மன்னர்கள் காலத்தில்கூட தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தனியாக ஒரு மன்னர் இருந்ததாக குறிப்புகள் இல்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் மன்னர்கள் என்று இலக்கியங்களில் ஒரு சில வரிகளில் தகவல்கள் வருகின்றன.
கடல் கொண்ட தென் மதுரையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட காய்சின் வழுதி என்ற பாண்டிய மன்னர் முதல் சங்கத்தை தொடங்கினார். அவர் தொடங்கி, கடுங்கோன் என்ற பாண்டிய மன்னர் முடிய 89 அரசர்கள் 4440 ஆண்டுகள் இந்தச் சங்கத்தை நடத்தியதாக இறையனார் களவியல் உரை என்ற நூல் கூறுகிறது.
அதன்பிறகு கபாடபுரத்தை தலைநகராகக் கொண்டு வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னன் இடைச்சங்கத்தை தொடங்கினான். இந்தச் சங்கம் 3700 ஆண்டுகள் நடத்தப்பட்டது. முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னனோடு மொத்தம் 59 மன்னர்கள் இந்தச் சங்க காலத்தில் ஆட்சி செய்தனர்.
கபாடபுரமும் கடலால் அழிந்தது. அதன்பிறகு தற்போதுள்ள மதுரையில் கடைச்சங்கம் எனப்படும் மூன்றாம் சங்கம் தொடங்கப்பட்டது. கபாடபுரம் கடலால் அழிந்தபோது அங்கிருந்து உயிர்பிழைத்து வந்த கடைசி மன்னன் முடத்திருமாறன் இந்த சங்கத்தை தொடங்கினான்.
இந்தச் சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி முடிய 49 மன்னர்களால் 1850 ஆண்டுகள் நடத்தப்பட்டது. அதாவது கி.பி.2ம் நூற்றாண்டு வரை இந்தக் கடைச்சங்கம் நடைபெற்றிருக்கிறது.
இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை? அதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை. கி.பி.8ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இறையனார் களவியல் உரை என்ற நூல்தான் இந்தத் தகவல்களை கூறுகிறது.
கி.பி.8ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இறையனார் களவியல் உரை என்ற நூல் சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் நடைபெற்ற சங்ககால ஆட்சி குறித்து சொல்கிறது என்றால்...
இறையனார் களவியல் உரை என்ற நூல்தான் முதல் சங்கம் என்ற கதையை பரப்பியது என்கிறார்கள். அதாவது முதல் சங்கமோ, இடைச்சங்கமோ இல்லை என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், கி.மு. 400 அல்லது கி.மு.300 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ளகாலப் பகுதியைத்தான் சங்க காலம் என்று வரையறை செய்திருக்கிறார்கள்.
அதாவது, தமிழ் மொழி வரலாறு என்பதை,
- சங்க காலம் (கிமு 400 – கிபி300),
- சங்கம் மருவிய காலம் (கிபி300 - கிபி 700),
- பக்தி இலக்கியகாலம் (கிபி 700 - கிபி 1200),
- மையக்காலம் (கிபி 1200 - கிபி 1800),
- தற்காலம்(கிபி 1800 - இன்று வரை)
இந்தக் காலத்தில் தோன்றிய
- நற்றிணை,
- குறுந்தொகை,
- ஐங்குறுநூறு,
- பதிற்றுப்பத்து,
- பரிபாடல்,
- கலித்தொகை,
- அகநானூறு,
- புறநானூறு,
- திரு முருகாற்றுப்படை,
- பொருநர் ஆற்றுப்படை,
- சிறுபாணாற்றுப்படை,
- பெரும் பாணாற்றுப் படை,
- முல்லைப்பாட்டு,
- மதுரைக்காஞ்சி,
- குறிஞ்சிப்பாட்டு,
- நெடுநல் வாடை,
- பட்டினப்பாலை,
- மலைபடுகடாம்என்னும் பதினெட்டு நூல்களையே சங்க இலக்கிய நூல்கள் என்று கூறுகிறார்கள்.
இவற்றில் மொத்தம் 2381 பாடல்கள் உள்ளன.
அவற்றை 473 புலவர்கள் பாடி உள்ளனர்.
102 பாடல்களைஎழுதிய ஆசிரியர்பெயர்கள் கிடைக்கவில்லை.
தமிழர் வரலாற்றைஎழுதுவதற்குரிய முதன்மைச் சான்றாதாரங்கள் புறநானூற்றில் உள்ளன. ஆனாலும் தேவையான முழு தரவுகள் அனைத்தும் இருப்பதாகக்கூறமுடியாது.
தமிழர் வரலாற்றை ஓரளவு எழுதுவதற்குத் தேவையானகுறிப்புகள் உள்ளன. தொல்பொருள், கருவி, கலம், கட்டடம், காசு, நடுகல், கல்லறை, மனிதஎலும்பு, இலக்கியம், கல்வெட்டு, ஓலைச்சுவடி, நாட் குறிப்பு, பயணிகளின் வரலாற்றுக் குறிப்புகள்,வரலாற்று ஆவணங்கள், செவிமரபுச் செய்திகள், பழக்க வழக்கங்கள், மொழிநூல் சான்றுகள், நிலநூல் சான்றுகள், கடல் நூல் சான்றுகள் ஆகியவைகளை வரலாற்றை எழுதுவதற்குரிய ‘வரலாற்றுமூலங்கள்’ என்று கூறுவர்.அந்த வகையில் புறநானூற்றில் தமிழர்வரலாற்றை வரைவதற்குரிய வரலாற்று மூலங்கள் காணப்படுகின்றன.
சங்க இலக்கியக் காலகட்டத்தில்சிறிய அரசர்கள், மலைகளை ஆண்ட தலைவர்கள், பெரிய அரசர்களான மூவேந்தர்கள் தமிழ் நிலப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர். சுமார் ஐந்நூறுஆண்டு காலத்திற்குள் இருந்த இந்த அரசர்களும், அவர்களால் ஆளப்பட்ட மக்களும் மெதுமெதுவாகஅதுவரை அறியாத பழக்கமான எழுத்துகள் எழுதுவதற்கும் சமணம், பௌத்தம் போன்ற சமயக்கருத்துகளைஅறியவும் தொடங்குகின்றனர்.
சங்ககாலத்தின் ஒரு பகுதியில் வைஷ்ணவ, சைவ கருத்திழைகள்சங்க இலக்கியத்தில் மெதுவாக ஊடுருவி இருக்கின்றன.
சங்க இலக்கியத்தில், பெரும்பாலும் கடவுளர்களைப்பற்றியோ, மதச்சடங்குகளைப் பற்றியோ, அமைப்புரீதியிலான சமயத்தைப் பற்றியோ பெரிய தகவல்கள்இல்லை. திருமுருகாற்றுப் படையும், பரிபாடலும் நீங்கலாக, இது ஆச்சரியமான ஒரு விஷயம்என்று ஆதிகால சமூகங்களைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாய் ஆதி இலக்கியங்கள்கடவுள் வணக்கத்தையும், கடவுளர்கள் பற்றிய புராணக் கதைகளையுமே கொண்டிருக்கும். முல்லைப்பாட்டின் ஆரம்பவரிகளில் மழை வருவது பற்றி விளக்கும் கவிஞனுக்கு, திருமால் ஞாபகத்துக்கு வருகிறார்.எனவே திருமால் பற்றிய கதைகள் பரவிய காலத்தில் முல்லைப்பாட்டு எழுதப்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. மற்றபடி ஆயிரக்கணக்கான பாடல்களில்மனித உணர்வுகள் மட்டுமே மையமாக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், புறநானூற்றை ஆழ்ந்து படித்து முறையாக பகுத்து பிரித்தால் ‘தமிழர் வரலாற்றின்’வன்மை, மென்மைகளைத் துல்லியமாக அறிய முடியும். புறநானூற்றுக் காலத்தில் கருவி, வாகனம், நெருப்பு, உணவு, அணிகலன்,தொழில் போன்ற பொருட் பண்பாட்டில் தலைசிறந்து வாழ்ந்த தமிழர்கள், சமுதாயப் பண்பாட்டில் தரம் தாழ்ந்துகிடக்கின்றனர்.
மன்னர்கள் ஆரியப் பண்பாட்டிற்குஅடிமையாகி தலை குனிந்து நின்ற காட்சியைப் புறநானூறு காட்டுகிறது. அரசர்கள் போர் வெறிகொண்டவர்களாக இருந்தனர்; குழந்தைகளைக் கொல்ல முயன்றனர். சாதி வேறுபாடும், தொழில் வேறுபாடும்சமுதாயத்தில் ஊடாடி நின்றன. ‘இழிசினர்’ என்று ஒரு பகுதி மக்கள் இழித்துரைக்கப்பட்டனர்.பெண்கள் நெருப்பில் இட்டுக் கொல்லப்பட்டனர். இவைகளெல்லாம் அக்காலத் ‘தமிழர் வரலாறு’மேன்மைக்குரியதாக இல்லை என்பதையே காட்டுகின்றன.
ஆனாலும், மலையமான் மக்களை யானைக்காலில் இட்டுக்கொல்ல, கிள்ளி வளவன் முயன்ற போது, அதனைத் தடுத்து நிறுத்தி, மன்னனுக்குஅறிவுரைக் கூறிய கோவூர் கிழாரின் செயல் போற்றுதலுக்குரியதாகும். அதிகாரத்தை எதிர்க்கும்இவருடைய குரலில் மென்மையும் உள்ளடங்கிய தன்மையும் காணப்படுகிறது. ஆயினும் அதிகாரத்தைஎதிர்க்கும் குரலே தமிழர் வரலாற்றின் ஆதார நாதமாக இருந்திருக்கிறது என்றும், அதைச் சீரழிக்கும் சக்தி ஊடுருவிய காலம் அது என்றும் உணர முடிகிறது.
கடைச்சங்கம் என கூறப்படும் காலகட்டம் மட்டுமே இலக்கியங்கள் படைத்த தமிழ்சங்கமாக கருதப்படுகிறது. இந்த சங்ககாலம் முடிவுற்ற சுமார், கி.பி.250ம் ஆண்டிலிருந்து, இறையனார் களவியல் உரை எழுதப்பட்ட கி.பி.8ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் என்னதான் நடந்தது. அதுபற்றிய தகவல்கள் வெறுமையாக இருக்கின்றனவே அது ஏன்?
இதைத்தான் அரசியல் என்கிறேன். ஆம், அது வரலாற்று திரிபு அரசியல். இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட ஆட்சியாளர்களின் ஆட்சி அடையாளங்கள் முழுவதுமாக அழித்து ஒழிக்கப்பட்டன.
ஆம், தமிழ்மொழி வரலாறு என்று காலம் பிரிக்கிறபோது, கி.பி.300 முதல் கி.பி.700 வரை சங்கம் மருவிய காலம் என்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டை களப்பிரர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். அந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு கலை, இலக்கியம், அரசு நிர்வாகம், சமூக அமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கியிருக்கிறது.
ஆனால், களப்பிரர் ஆட்சிக்காலத்தில் உருவான இலக்கியங்களையும், பண்பாட்டு அடையாளங்களையும் உருத்தெரியாமல் அழித்து ஒழித்துவிட்டு, அவர்களுடைய ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.
உண்மையில் களப்பிரர்கள்தான் தமிழகத்தில் முதல் குடியாட்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து நடைபெற்ற பிந்தைய ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களைக் கொண்டு களப்பிரர்கள் ஆட்சிக்காலம்தான் தமிழ்நாட்டின் ஒளிமிகுந்த பொற்காலம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் நிரூபித்துள்ளனர்.
களப்பிரர்கள் மக்கள் மத்தியில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும், வர்ணக் கோட்பாடுகளையும் புறந்தள்ளி, சமத்துவ வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தினார்கள்.
இதைத் தாங்க முடியாத ஆரியர்கள் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் உதவியால் களப்பிரர் ஆட்சியில் ஏற்பட்ட சமுதாய மாற்றம், இலக்கிய மாற்றம், பண்பாட்டு மாற்றங்களையும், அவர்கள் எழுப்பிய கட்டிடங்களையும் அடையாளம் தெரியாமல் அழி்த்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபித்தார்கள்.
- சிலப்பதிகாரம்,
- மணிமேகலை,
- குண்டலகேசி,
- வளையாபதி,
- சீவக சிந்தாமணி
என்னும் காப்பியங்கள் ஐம்பெருங் காப்பியங்கள்என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில்தோன்றியவை. தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளைமூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவை சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின்தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.
இதில் சங்கம் மருவிய காலம் என்று குறிப்பிடப்படும் காலம்தான் களப்பிரர் காலமாக கருதப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் தமிழின் நீதிநூல்கள் அனைத்தும் தோன்றின.
ஆனால், நாம் படிக்கும் அனைத்து வரலாற்று நூல்களும், சாதாரண மக்களை கதை நாயகர்களாக்கிய அந்தக காலத்தை மட்டும், தமிழரின் இருண்ட காலம் என்றும் களப்பிரர் என்ற வேறு ஒரு இனம் தமிழரை அடிமைப்படுத்திய காலம் என்றும் ஏன் கூறுகின்றன?
No comments:
Post a Comment