசெய்யக் கூடியவர்கள். அப்படி இருந்தும் அவர்களின் கடல் பயணங்கள் குறித்த ஆதாரங்கள் நமக்குக் குறைவாகத்தான் கிடைத்து இருக்கின்றன. ஒருவேளை, அவை உலகின் கவனம் பெறக்கூடாது என்பதற்காக அழிக்கப்பட்டு விட்டதா என்ற சந்தேகமும் ஏற்படு​கிறது.
சோழர்களின் கடல் வணிகமானது, மூன்று நிலைகளைக்​கொண்டது. தமிழகத்தில் இருந்து முத்துக்கள், நவமணிகள், தந்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருட்களை ஏற்றிக்​கொண்டு சீனாவுக்குப் போவது. அவற்றை சீனாவில் விற்றுவிட்டு, அங்கிருந்து பட்டுத் துணி, இரும்பு, பீங்கான் பாத்திரங்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை கொண்டுவருவது. அவற்றை இந்தியாவில் விற்றுவிட்டு மீதி இருப்பதை அரபு நாடுகளுக்கு, குறிப்பாக பாக்தாத் நகர வணிகச் சந்தையில் விற்பதற்காக அரேபிய வணிகர்களிடம் ஒப்படைப்பது. அரேபி​யாவில் இருந்து குதிரைகளைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்து சோழ மன்னர்களிடம் விற்பது. ஆகவே, சோழர்களின் கடல் பயணத்துக்கு சீனர்களும் அரேபியர்களும் உதவி செய்யவேண்டிய அவசியம் இருந்தது.
1020-ம் ஆண்டு சோழ மன்னர் ராஜேந்திரன் சீனாவுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி, சாங் மன்னருடன் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டான். அதற்காக, சீன அரசனுக்கு ஏராளமான பரிசுகளை அளித்து தூதுக் குழுவை அனுப்பிவைத்தான். அந்தப் பரிசுகளை ஏற்றுக்கொண்ட சீன அரசன், தூதுக் குழுவினருக்குப் பட்டுத் துணிகளைப் பரிசாக அளித்து கௌரவப்படுத்தி இருக்கிறார். அதனால், சீனாவுடன் தொடர்ந்த நல்லுறவு சோழர்களின் கடல் வணிகத்துக்குச் சாதகமாக அமைந்தது. கப்பல் கட்டும் முறையில் சோழர்கள் தனித்துவம் பெற்று இருந்தனர். அதுகுறித்து, சீனக் குறிப்புகள் கூறுகிறபோதும், தமிழகத்தில் நேரடியான கல்வெட்டுச் சான்றுகள் எதையும் காணவில்லை. ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணப்பட்டணத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு ஒன்றில், மரக்கலம், தோணி, படகு, கலவம், வேதி என்ற ஐந்து விதமான கடல் கலங்களைப் பற்றிய விவரங்கள் இருக்கின்றன. அதில் மரக்கலம், தோணி போன்றவை படகைப்போன்று நான்கு மடங்கு பெரியவை என கூறப்பட்டு இருக்கிறது.
சோழர்கள் கடற்படையானது முறையாக நிர்வகிக்கப்​பட்டது. அதில் அரசரே முதன்மையானவர். போர்புரியும் வீரர்களைக்கொண்ட குழுவை, கனம் என்று அழைத்தனர். அதற்குத் தலைமை ஏற்பவர் கனாபதி. அதுபோலவே, மண்டலாதிபதி எனப்படுபவர் தலைமையில் 40 கப்பல்கள் இருக்கும். அந்தக் கப்பல்கள் குழுவாகச் சென்று போர்புரியக் கூடியவை. 100 முதல் 150 கப்பல்களைக்கொண்டது ஒரு பிரிவு. ஓர் அணியில் 300 முதல் 500 கப்பல்கள் இருந்தன. சோழர்களின் கடல் வணிகம் பற்றிய தனது கட்டுரையில் ஆய்வாளர் சி.வி.கார்த்திக் நாராயணன் நிறைய தகவல்களைத் தருகிறார். குறிப்பாக பூம்புகார் அழிந்த பிறகு, சோழர்களின் முக்கியத் துறைமுகமாக விளங்கியது நாகப்பட்டினம். வங்கக் கடலில் அரேபிய, பாரசீக மற்றும் சீன வணிகர்களின் வியாபாரப் போட்டியால், தமிழக வணிகர்கள் எதிர்பாராத தாக்குதலையும் கொள்ளையையும் சமாளிக்க வேண்டி இருந்தது. அதை ஒடுக்குவதற்காகவே சோழர்கள் கடல் ஆதிக்கம் செய்ய முயன்றனர். வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, ரோந்துக் கப்பல்கள் அனுப்பியது, சோழர்களின் கடற்படை.
ராஜேந்திர சோழன் தனது கடற்படையைக்​கொண்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளை வென்றது குறித்து, கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்​களும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அந்தக் கல்வெட்டுக்களில் கடல் வணிகர்கள் எவ்வாறு கலம் செலுத்திச் சென்றனர் என்ற விவரங்கள் இல்லை.
பல்லவர்கள் காலத்திலேயே கடல் வணிகம் முக்கியமாகக் கவனம் பெறத் தொடங்கியபோதிலும், சோழர்களே கடல் கடந்து சென்று தங்களது ஆதிக்​கத்தை நிலை நாட்டினர். குறிப்பாக, இலங்கையும் மாலத் தீவுகளும் சோழர்களின் கடல் வணிகத்துக்கான முக்கிய மையமாகத் தேவைப்பட்டன. ஆகவே, அதைக் கைப்பற்றியதோடு சிறீவிஜயம் எனப்படும் இப்போதைய இந்தோனேஷியா, மலாய், சுமத்ரா, ஜாவா மற்றும் நிக்கோபார் ஆகிய தீவுகளையும் சோழர்கள் தங்கள் வசப்படுத்திக்கொண்டு, கடல் வணிகத்தை வலிமைப்படுத்தினர். அத்துடன், ஒரிசா மற்றும் வங்க வணிகர்களையும் ஒடுக்கி கடல் வணிகத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது சோழர்களின் பெரிய வெற்றி.
ராஜராஜ சோழனின் கடற் படை இலங்கையை வென்றதை 'திருமகள்...’ என்று தொடங்கும் கி.பி. 993-ம் ஆண்டின் மெய்க்கீர்த்தியால் அறியலாம். இந்தப் படையெடுப்பின்போது, ஈழத்தில் ஆட்சி புரிந்தவன் ஐந்தாம் மகிந்தன். இலங்கையில் ராஜராஜனின் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஈழத்தைச் சோழர்கள் கைப்பற்றியதைக் கொண்டாடும்விதமாக தலைநகரை மாற்றியதோடு பொலனருவையில் ஒரு சிவன் கோயில் கட்டினான் ராஜராஜன். ராஜேந்திரன் ஆட்சியின் 14-வது ஆண்டுக் கல்வெட்டுக்களில், முதன்முறையாக கடல் கடந்து கடாரம் வென்ற செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் ராஜேந்திரன் கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் எனச் சுருக்கமாக முடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் எடுத்துச் சொல்கின்றன. கி.பி. 1025-ம் ஆண்டு, சோழர்களின் கடற்படை சங்கராம விஜயோத்துங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தில் போரைத் தொடங்கியது. இந்தப் படையெடுப்பின் மூலமும் எவ்விதமான நிலப்பரப்பும் சோழ தேசத்துடன் இணைக்கப்படவில்லை. அதற்கு மாறாக, சோழ ஆட்சிக்கு அடங்கி இருப்பதாக ஸ்ரீவிஜயம் அரசு ஒப்பந்தம் செய்துகொண்டு திரை செலுத்தி, மீண்டும் ஆட்சி செய்யத் தொடங்கியது. சோழர்களின் கடற்படை தனித்துவம் மிக்கது. குறிப்பாக, அவர்களது பாய்மரக் கப்பல்களில் உள்ள பாய்கள் சதுரம் மற்றும் நீள்சதுர வடிவங்களில் அமைந்து இருந்தன.
கடல் பயணத்துக்கு மிகவும் இன்றியமையாதது காற்றின் வலிமையை அறிந்துகொள்வது. அத்துடன் புயல், மழையை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். இதற்காக, நட்சத்திரங்களைக்கொண்டு காற்றின் போக்கை​யும் புயல், மழை பற்றியும் சோழர்கள் அறிந்து இருக்கிறார்கள். இதற்காக, மீகான் எனப்படும் கப்பலின் மாலுமி நட்சத்திரங்களின் வரைபடம் ஒன்றை வைத்திருப்பார். அந்த வரைபடத்தின் துணைகொண்டு விண் நோக்கி அவதானித்து நட்சத்திரங்களை அடையாளம் காண வேண்டும். அதை வழிகாட்டியாகக்கொண்டு கடலில் கலம் செலுத்திப் போவதே வழக்கம். கடலோடியான நரசய்யா தமிழர்களின் கடல் வணிகம் பற்றி எழுதிய குறிப்பில், ''மாலுமிகள் நட்சத்திரங்களை அளவிடுவதற்கு விரல் கணக்கைத்தான் பயன்படுத்துவார்கள். ஒற்றை வெள்ளி, எழு வெள்ளி, செம்மீன், உலக்கை வெள்ளி, ஒடக்கல் வெள்ளி, வடமீன் என 56 விதமான வெள்ளிகளின் துணைகொண்டு கடல் பயணம் செய்துள்ளனர். இலுப்பை, புன்னை சிறுதேக்கு கரைமருது போன்ற மரங்களில் இருந்து கப்பல்கள் செய்யப்பட்டன. கப்பல் கட்டுபவர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர். அதிராமபட்டினம், கோடியக்கரை, முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் கப்பல் கட்டும் இடங்கள் இருந்துள்ளன. கடல் அலையின் சீற்றத்தை அறிந்துகொள்வதற்காக மிதப்புப் பலகை ஒன்றை சோழ மாலுமிகள் பயன்படுத்தினர். அந்தப் பலகையின் வேகம் மற்றும் மிதக்கும் நிலையை வைத்து அலைகளின் இயல்பை அறிந்துகொண்டனர்'' எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.


My India - from Vikatan....Another...

கப்பல்களில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு முறையான வரி விதிக்கப்பட்டது. அரசு நேரடியாக மேற்கொண்ட வணிகம் மட்டுமல்லாது பல்வேறு வணிகக் குழுக்களும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. அவர்களில் நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர், மணிக்கிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், வளஞ்சியர் என பல்வேறு வணிகக் குழுக்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. மணிக்கிராமத்தார் என்போர் பல நகரங்களில் வாழ்ந்து வணிகம் புரிந்தவர்கள். உறையூர் மணிக்கிராமம், கொடும்பாளூர் மணிக்கிராமம், காவிரிப்பூம்பட்டினத்து மணிக்​கிராமம் எனும் கல்வெட்டுத் தொடர்கள் இவர்களைப் பற்றிய விவரங்களைக் கூறுகின்றன. வேள்விக்குடி கோயிலின் ஒரு பகுதியை வளஞ்சி​யரும் திசையாயிரத்து ஐந்நூற்றுவரும் கட்டினர் எனக் கல்வெட்டு கூறுகிறது. 'சோழர் கை​யாண்ட பாய்மரக்கப்பல் ஓட்டுமுறை’ என்ற கட்டு​ரையில் ஆய்வாளர் பா.அருணாசலம், பல நுட்பமான தகவல்களைத் தருகிறார். சோழர்கள் பயன்படுத்திய கப்பல் ஓட்டுமுறையையும் அவர்கள் கண்டறிந்த வழிகளையும் மீண்டும் ஆராய்ந்து அறிவதற்காக மும்பை பல்கலைக்கழகப் பேராசிரியர் பா.அருணாசலத்தின் மேற்பார்வையில், மும்பை கடலியல் நிறுவன ஆதரவுடன் ஜ.என்.எஸ்.தரங்கிணி என்ற பாய்மரக் கப்பல், சோழர்களின் வழித்தடத்தில் பிரதிபலிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டது.
அந்தக் கட்டுரை, ராஜேந்திரனின் கடல் வழியை அடையாளம் காட்டுகிறது. ராஜேந்திர சோழனின் கடற்படை 1022-ம் ஆண்டு நாகப்பட்டினம் துறை​முகத்தில் இருந்து புறப்பட்டு, கடற்கரையைச் சார்ந்து தெற்கு நோக்கிச் சென்று, தென் நோக்கி ஓடும் நீரோட்டத்தின் உதவியாலும், வன்னி ஒழினி காற்றால் உந்தப்பட்டும் இலங்கையின் வடகரையை அடைந்து, அங்கிருந்து தெற்கு நோக்கிச் சென்று முல்லைத் தீவு, திரிகோணமலை, கல்முனை, அக்கரைப்பட்டி, திருக்கோயில் துறையை அடைந்து, அதன் பின்னர் நேர் கிழக்காக கப்பலை ஓட்டி, சுமத்ரா தீவின் மேற்குக் கரையை அடைந்தது. பிறகு, கடற்கரை ஓரமாகவே தெற்கே சென்று, சுண்டா நீர் நிலையைக் கடந்து, சுமத்ராவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறீவிஜயா ஆட்சி செய்த பாலம் பாங் என்ற துறையை அடைந்தது.
கடல் படையெடுப்புக்கு ஏற்றது வங்கக் கடலில் வட கிழக்குக் காற்று ஓயும் காலம். இந்தக் காலநிலை மார்கழி மாதத்தின் இறுதியில் ஆரம்பம் ஆகும். அப்போது, வங்கக் கடலில் புயல்கள் முடிந்து, கடல் காற்றோட்டம், கடல் அமைதி நிலையை அடைந்து இருக்கும். சோழர் காலத்தில் விரல் கணக்கு, நாழிகை வட்டில், கௌவெள்ளிப் பலகை என்ற ராப்பலகை, டப்புப் பலகை ஆகியவையும் ஓரளவுக்குப் பயன்பட்டன. இவற்றால் அறிந்த அளவுகள் தற்கால நுண் கருவிகளின் அளவுகளுக்கு ஈடாக இருந்தன. மிகப் பெரிய யுத்தங்களை நடத்திய ஜூலியஸ் சீஸர், அலெக்ஸாண்டர், தைமூர், செங்கிஸ்கான் ஆகியோர்கூட, தங்கள் படையுடன் தரை வழியாகவோ அல்லது நதிகளைத் தாண்டியோதான் படையெடுத்தனர். ஆனால், ராஜேந்திர சோழன் தனது பல்லாயிரம் யானைகளையும் குதிரைகளையும் வீரர்களையும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை உருவாக்கி, அதைக்கொண்டு கடல் தாக்குதல்கள் நடத்தி இருக்கிறான். கடாரம் மட்டுமின்றி பர்மாவில் இருந்து இந்தோனேஷியாவின் தெற்கு முனை வரை ராஜேந்திரன் வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற ராஜேந்திர சோழன், அவற்றைத் தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசாக திரை செலுத்தி ஆட்சி செய்யவே அனுமதித்து இருக்கிறான். அந்தக் காலத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டு மலாக்கா நீரிணையின் நுழைவாயிலுக்குச் சென்றன. அங்கிருந்து நேராகத் தாய்மலாய்த் தீபகற்பம், சுமத்ரா அல்லது ஜாவா தீவில் உள்ள துறைமுகங்களுக்குச் சென்றன. ஒருவேளை, கப்பல் தென் சீனக் கடலில் பயணம் செய்ய விரும்பினால், தென் கிழக்குப் பருவக் காற்று வீசத் தொடங்குவதற்காக, வாரம் அல்லது மாதக் கணக்கில் துறைமுக நகரங்களில் காத்திருக்கவேண்டி இருந்தது.
அதனால், மீண்டும் பயணம் செய்யச் சாதகமான காற்று வீசும் வரை அவர்கள் தங்குவதற்காக, துறைமுக நகரங்களில் வெளிநாட்டினருக்கானக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்தியாவில் இருந்து அந்தப் பகுதிக்கு வந்து, திரும்பிச் செல்லக் குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகின. 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீனக் கடலோரப் பகுதிகளில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்கள் தங்கிச் செல்வதற்கான முன்னணி இடைநிறுத்தத் துறைமுகமாக ஸ்ரீவிஜயா தலையெடுத்தது. பங்கா மற்றும் மலாக்கா நீரிணை வழியாக நடக்கும் வணிகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில்வைத்திருந்த ஸ்ரீவிஜய அரசர்கள், சோழர்களுடன் நல்லுறவுடன் இருந்தனர். எனினும், 11-ம் நூற்றாண்டில் சோழ வணிகர்களின் சந்தன மரங்களை ஏற்றி வந்த கப்பல்கள் யாவும் அரசின் பிரதிநிதிகளுக்கு அவர்கள் நிர்ணயம் செய்த விலைக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற மறைமுகக் கட்டுபாட்டை உருவாக்கியது. இதனால் ஏற்பட்ட கசப்பு உணர்வு காரணமாகவே சோழர்களுக்கும் ஸ்ரீவிஜய மன்னருக்கும் பகை உருவானது. மேலும், பல ஆண்டுகளாக சீனாவோடு நெருக்கமான நட்பு வைத்துக்கொள்ள விரும்பிய ஸ்ரீவிஜய மன்னர்களின் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறாமல், சோழர்கள் சீன அரசின் நல்லுறவைப் பெற்றது அவர்களுக்கு மனவேறுபாட்டை ஏற்படுத்தியது. இன்னொரு பக்கம், ஸ்ரீவிஜயத்தின் அரசுரிமைப் போட்டி காரணமாக கடல் வணிகர்களின் கப்பல்கள் அடிக்கடி கொள்ளை அடிக்கப்பட்டன. ஏற்றிவந்த பொருட்களில் மூன்றில் ஒரு பகுதி கொள்ளைபோவதைத் தாங்க முடியாமல் அவர்கள் சோழப் பேரரசிடம் முறையிட்டனர். இந்த மூன்று காரணங்களும் ஒன்று சேரவே, சோழர் படை ஸ்ரீவிஜயத்துக்குப் படை எடுத்து ஒடுக்கியது.
கடல் வணிகத்தின் இன்னொரு முக்கிய மையமாக விளங்கிய கம்போடியா, சோழர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதற்காக கம்போடிய அரசன் முதலாம் சூர்ய வர்மன் தனது சொந்தத் தேரை ராஜேந்திர சோழனுக்குப் பரிசாக அளித்துக் கௌரவித்தான். சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்கள். இவை மிகப் பெரியதாகவும் பெரிய அளவு பொருட்களை சுமந்து செல்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டு இருந்தன. பௌத்த பிக்குகள் இந்தியாவில் இருந்து ஸ்ரீவிஜயா வழியாக சீனாவுக்கு அடிக்கடிப் பயணம் செய்ததாக ஏடுகள் கூறுகின்றன. ஸ்ரீவிஜயாவில் பௌத்த சமயம் பரவி இருந்ததைக் காட்டுவது மட்டுமின்றி, இந்திய - சீனக் கடல் வழியில் முக்கிய மையமாக ஸ்ரீவிஜயா இருந்ததையும் அடையாளப்படுத்துகிறது. கி.பி. 1005-ல் நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரை ஒன்று சூடாமணிவர்மன் என்ற ஸ்ரீவிஜய மன்னனால் கட்டப்பட்டது. அதற்கு, சூடாமணிவர்ம விகாரை என அவருடைய பெயர் சூட்டப்பட்டது. அந்த விகாரை சூடாமணி வர்மனின் புதல்வரும் அவரை அடுத்து முடி சூட்டியவருமான மாறவிஜயதுங்க வர்மனால் கட்டி முடிக்கப்பட்டது. ராஜேந்திரச் சோழன் கி.பி. 1006-ல் சூடாமணி விகாரையின் பராமரிப்புக்காக ஆனைமங்கலம் கிராமத்தைத் தானமாக வழங்கியதை, ஆனைமங்கலச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. கடல் பகுதியையும், கடல் வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே ஆரம்ப காலங்களில் சோழர்களின் கடற்படை பயன்பட்டதாகத் தெரிகிறது. பிறகு அது, எதிர்ப்புகளை முறியடிக்கப் படையெடுக்க வேண்டிய நிலை உருவானது. சோழர்களின் கடல் எழுச்சி காரணமாக கடல் வணிகம் செழுமை அடைந்தது. இதனால், சோழர்களின் பொருளாதார நிலை உயர்ந்து ஓங்கி இருந்திருக்கிறது.
பொதுவாக, தமிழக மன்னர்கள் வணிகம் மேற்​கொள்வதற்காக மட்டுமே கடலில் கலம் செலுத்தினர். கடற்படையைப் பயன்படுத்தி ஒருவர் மற்றவர் மீது சண்டையிட்டுக்கொள்ளவில்லை. நாடு பிடிப்பதற்காக முயற்சி செய்யவில்லை.
'தமிழக அரசுகளும் மௌரியப் பேரரசும்’ என்ற தனது கட்டுரையில் ஆய்வாளர் கணியன் பாலன், தமிழர்கள் காலம் காலமாக வணிகம் செய்வதற்காக பிற தேசங்களுக்குச் சென்றுவந்த விவரங்களை விளக்கமாகக் கூறுகிறார். தமிழகத்தில் இருந்து வணிகம் செய்வதற்காக இன்றைய கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலங்களைக் கடந்து சென்று பல மாதங்கள் தங்கி வணிகம் செய்தனர் என்ற செய்தி சங்க கால அகப் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. முக்கியமாகப் பாலைப் பாடல்கள் பாடிய மாமூலனார் இந்தச் செய்தியை மிக விளக்கமாக தனது பாடல்களில் குறிப்பிட்டு இருக்கிறார். கி.மு. 4-ம் நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழ் வணிகர்கள் நேரடியாகச் சென்று தங்கி, வணிகம் செய்தனர் என்பதை சங்க காலப் பாடல்களில் உள்ள குறிப்புகளும், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் உறுதி செய்கின்றன.
தமிழகத்தில் இருந்து வணிகம் செய்ய வடநாடு செல்பவர்கள், முதலில் வெய்யூர் எனப்படும் இன்றைய வேலூர் வழியாக அல்லது கொங்கு நாட்டில் உள்ள தகடூர் என்னும் இன்றைய தர்மபுரி வழியாகச் சென்று, கர்நாடகத்தைக் கடந்து சாதவ மன்னர்களின் தலைநகராக இருந்த படித்தானம் எனும் இன்றைய ஒளரங்காபாத் அருகே போய்ச் சேர்ந்தனர். சேர நாட்டில் இருந்து துளு நாட்டு வழியாகவும் படித்தானம் போக முடியும். பின்னர், படித்தானத்தில் இருந்து தக்காணப் பாதை வழியாக உஜ்ஜயினி முதல் பாடலிபுத்திரம் வரையிலான வட நாட்டு நகரங்களுக்குச் சென்று வந்துள்ளனர். சங்க காலத்தில் ஆந்திர, கலிங்க நாடு வழியாக வட நாடு செல்லும் பாதையும் இருந்துள்ளது. மாமூலனார் தனது அகப் பாடல்களில் புல்லி என்ற குறுநில மன்னன், வேங்கட மலையைக் கடந்து சென்றது குறித்துப் பாடி உள்ளார். இந்த வழியில் செல்பவர்கள் கலிங்கத்துக்கு வணிகம் செய்யச் சென்றவர்களாக இருத்தல் வேண்டும். பிறகு, கலிங்கத்தில் இருந்து வட நாடு செல்லப் பாதைகள் இருந்தன. ஆனால், கர்நாடகம் வழியாக படித்தானம் சென்று, பின் வட நாடுகள் செல்லும் பாதையே புகழ்பெற்ற தக்காணப் பாதையாக இருந்துள்ளது.
வணிகத்தைப் பாதுகாப்பதில் தமிழக அரசுகளுக்கு இடையே ஐக்கியக் கூட்டணி இருந்ததாகத் தெரிகிறது. தமிழ் அரசுகள் முக்கியமாக, மூவேந்தர்கள் ஒன்றுசேர்ந்து செயல்பட்டு இருக்க வேண்டும். அப்படியான தமிழ் மன்னர்களின் கூட்டணி பற்றி கலிங்க மன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு. 165 ஆகும். சமீபமாக நடக்கும் கடலியல் ஆய்வுகள் சோழர்களின் கடற்படை வலிமை குறித்து புதிய வெளிச்சங்களை அடையாளப்படுத்துகின்றன. குறிப்பாக, ஆய்வாளர் ஒரிசா பாலு தமிழர்களின் கடல் வணிகப் பாதை மற்றும் பயண வழிகள் குறித்து புதிய கருத்துகளைத் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைக்கிறார்.
''கடல் வாழ் ஆமைகள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பதற்காக பல்லாயிரம் மைல்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநிலக் கடற்கரைகளுக்கு வருகின்றன. இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்​களின் புராதனக் கடல் வணிக வழி குறித்த அரிய செய்தி உள்ளதாக பாலு கண்டறிந்து இருக்​கிறார். அதாவது, சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85 கி.மீ. தூரமே நீந்திக் கடக்க முடியும். ஆனால், இந்த ஆமைகள் குறுகிய காலத்தில் பல்லாயிரம் மைல்களைக் கடந்து வருகின்றன. இதற்குக் காரணம், கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ. நீந்தாமல் மிதந்துகொண்டு பயணிக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும் அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடே இருந்திருக்கிறது. ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இனத்தின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்பு உள்ளதாக இன்றளவும் இருக்கின்றன. பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமை​களை வழிகாட்டிகளாகப் பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோலோச்சி இருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும்'' என்கிறார் ஒரிசா பாலு.
அவர் சுட்டிக்காட்டும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இது, தமிழகத்தில் விளையும் ஒருவகைக் கிழங்கு. மீனவர்கள் கடலோடும்போது, பல நாட்கள் பசி தாங்குவதற்கு இவற்றையே உணவாகக்கொள்ளும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்​புடையதாகக் கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் மியான்மர், இந்தோனேஷியா, ஆஸ்தி​ரேலியாவின் சில பகுதிகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்​கின் பெயர் 'குமரா’ என்பதாகும். பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் 'திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் 'அம்மா’ வலது பாகம் 'அக்கா’ இடது பாகம் 'வக்கா’. அடிப்பாகம் 'கீழ்’. இவ்வாறு, கடலியல் சார்ந்த புதிய ஆய்வுகளின் வருகை சோழர்களின் மிச்சங்கள் தாய்லாந்திலும் கம்போடியாவிலும் கடாரத்திலும் எவ்வாறு இருக்கின்றன என்பதை அடையாளப்படுத்துகின்றன. ஆனாலும், வலிமைமிக்க சோழர்களின் கடற்படை எவ்வாறு அழிந்துபோனது? அந்தக் கடற்படையின் வரைபடங்கள், கப்பல் கட்டும் தொழில்நுட்பம் போன்றவை ஏன் நமக்கு கிடைக்கவில்லை என்பவை இன்னமும் கண்டறியப்படாத தமிழகத்தின் அரிய வரலாற்று உண்மைகள். அவை முறையாக ஆராயப்படும்போது தமிழனின் பராம்பரியக் கடலியல் அறிவும், தொழில்நுட்பமும் முழுமையாக வெளிப்படக்கூடும்.

News on அபினி

பருத்தி, அபினி இந்த இரண்டையும் 'வெள்ளைத் தங்கம்’ என்று குறிப்பிடுகிறது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி. இந்த இரண்டும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துத் தந்தன. இன்று, மாஃபியா எனும் குற்றக் குழுக்கள் ஹாங்காங், பாங்காக், மலேசியா, சீனா என விரிந்து வளர்ந்து வலிமையான கடத்தல் மற்றும் அழித்தொழிப்பு இயக்கங்களாகச் செயல்படுகின்றன. இதற்கான தொடக்கப் புள்ளி பிரிட்டிஷ் அரசு, சீனாவுக்கு அபினி கடத்தியதில்தான் ஆரம்பம் ஆனது. ஓபியம் எனப்படும் அபினிச் செடியை தமிழில் கசகசாச் செடி என்று அழைக்கிறோம். இதற்கு, கம்புகம் என்ற பெயரும் இருக்கிறது. பளுப்புக் கசகசாச் செடி, வெள்ளைக் கசகசாச் செடி என்று இரண்டு வித செடிகள் உண்டு. இதில், வெள்ளைக் கசகசாச் செடி இந்தியாவில் அதிகம் விளைகிறது. கசகசா சாற்றைக் குடித்தால் மிதமிஞ்சிய போதை இருக்கும் என்கின்றனர்.
இந்தியாவில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வங்காளத்தில் அதிகமாக அபினி விளைகிறது. வங்காளத்தில் விளையும் அபினி தரத்தில் உயர்ந்தது என்கின்றனர். கசகசா காய்கள் முற்றும்போது, அதில் விதைகள் உண்டாகின்றன. அந்த விதைகளை முற்றவிடாமல் உறிஞ்சிகள் வழியாக பாலை எடுத்து உறையவைத்து அபினி எடுக்கிறார்கள். சில நேரத்தில், கத்தியால் காயைக் கீறி அதில் இருந்து வடியும் பாலில் இருந்தும் அபினி எடுக்கப்படுகிறது. இந்தப் பாலில் 10 சதவிகிதம் முதல் 14 சதவிகதம் வரை மார்பின் எனும் போதைப் பொருள் இருக்கிறது. அதுபோலவே, 4 சதவிகதம் நார்க்கோடின் இருக்கிறது. காய் முற்றி விதையாகிவிட்டால் இந்த போதைதன்மை அற்றுப்போய்விடும்.
ரோமானியரின் உறக்கத்துக்கான கடவுளின் பெயர் சோம்னாஸ். இந்தப் பெயரில் இருந்தே கசகசா செடியின் தாவரவியல் பெயரான பபாவேர் சோமினிபெரம் என்பது உருவானது. அதுபோல, மார்பின் எனப்படும் போதைப் பொருள் மார்பியஸ் என்ற கனவுக்கான கடவுளின் பெயரில் இருந்து தோன்றியுள்ளது.
ஓபியத்தின் சரித்திரம் மிகவும் பழைமையானது. கிறிஸ்து பிறப்பதற்கு 3,400 ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியா, சுமேரியா, எகிப்து பகுதிகளில் ஓபியம் செடி பயிரிட்டு இருக்கின்றனர். மருந்துச் செடியாகவே ஆரம்ப காலத்தில் அபினி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, வேதனையில் தவிக்கும் நோயாளிகளுக்குத் தூக்கம் வரவழைப்பதற்கும், ஆண்மையை அதிகரிக்கவும், வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாகவும் அபின் பயன்படுத்தப்பட்டது.
எகிப்தியர்கள், துயில் தரும் செடி என்று கசகசாவைக் குறிப்பிடுகின்றனர். கிரேக்கர்கள், தங்கள் கடவுளுக்கு கசகசா செடியின் பூக்களை அணிவிப்பதன் மூலம் மனிதர்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கும் என்று நம்பினர். ஆகவே, பண்டைய காலத்தில் மகிழ்ச்சி தரும் செடியாக அபினி கருதப்பட்டது. அபினி புகைப்பது அல்லது அதன் சாற்றைக் குடித்து போதை ஏற்றிக்கொள்வது திருவிழா மற்றும் மதச்சடங்குகளுடன் சம்பந்தப்பட்ட பழக்கமாக ராஜஸ்தானில் இன்றும் நிலவுகிறது. இதே பழக்கம், இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருக்கிறது. மருத்துவப் பொருளான அபினியை, வணிகத்துக்கான போதைப் பொருளாக அடையாளம் கண்டுகொண்டது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிதான்.
அக்பர் காலத்திலேயே, பீகார் மற்றும் வங்காளப் பகுதியில் விளைந்த அபினியை கிழக்கிந்தியக் கம்பெனி வாங்கி விற்பனை செய்துவந்தது. வங்காளம், பரோடா, மால்வா ஆகிய பகுதிகளில் அபினி அதிகமாக விளைந்தது. இந்த வியாபாரத்துக்காகவே, பாட்னாவில் அபினி வணிகக் கூட்டமைப்பு ஒன்றும் செயல்பட்டது. அபினி விற்பனையில் கொள்ளை லாபம் கிடைக்கிறது என்று கண்டுகொண்ட டச்சுக்காரர்கள், பீகார் வணிகர்களுடன் பேரம்பேசி தாங்களே அபினியை மொத்தமாகக் கொள்முதல் செய்யத் தொடங்கினர். இதைஅறிந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அபினி வணிகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தது. அதற்காக, விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்து உற்சாகப்படுத்தியதோடு தானே மொத்தமாக வாங்கிக்கொள்ள ஆரம்பித்தது.
1770-களில் அபினி வணிகம் பெரும் போட்டியாக மாறியது. டச்சு வணிகர்கள் இந்தோனேஷியாவுக்கு அபினியைக் கடத்தினர். போர்த்துக்கீசியர்களோ, சீனாவுக்கு விற்க முயற்சித்தனர். ஆனால், 1773-ல் வங்காள ஆளுனராகப் பொறுப்பு ஏற்ற வாரன் ஹேஸ்டிங், அபினி வர்த்தகத்தை கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார். அதற்காக, பாட்னாவில் இருந்த அபினி கூட்டமைப்பை உடைத்து, அபினி வணிகத்தை ஏகபோகமாக்கினார். இவரது முயற்சியின் தொடர்ச்சியாகவே, சீனாவுக்கு அபினி பெருமளவு கடத்தப்பட்டது.
அபினி வணிகத்தைப் பற்றி அறிந்துகொள்ள, சீனா மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆகிய இரண்டுக்கும் இடையே இருந்த வணிக உறவைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.
உலகுக்குத் தேயிலையை அறிமுகப்படுத்தியது சீனர்கள் தான். தேயிலைச் செடி அங்குதான் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. ஐரோப்பிய நாடுகளில் தேயிலை புகழ்பெறத் தொடங்கவே, சீனாவில் இருந்து தேயிலையை வாங்கி ஐரோப்பாவில் விற்கத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி. அதுபோலவே, பட்டுக்கும் சீனக் களிமண்ணால் செய்த பாத்திரங்களுக்கும் ஐரோப்பாவில் பெரிய கிராக்கி இருந்தது. இந்த மூன்றையும் வாங்கி விற்றதில், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு லாபம் கொட்டியது. ஆனாலும், தேயிலைக்கு மாற்றாக பிரிட்டிஷ் கொடுத்த கைக் கடிகாரம், வெள்ளிப் பொருட்கள், கண்ணாடிகள் ஆகியவை, கொள்முதலுக்குப் போதுமானதாக இல்லை. ஆகவே, சீனாவிடம் இருந்து கடனாளி யாகவே தேயிலையைப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது.
இதை ஈடுசெய்யும் விதமாக இந்தியாவில் விளைந்த, போதைப் பொருளான அபினியை சட்டவிரோத முறையில் சீனாவுக்கு அனுப்பத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி. இந்த போதைப் பொருள் வணிகத்தில் கொள்ளை லாபம் கிடைத்ததால், அபினி வணிகத்தை முதன்மையாக்கியது பிரிட்டிஷ் கம்பெனி. துருக்கி மற்றும் அரேபிய வணிகர்களின் மூலம் 6 அல்லது 7-ம் நூற்றாண்டில்தான் சீனாவுக்கு அபினி அறிமுகமானது. அது, வலி நிவாரணியாகவே ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், 17-ம் நூற்றாண்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் சீனர்களிடம் மேலோங்கத் தொடங்கவே, போதைக்காக அபினியைப் புகைக்கும் பழக்கம் தலைதூக்க ஆரம்பித்தது.
போதை தரும் அபினியை உட்கொண்ட காரணத்தால், சீனாவில் போதை அடிமைகள் அதிகரித்தனர். குற்றச் சம்பவங்கள் அதிகரித்தன. இந்த அவலம்பற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல், அபினியை டன் டன்னாக சீனாவுக்கு அனுப்பி பணத்தைக் குவித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. இவ்வளவுக்கும், அபினி இறக்குமதி பிரிட்டனில் தடைசெய்யப்பட்டு இருந்தது. இங்கிலாந்தில், அபினியை போதைப் பொருள் எனத் தடை செய்துவிட்டு, இன்னொரு தேசத்தில் கப்பல் கப்பலாக அபினியை விற்றதுதான் கிழக்கிந்தியக் கம்பெனியின் சாதனை! இப்படிக் கிடைத்த பணத்தில் இந்தியப் பருத்தியை வாங்கி கனரக இயந்திரங்களுடன் புதிய நூற்பாலைகளைத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி.
பம்பாய் துணி ஆலைகள் பெருமளவு, அபினி விற்பனையில் கிடைத்த உபரிப் பணத்தில் தொடங்கப்பட்டதே என்கிறார், இதைப்பற்றி ஆய்வு செய்த ஆர்.எஸ்.கேல்கர். இதுபற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சிவனடி, தனது இந்திய சரித்திரக் களஞ்சியம் என்ற புத்தகத்தில், 'ஜீஜீபாய் என்ற பார்சிக்காரர், சீனத்துடன் நடத்திய அபினி வணிகத்தில் பெரும் லாபம் சம்பாதித்தார். அதற்கு உறுதுணையாக இருந்த பிரிட்டிஷ்காரர்களை சந்தோஷப்படுத்துவதற்காக, 1857-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பம்பாய் ஓவியப் பள்ளிக்கு மிகப் பெரிய தொகை நன்கொடை வழங்கினார். அபினிப் பணம்தான் இந்தியாவில் ஓவியக் கலை வளருவதற்கும் காரணமாக இருந்தது’ என்கிறார்.
18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வணிகர்கள், சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் ஓடும் பியர்ல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள காண்டோன் துறைமுகத்தில் மட்டுமே வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்காக, 13 பண்டக சாலைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த வளாகத்துக்குள் மட்டுமே அவர்கள் தங்கள் வணிகத்தை நடத்த முடியும். அதுவும், கோடைக் காலத்தில் மட்டுமே வணிகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
வணிகம் செய்யவந்த ஐரோப்பிய வணிகர்கள், சீன மொழி கற்பதற்கு அனுமதி கிடையாது. பொழுதுபோக்குவதற்குக்கூட துறைமுகத்தைத் தாண்டி, நாட்டுக்குள் செல்ல முடியாது. இவ்வளவு கட்டுப்பாடுகளுக்குள்தான் சீனாவில் ஐரோப்பிய கம்பெனிகளின் வணிகம் நடைபெற்று வந்தது. அபினி கடத்துவது என்று முடிவு செய்தவுடன் கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் பெரிய திட்டத்தை உருவாக்கியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விளைவிக்கப்பட்ட அபினியை, மொத்தமாக விலைக்கு வாங்கி வந்து பக்குவப்படுத்தி கல்கத்தாவில் ஏலம்விட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி, சீனாவில் நேரடியாக அபினி விற்பது தடைசெய்யப்பட்டு இருப்பதால், ஒரு மாற்று வழியை உருவாக்கியது. அதன்படி, கம்பெனியின் உயர் அதிகாரிகளும், ஆங்கிலேய விசுவாசிகளாக செயல்பட்ட தனியாரும் அபினியை விலைக்கு வாங்கி தங்களுக்கான கப்பலில் ஏற்றி லிண்டின், ஹாங்காங் போன்ற இடங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். இதனால், சீன அரசு பிரிட்டிஷ் கம்பெனியைக் கேள்வி கேட்கவே முடியாது.


ப்படிக் கப்பலில் கொண்டுசெல்லும் அபினிக்குப் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய கூலிப் படைகள் உடன் சென்று இருக்கின்றனர். இந்தக் கள்ள வணிகத்தில் சீனாவின் உயர் அலுவலர்களாக இருந்த மாண்ட்ரின்களுக்கும் தொடர்பு உண்டு. 1780-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 15 டன் அபினி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுவே, 1813-ம் ஆண்டில் 75 டன்னாக உயர்ந்தது. இந்தக் காலகட்டத்துக்குள் 93 கப்பல்கள் அபினி ஏற்றிச் சென்றுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் காமன் சபையின் 1782 ஜுலை 7-ம் தேதியிட்ட பதிவில், சீன அரசு அலுவலர்களுக்குக் கையூட்டு கொடுத்துத்தான் அபினி விற்பனை நடைபெற்றது என்பதற்காக சான்று இருக்கிறது. அபினி விற்பனையில் 1830-ம் ஆண்டு மட்டும் 34 மில்லியன் டாலர்கள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்து இருக்கிறது. ஆண்டுக்கு 900 டன் அபினி சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.
அபினி கடத்தலுக்கு உதவி செய்ய துப்பாக்கி ஏந்திய கூலிப் படைகள் பல்வேறு குழுக்களாக உருவாக்கப்பட்டன. இதுதான், ஆசிய நாடுகளில் இன்று புகழ்பெற்றுள்ள மாஃபியா என்ற தொழில்முறைக் கடத்தல்காரர்கள் உருவானதின் முதல் புள்ளி.
அப்போது, சீனாவில் குவிங் வம்சப் பேரரசு ஆட்சி செய்துவந்தது. பிரிட்டிஷ்காரர்களின் அபினி வணிகத்தால் சீனாவுக்குள் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்நாட்டுக் குழப்பம் ஏற்படுகி றது என்று உணர்ந்த குவிங் பேரரசு, அபினி இறக்குமதிக்குத் தடை விதித்தது. ஆனாலும், பிரிட்டிஷ் கம்பெனியின் அபினி வணிகத்தை அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1810-ம் ஆண்டில் சீனப் பேரரசு கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், 'அபினி ஓர் மோசமான போதைப் பொருள். அதை ஐரோப்பியப் பேய்கள் நம் நாட்டில் விற்பனை செய்கின்றனர். அபினி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். அபினி நுழைகிற குவான்டுங் மற்றும் பூக்கீன் பகுதிகளைப் பொறுத்தவரை, அங்குள்ள, சுங்க அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முறையான தேடுதல் வேட்டை நடத்தி அபினியை முற்றிலும் தடுக்குமாறு உத்தரவு இடப்படுகிறது’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவால், பிரிட்டிஷ் கம்பெனியின் அபினி வணிகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், சீன அரசாங்கத்தின் தலைமை பெய்ஜிங்கில் இருந்தது. கடத்தல் நடக்கும் துறைமுகங்களை அவர்களால் நேரடியாகக் கண்காணிக்க முடியவில்லை. மேலும், பணத்தாசை காரணமாக சீன அதிகாரிகள் பலரும் கடத்தலுக்கு துணை நின்றனர். அப்போது, குவண்டோன் பகுதியின் சிறப்பு ஆளுனராக லின் சே சூ என்பவர் பொறுப்பு ஏற்றார். இவர், சீனாவுக்குள் சட்ட விரோதமாக நடந்த போதைப் பொருள் இறக்குமதியை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுத்தார். அத்துடன், சீனாவுக்குள் பிரிட்டிஷ் கம்பெனி அபினி இறக்குமதி செய்வதை உடனே நிறுத்தும்படி விக்டோரியா மகாராணிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்தக் கடிதம் மகாராணி கைக்கு சென்று சேரவே இல்லை.
கடத்தல் விவகாரத்தில் சீன அரசின் உத்தரவுகள், விதிமுறைகள் எதையும் பிரிட்டன் கண்டுகொள்ளவே இல்லை. இதனால், லின் சே சூ ஆத்திரம் அடைந்தார். இவர் முன்னதாக, ஹுனான் பகுதியின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றியவர். தேர்ந்த அறிவாளி மற்றும் தைரியசாலி. ஆகவே, சீனாவின் தெற்குக் கடல் பகுதி முழுவதும் அபினி கடத்தல்காரர்கள் வசமாவதை ஒடுக்குவதற்கு கமிஷனர் லின் கடும் நடவடிக்கையைத் தொடங்கினார். துறைமுகப் பகுதியில் எங்கெல்லாம் அபினி பதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறதோ, அங்கெல்லாம் தேடிச் சென்று அவற்றை அழிக்கத் தொடங்கினார்.
இந்த அதிரடி நடவடிக்கையில் 1,700 கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர். 70,000 ஓபியக் குடுவைகள் அழிக்கப்பட்டன. 23 நாட்களில் 500 அரசாங்க வீரர்கள் ஒன்று சேர்ந்து 1.2 மில்லியன் கிலோ அபினியை அழித்தனர். கடத்தல்காரர்கள் பொது இடத்தில் தூக்கில் போடப்பட்டனர். காவல் படகுகள் துறைமுகத்தில் இரவு பகலாக ரோந்து சென்று கண்காணித்தன. இந்தக் கெடுபிடி, பிரிட்டிஷின் அபினி வணிகத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனி 6 போர்க் கப்பல்களையும் 7,000 பேர்கொண்ட படைகளையும்கொண்டு, 1839-ல் சீனாவைத் தாக்கத் தொடங்கியது. அந்தப் போர், 'அபினி யுத்தம்’ என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. உலக அளவில் போதைப் பொருள் வணிகத்துக்காக நடந்த முதல் போர் இதுவே!
இரண்டு ஆண்டுகள் நடந்த இந்தப் போரின் முடிவு, பிரிட்டிஷ§க்குச் சாதகமாக அமைந்தது. பிரிட்டிஷ் படைகள், ஹாங்காங் தீவுகளைக் கைப் பற்றின. இதன் விளைவாக, ஒரு தலைப்பட்சமாக தயாரிக்கப்பட்ட நான்கிங் என்ற ஒப்பந்தத்தில் சீனா கையெ ழுத்துப் போட்டு ஹாங்காங்கை பிரிட்டனின் காலனி நாடாக விட்டுக் கொடுத்தது. கூடவே, ஆண்டுக்கு 15 மில்லியன் வெள்ளிப் பணமும் கப்பமாக செலுத்த ஒப்புக்கொண்டது. அதன் மூலம், விரிவான அபினி சந்தை ஒன்றை பிரிட்டிஷ் கம்பெனி ஆசிய நாடுகளில் உருவாக்கியது.
அதே நேரம், இந்திய சமஸ்தானங்கள் பலர் தாமே நேரடியாக அபினி வணிகத்தில் ஈடுபட முயற்சிப்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு அதை ஒடுக்க லைசென்ஸ் முறையை அறிமுகம் செய்தது. அதன்படி, உரிமை பெற்றவர்கள் மட்டுமே அபினி விளைவிக்க முடியும், அத்துடன், அபினி விவசாயிகள் அதை வேறு யாரிடமும் விற்க முடியாதபடி தந்திரமும் மேற்கொண்டது.
ஒரு பக்கம் சீனாவுக்குள் போதைப் பொருளைக் கடத்தி தனது வருவாயைப் பெருக்கிக்கொண்டது என்றால், மறு பக்கம் தனது காலனிய ஆட்சியில் இருந்த இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தேயிலையை அறிமுகம் செய்து தங்களுக்கான தேயிலைத் தேவையை தாங்களே உற்பத்திசெய்துகொண்டது கிழக்கிந்திய கம்பெனி. இந்த தேயிலைத் தோட்டப் பணிக்காக கொத்தடிமைகளாக பல ஆயிரம் பேர் வேலைக்கு சென்று குளிர் தாங்காமலும், நோய் ஏற்பட்டும் செத்து மடிந்தது தனிக் கதை.
இந்திய ஆங்கில எழுத்தாளரான அமிதாவ் கோஷ் 'ஸீ ஆஃப் பாப்பிஸ்’ என்ற தனது நாவலில், அபினி வணிகத்தின் வரலாற்றை விரிவாக எழுதி இருக்கிறார். இதற்காக விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட அமிதாவ் கோஷ், வங்காளத்தின் காஸிப்பூரில் இன்றும் இயங்கிவரும் ஓபியம் தொழிற்சாலையைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். 'பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தே அபினி வணிகத்தின் மையமாக இருக்கிறது காஸிப்பூர். இங்கேதான், அபினி உற்பத்தி ஒருமுகப்படுத்தப்பட்டது. 32 மாவட்டங்களில் விளைந்த அபினி இங்கே கொண்டு வரப்பட்டுப் பதப்படுத்தப்பட்டது. ஓபியம் ஏஜென்ட் என்று அழைக்கப்படும் ஓர் உயர் அதிகாரி இந்த அபினி விற்பனையை நடத்திவந்தார். காஸிப்பூரில் உள்ள குரங்குகள்கூட அபினி சாற்றைக் குடித்து போதையில் அலைகின்றன. அந்த அளவுக்கு அந்த ஊர் அபினி தொழிலில் கொழிக்கிறது. இன்றும் காஸிப்பூரில் ஓபியம் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. அங்கே எடுக்கப்படும் ஓபியம் உலகெங்கும் விற்பனை ஆகிறது. 1800-களில் மத்திய இந்தியாவில் இருந்த பல சமஸ்தானங்கள் தங்களின் வருமானத்துக்கு அபினி உற்பத்தியைத்தான் பெரிதும் சார்ந்து இருந்தன. மால்வாவின் முக்கிய வருமானம் அபினியே. இந்தியாவில் 6,42,831 ஏக்கர் நிலத்தில் அபினி பயிரிடப்பட்டு இருக்கிறது. இந்த உற்பத்தி 1920-களில் 1,63,125 ஏக்கராகக் குறைந்தது. அதுவரை, இந்தியாவின் முக்கிய வணிகப் பயிராகவே அபினி கருதப்பட்டது’ என்கிறார் அமிதாவ் கோஷ்.
சீனாவுக்குப் போதை மருந்து கடத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என்ற எதிர்ப்புக் குரல்கள், 1890-களில் இங்கிலாந்தில் எழுந்தன. இதையடுத்து, அபினி உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்த 9 பேர்கொண்ட ராயல் கமிஷனை நியமித்தார் விக்டோரியா ராணி. இந்தக் கமிஷன், தனது அறிக்கையை 1895-ம் ஆண்டு வெளியிட்டது. அதில், 'இந்தியர்கள் அபினியை காலம் காலமாகவே மருத்துவ ரீதியாகப் பயன்படுத்திவருகின்றனர். ஆகவே, அதை விற்பது தவறு அல்ல. சீனாவுக்கு, அபினி விற்பனை செய்ததைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. கம்பெனி நேரடியாக சீனாவில் அபினி விற்கவில்லை’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
1916 மற்றும் 17-ம் ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு துறைகள் சார்ந்த ஆண்டு வருமானம் 11,87,99968 ஸ்டெர்லிங் பவுண்ட். இதில், அபினி விற்பனையில் மட்டும் கிடைத்த தொகை 31,60,005 ஸ்டெர்லிங் பவுண்ட். அந்த அளவுக்குப் பணம் காய்க்கும் செடியாக அபினி இருந்தது. அது போலவே, அபினி புகைக்கும் பழக்கம் உருவான காரணத்தால், நாடெங்கும் ஓபியம் பார்கள் ஏற்பட்டன. அபினி போதைக்கு அடிமை ஆன வர்கள், அபின் வாங்குவதற்காக மனைவி, குழந்தை களைக்கூட விற்கத் தயாராகினர். தெற்கு சீனாவில் ஒருவன், தனது பிறந்த குழந்தையை ஐந்து கிராம் அபினிக்கு விற்ற கொடூரம் நடந்தது. அபினி பழக்கத்தால் சீனாவின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. சீனாவில் மட்டும் அல்லாமல் ஜப்பான், ஜாவா, சியாம் போன்ற இடங்களிலும் கிழக்கிந்தியக் கம்பெனி அபினி வணிகம் செய்தது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் அபினி வணிகத்துக்குத் துணைபோனவர்களில் முக்கியமானவர் டேவிட் சசூன். யூதரான இவர் மும்பையில் வசித்தார். பாக்தாத்தில் பெரிய வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் சசூன். இவரது அப்பா 1829-ம் ஆண்டு வணிகத்தில் பணமோசடி செய்த காரணத்தால், சசூனின் குடும்பம் பாக்தாத்தில் இருந்து வெளியேறி மும்பை வந்தது. மும்பையில், பருத்தி வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கினார் சசூன். நான்கிங் ஒப்பந்தத்துக்குப் பிறகு, பிரிட்டன் சுதந்திரமாக அபினி விற்பனையை செய்யத் தொடங்கியபோது, டேவிட் சசூன் அபினி விற்பனை செய்ய ஆரம்பித்து, அபினி சக்கரவர்த்தி என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தார்.
ஹாங்காங் நகரின் மொத்த அபினி விற்பனையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இதற்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தாராளமாகப் பணத்தை வாரி வழங்கினார் டேவிட் சசூன். போதைப் பொருள் விற்பனையில் சம்பாதித்த பணத்தைக்கொண்டு எண்ணெய் தொழிற்சாலைகளும், துணி ஆலைகளும் தொடங்கினார். கொழுத்த லாபத்துடன் லண்டன் சென்று வசிக்கத் தொடங்கி, பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்துக்கு உரிய பணியாள் என்ற விருதையும் பெற்றார் டேவிட் சசூன். இவருக்குப் பிறகு இவரது பிள்ளைகள் ஹாங்காங்கின் அபினி வணிகத்தைக் கவனித்தனர். இன்று, இங்கிலாந்தின் முக்கியத் தொழில் அதிபர்களாக டேவிட் சசூனின் குடும்பம் இருக்கிறது.
பிரிட்டிஷின் போதை வணிகம், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மட்டும் அல்லாது இதுபோல அதன் துதிபாடிகளுக்கும் கொள்ளை லாபம் சம்பாதிக்க கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ இந்தியாதான். உலகின் பார்வையில், இந்தியாவை ஒரு அபினிக் கிடங்குபோல மாற்றியது பிரிட்டிஷ் காலனியத்தின் வெட்கமற்ற செயல். சுயலாபத்துக்காக கிழக்கிந்தியக் கம்பெனி மேற்கொண்ட போதைப் பொருள் கடத்தல் இன்று சர்வதேசக் குற்றமாக வளர்ந்து நிற்கிறது. இன்றைய இந்தியாவின் மிக முக்கியப் பிரச்னை போதைப் பொருள் கடத்தல். குறிப்பாக மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மிசோரம் போன்ற மாநிலங்களில் போதைப் பொருள் கடத்துவது ஒரு குடிசைத் தொழில்போல நடக்கிறது. பள்ளி மாணவர்கள்கூட போதை மருந்து பழக்கத்துக்கு அடிமை ஆகியிருக்கின்றனர்.
போதை என்பது கண்ணுக்குத் தெரியாத ஆயுதம். அதைவைத்து எந்த நாட்டையும் எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற பிரிட்டனின் தந்திரம் இன்று அதற்கே சவால் விடுவதாகவும் மாறியிருக்கிறது.
சீனர்களைக்கொண்டு தங்களது தேசத்தின் ரயில் பாதை, சாலை மற்றும் பாலங்களை அமைத்துக் கொண்ட அமெரிக்கா இன்று, சீனர்கள் வழியாகத்தான் போதைப் பழக்கமும் அதிகரித்து வருகிறது என்று கூக்குரலிடுகிறது. தனது வரலாற்றைத் தானே மறந்து அதற்கு இங்கிலாந்தும் ஒத்து ஊதுகிறது. அதுதான் காலத்தின் கொடுமை.

Languages in INDIA...

இந்தியாவில் மொத்தம் 3,372 மொழிகள் பேசப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. அவற்றில், 216 மொழிகளை 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பேசுகின்றனர். 1,576 மொழிகள் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1,796 மொழிகள் இந்தப் பட்டியலுக்குள் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இவற்றில், 18 மொழிகள் அதிகாரப்பூர்வ அரசு மொழிகள். மீதம் உள்ள மொழி​கள் வெறும் பேச்சுவழக்கில் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் பெரும்​பாலான மொழிகளுக்குஎழுத்து வடிவமே கிடையாது.

இந்தியாவின் சில மாநிலங்களில் அந்த மாநிலங்களின் முக்கிய மொழி​களைவிட பிறமொழி பேசு​பவர்​கள்தான் பெரும்பான்​மையாக வசிக்கின்றனர்.

சிக்கிம் மாநிலத்தில் பெரும்​பான்மையாகப் பேசப்படும் மொழி நேபாளி. 63 சதவிகித சிக்கிம் மக்கள் நேபாளிதான் பேசுகின்றனர்.

திரிபுராவில் அந்த மாநில மொழியான திரிபுரியைவிட, பெங்காலிதான் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியாகத் திகழ்கிறது. இங்கு, 68.9 சதவிகிதம் பேர் பெங்காலி பேசுகின்றனர்.

திரிபுரி பேசுபவர்கள் 23.5 சதவிகிதம் மட்டுமே. பஞ்சாப் மாநிலத் தலைநகராகவும், யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் சண்டிகரில், பஞ்சாபியைவிட இந்தி மொழிதான் பெரும்பான்மையினர் பேசும் மொழியாக உள்ளது.

61.1 சதவிகிதம் பேர் இந்தி பேசுகின்றனர்.
பஞ்சாபி பேசுவோர் 34.7 சதவிகிதம்தான்.
இந்தப் பிரச்னை இந்தியாவெங்கும் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்துவருகிறது. சமகாலப் பிரச்னைக்கானத் தீர்வை அறியவேண்டுமானால், அதன் வேரை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியாவில் கோலோச்சிய பல மொழிகள் இன்று அடையாளம் இல்லாமல் அழிந்துபோய் விட்டன. ஒரு மொழி அழியும்போது அந்த மொழியில் பதிவாகியிருந்த மக்கள் வரலாறும் சேர்ந்தே அழிகிறது. 2010-ம் ஆண்டு அந்தமான் நிகோபார் தீவில் பேசப்பட்டுவந்த பழைமைவாய்ந்த 'போ’ என்ற மொழி மரணம் அடைந்தது. அந்த மொழியைப் பேசிவந்த 'போவா’ என்ற 80 வயதுப் பெண் இறந்ததும், அந்த மொழியும் அழிந்துவிட்டது.
அதுபோலவே, கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியா என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், மரணம் அடைந்தார். அவரோடு கேரளாவின் கொச்சிப் பகுதியில் பேசப்பட்டுவந்த 'க்ரியோல்’ என்ற மொழியும் இறந்துவிட்டது. இது, போர்த்துக்கீசிய மலையாளக் கலப்பு மொழி. 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொச்சிப் பகுதி கத்தோலிக்கர்களால் பேசப்பட்ட மொழி. அழிந்துவிடும் நிலையில் உள்ள மொழிகளின் விவரத்தை யுனெஸ்கோ நிறுவனம் 2009-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அதில், 2,473 மொழிகள் அழியும் அபாயத்தில் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஐந்து மொழிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. 42 மொழிகள் கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளன. 63 மொழிகள் நிச்சயம் அழிந்துவிடும், 82 மொழிகள் அழியும் அபாயம் உள்ளவை எனச் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.


மைசூரில் உள்ள இந்திய மொழிகள் கழகம், 'உலக நாடுகளின் நிலையோடு ஒப்பிடுகையில் தாய்மொழி அழியும் அபாயம் இந்தியாவில் அதிகமாகவே இருக்கிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் மொழிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று கூறுகிறது.

மொழிகளைப் பாதுகாக்க அது, பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும். கூடுதலாக, பேச்சுவழக்கில் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டும் எழுத்து வடிவில் புத்தகங்களாக வெளிவருவதும் அவசியம். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கு நேர்ந்த கதிதான் இந்தியாவிலும் ஏற்படும். அதாவது, ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவில் 250 மொழிகள் பழங்குடியினரால் பேசப்பட்டன.

இன்று, அவற்றில் இரண்டு மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 90 ஆயிரம் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக டி.சி. சர்கார் தமது நூலில் குறிப்பிட்டு உள்ளார். அவற்றில், மூன்றில் இரண்டு பகுதி தென்னிந்தியாவைச் சேர்ந்தது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் தன்மை குறித்து ஆய்வுசெய்த எ.சுப்பராயலு, தமிழ்க் கல்வெட்டுக்களை காலநிரல்படி பகுப்பாய்வுசெய்து
கி.மு. 300 - கி.பி. 500-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 400. கி.பி. 501 - கி.பி. 850-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 900.
கி.பி. 851- கி.பி. 1300-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 19 ஆயிரம்.
கி.பி.1300 - கி.பி.1600-க்கு இடையில் உள்ளவை 6,000.
கி.பி. 1600 - கி.பி.1900-க்கு இடைப்பட்டவை 2,000.
வெளிநாட்டில் கிடைத்த கல்வெட்டுகளின் எண்ணிக்கை 300 என ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார். இந்தக் கல்வெட்டுக்களில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பதிப்பித்து முறையாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. கல்வெட்டுக்களில் இருக்கும் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் போன்றவற்றை இன்று நம்மால் எளிதாக வாசிக்க முடியாது. காரணம், அவை இன்று வழக்கில் இல்லை. இந்த எழுத்து வடிவங்களைப் பற்றி அறிந்துகொள்வது வரலாறு படிக்கிறவர்களுக்கு மிக அவசியம்.

Yuan swang....news...

பள்ளிப் பாடப் புத்தகங்களில் பலரும் படித்து, மறந்துபோன 100 பெயர்களில் ஒன்று யுவான் சுவாங்.
சீன யாத்ரீகர் என்ற அடையாளத்துடன் கையில் ஒரு தோகை விசிறி, பருத்து வீங்கிய கழுத்து, வட் டமான முகம், வளைந்த புருவம், சிறிய உதடுகள், சற்றே உயரமான உடல் அமைப்பு கொண்ட யுவான் சுவாங்கின் சித்திரத்தை பள்ளியின் சரித்திரப் புத்தகங்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால், அவரது பயணத்தின் பின்னுள்ள தேடுதலையும், அவர் பதிவு செய்துள்ள வரலாற்றுக் குறிப்புகளையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ளவே இல்லை.
சமீபத்தில், ரிச்சர்ட் பெர்ன்ஸ்டெயின் என்ற அமெரிக்க எழுத்தாளர் யுவான் சுவாங்கின் பாதையில் திரும்பப் பயணம் செய்து, 'அல்டிமேட் ஜர்னி’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதில், யுவான் சுவாங் மேற்கொண்ட பயணத்தின் இடர்ப்​பாடுகளையும், அவர் கடந்துவந்த பாதையின் வரைபடங்களையும் மீள்ஆய்வு செய்தபோது, 'எப்படி இந்த மனிதர் அந்த நாட்களில் பயணம் செய்தார்?’ என்று வியப்படைந்து, 'யுவான் சுவாங் ஒரு மகத்தான யாத்ரீகர்’ என்கிறார்.

'எவ்விதமான முறையான வரைபடமும் வாகன வசதிகளும் இன்றி நடந்தும், கோவேறுக் கழுதைகளிலும் யுவான் சுவாங் பயணம் செய்து இருக்கிறார். அதே பாதையில் இன்று எல்லா வசதிகள் இருந்தும் பாதுகாப்பாக ஆப்கானுக்குள் நுழைய முடியவில்லை. காரணம் தாலிபான்கள், கண்ணி வெடிகுண்டுகள், தீவிரவாத வன்முறைகள்.
அந்தக் காலத்தில் மழை நேரங்களில் ஓர் ஆற்றைக் கடந்து செல்வதற்கு பல மாதங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. இன்று உறுதியான இரும்புப் பாலம் இருக்கிறது. ஆனால், அதைக் கடக்க அரசு அனுமதி மறுப்பதால், பல வருடங்கள் காத்திருக்கவேண்டி இருக்கிறது’ என்று தனது நூலை முடிக்கிறார். காலம் காட்டும் உண்மை இப்படித்தான் இருக்கிறது.
நாடு பிடிக்கவோ அல்லது மதப் பிரசாரம் செய்வதற்காகவோ, ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பயணம் மேற்கொண்ட வாஸ்கோடகாமா, கொலம்பஸ், கேப்டன் குக், பார்த்தலோமியா டயஸ், ஜீகன்பால்க் போன்ற பயணிகளைப் போலின்றி, அறிவையும் ஞானத்தையும் தேடி பல்லாயிரம் மைல்கள் தனியே பயணம் செய்து, இந்தியாவுக்கு வந்துசேர்ந்த புத்தத் துறவி யுவான் சுவாங்.
தனது வாழ்நாளில் 17 வருடங்களை அவர் பயணத்திலேயே கழித்திருக்கிறார். கழுதைகளிலும், ஒட்டகங்களிலும், மட்டக்குதிரைகளிலும்,கால்​​நடையாக நடந்தும் இவர் கடந்து வந்ததூரம் 20 ஆயிரம் மைல்களுக்கும் அதிகம். இந்தியாவைக் காண வேண்டும் என்ற ஆசை யுவான் சுவாங்கின் சிறு வயதில் வேர்விடத் தொடங்​கியது.
யுவான் சுவாங்கின் குடும்பம் பௌத்த மதத்தில் தீவிரப் பற்றுகொண்டது. அவரது அப்பா கன்பூசிய சிந்தனையில் தேர்ச்சி பெற்ற அறிஞர். யுவான் சுவாங்கின் சகோதரர்கள் பௌத்தத் துறவிகளாக இருந்தனர். ஆகவே, தத்துவமும் இலக்கியமும் சிறு வயதிலேயே அவருக்கு அறிமுகம் ஆனது.
தனது 12-வது வயதில் இளம் துறவியாக பௌத்த மடாலயத்தில் அனுமதிக்கப்பட்ட யுவான் சுவாங், அங்கே பௌத்தத் தத்துவமும் கன்பூசிய சிந்தனைகளும் கற்றார். அதன்பிறகு, அவர் பௌத்த அறிவுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும், 'தி கிரேட் லேர்னிங் டெம்பிள்’ என்ற மடாலயத்துக்கு அனுப்பப்பட்டார். இந்த மடாலயத்தில் 500-க்கும் மேற்பட்ட துறவிகள் இருந்தனர். அவர்களது முக்கியப் பணி பௌத்த சமய ஏடுகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்வது.
அந்த நாட்களில் பெரும்பான்மையான பௌத்த ஏடுகள் பாலி மொழியில் இருந்தன. இந்தியாவில் இருந்து கிடைத்த சில ஏடுகள் சமஸ்கிருதத்திலும் இருந்தன. ஆகவே, சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிகள் அறிந்த பௌத்தத் துறவிகள், தங்கள் வாழ்நாளை மொழிபெயர்ப்புச் சேவைக்காகச் செலவு செய்தனர்.
பௌத்த சமய சூத்திரங்களையும் அறநெறிகளையும் கொண்ட ஏடுகளில் ஒன்றை மொழியாக்கம் செய்வதற்கு ஒரு துறவிக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்படும். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை மூத்த துறவிகள் பரிசீலனை செய்வார்கள். பிறகு, அந்த ஏடு அறிஞர் குழுவால் மூலப்பிரதியோடு ஒப்பீடு செய்யப்படும். முழுமையாகத் திருத்தம்செய்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அந்த மொழிபெயர்ப்பை பிரதி எடுப்பதற்காக 40 துறவிகள் வேலை செய்தனர். அவர்கள் ஏடுகளைப் பிரதி எடுத்து, சீனாவில் இருந்த வெவ்வேறு மடாலயங்களுக்கு அனுப்பி வைப் பார்கள். இப்படி, தங்கள் வாழ்நாள் சேவையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்ட துறவிகளின் நடுவில் பணியாற்றத் தொடங்கிய யுவான் சுவாங், இந்தியாவைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்ளத் தொடங்கினார்.
இதற்காக அவர் சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள விரும்பினார். நான்கு ஆண்டுகள் முழுமையாக பயிற்சி மேற்கொண்டு சமஸ்கிருத விற்பன்னரானார். இதன் காரணமாக அவரால் பல முக்கிய ஏடுகளை எளிதாக சீன மொழியில் மொழிபெயர்க்க முடிந்தது.
629-ம் ஆண்டு மடாலயத்தில் தங்கி இருந்த ஓர் இரவில், இந்தியாவில் உள்ள கயாவில் புத்தர் ஞானம்பெற்ற போதி மரத்தின் அருகில், தான் பிரார்த்தனை செய்துகொண்டு இருப்பதாக யுவான் சுவாங்குக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவு தன் மனதில் நீண்ட நாட்களாகப் புதையுண்டு கிடந்த ஆசையின் வடிவம் என்பதை உணர்ந்தார் யுவான் சுவாங்.
ஆகவே, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, பகவான் புத்தர் பிறந்த இடத்தைக் கண்டு வர வேண்டும் என்பதோடு, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முக்கிய பௌத்த ஏடுகளை சீனாவுக்குக் கொண்டுவர வேண்டும் என விரும்பினார். இந்த விருப்பத்தை அவரது மூத்த துறவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்லாயிரம் மைல் பயணம் செய்து இந்தியாவைச் சென்று அடைவது நடக்க முடியாத செயல் என்று ஏளனம் செய்தனர். ஆனால், யுவான் சுவாங் தன்னால் அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று நம்பினார்.
ஆனால், தாங் அரசு அந்த நாட்களில் யுத்தத்தைச் சந்தித்துக் கொண்டு இருந்த காரணத்தால், எவரும் தேசத்தைக் கடந்து வெளியேறுவதற்கோ உள்ளே வருவதற்கோ அனுமதிக்கவில்லை. யுவான் சுவாங் சூழலைப் பொருட்படுத்தாமல், தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு, குதிரையில் பயணம்செய்து தாங் அரசின் எல்லையைக் கடந்து சென்றார். சீனாவில் இருந்து இந்தி​யாவுக்குச் செல்வதற்கான முறையான வரைபடங்கள் அந்த நாட்களில் கிடையாது. ஆகவே, அவர் தனது பயணத்தை சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்டார்.
மேற்கு நோக்கிய பயணம் என்று திசையை மட்டும் மனதில் கொண்டபடி தொடங்கிய அவரது பயணம், எண்ணிக்கையற்ற பிரச்னைகளைச் சந்தித்தது. சீதோஷ்ண நிலையும், வழிப்பறியும், பசியும், நோயும் அவரைத் தாக்கியது. ஆனாலும், அவர் தன் கனவுப் பாதையில் தொடர்ந்து பயணித்தார்
சீனாவின் எல்லையைக் கடக்கும்போது, அரசாங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை அருகில் உள்ள மடாலயம் ஒன்றில் கொண்டுபோய் சேர்த்துவிடும்படியாக ராணுவ அதிகாரி கட்டளை இட்டதும், 'அப்படித் தன்னைச் செய்வதாக இருந்தால், அந்த இடத்திலே கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்து போவேன்’ என்று யுவான் சுவாங் தனது கத்தியைக் கையில் எடுத்தார்.
அவரது மனத்துணிவும் விருப்பமும் அறிந்த ராணுவ அதிகாரி, எல்லையைக் கடந்து செல்ல அனுமதித்தார். யுவான் சுவாங் புகழ்பெற்ற கோபி பாலைவனத்தைக் கடக்க முயன்றபோது, வெயிலும் தாகமும் வாட்டி எடுத்தது. பாதை தவறி மணலில் அங்குமிங்குமாக அலைந்து களைத்துப்போன யுவான் சுவாங், அந்தப் பாலைவனத்திலேயே இறந்து​விடக்கூடும் என்று நம்பினார். இனி, தனது முயற்​சியால் எதுவும் நடக்கப்போவது இல்லை என்று உணர்ந்த​வராக தன்னைக் குதிரையோடு சேர்த்துக் கட்டிக் கொண்டார்.
குதிரை பாலைவனத்தில் தனது போக்கில் போகத் தொடங்​கியது. எந்தத் திசையில் செல்கிறது என்று தெரியவில்லை. ஆனால், குதிரை எதையோ அறிந்தது​போல சீராகப் போய்க்கொண்டே இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் கண் விழித்தபோது, தன் எதிரில் பெரிய பாலைவனச் சோலையையும் அங்கே குளிர்ந்த தண்ணீர்ப் பொய்கை இருப்பதையும் கண்டார்.
அவரால் அது நிஜம் என்று நம்ப முடியவில்லை. ஓடிப்போய்த் தண்ணீரைக் குடித்தார். அங்கேவிளைந்​திருந்த ஈச்சம்பழங்களைத் தின்றார். குதிரைதன் உள்ளுணர்வில் எங்கே தண்ணீர் உள்ளதுஎன்பதை அறிந்திருக்கிறது என்று உணர்ந்த யுவான் சுவாங், அதுவும் புத்தரின் கருணை என்று நன்றி செலுத்திய​தோடு, முடிவற்ற மணல் திட்டுகள் நிரம்பிய பாலையில் தனி ஒரு ஆளாக பல மாதங்கள் அலைந்து திரிந்து முடிவில் தர்பான் என்ற நாட்டை அடைந்தார்.

அந்த நாட்டின் அரசர் புத்தத் துறவிகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால், அவரைத் தேடிச்சென்றார். அரசரும் யுவான் சுவாங்கின் அறிவுச் செல்வத்தைக் கண்டு வியந்து, தனது ஆஸ்​தான குருவாக தன்னோடு வைத்துக்கொண்டார். ஓர் ஆண்டு அங்கே கழித்த யுவான் சுவாங், தனது இந்தியப் பயணத்துக்குத் தயாரானபோது அரசர் அனுமதி தர மறுத்தார். தன்னை இந்தியப் பயணத்துக்கு அனுமதிக்கா விட்டால், தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக யுவான் சுவான் பட்டினி கிடக்கத் தொடங்கினார். அரசர் அனுமதி தந்ததோடு தனது நாட்டின் அரசப் பிரதிநிதி என்று முத்திரை ஓலையையும், பாதுகாப்புக்காக ஆட்களும், வழியில் தேவைப்படும் பொருட்களையும் கொடுத்து அனுப்பினார்.

ஆனால், ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து செல்லும் போது, அவரை யாரோ ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் பயணம் செய்கிறார் என நினைத்தனர்

கொள்ளைக்காரர்கள். அதனால், அவரை வழிமறித்துத் தாக்கி, காவலர்களைக் கொன்று அவரது உடைமைப் பொருட்களைப் பறித்தனர். திரும்பவும் கால் ஒடிந்த குதிரை ஒன்றோடு தனி நபராக விடப்பட்டவர், அங்கே இருந்து இரண்டு ஆண்டுகள் பயணம் செய்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார். வழி முழுவதும் பௌத்த மடாலயங்களில் தங்கியும், சிறு நிலப்பரப்புகளை ஆண்ட அரசர்கள் மற்றும் மக்களது வாழ்க்கைமுறை கலாசார செயல்பாடுகள் யாவையும் குறிப்புகளாக எழுதிக்கொண்ட யுவான் சுவாங், வெவ்வேறு பௌத்த சமய ஏடுகளையும் சேகரிக்கத் தொடங்கினார்.