Monday, November 15, 2021

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை -- தேர்ச் சக்கரம்

 இந்தியாவிடமிருந்து ஆங்கில உலகம் பெற்றுக்கொண்ட சொற்களில் ஒன்று, ‘ஜகர்நாட்.’ பிரபஞ்சத்தின் கடவுளான ஜெகந்நாதரிடமிருந்து உருண்டுவந்த பெயர் இது. விஷ்ணுவின் அவதாரமான ஜெகந்நாதருக்கு ஒடிசாவிலுள்ள பூரியில் 12-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய கோவிலொன்று எழுப்பப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அங்கே நடைபெறும் தேரோட்டத்தைக் காண உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் பக்தர்களும், அவர்களுக்குச் சமமாகச் சுற்றுலாப்பயணிகளும் திரண்டுவருவது வழக்கம். உற்சவ மூர்த்தியான ஜெகந்நாதர் தனது சகோதர, சகோதரியான பலபத்திரர், சுபத்ரா தேவி இருவரோடு எழுந்தருளுவதை லட்சக்கணக்கானவர்கள் தரிசிப்பது வழக்கம். முதலில் பலபத்திர தேரும், பிறகு சுபத்ரா தேவி தேரும் புறப்பட்டு வரும். ஜெகந்நாதரின் பிரமாண்டமான தேர் இறுதியாகத் தோன்றும்.

உருண்டோடி வரும் தேர்ச் சக்கரத்தைக் காணும்போது, `என் பாதையில் ஆயிரம் மலைகள் குறுக்கிட்டாலும் தவிடுபொடியாக்கி விட்டு முன்னேறிச் செல்வேன்’ என்று அது சொல்வதுபோல் இருந்தது பலருக்கும். நீங்காத அச்சத்தோடும் பரவசத்தோடும் சக்கரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றனர் அயல்நாட்டுக்காரர்கள். தேர் அவர் களை மயக்கியது, குழப்பியது, அச்சுறுத்தியது, நிலைகுலையவைத்தது. அவர்கள் கற்பனையில் ஏறி கல்போல் அமர்ந்துகொண்டு, விலக மாட்டேன் என்றது. இந்த அசாதாரண உணர்வை ஏற்படுத்தியவர் ஜெகந்நாதர் அல்லவா?

எனவே ஓங்கி உலகளந்து நிற்கும் எதையும் ஆங்கில உலகு, `ஜகர்நாட்’ என்று அழைக்கத் தொடங்கியது.

அளவில் பெரிய சரக்கு வண்டிக்கு பிரிட்டனில் இந்தப் பெயர்தான். எதைக்கொண்டும் தடுத்து நிறுத்த முடியாத, எப்பாடுபட்டாலும் வெல்ல முடியாத, நம் சிற்றறிவுக்குச் சிக்காத பெரும் ஆற்றலுக்கும் இந்தப் பெயரையே சூட்டினார்கள்.

பூரி தேரோட்டம் குறித்து இத்தாலியப் பயணியான நிகோலோ டி காண்டி எழுதியுள்ள பதிவு முக்கியமானது. இந்தியா என்றதும் இன்றும் உலகின் மனதில் சட்டென்று விரியும் சித்திரங்களில் ஒன்றாக இது இன்றளவும் நீடிக்கிறது.

டெல்லி சுல்தானகம் எறும்பாகத் தேய்ந்துகொண்டிருந்தபோது, முகமது பின் துக்ளக்கிடம் பணியாற்றிவந்த ஹரிஹரா, புக்கா ஆகிய இரு சகோதரர்களும் பிரிந்துவந்து கர்நாடகத்தின் தலைநகரான விஜயநகரத்தில், துங்கபத்திரா நதிக்கரையில் ஒரு புதிய ஆட்சியைத் தொடங்கிவைத்தனர். அது விஜயநகரப் பேரரசாக மலர்ந்தது. விஜயநகரத்தை நேரில் கண்டு எழுதிய அயல்தேசத்துப் பயணிகளில் முக்கியமானவர் நிக்கோலோ டி காண்டி. மார்கோ போலோ தனது பயணங்களை முடித்துக்கொண்டு 1295-ம் ஆண்டு வெனிஸ் திரும்பினார். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு காண்டி இங்கு வந்துசேர்ந்தார். குறிப்பாக, எந்த ஆண்டுகளில் அவர் பயணம் செய்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் தேவராயன் (1406-1422) அல்லது இரண்டாம் தேவராயன் (1424-1446) ஆட்சிக்காலத்தில் அவர் கர்நாடகத்துக்கு வந்திருக்கலாம்.

வெனிஸில் செல்வச் செழிப்புமிக்க பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் காண்டி. டமாஸ்கஸில் வணிகத்தில் ஈடுபட்டுவந்த அவரை, கிழக்கு ஈர்த்ததில் வியப்பு எதுவுமில்லை. பாரசீகத்தைக் கடந்து, மலபார் கரையோரம் மிதந்து வந்து, இந்தியாவின் பல பகுதிகளைச் சுற்றிவந்தார். சிலோன், சுமத்ரா, ஜாவா என்று சுற்றிவிட்டு இறுதியில் சீனாவுக்கும் சென்றிருக்கலாம். கெய்ரோவில் தன் மனைவி யையும், இரு குழந்தைகளையும் தொற்றுநோய்க்குப் பறிகொடுத்துவிட்டு மீண்டும் வெனிஸ் திரும்பியபோது, 25 ஆண்டுகள் கரைந்திருந்தன.

இந்தியாவை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவுடனே காண்டிக்கு உறுதியாக ஒன்று தெரிந்துவிட்டது. `எண்ண முடியாத அளவுக்கு மனிதர்களும், எண்ண முடியாத அளவுக்குக் கடவுள்களும் ஒன்று கலந்து வாழும் பூமி இது. ஒவ்வொரு கடவுளுக்கும் பல வடிவங்களில், பல வண்ணங்களில் கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். கோயிலுக்குள் அழகிய சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. கல் தொடங்கி தங்கம், வெள்ளி, யானைத் தந்தம் என்று பலவற்றைக் கொண்டு திருவுருவச் சிலைகளை எழுப்புகிறார்கள். அளவுகள் மாறுபடுகின்றன. அறுபதடி உயரச் சிலைகளும் உள்ளன!

பலவிதமான வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன’ என்கிறார் காண்டி. காலை எழுந்ததும் நல்ல நீரில் சுத்தப்படுத்திக் கொண்டு கோயிலுக்குச் செல்கிறார்கள். மாலையும் ஒரு முறை செல்கிறார்கள். இரு கரங்களையும் மேலே உயர்த்தி நிலத்தில் அப்படியே விழுந்து கும்பிட்டுவிட்டு, மந்திரங்கள் ஓதி முடித்துவிட்டு, தரையை முத்தமிடுகிறார்கள். சிலர் நறுமணப் பொருள்களை விளக்காக ஏற்றுகிறார்கள். சில இடங்களில் மணியோசை எழுப்பியும், சில இடங்களில் சிறிய பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பியும் கடவுளின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

`கடவுளுக்கு விமரிசையாக விருந்து படைக்கப்படுகிறது. படைத்து முடித்த பிறகு அந்த உணவை ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். சில கோயில்களில், கோயில் பூசாரிகள் திருவுருவச் சிலைக்கு முன்னால் தோன்றி பக்தர்களோடு உரையாடுகிறார்கள். நீண்ட சொற்பொழிவுகள் (உபன்யாசம்) நிகழ்த்தப்படுகின்றன. `போதும், இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுபட்டு மறுமைக்குத் தயாராகுங்கள்’ என்று சொற்பொழிவின் ஒரு பகுதியாக பக்தர்களை அவர்கள் வேண்டிக் கொள்கின்றனர். `கடவுளுக்காக அல்ல, உங்களுக்காக இதை நீங்கள் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்கள்

வழிபட்டோமா, எழுந்து வந்தோமா என்று அவர்கள் இருப்பதில்லை. தியாகம் வழிபாட்டின் ஒரு பகுதி என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தியாகம் என்றால் பொன்னோ பொருளோ அல்ல, உயிர். உயிர்த் தியாகம் செய்பவர்கள் உன்னத மானவர்களாகக் கருதப்படுகின்றனர். தீக்குளிப்பது தொடங்கி பல வழிகளில் கடவுளுக்காக உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அவற்றுள் ஒரு வழிமுறையை காண்டி விரிவாக விவரிக்கிறார்.

வட்ட வடிவில் பெரிய இரும்பு வளையம் ஒன்று இருக்கிறது. வெளிப்பகுதி சாதாரணமாகவும், உள்பகுதி மிகக் கூர்மையாகவும் இருக்கும். வளையத்திலிருந்து நீண்டு வரும் சங்கிலி உறுதியான ஓரிடத்தில் பிணைக்கப்பட்டிருக்கும். தியாகிகள் திரண்டுவந்து இந்த வளையத்துக்குள் நுழைவார்கள். மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். கழுத்தில் கூரான பகுதி உரசிக்கொண்டிருக்கும். மந்திரத்தின் ஒலி அதிகரிக்கத் தொடங்கும்போது அவர்கள் கழுத்து மெல்ல மெல்ல அறுபட ஆரம்பிக்கும். எல்லாம் முடிந்திருக்கும்போது தலை நிலத்தில் விழுந்திருக்கும். தலையை இழந்தாலும் தியாகி எனும் பட்டத்தை ஒவ்வொருவரும் ஈட்டியிருப்பார்கள். அதன் பிறகு புனிதர்களாக அவர்கள் கொண்டாடப் படுவதும் உண்டு’ என்கிறார் காண்டி.

அதன் பிறகு பூரியில் நடப்பதை விவரிக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் மையக் கடவுளைத் தேரில் பொருத்தி நகர் முழுக்கத் தேரை இழுத்துவருவார்கள். தேரைப் பின்தொடர்ந்து மக்கள், பாடல்களை இசைத்துக்கொண்டு ஊர்வலம் செல்வார்கள். அவர்களில் பலர் பக்தி வெள்ளத்தில் தீவிரமாக ஆழ்ந்துவிடுவதுண்டு. அத்தகைய தருணங்களில் உணர்வெழுச்சியோடு அவர்கள் நிலத்தில் பாய்வார்கள். தேர்ச் சக்கரங்கள் தங்கள் உடலில் ஏறி, இறங்கும்வரை அவர்கள் அமைதியாகக் காத்திருப்பார்கள். சக்கரத்தில் சிக்கி உயிர்விடுவதை மாபெரும் பேறாக அவர்கள் கருதுகிறார்கள். சக்கரத்தில் உயிர்த் தியாகம் செய்தால் கடவுள் அதை ஏற்பார் என்பது அவர்கள் நம்பிக்கை.

பக்தர்களில் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உடலைக் கீறி, துளை ஏற்படுத்தி, கயிறு மூலமாகத் தேரோடு சேர்த்து தங்களைப் பிணைத்துக்கொள்வார்கள். தேர் நகரும்போது அவர்களும் சேர்ந்து இழுக்கப் படுவார்கள். இப்படியும் உயிர் பிரியும். பாதி இறந்து, பாதி பிழைத்தவர்களும் உண்டு. இந்த வகை தியாகத்தை, `கடவுளுக்கு மிகவும் விருப்பமானது’ என்கிறார் காண்டி.

நேரடியாக பூரி சென்று இதையெல்லாம் கண்டாரா அல்லது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தன் பதிவை எழுதினாரா என்று தெரியவில்லை. அவருக்குப் பிறகு பூரி ரத யாத்திரை குறித்து எழுதிய எவருமே திடீர் திடீரென்று சக்கரத்தின் முன்பு பாய்ந்து விழுந்து உயிரைவிடும் பக்தர்களைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் விமரிசையான கொண்டாட்டங்களையும், மாபெரும் மக்கள் ஊர்வலங்களையும், மிக முக்கியமாக பிரமாண்டமான தேர்ச் சக்கரங்களையும் வியந்து வியந்து அவர்கள் எழுதினார்கள்.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஓரிடத்தில் ஒன்று குவியும்போது நிலைமை கைமீறி, தள்ளுமுள்ளு ஏற்படுவதையும், கீழே விழுபவர்களை மிதித்துத் தள்ளிவிட்டுப் பலர் முன்னேறுவதையும் நாம் இன்றும் பார்க்கிறோம். பூரியிலும் அப்படி உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம். சக்கரத்தில் மிதிபட்டுச் சிலர் இறந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் காண்டி குறிப்பிடுவதைப்போல் பெரிய அளவில் தற்கொலைகள் நடைபெற்றிருக்காது. அப்படி ஒரு நம்பிக்கையோ, சடங்கோ நிலவியதாகவும் சொல்லவும் முடியாது.

இருந்தாலும் நாளடைவில் ஜெகந்நாதர் தேர் சக்கரம் ஒரு குறியீடாக மாறிப்போனது. `நீ ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் சக்கரத்திடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன்’ என்று அம்மாக்கள் குழந்தைகளை மிரட்டுவதற்குச் சக்கரத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். நாகரிகமற்ற, பழைமைவாத நாடாக இந்தியாவை முன்னிலைப்படுத்த ஐரோப்பியர்கள் சக்கரக் கதைகளை ஆதாரங்களாகக் காட்டினார்கள்.

`பலி வாங்கும் சக்கரம்’ என்றும் `ரத்தம் குடிக்கும் சக்கரம்’ என்றும் சிலர் வர்ணித்தனர். சக்கரத்தைக்கொண்டு இந்து மதம் குறித்தும், இந்தியா குறித்தும் சிலர் மோசமான மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டனர். ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 4,000 பேர் சக்கரத்தில் விழுந்து உயிர் மாய்த்துக்கொள்வதாக யாரோ ஆதாரமே இல்லாமல் எழுதினார்கள். அதையே ஆதாரமாகக்கொண்டு மேலும் பல சக்கரக் கதைகள் புனையப்பட்டன. சக்கரம் என்னவோ அதேபோல்தான் இன்னமும் சுழன்றுகொண்டிருக்கிறது!

Wednesday, November 10, 2021

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - இபின் பதூதாவின் டெல்லி

 துக்ளக்கின் இன்னொரு பக்கத்தை அவரோடு பணியாற்றிய காலத்தில் அல்ல, அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஓடிய பிறகே பதிவுசெய்துள்ளார் இபின் பதூதா. டெல்லியில் இருந்தவரை அடக்க ஒடுக்கமாகவே இருந்திருக்கிறார். தனது பயணங்களை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய பிறகே அவர் குரல் வெளியில் வந்திருக்கிறது.


`துக்ளக்கின் மாளிகைக் கதவை எப்போது தட்டினாலும், உங்கள் கைநிறைய பணம் கிடைக்கலாம் அல்லது உங்கள் தலை துண்டிக்கப்படலாம். இந்த இரண்டில் எதுவும் நடக்கலாம். இரண்டும் நடந்துகொண்டிருந்தன’ என்கிறார் இபின் பதூதா.

அள்ளி அள்ளிக் கொடுப்பதால் துக்ளக்கின் கரம் சிவந்திருக்கிறதா அல்லது ஓயாமல் கொன்று குவிப்பதால் ரத்தக்கறை நிரந்தரமாகப் படிந்துவிட்டதா என்றால், இரண்டுமேதான் என்பார் பதூதா. டெல்லியில் மக்கள் கூட்டம் மிகுந்திருக்கும் பகுதிகளில் திடீரென்று துக்ளக்கின் யானைகள் தோன்றும். அவற்றின்மீது அமர்ந்திருக்கும் சுல்தானின் ஆட்கள் கவட்டை மூலம் தங்கம், வெள்ளி நாணயங்களை மக்களை நோக்கிச் செலுத்துவார்கள். கூட்டம் போட்டி போட்டு, முண்டியத்துக்கொண்டு பரிசுகளைப் பெற்றுக்கொள்ளும். இதுவொரு வகை துக்ளக். கோபாவேசத்தில் யாரேனும் ஒருவர் தப்பித்தவறி துக்ளக்கைப் பழித்துவிட்டால் அவரைக் கைதுசெய்து இழுத்துவருவார்கள். உலோகக் கருவிகள் மூலம் அவர் வாயை அகலமாகப் பிரித்துக் கிழித்து, மனிதக்கழிவுகளைத் தொண்டை வழியே உள்ளே செலுத்துவார்கள். இது இன்னொரு துக்ளக்.

ஒருநாள் பதூதாவுக்கே ஆபத்து வந்துவிட்டது. ஒரு சூஃபி துறவியோடு பதூதா நெருங்கிப் பழகுகிறார் என்னும் தகவல் துக்ளக்கின் காதுகளை எட்ட, உடனடியாக இருவரும் கைதுசெய்யப்பட்டனர். மத நம்பிக்கைகளுக்கு விரோதமாகச் செயல்பட்ட துறவிக்கு உடனடி மரண தண்டனை விதித்தார் துக்ளக். தண்டனை எப்படி நிறைவேற்றப்பட்டது தெரியுமா? அவருடைய தாடியைப் பிடித்து ஒவ்வொரு ரோமமாகப் பிடுங்கியெடுத்து இறுதியில் அவர் தலையைக் கொய்திருக்கிறார்கள். அடுத்து பதூதா விசாரிக்கப்பட்டார். அதற்குள் குலை நடுங்கிவிட்டது அவருக்கு. `எனக்கு அந்தத் துறவியைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர் தங்கியிருந்த குகையைக் காணவே சென்றேன், அவரைக் காண அல்ல’ என்று மன்றாடினார் பதூதா. மௌன விரதம் பூண்டு, 33,000 முறை பரிகார உச்சாடனம் செய்த பிறகு ஒரு வழியாக அவர் விடுவிக்கப்பட்டார்.


அதன் பிறகு, டெல்லி அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. துறவுக்கோலம் பூண்டார். உலக வாழ்க்கை போதுமென்றாகிவிட்டது. `நான் புனித யாத்திரைக்குப் போக முடிவெடுத்து விட்டேன். விடை கொடுங்கள் சுல்தான்’ என்று துக்ளக்கிடம் விண்ணப்பித்துக் கொண்டார். ‘சரி போ’ என்று விட்டுவிடுவார் என்று நினைத்தார் பதூதா. அவர் நினைப்பு பொய்த்துப்போனது.

`சமீபத்திய நிகழ்வுகளால் மனம் நொந்துவிட்டார்போலிருக்கிறது. அவரை வழிக்குக்கொண்டு வருவோம்’ என்று நினைத்த துக்ளக், மதிப்புமிக்க ஒரு புதிய பதவியைத் தூக்கி அவரிடம் கொடுத்தார். `இன்று முதல் உங்களை என் அயலகத் தூதுவராக நியமிக்கிறேன். பயணங்களை விரும்பும் உங்களுக்கு இந்தப் பதவி பொருத்தமாக இருக்கும். சீனாவுக்குச் சென்று அங்குள்ள மன்னரைச் சந்தியுங்கள். இதுதான் உங்கள் முதல் பணி.’

செய்ய மறுத்தால் அதற்கென்ன தண்டனையோ என்று பயந்த பதூதா, பரிவாரங்களோடு சீனாவுக்குக் கிளம்பினார். மொத்தம் 4,000 பேர். அவர்களில் பெரும்பாலானோர் சீன மன்னருக்குப் பரிசாக துக்ளக் அனுப்பியிருந்த அடிமைகள். ‘பரிசை’ ஒப்படைக்கவேண்டியது பதூதாவின் பணி. டெல்லியைவிட்டுக் கிளம்பி, அலிகாரை அடைவதற்குள் கொள்ளைக் கூட்டத்தினரிடம் ஒட்டுமொத்தக் கூட்டமும் சிக்கிக்கொண்டது. பதூதாவோடு வந்த பலர் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். உயிர்பிழைத்தால் போதும் என்று இபின் பதூதா அங்கிருந்து தப்பியோடினார். அலைந்து, திரிந்து உணவு கிடைக்காமல் எங்கெங்கோ சுற்றித்திரிந்து மயங்கிச் சரிந்தார். வழிப்போக்கர்கள் யாரோ கவனித்து அவரை மீட்டிருக்கிறார்கள்.

நடந்த அனைத்தையும் துக்ளக் கேள்விப்பட்டார். இப்போதும் இபின் பதூதாவை அவர் விட்டுவிடவில்லை. ‘உயிரோடுதானே இருக்கிறாய், நல்லது. நான் சொன்னபடி சீன மன்னரைச் சந்தித்துவிட்டு வா’ என்று செய்தி அனுப்பினார். ‘நிச்சயம் செல்கிறேன் சுல்தான்’ என்று பதில் அனுப்பிவிட்டு மீண்டும் இந்தியாவில் சுற்றித்திரிய ஆரம்பித்தார் பதூதா. `சுல்தான் இட்ட பணியைச் செய்து முடித்தேன். சீனா சென்றேன்’ என்று தன் குறிப்புகளில் அவர் எழுதினார். ஆனால் உண்மையில் சீனா சென்றாரா அல்லது சென்றதுபோல் கணக்கு காட்டினாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

அவ்வப்போது அவர் எழுதிவைத்திருந்த அனுபவக் குறிப்புகள் அனைத்தும் கொள்ளையர்களிடம் சிக்கித் தொலைந்து விட்டதால், இறுதிக்காலத்தில் தன் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்துத்தான் தன் பயண நூலை எழுதி முடித்தார் இபின் பதூதா. துக்ளக் தர்பார் குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் பதிவுகளில் இவருடையது முக்கியமானது. குறிப்பாக, துக்ளக் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் செயல்கள் குறித்து அவர் அளித்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு இந்தியா குறித்த ஓர் இருண்ட பிம்பத்தை, பிற்கால ஐரோப்பிய ஆய்வாளர்கள் கட்டமைத்தார்கள். `மேற்குபோல் இல்லாமல் கிழக்கு எவ்வளவு பிற்போக்காகவும் காட்டுமிராண்டித்தனத்தோடும் இருந்தது பார்த்தீர்களா?’ என்று அவர்கள் வாதிடுவதற்கு பதூதா உதவினார்.

இந்தியா மட்டுமல்ல, 14-ம் நூற்றாண்டு இஸ்லாமிய உலகம் பற்றிய ஒரு சித்திரத்தையும் அவர் குறிப்புகளிலிருந்து நம்மால் உருவாக்கிக்கொள்ள முடிகிறது. அவர் பயணம் செய்தவை பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும் ஒவ்வோர் இடத்திலும் இஸ்லாம் ஒவ்வொருவிதமாக வெளிப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் இடத்திலும் அங்கிருந்த மற்ற மதங்க ளோடு, மற்ற நம்பிக்கைகளோடு, தத்துவங்களோடு, பண்பாடுகளோடு அது உரையாடியிருக்கிறது. தன்னிடமிருப்பதைக் கொடுத்திருக்கிறது, அங்கிருப்பதைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் இஸ்லாமும் மொரோக்கோவின் இஸ்லாமும் ஒன்றல்ல. அரபுலகப் பண்பாடும், இந்திய இஸ்லாமியப் பண்பாடும் ஒன்றல்ல. பொதுவான அம்சங்கள் பல இருந்தாலும் வேறுபாடுகளும் மிகுதிதான். ஆக, இஸ்லாம், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமியப் பண்பாடு ஆகிய பதங்கள் உலகப் பொதுவானவை அல்ல; அவற்றை ஒரே பொருளில் எல்லா இடங்களிலும் பயன்படுத்த இயலாது என்னும் புரிதலை பதூதா நமக்கு ஏற்படுத்துகிறார்.

அவருடைய பயண வாழ்வில், டெல்லி கால் பகுதியை எடுத்துக்கொண்டது. `இஸ்லாமிய உலகிலேயே பெரிய நகரம், டெல்லிதான்’ என்கிறார். பரந்து விரிந்த டெல்லியின் அழகும் வலிமையும் அவரை ஈர்த்தன. `இங்கே நகரைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதில் சுவர் போன்றதொன்றை உலகில் வேறெங்கும் கண்டதில்லை’ என்கிறார். டெல்லி சுல்தானகத்தின் அடையாளமாகத் திகழும் குதுப் மினார் அவரை மயக்கியது. சிவப்பு நிறக் கற்களால் உருவாக்கப்பட்ட மசூதியின் உயர்ந்த கோபுரத்தையும் வேலைப்பாடுகளையும் வர்ணிக்கிறார். `குதுப் மினார் அமைந்திருக்கும் இடம் விசாலமாக இருக்கிறது. யானைகூட வந்து பார்க்கலாம். உண்மையில் யானை உதவியோடுதான் இதைக் கட்டியதாகவே சொல்கிறார்கள்’ என்கிறார் பதூதா.

தெற்கு டெல்லியில் அமைந்துள்ள மெஹ்ராலி இரும்புத்தூணைக் கண்டு வாய்பிளந்து நின்றிருக்கிறார் பதூதா. `துருப்பிடிக்காத இந்தத் தூணை எந்த உலோகத்தைக்கொண்டு உருவாக்கினார்கள் என்றே தெரியவில்லை. நான் விசாரித்தவரையில் ஏழு உலோகங்களின் கலவை என்று இதைச் சொல்கிறார்கள்’ என்கிறார்.

1335-ம் ஆண்டு தொடங்கி ஏழாண்டுகள் டெல்லியில் நீடித்த பஞ்சத்தை நினைவுகூர்கிறார் பதூதா. `சுல்தான் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து மும்முரமாகப் போரிட்டுக்கொண்டிருந்தபோது, ஆயிரக்கணக்கானவர்கள் டெல்லியில் மடிந்துகொண்டிருந்தார்கள்’ என்கிறார் பதூதா. தெற்கில் தொடங்கிய கிளர்ச்சி, டெல்லியையும் நெருங்கியிருக்கிறது. ராணுவத்துக்குள்ளிருந்தே துக்ளக்குக்கு எதிர்ப்புகள் வெடித்திருக்கின்றன. எதிர்த்த அனைவரையும் துக்ளக் வீழ்த்தினார். துரோகிகளை யானைகள் மிதித்தும் கிழித்தும் (தந்தத்தில் வாளைக் கட்டிவிடுவார்களாம்!) கொன்றிருக்கின்றன. சுற்றிலும் மேளங்கள் முழங்கிக்கொண்டிருக்கும். ஒரு மனிதனை இழுத்து வந்து யானையிடம் போடுவார்கள். பந்துபோல் பாவித்து அந்த மனிதனை வானில் தூக்கிப்போட்டு கீழே விழுந்ததும் மிதிக்குமாம் யானை!

`டெல்லியில் என்னவெல்லாம் உண்டேன், என்னென்ன உணவுகளைக் கண்டேன்’ என்று தனியே விவரிக்கிறார் பதூதா. வட்ட வடிவ பெரிய ரொட்டி, ஆட்டிறைச்சி, நெய்ப் பதார்த்தங்கள், இனிப்புகள், வெங்காயம், பச்சை மிளகாய், ஏதேதோ உள்ளேவைத்து மடித்து மடித்து உருவான ‘சம்புசாக்’ (சமோசா) என்று பட்டியல் நீள்கிறது. துக்ளக் அவையில் (துக்ளக்குக்கு அடுத்து) சமோசாவை எல்லோரும் விரும்புவார்களாம். `வட இந்தியாவுக்கு உளுத்தம் பருப்பும் காராமணியும்’ பிடித்தமானவை என்கிறார்.

உண்பதற்கு முன்பு இனிப்பு சர்பத், உண்டு முடித்த பிறகு பார்லி நீர் அருந்துவது வழக்கமாம். பிறகு வெற்றிலை பாக்கு. காய்கள், இறைச்சி வகைகள், (தயாரிக்கப்படும் முறையும் உள்ளது) பழ வகைகள் ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார். எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் உள்ளதைப்போல் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் உண்பதாகச் சொல்கிறார். விடைபெறுவதற்கு முன்பு கோழிக்கோட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்ததால், அப்பகுதியின் உணவு, வர்த்தகம், பண்பாடு ஆகியவற்றையும் சுருக்கமாகப் பேசுகிறார்.

வழி நெடுகிலும் இபின் பதூதா திருமணங்கள் செய்துகொண்டேயிருந்தார். அவருக்கு எத்தனை மனைவிகள் இருந்தனர், எத்தனை குழந்தைகள் பிறந்தன என்று சொல்வது கடினம். தனது 65-வது வயதில் மரணமடைந்தார். கலகத்தை அடக்க சிந்து மாகாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, தனது 61-வது வயதில் துக்ளக் இறந்துபோனார்.