Thursday, June 04, 2015

“சங்கீதம் வரம்... இங்கிதம் வரணும்!”

''பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''
''1962-ல் ஆந்திர மாநிலத்தில் எங்கேயோ ஒரு சின்ன ஊர்ல நான் பாடினதைக் கேட்டுட்டு,
'நீ நல்லாப் பாடுற தம்பி. சினிமாவுல பாடலாம்’னு முதன்முதலா சொன்னவங்க ஜானகியம்மா. என் மேல நம்பிக்கை வைச்ச முதல் மனுஷி. அவங்ககிட்ட நான் நிறையக் கத்துக்கிட்டேன். அவங்க பாடினது மாதிரி ரொம்பக் கஷ்டமான பாடல்களை இந்தியாவுல வேற யாராவது பாடியிருப்பாங்களானு சந்தேகமா இருக்கு!
ரிக்கார்டிங் தியேட்டர்லயே ரெண்டு பேரும் நிறையத் தடவை சண்டை போட்டிருக்கோம். அந்த உரிமையை, அவங்களோட நட்பு எனக்குக் கொடுத்திருக்கு. நான் சும்மானாச்சுக்கும் சண்டை போடுவேன். ஆனா அவங்க, சீரியஸா கையில கிடைக்கிறதை எல்லாம் தூக்கி என்னை அடிச்சிருக்காங்க. நான் அந்தளவுக்கு அவங்களைக் கிண்டல் பண்ணுவேன். அவங்களுக்கு நான் அவ்வளவு செல்லம்.
ஏதாவது ஜோக் சொன்னா, அரை மணி நேரம் சிரிச்சுட்டே இருப்பாங்க. அப்புறம் ஸ்டுடியோல எல்லாருக்கும் கேட்கிற மாதிரி மைக்ல, 'இந்தப் பையனுக்கு நான் நல்லாப் பாடுறதுல இஷ்டம் இல்லை. ஜோக் சொல்லிச் சிரிக்கவெச்சு எனக்குத் தொண்டை கட்டிக்கிச்சு’னு சொல்வாங்க.
ஒரு தடவை, ஹைதராபாத்ல எனக்குப் பாராட்டு விழா நடந்தது. அதுக்கு அவங்க வர்றேன்னு டேட் கொடுத்திருந்தாங்க. ஆனா, தேதியைத் தப்பாக் குறிச்சிட்டாங்க போல. நிகழ்ச்சி முடிஞ்சு ரெண்டு நாளுக்குப் பிறகு எனக்கு ஆச்சரிய அதிர்ச்சி கொடுக்கணும்னு நினைச்சு, கொச்சின்ல இருந்து ஹைதராபாத் வந்து நிகழ்ச்சி நடந்த தியேட்டருக்கு வந்திருக்காங்க. அங்கே ஈ, காக்கா இல்லை. வாட்ச்மேன்கிட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டாங்க. ஹைதராபாத்ல அவங்க தோழி வீட்லயே தங்கிட்டாங்க.
மறுநாள், நான் எதேச்சையா அவங்களுக்கு போன் பண்ணிப் பேசினா, அழ ஆரம்பிச்சிட்டாங்க. 'அந்த நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸா வந்து உன்னைப் பாராட்டணும்னு திட்டம் போட்டேன். ஆனா, முடியாமப்போச்சு. இப்ப எங்க இருக்க? உன்னை ஒரு தடவை பார்க்க முடியுமா?’னு கேட்டாங்க. உடனே ஓடிப் போய் அவங்களைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் திரும்ப அழ ஆரம்பிச்சிட்டாங்க.
ஒருமுறை, நானும் சித்ராவும் டூயட் பாட்டு ஒண்ணு பாடிட்டு இருந்தோம். அடுத்து இன்னொரு பாட்டு பாட அவங்க வந்துட்டாங்க. வாய்ஸ் ரூமுக்குள் வந்து, 'இங்க நான் வரலாமா?, நீங்க பாடும்போது நான் பார்க்கலாமா?’னு கேட்டுட்டு உட்கார்ந்துட்டாங்க. சித்ராவுக்கோ தயக்கம். 'ஐயோ..! அம்மா இருக்கும்போது நான் எப்படிண்ணா பாட முடியும்? டென்ஷனா இருக்குமே...’னு மிரண்டாங்க. 'அவங்க நம்ம அம்மா மாதிரி. அவங்க முன்னால நீ பாடுறதே பெரிய பாக்கியம். தைரியமாப் பாடு’னு சொன்னேன். பாடினோம். டேக் ஓ.கே. ஜானகியம்மா, சித்ராவைக் கட்டிப்புடிச்சு, 'உன் மாதிரி எனக்கொரு பெண் குழந்தை பிறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். எவ்வளவு அழகாப் பாடுற தாயே’னு ஆசீர்வாதம் பண்ணினாங்க. ரொம்ப நல்ல மனசு. அந்த மனசுதான் ஜானகியம்மா!''
ஃபிர்தோஸ் ராஜகுமாரன், ஃபேஸ்புக்.
''இன்றைய இளம் பாடகர்களின் ப்ளஸ், மைனஸ் என்ன?''
''இளம் பாடகர்களுக்கு மட்டும் இல்லை, எல்லாப் பாடகர்களுக்குமே ப்ளஸ், மைனஸ் இருக்கும். அதனால இன்றைய ட்ரெண்டுக்கு இளம் பாடகர்கள் எதிர்கொள்ளும் ப்ளஸ், மைனல் பத்தி மட்டும் சொல்றேன். ப்ளஸ்... வெஸ்டர்ன் மியூசிக்கோ, இண்டியன் மியூசிக்கோ நிறையப் பேர் முறையாக் கத்துக்கிட்டு வர்றாங்க. ஆனால், வெரைட்டி வெரைட்டினு சொல்லி இசையமைப்பாளர்கள் ரெண்டு படத்துல வாய்ப்பு தர்றது, அப்புறம் இன்னொரு புது வாய்ஸுக்குப் போறதுனு யாருக்குமே நீண்ட நாள் பாட அவசாகம் கிடைக்காதது மைனஸ்.
நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி ரெண்டு ஆண், ரெண்டு பெண் பாடகர்களைத் தேர்ந்தெடுத்து நிறைய வாய்ப்புகள் தரணும். அப்பதான் அவங்க வாய்ஸ் கேட்கிறவங்களுக்குப் பழக்கப்படும்; புரியும். அதுக்கு அவங்களுக்கு சீனியர்ஸோட சேர்ந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்புகளைத் தரணும். அப்பதான் அவங்களால் தங்களை பாலிஷ் பண்ணிக்க முடியும். நிறைய நாள் ஃபீல்டுல இருக்கலாம்.
ஒரே படத்துல நாலு பாட்டுனா, நாலு சிங்கர்ஸ் பாடுறாங்க. நிறையப் பேருக்கு வாய்ப்பு தர்றது நல்ல விஷயம். ஆனா, அந்த மாதிரி எத்தனை படங்கள் எத்தனை பேருக்கு உங்களால் வாய்ப்பு தந்துட முடியும்? இதெல்லாம் இளம் சிங்கர்ஸோட மைனஸ் பாயின்ட்.
கா.அருண்மொழி, தஞ்சாவூர்.
''உங்கள் ஸ்பெஷாலிட்டிகளில் முக்கியமானது ஸ்பஷ்டமான உச்சரிப்பு. இதை எப்படிப் பயின்றீர்கள்?''
''மக்கள் நம்ம மேல, நம்ம உச்சரிக்கிற வார்த்தை மேல மரியாதை வெச்சிருக்காங்க. அதுக்கு நாம மரியாதை தரணுமே. அதுதான் என்னை ஓடவைக்குது! அந்த உச்சரிப்புல சின்ன தப்புகூட வந்திரக் கூடாதுனு நான் தவியாத் தவிப்பேன்.
ஒரு தெலுங்குப் படம். லைவ் ரிக்கார்டிங். கே.எஸ்.ஆர்.தாஸ்தான் டைரக்டர்; அவரே எடிட்டரும்கூட.  சத்யம் சார் மியூசிக். ஒரு இடத்துல நல்ல டேக்ல, 'ஒக்க கண்ட...னு’ வாய்ஸ் உள்ள போயிடும். டேக் கட் பண்ணாம முடிச்சிட்டோம். டைரக்டரும் ஓ.கே. சொல்லிட்டார். 'சார்... அந்த ஒரு இடத்துல வாய்ஸ் போயிடுச்சு. இன்னொரு டேக் பாடுறேனே’னு கேட்டேன். 'டோட்டல் எக்ஸ்பிரஷன் நல்லா இருந்துச்சு. நானே எடிட்டரா இருக்கிறதால அதை ஃபிலிம்ல கட் பண்ணி பேஸ்ட் பண்ணிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க’ன்னார். அப்பல்லாம் ஃபிலிம்ல டிரான்ஸ்ஃபர் பண்ணிதான் எடிட் பண்ணுவாங்க. அதனால நானும் தைரியமா இருந்துட்டேன். ஆனா, அவர் மறந்துட்டார். படத்துலயும் அப்படியே வந்துடுச்சு. இன்னைக்கு அந்தப் பாட்டை யார் பாடினாலும் நான் பண்ணின அந்தத் தப்போடத்தான் பாடுறாங்க. அதை ஏதோ எக்ஸ்பிரஷனுக்காக நான் பண்ணினதுனு நினைக்கிறாங்க. அது தப்பு இல்லையா... பரம பாவம் இல்லையா? 'அப்படிப் பாடாதீங்க. அது மிஸ்டேக்’னு இப்பவும் சொல்லிட்டு இருக்கேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு முன்னைவிட உச்சரிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்!''
தாமரைச் செல்வி, சென்னை.
''எம்.எஸ்.வி-யின் இசையில் பாடிய அனுபவம் குறித்து..?''
''அவர் என் மானசீகத் தந்தை. அவர்கிட்ட நான் பாடிய அனுபவங்களைப் பேசினா, ஆயிரம் பக்கங்களுக்கு மேல வேணும். ஒரே ஒரு உதாரணம் சொல்றேன்.
'நிழல் நிஜமாகிறது’ படத்துக்காக நானும் வாணி ஜெயராம் அம்மாவும் 'இலக்கணம் மாறுதோ...’ பாட்டு பாடிட்டு வீட்டுக்குப் போயிட்டோம். ராத்திரி 11 மணிக்கு எம்.எஸ்.வி. சார் வீட்ல இருந்து போன். அண்ணி பேசினாங்க. 'என்னப்பா உங்க அண்ணா வந்ததுல இருந்து அவர் மனசு எங்கேயோ இருக்கு. கண்ணுல தண்ணி வருது. ஒண்ணும் பேச மாட்டேங்கிறார்’னாங்க. 'ரொம்ப அழகான பாட்டும்மா. அண்ணா அழகாப் பண்ணியிருந்தாங்க’னேன். 'நீயே பேசுப்பா’னு போனை அண்ணாகிட்ட கொடுத்தாங்க. என்னை அண்ணா ஒரு நாளும் 'பாலு’னு கூப்பிட்டதே கிடையாது. 'நான் விஸ்வநாதன் பேசுறேன். என்ன பாலு அவர்களே... எப்படி இருக்கீங்க?’னுதான் பேசுவாங்க. அன்னைக்கு போனை கொடுத்ததும், 'பாலு கண்ணா’னு சொன்னாங்க. எனக்கு ரொம்பச் சந்தோஷமாகிருச்சு. 'அந்தப் பாட்டோட அனுபவத்துல இருந்து வெளியே வரக் கஷ்டமா இருக்கு. ரெண்டு பேரும் என் பாட்டுக்கு அவ்வளவு அழகூட்டிப் பாடினீங்களே... உங்களுக்கு நான் எப்படிப்பா நன்றிக்கடன் தீர்க்க முடியும்’னாங்க. அந்த வார்த்தைகளுக்கு மேல எனக்கு என்ன விருது வேணும்... சொல்லுங்க! அவரோட கோபத்துல, குழந்தைத்தனத்துல, எங்களைச் சொந்தம் கொண்டாடுற பாங்குலனு... அவரோட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஆனந்தம்தான்.
இப்பக்கூட யாராவது வந்து அவரோட பாட்டைப் பத்தி பேசினா, மேல கையக்காட்டி 'அதெல்லாம் கடவுள் கொடுத்தது. டீம் வொர்க். நல்ல கவிஞர்கள்  இருந்தாங்க. அழகான இசைக் கலைஞர்கள் இருந்தாங்க. நல்ல பாடகர்கள் இருந்தாங்க’னு சொல்வாரே தவிர, 'இது நான் பண்ணினேன். என்னால்தான் வந்தது’னு ஒருநாளும் பேசினது கிடையாது.
'கடவுள் யார் யாருக்கு என்ன தரணும்னு ஏற்கெனவே எழுதி வெச்சிருப்பார். சில பேருக்கு சங்கீதம் கொடுப்பாங்க. ஆனா, இங்கிதம் என்பதை நாமதான் டெவலப் பண்ணிக்கணும்’பார். அது எத்தனை பெரிய உண்மை!''
மகேஷ், வேலூர்.
''ஒரே நாளில் உங்கள் குரலில் 10 பாடல்கள் பதிவான சம்பவங்கள் உண்டாமே.... அந்த 'ஒன்-டே’ அனுபவங்கள் பற்றி..!?''
''ஒரே நாள்ல 10 பாட்டு சர்வசாதாரணமா நிறையத் தடவை பாடியிருக்கேன். 1978-ல் ஒரு சமயம், 'சுசிலாம்மாவும் நானும் அமெரிக்கா நிகழ்ச்சிக்காக ரெண்டு மாசம் இந்தியாவுல இருக்க மாட்டோம். அதுக்கேத்த மாதிரி ரிக்கார்டிங் பிளான் பண்ணிக்கங்க’னு எல்லா இசையமைப்பாளர்களிடமும் சொல்லிட்டோம். நாளைக்கு அமெரிக்கா கிளம்புறோம்னா, இன்னைக்கு காலையில 9 மணிக்கு ஆரம்பிச்சு சின்னச் சின்ன பிரேக் விட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு முடிச்சப்ப, அது... 19-வது பாட்டு. அதில் ஏறத்தாழ 12 பாடல்கள் சுசீலாம்மா என்னோட சேர்ந்து பாடினாங்க.
அதே போல பெங்களூரூர்ல ஒரே தியேட்டரில் 16 பாட்டு பதிவு  பண்ணினோம். மும்பையில் ஒருமுறை 16 பாட்டுனு இப்படி நிறைய நடந்திருக்கு. என் எனர்ஜி லெவலை எப்படிக் காப்பாத்திக்கிட்டு பாடினேன்?, 16-வது பாட்டைக்கூட முதல் பாட்டு மாதிரி பாடியிருக்கேன்னு என் உழைப்பை நினைச்சு பெருமிதப்படும் தருணங்கள் அவை!''
பழனிச்சாமி, மானாமதுரை.
 ''டி.ராஜேந்தர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் தங்கத் தட்டு விருது பெற்றவை. அவருடைய இசை ஆளுமையைப் பற்றி சொல்லுங்களேன்?''
 ''டி.ஆர்., ஒரு குழந்தை மனசுக்காரர். அவர் ஒரு படத்தில் எல்லாமே பண்ணுவார். அவர் ஒரு நல்ல பாடலாசிரியர். மனசுல உள்ள உணர்ச்சிகளை அழகான வார்த்தைகள்ல கொண்டுவர்றதுல வித்தகர். அவருக்கு மீட்டரே இருக்காது. அவருக்குத் தெரிஞ்ச பாணியில அழகா கம்போஸ் பண்ணுவார். அவரிடம் எனக்குப் பிடிச்சது, அவருக்கு என்ன தெரியுமோ அதைத் துணிச்சலாப் பண்றதுதான்.
அவருக்கு, சிவமணி டிரம்ஸ்னா ரொம்ப இஷ்டம். என்ன மாதிரியான பாட்டா இருந்தாலும் அதில் சிவமணி டிரம்ஸ் இருக்கணும்னு நினைப்பார். ஆனா, டி.ஆர். கொடுக்கும் ஒரு சிச்சுவேஷனுக்கு சிவமணி 10 முறை 10 வெரைட்டிகள்ல வாசிப்பார். 'சிவமணி, எனக்குத் தெரிஞ்ச அந்த ஒரே ஒரு பீட்டு இருக்குப் பாரு... நம்ம தமிழ்நாட்டு பீட். அதுதான் வேணும். நீ வேற ஏதாவது வாசிச்சா, அது என் பாட்டு இல்லைனு நினைப்பாங்க. எனக்கு என்ன தெரியுமோ, அதை மட்டும் சொல்றேன். அதை மட்டும் வாசி போதும்’பார் டி.ஆர்.
நான்னா அவருக்கு அவ்வளவு அன்பு. ஒருமுறை என் மனைவிகிட்ட, 'அம்மா நான் மட்டும் பொண்ணாப் பிறந்திருந்தா உங்க கணவரைக் கடத்திட்டுப் போயிருந்திருப்பேன். உங்க ஹஸ்பெண்டு மேல அந்தளவுக்குக் காதல்’னு சொல்லியிருக்கார். அவர் பண்ண வேலைகள் எல்லாம் உண்மை. அதான் எல்லாருக்கும் அவரையும் அவர் படைப்புகளையும் பிடிச்சிருக்கு

No comments: