``அயிரை பரந்த அன் தண் பழனத்து” என்று தொடங்கும் குறுந்தொகை (178) பாடலில் பின்வரும் வரிகளைக் காணலாம்..
``தொழுது காண் பிறையின் தோன்றி யா(ம்) நுமக்கு அரியம் ஆகிய காலை பெரிய நோன்றனிர் நோகோ யானே..”
தொழுது காண் பிறை-மூன்றாம் நாள் சந்திரன் (மூன்றாம் நாள் சந்திரனை பெண்கள் சங்க காலத்தில் தொழுவார்கள் என்பது இலக்கியங்களில் சில இடங்களில் காணலாம்),
அது மாதத்துக்கு ஒரு முறையே தோன்றுவது, ஆகவே தலைவி, தலைவனுக்கு களவுக் காலத்தில் காண்பதற்கு அரியவளாய் இருப்பதற்கு, மூன்றாம் பிறை கண்டு தொழுவதற்கு அரிதாய் இருத்தலை உவமை கூறியுள்ளார் புலவர். களவுக்காலத்தில் தலைவன் தலைவியைக் காண்பது என்பது மிகவும் அரிதாக இருந்தது. மகளிர் தொழுவது காணும் பிறை, வானில் காண்பதற்கு அரிதாகத் தோன்றி சற்று நேரத்தில் மறைவது போல, தலைவியும் எப்போதோ ஒருமுறை எதிர்ப்பட்டு விரைந்து நீங்குபவளாக இருந்தாள்
இந்த உவமையில் ஈர்த்த இயக்குநர், தனக்கென யாருமில்லா தலைவன் (கமல்ஹாசன்) காண்பதற்கு அரிதாய் தோன்றும் மூன்றாம் பிறையைப்போல் தலைவி (ஸ்ரீதேவி)யானவள் தோன்றி சற்று நேரத்தில் மறைந்ததை குறுந்தொகை உவமையோடு இணைத்து `மூன்றாம் பிறை' எனும் தலைப்பை தெரிவு செய்திருக்கலாம்.
ஒருவேளை ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தே ஆக வேண்டும் எனும் தமிழ் சினிமாவின் சம்பிரதாயப்படி முடிவு இருந்திருந்தால் இந்தத் தலைப்பு திரைப்படத்துக்குப் பொருந்தி இருக்காது. கதாநாயகி சிறிது காலம் மட்டுமே நாயகனுடன் இணைந்திருந்து பின் நீங்குவதை குறிப்பால் உணர்த்தவும் தலைப்பிலேயே சொல்லியிருக்கலாம் இயக்குநர்.
No comments:
Post a Comment