Wednesday, January 27, 2021

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 2 | ராயகோபுரம் - கைவிடப்பட்ட பிரமாண்டமும் அதன் வரலாறும்!

 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் மற்ற கோபுரங்களின் அடிப்பகுதியைவிட, ராயகோபுரத்தின் அடிப்பகுதி மூன்று மடங்கு பெரிதானது. திராவிடக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டது. இதன் அஸ்திவாரத்தூண்கள் ஒரே கல்லால் ஆனது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகிறவர்கள் புதுமண்டபத்தை எட்டிப்பார்க்காமல் வருவதில்லை. புத்தகக்கடைகளும், பாத்திரக்கடைகளும், தையல் கலைஞர்களும், வண்ண வண்ணத் துணிப் பைகளும், ஆயாக்களின் சுருக்கு பைகளும், வளையல் கடைகளுமாய் எப்போதும் 'ஜேஜே' என்று இருக்கும். இந்த மண்டபத்தின் கிழக்கே உள்ளது எழுகடல் தெரு.

புதுமண்டபத்தின் உயிரோட்டத்திற்கு சற்றும் குறையாத ஜீவனோடு இயங்கும் தெரு. கடைகளின் கடல் என்று கூடச்சொல்லலாம். நெரிசலும், சந்தடியும் மிகுந்த தெரு. இந்த இடத்தில் யாரும் பார்க்காமல் கடந்துவிட முடியாத எழிலாய் எழுந்து நின்கிறது ராயகோபுரம்.

சிற்ப அழகுகள் நிரம்பிய கற்தூண்கள் நுழைவாசல் போல, ஆனால் முடிவில்லாமல் வானத்தைப் பார்த்தபடி ஏகாந்தமாய் நிற்கும் பேரெழில். அத்தனை நெரிசல்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் இடையே ‘ஒரு வரலாற்றின் சாட்சியாய் நான் நிற்கிறேன்’ என்கிற கம்பீரம் அதில் தொனிக்கும்.

பல நூற்றாண்டுகளாய் வாழ்க்கை வீசியெறியும் அன்றாடச் சவால்களைச் சந்திக்கத் தலைதெறிக்க ஓடும் மனிதர்களைப் பார்த்தபடி பூமிக்குக்கீழ் 15 அடி, மேலே 35 அடி என நிமிர்ந்து நிற்கிறது இந்த கோபுரம். இதுதான் மதுரையில் திருமலை நாயக்கர் நிர்மாணிக்க நினைத்த ராயகோபுரம். அடித்தளத்தோடு நிற்கும் மதுரை வரலாற்றின் மற்றுமொரு பக்கம்.

மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் யாராவது, ‘மணலைக் கயிறாத் திரித்துவிடுவேன்; வானத்தையே வில்லாக வளைத்துவிடுவேன்’ என்று சாத்தியமற்றவற்றைச் செய்துகாட்டுவதாக வாய்ச்சவடால் அடிப்பதைக் கண்டால் ஊர்ப் பெரியவர்கள், “வந்துட்டாருய்யா, ராயகோபுரத்துக்கு அடி போட்டா மாதிரி” என்று நக்கலாகச் சொல்லிச் சிரிப்பார்கள். முடியாதவற்றின் வரலாற்றுத் தடமாகவே மாறிவிட்ட ராயகோபுரம் குறித்த சில தகவல்களைக் காண்போம்.

‘ராய’ என்பதற்குத் தெலுங்கு மொழியில் ‘கல்’ என்று பொருள். கல்லாலேயே கட்டப்படும் கோபுரம் என்பதால் இதற்கு 'ராயகோபுரம்' என்று பெயர். கிருஷ்ணதேவ ராயர் வழிவந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரின் முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய பணி இந்த ராயகோபுரம் கட்டும் பணி! ராயர் என்பது அரசரையும் குறிக்கும் சொல்.

மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் மதுரை செழிப்பான நகரமாய் உருவெடுத்தது என்று வரலாறு சொல்கிறது. இந்தக் காலகட்டத்தில், எதிர்கொண்ட போர்களில் வெற்றி; விஜயநகரப் பேரரசிடமிருந்து விலகித் தன்னாட்சி; திருச்சியில் இருந்த நாயக்க அரசின் தலைநகரை மதுரைக்கு மாற்றியது என எப்போதும் திருவிழாக்களும், கொண்டாட்டங்களுமாய் மாறி வளர்ந்தது மதுரை மாநகரம். நீர்நிலைகளின் பராமரிப்பு, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என மிகப்பெரிய குளத்தை வெட்டியது என பசுமையும் செழுமையுமாக திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை வளமிக்க நகராக உருவெடுத்தது என வரலாறு சொல்கிறது. அமைதி நிலவும் காலத்தில் கலைகள் செழிப்புற்று வளரும்தானே!

திருமலை நாயக்கர் கலை ஆர்வலராகவும் இருந்திருக்கிறார். மிகப்பெரிய கனவுகளைச் சுமந்திருக்கிறார். தமிழக முகமதிய கூட்டுக் கலையாக, மிகப்பெரிய திருமலை நாயக்கர் மகால் இவரது காலத்தில் கட்டப்பட்டதுதான். இதனைத் ‘தென்னிந்தியாவின் தாஜ்மகால்’ என்று சொல்வதுமுண்டு. மீனாட்சியம்மன் கோயிலின் அடையாளங்களில் ஒன்றாக இன்றும் ஜீவனோடு இயங்கிக் கொண்டிருக்கும் புதுமண்டபமும் இவரது காலத்தில்தான் கட்டி முடிக்கபட்டது. திருமலை நாயக்கர் வைணவ பக்தரான போதும், மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையும் பற்றும் உள்ளவர். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஊட்டத்தூர் முதல் குமரி வரை உள்ள 64 வைணவ, சைவக் கோயில்களில் ராயகோபுரம் என்கிற கல்லாலான வானுயர்ந்த கோபுரங்களைக் கட்டும் பணிக்கு அடிக்கல் போடப்பட்டது. (இந்த 64 கோயில்களின் பட்டியல் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. பாண்டிப் பதிநான்கு கோயில்கள் என்று பாடல்பெற்ற சைவக் கோயில்களை மட்டும் பட்டியலிடுகிறார்கள்.)

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் மற்ற கோபுரங்களின் அடிப்பகுதியைவிட, ராயகோபுரத்தின் அடிப்பகுதி மூன்று மடங்கு பெரிதானது. திராவிடக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டது. இந்த ராயக்கோபுரத்தின் சிறப்பு என்னவென்றால், இதன் அஸ்திவாரத்தூண்கள் ஒரே கல்லால் ஆனது. இதன் உயரம் ஐம்பது அடிகள். இத்தூண்களின் அடிப்பகுதி நிலத்தில் பத்து அடிகள் ஆழத்தில் நிலைகொண்டிருக்கிறது. ஒரு வேளை மீனாட்சி அம்மன் கோயில் ராயகோபுரம் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், தென்னிந்தியாவிலேயே மிக உயரமான, பிரமாண்டமான, சிற்ப எழில்கொஞ்சும் கோபுரமாக அமைந்திருக்ககூடும்.

இப்போதும் புதுமண்டபத்திற்கு கிழக்கே எழுகடல் தெருவில், நெருக்கியடித்து வளர்ந்திருக்கும் மொத்தக் கடைகளுக்கிடையே, அழகுமிக்க சிற்பங்களோடு நம்மை எட்டிப்பார்க்கிறது ராயகோபுரத்தின் அடித்தளம். முழுவதும் மறைக்கப்படுவதற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிறவர்கள் இந்த கோபுரத்தின் அடித்தளத்தை மறக்காமல் பார்த்துவிடவேண்டும்.

ஸ்ரீரங்கத்தில் கட்டாமல் விட்ட ராயகோபுரம் சமீபத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பட்டது. திருமலைநாயக்கர் ஏன் இதனை முடிக்காமல் விட்டார் என்பதற்கு ஒரு செவிவழிக் கதை சொன்னார் திருவேடகத்தில் வாழும் பெரியவர் ஒருவர். பணி நடைபெற்றுக்கொண்டிருந்த நாளில், அடிக்கல் நாட்டிய தூணில் ஒரு தேரை இருந்தததைப் பார்த்தார்களாம் சிற்பிகள். இந்தக் கல்லில் தேரை வாழ்கிறது என்றால், ஈரமும், காற்றும் உட்புகும் இளங்கல்லாக அது இருக்கலாம். அந்த மாதிரியான கல் கோபுரம் கட்ட நல்லதல்ல என்று அப்படியே பணியைப் பாதியில் விட்டு விட்டார்களாம். அவருக்குப் பின்னால் வந்த மன்னர்கள் இந்தக் கோபுரங்களில் பெரிதும் ஆர்வம் காட்டாததும் காரணமாய் இருக்கலாம்.

ஒரே நாளில் 64 கோயில்களில் அடிக்கல் நாட்டியதாகச் சொல்லப்படும் முழுமையடையாத ராயகோபுரங்கள், பல கேள்விகளுக்கு பதில் தேட வைக்கின்றன.

ஊட்டத்தூர் முதல் குமரி வரை உள்ள 64 கோயில்கள் என்பதை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்து அடித்தளமிட்டார்கள்? ராயகோபுரத்தை 64 கோயில்களிலும் ஒரே உயரத்தில் கட்ட திட்டமிட்டிருந்தார்களா? ஓர் இடத்தில் இருந்துதான் இப்படி 50 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண்கள் எடுத்து வரப்பட்டனவா? சுதைச் சிற்பங்களால் கோபுரங்களை எழுப்பும் காலத்தில் கல்லால் மிக உயர்ந்த கோபுரங்கள் கட்டும் கனவு திருமலை நாயக்கருக்கு எப்படித் தோன்றியது? போர்களா, கட்டிடக்கலைஞர்கள், சிற்பிகளின் மனத்தாங்கலா, பொருள் போதாமையா... இப்படி எந்தக் காரணத்தால் திருமலை நாயக்கரின் இந்த ராயகோபுரக் கனவு ஏன் நனவாகவில்லை எனப் பலப்பல கேள்விகளைப் பார்க்கிறவர்களின் மனசுக்குள் எழுப்புகிறது ராயகோபுரம்.

சைவக் கோயில்களான ‘பாண்டி பதினான்கு கோயில்கள்’ என்று சொல்லப்படுகிற மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், திருவேடகம், திருவாப்புடையார் கோயில், திருப்புவனம், கொடுங்குன்றம் என்கிற பிரான்மலை, காளையார்கோவில், திருப்புனவாயில், திருவாடனை, திருப்பத்தூர், திருச்சுழி, ராமேஸ்வரம், திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோயில்களில் அடித்தளம் மட்டும் போடப்பட்டு முற்றுப்பெறாத நிலையில் இருக்கும் ராயகோபுரங்களின் மிச்ச சொச்சங்களை இப்போதும் பார்க்கலாம். ஒரு வேளை, இன்றைய நகர் வளர்ச்சியில், சில கற்தூண்கள் காணாமல் போயிருக்கலாம். சில புதைந்திருக்கலாம். சில ஆக்கிரமிப்பில், சாலை விரிவாக்கத்தில் அகற்றப்பட்டிருக்கலாம்.

ஆனால், முழுதாகக் கட்டி முடிக்கப்படாமல் நிற்கிற இந்த மொட்டைக் கோபுரங்களுக்குப் பின்னால் ஒவ்வோர் ஊரிலும் சில நாட்டார் கதைகளும், வரலாறுகளும் உள்ளன. கைவிடப்பட்ட காலம் நம் கண்முன் நிற்கிறபோது அதை வாஞ்சையோடு வருடிப் பார்ப்போம். புதைந்துகிடக்கும் வரலாறுகள் நம் மனதோடு பேசக்கூடும்.


Tuesday, January 26, 2021

தூங்காநகர நினைவுகள் - 2 | ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள்... மதுரை மலைகளில் மூதாதையர்களின் ரேகைகள்!

 தொல் மனிதனின் வெளிப்பாடுகளான பாறை ஓவியங்கள் மதுரையின் கிடாரிப்பட்டி, கருங்காலக்குடி, கீழவளவு மற்றும் அணைப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் 6000 - 8000 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்டவை.

கிடாரிப்பட்டி அழகர்மலையில் பெருங்கற்காலம் மற்றும் புதிய கற்காலத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. மனித உருவம் கொண்ட கோட்டோவியம், நீண்ட கொம்புடைய மான், கையில் கருவியுடன் மனித உருவம் மற்றும் அதன் அருகில் ஒரு நாய், எளிய கோடுகளாலான மான், ஏணி போன்ற ஒரு வடிவம் அதை தவிர்த்து இனம் காண முடியாத விலங்குகளும் உருவங்களும் அழகர்மலை பாறைகளின் மீது வரையப்பட்டுள்ளது.

கருங்காலக்குடியின் மேற்குப் பகுதியில் இருக்கும் மலைக் குன்றில் இயற்கையாய் அமைந்துள்ள மலைக் குன்று ஒன்றின் விதானப் பகுதியில் சில ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு கால கட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன. திமிலுடன் இரண்டு மாடுகள், கோட்டோவியத்தில் மாட்டின் உருவம் மற்றும் அடையாளம் காண இயலாத உருவங்கள் சிலவும் உள்ளன.

அணைப்பட்டியில் பெருங்கற்காலம் மற்றும் பிந்தைய காலங்களில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. இரண்டு மனித உருவங்கள் எதிரெதிரே நிற்றல், இரண்டு மனித உருவங்கள் கைபிடித்து நடந்து வருதல், குதிரை மீது ஏறி வருபவன், குதிரையின் மீது மனித உருவம் பயணிப்பது, குதிரையில் வரும் ஒருவரை தரையில் இருந்து ஆயுதத்துடன் தாக்க முற்படுவதும் அருகே விழுந்த நிலையில் குதிரையும் வீரனும், கையில் வாள் மற்றும் கேடயத்துடன் மனித உருவம், தலை அலங்காரத்துடன் மனித உருவம், நடனமாடும் ஆண்களும் பெண்களும், பூ அலங்கார ஓவியம், விலங்கின் மீது ஆயுதங்களுடன் மனித உருவம் என இந்தக் குகையில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.

மதுரை கீழவளவில் பிற்கால கற்செதுக்கு ஓவியங்கள் காணப்படுகின்றன. யானையின் ஓவியமும் பிற்கால கோட்டோவியத்தில் மான்களும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள பாறை ஓவியங்கள் பெரும்பாலானவை சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் கறுப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் ஓவியங்கள் ஒரே நிறத்தில் வரையப்பட்டுள்ளன.

மதுரை தவிர்த்து குறும்பவரை, மகராஜகடை, குமுதிபதி, கீழவளவு, திருமலை, ஒதியத்தூர், கோவனூர், மல்லப்பாடி, வெள்ளரிக்கோம்பை, கீழ்வாலை, கல்லம்பாளையம், ஏர்பெட்டு-செம்மநாரை, உசிலம்பட்டி குறிஞ்சிநகர், ஆழியார், ஆலம்பாடி கரிக்கையூர் என தமிழகம் முழுவதுமே பாறை ஓவியங்கள் விரவிக்கிடக்கிறது.

உலகம் முழுவதும் இருக்கும் பாறை ஓவியங்கள் உள்ள மலைகள், குகைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அதற்கு முழுமையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வளாகங்களாகப் பராமரிக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களின் பாடப்புத்தகங்களில் அவர்களின் நிலத்தின் பெருமிதங்களாக இந்தப் பாறை ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன

Sunday, January 24, 2021

Tamil Books suggested by Kamalkaasan

 (1) தி பிளேக் (தமிழாக்கம்-கொள்ளை நோய்) (ஆல்பெர் காம்யு)

(2) அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ)

(3) வெண்முரசு (ஜெயமோகன்)

(4) புயலிலே ஒரு தோணி (ப.சிங்காரம்)

(5) அழகர் கோவில் (தொ.பரமசிவன்)

(6) அடிமையின் காதல் (ரா.கி ரங்கராஜன்)

(7) மிர்தாதின் புத்தகம் (புவியரசு)

(8) எஸ்தர் (வண்ணநிலவன்)

(9) தொடுவானம் தேடி (தில்லைராஜன், அருண்குமார், சஜி மேத்யூ)

(10) கோபல்லபுரத்து மக்கள் (கி.ராஜநாராயணன்)

(11) நாளை மற்றுமொரு நாளே (ஜி.நாகராஜன்)

(12) ஜே.ஜே:சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி)

(13) கரைந்த நிழல்கள்(அசோகமித்திரன்)

(14) கூள மாதாரி (பெருமாள் முருகன்)

(15) நிறங்களின் மொழி (தேனி சீருடையான் )

(16) வாசிப்பது எப்படி? (செல்வேந்திரன்)

Friday, January 22, 2021

கூடியம் குகைகள்... 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த குகைக்குள் ஒரு திக் திக் பயணம்!

 "இவ்வளவு பழைமையான இடம் இருக்குன்னு இந்தப் பகுதியில இருக்கிற பலபேருக்குத் தெரியாது. அப்பப்போ வேண்டுதல் வச்சு கிடாவெட்டு நடத்துறதுக்காக குகைக்குப் போறதோட சரி. எப்பவாவது ஒன்னு ரெண்டு பேரு, 'குகை எங்கேயிருக்கு'னு கேட்டு வருவாங்க."

இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரிணாமம் அடைந்து, நிமிர்நிலை மனிதர்கள் உருவானார்கள். வாலற்று, நிமிர்ந்து நின்ற உலகின் முதல் மானுடன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவன் பிற நிலப்பரப்புகளுக்குப் பரவினான் என்றுமே இதுவரை படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டியிருக்கிறது.

நம் சென்னையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டைக்கு மிக நெருக்கமாக உள்ள அல்லிக்குழி மலைத்தொடரில் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான 16 குகைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள் தொல்லியலாளர்கள்.

இந்தக் கற்குகைகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த மனிதர்கள் பயன்படுத்திய ஏராளமான கற்கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நிலவியல் ஆராய்ச்சியாளர்களும், இந்திய தொல்லியல் துறையும் இதன் பழைமையை உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பல்வேறு அறிவியல், வரலாற்று ஆய்விதழ்கள் இதுகுறித்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. லெமூரியா, கீழடி என நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிற அத்தனை ஆதார வரலாறுகளுக்கும் முந்தைய, பரிணாமத்தின் தொடக்கநிலை மனிதர்கள் வாழ்ந்த அந்தக் குகைகள், தமிழ் நிலத்தின் தொன்மைக்குச் சான்றுசொல்லி அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருக்கின்றன.


உலகில் எழுத்துச்சான்றுகள் தோன்றுவதற்கு முந்தைய வரலாற்றை, 'தொல் பழங்காலம்' அல்லது 'பழங்கற்காலம்' என்பார்கள். எழுத்துச்சான்றுகள் தோன்றிய பிறகான காலம் வரலாற்றுக்காலம். கற்காலத்துக்கும் வரலாற்றுக்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவில் பல்வேறு படிநிலைகளை எட்டினார்கள். உலோகங்களின் பயன்பாட்டை உணர்ந்து பயன்படுத்தினார்கள். மனிதர்கள், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 'Paleolithic Age' எனப்படும் கற்காலத்தின் தொடக்கத்தில்தான் தங்கள் அறிவைப்பயன்படுத்தத் தொடங்கினார்கள். கைகளில் கிடைத்த கற்களை எரிந்து விலங்குகளை வீழ்த்துவதில் இருந்த சிக்கலைக் கலைய, அவற்றைக் கூர்மையாகச் செதுக்கி, கோடரிகளாக மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதுதான் மானுட குல வரலாற்றில் நிகழ்ந்த மிகமுக்கிய பரிணாமம். அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் கருவிகளைக் கொண்டே அப்பகுதியில் வாழ்ந்த மனித இனம் பற்றியும் காலம் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இடங்களில் செய்யப்பட்ட அகழ்வுகளில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தின் கொசஸ்தலை ஆற்றைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள், அல்லிக்குழி மலைப்பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை ஆங்கிலேயர்களின் ஆராய்ச்சிகளும், இந்திய தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் உறுதி செய்திருக்கிறது. ஆதிமனிதர்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ள அல்லிக்குழி மலையில், இன்னும் பல ஆயிரம் கற்கருவிகள் மறைந்து கிடக்கின்றன. சாதாரணமாக நாம் கொஞ்சம் கூர்ந்து நோக்கிக் கற்களைத் துளாவினாலே ஐந்தாறு கற்கருவிகளைக் கண்டெடுத்து விடமுடிகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டியில் தொடங்கி ஆந்திராவில் முடிவடைகிறது அல்லிக்குழி மலைத்தொடர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இதுதான் சென்னையின் தாகம் தீர்க்கும் பெரும் நீர்ப்பரப்பு. தொல்மனிதர்கள் வசித்த காலத்தில் இந்த மலைத்தொடரில் 20-க்கும் மேற்பட்ட நதிகள் ஓடியதாகவும் அதனாலேயே ஆதி மனிதர்கள் இந்த மலையை தங்கள் இருப்பிடமாகத் தேர்வு செய்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இப்போது அல்லிக்குழியாறு மட்டுமே இங்கே மிஞ்சியிருக்கிற நீர்நிலை.

திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் பிரதான சாலையில், 18 கி.மீ தொலைவில் உள்ளது சித்தஞ்சேரி. இங்கிருந்து, பிளேஸ்பாளையம் செல்லும் இடதுபுறச் சாலையில் திரும்பி 12 கி.மீ பயணித்தால் மரங்களடர்ந்த 'கூடியம்' என்ற கிராமம் வரும். இதுதான் அல்லிக்குழி மலையின் வாசல். கூடியம் கிராமமே அமானுஷ்யமாக இருக்கிறது. பிரதான சாலையில் இருந்து ஊருக்குள் நுழைய கரடுமுரடான மண்சாலைதான். உள்ளே 20 வீடுகள் மட்டுமே உள்ளன. பெரும்பகுதியாக இங்கு இருளர் பழங்குடிகள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்திலிருக்கும் வீடுகளே மிகப்பழைமையானவையாக இருக்கின்றன. வட்ட வடிவத்தில் புல்கூரை வேயப்பட்டு மண்ணால் பூசப்பட்ட அந்த வீடுகளின் தன்மையே நம்மை தொன்ம வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன.

கூடியம் கிராமம் வரைதான் வாகனங்கள் செல்லும். அதற்குமேல் நடந்துதான் போகவேண்டும். 6 கிலோ மீட்டர். இருபுறமும் செடிகளடர்ந்த ஒரு ஒற்றையடிப்பாதை. தொடக்கத்தில், சற்று அகலமாக இருக்கிறது. கீழே முனை நீட்டி நிற்கும் சரளைக்கற்கள். ஒரு கிலோ மீட்டரில் இந்தப் பாதை முடிவுக்கு வருகிறது. எரிமலை வெடித்துக் கொதித்தெழுந்து வந்து உறைந்து நிற்பதைப் போல ஆங்காங்கே பெரிய பெரிய கற்குவியல்கள்... பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றன. இடையிடையே கூழாங்கற்கள் பொதிந்திருக்கின்றன.


பரபரப்புக்குத் தொடர்பில்லாத, உறைந்த நிலப்பரப்பில் நிற்பதுபோன்ற உணர்வு... அந்த இடமே அமானுஷ்யமாக இருக்கிறது. மனதை மெல்லிய அச்சம் கவ்வுகிறது. அந்த இடத்திலிருந்து தொடங்குகிறது, சாகசப் பயணம். செடிகளை விலக்கி, விலக்கி மனிதர்கள் நடந்த தடமறிந்து கால் வைக்க வேண்டும். ஓரடி விலகினாலும் முற்கள் கால்களைக் கோர்த்துக்கொள்கின்றன. 'பின்செல்...', 'பின்செல்...' என்று கால்களைத் தள்ளுகின்றன கூர்முனைகொண்ட சரளைக்கற்கள்.

எந்தக்கல் எந்த ஆதிமனிதனின் ஆயுதமாக இருந்ததோ...? பரவசமும் பயமும் இரண்டறக் கலந்த பயண அனுபவம் அது. அதற்குள் புதிது, புதிதாக, வண்ண வண்ணமாக பூச்சியினங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. கடும் புதர்களுக்கு மத்தியில் முந்திரி, நெல்லி, இழுப்பை என்று நமக்கு அறிமுகமான மரங்களும் ஆங்காங்கே தென்படுகின்றன. மனித அரவமேயில்லை.

காட்டுப்பன்றிகள், முயல்கள், பாம்புகளின் தடங்கள் ஆங்காங்கே அச்சமூட்டுகின்றன. வளைவுகளும் நெளிவுகளும் கொண்ட, நுழைந்தும் தவழ்ந்தும் செல்லக்கூடிய ஒற்றைக்காலடிப் பாதையில் 4 கிலோ மீட்டர் நடந்தால் முதல் குகை கண்முன் விரிகிறது. உயர்ந்த மலையிலிருந்து ஒரு பகுதி, கிருஷ்ணருக்குக் காளிங்கன் விரித்த தலைபோல அகலக் குவிந்து நிற்கிறது. 200 பேர் வசதியாக அமரலாம்; உண்ணலாம்; உறங்கலாம். எங்கும் காணவியலாதப் பாறை அமைப்பு. சரளைக்கற்களை உள்ளே வைத்து மண் கொண்டு இறுக்கிப்பூசி இயற்கை நெய்த விசித்திர மலை. மேலே ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கிற கற்கள் பெயர்ந்து தலையில் விழுந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஆனால் 13 கோடி ஆண்டுகளாக அதன் நிலையிலேயே நிற்கின்றன கற்கள்.

கோடரி கொண்டு வெட்டினாலும் சிதையாத உறுதி. குகையின் முன்னால் சாம்பல் குவிந்திருக்கிறது. நம் மக்கள் சமைத்துச் சாப்பிட்ட தடம். 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதைகளுக்குக் குடிலாக இருந்த இந்தக் குகையின் மகத்துவம் அறியாமல் குகையெங்கும் தங்கள் பெயர்களை எழுதிவைத்து சிதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் இளைஞர்கள். குகையின் ஒரு பகுதியில் மத்திய தொல்லியல்துறை அகழ்வு செய்த தடம் தெரிகிறது. தன் நண்பர்களோடு குகையைக் காண வந்த, பாறை ஓவிய ஆராய்ச்சியாளர் காந்திராஜன், இந்தக் குகை குறித்து சிலாகித்துப் பேசினார்.

"மானுட வரலாற்றையே மாற்றி எழுதும் அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்சின்னம் இது. உலகின் மிகத் தொன்மையான இடங்களில் ஒன்று. மானுட வரலாறு என்பது, அவர்கள் பயன்படுத்திய கருவிகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகிறது. முதல் கற்காலம் என்பது, 5 லட்சம் ஆண்டுகள் முதல் 2.50 லட்சம் ஆண்டுகள்வரை. இந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களை 'ஹோமினாய்ட்' (Hominid) என்று அழைப்பார்கள். இவர்கள், கற்களை ஆயுதமாகப் பயன்படுத்திய முதல் தலைமுறை மனிதர்கள். கென்யா, கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கிடைத்துள்ளன. அதே காலக்கட்டத்தைச் சேர்ந்த கற்கருவிகள் இந்தக் குகைகளிலும், அருகில் கொற்றலை ஆற்றுப்படுகையில் உள்ள அதிரம்பாக்கம் கிராமத்திலும், பல்லாவரத்திலும் கிடைத்துள்ளன.

'கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் உலகெங்கும் பரவினார்கள்' என்பதுதான் இதுவரை நம்மிடமிருக்கும் தியரி. ஆனால். இந்தக் குகையில் கிடைக்கும் தரவுகள், 'இங்கிருந்தே ஆப்பிரிக்கா போன்ற இடங்களுக்கு நகர்ந்திருக்க வேண்டும்' என்ற புது வரலாற்றை உருவாக்குகின்றன. அல்லது ஆப்பிரிக்காவில் மனிதர்கள் உருவான அதேக் காலக்கட்டத்தில் இங்கும் மனிதர்கள் உருவாகியிருக்க வேண்டும். தொல் பழங்காலத்தில் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் ஒரே கண்டமாக இருந்ததாக நிலவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதன்படிப் பார்த்தால் இந்தக்கருத்து இன்னும் வலுப்படும். தற்போது டி.என்.ஏ சோதனைகள் நடந்து வருகின்றன. அதன் முடிவுகள் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கும்..." என்கிறார் அவர்.

கூடியம் குகைகளை முதன்முதலில் கண்டறிந்து உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தவர், ராபர்ட் ப்ரூஸ் பூட் (Sir.Robert Bruce Foote). 'தொல்லியலின் தந்தை' என்று இவரைக் கொண்டாடுகிறார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் நிலவியலாளராகப் பணியாற்றிய ப்ரூஸ்க்கு, தென்னிந்தியாவில் நிலக்கரி, கனிம வளங்கள் உள்ள பகுதிகளைக் கணக்கெடுக்கும்பணி தரப்பட்டது. தொல்லியல் ஆய்வுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட ப்ரூஸ், பல்லாவரம் பகுதியில் ஆய்வுசெய்தபோது, உலகின் ஆதி தொல்குடி பயன்படுத்திய கல் ஆயுதம் ஒன்றை கண்டுபிடித்தார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் வட்டாரத்தில் ஆய்வுசெய்தபோது, இந்தக்குகையின் வடிவம் அவரை ஈர்த்தது. அல்லிக்குழி வனப்பகுதியில் தங்கி தீவிரமாக ஆய்வுசெய்து, 'தொல் மனிதன் வாழ்ந்த இடம் இதுதான்' என்பதையும் இந்தக்குகை, 'டைனோசர்கள் வாழ்ந்த ஜூராசிக் காலத்தைச் சேர்ந்தது' என்றும் பதிவு செய்தார். இது நடந்தது 1864-ல். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசு, தொடர்ச்சியாக இதுகுறித்து ஆய்வு செய்ய விரும்பவில்லை. வி.டி.கிருஷ்ணசாமி, பீட்டர்சன், எச்.டி.சங்காலியா போன்ற தொல்லியாளர்கள் தன்னார்வத்தில் சிறுசிறு ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அதன்பிறகு, 1962 முதல் 1964 வரை, மத்திய தொல்லியல்துறை சார்பில், ஆர். டி. பானர்ஜி இந்தக் குகையின் ஒரு பகுதியை அகழ்ந்து ஆய்வுசெய்தார். அதில், ஏராளமான கல் ஆயுதங்கள் கிடைத்தன.

அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்து, 'இது தொல்மனிதர்கள் பயன்படுத்திய குகைதான்' என்பதை உறுதி செய்தது மத்திய தொல்லியல் துறை. கற்கருவிகளின் பழைமையும் உறுதி செய்யப்பட்டது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் 'சென்னைக் கோடரிகள்' (மெட்ராஸ் ஆக்ஸ்) என்று வகைப்படுத்தபட்டன. மேலும் அருகில் உள்ள பூண்டி நீர்தேக்கம் அருகே ஒரு அருங்காட்சியகம் அமைத்து மாநில தொல்லியல்துறை அவற்றையெல்லாம் பாதுகாக்கிறது. இந்தியாவிலேயே பழங்கற்கால அகழ்வுப் பொருள்களைக் கொண்டிருக்கும் ஒரே அருங்காட்சியகம் இதுதான் என்கிறார்கள். ஆனால், குகையை கைவிட்டுவிட்டது மத்திய தொல்லியல் துறை. மாநில அரசும் இதில் ஆர்வம் காட்டவில்லை. வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. வனத்துறை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, எளிதில் செல்லவியலாதவாறு கட்டுப்பாடுகளை விதித்துவிட்டது. பத்தோடு பதினொன்றாகிப் போனது இந்த மலையும் குகையும். பாலித்தீன் குப்பைகளாலும், மதுப்பாட்டில்களாலும் நிறைந்திருக்கிறது குகை. குகைக்கு மேலே கரடுமுரடான பாறைகளின் வழி ஏறினால், நடுவில் அழகிய ஒரு சுனை. எக்காலமும் இதில் நீர் வற்றுவதேயில்லையாம்.

அடர்மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் அருந்த சுவையாக இருக்கிறது. அதைக்கடந்து மேலே ஏறினால், உலகின் ஒரு அரிய நிலக்காட்சி கண்முன் விரிகிறது. நான்கு புறமும் பச்சை... எதிரில் புதர்களால் மறைந்துபோன ஒரு பிரமாண்ட குகையின் தோற்றம். ஒரு சிறுகோடாக மனிதத்தடம் தெரிகிறது. மேலே விதவிதமான கற்கள். எல்லாம் கனிமங்கள். நான்கைந்து வண்ணங்கள் கொண்டவை, சுட்ட செங்கலைப் போல செக்கச் சிவப்பாக இருப்பவை, பளீரென்ற வெள்ளைக்கல் என திறந்தவெளிக் கண்காட்சியைப் போல இருக்கிறது. ஆங்காங்கே நுனி கூராகவும், அடி கனத்தும் காணப்படும் கோடரிக்கற்கள். லேசாக பட்டாலே கிழித்துவிடும் அளவுக்கு கூராக்கப்பட்ட சிறு சிறு கல் ஓடுகள்... என ஒரு கல்லாயுதத் தொழிற்சாலை போலவே இருக்கிறது. "உண்மைதான். இதை 'கல்லாயுதத் தொழிற்சாலை' என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சாதாரணமாக கீழே குனிந்தபடி நடந்தால் பத்து கோடரிகள், ஐந்து கிழிப்பான்களை கண்டுபிடிக்கலாம்.



இந்த மாதிரிப் பாறைகள் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. இந்த மலைகளும், குகைகளும் எரிமலை வெடிப்பில் உருவாகியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நிலவியலாளர்கள், பெருமழைக்காலத்தில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கின் விளைவாக பாறைகள் திரண்டுவந்து இறுகியே குகைகளும் கற்களும் மலையும் உருவானது என்று தீர்க்கமாக கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார்கள். வெறும் கல்லை விட்டெரிந்து விலங்குகளை வேட்டையாடப் போராடிய மனிதன், அறிவு விருத்தியடைந்து கல்லைச் செதுக்கி, கூராக்கி ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது ஒரு முக்கியமான பரிணாம வளர்ச்சி. தங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் செய்யும் கற்கள் இங்கே கிடைப்பதால்தான் இந்தப்பகுதியை தங்கள் வாழிடமாக தொல்மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். இதன் முக்கியத்துவம் நமக்குப் புரியவில்லை. அல்லிக்குழி மலையில் 16 குகைகள் இருப்பதாக பிரிட்டிஷ் குறிப்புகளில் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு குகைகளுக்குத்தான் நாம் செல்லமுடிகிறது. அந்தக் குகைகளையும் கண்டறிந்து, ஆய்வு செய்தால் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கும்..." என்கிறார் ரமேஷ் யந்த்ரா.

சென்னை ஓவியக்கல்லூரியில் படித்த ரமேஷ், கூடியம் குகைகமணாச்சியம்மன் என்கிறார்கள். அவ்வப்போது வந்து கிடா வெட்டி பூஜை போடுவார்களாம். ஆனால், மலையின் அமைப்பும், அந்த நிலக்காட்சியும் பிரமிப்பூட்டுகின்றன. நம் மூதாதைகள் நடந்து திரிந்த அந்தத் தடத்தின் நிற்க சிலிர்ப்பாக இருக்கிறது. சுற்றிலும் அடர்ந்த காடு. பாறைகளில் கண்படும் இடமெல்லாம் தேன்கூடுகள். தேனிக்களின் ரீங்காரமும், தேன்கூடுகளில் அலகு நுழைந்து உரிஞ்சத் துடிக்கும் தேன்கிளிகளின் குதியாட்டமும் அந்த சூழலை வாழ்வின் உன்னதமான தருணமாக்குகின்றன. இந்த மலையின் தொடர்ச்சியாக, உயர்ந்து நிற்கிற கூழாங்கல் மலைகள் அதிசயமாக இருக்கின்றன. அடுத்த குகைக்கு நடக்கும் முயற்சியை தேனிக்களும், விதவிதமான பூச்சியினங்களும், குத்தீட்டி போல நீட்டி நின்று கொக்கி போல குத்தியிழுக்கும் முட்களும் கைவிடச் செய்கின்றன. தேனீக்களின் சத்தமும், பறவைகளின் ஒலியையும் தவிர ஓர் இறுக்கமான மௌனம் அந்த வெளியைச் சூழ்ந்திருக்கிறது. அங்கு உலவும் அதிசுத்தக் காற்றில் ஆதிமனிதனின் அழியாத ஆன்மா உறைந்திருப்பதை உணரமுடிகிறது. 'ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இண்டியா' நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் குமரகுரு, பல்வேறு நிலவியல் ஆய்வுகளின் முடிவில் இந்தக் குகை 13 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். மத்திய தொல்லியல் துறையில் மேற்கு மண்டல கண்காணிப்பாளராக இருந்த ஆர்.டி.பானர்ஜியும் அதையே கூறியிருக்கிறார்.

காலங்களைத் தின்று செரித்துவிட்டு சிறிதும் பங்கமின்றி உறுதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு நிற்கிறது இந்தக்குகை. இந்தக் குகையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அத்திரம்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் உள்ள இந்தக் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தி பப்பு ஒரு அகழ்வாய்வு மேற்கொண்டார். அங்கு 3000 கல்லாயுதங்கள் கிடைத்தன. அவற்றை அமெரிக்காவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது 16 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரியவந்தது. இதுபற்றி அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆராய்ச்சி இதழ்களில் எழுதினார். அதன்பிறகே உலகம் அறிவியல்பூர்வமாக இந்தக்குகையின் பழைமையை உணர்ந்தது. உலகெங்கும் வெளியிடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட மானுட வரலாற்று ஆராய்ச்சி நூல்களில் இந்தக் குகைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழில் தொல்லியல் துறை வெளியிட்ட மிகச்சிறிய நூலைத்தவிர இதுபற்றிப் படிக்க எதுவுமே இல்லை.ள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். அந்தப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில், குரும்படப் பிரிவில் திரையிடப்பட்டது. அதன்பிறகே ஊடகங்கள் இந்தக் குகைகளை ஏறெடுத்துப் பார்த்தன. இன்றும் தீவிரமாக இந்தக்குகைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் ரமேஷ். முதல் குகையிலிருந்து, இரண்டாவது குகைக்குச் செல்லும் பாதை இன்னும் சவாலானது. மிகவும் குறுகலாகவும் முற்கள் அடர்ந்ததாகவும் இருக்கிறது. விதவிதமான பூரான்கள், பாம்புகள், சிலந்திகள், தேள்கள், செய்யான் போன்ற ஆபத்தான பூச்சிகள் ஊர்ந்து பீதி கிளப்புகின்றன. வழியில் பெரிய உருண்டைக்கல். மஞ்சள், குங்குமமிட்டு அதை வழிபடுகிறார்கள், கூடியம் மக்கள். கோழி அறுத்துப் பலியிட்டதற்கான சான்றுகள் தெரிகின்றன. அதைக்கடந்து, நடந்தால் பிரமாண்டமான இரண்டாவது குகை. 500 பேர் வசதியாகத் தங்கலாம். அகன்று விரிந்து, குடை மாதிரி நிற்கிறது. ஆங்காங்கே நீர் சுரந்து சொட்டுச்சொட்டாக வழிகிறது. ஒரு சூலாயுதம் நட்டு, அம்மன் சிலையை வைத்து வழிபடுகிறார்கள்

 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மனிதக்குடியேற்றம் நடந்தது என்று உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் மைக்கேல் வுட் தெரிவித்திருந்தார். கூடியம் குகைகளும் அத்திரம்பாக்கத்தில் கிடைத்த கற்கருவிகளும் அந்த தியரியை மாற்றுகின்றன. கூடியம் குகைகளைப் போல தமிழகத்தில் ஏராளமான தொன்மையான இடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஆய்வு செய்தால் வரலாறு மாறும்" என்கிறார் தொல்லியலாளர் சாந்தி பப்பு.

"இவ்வளவு பழைமையான இடம் இருக்குன்னு இந்தப் பகுதியில இருக்கிற பலபேருக்குத் தெரியாது. அப்பப்போ வேண்டுதல் வச்சு கிடாவெட்டு நடத்துறதுக்காக குகைக்குப் போறதோட சரி. எப்பவாவது ஒன்னு ரெண்டு பேரு, 'குகை எங்கேயிருக்கு'னு கேட்டு வருவாங்க. இதுவே அமெரிக்காவுலயோ, இங்கிலாந்திலயோ இருந்திருந்தா இதை உலகத்தோட வரலாற்றுச் சின்னமா மாத்தி கண்காட்சியே வச்சிருப்பாங்க. நாம அதை குடிக்கிற இடமா மாத்தி வச்சிருக்கோம். பொழுதுபோக்காக வர்ற பசங்க, குகையில பெயின்ட்ல பேரு எழுதி வச்சுட்டுப் போயிடுறாங்க. நாங்க வாழ்ந்துக்கிட்டிருக்கிற இந்த மண்ணுல உலகத்தோட முதல் மனுஷன் நடந்து திரிஞ்சிருக்கான்னு நினைக்கிறபோதே நெகிழ்ச்சியாயிருக்கு. இதை அரசுகள் பாதுகாக்கணும்..." என்கிறார் இந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கமலக்கண்ணன்.

இரண்டாயிரமாண்டு இலக்கியங்களையும் ஆயிரமாண்டு கல்வெட்டுகளையுமே சான்றாகக் காட்டி நம் தொன்மையைப் பேசிக்கொண்டிருக்கிறோம். இதோ, நமக்கு அருகாமையில், தலைநகரலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்றுச்சான்று இருக்கிறது. அதைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதோடு வரலாற்றை மீட்டிருவாக்கம் செய்ய வேண்டிய பணியை எவரும் முன்னெடுக்கவில்லை. உலகின் முதல் ஆதிப்பெருங்கலை, ஆயுதத் தயாரிப்புதான். கூடியம் மலைப்பகுதி மிகப்பெரிய ஆயுதத் தொழிற்சாலையாக இருந்துள்ளது. குழந்தைகளுக்கு, பெண்களுக்கு, வலது கைப் பழக்கமுள்ளவர்களுக்கு, இடது கையாளர்களுக்கு என வகைவகையாக இங்கே கற்கருவிகள் செய்திருக்கிறார்கள். தகுதிவாய்ந்த கற்களைத் தேர்வுசெய்து சூடாக்கி தட்டிப் பெயர்த்து கைபிடி அகன்றும் முனைப்பகுதி கூர்மையாகவும் அவ்வளவு நுட்பமாக வடிவமைத்திருக்கிறார்கள். அந்த வடிவத்தில் ஏராளமான ஆயுதங்கள் இங்கே கிடக்கின்றன.

சில பெரிய கற்களில் ஒருவித குறியீடுகள் இருக்கின்றன. இவை காலம் கிறுக்கியதா, ஆதி மனிதன் கிறுக்கியதா என்று தெரியவில்லை. இன்னும் 10க்கும் மேற்பட்ட குகைகள் இருப்பதாக பதிவுகள் இருப்பதால் எல்லா இடங்களிலும் ஆய்வு செய்தால் ஆதி மனிதனின் எலும்புகள், கிறுக்கல்கள்கூட கிடைக்க வாய்ப்புண்டு. அப்படிக் கிடைக்கும்பட்சத்தில், 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றியது தமிழ்நிலமும் தமிழ்க்குடியும் என்பது வெறும் வார்த்தைகளில்லை... வரலாறு என்பது தெளிவாகும்...!

Wednesday, January 20, 2021

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 1 | புராணமும் பண்பாடும் நிறைந்த பொற்றாமரைக் குளம்!

 தமிழுக்கும் பொற்றாமரைக் குளத்துக்கும் பெரும் தொடர்பு உண்டு. சங்கப் பலகை ஒன்று இந்தக் குளத்திலிருந்ததாகவும் தகுதியுடைய நூல்களை சங்கப் பலகை ஏற்கும் என்றும் புராணம் சொல்கிறது. உண்மையில் அப்படி ஒரு பலகை இருந்ததா என்பதைப் பகுத்தறிவு ஏற்க மறுக்கலாம். ஆனால்...

இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்று மதுரை. இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலான நாகரிகம் கொண்ட இந்த நகரை மையமாகக் கொண்டே பல்வேறு அரசியல், ஆன்மிகம், பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சங்க காலம் முதல் சம காலம் வரை பல முக்கியமான நிகழ்வுகளின் களமாக விளங்குவதும் மதுரையே.

மதுரை நிலவியலின் முதன்மை அடையாளமாய் மனக்கண்ணில் தோன்றுவது மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான். புராண காலங்களில் திரு ஆலவாய் என்றும் வரலாற்றுக் காலங்களில் நான்மாடக்கூடல், கடம்பவனம், கூடல்மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இந்த மதுரை மாநகரின் நிரந்தரப் பெருமை இந்தக் கோயில். சிதம்பரம், காசி, திருக்காளகத்தி என்னும் சிவத்தல வரிசையில் நான்காவது தலமாக விளங்குகிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்தில்தான் அமைந்துள்ளது பொற்றாமரைக் குளம்.



தமிழர்களின் அழகியல், அறிவியல், ஆன்மிகவியல் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று இணைந்து இயங்குபவை. நகரின் தன்மைக்கு ஏற்ப பிரமாண்டமான கோயில், கோயிலின் பிரமாண்டத்துக்கு ஏற்ப பேரழகுக் கலைக் களஞ்சியங்கள், கோயில் மற்றும் நகரின் நீர் தேவைகளுக்கு ஏற்ப நீர் நிலைகள், தீர்த்தங்கள் என அமைத்துப் பராமரித்தனர் நம் முன்னோர்கள். அப்படிப்பட்ட ஒரு பிரமாண்ட குளம்தான் பொற்றாமரைக்குளம். மீனாட்சி அம்மன் கோயிலில் எழில் கொஞ்சும் கிழக்குக் கோபுர வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால் கோயில் வளாகத்துக்குள்ளே ஓர் ஏக்கர் பரப்பளவில் 165 அடி நீளமும் 120 அடி அகலமும் கொண்டு நான்கு பக்கமும் தூண்களுடன் கூடிய பிராகாரங்கள் விளங்க விரிந்து கிடக்கிறது பொற்றாமரைக்குளம்.

ஒருகாலத்தில் அங்கு பொன் தாமரைகள் தோன்றின என்பதன் அடையாளமாகக் குளத்தில் ஒரு பொன் முலாம் பூசப்பட்ட பெரிய தாமரையின் வடிவம் ஒன்று இருக்கிறது. படித்துறைகளில் அமர்ந்து குளத்தைப் பார்க்கிறபோது ஏற்படும் பரவசம் அலாதியானது. உள்ளூர் காரர்களுக்கு அது காற்றுவாங்கும் இடமாக ஆசுவாசம் கொள்ளும் இடமாக இறைச்சிந்தனையில் அமைதியாக அமர்ந்து தியானிக்க உகந்த இடமாக இருக்கலாம். ஆனால் வெளியூரிலிருந்து அங்கு செல்லும் ஒருவருக்கு அது சாதாரண குளமல்ல.

பல கோயில் தீர்த்தங்களுக்குப் புராணச் சிறப்புகள் இருக்கும். ஆனால் பொற்றாமரைக் குளமோ புராணச் சிறப்புகளையும் தாண்டி மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றோடும் தொடர்புடையதாக அமைகிறது.

புராணப்படி இந்தக் குளத்தை இந்திரன் அமைத்ததாகச் சொல்கிறார்கள். போரில் விருத்திராசுரனைக் கொன்றதால் தேவேந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அது நீங்க அவன் பல்வேறு தலங்களுக்குச் சென்று லிங்கப் பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்டான். ஆனால் அவன் மனதில் நிம்மதி ஏற்படவில்லை.

கடம்பவனமாக இருந்த இந்தத் தலத்துக்கு வந்தபோது ஈசன் சுயம்புவாக வெளிப்பட்டு இந்திரனுக்கு தரிசனம் கொடுத்தாராம். அதைக் கண்டதும் இந்திரன் வியந்து இறைவனைப் பணிந்துகொண்டான். தரிசித்ததும் பாவங்கள் போக்கும் புண்ணியத் தலம் என்று உணர்ந்தான் இந்திரன். அவன் மனம் அமைதி அடைந்தது. சுயம்புத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய விரும்பினான் இந்திரன். அதற்காக அங்கே ஒரு குளம் ஒன்றை ஏற்படுத்தினான். அதுவே இந்தப் பொற்றாமரைக் குளம் என்கிறது புராணம். இறைவனுக்கு மலர்கொண்டு இந்திரன் வழிபட விரும்பியபோது குளத்தில் பொற்றாமரைகள் உருவானதாகவும் அதைக் கொண்டு இந்திரன் சிவனுக்கு பூஜை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. பொன் தாமரைகள் உருவான குளம் என்பதால் பொற்றாமரைக் குளம் என்று பேர் பெற்றது என்கிறார்கள்.

வைகை நதி பாயும் இந்த நதியின் தீரத்தில்தான் ஈசன் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார் என்கிறது திருவிளையாடல் புராணம். தமிழில் எழுதப்பட்ட புராணங்களுக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் ஒரு விசேஷித்த தன்மை உண்டு. அவை சமயம் சார்ந்த நிகழ்வுகளையும் நம்பிக்கைகளையும் முன்வைப்பதோடு வரலாற்றுக்குறிப்புகளையும் முன்வைக்கும். இத்தகைய குறிப்புகள் தமிழக சமய வரலாற்றை எழுதுவதற்குப் பெரும்துணை புரிபவை. அப்படிப் பட்ட குறிப்புகள் அடங்கிய ஒரு புராணம் திருவிளையாடல் புராணம்.

சிவபெருமானால் நிகழ்த்தப்பட்ட 64 திருவிளையாடல்களில் வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது போன்ற பல புராண நிகழ்வுகளோடு தொடர்பு கொண்டது இந்த பொற்றாமரைக் குளம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் வெப்பம் தாளாமல் நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தார் என்றும் அதன்பின் ஈசன் அவரை மீண்டும் எழுப்பினார் என்கிறது புராணம்.

தமிழுக்கும் பொற்றாமரைக் குளத்துக்கும் பெரும் தொடர்பு உண்டு. சங்கப் பலகை ஒன்று இந்தக் குளத்திலிருந்ததாகவும் தகுதியுடைய நூல்களை சங்கப் பலகை ஏற்கும் என்றும் புராணம் சொல்கிறது. உண்மையில் அப்படி ஒரு பலகை இருந்ததா என்பதைப் பகுத்தறிவு ஏற்க மறுக்கலாம். ஆனால் தொன்மங்களை நேரடிப் பொருள்கொண்டு அணுகாமல் குறியீட்டுப்பொருள் கொள்வது மாற்றுப் பார்வைகளைத் தரும்.

மதுரை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்திலும் கல்வியிலும் சிறந்துவிளங்கியது என்பதை நாம் அறிவோம். அங்கே தமிழ் அறிஞர்கள் பலரும் கூடி விவாதம் செய்யும் சபை ஒன்று இருந்தது. அந்தக் குழுவின் பெயராக சங்கப் பலகை என்பது இருந்திருக்கலாம். அங்கு விவாதம் செய்து ஏற்றுக்கொள்ளப்படும் நூல்களே தகுதியுடையனவாகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால் அது பிற்காலத்தில் சுருங்கி சங்கப்பலகை என்பது ஒரு மந்திரப் பலகை என்பதுபோன்று கருதப்பட்டிருக்கலாம்.



அப்படி ஒரு சங்கப்பலகைதான் திருக்குறளை அங்கீகரித்தது. குளத்தின் தென்பகுதிப் படித்துறையில் அமர்ந்து திருவள்ளுவர் அதை அரங்கேற்றம் செய்தார் என்கிறார்கள். அதனால்தானோ என்னவோ குளத்தை ஒட்டிய தென்பகுதிச் சுவர்களில் 1330 குறள்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று நின்று அதைக் காணும் தருணம் காவிய காலங்களுக்குள் நுழைந்து வெளியேறும் ஒரு மாயக் கணம் நம்முள் தோன்றி மறையும்.

முன்னொரு காலத்தில், தனஞ்செயன் என்கிற வணிகர் வியாபாரம் முடித்துத் தனது சொந்த ஊரான மணவூருக்கு ஒரு ராத்திரி நேரத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். இரவானதால் ஒரு கடம்ப வனம் ஒன்றில் தங்க வேண்டியதானது. அங்கே இருந்த ஒரு பொய்கைக் கரையோரம் தங்கினான். அன்றிரவு ஒரு பெரும் அதிசயத்தைக் கண்டான். பொய்கைக்கு அருகே இருந்த சுயம்பு லிங்கத் திருமேனி ஒன்றினை விண்ணிலிருந்து வந்து தேவர்கள் பூஜித்ததைக் காணும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்தது. இந்தச் செய்தியை அவன் மறுநாள் குலசேகர பாண்டிய மன்னனிடம் தெரிவித்தான். அன்றிரவு மன்னனின் கனவிலும் சிவபெருமான் தோன்றி, ‘கடம்பவனத்தைத் திருத்தி நகராக்கு’ எனக் கட்டளையிட்டாராம். குலசேகரப் பாண்டியனால் அப்படி உருவாக்கப்பட்டதுதான் மதுரை நகரும், மீனாட்சியம்மன் கோயிலும் என்றொரு வரலாறும் உண்டு. பொற்றாமரைக் குளத்துக்குக் காண்பவர்கள் மறக்காமல் வடக்குப் பிராகாரத் தூணில் சிற்பங்களாக இருக்கும் மன்னர் குலசேகரபாண்டியனையும் வணிகர் தனஞ்சயனையும் காணலாம்.

இந்தக் குளத்தின் தென்கிழக்கு மண்டபப்பகுதியில் நின்று பார்த்தால் மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் சுவாமியின் கருவரை விமான தங்கக் கோபுரங்களை தரிசிக்கலாம். பார்க்கலாம். அப்படியான அற்புதக் கட்டடக்கலை நுட்பம் நிறைந்தது பொற்றமரைக்குளம்.

வழக்கமாகக் கோயில் குளங்களில் மீன்கள் துள்ளி விளையாடுவதைக் கண்டிருக்கலாம். ஆனால் இந்தக் குளத்தில் மீன்கள் வசிப்பதில்லை. அதற்கும் ஒரு புராணக் கதை உண்டு. பொற்றாமரைக்குளத்தின் கரைகளில் வந்து அமரும் அடியவர்கள் சிவனின் பெருமைகளைப் பேசி மகிழ்வார்கள். தன் முன்வினைப் பயனால் அவற்றைக் கேட்ட நாரை ஒன்று தானும் சிவனை நோக்கித் தவம் செய்து மோட்சம் அடைய விரும்பியது. குளத்தில் நாரை நின்று தவம் செய்ய ஆரம்பித்தது. மீன்கள் சுற்றிச் சுற்றி ஓடியும் மனம் அலை பாயாமல் சிவனை நினைத்துத் தவம் செய்தது நாரை. சும்மா இருக்குமா மீன்கள்... அருகில் செல்வதும் அதைச் சீண்டுவதும் தீண்டுவதுமாக இருந்தனவாம் மீன்கள். நாரையின் தவத்தை மெச்சிய சிவன் அதற்கு தரிசனமும் முக்தியும் தந்தபோது நாரை ஒரு வரம் வேண்டிக்கொண்டதாம். இந்தக் குளக்கரையில் அமர்ந்து இறைவனை சிந்திப்பதற்கு இடையூறாக எந்த உயிரினமும் குளத்தில் வசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாம். அன்றிலிருந்து அந்தக் குளத்தில் மீன்கள் இல்லாமல் போனது என்கிறது கதை. புராண காலத்திலிருந்து வரலாற்றுக்காலம் வரை அதில் மீன்கள் இல்லாமல் போனதன் காரணம் பலவாக இருக்கலாம். ஆனால் தற்போது அதற்கு முக்கிய காரணம் குளத்தின் அடிவாரத்தை சிமிண்ட் கொண்டு பூசிவிட்டதாக இருக்கலாம். இப்போது கோயில் நிர்வாகம்தான் நன்னீர் கொண்டு குளத்தை நிரப்புகிறார்கள்.


பொதுவாக மீனாட்சியையும் சொக்கநாதரையும் தரிசிக்கும் முன்பாக பொற்றாமரைக் குளத்தை தரிசிப்பது பக்தர்களின் வழக்கம். அடுத்த முறை அங்கு செல்லும்போது அதன் படித்துறைகளில் சில நிமிடங்கள் அமர்ந்து இளைப்பாருங்கள். தமிழர்களின் பாரம்பர்யப் பெருமை குளிர்ந்த காற்றுபோல வீசி நம்மை சிலிர்க்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

- வலம் வருவோம்...