Sunday, June 16, 2019

சோழ மண்டலக் கடல் என்பதே சரி!!!

`இந்தியாவிற்கு வருகை தந்த அனைத்து ஐரோப்பியர்களாலும் சோழமண்டலக் கடல் என்றே நமது கடல் அழைக்கப்பட்டது. சோழர்களின் பெருமையும் அவர்களது கடல் ஆளுமையும் உலகம் அறிந்த ஒன்று!


வங்காள விரிகுடாவை 'சோழமண்டலக் கடல்' என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

பூமிப் பரப்பில் 70% கடலால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்கிறது அறிவியல். உலக அளவில் அதே விகிதத்தில் மக்கள் கடற்கரை ஓரங்களில் வசிப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்குமான ஆக்சிஜன் தேவைகளில் 70% கடல்வாழ் தாவாரங்கள்தான் பூர்த்தி செய்கிறது.

1856-ல் வெளியிடப்பட்ட ஆங்கிலேயே வரைபடம்:


சுமார் 170 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடல்கள் தோன்றியிருக்கலாம் என்று கூறும் இன்றைய அறிவியல், அன்றைய காலகட்டத்தில் நில அமைப்பு துண்டிடப்படாததாகவும் பெருங்கடலாகவும் இருந்திருக்கிறது 361,740,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட உலகக் கடல் அட்லான்டிக், பசிபிக், இந்தியன், ஆர்டிக் என 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 166,240,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பசிபிக் பெருங்கடல் மட்டும் உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியினை நீரால் சூழ்ந்திருக்கிறது. அதை ஒரே நேர்க்கோட்டில் நீட்டிப் பார்த்தோமென்றால் சுமார் 17,700 கிலோமீட்டர் அதாவது உலக நிலப்பரப்பில் பாதி அளவைத் தொடும். அதேபோல உலகின் மூன்றாவது பெரிய கடலாகவும், வெப்பமண்டலக் கடலாகவும் விளங்குவது 73,430,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்தியப் பெருங்கடல்தான்.

1761-ல் வெளியிடப்பட்ட ஆங்கிலேய வரைபடம்:

மேலும் உலகக் கடல்களின் தனிச்சிறப்புடைய இயற்கைத் தகவமைப்பினை தன்னகத்தேக் கொண்டிருக்கிறது. சிறிய கடல்களின் பெயர்களை ஒருங்கிணைத்தே பெருங்கடல் எனக் குறிப்பிட்டு வருகிறோம். அதன்படி அரபி மற்றும் வங்காள விரிகுடாக் கடல்கள் இந்தியப் பெருங்கடலில்தான் அடக்கம். இந்தியப் பெருங்கடல் என்பது குமரிக்கடலைத்தான் குறித்தது.  

1790 பிரெஞ்சு வரைபடம்:
``வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரி முனை பாப்பா,
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா                          
என்று இந்திய எல்லைகளை வரையறை செய்கின்றார் பாரதியார். தமிழ் மக்கள் கடல்களைப் பற்றிய ஆழமான அறிவுடையவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதற்குச் சங்க இலக்கியப் பாடல்களே சாட்சி. கடல் என்ற சொல்லாட்சி அவற்றில் பரவிக் கிடக்கிறது. கடலைக் குறிக்கும் ஆழி என்ற சொல் சங்க இலக்கியத்தில் 43 இடங்களில் வருகின்றது. கடல் சார்ந்த நிலம் நெய்தல் என்றும் அங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் ஏராளமான செய்திகள் தமிழில் விரவிக்கிடக்கின்றன. இந்தியக் கடலைக் கட்டியாண்ட பெருமை முடியுடை மூவேந்தர்களையே சாரும். இந்தியாவிற்கு வருகை தந்த அனைத்து ஐரோப்பியர்களாலும் சோழமண்டலக் கடல் என்றே நமது கடல் அழைக்கப்பட்டது. சோழர்களின் பெருமையும், அவர்களது கடல் ஆளுமையும் உலகம் அறிந்த ஒன்று. சோழர்களின் கடல் ஆளுமைப் பெருமையை எண்ணி வியந்துதான் தற்போதைய இந்திய அரசு 2015-ல் இராசேந்திர சோழனுக்கு அஞ்சல் தலையை வெளியிட்டது.
சுமார் 2,172,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகச் சொல்லப்படும் வங்காள விரிகுடா தனக்குள் சோழமண்டலக் கடலையும் அடக்கிக் கொள்கின்றது. மற்றபடி சோழமண்டலக் கடலுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வங்க மொழி என்ற சொல்லை `இடியமா பெங்கல்லா’ என்று போர்த்துக்கீசியர்கள் அழைத்தனர். முகமதிய ஆட்சியின்போதுதான் இந்தச் சொல் முதன்முதலில் வருகிறது. 16-ம் நூற்றாண்டில் வங்க மொழியை கெளட மொழி என்றே அழைத்தனர். வங்காள மொழி பேசுவதன் அடிப்படையிலேயே வங்காளதேசம் என்று அழைக்கப்பட்டது. பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து தனி நாடாக உருவாகியிருக்கும் வங்கதேசம்தான் முந்தைய இந்தியாவில் கிழக்கு வங்கமாக இருந்தது.
வங்கதேசப் பகுதியில் தொடங்கி இந்தியாவின் மேற்கு வங்கம் வரை பரந்திருக்கும் குடாப் பகுதியே விரிகுடா எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி, மகாநதி போன்ற பெரிய ஆறுகள் கலக்கின்றன. இதை வங்காள விரிகுடா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அளவில் சிறியதான குடா வளைகுடா (Gulf) என்றும், பெரிய அளவிலான பகுதி விரிகுடா (Bay) என்றும் பெயர் பெற்றதோடு அப்படியே அழைக்கப்பட்டது. பரப்பளவில் சிறியதான மன்னார் வளைகுடாவையும், பெரியதான வங்காள விரிகுடாவையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். நமது சோழமண்டலத்தை ஐரோப்பியர்கள் கோரமண்டல் (Coromandel) என்றே அழைத்தார்கள்.
29 கடல்களையும் 4 பெருங்கடல்களையும் கொண்ட இப்புவிப் பரப்பில் சோழமண்டலக் கடலுக்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றைப் போலவே இந்தியாவின் மேற்கிலும், மலையாளக் கரை அல்லது மலைவாரக் கடல் என்ற சொற்கள் எப்படி அரபிக் கடலாக ஆகும் என்ற கேள்வியினை அரசுகள் எண்ணிப்பார்க்க வேண்டும். கோதாவரி ஆறு கலக்குமிடம் தொடங்கி இலங்கையின் மன்னார் வரையுள்ள கடல் பரப்பு சோழமண்டலக் கடலுக்கான பெயருக்குரியது.

Sunday, January 13, 2019

போஜ்புர் !!!

போஜ்புர் என்பதும் போபால் அருகில் உள்ள சிற்றூர். ராஜா போஜன் நம்மூர் ராஜராஜ சோழன், மகேந்திரப் பல்லவன் இருவருடைய கலவை. சமராங்கன சூத்ரதாரா என்ற கட்டட, சிற்ப நூலை எழுதியவன். போஜ்புரில் மாபெரும் சிவன் கோயிலை எழுப்ப முனைந்தான். கட்டி நின்றிருந்தால் தஞ்சைப் பெரியகோயிலைப் போல் இருமடங்கு உயரம் இருந்திருக்கும். இக்கோயிலின் வடிவ வரைபடம் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விழுந்துகிடந்த அடிப்பகுதியை இந்திய தொல்லியல் துறை நன்றாக எழுப்பியுள்ளனர்.
பிரம்மாண்டம்.
சிவலிங்கம் இந்தியாவிலேயே மிகப் பெரியது.



ஏலியன் சிக்னல்களும், தொடர் குழப்பங்களும்!

சில நாள்களாகப் புரிந்துகொள்ள முடியாத ரேடியோ சிக்னல்கள் பூமிக்கு வந்துகொண்டே இருப்பதும் அடக்கம். இப்போது மறுபடியும் மக்கள் மத்தியில் ஏலியன்கள் பற்றிய பேச்சு வருவதற்குக் காரணமும் விண்வெளியில் நமக்குக் கிடைத்த அந்த சிக்னல்களே.

மிளிரும் ஒளிகளும், அலரும் ரேடியோக்களும் ஏதோவொரு தகவலைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்தத் தகவல் என்னவென்பதைத்தான் இன்னமும் கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த சிக்னல்கள் தொலைதூர நட்சத்திரங்களின் நுண்ணலைகளில் இருந்து கிடைத்துள்ளன. பலவும் கருந்துளைகளிலிருந்து கிடைத்துள்ளன. உலகளவில் இந்த சிக்னல்கள் விஞ்ஞானிகளைக் குழப்புகின்றன. தங்களிடமுள்ள சாதனங்களை வைத்து அவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். அதிநுட்பமான அந்த சிக்னல்கள் சில மில்லி விநாடிகளே வந்துவிட்டுச் செல்கின்றன. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அவை பலகோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலிருந்து வந்துள்ளன. ஆனால், அவை எப்படி வந்தன, யாராவது அனுப்பினார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை.
இந்த மர்மங்களுக்கு விடைகாண வேண்டுமெனில் நமக்குக் கிடைத்த ரேடியோ சிக்னல்கள் சொல்லும் செய்திகளைக் கண்டுபிடித்தாக வேண்டும். இதேபோல் 2007-ம் ஆண்டும் சிக்னல்கள் கிடைத்தன. அப்போது வெறும் அறுபது சிக்னல்களே வந்தன. இப்போது சிக்னல்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகின்றது. இன்னமும் வந்துகொண்டே இருக்கின்றன. நேச்சர் (Nature) என்ற ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விண்வெளியிலிருந்து புதிதாகப் பதின்மூன்று ரேடியோ சிக்னல்கள் கிடைத்திருப்பதாகப் பதிவுசெய்துள்ளனர். அவற்றில் ஏழு, அதிக அலைவரிசை கொண்டவை. அதாவது நானூறு மெகா ஹெர்ட்ஸ்க்கும் அதிகமாக இருந்துள்ளன. 

இவை அடிக்கடி விட்டுவிட்டு வந்துகொண்டே இருக்கின்றன. பிரிட்டிஷ் கொலம்பியா மலையில் இருக்கும் கனடாவின் தேசிய ரேடியோ விண்வெளி ஆய்வகத்தில் தொடர்ச்சியாகப் பதிவாகும் ஒரே மாதிரியான சிக்னல்களைப் பதிவு செய்துள்ளார்கள். அந்தத் தொடர் சிக்னல்களை ஆய்வுசெய்து, அவை எங்கிருந்து வந்தன, எப்படி வந்தன என்பதுபோன்ற தகவல்களைத் திரட்ட விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இதுவரை நடந்த ஆராய்ச்சிகள், சில முடிவுகளுக்கு விஞ்ஞானிகளைக் கொண்டு வந்துள்ளன. சூப்பர் நோவா என்னும் பெருஞ்சூரியனிலிருந்து வெளியான மிச்சங்களுடைய சிக்னல்களாக இருக்கலாம். இல்லையேல் அளவில் மிகப்பெரிய கருந்துளைகளில் உருவான வெடிப்பு நிகழ்வு ஏதாவதொன்றில் கடுமையான கதிர்வீச்சுகள் வெளியாகியிருக்கலாம். அதுகூட நமக்குக் கிடைத்திருக்கலாம் என்கிறார்கள்.
இது ஏலியன்களால் அனுப்பப்பட்ட சிக்னல்கள்தாம். இவை செயற்கையாக அனுப்பப்பட்டவையே என்பதுபோன்ற முடிவுகளுக்கு நாமே வரக்கூடாது" என்கிறார் விண்வெளி இயற்பியலாளரான ஏவி லோப் (Avi Loeb). 
கடந்த இரண்டு மாதங்களில் நமக்குக் கிடைத்துள்ள இந்தப் புதிய சிக்னல்கள், ஏலியன் புதிருக்கு விடைதேடும் விஞ்ஞானிகளின் பயணத்துக்கு முன்பைவிட அதிகம் பயனுள்ளதாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். கிடைத்துள்ள அனைத்துமே சுமார் ஒன்றரை பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தே கிடைத்துள்ளன. இப்படியாக ஒரே இடத்திலிருந்து தொடர்ச்சியாக வருவதால் அவை எங்கிருந்து வருகின்றன, எப்படி வருகின்றன போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பது விரைவில் எளிதாகிவிடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பெரும்பாலான விஞ்ஞானிகள், தொலைவில் ஏதாவது நட்சத்திர வெடிப்பு நிகழ்வு நடந்திருக்கலாம் என்றும் அவற்றிலிருந்து வெளியான கதிர்வீச்சுகளே நமக்கு இப்படியான சிக்னல்களாகக் கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இந்த ஆய்வின் முடிவில் வழக்கம்போல் ஏதேனும் இயற்கை நிகழ்வாக இருக்கலாம் அல்லது உண்மையிலேயே ஏலியன்கள் அனுப்பிய சிக்னலாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும் விண்வெளி ஆராய்ச்சிகளில் மைல்கல்லாக நின்ற நம்மோடு வாழ்ந்த சமகால மேதாவி ஒருவர் சொன்னதை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.
``ஏலியன்கள் பூமிக்கு வரவேண்டுமென்று நாம் ஆசைப்படுவது ஆபத்தானது. அவர்கள் வருவது அமெரிக்காவுக்குச் சென்ற கொலம்பஸ் கதையாகப் போகத்தான் வாய்ப்புகள் அதிகம். அவர் அங்கு கால் வைத்தது அப்பகுதியின் சொந்தக்காரர்களான பூர்வகுடி அமெரிக்கர்களுக்கு நல்லது செய்யவில்லை. அப்படித்தான் நம் உலகில் ஏலியன்களின் வருகையும் அமையும்"
இதைச் சொன்னது யார் தெரியுமா? புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். வேற்றுக்கிரகவாசிகளைத் தேடி நாம் சிக்னல் அனுப்புவது அவ்வளவு நல்லதல்ல என்று அவர் எச்சரித்தார். அது மனித இனத்தின் இருப்பையே ஆபத்துக்கு உள்ளாக்கும் வாய்ப்புகள்தாம் அதிகம். தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் என்ன நோக்கத்தில் வருவார்கள் என்பது நமக்குத் தெரியாது. அதுமட்டுமல்ல. நம் சிக்னல்களைக் கண்டுபிடித்து நம் உலகுக்கு அவர்களால் வரமுடிந்தது என்றால், அவர்கள் நம்மைவிடத் தொழில்நுட்பங்களில் பல மடங்கு முன்னேறியவர்களாகவே இருப்பார்கள். அப்படியொரு கூட்டத்தை எதிர்த்து நிற்கும் அளவுக்கு நாம் இன்னமும் வளரவில்லை. அப்படிச் செய்வது ஆபத்தை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்பதற்குச் சமம் என்றார் ஹாக்கிங்.
பூமியின் வளங்கள் ஏற்கெனவே குறைந்து கொண்டிருக்கின்றன. இங்கு வாழ்பவர்களுக்கே பற்றாக்குறை ஏற்பட்டுக்கொண்டிருக்க, புதிதாக வருபவர்கள் இப்படிப்பட்ட பற்றாக்குறையான உலகை எப்படிப் பார்ப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. இதே நிலைதான் பேரண்டத்தின் எந்தப் பகுதியில் எந்த வகை நாகரிகம் வாழ்ந்தாலும் இருக்குமென்று நினைக்கிறேன். இயற்கை ஓரளவுக்குத்தானே கொடுத்திருக்கிறது. அந்த அளவு எப்போதோ எல்லை மீறியிருக்க மற்ற கிரகங்களில் மட்டும் அப்படியே வைத்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றவில்லை. அப்படிப்பட்டவர்கள் இங்கு வரும்போது நம்மைப் போலவே, மனிதர்கள் மற்ற நாடுகளில் கிடைப்பதைச் சுரண்ட நினைப்பது போலவே அவர்களும் நினைக்க மாட்டார்களென்று என்ன நிச்சயம்? அப்படியொரு சூழல் வரக்கூடாது என்றுதான் ஹாக்கிங் விரும்பினார். அனைத்து ஆராய்ச்சிகளும் அந்த மேதையின் கருத்தை நோக்கியதாகவே இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.