Monday, June 08, 2015

உலகின் குட்டி நாட்டு கிரிக்கெட் அணி இது...!

லகின் மிகச்சிறிய நாடு வாட்டிகன். கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவரின் தலைமையகம் இதுதான்.
போப் ஆண்டவருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த குட்டி நாட்டின் நிர்வாகமும் போப் ஆண்டவரின் கையில்தான்.110 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 822 பேர்தான். ஆனால் இந்த குட்டி நாட்டிலும் ஒரு கிரிக்கெட் அணி இருப்பதுதான் ஆச்சர்யமானது.
ஐரோப்பாவை பொறுத்தவரை இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது. வாட்டிகன் இருப்பதோ இத்தாலி தலைநகரான ரோம் நகருக்கு மத்தியில். இத்தாலி, கிரிக்கெட் வாடை என்பதே அறவே இல்லாத நாடு.

இந்நிலையில்தான் வாட்டிகன் நகரில் கடந்த 2014ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த அணிக்கு 'செயின்ட். பீட்டர்ஸ் கிரிக்கெட் அணி' என்று பெயர் சூட்டப்பட்டது. வாட்டிகன் நகரில் தங்கி மதபோதனை வகுப்புகள் பயிலும் இளம் பாதிரியார்கள், இந்த அணியில் சேர்ந்தனர். இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள்தான் இந்த அணியில் சேர முதலில் ஆர்வம் காட்டினர். தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாட்டவர்களும் செயின்ட். பீட்டர்ஸ் கிரிக்கெட் அணியில் விளையாடுகின்றனர்.
இந்திய அணி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது போல், இந்த குட்டி நாட்டு அணியும் வெளிநாடுகளுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வாட்டிகன் அணியினர்,  இங்கிலாந்து சர்ச் அணி மற்றும் ராயல் பிரிட்டிஷ் அரச குடும்ப அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
அடுத்து இந்த அணியினர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.                  

Saturday, June 06, 2015

My India..

டெல்லியை ஆண்ட பால்பனும் அலாவு​தீன் கில்ஜியும், பொதுமக்கள் முன்னி​லையில் யானையை வைத்து மரண தண்ட​னையை நிறைவேற்றி இருக்கின்றனர். முகலாயப் பேரரசர் ஹுமாயூன், அவரது ஆட்சியைப் பற்றி ஓர் இமாம் தவறாக விமர்சித்ததற்காக, அவரை யானைக் காலால் மிதித்துக் கொல்ல தண்டனை அளித்து இருக்கிறார். முகலாயப் பேரரசரான ஜஹாங்கீர், யானையை வைத்து மரண தண்டனை வழங்கியதைப் பற்றி பிரெஞ்சுப் பயணி பெர்னியர் தனது குறிப்பில் பதிவுசெய்துள்​ளார். முகலாயர் ஆட்சியில் யானைகளுக்கு தந்தங்களில் இணைக்கப்பட்ட கூர்மையான தகடுகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளை துண்டாக்குவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் பிற்பாதி காலம் வரை நீடித்த இந்தப் பழக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் வளர்ச்சியால் குறைந்து இறுதியில் முற்றிலும் கைவிடப்பட்டது.
அது போலவே, ஒருவரது கழுத்தைக் கயிற்றால் சுற்றி கயிற்றின் இரு முனைகளால் கால் கட்டை விரல்கள் இரண்டையும் கட்டிவிடுவர். இதனால், நிமிர முடியாமல் குனிந்த நிலையிலேயே இருக்க வேண்டி இருக்கும். இந்த நிலையில், முதுகின் மேல் ஒரு கல்லை வைத்துவிடுவர். இந்தத் தண்டனையின் பெயர் அண்ணாந்தாள். தேவதாசிப் பெண்களுக்கு இதுபோன்ற கொடூரத் தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது என்று பேராசிரியர் சிவசுப்ரமணியன் தனது 'தேவரடியார்களும் அடிமை முறையும்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். பண்டைய இந்தியாவின் தண்டனை முறைகளைப்பற்றி ஆராய்ந்த விஜய் சோமன், தண்டனைகளைத் தீர்மானிப்பதில் மதம் முக்கியப் பங்கு வகித்து இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மத குருமார்கள், துறவிகள் ஆகியோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ள அதுவே காரணம் என்கிறார்.
மராத்தியர் ஆட்சிக் காலத்திய தண்டனை முறை​களைப் பற்றிய அரிய தகவல்களைத் தருகிறது மோடி ஆவணம். தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு மராத்திய மன்னர்கள் ஏறத்தாழ 180 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளனர். மராத்தியர் ஆட்சியில் அரசு ஆவணங்கள் யாவும் மராத்திய மொழியில் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதும்போது அவர்கள் பயன்படுத்திய எழுத்து முறைக்கு 'மோடி எழுத்து’ என்று பெயர், அதனால் இவை 'மோடி ஆவணம்’ என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மராத்திய ஆட்சியில் பயன்படுத்தப்பட்டது ஆர்ச்சைக் மோடி என்று அழைக்கப்படுகிறது. இந்த வடிவம் சிவாஜி காலத்தில் இருந்த மோடி வடிவமாகும். தஞ்சைக்கு வந்த பிறகு இந்த எழுத்து முறையில் மராத்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் கலந்து, மோடி எழுத்து உருவாகி இருக்கிறது. 1858-ம் ஆண்டுக்குப் பிறகு, தஞ்சையில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேய அரசு, மோடி ஆவணங்களை மூட்டையாகக் கட்டிக் கிடப்பில் போட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு இந்த அரிய ஆவணங்கள் முறையாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
1,700 மூட்டைகளுக்கும் மேலாக இருந்த ஆவணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு 59 தொகுதிகளாக தமிழில் மொழி​பெயர்க்கப்பட்டுள்ளன. 1989-ம் ஆண்டு 'தஞ்சை மராட்டிய மன்னரின் மோடி ஆவணங்கள்’ எனும் தலைப்பில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இதன் பதிப்பாசிரியர் முனைவர் பா.சுப்பிரமணியன். இந்த அரிய புத்தகத்தில், மராத்தியர் காலத்தில் நிலவிய தண்டனை முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, சிலவற்றைப் பாருங்கள்... 'பொய் சாட்சி சொன்னவரை தண்டிப்பதற்காக அவரது உடல் முழுவதும் கறுப்பு, வெள்ளைப் புள்ளிகளை இட்டு, கழுதையின் மேல் வாலின் பக்கம் முகமாக உட்காரவைத்து, அவர் கழுத்தில் எருக்கம் பூ மாலைகளைப் போட்டு, குற்றத்தின் விவரத்தைச் சொல்லி, தமுக்கு அடித்துக்கொண்டு பிரசித்தமான வீதிகளில் பட்டணம் முழுவதும் சுற்றிவர வேண்டும் எனத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. ராஜமால்படி களிமோடு என்னும் ஊரில் இருக்கும் வீராயி என்பவள் செம்பு திருடினாள் என அவளைச் சாவடியில் அடைத்தனர். அவளுடைய கழுத்தில் செம்பைக் கட்டி இன்ன குற்றம் செய்தாளென்று வாசித்துக்கொண்டு நான்கு வீதிகளிலும் தண்டோராவுடன் சுற்றவைத்து, ஒவ்வொரு வீதியிலும் பிரம்பால் மூன்று அடி வீதம் அடித்து மூன்று வாசல்களையும் காட்டிவிட்டு, கோட்டைக்கு வெளியே விரட்டிவிட்டது. சொந்தக்காரனிடம் செம்பு கொடுக்கப்பட்டது.’
ஆயுத சாலையில் ஒரு தச்சன் வேலை செய்துவிட்டு வீட்டுக்குப் போகையில் பாராக்காரன் அவனுடைய வேஷ்டியை உதறிப் பார்த்தபோது, ஒரு பித்தளைத் தகடு வேஷ்டியில் இருந்தது. முறையாகக் காவல் பணி செய்யாமல் அஜாக்கிரதையாக இருந்த குற்றத்துக்காக பாராகாரனுக்கு ஆறு தேங்காய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜான் பைஃப் என்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் ரெசிடென்ட் பிரதிநிதி தஞ்சையில் ஆற்று வெள்ளத்தைப் பார்க்கப் பயணித்தார். அப்போது, தேவதாசியின் மகள் 'நாகு’ என்பவள் வண்டியில் அமர்ந்து ரெசிடென்டின் யானைக்கு எதிராகப் பயணித்தாள். இதன் பொருட்டு அவளுக்கு ஒரு சக்கரம் இரண்டு பணம் தண்டம் விதிக்கப்பட்டது. பொய், புரட்டு செய்தவனுக்கு காலில் விலங்கு போட்டு ஒரு வருஷம் வரை மராமரத்து வேலை செய்ய வைத்து பிறகு, முழங்காலுக்குக் கீழே பிரம்பால் அடித்து விரட்டப்பட்டு இருக்கிறான்.
மோடி ஆவனத்தில் காணப்படும் சான்றுகள் தமிழகம் குறித்து முற்றிலும் வேறுவிதமான சித்திரம் ஒன்றை நமக்குத் தருகின்றன. மோடி ஆவணங்கள் இன்னும் முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. ஒருவேளை, அவை யாவும் பதிப்பிக்கப்பட்டால், கடந்த காலத்தில் புதையுண்டு போயிருந்த பல உண்மைகள் வெளிவரும். மோடி ஆவணங்களைப் போலவே மராத்தியர்களின் காலத்தை அறிய உதவுகிறது மெக்கன்சி சுவடிகள். சென்னை மாகாணத்தின் முதல் தலைமை நில ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்ட காலின் மெக்கன்சி, பணி நிமித்தமாகச் சென்ற இடங்களில் இருந்த சுவடிகளையும், கல்வெட்டுக்​களையும், நாணயங்களையும், நாட்டுப்புறக் கதைகளையும், வழிபாட்டு முறைகளையும், வாழ்வியல் நெறிகளையும் தொகுத்து இருக்கிறார். இதற்காக, அவரோடு சமஸ்கிருதம் தெலுங்கு, சமணம் அறிந்த பண்டிதர்கள் உடன் சென்று இருக்கின்றனர். கிராமங்களில் இருந்து அவர் சேகரித்த ஏடுகளை முறையாகப் பகுத்து முக்கியச் செய்திகளை குறிப்புகளாக எழுதிவைத்து இருக்கிறார். மேலும், தான் செல்லும் இடங்களில் இருந்த சிற்பங்கள், ஓவியங்கள் குறித்தும் கோட்டோவியங்கள் தீட்டிவைத்து இருக்கிறார். திப்புவுக்கு எதிராகப் போரிட்டவர் மெக்கன்சி. ஆனாலும், மற்ற வெள்ளை அதிகாரிகளைப் போல இல்லாமல், இந்தியாவின் அரிய கலைச்செல்வங்களையும் ஏடுகளையும் பாதுகாப்பதில் அக்கறையாக இருந்திருக்கிறார். அவர் சேமிப்பில் இருந்து லண்டனுக்கு எடுத்துச் சென்றவை போக எஞ்சியவை, சென்னையில் உள்ள அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நமக்குக் கிடைத்துள்ள தமிழ்ச் சுவடிகளுள் (தாள்) மெக்கன்சி தொகுத்துவைத்திருக்கும் தாள் சுவடிகள்தான் பெரும்பான்மையாக இருக்கின்றன என்று, முனைவர் ம.ராசேந்திரன் தனது 'கர்னல் காலின் மெக்கன்சி’ நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். கொலை செய்த, கொள்ளை அடித்த கைதிகளைத் தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட தண்டனைகள் அரசியல் கைதிகளுக்குப் பொருந்தாதவை என்று மனித உரிமை ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இந்தியத் தண்டனைகளில் மிகவும் மோசமானது தூக்குத் தண்டனை. இன்று, உலகெங்கும் மரண தண்டனைக்கு எதிராக மனித உரிமையாளர்கள் போராடுகின்றனர். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரண தண்டனை விதிக்கப்படுவது இல்லை.
96 நாடுகள் அதிகாரப்பூர்வமாக மரண தண்டனையை விலக்கி விட்டன. மரண தண்டனையை அதிகம் பயன்படுத்துவது அரபு நாடுகளும், சீனாவும்​தான். சிங்கப்பூர் இதில் முதல்இடம் வகிக்கிறது. மரண தண்டனையைக் கைவிட வேண்டும் என்பது குறித்து இந்தியாவிலும் தொடர் இயக்கங்கள் நடக்கின்றன. ஒரு நாடு முன்னேறி இருப்பதன் அடையாளம் அங்கு குற்றங்கள் குறைந்து இருப்பதுதான். ஆனால், இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் அதி கமாகிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, பெண் களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. வெளியே தெரியவருபவை குறைவே. நீதிமன்றத்தை நாடிச் செல்வதும் மிகக் குறைவுதான். குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதற்கே பல தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியே போனாலும் பணம், செல்வாக்கு, பதவி போன்றவை வழக்கின் போக்கைத் திசைதிருப்பி விடுகின்றன. பல வழக்குகளில் தீர்ப்பு வருவதற்கு பத்துப் பதினைந்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். மறுக்கப்படும் நீதி சாமான்ய மனிதன் மனதில் ஆழ மான வேதனையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் கடந்த காலங்களில் நீதி எனப்படுவது, சட்டத்தால் மட்டும் உருவாக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல் தனி மனிதன் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படை அறமாகவும் இருந்தது. இன்று, தனி மனிதனும் தனது அறத்தைக் கைவிட்டுவிட்டான். நீதி அமைப்புகளும் சாமான்ய மனிதனைக் கைவிட்டு விட்டன என்பது ஆழ்ந்த கவலை தரும் உண்மை.

மேகி நூடுல்ஸ் மூடுவிழா: நடத்திக் காட்டிய நேர்மையான அதிகாரி பாண்டே!


லக்னோ: இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை கோரி சட்டப் போராட்டம் நடத்தி வென்று காட்டியுள்ளார் ஒரு நேர்மையான  அதிகாரி. இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
அவர் பெயர் வி.கே.பாண்டே. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேந்தவர்.அம்மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிவரும் வி.கே.பாண்டே,  மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். 

மேகி நூடுல்ஸ் இன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளதால் நெஸ்லே நிறுவனம் முடங்கிக்  கிடக்கிறது.
பல லட்சம் குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடியதால் தற்போது அதற்கான விளைவை அனுபவித்து வருகிறது.

ஆரோக்கிய கேடு விளைவித்த  மேகி நூடுல்ஸின் அபாயகரமான முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமை வி.கே.பாண்டே என்பவரையே போய்ச் சேரும். டெல்லியில் மேகி முழுமையாகத்  தடை செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு இந்தத் தடை தொடரும். இதே போல கேரளம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை தீ வைத்து எரித்தும் குப்பையில் கொட்டியும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.  மாநிலங்களில் நெஸ்லே இந்தியா நிறுவனமும் மேகியால் பெரும் சட்டச் சிக்கலில் மாட்டியுள்ளது. அநேகமாக இந்தியாவில் மாநிலங்கள் கடந்து ஒரு உணவுப்பொருளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள விகாரம் மேகி நூடுல்ஸ்தான் என்றால் அது உண்மையே.

இந்த விவகாரம் இவ்வளவு பெரிய சிக்கலாக மாற வி.கே.பாண்டேதான் காரணம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று.

வி.கே.பாண்டே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி ஆவார். 40 வயதான பாண்டே, உ.பி. மாநிலம் பாரபங்கியைச் சேர்ந்தவர். இவர்தான் முதல் முறையாக நெஸ்லே மீது வழக்குப் போட்டு நாட்டின் கவனத்தை ஈர்த்தவர்.

சட்டப் போராட்டம் இவருக்கு ஒன்றும் புதியதில்லை. ஏன் எனில் பாண்டே, இதற்கு முன்பு வட இந்தியாவைக் கலங்கடித்த பிரிட்டானியா கேக், வாஹித் பிரியாணி ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்குப் போட்டு திணறடித்தவர். இவர் போட்ட வழக்கால், தனது  விளம்பரத்தில் இது அசைவ கேக் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிலைக்கு பிரிட்டானியா தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்பு இந்த வாசகத்தை அது கண்ணுக்குத் தெரியாத பிரவுன் நிறத்தில்  போட்டு வந்தது. ஆனால் பாண்டே நடத்திய சட்ட போரட்டத்தால்  சிவப்பு நிறத்தில் போட ஆரம்பித்தது.

அதே போல லக்னோவைச் சேர்ந்த பிரபல பிரியாணி நிறுவனமான வாஹித் பிரியாணி மீதும் வழக்குப்  போட்டவர் பாண்டே. உத்தரப் பிரதேசத்தில் பிரபலமான வாகித் பிரியாணியை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். பிரியாணி பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அந்த பிரியாணி நிறுவன முதலாளிகளுக்கும் சட்டத்தின் வழியே பாடத்தைக் கற்பித்தார்.வாஹித் பிரியாணியில் சேர்க்கப்படும்   நிறத்தில் சர்ச்சை இருப்பதாக பிரச்னையை கிளப்பினார் பாண்டே. தற்போது பிரியாணி நிறுவனம் கோர்ட்டுக்கு நடையாய் நடந்துகொண்டு இருக்கிறது.விரைவில் இதிலும் வெற்றியே பெறப்போகிறார் பாண்டே.

அடுத்து மேகி நூடுல்ஸ். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதிதான் மேகிக்கு பிரச்னை கிளம்பியது. சில சாம்பிள் பாக்கெட்களை வாங்கி வந்த பாண்டே,  அதை சோதனை செய்தார். பின்னர் அதை மேல் சோதனைக்கு அனுப்பி வைத்தார்.

தயாரிப்பில், நெஸ்லே உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததைக் கண்டுபிடித்தார். கோரக்பூரில் நடந்த சோதனையின்போது அதிக அளவிலான எம்.எஸ்.ஜி. கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நெஸ்லே இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாண்டே. ஆனால் இந்த நோட்டீஸை எதிர்த்து அப்பீல் செய்தது நெஸ்லே. ஆனாலும் ஓய்ந்துவிடாமல் பாண்டே, மீண்டும் ஒரு நோட்டீஸ் விட்டார். இதனால்  அதிர்ந்தது நெஸ்லே நிறுவனம்.

அதனையடுத்து கொல்கத்தா ஆய்வகத்தில் சோதனை செய்ய அது முன்வந்தது. இதற்காக  1000 ரூபாய் கட்டணத்தையும் கட்டியது. கொல்கத்தா ஆய்வகத்திலும் மேகியின் ரகசியம்  உடைந்தது. மேலும் இந்த சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் கடுமையானது.

இதன் பிறகுதான் உ.பி. அரசு மேகிக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியது. அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம்,தமிழ்நாடு என்று மேகி தடை விதிக்கும் மாநிலங்கள் வரிசையாக சேர்ந்து கொண்டிருக்கின்றன. இதனையடுத்து இன்று நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. 
  •      

Thursday, June 04, 2015

“சங்கீதம் வரம்... இங்கிதம் வரணும்!”

''பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''
''1962-ல் ஆந்திர மாநிலத்தில் எங்கேயோ ஒரு சின்ன ஊர்ல நான் பாடினதைக் கேட்டுட்டு,
'நீ நல்லாப் பாடுற தம்பி. சினிமாவுல பாடலாம்’னு முதன்முதலா சொன்னவங்க ஜானகியம்மா. என் மேல நம்பிக்கை வைச்ச முதல் மனுஷி. அவங்ககிட்ட நான் நிறையக் கத்துக்கிட்டேன். அவங்க பாடினது மாதிரி ரொம்பக் கஷ்டமான பாடல்களை இந்தியாவுல வேற யாராவது பாடியிருப்பாங்களானு சந்தேகமா இருக்கு!
ரிக்கார்டிங் தியேட்டர்லயே ரெண்டு பேரும் நிறையத் தடவை சண்டை போட்டிருக்கோம். அந்த உரிமையை, அவங்களோட நட்பு எனக்குக் கொடுத்திருக்கு. நான் சும்மானாச்சுக்கும் சண்டை போடுவேன். ஆனா அவங்க, சீரியஸா கையில கிடைக்கிறதை எல்லாம் தூக்கி என்னை அடிச்சிருக்காங்க. நான் அந்தளவுக்கு அவங்களைக் கிண்டல் பண்ணுவேன். அவங்களுக்கு நான் அவ்வளவு செல்லம்.
ஏதாவது ஜோக் சொன்னா, அரை மணி நேரம் சிரிச்சுட்டே இருப்பாங்க. அப்புறம் ஸ்டுடியோல எல்லாருக்கும் கேட்கிற மாதிரி மைக்ல, 'இந்தப் பையனுக்கு நான் நல்லாப் பாடுறதுல இஷ்டம் இல்லை. ஜோக் சொல்லிச் சிரிக்கவெச்சு எனக்குத் தொண்டை கட்டிக்கிச்சு’னு சொல்வாங்க.
ஒரு தடவை, ஹைதராபாத்ல எனக்குப் பாராட்டு விழா நடந்தது. அதுக்கு அவங்க வர்றேன்னு டேட் கொடுத்திருந்தாங்க. ஆனா, தேதியைத் தப்பாக் குறிச்சிட்டாங்க போல. நிகழ்ச்சி முடிஞ்சு ரெண்டு நாளுக்குப் பிறகு எனக்கு ஆச்சரிய அதிர்ச்சி கொடுக்கணும்னு நினைச்சு, கொச்சின்ல இருந்து ஹைதராபாத் வந்து நிகழ்ச்சி நடந்த தியேட்டருக்கு வந்திருக்காங்க. அங்கே ஈ, காக்கா இல்லை. வாட்ச்மேன்கிட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டாங்க. ஹைதராபாத்ல அவங்க தோழி வீட்லயே தங்கிட்டாங்க.
மறுநாள், நான் எதேச்சையா அவங்களுக்கு போன் பண்ணிப் பேசினா, அழ ஆரம்பிச்சிட்டாங்க. 'அந்த நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸா வந்து உன்னைப் பாராட்டணும்னு திட்டம் போட்டேன். ஆனா, முடியாமப்போச்சு. இப்ப எங்க இருக்க? உன்னை ஒரு தடவை பார்க்க முடியுமா?’னு கேட்டாங்க. உடனே ஓடிப் போய் அவங்களைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் திரும்ப அழ ஆரம்பிச்சிட்டாங்க.
ஒருமுறை, நானும் சித்ராவும் டூயட் பாட்டு ஒண்ணு பாடிட்டு இருந்தோம். அடுத்து இன்னொரு பாட்டு பாட அவங்க வந்துட்டாங்க. வாய்ஸ் ரூமுக்குள் வந்து, 'இங்க நான் வரலாமா?, நீங்க பாடும்போது நான் பார்க்கலாமா?’னு கேட்டுட்டு உட்கார்ந்துட்டாங்க. சித்ராவுக்கோ தயக்கம். 'ஐயோ..! அம்மா இருக்கும்போது நான் எப்படிண்ணா பாட முடியும்? டென்ஷனா இருக்குமே...’னு மிரண்டாங்க. 'அவங்க நம்ம அம்மா மாதிரி. அவங்க முன்னால நீ பாடுறதே பெரிய பாக்கியம். தைரியமாப் பாடு’னு சொன்னேன். பாடினோம். டேக் ஓ.கே. ஜானகியம்மா, சித்ராவைக் கட்டிப்புடிச்சு, 'உன் மாதிரி எனக்கொரு பெண் குழந்தை பிறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். எவ்வளவு அழகாப் பாடுற தாயே’னு ஆசீர்வாதம் பண்ணினாங்க. ரொம்ப நல்ல மனசு. அந்த மனசுதான் ஜானகியம்மா!''
ஃபிர்தோஸ் ராஜகுமாரன், ஃபேஸ்புக்.
''இன்றைய இளம் பாடகர்களின் ப்ளஸ், மைனஸ் என்ன?''
''இளம் பாடகர்களுக்கு மட்டும் இல்லை, எல்லாப் பாடகர்களுக்குமே ப்ளஸ், மைனஸ் இருக்கும். அதனால இன்றைய ட்ரெண்டுக்கு இளம் பாடகர்கள் எதிர்கொள்ளும் ப்ளஸ், மைனல் பத்தி மட்டும் சொல்றேன். ப்ளஸ்... வெஸ்டர்ன் மியூசிக்கோ, இண்டியன் மியூசிக்கோ நிறையப் பேர் முறையாக் கத்துக்கிட்டு வர்றாங்க. ஆனால், வெரைட்டி வெரைட்டினு சொல்லி இசையமைப்பாளர்கள் ரெண்டு படத்துல வாய்ப்பு தர்றது, அப்புறம் இன்னொரு புது வாய்ஸுக்குப் போறதுனு யாருக்குமே நீண்ட நாள் பாட அவசாகம் கிடைக்காதது மைனஸ்.
நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி ரெண்டு ஆண், ரெண்டு பெண் பாடகர்களைத் தேர்ந்தெடுத்து நிறைய வாய்ப்புகள் தரணும். அப்பதான் அவங்க வாய்ஸ் கேட்கிறவங்களுக்குப் பழக்கப்படும்; புரியும். அதுக்கு அவங்களுக்கு சீனியர்ஸோட சேர்ந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்புகளைத் தரணும். அப்பதான் அவங்களால் தங்களை பாலிஷ் பண்ணிக்க முடியும். நிறைய நாள் ஃபீல்டுல இருக்கலாம்.
ஒரே படத்துல நாலு பாட்டுனா, நாலு சிங்கர்ஸ் பாடுறாங்க. நிறையப் பேருக்கு வாய்ப்பு தர்றது நல்ல விஷயம். ஆனா, அந்த மாதிரி எத்தனை படங்கள் எத்தனை பேருக்கு உங்களால் வாய்ப்பு தந்துட முடியும்? இதெல்லாம் இளம் சிங்கர்ஸோட மைனஸ் பாயின்ட்.
கா.அருண்மொழி, தஞ்சாவூர்.
''உங்கள் ஸ்பெஷாலிட்டிகளில் முக்கியமானது ஸ்பஷ்டமான உச்சரிப்பு. இதை எப்படிப் பயின்றீர்கள்?''
''மக்கள் நம்ம மேல, நம்ம உச்சரிக்கிற வார்த்தை மேல மரியாதை வெச்சிருக்காங்க. அதுக்கு நாம மரியாதை தரணுமே. அதுதான் என்னை ஓடவைக்குது! அந்த உச்சரிப்புல சின்ன தப்புகூட வந்திரக் கூடாதுனு நான் தவியாத் தவிப்பேன்.
ஒரு தெலுங்குப் படம். லைவ் ரிக்கார்டிங். கே.எஸ்.ஆர்.தாஸ்தான் டைரக்டர்; அவரே எடிட்டரும்கூட.  சத்யம் சார் மியூசிக். ஒரு இடத்துல நல்ல டேக்ல, 'ஒக்க கண்ட...னு’ வாய்ஸ் உள்ள போயிடும். டேக் கட் பண்ணாம முடிச்சிட்டோம். டைரக்டரும் ஓ.கே. சொல்லிட்டார். 'சார்... அந்த ஒரு இடத்துல வாய்ஸ் போயிடுச்சு. இன்னொரு டேக் பாடுறேனே’னு கேட்டேன். 'டோட்டல் எக்ஸ்பிரஷன் நல்லா இருந்துச்சு. நானே எடிட்டரா இருக்கிறதால அதை ஃபிலிம்ல கட் பண்ணி பேஸ்ட் பண்ணிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க’ன்னார். அப்பல்லாம் ஃபிலிம்ல டிரான்ஸ்ஃபர் பண்ணிதான் எடிட் பண்ணுவாங்க. அதனால நானும் தைரியமா இருந்துட்டேன். ஆனா, அவர் மறந்துட்டார். படத்துலயும் அப்படியே வந்துடுச்சு. இன்னைக்கு அந்தப் பாட்டை யார் பாடினாலும் நான் பண்ணின அந்தத் தப்போடத்தான் பாடுறாங்க. அதை ஏதோ எக்ஸ்பிரஷனுக்காக நான் பண்ணினதுனு நினைக்கிறாங்க. அது தப்பு இல்லையா... பரம பாவம் இல்லையா? 'அப்படிப் பாடாதீங்க. அது மிஸ்டேக்’னு இப்பவும் சொல்லிட்டு இருக்கேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு முன்னைவிட உச்சரிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்!''
தாமரைச் செல்வி, சென்னை.
''எம்.எஸ்.வி-யின் இசையில் பாடிய அனுபவம் குறித்து..?''
''அவர் என் மானசீகத் தந்தை. அவர்கிட்ட நான் பாடிய அனுபவங்களைப் பேசினா, ஆயிரம் பக்கங்களுக்கு மேல வேணும். ஒரே ஒரு உதாரணம் சொல்றேன்.
'நிழல் நிஜமாகிறது’ படத்துக்காக நானும் வாணி ஜெயராம் அம்மாவும் 'இலக்கணம் மாறுதோ...’ பாட்டு பாடிட்டு வீட்டுக்குப் போயிட்டோம். ராத்திரி 11 மணிக்கு எம்.எஸ்.வி. சார் வீட்ல இருந்து போன். அண்ணி பேசினாங்க. 'என்னப்பா உங்க அண்ணா வந்ததுல இருந்து அவர் மனசு எங்கேயோ இருக்கு. கண்ணுல தண்ணி வருது. ஒண்ணும் பேச மாட்டேங்கிறார்’னாங்க. 'ரொம்ப அழகான பாட்டும்மா. அண்ணா அழகாப் பண்ணியிருந்தாங்க’னேன். 'நீயே பேசுப்பா’னு போனை அண்ணாகிட்ட கொடுத்தாங்க. என்னை அண்ணா ஒரு நாளும் 'பாலு’னு கூப்பிட்டதே கிடையாது. 'நான் விஸ்வநாதன் பேசுறேன். என்ன பாலு அவர்களே... எப்படி இருக்கீங்க?’னுதான் பேசுவாங்க. அன்னைக்கு போனை கொடுத்ததும், 'பாலு கண்ணா’னு சொன்னாங்க. எனக்கு ரொம்பச் சந்தோஷமாகிருச்சு. 'அந்தப் பாட்டோட அனுபவத்துல இருந்து வெளியே வரக் கஷ்டமா இருக்கு. ரெண்டு பேரும் என் பாட்டுக்கு அவ்வளவு அழகூட்டிப் பாடினீங்களே... உங்களுக்கு நான் எப்படிப்பா நன்றிக்கடன் தீர்க்க முடியும்’னாங்க. அந்த வார்த்தைகளுக்கு மேல எனக்கு என்ன விருது வேணும்... சொல்லுங்க! அவரோட கோபத்துல, குழந்தைத்தனத்துல, எங்களைச் சொந்தம் கொண்டாடுற பாங்குலனு... அவரோட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஆனந்தம்தான்.
இப்பக்கூட யாராவது வந்து அவரோட பாட்டைப் பத்தி பேசினா, மேல கையக்காட்டி 'அதெல்லாம் கடவுள் கொடுத்தது. டீம் வொர்க். நல்ல கவிஞர்கள்  இருந்தாங்க. அழகான இசைக் கலைஞர்கள் இருந்தாங்க. நல்ல பாடகர்கள் இருந்தாங்க’னு சொல்வாரே தவிர, 'இது நான் பண்ணினேன். என்னால்தான் வந்தது’னு ஒருநாளும் பேசினது கிடையாது.
'கடவுள் யார் யாருக்கு என்ன தரணும்னு ஏற்கெனவே எழுதி வெச்சிருப்பார். சில பேருக்கு சங்கீதம் கொடுப்பாங்க. ஆனா, இங்கிதம் என்பதை நாமதான் டெவலப் பண்ணிக்கணும்’பார். அது எத்தனை பெரிய உண்மை!''
மகேஷ், வேலூர்.
''ஒரே நாளில் உங்கள் குரலில் 10 பாடல்கள் பதிவான சம்பவங்கள் உண்டாமே.... அந்த 'ஒன்-டே’ அனுபவங்கள் பற்றி..!?''
''ஒரே நாள்ல 10 பாட்டு சர்வசாதாரணமா நிறையத் தடவை பாடியிருக்கேன். 1978-ல் ஒரு சமயம், 'சுசிலாம்மாவும் நானும் அமெரிக்கா நிகழ்ச்சிக்காக ரெண்டு மாசம் இந்தியாவுல இருக்க மாட்டோம். அதுக்கேத்த மாதிரி ரிக்கார்டிங் பிளான் பண்ணிக்கங்க’னு எல்லா இசையமைப்பாளர்களிடமும் சொல்லிட்டோம். நாளைக்கு அமெரிக்கா கிளம்புறோம்னா, இன்னைக்கு காலையில 9 மணிக்கு ஆரம்பிச்சு சின்னச் சின்ன பிரேக் விட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு முடிச்சப்ப, அது... 19-வது பாட்டு. அதில் ஏறத்தாழ 12 பாடல்கள் சுசீலாம்மா என்னோட சேர்ந்து பாடினாங்க.
அதே போல பெங்களூரூர்ல ஒரே தியேட்டரில் 16 பாட்டு பதிவு  பண்ணினோம். மும்பையில் ஒருமுறை 16 பாட்டுனு இப்படி நிறைய நடந்திருக்கு. என் எனர்ஜி லெவலை எப்படிக் காப்பாத்திக்கிட்டு பாடினேன்?, 16-வது பாட்டைக்கூட முதல் பாட்டு மாதிரி பாடியிருக்கேன்னு என் உழைப்பை நினைச்சு பெருமிதப்படும் தருணங்கள் அவை!''
பழனிச்சாமி, மானாமதுரை.
 ''டி.ராஜேந்தர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் தங்கத் தட்டு விருது பெற்றவை. அவருடைய இசை ஆளுமையைப் பற்றி சொல்லுங்களேன்?''
 ''டி.ஆர்., ஒரு குழந்தை மனசுக்காரர். அவர் ஒரு படத்தில் எல்லாமே பண்ணுவார். அவர் ஒரு நல்ல பாடலாசிரியர். மனசுல உள்ள உணர்ச்சிகளை அழகான வார்த்தைகள்ல கொண்டுவர்றதுல வித்தகர். அவருக்கு மீட்டரே இருக்காது. அவருக்குத் தெரிஞ்ச பாணியில அழகா கம்போஸ் பண்ணுவார். அவரிடம் எனக்குப் பிடிச்சது, அவருக்கு என்ன தெரியுமோ அதைத் துணிச்சலாப் பண்றதுதான்.
அவருக்கு, சிவமணி டிரம்ஸ்னா ரொம்ப இஷ்டம். என்ன மாதிரியான பாட்டா இருந்தாலும் அதில் சிவமணி டிரம்ஸ் இருக்கணும்னு நினைப்பார். ஆனா, டி.ஆர். கொடுக்கும் ஒரு சிச்சுவேஷனுக்கு சிவமணி 10 முறை 10 வெரைட்டிகள்ல வாசிப்பார். 'சிவமணி, எனக்குத் தெரிஞ்ச அந்த ஒரே ஒரு பீட்டு இருக்குப் பாரு... நம்ம தமிழ்நாட்டு பீட். அதுதான் வேணும். நீ வேற ஏதாவது வாசிச்சா, அது என் பாட்டு இல்லைனு நினைப்பாங்க. எனக்கு என்ன தெரியுமோ, அதை மட்டும் சொல்றேன். அதை மட்டும் வாசி போதும்’பார் டி.ஆர்.
நான்னா அவருக்கு அவ்வளவு அன்பு. ஒருமுறை என் மனைவிகிட்ட, 'அம்மா நான் மட்டும் பொண்ணாப் பிறந்திருந்தா உங்க கணவரைக் கடத்திட்டுப் போயிருந்திருப்பேன். உங்க ஹஸ்பெண்டு மேல அந்தளவுக்குக் காதல்’னு சொல்லியிருக்கார். அவர் பண்ண வேலைகள் எல்லாம் உண்மை. அதான் எல்லாருக்கும் அவரையும் அவர் படைப்புகளையும் பிடிச்சிருக்கு