Saturday, March 25, 2017

ராகேஷ் ஷர்மா - இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு சென்ற முதல் வீரர்!!!

தீபாவளிக்கு நாம் விடும் ராக்கெட் சில அடிகள் அதிகமான உயரம் பறந்தாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். விண்ணைத்தாண்டி சென்றதாய் மகிழ்ந்துக் கொள்வோம். நிஜமாகவே விண்ணைத்தாண்டி, இந்த பூமியை விட்டு வெளியே சென்றால் எப்படி இருக்கும்? அந்த ராக்கெட்டில் நாமும் பயணம் செய்தால்? அதை அனுபவித்து உணர்ந்தவர் ராகேஷ் ஷர்மா. இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு சென்ற முதல் வீரர். இவரது வாழ்க்கை பயோ-பிக்காக அமீர் கான் நடிப்பில் உருவாக இருக்கிறது.




ராகேஷ் ஷர்மா தற்போது தனது ரிட்டையர்ட் வாழ்க்கையை ஊட்டி அருகே குன்னூரில் கழித்து வருகிறார். மகத்தான சாதனை புரிந்தவர் நம் அருகில் இருக்கும் போது விடலாமா? அவரை நேரில் சந்தித்து அவர் வாழ்க்கையை பற்றியும், விண்வெளி பயணக்குறிப்புகளையும் கேட்டறிந்தேன்.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை எங்கே படித்தீர்கள்? 
எங்கள் சொந்த ஊர் பட்டியாலா. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தான் பிரிவினையின் போது எங்கள் குடும்பம் ஹைதராபாத்துக்கு வந்துவிட்டது. என் தந்தைக்கு அந்த ஊர் பிடித்து விட்டது. என் பள்ளி வாழ்க்கை ஹைதையிலே கழிந்தது. பின், நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில் தேர்வானேன். புனேயில் மூன்றாண்டு கோர்ஸ் முடித்ததும் 1970ல் இந்தியன் ஏர்ஃ போர்ஸில் பணிக்குச் சேர்ந்தேன். அங்கே 20 ஆண்டு காலம் பணியில் இருந்தேன். அதன் பின் HALல் டெஸ்ட் பைலட் ஆக பணிபுரிந்தேன். அங்கிருந்து ஓய்வு பெற்றேன். அதன் பின்பும் என்னால் வேலை செய்ய முடியும் எனத் தோன்றியது. ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, 60வது வயதில் நிரந்தரமாக ஓய்வு பெற்றுவிட்டேன். அங்கு இருந்து நேராக நான் வந்த இடம் குன்னூர்.
குன்னூரில் அப்படி என்ன ஸ்பெஷல்? ஏன் இந்த ஊரைத் தேர்வு செய்தீர்கள்?
1965லே நான் குன்னூர் வந்திருக்கிறேன். அப்போதே இந்த ஊரின் மீது எனக்கு காதல். ஓய்வுக்குப் பின்னான வாழ்க்கையை இங்கே தான் கழிப்பது என அன்றே முடிவு எடுத்துவிட்டேன். கடவுள் நான் விரும்பியதை கொடுத்திருக்கிறார். குன்னூர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறது.

உங்கள் விண்வெளி பயணம் பற்றி பேசுவோம். நீங்கள் எப்படி தேர்வானீர்கள்? நிறைய பேர் போட்டியில் இருந்தார்களா?
ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து செய்த கூட்டு முயற்சியில் தான் நான் விண்வெளிக்குச் சென்றேன். உண்மையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அப்போது அந்த முயற்சிக்கு தயாராக இல்லை. அவர்கள் சேட்டிலைட் புராஜக்ட்டில் கவனம் செலுத்த நினைத்தார்கள். அதனால், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் கூட்டு புராஜக்ட்டை இந்தியன் ஏர் ஃபோர்ஸிடம் தந்தார். நாங்களும் அதற்கு தயாராக இருந்தோம். நான் ஏர்ஃபோர்ஸில் ஒரு பைலட் என்பதால் என் பெயர் தானாக பட்டியலில் வந்துவிட்டது. ரஷ்யா தங்களுக்கு டெஸ்ட் பைலட் தான் வேண்டும் என்றது. எனவே போட்டி இன்னும் சுருங்கியது. நான் தான் அப்போது இளமையான டெஸ்ட் பைலட். ஃபிட்டாகவும் இருந்தேன். எனவே எளிதில் தேர்வாகிவிட்டேன்.
விண்வெளிக்கு செல்லும் முன் என்ன மாதிரியான பயிற்சிகள் தந்தார்கள்?
கிட்டத்தட்ட 18 மாதங்கள் பயிற்சி எடுத்தோம். விண்கலனை எப்படி இயக்குவது என  முதலில் சொல்லித் தந்தார்கள். விமானங்கள் வான் வெளிக்கு உள்ளாகத்தான் பறக்கும். ஆனால் விண்கலங்கள் வெற்றிடத்தில் பறக்கும். எனவே இயற்பியல் கோட்பாடுகள் எல்லாமே அங்கே மாறும். அதைப் பற்றி படித்தோம். அதற்கான பயிற்சிகள் மேற்கொண்டோம். இன்னும் பல சோதனைகளை மேற்கொண்டோம். வெவ்வேறு விதமான கருவிகளை பழக்கினோம். மன ரீதியாகவும் எங்களை பலப்படுத்திக் கொண்டோம்.

இந்த வாய்ப்பு வருவதற்கு முன் விண்வெளி பயணம் குறித்து யோசித்தது உண்டா?
உண்மையை சொன்னால்,  இல்லை. ஏர் ஃபோர்ஸிற்காக ஃபைட்டர் பைலட் ஆவது மட்டும்தான் என் கனவு. விண்வெளிப் பயணம் பற்றி நான் சிந்தித்ததே இல்லை. நான் மாணவனாக இருந்த போதுதான் உலகம் விண்வெளிப்பயணம் பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தது. இந்தியாவில் அதற்கான எந்த திட்டமும் அப்போது இல்லை. எனவே, நான் அதைப்பற்றி சிந்திக்க வாய்ப்பே இல்லை. நான் அதிர்ஷ்டசாலி. அதனால் தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவ்வளவுதான்
ஸீரோ கிராவிட்டி... அந்த பகுதிக்குள் நுழைந்ததும் எப்படி இருந்தது?
புதிய அனுபவம் தான். நாம் எப்போதும் பறந்துக் கொண்டே இருப்போம்.  எல்லாமே மிக எளிதாக இருக்கும். சுவரில் காலை வைத்து லேசாக தள்ளினால் மேலே பறப்போம். எல்லாம் சந்தோஷமான விஷயங்கள்தான். ஆனால் சீரோ கிராவிட்டியில் வேலை செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. நாமும் பறப்போம். எல்லா கருவிகளும் பறந்தபடியே இருக்கும். அதில் சரியாக கவனித்து வேலை செய்வது சிக்கலாக  இருந்தது. பூமியில் அரை மணி நேரத்தில் செய்யக்கூடிய வேலைக்கு அங்கே ஒன்றரை மணி நேரங்கள் ஆனது. எல்லாவற்றையும் கவனமாக செய்தாக வேண்டும். கருவிகளை எலாஸ்டிக் ஸ்ட்ராப்பால் கட்டி வைக்க வேண்டும். இன்னும் நிறைய செக் பாயிண்ட்ஸ் உண்டு. வேலை செய்யாத நேரங்களில் சீரோ கிராவிட்டி சந்தோஷமான விஷயம்தான்.
அங்கு இருந்து பூமியை பார்த்தீர்களா? எப்படி இருந்தது?
பார்த்தோம். பூமியில் இருந்து பல ஆயிரம் கிமீ தூரம் தள்ளிச் சென்றால் தான் பூமி பந்து போல தெரியும். நாங்கள் பூமியை விட்டு 500கிமீ தூரத்தில் பறந்துக் கொண்டிருந்தோம். 100கிமீ தூரத்திலே ஸீரோ கிராவிட்டி ஏரியா தொடங்கிவிடும். 500கிமீ தொலைவில் எல்லாமே தெளிவாக தெரியும். மலைத்தொடர்கள், கடற்கரை, பாலைவனம் என எல்லாமே தெளிவாக தெரிந்தன.
அங்கு இருந்து பாக்கும்போது பூமி என்ன நிறத்தில் தெரிந்தது?
அது பார்க்கும் இடத்தை பொறுத்தது. காடுகள் பச்சை நிறத்திலும், பாலைவனம் தங்க நிறத்திலும் தெரிந்தன. மலைச்சிகரங்கள் பனியால் வெள்ளை நிறத்தில் இருந்தன. இன்னும் பல நிறங்கள். ஆனால் பூமி மிகவும் அழகாக தெரிந்தது.
நம் அறிவியலாளர்கள் பூமியில் காற்று மாசு அடைவதை பற்றி அதிகம் கவலைக் கொள்கிறார்கள். உண்மையில், பூமியில் காற்று மாசு அடைந்திருப்பது தெரிந்ததா?
ஆமாம்.  விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமி நீலமாக தெரிய வேண்டும். ஆனால் இப்போது சாம்பல் நிறத்தில் தெரிகிறது. மனித நடமாட்டம் இருக்கிற இடங்களில் எல்லாம் சாம்பல் நிறமாக தான் தெரிந்தது. நாம் நிச்சயம் பூமியை சேதப்படுத்தி இருக்கிறோம். நம் வளங்களை அழித்திருக்கிறோம். அது உண்மைதான்.
 பயணம் முடிந்து திரும்பியதும் உங்கள் மனம் மற்றும் உடல்நிலை எப்படி இருந்தது என்பது நினைவில் இருக்கிறதா?
உடல் ரீதியாக எல்லாமே வலுவாக இருந்தது. ஒரு வாரம் முழுக்க படுக்கையில் இருந்துவிட்டு, எதற்காகவும் நம் கைகளை கூட தூக்காமல் இருந்தால் என்ன ஆகும்? எழுந்திருக்கும் போது நம் உடலையே நம்மால் தூக்க முடியாது இல்லையா? அப்படித்தான் எனக்கும் இருந்தது. என் தசைகள் இறுக்கமாக இருந்தன. பின் சில நாட்களில் சரியாகிவிட்டது. மன ரீதியாக, எனக்கு எந்த மாறுதலும் இல்லை. கவிஞர்கள் யாராவது சென்றால் அவர்கள் மனம் குதுகலித்திருக்கலாம். எனக்கு கவிதை எழுத வராது. அதனால பெரிய வித்தியாசம் இல்லை. ஒரு பைலட்டாக எனக்கு இன்னொரு பயணம். அவ்வளவே. ஒரு வேளை நாளை சுற்றுலா பயணிகள் சென்றால் அவர்களுக்கு வேறு அனுபவம் கிடைக்கலாம். ஆனால் நாங்கள் வேலை செய்ய சென்றோம். ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு வேலை இருந்தது.
விண்வெளியில் உங்கள் உணவு என்ன?
சாதாரண உணவுதான். எல்லாம் பிளாஸ்டிக் கண்டெயினரில் பேக் செய்யப்பட்டு இருக்கும். எதுவும் சிந்தக்கூடாது. சிந்தினால் அது நம்மை சுற்றியே பறந்துக் கொண்டிருக்கும். எனவே அந்த கண்டெயினரை அப்படியே ஓவனில் சூடுப்படுத்தி அப்படியே சாப்பிட வேண்டும். நாம் வழக்கமாக உண்ணும் அதே உணவு வகைகள் தான்.
உங்களுடன் பயணித்த ரஷ்ய நண்பர்கள் எப்படி?சுவாரஸ்யமாக ஏதும் நடந்ததா?
ரொம்பவே அன்பானவர்கள். நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள். ஒரு தடவை தண்ணீர் சிந்திவிட்டது. நீர்ம அலைவியக்க ஆற்றலால் (Surface tension) அது  ஒரு பந்து போல ஆகிவிட்டது. அது உடைந்து விட்டால் இன்னும் பல கோளங்களாக உடையும். எனவே நாங்கள் அனைவரும் அதை சுற்றி நின்றுக்கொண்டு அதை உறிஞ்ச வேண்டி இருந்தது. அந்தக் காட்சியை பார்க்கவே சிரிப்பாக இருந்தது.
ஆன்மிகத்தில் உங்களுக்கு நாட்டம் உண்டா? விண்வெளிப்பயணம் உங்களை இந்த விஷயத்தில் ஏதும் மாற்றியதா?


அதற்கும் இந்த பயணத்திற்கும் தொடர்பு இருப்பதாக நான் கருதவில்லை. அது அவரவர் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் வெற்றி தோல்விகளை  எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். சிலர் தாங்கள் எல்லா வெற்றிகளையும் கண்டுவிட்டோம் என மமதை கொள்ளலாம். சிலர், அதை அதிர்ஷ்டம் என நினைக்கலாம். என்னை பொறுத்தவரை எனக்கு ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகம். ஆனால் அதற்கும் நான் விண்வெளிக்கு சென்றதற்கும் தொடர்பில்லை.

விண்வெளி வீரராக நினைக்கும் இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?
நான் விண்வெளி வீரராக ஆவேன் என நினைத்ததே இல்லை. ஆனால் நடந்திருக்கிறது. அதை நான் என் கனவாக, லட்சியமாக வைத்திருந்தால் இன்னும் எளிதாகத்தானே இருக்கும்? எனவே, அவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். விஞ்ஞானம் வளர்ந்துக் கொண்டே இருக்கும். நிறைய பேர் விண்வெளிக்கு செல்லலாம். அது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடலாம். நிலாவிற்கே செல்லலாம். இன்னும் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் செல்லலாம். இந்த தலைமுறை அதிர்ஷ்டம் செய்திருக்கிறது.. நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைக்குப்போகின்றன. எனவே விருப்பம் இருப்பவர்கள் ஆர்வத்துடன் தங்களை தயார் செய்து கொள்ளுங்கள். எனது வாழ்த்துகள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதன் ஆராய்ச்சிகளுக்கு செய்யும் செலவு மிக அதிகம். அது தேவைதானா? நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?
நிச்சயமாக தேவை. இந்தியாதான் உலகிலே இதற்காக குறைவாக செலவு செய்யும் நாடு என்பது உங்களுக்கு தெரியுமா? எந்த துறையாக இருந்தாலும் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால்,  மக்களின் வாழ்க்கையை  எளிமையாக்கினால் அது நிச்சயம் தேவையான ஒரு விஷயமாகத்தான் இருக்க முடியும். அதையே அழிவிற்காக பயன்படுத்தினால், அல்லது தனிநபர் நலனுக்கு பயன்படுத்தினால் அதுதான் தவறு. நம் நாட்டை பொறுத்தவரை அப்படி இல்லையே. 20 வருடங்கள் முன்பு யாரிடமும் செல்ஃபோன் இல்லை. இப்போது எல்லோரிடமும் இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை அது எளிமை ஆக்கியிருக்கிறது. எல்லோரும் தொலைக்காட்சி  பார்க்கிறார்கள். உலகை பற்றி தெரிந்துக் கொள்கிறார்கள். ”டெலி எஜுகேஷன்” இப்போது கிராமங்கள் வரை சென்றிருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் சேட்டிலைட் தானே அடிப்படை? அப்படி இருக்க,  அது தொடர்பான ஆராய்ச்சி எப்படி வீண் செலவாக இருக்க முடியும்? இன்னும் ஏராளமான நன்மைகள் இதனால் நடந்திருக்கின்றன.
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றதில் நிறைய விவாதங்கள், குழப்பங்கள். அது உண்மையில்லை என பலர் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?
உண்மைதான். ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றார். இங்கே இருக்கும் தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி.க்காக அடித்துக் கொள்கிறார்களே. அது போல அப்போது அமெரிக்க தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி பசியில் இருந்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய குழப்பம் அது.
வேறு எதாவது கிரகத்தில் மனிதர்கள் வாழ வாய்ப்பு இருப்பதாக நினைக்கறீர்களா?
மனிதர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் அதிகம். ஆயிரக்கணக்கான கிரகங்கள் உள்ளன. அதில் நாம் மட்டுமே வாழ்கிறோம் என நினைப்பதே மோசமான விஷயம் என நினைக்கிறேன்.
உங்கள் வாழ்க்கையில்  இன்ஸ்பிரேஷன் என யாரை சொல்வீர்கள்?
என் கஸின் ஒருவர் இருந்தார். அவரும் ஃபைட்டர் பலட். எனது முதல் ஹீரோ அவர்தான். அவரைப் பார்த்துதான் நானும் பைலட் ஆக வேண்டுமென விரும்பினேன். அதன்பின் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போல பலர் என்னை ஈர்த்திருக்கிறார்கள்.

படங்கள் பார்ப்பீர்களா? இந்திய சினிமாவில் விண்வெளிப்பற்றிய கதைகள்  எதுவுமே வருவதில்லை என நினைத்திருக்கிறீர்களா?
கொஞ்ச காலம் ஆகும். எவ்வளவு நாள்தான் இதே காதல் கதைகளை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்? நிச்சயம் மாறும். இந்தியா பெரிய அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகள் படைக்கவில்லை. இன்னும் இந்தியா தனியாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பவில்லை. நான் சென்றதே ரஷ்ய அரசோடு இணைந்து தான். அது நடக்கும்போது மக்களும் அதில் ஆர்வம் காட்டுவார்கள். பின், சினிமாவும் அதை பின்பற்றும். விரைவில் இது நடக்கும்.
உண்மையில், டைம் டிராவல் சாத்தியமா?
எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் அறிவியலாளர்கள் சொல்வதை போல ஒளியை விட வேகமாக நம்மால் பயணம் செய்ய முடியுமென்றால் டைம் டிராவல் சாத்தியம்தான். தியரிட்டிக்கலாக அதை நிரூபித்திருக்கிறார்கள். செய்து காட்ட வேண்டும். ஆனால் ஒன்று. கடந்த காலத்தில் நம் புனைவு கதையில் உலவிய பல விஷயங்கள் இப்போது உண்மையாகி இருக்கின்றன. அது போல எதிர்காலத்தில் டைம் டிராவல் சாத்தியம் ஆகலாம்.
 விளையாடுவீர்களா? என்ன என்ன விளையாட்டுகள் பிடிக்கும்?
நானும் கிரிக்கெட் ரசிகன் தான். கிரிக்கெட், டென்னிஸ், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகள் விளையாடுவேன். கிரிக்கெட்டில் ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள் வரை விளையாடி இருக்கிறேன்.
தமிழக மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் மெசெஜ் என்ன?
நான் 7 வருடங்களாக தமிழகத்தில் வாழ்கிறேன். பொதுவாக எனக்கு தென்னிந்தியா மிகவும் பிடிக்கும். அதற்கு காரணம், கலாசாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாரம்பரியத்தை பாதுகாப்பார்கள். நான் இந்திய கலாசாரம், பாரம்பரியத்தை விரும்புவன். அதனால் தென்னிந்தியா பிடிக்கும். ஆனால், சமீப காலமாக அரசியல் விளையாட்டுகளை கண்டு மனம் நொந்து போயிருக்கிறேன். ஊழல் மலிந்துவிட்டது. எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி இது போன்ற அநியாயங்களும், அதே சமயம் தொன்மங்களும் ஒன்றாக இருக்க முடிகிறது? எனது வேண்டுகோள் ஒன்றுதான்.
உங்கள் கவனம் உங்கள் குழந்தைகள் மீது இருக்கட்டும். அவர்களுக்கு ஒரு நல்ல வழிக்காட்டியாக இருங்கள். நீங்கள் செய்வதைத்தான் அவர்களும் செய்வார்கள். ஆகவே நீங்கள் சரியானதை மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழகம் அதன் மதிப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்தியாவை காப்பாற்ற முடியும். தென்னிந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தியாவை காப்பாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் சரியாக இருங்கள். அதுதான் என் ஒரே ஆசை. 

No comments: