Monday, June 08, 2020

மூன்றாம் பிறை...

``அயிரை பரந்த அன் தண் பழனத்து” என்று தொடங்கும் குறுந்தொகை (178) பாடலில் பின்வரும் வரிகளைக் காணலாம்..

``தொழுது காண் பிறையின் தோன்றி யா(ம்) நுமக்கு அரியம் ஆகிய காலை பெரிய நோன்றனிர் நோகோ யானே..”

தொழுது காண் பிறை-மூன்றாம் நாள் சந்திரன் (மூன்றாம் நாள் சந்திரனை பெண்கள் சங்க காலத்தில் தொழுவார்கள் என்பது இலக்கியங்களில் சில இடங்களில் காணலாம்),

அது மாதத்துக்கு ஒரு முறையே தோன்றுவது, ஆகவே தலைவி, தலைவனுக்கு களவுக் காலத்தில் காண்பதற்கு அரியவளாய் இருப்பதற்கு, மூன்றாம் பிறை கண்டு தொழுவதற்கு அரிதாய் இருத்தலை உவமை கூறியுள்ளார் புலவர். களவுக்காலத்தில் தலைவன் தலைவியைக் காண்பது என்பது மிகவும் அரிதாக இருந்தது. மகளிர் தொழுவது காணும் பிறை, வானில் காண்பதற்கு அரிதாகத் தோன்றி சற்று நேரத்தில் மறைவது போல, தலைவியும் எப்போதோ ஒருமுறை எதிர்ப்பட்டு விரைந்து நீங்குபவளாக இருந்தாள்

இந்த உவமையில் ஈர்த்த இயக்குநர், தனக்கென யாருமில்லா தலைவன் (கமல்ஹாசன்) காண்பதற்கு அரிதாய் தோன்றும் மூன்றாம் பிறையைப்போல் தலைவி (ஸ்ரீதேவி)யானவள் தோன்றி சற்று நேரத்தில் மறைந்ததை குறுந்தொகை உவமையோடு இணைத்து `மூன்றாம் பிறை' எனும் தலைப்பை தெரிவு செய்திருக்கலாம்.

ஒருவேளை ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தே ஆக வேண்டும் எனும் தமிழ் சினிமாவின் சம்பிரதாயப்படி முடிவு இருந்திருந்தால் இந்தத் தலைப்பு திரைப்படத்துக்குப் பொருந்தி இருக்காது. கதாநாயகி சிறிது காலம் மட்டுமே நாயகனுடன் இணைந்திருந்து பின் நீங்குவதை குறிப்பால் உணர்த்தவும் தலைப்பிலேயே சொல்லியிருக்கலாம் இயக்குநர்.

Thursday, June 04, 2020

இளையராஜாவின் இசையில் தனித்தன்மை எது??

“ஆன்மிகத்தையும் லௌகீக வாழ்க்கையையும் இணைக்கும் பாலம் இசை” என்பார் இசை மேதை லுட்விக் வான் பீத்தோவன். அந்த மேதையின் வார்த்தைகளை நம்முடைய வாழ்க்கையின் நிதர்சனமாக்குகிறது இளையராஜாவின் இசை.

நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களிலும் போராட்டங்களிலும் நம்மை ஆற்றுப்படுத்தி கரை சேர்ப்பதின் மூலம் செவிகளின் வழியாக நம் மனத்துக்குள் நுழையும் ஆக்ஸிஜன் இளையராஜாவின் இசை.

பாபநாசம் சிவன், ஜி.ராமனாதன், வீணை எஸ்.பாலசந்தர், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், எம்.பி.சீனிவாஸ், மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி, வேதா, ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்ட மிகப் பெரிய இசை ஆளுமைகள் இளையராஜாவுக்கு முன்பாக தமிழ்த் திரை இசையை வளர்த்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆளுமைகளின் திறமையான இசையை சுவாசித்து வளர்ந்தவர்தான் இளையராஜா.

ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக இசைப் பணியைத் தொடங்கினாலும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைதான் தன்னை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தது என்பதைப் பல மேடைகளிலும் கூறிவருபவர் இளையராஜா. ஆயிரம் திரைப்படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் இன்னும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு அவரிடம் சுரந்து கொண்டே இருக்கிறது இசையின் ஊற்று.

புலம் பெயர்ந்த தமிழர்களையும் இந்தியர்களையும்.. அவ்வளவு ஏன்? மொழியே தெரியாவிட்டாலும் இளையராஜாவின் இசையில் லயிப்பவர்களைப் பார்த்திருப்போம். கரகாட்டமும், ஜல்லிக்கட்டும், தெம்மாங்கும் எத்தனையோ ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்பட்டாலும், தமிழர்களின் பாரம்பரியமான தெம்மாங்குப் பாட்டுகளில் இயல்பாக பெண்கள் போடும் குலவை சத்தம் இளையராஜாவின் வருகைக்குப் பின்தானே நம்முடைய காதுகளை எட்டியது. கிராமியக் கலைஞர்களின் பாட்டில் பிரதான தாள வாத்தியத்தோடு ஊடாக ஒலிக்கும் `கடம் சிங்காரி’ எனும் வாத்தியம் எழுப்பும் ஒலியின் இனிமையை திரை இசையில் அறிமுகப்படுத்தியது இளையராஜாவின் இசைதானே

தாளங்களில் புதுமை

`தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் வரும் `காதலின் தீபம் ஒன்று’ பாடலுக்கான மெட்டை, “மருத்துவமனையில் இருக்கும்போது விசிலைக் கொண்டே அமைத்துக் கொடுத்தேன்” என்பதை இளையராஜாவே கூறியிருக்கிறார். பல முறை இந்தப் பாட்டை மிகவும் ஊன்றிக் கேட்கும்போது எனக்குப் புரிந்த இன்னொரு அற்புதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் `ஆஹா..’ எனும் ஹம்மிங் திஸ்ரம் என்று சொல்லப்படும் 3/4 தாளக்கட்டில் இருக்கும். அதன்பிறகு பாடல் முழுவதும் சதுஸ்ரம் என்று சொல்லப்படும் 4/4 தாளக்கட்டில் அமைந்திருக்கும். இதுபோன்ற பாடல்கள் மிக அரிதாகவே இருக்கும். சூழ்நிலையின் இறுக்கம், காதலின் மயக்கம் போன்றவற்றை இளையராஜா பாடல்களுக்கு கொடுக்கும் தாளக்கட்டே உணர்த்திவிடும். `இதயத்தை திருடாதே’ படத்தில் வரும் `ஓம் நமஹ’ பாடல் காதலன், காதலியின் நெருக்கத்தை விளக்கும். ஈருடல் ஓருயிராக மாறும் நெருக்கத்தில் இருவருக்குமாக சேர்த்து ஒரே இதயம் துடித்தால்.. லப்டப்.. லப்டப்… என்றுதானே கேட்கும்? அந்த இதயத்தின் ஒலியை, டிரம்ஸின் பாஸ்ஸை மட்டும் ஒலிக்கவிட்டு, அது பாடல் முழுவதும் வரும்.

ஜாஸ் பாணியை தபேலாவில் கொண்டுவருவார். நையாண்டி மேளத்தை டிரம்ஸில் கொண்டுவருவார். இதெல்லாமே அவருடைய இசையில் வெளிப்படும் தனித்தன்மைதான்.

`இளையராஜாவின் இசையில் நீங்கள் உணரும் தனித்தன்மை எது?’ என்று கேட்டால், சிலரிடமிருந்து கண்ணீர் பதிலாக வருகிறது!

“என்னுடைய அம்மாவின் மடியில் நான் தலை வைத்துப் படுத்திருக்கும் உணர்வைத் தருகிறது..”

“என்னுடைய சுண்டுவிரலைப் பிடித்துக் கொண்டு, பாதுகாப்பாக இந்த உலகத்தைச் சுற்றிக் காட்டுவதைப் போல் இருக்கிறது..”

- இப்படி இளையராஜாவின் இசையில் லயிக்கும் பலரிடமிருந்து பல விதமான உணர்வு அலைகள் நம்மை மூழ்கடிக்கின்றன

தெளிவான `கார்ட் புரமோஷன்’

“அவரின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது. மண்ணின் மணம் சார்ந்த இசையை அவர்தான் கொடுக்கிறார். `அரிசி குத்தும் அக்கா மகளே’ பாட்டின் இசையில் அவர் கொடுத்திருக்கும் இசையின் ஒலிகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும். இந்தப் படம் வந்த காலகட்டத்தில் கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் அரிசி குத்துவது, முறத்தில் புடைப்பது போன்றவை வீட்டில் அன்றாடம் நடக்கும் வேலைகளாக இருந்தன. அப்போது எழும் ஓசை, அப்படியே இந்தப் பாட்டில் இருக்கும். இளையராஜாவின் இசையில் வெளிப்படும் இந்த `நேட்டிவிட்டி’தான் அவரின் தனித்தன்மை. அதோடு, ஒரு ராகத்தில் டியூன் போட்டால்கூட அந்த ராகத்தில் என்னென்ன `கார்ட்ஸ்’ சேருமோ அந்த `பேக்கிங்’ அப்படியே தொடர்ந்து வரும். இது ஒரு கீபோர்ட் பிளேயராக, அவருடைய இசையில் நான் உணரும் தனித் தன்மை” என்கிறார் அவரின் மீது பெரும் அன்பையும் மரியாதையையும் வைத்திருக்கும் ஒரு கலைஞர்

படைப்பாளிகளின் கூட்டு முயற்சி

இந்த இசைக் கலைஞரின் பேச்சில் இருக்கும் உண்மையை நிறைய பேர் உணர்ந்திருப்பார்கள். ஆனால், நினைத்ததை ஒரு கோர்வையாகச் சொல்வதற்கு சிலரால்தான் முடியும். இளையராஜாவின் இசை தனித்தன்மையோடு வெளிப்படுவதற்குக் காரணம், அவருக்குக் கிடைத்த பாடல்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், பாட்டுக்கான சூழ்நிலைகள்.. இப்படி ஒரு அபாரமான கூட்டுமுயற்சியால் உண்டான பாடல்களையே இன்றளவும் நாம் கொண்டாடி வருகிறோம். அதனால் இசையில் அவருடைய தனித்தன்மைக்கு இதர படைப்பாளிகளுடன் பயணித்த கூட்டு முயற்சியே காரணம் என்கின்றனர் சில ரசிகர்கள்.

பின்னணி இசையில் புதுமை

“இளையராஜாவின் இசையில் வெளிப்படும் தனித்தன்மை இதுதான் என்று ஒன்றை மட்டும் சொல்லிவிட முடியாது. நான் உணர்ந்த ஒரு தனித் தன்மையை வேண்டுமானால் சொல்கிறேன். இளையராஜா இசையமைத்த காலத்துக்கு முன்பு நாம் கேட்ட பல இசையமைப்பாளர்களின் பாடல்களில் பெரும்பாலும் பல்லவி முடிந்து சரணம், அதற்கடுத்த சரணத்துக்கான பின்னணி இசை (Back Ground Music) எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் இளையராஜா ஒவ்வொரு சரணத்துக்கும் தனித்தனியாக பின்னணி இசையை அமைத்தார். இது அவருடைய இசையில் நான் உணர்ந்த தனித்தன்மை. இன்றைக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் பலரும் அவரின் பாதிப்பில்லாமல் இசையமைக்க முடிவதில்லை. புதிய விஷயங்கள் என்னும் தனித்தன்மை அவரிடம் இருப்பதால் இசை உலகில் அவர் ராஜாவாகவே திகழ்கிறார்” என்கிறார் பாடகரும் இசையமைப்பாளருமான ஹரிவிதார்த்.

அரேஞ்ஜ்மென்ட்டில் புதுமை

“இளையராஜாவுக்கு முன்பாக பல இசை மேதைகள் கர்னாடக இசையின் ராகங்களை அடியொட்டி இசையமைத்தனர். சிலர் அதிலிருந்து விலகி ஜனரஞ்சகமான மெல்லிசையை அளித்தனர். அப்போதெல்லாம் மேற்கத்திய இசையின் சாயலில் சில பாடல்களை மட்டுமே இசையமைத்திருப்பார்கள்.

பாஸ் கிதார் போன்ற வாத்தியங்களின் பயன்பாட்டை தமிழ்த் திரை இசை புரிந்து கொண்டதெல்லாம் இளையராஜாவின் வருகைக்குப் பின்தான். அவர் 70, 80-களிலேயே மேற்கத்திய பாணி இசையின் `கவுன்டர் பாயிண்ட்’ போன்ற பல நுணுக்கங்களையும் ஜாஸ் பாணி இசையையும் தமிழ்த் திரை இசையில் பயன்படுத்தியிருக்கிறார்.

இளையராஜாவின் இசையில் தனித் தன்மை அவரின் `அரேஞ்ஜ்மென்ட்’. மேற்கத்திய இசையை முறையாகப் படித்து, அதில் அவருக்கு இருக்கும் ஆழங்கால்பட்ட அறிவால்தான் அப்படியொரு அரேஞ்ஜ்மென்டை அவரால் உண்டாக்க முடிகிறது. வயலின், வியல்லோ, செல்லோ என ஒவ்வொரு வாத்தியத்துக்கும் உள்ள தனித் தன்மையை (Range) உணர்ந்து பயன்படுத்தும் ஆகச் சிறந்த கம்போஸர் இளையராஜா மட்டுமே. அதுதான் அவருடைய இசையின் தனித்தன்மை” என்கிறார் திரை இசையமைப்பாளர் சத்யா.

மனத்தை நனைக்கும் இசை

“அன்னக்கிளி’ படம் வெளிவந்த நாளிலிருந்தே இளையராஜாவின் இசையைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவருடைய இசை எனக்குப் பிடிக்கும். அவருடைய இசையில் வெளிப்படும் தனித்தன்மை, கர்னாடக இசையின் ராகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மெட்டமைத்த பாடல்களில் பளிச்சென்று வெளிப்படும்.

`ராஜபார்வை’ படத்தில் `அந்தி மழை பொழிகிறது’ எனும் பாடலை வசந்தா எனும் ராகத்தில் அமைத்திருப்பார். மழையில் குடை பிடித்தபடி நாயகனும் நாயகியும் திரையில் தோன்றுவார்கள். அந்தப் பாடலின் இசையைக் கேட்கும் போது நாமே மழையில் நனைவது போல் உணர்வு ஏற்படும். அதுதான் இளையராஜாவின் இசையில் இருக்கும் நுட்பம்.

`அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் வரும் `ஆயிரம் தாமரை மொட்டுக்களே..’ பாடலின் முகப்பு இசை முடிந்து பாடல் தொடங்கும் போதே பரவசம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் சுகானுபவம் ஏற்படும்.

`பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் இடம்பெற்ற `ஆனந்த ராகம்’ பாடல், சிம்மேந்திர மத்யமம் ராகத்தில் அமைந்திருக்கும். உமா ரமணனை பாடவைத்திருப்பார். அந்தப் பாடலில் சிம்மேந்திர மத்யமம் ராகத்தின் நெளிவு சுளிவுகள் அத்தனையையும் கொண்டுவந்திருப்பார்.

ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்குவது, அதற்கு இன்னின்ன வாத்தியங்களைக் கொண்டு இசையை அளிக்க வேண்டும், எந்த பாடகரைக் கொண்டு பாடவைத்தால் நன்றாக இருக்கும்? என்பதில் அவருக்கு இருக்கும் தெளிவு, யுக்திதான் அவரின் தனித் தன்மை. அதனால்தான் இன்றைக்கும் இசையில் அவருடைய இளைய ராஜாங்கம் தொடர்கிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் இசை விமர்சகருமான வீயெஸ்வி.

ராஜாவின் இசையில் மயங்குவதேன்?!

காதலைப் போல நம்மை சிரிக்க, அழ, நெகிழ, திக்குமுக்காட வைப்பது இசை. இது எப்படிச் சாத்தியமாகிறது? காதல் வயப்பட்டாலும் காதலில் தோல்வியுற்றாலும் மனம் உடனடியாக தன்னை ஏந்திக்கொள்ளவும் ஆற்றுப்படுத்தவும் இசையை நாடுவதேன்? புண்பட்ட நெஞ்சத்தைப் புகைவிட்டு ஆற்றுப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை ஆனால் இசையை ஊற்றி ஆற்ற முடிகிறதே எப்படி?!

மனித இனம் தழைக்கக் காதலும் காமமும் அத்தியாவசியம். ஆனால், பரிணாம வளர்ச்சியில் மனித இனம், இசையைக் கண்டுபிடித்திருந்தாலும் மனித குலம் பிழைத்திருக்க இசை ஒன்றும் பிராணவாயு இல்லையே. இருந்தாலும் காதல் செய்யும் அத்தனை ஜாலத்தையும் இசையும் செய்யத்தானே செய்கிறது?!

பிரான்ஸின் பாரி நகரத்தில் உள்ள பிரெஞ்சு அறிவியல் நிறுவனத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் ழான் ஜூலைன் அக்கவுட்டர், வாழ்வா, சாவா என்கிற உணர்வெழுச்சியைத் தூண்டும் நரம்பு மண்டலம்தான் இசைக்கான ஊற்றுக்கண் என்றார். அதேபோல காதலை மனம் உணரும் போதெல்லாம் மூளையில் சுரக்கும் ஒருவிதமான ஸ்தூலப் பொருளைத்தான் இசை கேட்கும்போதும் மூளை சுரக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

சில இசைக் கோவைகளைக் கேட்கும்போது மெய்சிலிர்த்து மயிர்க்கூச்சல் ஏற்படுகிறதல்லவா! அது அந்தத் தருணத்தில் மூளை வெளியேற்றும் டோப்பமைன் (dopamine) செய்யும் மாயம். உயிர் வாழவும், மனித இனம் செழித்தோங்கவும் அடிப்படையான உணவு உண்ணுதல், கலவி கொள்ளுதல் சமயத்திலும் இதே டோப்பமைனைத்தான் மனித மூளை வெளியேற்றுவதாகச் சொல்லப்படுகிறது.

இதைவிடவும் ஆச்சரியமான ஒரு தகவலை அறிவியல் சொல்கிறது. அதுதான் 'PATTERN' (பேட்டர்ன்). தூக்கத்தில் கனவு காணும்போது எங்கோ உயரத்தில் இருந்து தவறி விழுவதுபோன்ற பிரமை ஏற்பட்டு கட்டிலில் இருந்து உருண்டு விழுந்திருப்போம் இல்லையா. இது ஆதிகால மனிதர்கள் தங்களை விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள மரங்களில் ஏறி கிளையைப் பற்றிக்கொண்டு உறங்கியதன் தொடர்ச்சியே. அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் தன்னை மறந்து கிளையில் இருந்து தவறி விழுந்துவிடுவார்கள். இதன் படிமம்தான் மனித மூளையில் படிந்து தற்கால மனிதர்களின் கனவிலும் இத்தகைய வடிவம் கொள்கிறது என்றது உளவியல்.

இதை ஒட்டிய கோணத்தை இசை குறித்த ஆராய்ச்சியாளர் ஜட்டோரி (Zatorre) முன்வைத்துள்ளார். மனித குலம் பிழைத்திருக்க ஒரு சில பேட்டர்ன்களைக் கண்டடைந்தது என்கிறார் ஜட்டோரி. இதை வைத்து இளையராஜாவின் இசை நம்மை ஏன் பிடித்தாட்டுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

எப்படி? மரங்கள் சலசலக்கும் ஓசையை வைத்துக் கொடிய விலங்குள் தன்னைத் தாக்க வருவதை ஆதிமனுஷி கண்டுபிடித்தாள். தூரத்தில் புகை மூட்டமாகத் தெரிந்தால் தீ பரவிப் பலியாவோம் என்பதை அறிந்து, தன்னை தற்காத்துக் கொள்ள ஆதிமனுஷி ஓடினாள். இந்த பேட்டர்ன்களைப் போலவே இசையும் ஒரு விதமான பேட்டர்ன்தான் என்கிறார் ஜட்டோரி.

ஒரு புதிய பாடலைக் கேட்கும்போது அதில் அடுத்து வர இருக்கும் மெலடி, தாளக்கட்டு, இசைத் துணுக்குகளை மனம் ஊகித்துக் கொண்டே இருக்குமாம். இந்த ஊகம் அவரவர் வாழ்ந்து வந்த கலாச்சாரப் பின்புலத்தைப் பொறுத்தே அமைகிறது. ஆகவேதான் இதுவரை கேட்டிறாத முற்றிலும் புதிய இசை ரகத்தை ரசிக்க முடியாமல் போகிறது அல்லது ரசிக்கக் காலதாமதம் ஆகிறது. நாம் மட்டுமல்ல நம்முடைய முன்னோர்கள் (இனக்குழுக்கள்) இதுவரை கேட்டிறாத இசை நமக்குள் ஊறக் காலம் எடுக்கிறது. நாணயத்தின் மறுபக்கத்தில் சில இசைக்கோவை கேட்ட மாத்திரத்திலேயே ஆன்மாவை மீட்டத் தொடங்கிவிடுகிறது. இதற்கும் அந்த பேட்டர்ன்தான் காரணம் என்கிறார் ஜட்டோரி. ஆக நம்முடைய கலாச்சாரத்தில் ஊறிய ஒலிகள் இசையாகக் கொண்டாடப்படுகின்றன. மற்றவை சத்தங்களாக நிராகரிக்கப்படுகின்றன

இப்போது புரிகிறது 'அன்னக்கிளி'யின் 'மச்சானப் பாத்தீங்களா' முதல் 'சைக்கோ'வின் 'உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா' வரை ராஜாவின் இசை எப்படி ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களையும் கிறங்கடித்துக் கொண்டிருக்கிறது என்று.

ஒரு முறை இதைப் பற்றி ராஜாவே இப்படிச் சொன்னார்: "'அன்னக்கிளி' பாடல்கள் வெளியாகி முதன்முறையாக வானொலியில் ஒலிபரப்பான நாள் அது. என்னுடைய வீட்டை விட்டு வீதியில் கால் வைத்து என்னுடைய தெருவுக்குள் நடக்கத் தொடங்கினேன். முதலில் ஒரு வீட்டில்தான் 'மச்சானப் பாத்தீங்களா' பாடல் ஒலிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்த அடி எடுத்து வைக்க வைக்க வரிசையாக அந்தத் தெருவில் இருந்த அத்தனை வீடுகளிலும் உள்ள வானொலி அலைவரிசையை டியூன் செய்து அதே பாடலை ஒலிக்க விட்டார்கள். தெருமுனை வரையிலும் இருந்த அத்தனை வீடுகளிலும் ஒரே நேரத்தில் அன்று 'மச்சானப் பாத்தீங்களா' பாடல் ஒலித்ததைக் கேட்டு பிரமித்தேன். ஏதோ நான் இயற்றிய இசையை அந்த மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள் என்பதாக அதை நான் பார்க்கவில்லை. அவர்களுக்குள் ஏற்கெனவே ஊறி இருந்த இசையை நான் மீண்டும் அவர்களிடமே கொண்டு சேர்த்திருக்கிறேன் என்பதுதான் உண்மை".

ஒவ்வொரு முறை இசை மீட்டும்போதும் தமிழ்ச் சமூகத்தின் இசை பேட்டர்னை மீட்டெடுக்கும் இசை ராஜாவுக்கு இப்படிப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆசைப்படுகிறேன்.

Saturday, May 16, 2020

ஹிட்லர் நம்பிய அந்த இரண்டு பேர்! - சர்வாதிகாரியின் காதல் பக்கம்

சிறு வயதிலிருந்தே விலங்குகளின்மீது தனி ஆர்வமும் பாசமும் கொண்டிருந்திருக்கிறார், ஹிட்லர். அதிலும் நாய்களின்மீது அவருக்கு தனி பிரியம் உண்டு.

ஈவா...

ஹிட்லரின் காதலிகளுள் ஒருவராக இருந்து, மரணத்திற்கு சில மணி நேரங்கள் முன்பு மனைவி என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர்.
பிளாண்டி...

அது, ஹிட்லரின் செல்ல நாய். ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த ஒரு பெண் நாய்.

சிறு வயதிலிருந்தே விலங்குகளின்மீது தனி ஆர்வமும் பாசமும் கொண்டிருந்திருக்கிறார், ஹிட்லர். அதிலும் நாய்களின்மீது அவருக்கு தனி பிரியம் உண்டு.

பல நாய்களை அவர் வளர்த்திருந்தாலும், பிளாண்டி வரலாற்றில் இடம் பிடித்த காரணம் என்ன?

ஹிட்லரின் நாஜிப்படை வீரர்களுள் ஒருவர், 1941 ஆண்டு, ஒரு அழகான நாய்க்குட்டியை ஹிட்லருக்குப் பரிசாக வழங்கினார். ஒரு வயதே ஆன அந்த நாய்க்குட்டியைப் பார்த்தவுடன் ஹிட்லருக்கு பிடித்துப்போனது. நாய்க்குட்டியும் வால் ஆட்டியபடியே ஹிட்லரிடம் ஒட்டிக்கொள்ள, குழந்தையைப் போல உற்சாகம் அடைந்தார். நாய்க்குட்டிக்கு பிளாண்டி எனப் பெயரிட்டார். அன்றிலிருந்து ஹிட்லரின் நம்பிக்கையான பாதுகாவலனாக மாறியது பிளாண்டி.

ஈவாவைத் தவிர, ஹிட்லரின் படுக்கை அறையினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால், பிளாண்டியை ஹிட்லர் அனுமதித்தார். நாள் முழுக்க ஹிட்லரின் அருகில் இருக்கும் பிளாண்டி, அவர் தூங்கும் நேரத்திலும் அருகிலேயே இருந்தது.
பிளாண்டியைப் பராமரிக்க மட்டுமே ஒரு தனி நபரை வேலைக்கு அமர்த்தினார் ஹிட்லர். பிளாண்டி விளையாட அதே ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சார்ந்த ஒரு நாயை ஏற்பாடுசெய்தார். அதற்கு, பெல்லா எனப் பெயரிட்டார்

1945-ம் ஆண்டு,
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர இன்னும் குறுகிய நாள்களே இருந்தன. நண்பர் முசோலினியின் படுகொலை ஹிட்லருக்கு அதிர்ச்சியைத் தந்தது.
சோவியத் ராணுவம் தன்னை நெருங்கிவிட்ட செய்தியை அறிந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்கினால், தான் உட்பட அனைவரும் பல சித்ரவதைகளையும், கொடுமைகளையும் அனுபவிக்க நேரிடும் என ஹிட்லருக்கு நன்றாகவே தெரியும்.
தன் பணியாளர்கள் அனைவரையும் அழைத்து, 'எதிரிகளிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிடுங்கள், உடனே இங்கிருந்து புறப்படுங்கள்' என ஆணையிட்டார்.
பெர்லினில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்றுக்கு இடம் பெயர்ந்தார் ஹிட்லர். பிளாண்டியும் வழக்கம் போல வாலாட்டியபடியே அவருக்குப் பின்னால் ஓடியது.

1945 ஏப்ரல் 29..
ஹிட்லருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அந்தப் பதுங்கு குழியில் இருந்தனர். ஹிட்லரின் பிரத்யேக மருத்துவர் வெர்னர் ஹசியும் அதில் ஒருவர்.
தற்கொலை செய்துகொள்வதற்கான 'சயனைடு கேப்ஸ்யூல்கள்' ஹிட்லரின் மேசைக்கு வந்து சேர்ந்தன. ஹிட்லர் அவற்றை உற்று நோக்கினார். விஷத்தின் வீரியத்தை சோதிக்க விரும்பினார்.
ஆனால் யாரிடம் சோதிப்பது?
மருத்துவர் வெர்னரை திரும்பிப் பார்த்தார் ஹிட்லர். ஹிட்லரின் பார்வை வெர்னருக்குப் புரிந்தது. வெளியே உலாவிக்கொண்டிருந்த பிளாண்டி, ஹிட்லரின் அறைக்குள் அழைத்து வரப்பட்டது.
ஏதுமறியா அப்பாவியான பிளாண்டி, தனது முன்னங்கால்களை மேலே உயர்த்தி ஹிட்லரைப் பார்த்துக் குழைந்தது.
பிளாண்டியின் முகத்தை ஹிட்லர் பார்க்கவில்லை அல்லது பார்க்கத் துணிவில்லை. கை அசைத்துவிட்டு அருகில் இருந்த வேறு ஒரு அறைக்குச் சென்றுவிட்டார்.
பிளாண்டியின் வாய்க்குள் சயனைடு கேப்ஸ்யூல் திணிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியும், நான்கு கால்களைப் பலமாக அசைத்தவாறும் செத்து மடிந்தது.
ஹிட்லருக்கு பிளாண்டி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட ஹிட்லர், தன் அறையின் கதவை சிறிது நேரம் அடைக்கச் சொன்னார். வெற்று முகத்துடன் அந்த அறையில் தனியாக அமர்ந்திருந்தார்.
பிளாண்டி இறந்த அடுத்த நாள் (ஏப்ரல் 30), உலகின் மாபெரும் சர்வாதிகாரியான ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.
பல கோடி யூத மக்களைக் கொன்றுகுவித்து, அதன்மூலம் ஆனந்தமடைந்த ஹிட்லர், சிதைந்த ஒரு உயிருக்காகக் கலங்கியது, வரலாற்றில் பிளாண்டிக்காக மட்டுமே இருக்கும்.

Wolf Messing

Messing was born in the village of Góra Kalwaria, 25 km southeast of Warsaw, at a time when Poland was a territory of the Russian Empire. He claimed that his psychic abilities developed in his early life.[1] By the time he was a teenager he was performing for the public.[1] According to Messing, he was able to broadcast mental suggestions in order to alter people's perceptions. In the interview to the P. Oreshkin, Messing said:
... It's not mind-reading, it's, like the "reading of muscles" ... When human thinks hard about something, the brain cells transmit impulses to all muscles of the body. Their movements, invisible to the eye, I can easily feel. ... Often I'm performing mental tasks without direct contact with the inductor. The pointer to me here is the breathing frequency of inductor, the beating of his heart, voice timbre, his walking nature etc.[2]
He died in hospital, on 8 November 1974. He had successful surgery on the femoral and iliac arteries, but for some unknown reason death occurred in a couple of days, after kidney failure and pulmonary edema. He was buried at the "Vostryakovskoe" Jewish cemetery in Moscow.

Wednesday, February 05, 2020

பெரியகோயிலை கட்டச்சொன்ன ராஜராஜன் தெரியும்; கட்டிய குஞ்சர மல்லனைத் தெரியுமா?

விரிந்து பரந்திருந்த சோழப் பேரரசின் எஞ்சிய அடையாளமான பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜனை இப்போது நாம் கொண்டாடுகிறோம். ஆனால், சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை ராஜராஜன்தான் பெரிய கோயிலைக் கட்டினார் என்பதே உலகத்துக்குத் தெரியாது. அதற்கு முன்பு, கரிகால் சோழன்தான் இதைக் கட்டினார், காடுவெட்டிச் சோழன் என்பவர்தான் கட்டினார், பூதங்கள் வந்து கட்டின என எக்கச்சக்க 'மித்'துகள். 1896-ல் ஜெர்மனைச் சேர்ந்த கல்வெட்டு அறிஞர் Hultz என்பவர்தான் முதன்முதலில் பெரியகோயிலின் கல்வெட்டுக்களை முழுமையாகப் படித்து இதைக் கட்டியவர் ராஜராஜ சோழன் என்று அறிவித்தார்.


  • நவீன தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாத காலத்தில் இத்தனை பிரமாண்டமான கோயிலைக் கட்டிய தமிழ்க் கட்டுமான அறிவைத்தான் எல்லோருமே வியக்கின்றனர். இப்போது, ஒரு சிறிய வீடு கட்டவே முறுக்குக் கம்பிகள் தொடங்கி சிமென்ட் வரை பயன்படுத்துகிறோம். ஆனால், இத்தனை பிரமாண்ட கோயில், பாறைகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கியே கட்டப்பட்டது. பூசுவதற்கு சாந்து பயன்படுத்தப்படவே இல்லை. அந்தப் பாறைகளில்கூட அத்தனை ஆச்சர்யங்கள். தஞ்சைப் பகுதியில் ஒரு சிறிய மலைக்குன்றுகூட இல்லை. கடந்த ஆயிரம் வருடங்களில், மலைக் குன்றுகள் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும் இல்லை. அப்படி என்றால், கோயில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இத்தனை பிரமாண்டமான பாறைகள் எங்கிருந்து வந்தன? புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, குன்றாண்டார் கோயில் ஆகிய இரண்டு ஊர்களில் இருந்த மலைகளை உடைத்துப் பெயர்த்துக்கொண்டு வந்து கட்டப்பட்டதுதான் பெரியகோயில் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


  • குஞ்சர மல்லன் என்பவர்தான் பெரியகோயிலைக் கட்டிய தலைமை கட்டடப் பொறியாளர். இவருக்கு, ராஜராஜப் பெருந்தச்சன் என்று பட்டம் கொடுத்திருக்கிறார், ராஜராஜன். கோயிலின் மற்ற வேலைகளைச் செய்தவர்களையும் சமமாகவே மதித்திருக்கிறார். கோயிலில் நாவிதராக வேலை பார்த்தவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம், ராஜராஜப் பெரு நாவிதன்!


    • தாஜ்மஹால் உள்ளிட்ட நாட்டின் பல பிரமாண்ட கட்டுமானங்கள், அப்போதைய அரசர்களால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களைக்கொண்டு கட்டப்பட்டன. ஆனால் பெரியகோயில், முழுக்க முழுக்க இறைப்பணியில் ஆர்வம் உள்ளவர்களைக் கொண்டு உருவானது!


  • கோயிலின் உருவாக்கத்துக்கு நிதியாக கொட்டிக் கொடுத்தவர்கள் முதல் ஒரே ஒரு செப்புக் காசு கொடுத்தவர் வரை அத்தனை பேர் பெயர்களையும், என் பெயருக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் கல்வெட்டில் குறிப்பிட வேண்டும் என்பது ராஜராஜன் பிறப்பித்த முதல் உத்தரவு. அனைவரது பெயர்களும் கல்வெட்டுக்களில் இருக்கின்றன


  • யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை, பெரியகோயிலின் கோபுர நிழல் தரையில் விழாது. அந்த அளவுக்கு நுணுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று பலரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் உண்மை இல்லை. 216 அடி உயரம்கொண்ட கோயில் விமானத்தின் நிழல் தரையில் விழும். அதுபோலவே உச்சியில் இருக்கும் கோபுரம் ஒரே கல்லில் செய்யப்பட்டது என்பதும் தவறானது. கோயிலின் ஒரு பக்கத்தில் தொப்பி அணிந்த நிலையில் ஒரே ஒரு வெள்ளைக்காரரின் உருவம் பதிக்கப்பட்டிருக்கும். இதை வைத்து ஏராளமான கதைகள் உண்டு. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வரவே இல்லை. அப்புறம் எப்படி? பின்னால் வரப்போகிறார்கள் என்பதை முன்னரே தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறார்கள் அல்லது அப்போதே தமிழர்கள் மேற்கு நாடுகளுடன் கடல்வழித் தொடர்பைக் கொண்டிருந்தார்கள் என்று பலவித கருத்துகள். எதுவுமே உண்மை இல்லை. ராஜராஜனுக்குப் பிறகு, 1620-ல் தஞ்சாவூரை நாயக்கர்கள் ஆண்டபோது, டேனிஷ் நாட்டு வெள்ளையர்களுடன் வியாபார உறவு வைத்திருந்தார்கள். அவர்களை மரியாதைசெய்ய ,பெரியகோயிலில் நாயக்கர்களால் பொறிக்கப்பட்டதுதான் அந்த உருவம்!

    • பெரியகோயிலின் நிஜப் பிரமாண்ட பெருமை வேறு. பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே இருக்கும் லிங்கத்தின் பீடம், 3 அடி உயரமும் 55 அடி சுற்றளவும், 6 அடிக்கு கோமுகமும்கொண்டது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த விஸ்வரூபப் பீடத்தைச் செய்வதற்கு, குறைந்தபட்சம் 500 டன் எடையுள்ள பாறையை மலையிலிருந்து வெட்டி, நகர்த்திக் கொண்டுவந்திருக்க வேண்டும்! 


    • சோழர் காலம் தொடங்கி, விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம், மராட்டிய ஆட்சிக் காலம், ஆங்கிலேயர்களின் காலம் எனக் கடந்த 1000 வருட இந்திய ஓவியங்கள் அனைத்தும் பெரிய கோயிலில் உண்டு. இந்தியாவில் வேறு எங்கும் இப்படி ஓர் ஓவிய சங்கமத்தைக் காண முடியாது!