Saturday, June 06, 2015

மேகி நூடுல்ஸ் மூடுவிழா: நடத்திக் காட்டிய நேர்மையான அதிகாரி பாண்டே!


லக்னோ: இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை கோரி சட்டப் போராட்டம் நடத்தி வென்று காட்டியுள்ளார் ஒரு நேர்மையான  அதிகாரி. இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
அவர் பெயர் வி.கே.பாண்டே. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேந்தவர்.அம்மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிவரும் வி.கே.பாண்டே,  மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். 

மேகி நூடுல்ஸ் இன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளதால் நெஸ்லே நிறுவனம் முடங்கிக்  கிடக்கிறது.
பல லட்சம் குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடியதால் தற்போது அதற்கான விளைவை அனுபவித்து வருகிறது.

ஆரோக்கிய கேடு விளைவித்த  மேகி நூடுல்ஸின் அபாயகரமான முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமை வி.கே.பாண்டே என்பவரையே போய்ச் சேரும். டெல்லியில் மேகி முழுமையாகத்  தடை செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு இந்தத் தடை தொடரும். இதே போல கேரளம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை தீ வைத்து எரித்தும் குப்பையில் கொட்டியும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.  மாநிலங்களில் நெஸ்லே இந்தியா நிறுவனமும் மேகியால் பெரும் சட்டச் சிக்கலில் மாட்டியுள்ளது. அநேகமாக இந்தியாவில் மாநிலங்கள் கடந்து ஒரு உணவுப்பொருளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள விகாரம் மேகி நூடுல்ஸ்தான் என்றால் அது உண்மையே.

இந்த விவகாரம் இவ்வளவு பெரிய சிக்கலாக மாற வி.கே.பாண்டேதான் காரணம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று.

வி.கே.பாண்டே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி ஆவார். 40 வயதான பாண்டே, உ.பி. மாநிலம் பாரபங்கியைச் சேர்ந்தவர். இவர்தான் முதல் முறையாக நெஸ்லே மீது வழக்குப் போட்டு நாட்டின் கவனத்தை ஈர்த்தவர்.

சட்டப் போராட்டம் இவருக்கு ஒன்றும் புதியதில்லை. ஏன் எனில் பாண்டே, இதற்கு முன்பு வட இந்தியாவைக் கலங்கடித்த பிரிட்டானியா கேக், வாஹித் பிரியாணி ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்குப் போட்டு திணறடித்தவர். இவர் போட்ட வழக்கால், தனது  விளம்பரத்தில் இது அசைவ கேக் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிலைக்கு பிரிட்டானியா தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்பு இந்த வாசகத்தை அது கண்ணுக்குத் தெரியாத பிரவுன் நிறத்தில்  போட்டு வந்தது. ஆனால் பாண்டே நடத்திய சட்ட போரட்டத்தால்  சிவப்பு நிறத்தில் போட ஆரம்பித்தது.

அதே போல லக்னோவைச் சேர்ந்த பிரபல பிரியாணி நிறுவனமான வாஹித் பிரியாணி மீதும் வழக்குப்  போட்டவர் பாண்டே. உத்தரப் பிரதேசத்தில் பிரபலமான வாகித் பிரியாணியை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். பிரியாணி பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அந்த பிரியாணி நிறுவன முதலாளிகளுக்கும் சட்டத்தின் வழியே பாடத்தைக் கற்பித்தார்.வாஹித் பிரியாணியில் சேர்க்கப்படும்   நிறத்தில் சர்ச்சை இருப்பதாக பிரச்னையை கிளப்பினார் பாண்டே. தற்போது பிரியாணி நிறுவனம் கோர்ட்டுக்கு நடையாய் நடந்துகொண்டு இருக்கிறது.விரைவில் இதிலும் வெற்றியே பெறப்போகிறார் பாண்டே.

அடுத்து மேகி நூடுல்ஸ். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதிதான் மேகிக்கு பிரச்னை கிளம்பியது. சில சாம்பிள் பாக்கெட்களை வாங்கி வந்த பாண்டே,  அதை சோதனை செய்தார். பின்னர் அதை மேல் சோதனைக்கு அனுப்பி வைத்தார்.

தயாரிப்பில், நெஸ்லே உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததைக் கண்டுபிடித்தார். கோரக்பூரில் நடந்த சோதனையின்போது அதிக அளவிலான எம்.எஸ்.ஜி. கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நெஸ்லே இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாண்டே. ஆனால் இந்த நோட்டீஸை எதிர்த்து அப்பீல் செய்தது நெஸ்லே. ஆனாலும் ஓய்ந்துவிடாமல் பாண்டே, மீண்டும் ஒரு நோட்டீஸ் விட்டார். இதனால்  அதிர்ந்தது நெஸ்லே நிறுவனம்.

அதனையடுத்து கொல்கத்தா ஆய்வகத்தில் சோதனை செய்ய அது முன்வந்தது. இதற்காக  1000 ரூபாய் கட்டணத்தையும் கட்டியது. கொல்கத்தா ஆய்வகத்திலும் மேகியின் ரகசியம்  உடைந்தது. மேலும் இந்த சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் கடுமையானது.

இதன் பிறகுதான் உ.பி. அரசு மேகிக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியது. அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம்,தமிழ்நாடு என்று மேகி தடை விதிக்கும் மாநிலங்கள் வரிசையாக சேர்ந்து கொண்டிருக்கின்றன. இதனையடுத்து இன்று நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. 
  •      

No comments: