Tuesday, January 26, 2021

தூங்காநகர நினைவுகள் - 2 | ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள்... மதுரை மலைகளில் மூதாதையர்களின் ரேகைகள்!

 தொல் மனிதனின் வெளிப்பாடுகளான பாறை ஓவியங்கள் மதுரையின் கிடாரிப்பட்டி, கருங்காலக்குடி, கீழவளவு மற்றும் அணைப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் 6000 - 8000 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்டவை.

கிடாரிப்பட்டி அழகர்மலையில் பெருங்கற்காலம் மற்றும் புதிய கற்காலத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. மனித உருவம் கொண்ட கோட்டோவியம், நீண்ட கொம்புடைய மான், கையில் கருவியுடன் மனித உருவம் மற்றும் அதன் அருகில் ஒரு நாய், எளிய கோடுகளாலான மான், ஏணி போன்ற ஒரு வடிவம் அதை தவிர்த்து இனம் காண முடியாத விலங்குகளும் உருவங்களும் அழகர்மலை பாறைகளின் மீது வரையப்பட்டுள்ளது.

கருங்காலக்குடியின் மேற்குப் பகுதியில் இருக்கும் மலைக் குன்றில் இயற்கையாய் அமைந்துள்ள மலைக் குன்று ஒன்றின் விதானப் பகுதியில் சில ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு கால கட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன. திமிலுடன் இரண்டு மாடுகள், கோட்டோவியத்தில் மாட்டின் உருவம் மற்றும் அடையாளம் காண இயலாத உருவங்கள் சிலவும் உள்ளன.

அணைப்பட்டியில் பெருங்கற்காலம் மற்றும் பிந்தைய காலங்களில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. இரண்டு மனித உருவங்கள் எதிரெதிரே நிற்றல், இரண்டு மனித உருவங்கள் கைபிடித்து நடந்து வருதல், குதிரை மீது ஏறி வருபவன், குதிரையின் மீது மனித உருவம் பயணிப்பது, குதிரையில் வரும் ஒருவரை தரையில் இருந்து ஆயுதத்துடன் தாக்க முற்படுவதும் அருகே விழுந்த நிலையில் குதிரையும் வீரனும், கையில் வாள் மற்றும் கேடயத்துடன் மனித உருவம், தலை அலங்காரத்துடன் மனித உருவம், நடனமாடும் ஆண்களும் பெண்களும், பூ அலங்கார ஓவியம், விலங்கின் மீது ஆயுதங்களுடன் மனித உருவம் என இந்தக் குகையில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.

மதுரை கீழவளவில் பிற்கால கற்செதுக்கு ஓவியங்கள் காணப்படுகின்றன. யானையின் ஓவியமும் பிற்கால கோட்டோவியத்தில் மான்களும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள பாறை ஓவியங்கள் பெரும்பாலானவை சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் கறுப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் ஓவியங்கள் ஒரே நிறத்தில் வரையப்பட்டுள்ளன.

மதுரை தவிர்த்து குறும்பவரை, மகராஜகடை, குமுதிபதி, கீழவளவு, திருமலை, ஒதியத்தூர், கோவனூர், மல்லப்பாடி, வெள்ளரிக்கோம்பை, கீழ்வாலை, கல்லம்பாளையம், ஏர்பெட்டு-செம்மநாரை, உசிலம்பட்டி குறிஞ்சிநகர், ஆழியார், ஆலம்பாடி கரிக்கையூர் என தமிழகம் முழுவதுமே பாறை ஓவியங்கள் விரவிக்கிடக்கிறது.

உலகம் முழுவதும் இருக்கும் பாறை ஓவியங்கள் உள்ள மலைகள், குகைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அதற்கு முழுமையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வளாகங்களாகப் பராமரிக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களின் பாடப்புத்தகங்களில் அவர்களின் நிலத்தின் பெருமிதங்களாக இந்தப் பாறை ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன

No comments: