எங்கோ தொலைதூரச் சிகரத்தின் அடர்ந்த பனிக் குகையில் மௌனத்தின் மத்தியில் உற்பத்தியாகி, பிரதேசமெங்கும் உருகிப் பெருகி வழிந்தோடும் மகா நதியான கங்கையின் பிரணவ மந்திரப் பேரோசை தவிர, சில்லிடும் அமைதி!
மனசுக்குள்ளும் மழை பெய்ய ஆரம்பிக்கும் நேரம்... குளிர்க் காற்றுக்கு இதமாக, காசித் துண்டை உதறி நெற்றியில் இறுக்கிக் கட்டிக்கொள்கிறார் ரஜினி.
சவரம் செய்யப்படாத முகம்; கிழிசலான கதர்ச் சட்டை; இடுப்பில் காவி வேட்டி; காலில் ரப்பர் செருப்பு; கையில் ஊன்றுகோல். அந்த குளிர் கண்ணாடியும், லெதர் பேக்கும் இல்லையென்றால் ரஜினி... கூட்டத்தில் ஒரு முகம்!
என்ன இல்லை இவரிடம்?
இதோ இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படம்.... 'சந்திரமுகி’!
தமிழ் சினிமாவின் அத்தனை ரிக்கார்டுகளையும் அடித்து நொறுக்கி தூக்கித் தூரப்போட்டுவிட்டு, துள்ளலாய் ஓடுகிறது படம்.
'சூப்பர் ஸ்டார்’ என்பது ஆளுக்காள் அமரத் துடிக்கிற மியூசிக்கல் சேர் அல்ல; அது ரஜினியின் அடையாளம்... அடையாளங்களில் ஒன்று!
இந்த ஜென்மத்துக்குப் போதுமான புகழ் பார்த்தாகிவிட்டது. இன்னும் ஏழு தலைமுறைக்குத் தேவையான பொருள் சேர்த்தாகிவிட்டது. இவர் பேசினால் செய்தி. பேசாவிட்டாலும் செய்தி. புதிய படத்துக்கு பூஜை போட்டாலோ கொட்டும் கரன்ஸி அருவி. நிரந்தரமாக லட்சக்கணக்கான இதயங்களிலும், நிம்மதி தேடும்போதெல்லாம் இமயத்திலும் வசிக்கிற வாழ்க்கை!
சம காலத்தில் இவர் போல் யாரும் சிகரங்களைத் தொட்டதுமில்லை. சர்ச்சைகளில் சிக்கி, இவரளவுக்கு எவரையும் விமர்சனங்கள் சுட்டதுமில்லை!
'சந்திரமுகி’யின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு, தன் நன்றியைச் சொல்ல அழைத்தார் ரஜினி. வீட்டிலேயே விருந்து படைத்தார். நள்ளிரவு தாண்டியும் நடந்தது கொண்டாட்டம். விடிந்தபோது, ரஜினி சென்னையில் இல்லை. தன் குருவின் பாதம் பணிந்து நன்றி சொல்ல பயணமாகிக்கொண்டு இருந்தார் இமயமலைக்கு!
டெல்லிக்கு விமானம். அங்கிருந்து ரிஷிகேஷ். பிறகு ராணிகேத். இடுப்பொடிக்கிற இரண்டு நாள் பயணம் காத்திருக்கிறது. ரஜினியுடன் வழித்துணையாக பாபாஜி தரிசனத்துக்குப் பயணமாகிற நண்பர் ஹரி உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார். ''ரஜினி என்ற நடிகருக்கு உங்களைப் போல நானும் ஒரு ரசிகன். ஆனால், ரஜினி என்கிற மனிதருக்கு நான் நண்பன். 'இருந்தும் இல்லாமல் இரு’ என்பார்களே.. அதற்கு எனக்குத் தெரிந்த ஒரே உதாரணம் ரஜினிதான்'' என்கிறவர் எதையோ நினைத்துக்கொண்டு சிரிக்கிறார்.
''ரஜினிக்கும் எனக்கும் இருக்கிற நட்பு தெரிந்த சிலர், 'ஏன் சார் ரஜினி அடிக்கடி இமயமலைக்குப் போறார்? சாமியார் ஆகிடுவாரா?” என்று என்னிடம் கேட்பார்கள்.
துறவு என்பதில் பலவிதங்கள் உண்டு. மகா பெரியவரும் துறவிதான். மதர் தெரஸாவும் துறவிதான். பெரியவர் தெய்வங்களைத் தொழுதார். மக்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்கினார். தெரஸா தெருவோர தொழுநோயாளிகளையே தெய்வங்களாகப் பார்த்தார். அவர்களுக்குச் சேவை செய்தார். அப்படி ரஜினியிடம் என்னைக் கவர்ந்தது அவரது பற்றற்ற மனசு!'' என்கிறார் ஹரி.
''ரஜினி நிறைய குட்டிக் கதைகள் சொல்வார் தெரியுமா'' என்று பயணத்தை சுவாரசியப்படுத்துகிறார் ஹரி.
இதோ ரஜினி சொல்லும் கதை!
''ஒரு தாய் ஒட்டகமும் அதன் குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டு இருந்தன. குட்டி மனசில் நிறைய கேள்விகள். 'நமக்கு ஏன் அம்மா இத்தனை நீளமான கால்கள்?’ என்றது குட்டி. 'அதுவா மகனே, பாலைவனத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதுவும் மணல் பூமி. அதனால்தான் நமக்கு நீண்ட கால்கள் வழங்கினார் கடவுள்’ என்றாள் தாய்.
'நமக்கு ஏன் இத்தனை முரட்டு உதடுகள்? கற்கள் போல பற்கள்?’
'அதுவா மகனே, பாலைவனத்தில் கிடைப்பதெல்லாம் முள் தாவரங்கள்தானே. அவற்றை மெல்லுவதற்கு வசதியாகக் கடவுள் செய்த ஏற்பாடு!’
'நமக்குள் ஏன் இத்தனை பெரிய தண்ணீர்ப் பை?’
'அதுவா மகனே, பாலைவனத்தில் தண்ணீர் கிடையாதே. அதனால் பயணத்தில் தாகமெடுத்தால், நா வறண்டு நாம் தடுமாறக் கூடாது என்று கருணைகொண்டு கடவுள் தந்த பரிசு இது!’ என்று தாய் ஒட்டகம் பதில் சொன்னதும், 'அதெல்லாம் சரி, பிறகு ஏனம்மா நாம் இப்படி சர்க்கஸில் இருக்கிறோம்?’ எனக் கேட்டதாம் குட்டி ஒட்டகம்.”
இது ரஜினிக்கு மிகவும் பிடித்த தத்துவார்த்தமான குட்டிக் கதை. ''நாமெல்லாம் சர்க்கஸ் ஒட்டகங்கள்தானே!’ எனச் சிரிப்பார் ரஜினி'' என ஹரி சொல்லும்போதே சிரிக்கிறார்.
சாலையோர தேநீர்க் கடைக்குள் நுழைகிறார் ரஜினி.
யாரோ புது கஸ்டமர் என்பதுபோல எட்டிப் பார்க்கிற கடைப் பையன், ''ரஜினி சாப்!'' என அலறுகிறான் பரவசமாக!
சத்தம் கேட்டு ஏழெட்டு குட்டிப் பையன்கள் பக்கத்துக் காட்டுக்குள்ளிருந்து ஓடி வருகிறார்கள். டீக்கடை மாஸ்டர் அமிதாப்பின் ரசிகராம். 'அந்தா கானூன்’ பார்த்த பிறகு ரஜினிக்கும்.
மரத்தடியில் அமர்கிற ரஜினி, அந்த சின்னப் பையன்களிடம் பேச ஆரம்பிக்கிறார். காட்டு ரோஜாக்கள் போல சிவந்த நிறம். பூனைக் கண்கள். குளிர் அந்தப் பையன்களுக்கு கூடுதல் வசீகரத்தை வழங்கி இருக்கிறது. 'மித்வா சுன் மித்வா...’ என லகான் படப் பாடலை கீச்சிடும் குரலில் பாடிக் காட்டுகிறான் பையன். தேயிலை மணக்கும் பானம் கொஞ்சம் கதகதப்பு கூட்டுகிறது. உழைத்தால்தான் பிழைப்பு என வாழ்கிற அந்தப் பையன்கள், ரஜினிக்கு அவரது பெங்களூர் பால்ய காலத்தை நினைவுப்படுத்தி இருப்பார்கள் போல. தன்னை மறந்து ஏகாந்தமாக ரசிக்கிறவர், ''நல்லா பாடுறாப்லல்ல!'' என்கிறார் தன் புருவம் சொடுக்கிச் சிரித்து.
பயணம் தொடர்கிறது!
தமிழ்நாடே கொண்டாடுகிற ஒரு நடிகர், அந்த ஒளிவட்டம் எதுவும் இல்லை. பாதுகாப்புக்கு யாரும் இல்லை. படை பரிவாரங்கள், உதவியாளர்கள் இல்லவே இல்லை. தன் பையைத் தானே சுமந்தபடி, பாத யாத்திரையாகச் செல்கிறார்.
கற்பிழக்காத காற்று. இரைச்சலே இல்லாத இயற்கை. ''நம்ம ஊர்ல இருக்கிற வசதிகள் என்னென்னவோ இங்கே இல்லைதான். ஆனா இங்கே இருக்கிற அமைதி வேறெங்கேயும் இல்லை. அமைதியான சூழல், நம்ம மனசைத் திறக்கும். மனசு அமைதியா இருந்தா எண்ணம் தூய்மையாகும். எண்ணம் தூய்மையா இருந்தா, எல்லோரும் சுத்தமா இருப்போம்ல!''
இமயமலைத் தொடரின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான நந்தாதேவியின் (25,661 அடிகள்) அடிவாரத்தில், அல்மோரா மாவட்டத்தில் இருக்கிறது ராணிகேத். அங்கிருந்து துரோண்மலை மீது ஏற வேண்டும். புலிகள் உலவும் அந்த மலை உச்சியில், காலங்கள் தாண்டிய கம்பீரத்துடன் காத்திருக்கிறது பாபாஜியின் கற்குகை!
'பாபாஜி’ என்றால் 'வணக்கத்துக்குரிய தந்தை’ என்று பொருள்.
மூன்றாவது முறையாக தன்னைத் தரிசிக்க, தன் தாள் பணிந்து நன்றி சொல்ல வருகிற சிஷ்யனுக்காக, இந்தமுறை சிலிர்ப்பூட்டும் அனுபவம் தரக் காத்திருக்கிறார் மகாமுனி பாபாஜி மகராஜ்!
இத்தனை காலத்தில் ஆறேழு பேர் மட்டுமே நுழைய முயற்சித்த குகை அது. குத்திக் கிழிக்கும் கூரிய கற்கள் கொண்ட அபாயகரமான குழி அது. அதற்குள் ஒரு மனிதன் உடலைத் திணித்து நகர்ந்து நகர்ந்து செல்வதென்பது, உயிரைப் பணயம் வைக்கும் தருணம்.
விடுகதைதானோ இவர் வாழ்க்கை...
விடை தேடித்தானோ இந்தப் பயணம்!