களப்பிரர் வரலாறு குறித்து, உண்மையில் நடந்தது என்னவென்று பார்ப்போம். கி.பி.1ஆம் நூற்றாண்டு மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட முடிவை நெருங்கிய காலம்
.
பாண்டியருக்கும், சோழர்களுக்கும் பார்ப்பன மோகம் பிடித்து ஆட்டிய காலம். எல்லா நேரமும் பார்ப்பனருடன் சேர்ந்து யாகம் வளர்ப்பதே வேலையாக இருந்தனர். தங்களை மற்றவரைவிட தங்களைச் சிறப்பாகக் காட்டி கொள்ள இருவருமே முனைந்திருந்த காலம்.
இதில் இரண்டு மன்னர்கள் மட்டும் சேரவில்லை. ஒருவர் சேரமன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன். இவர்தான் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளின் தந்தை. இவருடைய இன்னொரு மகன்தான் கண்ணகிக்கு சிலையை எடுக்க இமயமலை சென்று வென்ற இமயவரம்பன் சேரன் செங்குட்டுவன்.
மற்றொருவர் காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன். இவன் கரிகால் சோழனுக்கும், ஈழத்து இளவரசிக்கும் பிறந்தவன் என்கிறார்கள்.
இப்படியாக பார்ப்பன மோகத்தில் மூழ்கித் திளைத்த பாண்டியன் பெயர், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்றும், சோழனின் பெயர், ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி என்றும் அறியப்படுகிறது. யாகம் நடத்துவதில் இவர்களுக்கு இருந்த ஈடுபாடுதான் இவர்களின் பெயர் மாற்றத்துக்கு காரணமாக அமைந்தது.
இவ்விருவரும் கணக்கில்லா விளைநிலங்களை பார்ப்பனருக்கு தானமாக கொடுத்தனர். இதையடுத்து, வேளாண்குடிகளான பொதுமக்களின் மனக்கசப்பிற்கு ஆளானார்கள்.
பார்ப்பனருக்கு நிலத்தை மன்னன் தானமாகக் கொடுத்தால், நிலத்தில் விவசாயம் செய்து வந்த விவசாயி நிலத்தை காலி செய்துவிட்டு எங்காவது கூலி வேலைக்குத்தான் போகவேண்டும். அல்லது, அந்த நிலம் பெற்ற பார்ப்பனரிடம் கூலி வேலைதான் செய்ய வேண்டும்.
இதன் விளைவாக மக்கள் புரட்சி வெடித்தது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், மக்கள் தமக்குள் ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து, அவன் தலைமையில், அரசனையும் அவனது படைகளையும் எதிர்த்து போராட தொடங்கினர்.
போராட்டத்தின் இறுதியில், பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி, அச்சுதன் என்ற வேளாண்குடி தலைவனால் கொல்லப்பட்டதாக தெரிகிறது. சோழ மன்னன் ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளியும் கொல்லப்படுகிறான். அவனை வென்ற தலைவன் பெயர் தெரியவில்லை.
இந்த மக்கள் புரட்சி காஞ்சியிலும், சேரநாட்டிலும் நடக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இதுவே அரசர்களை எதிர்த்து நடந்த உலகின் முதல் மக்கள் புரட்சியாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தைத்தான் இருண்ட காலம் என்று பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆள்வோரின் அக்கிரமங்களை எதிர்த்து புரட்சி நடத்தி ஆளும் நிர்வாக்ததை மக்களே ஏற்றுக் கொண்டனர். வேற்று இனத்தார் என்று முத்திரை குத்தப்பட்ட அவர்கள், உண்மையில் அவர்கள் களப்பிரர் அல்ல. களப்பரர், அதாவது, வேளாண் களத்தில் பணிசெய்தவர்கள்.
மன்னர்களுக்கு எதிரான புரட்சிக்கு பின் இந்த புரட்சித் தலைவர்கள் பல ஊர்களை தலைமையிடமாகக் கொண்டு அந்த பகுதிகளை ஆட்சி செய்தனர். உண்மையான மக்களாட்சியை அவர்கள் நடத்தினார்கள்.
அவர்கள் மக்கள் வரிப்பணத்தை பார்ப்பனருக்கு செலவு செய்யவில்லை. மாறாக, புலவர்களுக்கு பொருள் உதவி செய்து பல தமிழ் இலக்கியங்களை உருவாக்கினார்கள். அத்தகைய ஆட்சியாளர்களை இலங்கை மகாவம்சம் நூல் குறிப்பிட்டுள்ளது. அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள களப்பிரர் குடியரசு தலைவர்களில் முக்கியமானவர்கள்...
1. பாவுத்திரை - திரையன் - (இன்றைய தர்மபுரி)
2. வேங்கடம் - புள்ளி - (இன்றைய திருப்பதி)
3. மிலாடு - காழிமலையன் - (இன்றைய திருக்கோவிலூர்)
4. தொத்தி மலை - வெல்கெழு நல்லிக்கோன் - (இன்றைய தொட்டபெட்டா-ஊட்டி)
5. முதிரமலை - இளங்குமணன் - (இன்றைய பழனி)
6. நடுநாடு - இடக்காலி - (இன்றைய கர்நாடக மத்தியப்பகுதி)
7. எருமையூர் - ஆய் வியங்கோவே -(இன்றைய மைசூர்)
8. இடைகழினான் II
9. அச்சுதாவி கரந்தன்
10. சேடிவல்லவன்
இவர்களுடைய ஆட்சியில் மக்கள் கொண்டாட்டங்களுக்காக புதிய விழாக்களை அறிமுகப்படுத்தினர். பார்ப்பனர்கள் அறிமுகப்படுத்திய மதக் கொண்டாட்டங்களை தடை செய்துவிட்டனர். அவற்றுக்குப் பதிலாக அன்பு நெறி போதித்த சமண மற்றும் பவுத்த மதங்களை ஏற்று கொண்டு, அவை சார்ந்த கொண்டாட்டங்களையும் விழாக்களையும் ஏற்படுத்தினர்.
இவர்களின் ஆட்சி கி.பி 220 தொடங்கி கி.பி 550 வரை சுமார் 300 வருடங்கள் நடந்தது, பெரும்பாலும் கிரேக்கத்தில் நடைபெற்ற நகர அரசாங்கங்களாக இவர்கள் நடத்தினர். பெரிதாக யாரும் அடுத்த நாட்டை பிடிக்க வேண்டும் என்று அலையவில்லை. மக்கள் அமைதியாக வாழ வழிசெய்தனர்.
களப்பிரர்கள் ஆட்சியை ஒழிக்க பார்ப்பனர்கள் செய்த முயற்சிக்கு கி.பி.575ம் ஆண்டில் பலன் கிடைத்தது. கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் களப்பிரர் ஆட்சிக்கு முடிவுகட்டினான். அதைத்தொடர்ந்து, மீண்டும் பார்ப்பனர்கள் பலம்பெறத் தொடங்கினார்கள்.
தமிழகத்தில் வர்ணாசிரம முறை 7-8ஆம் நூற்றாண்டுகளில் வலுவாக காலூன்ற தொடங்கியது. சாமான்யர்களை கதாபாத்திரங்களாக்கி பக்தி இலக்கியங்கள் உருவாகின. ஆனால், அவர்கள் கடவுளுக்கு தொண்டாற்றி கடவுளோடு ஐக்கியமாவதாகவே முடிவுகள் அமைந்தன. கடவுளின் சோதனைகளைத் தாங்கி, கடவுளின் கருணையைப் பெறுவதுபோன்று புராணங்கள் எழுதப்பட்டன.
களப்பிரர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர்தான், சாதிக் குழுக்கள் அடிப்படையில், தமிழகத்தில் ஏராளமான ஆண்ட பரம்பரைகள் உருவாகி இருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது.
மூவேந்தர்கள் என்று இருந்த காலத்திலும், அவர்களுக்கு அடங்காத பல சிறு குறு மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். சாதி சமயங்களற்ற தமிழ்ச்சமூகம் வாழ்ந்த காலமும் இருந்திருக்கிறது. சாதி, சமய சாக்கடை நாற்றமெடுத்த காலமும் இருந்திருக்கிறது.
மக்களுடைய நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். சுயநலத்துக்காகவும், அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் யாருடனும் சண்டையிட்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கத் தயங்காத மன்னர்கள் இருந்திருக்கிறார்கள்.
தனக்கு பிடிக்காத எதிரியை யாருடனும் கூட்டுச் சேர்ந்து கொன்று குவிக்கத் தயங்காத மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment