Thursday, December 31, 2015

அலிபாபாவும் ஜாக் மாவின் வெற்றிக் கதையும்!

"தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்" என்ற பழமொழியை சுக்கு நூறாக உடைத்து வெற்றி கண்டவர் தான் ஜாக் மா.
அலிபாபா இன்று உலகம் முழுவதும் வர்த்தகம் செய்துவரும் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம். இது விற்பனை செய்யாத பொருட்களே இல்லை. விற்பனை செய்யாத இடமும் இல்லை.
1999 இல் ஜாக்மா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2.6 லட்சம் கோடி. 2015 இல் இதன் வருமானம் ரூ.24 ஆயிரம் கோடி. முழுக்க முழுக்க இன்டர்நெட்டும், தொழில்நுட்பமும் பங்கு பெறும் ஒரு தொழிலில், இவை பற்றி அனுபவமோ நிபுணத்துவமோ இல்லாத ஒருவர் எப்படி உலகளாவிய வெற்றி பெற முடிந்தது என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.

எப்படி சாத்தியம்?

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் 10 முறை நிராகரிக்கப்பட்டவர், பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஜாக் மா தொழிலதிபரானது எப்படி?
அவருக்கு ஆங்கிலம் தெரியாது, ஊர் சுற்றிப் பார்க்க வந்த பயணிகளிடம் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அதிலும் நாட்டமின்றி அதில் இருந்து வெளியேறினார். வேலை தேடி அலைந்தார். கேஎஃப்சியில் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இன்று உலகின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவையெல்லாம் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று அவர் குறிப்பிடுகிறார். இன்டர்நெட் என்ற வார்த்தை பரவத் தொடங்கிய நேரம் அது. எல்லோரும் இன்டர்நெட் உலகை மாற்றப் போகிறது என்று பேசும்போது, அது என்ன இன்டர்நெட், நாமும் தெரிந்துகொள்ளலாமே என்ற ஆர்வம் அவருக்குள் உருவானது. ஆனால் அதில் அனைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி என்று இருந்ததே தவிர சீனர்களுக்காகவென்று எதுவும் இல்லை. அப்போது அவருடைய மனதில் உதித்த ஒரு யோசனைதான் இன்று 'அலிபாபா' சாம்ராஜ்யமாக எழுந்து நிற்கிறது.
சரியான நேரத்தில் அவருக்கு கிடைத்த யோசனையும், அந்த யோசனையை பிசினஸாக்க அவருக்கு அமைந்த நல்ல குழுவும்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். ஒரு விஷயத்தில் வெற்றியடைய நமக்கு தேவையெல்லாம், ஆர்வம், அதன் மீதான முழு கவனம் மற்றும் சரியான ஒரு அணி ஆகியவைதான்.
இன்டர்நெட் உலகை மாற்றப் போகிறது என்பதிலும், அதற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பதையும் உலகில் முதன்முதலில் நம்பத் தலைப்பட்டவனாகவே தன்னை கருதுகிறேன் என்றார். தான் நம்பியதையே தன்னுடைய பிசினஸுக்கும் பயன்படுத்திக்கொண்டார். அசுர வேகத்தில் வளர்ந்தார்.
ஜாக் மாவின் வெற்றிக்கு அவர் வைத்திருக்கும் மந்திரங்கள்:
- வளர்ச்சியை மட்டுமே நோக்கி பயணம் வேண்டும்.
- புத்திசாலித்தனமான செயல்பாடு வேண்டும்.
- யாரும் கண்டுபிடிக்காத வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
- திறமையானவர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுடைய சிந்தனைகளுக்கு இடமளிப்பது.
- வாடிக்கையாளர்கள் உள்ளே வரும் வழி எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும்.
விஷயம் தெரிந்தவர்களை மதிக்க வேண்டும்:
தனக்கு, புரோகிராமிங் பற்றியோ, தொழில்நுட்பங்கள் பற்றியோ எதுவும் தெரியாதிருந்த போதிலும் அதற்காக தொழிலில் இருந்து பின்வாங்கவில்லை. விஷயம் தெரிந்த திறமைப்படைத்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்களை அவருடைய அணியில் சேர்த்துக்கொண்டார். அவர்களுடைய திறமைக்கான மரியாதையைக் கொடுத்து அவர்களுடைய சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்திருக்கிறார். இன்று அலிபாபா நிறுவனத்தின் வெற்றிக்கு அவரது அணியினரின் திறமையும், உழைப்பும்தான் காரணமாக இருக்கிறது.
பலர் தோல்வியடைய காரணம்?
பல பெரு நிறுவனங்களும் கூட தோல்வியடைய ஒரே காரணம் அவர்களிடம் இருக்கும் அதிகபட்ச பணமாகக் கூட இருக்கும். ஏனெனில் செலவு செய்யும் கவனிக்காத ஒவ்வொரு ரூபாயும் தோல்வியை நமக்கு அருகில் அழைத்து வந்துவிடக் கூடும். சிறியதோ, பெரியதோ எவ்வளவு தொகையாக இருந்தாலும் செலவுகளைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். தேவையற்ற அல்லது அதீத செலவுகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
ஒரு பழைய பழமொழி உண்டு "தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்" என்று. இந்தப் பழமொழி கூட வெற்றிக்கு ஒரு தடைதான். இதைச் சுக்கு நூறாக உடைத்து வெற்றி கண்டிருக்கிறார் ஜாக் மா. தோல்விகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்

Saturday, December 19, 2015

உயிர் பெறும் ராமாயண ஜடாயு...!

ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள ஜடாயு பறவையின் பிரமாண்ட சிலையுடன்,  கேரளத்தில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள பறவைகள் சரணாலயம், வரும் ஜனவரி 2016 மாதத்தில் திறக்கப்படவுள்ளது.
கொல்லம் மாவட்டம், ஜடாயுமங்கலம் என்ற இடத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் பறவைகளுக்கான இந்த அழகிய பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்கா அமைப்பதற்காக ரூ. 100 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்படப்பட்டது. அழகிய குட்டி குட்டி மலைகள், பள்ளத்தாக்குள், நீர்வீழ்ச்சிகள் இந்த பூங்காவில் உள்ளன .அதோடு சுற்றுலாப்பயணிகள்  'ட்ரெக்கிங்' மேற்கொள்ளும் வகையிலும் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள பறவை ஜடாயுவின் சிலை 200 அடி நீளத்திலும், 150 அடி அகலத்திலும், 70 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு செல்லும் போது, வழிமறித்த ஜடாயு பறவை அவனுடன் போரிடுகிறது. ராவணனால் வீழ்த்தப்பட்டு, ஜடாயு பறவை தரையில் விழுந்தது.
ஜடாயுவின் தியாகத்தை போற்றும் வகையில், அதே வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கேரள சுற்றுலாத்துறை கூறியுள்ளது.



அதோடு இந்த ஜடாயு சிலைக்குள் 6 டி தியேட்டர், ராமாயண கதையின் டிஜிட்டல் கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. வரும் ஜனவரி மாதத்தில் ஜடாயு சிலை திறக்கப்படவுள்ளது.

 

Saturday, December 12, 2015

மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! -- சென்னை மூழ்க என்ன காரணம்?

சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல... திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம். ஏரிகளின் நீர்மட்டத்தைக் கையாள்வதில் நிகழ்ந்த குளறுபடிகள் பேரழிவுக்குக் காரணமாகி​விட்டன’ எனப் பரவும் தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன.

சென்னை குன்றத்தூர் அருகே 6,250 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும், காஞ்சிபுரம் மாவட்​டத்தில் ஒரு பகுதி விவசாயத்துக்கும் பயனளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தான் சென்னை மக்களின் மீளாத் துயரத்துக்குக் காரணம். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரைத் தேக்கிவைக்கலாம். உபரிநீரை 11 மதகுகள் வழியாக வெளியேற்ற முடியும். இப்படி வெளியேற்றப்படும் நீர் குன்றத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், மணப்பாக்கம், ராமாபுரம், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு முகத்துவாரம் வழியாகக் கடலில் கலக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது?




சென்னையை வெள்ளம் சூழ்ந்தது டிசம்பர் 1-ம் தேதி. அதற்கு முந்தைய தினம் நவம்பர் 30-ம் தேதி ஏரியில் 3,126 மில்லியன் கன அடி நீர் இருந்தது. செம்பரம்பாக்கத்தில் அந்த நாளில் 500 கன அடி நீர் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. வெளியேற்றப்பட்ட நீர் 600 கன அடி நீர். இதுதான் 30-ம் தேதி நிலவரம். 1-ம் தேதி செவ்வாய்கிழமை பெருமழை பெய்தது. அன்றைய நிலவரத்தைப் பார்ப்போம். அன்றைய தினம் 3,141 மில்லியன் கன அடி நீர் இருந்தது. வினாடிக்கு 960 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. இதை ஏரி தாங்காது என்று சொல்லி 2-ம் தேதியன்று வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி வீதம் வெளியேற்றி விட்டார்கள். ஒரே நாளில் இவ்வளவு திறந்தால் என்ன ஆவார்கள் மக்கள்?
பருவ மழை ஆரம்பித்த நாளில் இருந்து  அதிக அளவு  நீர் திறந்துவிடப்பட்டது 2-ம் தேதிதான். மறுநாள் 3-ம் தேதி வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டிருக்கிறார்கள்.

‘டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து கனமழை பெய்யும்’ என நவம்பர் 25-ம் தேதியே அறிவித்து​விட்டது சென்னை வானிலை ஆய்வு மையம். இதுதவிர, பிறநாட்டு வானிலை ஆய்வகங்களும் சென்னையில் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கை செய்திருந்தன. ஆனால், இதை​யெல்லாம் அரசு அக்கறையோடு கவனத்தில் கொள்ள​வில்லை. நவம்பர் 20-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் 3,268 மில்லியன் கன அடி நீர் இருந்தது. கிட்டத்தட்ட ஏரி நிரம்பிவிட்டது. அதன்பிறகு 10 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதற்காகத் தினமும் குறைந்தபட்சம் 500 அடியில் இருந்து அதிகபட்சம் 4 ஆயிரம் கன அடி வரையில் தினமும் தண்ணீரைத் திறந்து​விட்டார்கள். ஆனால், 1-ம் தேதி பெருமழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்து அதற்கு ஏற்றார்போல தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால், ஏரிக்கு வரும் நீர்வரத்தை எதிர்கொண்டிருக்க முடியும். ஏரி நிரம்பியிருந்த நிலையில், நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் ஏரியின் அளவு தாங்க முடியாத அளவுக்கு உயர என்ன செய்வது எனத் தெரியாமல் அதிகபட்சமாக வினாடிக்கு 29 ஆயிரம் கன அடியை முதல் நாளிலும், 11 ஆயிரம் கன அடியை அதற்கு அடுத்த நாளிலும் திறந்துவிட்டு பெரு வெள்ளத்துக்குக் காரணமாகிவி​ட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. இப்படி திறந்து விடப்பட்ட நீர் அடையாற்றில் பாய்ந்து வந்து சென்னை நகருக்குள் புகுந்து, பல லட்சம் வீடுகளை துவம்சம் செய்தது.

தண்ணீர் திறப்பில் அரசு காட்டிய மெத்தனத்துக்கு காரணம் ஒன்று சொல்லப்படுகிறது.
கன மழையை எதிர்பார்த்து சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, ‘செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் 5 ஆயிரம் கன அடி வெளியேற்றப்​படுகிறது. ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வெளியேற்றப்படும் அளவு 7,500 கன அடியாக அதிகரிக்கப்​படலாம். அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்’ என்பதை டிசம்பர் 1-ம் தேதியிட்ட தன்னுடைய உத்தரவில் அவசர செய்தியாகக் கொடுத்து இருந்தார். சுந்தரவல்லி சொன்னதுபோல 7,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. 2-ம் தேதி 29 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றி​யிருக்கிறார்கள். இதை சென்னை குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியமே தனது இணைய தளத்தில் சொல்லியிருக்கிறது. கலெக்டர் சுந்தரவல்லி அறிவிப்பது ஒன்று என்றால், அரசின் பொதுப்பணித் துறை செய்தது வேறு. இப்படி அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்புக்கூட இல்லாமல், உயிர்களோடும் உடமை​களோடும் விளை​யாடி​யிருக்​கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்து நிற்கிறது. இங்கே சொன்னது எல்லாம் அரசின் கணக்கு​களை வைத்து. ஆனால், செம்பரம்​பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கன அடியைத் தாண்டி அதிகளவில் திறந்துவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இப்படித்​தான் பூண்டி ஏரியின் நிலையும். அதையும் பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. 2-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியை​விட, பூண்டி ஏரியில் திறந்து​விடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகம். அதாவது வினாடிக்கு 30,200 கன அடி தண்ணீரை அன்றைய தினம் திறந்து​விட்டிருக்கிறார்கள். சென்னையில் மழை கொட்டியபோது ஆந்திராவில் மழை கொட்டியது. அந்த நீரும் பூண்டிக்கு வந்தது. எனவே, 2-ம் தேதி 30,200 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் 3-ம் தேதி பூண்டியில் இருந்து திறந்துவிடப்பட்டது அதைவிட அதிகம் 36,484 கன அடி. செம்பரம்பாக்கமும் பூண்டியும் சேர்த்து டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் திறந்துவிட்ட அதிகாரபூர்வ மொத்த நீரின் அளவு மட்டும் வினாடிக்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 684 கன அடி. இந்தத் தண்ணீர்தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை மூழ்கடித்தது.
அதிகாரபூர்வமற்ற முறையில் கணக்கிட்டால் இரண்டு நாட்களில் இந்த இரண்டு ஏரிகளில் இருந்து வினாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடிக்கும் அதிகமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்கிற பகீர் குற்றச்சாட்டை வைக்கின்றன எதிர்க் கட்சிகள். ‘‘செம்பரம்​பாக்கம், பூண்டி ஏரிகள் தவிர அடையாற்றுடன் இணைக்கப்பட்ட 50 ஏரிகள் நிரம்பியதால், அவற்றிலிருந்து உபரி நீர் பல ஆயிரம் கன அடி வெளியேறியது. இதனால், ஒரே  நேரத்தில் 65 ஆயிரம் கன அடி உபரி நீர் அடையாற்றில் கலந்தது. இந்த நீர் அடையாற்றில் கடல்போல பெருக்கெடுத்தது. அது சென்னை நகரையும் நாசம் செய்தது. மொத்தத்தில் சொதப்பியது அரசின் பொதுப்பணித் துறைதான்’’ என்கிறார்கள். இந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். பொதுவாக, மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பி வரும்போது கடந்த காலங்களில் துறையின் அமைச்சர் ஏரிகளுக்கு விசிட் அடித்து ஆய்வுசெய்வது வழக்கம். அப்படி மழைக்கு முன்பே பன்னீர்​செல்வம் போய் பார்க்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் படிக்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் ‘பசுமை நடை’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நடராஜன், ‘‘மக்களின் தாகம் தீர்க்க குடிநீரையும், வயிற்றுப் பசிக்கு உணவையும் கொடுத்து வரும் ‘ஹீரோ’ செம்பரம்பாக்கம் ஏரி. ஆனால், அந்த ஏரிதான் பாதிப்பை உண்டாக்கி விட்டது என ‘வில்லன்’போல பழி தூற்றுகிறார்கள். நீர் போக்குவரத்துகளைச் சீர் செய்யாமல் ஆக்கிர​மிப்பு செய்துவிட்டு, ஏரியைக் குறை சொல்வதில் பயனில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இயற்கை நமக்குப் பாடம் புகட்டி இருக்கிறது. மூன்று சுற்று மழை பெய்து, முதல் சுற்றிலேயே செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டது. வரலாறு காணாத மழை பெய்யும் என்று வானிலை வல்லுநர்கள் சொல்லியும் அரசு கவனத்தில் எடுக்காதது ஏன்? முதல் மழைக்கே விவரங்களைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல முன்கூட்டியே திட்டமிடாமல், கண்மூடிக் கிடந்ததை என்னவென்று சொல்வது? மனித மெத்தனமே, இந்தப் பேரழிவுக்குக் காரணம்’’ என்கிறார்.
அலட்சியமும், ஆக்கிரமிப்பும் சென்னையை மூழ்கடித்தது என்பதே உண்மை!

சென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை பேரிடரே!

சென்னையில் பெய்த பெருமழையை வெள்ளமாக மாற்றியது தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவற்றிலிருந்து முக்கிய தகவல்களை தொகுத்திருக்கும் இந்தக் கட்டுரை சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதில் அரசு அதிகாரிகள் காட்டிய மெத்தனத்தை தெள்ளத் தெளிவாக காட்டும் கட்டுரை இங்கே அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 8, 9, 12, 13, 15, 23 தேதிகள்: சென்னையில் கனமழை பெய்கிறது.

நவம்பர் இறுதி வாரம் (தோராயமாக 26-ம் தேதி):

1) சர்வதேச வானிலை மையங்கள் சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி 50செமீ வரையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கின்றன.

2) எச்சரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம், அதாவது பொதுப்பணித்துறை செயலாளரிடம்  செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி இருக்கும் நீரின் அளவை 18 அடியாக குறைக்க சொல்கிறார்கள். குறைத்தால் மட்டுமே வர இருக்கும் அதீத கனமழையை ஏரி தாங்கும் என்றும் சொல்கிறார்கள்.

நவம்பர் 27-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 28-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 29-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 30-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.


அதாவது சுருங்கச் சொன்னால் மழை மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்த நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்றி, நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். தலைமைச் செயலாளரோ முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்.

டிசம்பர் 1-ம் தேதி நடந்தது என்ன?

· சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே கிட்டத்தட்ட 50செமீ கனமழை பெய்கிறது. (தாம்பரத்தில் அவர்கள் சொன்னதை போலவே மிகச்சரியாக 49செமீ பெய்தது)

· செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு அரசு தளத்தின்படி 3141 மில்லியன் கன அடியாக இருக்கிறது.

· டிசம்பர் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு, செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் நொடிக்கு 5000 கனஅடி நீரை வெளியேற்ற இருப்பதாகவும், இந்த அளவு நொடிக்கு 7500 கனஅடி வரை உயர்த்தப்படலாம் என்றும் பொத்தம்பொதுவாக ஒரு செய்தி கிடைக்கிறது.

· மாலை 5 மணிக்கு முதலில் ஏரியை திறக்கிறார்கள். பெயரை வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் நொடிக்கு 10000 கன அடி நீரை வெளியேற்றியதாகவும், இவ்வளவு பெரிய வெள்ளத்தை திறந்துவிட முடிவுசெய்த அரசு கண்டிப்பாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள் என தான் நம்பியதாகவும்  பேட்டி அளித்துள்ளார்.

· ஆனால் தமிழக அரசின் இணையதளத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு வெறும் 900கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டிக்கிறார்கள்.

ஆகமொத்தத்தில், செய்தியாளர்களுக்கு கலெக்டர் சொன்னபடி நொடிக்கு 5000-7000 கன அடியை திறந்துவிட்டார்களா? அல்லது பொதுப்பணித்துறை ஊழியர் கூறியதைப் போல நொடிக்கு 10000கன அடி நீர் திறந்துவிட்டார்களா? அல்லது அரசு தளம் சொல்வதைப் போல நொடிக்கு வெறும் 900கன அடி நீர்தான் திறந்துவிட்டார்களா? எது உண்மை?
ஆனால், உண்மையோ இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது!

சென்னையை அலற வைத்த டிசம்பர் 2

அரசு தளத்தின்படி டிசம்பர் 1-ம் தேதி ஏரியில் நீரின் அளவு 3141 மில்லியன் கன அடி.  அதேவேளையில் டிசம்பர் 2-ம் தேதி ஏரியில் நீரின் அளவு 1134 மில்லியன் கன அடி. ஆக 2007 மில்லியன் கன அடி நீர் முந்தைய இரவு 10 மணிக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதாவது அறிவித்த நொடிக்கு 7500கன அடிக்கு மாறாக கிட்டத்தட்ட நொடிக்கு 29000 கன அடி நீரை டிசம்பர் 1-ம் தேதி எந்த முன்னறிவிப்புமின்றி  திடீரென வெளியேற்றியிருக்கிறார்கள். அதிகாலை 2 மணிக்கு சென்னையை வெள்ளம் வந்தடைகிறது. இரவு 10 மணிக்கு அபாயகரமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ளம் தூங்கிக்கொண்டிருந்த மக்களையும், வீடுகளையும் மூழ்கடிக்கிறது.

வெள்ளத்திற்கான பிற  காரணங்கள்:

1) 26-ம் தேதியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கச் சொல்லியும், 27,28,29,30 ஆகிய மழையில்லா தேதிகளில் ‘மேலிட’ உத்தரவுக்காக காத்திருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

2) டிசம்பர் 1-ம் தேதி மாலை நான்கு மணிக்கு வெறும் 7500கன அடி மட்டுமே திறக்கப்போகிறோம் என செய்தி கொடுத்துவிட்டு, இரவு 10 மணிக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், மக்கள் வெளியேற நேரமும் கொடுக்காமல் திடீரென நொடிக்கு 29000கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

3) சொல்லாமல் கொள்ளாமல் திறந்துவிட்டதை கொஞ்சம் சீக்கிரமாக 6 மணிக்கு திறந்துவிட்டிருந்தால் இரவு 10 மணிக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும். ஆனால் இரவு 10மணிக்கு திறந்ததால் அதிகாலை 2மணிக்கு வெள்ளம் சூழ்ந்து மக்கள் தப்பிக்க வழியின்றி மாட்டிக்கொண்டார்கள். இவ்வளவு அபாயகரமான அளவு நீரை நடு இரவில் திறப்பது என்பது மிகப்பெரிய தவறு.


இந்த 29000 கன அடி திறப்பைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டபின் சில அதிகாரிகள் வாய்மொழியாக மட்டுமே இதை டிசம்பர் 2-ம் தேதி,  எல்லாம் முடிந்தபின் தெரிவித்திருக்கிறார்கள்.

5) பொதுவாகவே ஏரியில் இருக்கும் நீரை, வெளியேற்றுகிறேன் பேர்வழி என தண்ணீர் தொட்டியை உடைப்பது  மரபல்ல. அபாயகரமான அளவை எட்டிவிட்டால் தொட்டியிலிருந்து குழாய் மூலம்  நீரை வெளியேற்றுவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதுதான் முறை. இதை நவம்பர் 27,28,29,30-ம் தேதிகளில் செய்திருந்தால் வெள்ளத்தை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும் என்றும், இந்த வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல, முழுக்க முழுக்க அரசுதான் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

6) இதெல்லாம் போக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக அரசு அவசர அவசரமாக சாலைகள் அமைத்தது நினைவிருக்கலாம். அந்தக் குப்பைகள், கழிவுகள் எல்லாம் அடையாறு கடலில் கலக்கும் வழியை அடைத்துக்கொண்டதும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

7) சென்னையை சுற்றியுள்ள நான்கு ஏரிகளையும், அடையாறு, கூவம் நதிப்பாதைகளையும், ஓட்டேரி, பக்ககிங்காம் கால்வாய்களையும் ஜூன் ஜூலை மாதத்தில் தூர்வாருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதைச் செய்யாமலோ/சரியாகச் செய்யாமலோ விட்டிருப்பது இன்னொரு முக்கிய காரணம். ஆனால் முறையாக தூர்வாரியதைப் போல கணக்கு மட்டும் காட்டியிருக்கிறார்கள்.
நிச்சயம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் இது...

ஆக, மேலுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சென்னையையும், சென்னை மக்களையும் மீளாத்துயரில் தள்ளியிருக்கும் வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல. கனமழையை அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பயமும் ஊரை அழித்த வெள்ளமாக மாற்றியிருக்கிறது. இப்போது நாம் அனைவரும் ‘ஸ்டிக்கர்’ பணிகள் பற்றி பேசுவதிலும், அதிமுகவை கிண்டலடிக்கும் மீம்கள் செய்வதிலும், எல்லா கட்சிகளும் இப்படித்தான் என உண்மைகளை அறியாமல் பேசுவதுமாக  பிசியாக இருக்கிறோம்.
இன்னும் சிலரோ ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் வரத்தான் செய்யும், பல்லாண்டு காலம் செய்த தவறு என்றெல்லாம் பேசி அரசின் நிர்வாகமின்மைக்கும், மெத்தனபோக்குக்கும் தங்களை அறியாமலேயே துணை போகின்றார்கள். அரசும் அதையேதான் விரும்புகிறது. இந்திய ஊடகங்கள் நம்மைக் கவனிப்பதில்லை என கூக்குரலிட்டதன் பலனாக சென்னை வெள்ளத்தின் காரணங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் உண்மைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். இதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?
உண்மையான நிவாரணம் என்னவாக இருக்க வேண்டும்?
எந்த அளவுக்கு நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்களோ, அதே அளவில் உண்மையை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் முறையான சுதந்திரமான விசாரணைக் கமிஷன் வைத்து உண்மையை உலகுக்கு கூறுவது மட்டும்தான் இறந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் நாம் அளிக்கும் உண்மையான நிவாரணமாக இருக்கும். +