Friday, December 14, 2018

'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்

1503-ம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, பிரான்ஸில் பிறந்தார் நாஸ்ட்ராடாமஸ். சட்டப் படிப்புக்கு பாதியிலே முழுக்குப் போட்டுவிட்டு மருத்துவம் பயின்றார். மருத்துவம் படித்தபோதும்  ஜோதிடத்தின் மீதுதான் நஸ்ட்ராடாமஸுக்கு ஈர்ப்பு . தனது வீட்டின் மேல்தளத்தை  ஜோதிடம் சார்ந்த ஆய்வுகளுக்கு ஏற்ப வடிவமைத்தார். அங்குதான் தனக்குத் தோன்றியவற்றை 'Almanac' (பஞ்சாங்கம்) வடிவத்தில் வெளியிட ஆரம்பித்தார். 1540-களில், நாஸ்ட்ராடாமஸ் வெளியீடுகள் நிகழ்ந்து, நல்ல வரவேற்பைப் பெற பிரான்ஸைக் கடந்தும் புகழ் பரவியது. 
உலகின் தலையெழுத்து 100 :

பைபிளுக்குப் பிறகு அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அதிக மக்களால் கவனம்பெற்ற நூல் நாஸ்ட்ராடாமஸ் எழுதிய 'The Centuries' (The Prophesies). பிரெஞ்சு புரட்சி,நெப்போலியன்,முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர்,ஹிட்லர், முசோலினி, லேடன் என உலகில் நடந்த பல முக்கியச் சம்பவங்களை 1550-களிலேயே தனது செஞ்சுரியில் தொகுத்துக் கணித்து வைத்துவிட்டார்.  நடந்தது, இன்னும் நடக்கப்போவது என்று நாஸ்ட்ராடாமஸ் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆக, ஒவ்வொரு நிகழ்வின் மீதுதான செஞ்சுரியின் கணிப்புகளை அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் உலகம் கண்டுவருகிறது. 1568ல் அச்சான மூலப் பிரதியிலிருந்து எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள், எழுதுபவர்களின் கண்ணோட்டம் என்று செஞ்சுரிகுறித்த சந்தேகங்கள் தொடர்ந்தவாறே உள்ளன. யாரும் தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகப் பலவற்றை குறியீடுகளாகவும், புதிராகவும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஒரு சம்பவத்தைப் பற்றிய உறுதிப்பாடு என்பது இதில் அவசியமாகிறது.
மிருகங்கள், மிகுந்த பசியுடன் ஆற்றைக் கடக்கின்றன. 
போர் அவனுக்கு பாதகமாகவே அமையும். 
ஜெர்மனி குமாரன் சட்டத்தை அறியமாட்டான். 
சிறப்புமிக்க ஒருவனை கூண்டிலடைப்பான்'. [||.24]
இந்த வரிகள், ஜெர்மனி குமாரன் என்றே குறிப்பிட்டுள்ளதால், நிகழ்வுகளின் அடிப்படையில் இவை ஹிட்லரைப் பற்றிய அறிவிப்பு என அறியலாம். இதுபோல், தனது அறிவிப்புகளில் இடம்,மாதம் போன்றவற்றை நாஸ்ட்ராடாமஸ் நுணுக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில்,சில மேம்போக்கான அறிவிப்புகள் எழுத்தாளர்களின் எண்ணத்திற்கேற்ப பொருள்கொள்ளப்படுகிறது. 
'மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட பகுதியில், ஒரு சிறந்த மனிதன் பிறப்பான். அவனுடைய புகழ்,ஆட்சி,மரியாதையெல்லாம் ஓங்கி நிற்கும்.வளர்பிறை சந்திரன்போல் அவனுடைய சிறப்புகள் பெருகி தரையிலும்,கடலிலும் பிரகாசித்திருப்பான். அவன் சுழன்றடிக்கும் காற்றோடு பொழிகின்ற மழையைப்போல் உலகமெங்கும் சுற்றிவருவான்'. [| - 50]
மூன்று பக்கம் கடல் என்பதால், இது தென்னிந்தியாவைத்தான் குறிக்கிறது என்று அவரவர் அபிமானிகள் தங்கள் தலைவனை மார்தட்டிக்கொள்கிறார்கள். உண்மை, நாஸ்ட்ராடாமஸுக்கே வெளிச்சம். எது எப்படியோ, நாஸ்ட்ராடாமஸ் சொல்வதெல்லாம் நடக்கிறது. அவர் உடல் குறித்தான ஆய்வுகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்விக்கான பதிலும் மர்மமாகவே உள்ளது

Sunday, December 02, 2018

176 வயதான தாமிரபரணி பாலம்

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக தாமிரபரணி பாலம் திகழ்கிறது. லண்டனின் தேம்ஸ் நதியில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தின் வடிவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. சுலோச்சன முதலியார் என்ற தனி மனிதரின் கொடையால் கட்டப்பட்ட இந்தப் பாலம், 176 ஆண்டுகளைக் கடந்தும் உறுதி குலையாமல் உள்ளது.
ரசு கட்டுமானங்கள் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். சில இடங்களில் லட்சங்களைக் கொட்டி  போடப்பட்ட பாலங்கள், ஓராண்டுக்குள்ளாகவே சரிந்து விழுந்த சோகத்தைப் பார்த்தும், கேள்விப்பட்டும் இருக்கிறோம். ஆனால், 176 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட ஒரு பாலம், இப்போதும் சிறிதும் உறுதிகுலையாமல் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. நெல்லையில் வாழ்ந்த தனி நபர் ஒருவர், தன் சொத்துகளையும் மனைவியின் நகைகளையும் விற்று ஆற்றிலே கொட்டி அந்தப் பாலத்தைக் கட்டியிருக்கிறார். அது, பல ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. அந்த மாமனிதரின் பெயர் சுலோச்சன முதலியார். அவரது மனைவி வடிவாம்பாள்!
நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களைப் பிரிப்பது தாமிரபரணி நதி. கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு அணைகள் எதுவும் கட்டப்படாத நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், தாமிரபரணி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. ஏப்ரல், மே மாதங்கள் தவிர எஞ்சிய 10 மாதங்களிலும் இந்த ஆற்றில் வெள்ளம் சீறிப் பாய்ந்து ஓடியிருக்கிறது.

அப்போது, தாமிரபரணி ஆற்றில் பாலம் இல்லாததால் பரிசல்களை நம்பியே மக்கள் பயணம் செய்திருக்கிறார்கள். அல்லது நீந்திக் கரைசேர வேண்டும். வசதிபடைத்தவர்கள் கட்டணம் செலுத்தி பரிசல்களில் சென்றிருக்கிறார்கள். வசதியற்றவர்கள் நீச்சல் அடித்துச் செல்ல வேண்டிய நிலை. காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடிய தாமிரபரணி ஆற்றைக் கடக்க முயன்று உயிரை மாய்த்துக்கொண்டவர்கள் அனேகர். ஆர்வம் மிகுதியால் கரை சேர்ந்துவிடும் துணிச்சலுடன் ஆற்றில் இறங்கி, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  
ஆனாலும், நெல்லையில் உள்ள வர்த்தக மையங்களுக்குச் செல்லவும், விளைவித்த காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யவும் ஆற்றைக் கடக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, பரிசல்களைப் பயன்படுத்தியே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. குறைவான பரிசல்கள் மட்டுமே இயக்கப்பட்டதால், படகுத்துறையில் எப்போதும் கூட்டம் அலைமோதியபடியே இருந்திருக்கிறது. அவசரமாக அக்கரைக்குச் செல்ல விரும்புபவர்கள் வரிசையில் நிற்காமல், பரிசல்காரருக்கு கமிஷனாகக் கூடுதல் பணத்தைக் கொடுத்து பயணம் செய்திருக்கிறார்கள். வரிசையில் காத்திருப்பவர்களுக்கு இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியதால், அடிக்கடி தாமிரபரணி படகுத்துறையில் குழப்பமும் தகராறும் ஏற்படுவதுண்டாம்.
செங்கல்பட்டு அருகேயுள்ள திருமணம் என்கிற சிறிய கிராமத்தில், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் சுலோச்சன முதலியார். அவரது முன்னோர்கள் ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள். சுலோச்சன முதலியாரின் தாத்தா, திருவனந்தபுரத்தில் நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார். அவரது தந்தை ராமலிங்க முதலியார், கட்டபொம்மனுக்கும் அவரது வழக்கை விசாரித்த ஆங்கிலேயே அதிகாரியான பானர்மேனுக்கும் மொழி பெயர்ப்பாளராகச் செயல்பட்டார். அதன் காரணமாகவே அவரது குடும்பம் நெல்லைக்குக் குடிவந்திருக்கிறது. 
சுலோச்சன முதலியாரிடம் செல்வமும் செல்வாக்கும் இருந்ததால், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவகத்துக்கு தினமும் சாரட் வண்டியில் வந்துசெல்வது வழக்கம். அவருக்கென அங்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டு இருந்துள்ளது. தாசில்தாருக்கு இணையான சிரஸ்தார் பொறுப்பில் அவர் இருந்துள்ளார். அரசு வேலையாகச் செய்யாமல், சம்பளம் பெறாமல் கெளரவ வேலையாகச் செய்திருக்கிறார். அவர் சாரட் வண்டியில் கம்பீரமாக வந்துசெல்வது குறித்து திருநெல்வேலி தொடர்பான குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது. 
தாமிரபரணி ஆற்றின் கரையில் நடக்கும் குளறுபடிகளைத் தீர்க்கும் வகையில், அங்கே ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்.ஈடன் என்பவருக்குக் கனவாக இருந்தது. அதனால், இது தொடர்பாக 1836-ம் ஆண்டு ஆங்கிலேய தலைமையகமான லண்டனுக்குக் கடிதம் எழுதினார். ஆற்றில் பாலம் கட்டி பணத்தை வீணடிப்பதில் ஆங்கிலேய அரசுக்கு விருப்பமில்லை. அதனால் எந்தப் பதிலையும் அனுப்பவில்லை. 
இந்தச் சூழலில், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், 1840-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி, தாமிரபரணி படகுத்துறையில்  பெரும் கலவரம் மூண்டிருக்கிறது. அந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த அப்போதைய ஆட்சியராக இருந்த ஈ.பி.தாம்சன் எவ்வளவோ முயன்றும், அந்தக் கலவரம் கொலையில் முடிவதைத் தடுக்க இயலவில்லை. அந்தக் கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். இது, கலெக்டர் ஈ.பி.தாம்சன் மனதை வெகுவாகப் பாதித்தது. 
அந்த இடத்தில் அனைத்து மக்களும் எளிதாகச் சென்று வர பாலம் கட்டப்பட்டிருந்தால், கலவரம் நடந்திருக்காது என வருந்தியுள்ளார். அடிக்கடி நடக்கும் கலவரங்கள், அடிதடிகள் மட்டுமல்லாமல் படகுத்துறையில் நடக்கும் வழிப்பறி, கொள்ளை போன்றவையும் கலெக்டரைக் கவலையடையவைத்திருக்கிறது. அங்கு நடந்துள்ள லஞ்ச விவகாரமும் அதிருப்தியை ஏற்படுத்தியதால், அதிகாரிகளை அழைத்து பாலம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். 
தாமிரபரணி ஆற்றில் பாலம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கேப்டன் ஃபேபர், பொறியாளர் டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே, சிரஸ்தார் பொறுப்பில் இருந்த சுலோச்சன முதலியார் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின்னர் களப்பணியாற்றிய அவர்கள், வரைபடம் தயாரித்தனர். அதன்படி 760 அடி நீளத்துக்கு 21.5 அடி அகலத்தில் 60 அடி விட்டத்தில் 11 ஆர்ச்சுகள் (வளைவுகள்) அமைக்க வரைபடம் தயாரித்தனர். அந்தப் பாலம், லண்டன் நகரில் ஓடக்கூடிய தேம்ஸ் நதியின்மீது கட்டப்பட்டுள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலம் போன்று இருக்க வேண்டும் என்பது கலெக்டர் தாம்சனின் கட்டளை. 
அதற்கேற்ப வரைபடம் தயாரிக்கப்பட்டது. அதைப் பார்த்ததும் கலெக்டருக்கு பூரிப்பு உண்டானது. ஆனால், இங்கிலாந்தில் இருந்து பணம் வழங்க ஒப்புதல் கிடைக்காத நிலையில், மக்களிடமே பணத்தைத் திரட்டி பாலத்தைக் கட்டுவதென முடிவானது. பாலம் கட்டும் பணிக்காக மக்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் பணியை சுலோச்சன முதலியாரிடமே வழங்கினார், கலெக்டர் தாம்சன். ஆனால் பொதுப் பணிக்காக மக்களிடம் வசூல் செய்வதில் சுலோச்சன முதலியாருக்கு விருப்பம் கிடையாது. ஆனாலும் கலெக்டரின் முடிவுக்குச் சம்மதித்தார்.
பாலத்தை 50,000 ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிப்பதென முடிவாகியிருந்தது. வீட்டுக்குச் சென்ற முதலியார், மன நெருக்கடியுடன் இருந்திருக்கிறார். அதைக் கண்ட அவரது மனைவி வடிவாம்பாள், விவரத்தைக் கேட்டுள்ளார். நடந்த விவரங்களை அவர் தெரிவித்ததும், மறுபேச்சு எதுவும் பேசாமல் தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்ததுடன், வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த நகைகளையும் எடுத்துவந்து அவரிடம் கொடுத்திருக்கிறார். 
அதை வைத்து பாலத்தைக் கட்டும் முடிவுக்கு வந்த சுலோச்சன முதலியார், கலெக்டரின் ஒப்புதலுடன் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்தப் பணியில், பல்வேறு குற்ற வழக்குகளுக்காகத் தண்டனை பெற்ற 100 கைதிகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். நெல்லைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த பழங்காலக் கோட்டைகளிலிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சுண்ணாம்புச் சாந்துடன் பதநீர், கடுக்காய், கருப்பட்டி கலந்து கட்டுமானப் பணி நடந்திருக்கிறது 
பாலம் கட்டும் பணிகள் 1840-ல் தொடங்கியிருக்கிறது. பொறியாளரான டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே சிறப்புக் கவனத்துடன் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். மூன்று ஆண்டு கால கடின உழைப்புக்குப் பின்னர், தேம்ஸ் நதியே இடம் பெயர்ந்து நெல்லைக்கு வந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பிரமாண்டமாகப் பாலம் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. 1843-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பாலத்தின் பணிகள் முடிவடைந்திருக்கிறது. 
கடந்த 176 வருடங்களாக உறுதி குலையாமல் இருக்கும் இந்தப் பாலத்துக்கு, ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி வாரத்தில் மலர் மரியாதை செய்வதை எழுத்தாளர் நாறும்பூநாதன், டாக்டர் சண்முகம், கோ.கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வழக்கமாகக்கொண்டுள்ளனர். இவர்களின் முயற்சியால் ஆண்டுதோறும் இந்தப் பாலத்தின் பெருமை வெளியே தெரியவருகின்றது. இதுகுறித்து எழுத்தாளர் நாறும்பூநாதனிடம் பேசியபோது, ’’நெல்லை, பாளையங்கோட்டை நகரங்களின் முக்கிய அடையாளங்களில் இந்தப் பாலம் தவிர்க்க முடியாதது. 176 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலம், இப்போதும் உறுதியாக இருக்கிறது. சுண்ணாம்புடன், கடுக்காய், பதநீர், கருப்பட்டி கலந்ததால் அந்தக் கலவை பாறையைப் போல உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். 
 எந்த அறிவியல் தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில், இந்தப் பாலத்தைக் கட்டியிருப்பது வியப்பாக இருக்கிறது. பாபநாசம், சேர்வலாறு என எந்த அணையும் அப்போது கட்டப்படவில்லை. அதனால், மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நீர் அனைத்தும் இந்த ஆற்றில் கலந்து பேரிரைச்சலுடன் ஓடிவந்த காலத்தில், அதில் பாலத்தை உறுதியாகக் கட்டியிருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது. தற்போது இந்தப் பாலத்தின் அருகே புதிய பாலம் கட்டப்பட்டுவருகிறது. ஆனால், மழை வெள்ளக் காலத்தில் கட்டமுடியாமல் திணறுகிறார்கள். அந்தக் காலத்தில், ஆற்றுக்குள் வேகமாகச் செல்லும் தண்ணீரில் தூண்களை அமைத்து, பாலத்தை உருவாக்கியிருக்கிறார்கள். 
சில வருடங்களுக்கு முன்பு, இந்தப் பாலத்தை விரிவாக்கம் செய்ய முடிவுசெய்தபோது, பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட முடிவுசெய்யப்பட்டது. அதனால், பழைய பாலத்தை இடித்திருக்கிறார்கள். ஆனால், அதை இடிக்கவே முடியவில்லை. கடப்பாரையால் பாலத்தின் சிறு பகுதியைக்கூட சிதைக்க முடியவில்லை. அதனாலேயே அதனுடன் ஒட்டியே புதிய பாலம் அமைக்கப்பட்டது. 
இந்தப் பாலம் குறித்து கால்டுவெல் தனது ’கெஜெட் ஆஃப் திருநெல்வேலி’ நூலில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது புத்தகத்தில், ‘தாமிரபரணி ஆற்றில் பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், பிரமாண்டமான முறையில் திறப்புவிழா நடந்தது. கலெக்டர் உள்ளிட்டோர் பங்கேற்ற அந்த விழாவின்போது, யானை முன்னே செல்ல அனைத்து முக்கியப் பிரமுகர்களும் அதன் பின்னால் அணிவகுத்துச் சென்றார்கள். சொந்தப் பணத்தில் பாலத்தைக் கட்டிய சுலோச்சன முதலியார், யானையின் பின்னால் முதலாவதாக நடந்துசென்றார். அவருக்குப் பின்னால் கலெக்டரும், அதைத் தொடர்ந்து முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் அணிவகுத்துச் சென்றார்கள். இந்தப் பாலத்தைப் பார்த்து வியக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 
இந்தப் பாலம், நெல்லையைச் சேர்ந்த இலக்கியவாதிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் ஏதோவொரு வகையில் மகத்துவம் மிகுந்தது. சிறுகதை உலகின் மன்னன் என வர்ணிக்கப்படும் புதுமைப்பித்தன், தன்னுடைய பல கதைகளில் இந்தப் பாலத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். ’பிள்ளையார் சதுர்த்தி’ என்ற சிறுகதையில் இந்தப் பாலம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுலோச்சன முதலியார் பாலம் கட்டியபோது, அதன் இரு பகுதியிலும் ஆர்ச் அமைத்து, அதில் கல்வெட்டு அமைத்திருக்கிறார்கள். ஆனால், விரிவாக்கப் பணியின்போது ஆர்ச் எடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில், அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் எங்கேயோ தூக்கிப் போட்டுவிட்டார்கள். இந்தப் பாலம் நீண்ட நெடிய வரலாற்றை தன்னுள்ளே வைத்திருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் புரியவைக்க வேண்டும். தனி மனிதராக இதைக் கட்டிய சுலோச்சன முதலியாரின் தியாகத்தை வருங்கால சந்ததிக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதனால், குறிப்பிட்ட ஒருநாளில் அரசே இந்தப் பாலத்தைக் கட்டியவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விழா நடத்த வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
 கோ.கணபதி சுப்பிரமணியனிடம் பேசியபோது, "நமக்கு முந்தைய சந்ததியினர் நமக்காக விட்டுச் சென்ற பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும். அதுகுறித்த தகவல்களை எதிர்காலச் சந்ததியினர் அறிந்திருந்தால் மட்டுமே அதன் முக்கியத்துவம் அவர்களுக்குப் புரியும். அதனால் தான், கடந்த சில வருடங்களாக இந்தப் பாலத்துக்கு மரியாதைசெய்து, அதைக் கட்டியவரை நினைவு கூர்கிறோம். 
இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியின்போது, தாமிரபரணியில் பாலம் தந்த தனிக்கொடையாளி சுலோச்சன முதலியாரைப் போற்றுவோம்’ என எழுதிய பேனருடன் பாலத்தின்மீது நின்றோம். அந்தப் பாலத்தின்மீது பயணித்தவர்கள், எங்களின் இந்த முயற்சியைப் பாராட்டியதுடன், தாங்களும் எங்களுடன் பங்கேற்று பாலம் கட்டிய கொடையாளியை நினைத்துப்பார்த்தார்கள். இத்தகைய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது மட்டுமே எங்களுடைய முதன்மையான நோக்கம். இதை அரசே மேற்கொண்டால் மகிழ்ச்சியடைவோம்’’ என்றார்.