Friday, December 14, 2018

'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்

1503-ம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, பிரான்ஸில் பிறந்தார் நாஸ்ட்ராடாமஸ். சட்டப் படிப்புக்கு பாதியிலே முழுக்குப் போட்டுவிட்டு மருத்துவம் பயின்றார். மருத்துவம் படித்தபோதும்  ஜோதிடத்தின் மீதுதான் நஸ்ட்ராடாமஸுக்கு ஈர்ப்பு . தனது வீட்டின் மேல்தளத்தை  ஜோதிடம் சார்ந்த ஆய்வுகளுக்கு ஏற்ப வடிவமைத்தார். அங்குதான் தனக்குத் தோன்றியவற்றை 'Almanac' (பஞ்சாங்கம்) வடிவத்தில் வெளியிட ஆரம்பித்தார். 1540-களில், நாஸ்ட்ராடாமஸ் வெளியீடுகள் நிகழ்ந்து, நல்ல வரவேற்பைப் பெற பிரான்ஸைக் கடந்தும் புகழ் பரவியது. 
உலகின் தலையெழுத்து 100 :

பைபிளுக்குப் பிறகு அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அதிக மக்களால் கவனம்பெற்ற நூல் நாஸ்ட்ராடாமஸ் எழுதிய 'The Centuries' (The Prophesies). பிரெஞ்சு புரட்சி,நெப்போலியன்,முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர்,ஹிட்லர், முசோலினி, லேடன் என உலகில் நடந்த பல முக்கியச் சம்பவங்களை 1550-களிலேயே தனது செஞ்சுரியில் தொகுத்துக் கணித்து வைத்துவிட்டார்.  நடந்தது, இன்னும் நடக்கப்போவது என்று நாஸ்ட்ராடாமஸ் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆக, ஒவ்வொரு நிகழ்வின் மீதுதான செஞ்சுரியின் கணிப்புகளை அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் உலகம் கண்டுவருகிறது. 1568ல் அச்சான மூலப் பிரதியிலிருந்து எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள், எழுதுபவர்களின் கண்ணோட்டம் என்று செஞ்சுரிகுறித்த சந்தேகங்கள் தொடர்ந்தவாறே உள்ளன. யாரும் தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகப் பலவற்றை குறியீடுகளாகவும், புதிராகவும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஒரு சம்பவத்தைப் பற்றிய உறுதிப்பாடு என்பது இதில் அவசியமாகிறது.
மிருகங்கள், மிகுந்த பசியுடன் ஆற்றைக் கடக்கின்றன. 
போர் அவனுக்கு பாதகமாகவே அமையும். 
ஜெர்மனி குமாரன் சட்டத்தை அறியமாட்டான். 
சிறப்புமிக்க ஒருவனை கூண்டிலடைப்பான்'. [||.24]
இந்த வரிகள், ஜெர்மனி குமாரன் என்றே குறிப்பிட்டுள்ளதால், நிகழ்வுகளின் அடிப்படையில் இவை ஹிட்லரைப் பற்றிய அறிவிப்பு என அறியலாம். இதுபோல், தனது அறிவிப்புகளில் இடம்,மாதம் போன்றவற்றை நாஸ்ட்ராடாமஸ் நுணுக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில்,சில மேம்போக்கான அறிவிப்புகள் எழுத்தாளர்களின் எண்ணத்திற்கேற்ப பொருள்கொள்ளப்படுகிறது. 
'மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட பகுதியில், ஒரு சிறந்த மனிதன் பிறப்பான். அவனுடைய புகழ்,ஆட்சி,மரியாதையெல்லாம் ஓங்கி நிற்கும்.வளர்பிறை சந்திரன்போல் அவனுடைய சிறப்புகள் பெருகி தரையிலும்,கடலிலும் பிரகாசித்திருப்பான். அவன் சுழன்றடிக்கும் காற்றோடு பொழிகின்ற மழையைப்போல் உலகமெங்கும் சுற்றிவருவான்'. [| - 50]
மூன்று பக்கம் கடல் என்பதால், இது தென்னிந்தியாவைத்தான் குறிக்கிறது என்று அவரவர் அபிமானிகள் தங்கள் தலைவனை மார்தட்டிக்கொள்கிறார்கள். உண்மை, நாஸ்ட்ராடாமஸுக்கே வெளிச்சம். எது எப்படியோ, நாஸ்ட்ராடாமஸ் சொல்வதெல்லாம் நடக்கிறது. அவர் உடல் குறித்தான ஆய்வுகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்விக்கான பதிலும் மர்மமாகவே உள்ளது

No comments: