Saturday, February 11, 2017

கரிகாலனின் இமய படையெடுப்பு !

கரிகாலனின் இமய படையெடுப்பு !

சீறிபாய்ந்து வந்த காவிரியை தடுத்து கரிகாலன் அணை கட்டிய வரலாறு நாம் அனைவரும் அறிந்திருப்போம்.. ஆனால் அதற்கு முன்பு இமயம் வரை படையெடுத்து சென்று இமய மலையில் புலி சின்னத்தை பொறித்த வரலாறு பற்றி பலரும் அறிந்திருக்கமாட்டோம். இதோ கல்லணை கட்டியவனின் கம்பீர வரலாறு....

தென்னகத்தில் பெற்ற வெற்றிகளால் மன்னன் கரிகாலன் திருப்தியடையவில்லை.கரிகாலனின் போர்த் தாகம் தணியாத நிலையில் அவனுடைய போர்ப் பார்வை, போரிடுவதற்கான எதிரிகளைக்த் தேடி வட திசை நோக்கிப் பாய்ந்தது. எனவே, தன் வாள் மற்றும் வெண் கொற்றக் குடையுடன் மயிர்க் கண் முரசம் எனும் ஒருவகைப் போர் முரசத்தை(ஒரு புலியை கொன்ற எருதின் தோலால் செய்யப்பட்ட முரசம்) தன் படையினர் ஒலிக்க, தன் வலிமைமிக்க தோள்களுக்கு எதிரிகள் கிடைப்பார்கள் என்ற எண்ணத்தில் நல்ல நாள் ஒன்றில் வட திசை நோக்கிப் புறப்பட்டான். (ஆதாரம்-சிலப்பதிகாரம் 5:90-94).

பெரும்படையுடன் சென்ற கரிகாலன் செல்லும் வழியில் தன்னை எதிர்த்து நின்ற அரசர் அனைவரையும் வென்று, இறுதியில் இமயமலை சாரலைச் சென்றடைந்தான். இமையமலையை கடந்து வடக்கே செல்ல நினைத்த கரிகாலன், குறுக்கே அமைந்திருந்த பாதை பயணத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதை உணர்ந்து, பொன் போன்ற இமயமலையின் ஒரு பாகத்தை இடித்திவிட்டு புதுப்பாதை ஒன்று அமைத்தான். பின் பழைய பாதையை மூடி விட்டான்.

"பொன்மலை புலி வென்று ஓங்கப்
புதுமளையிடுத்துப்
பொற்றும் அந்நெறி வழியேயாக
அயல் வழி அடைத்த சோழன்"
- பெரியபுராணம் 55

மேலே குறிப்பிட்ட சான்றை மேற்கோள் காட்டிய குடவாயில் பாலசுப்ரமணியம், புலி சின்னம் பொறிக்கப்பட்ட இடத்தை பற்றி மேலும் சில விவரங்களை குறிப்பிடுகிறார்.

சிக்கிம் மாநிலத்திலிருந்து திபெத் நாட்டின் சீனப் பகுதிக்குச் செல்கிற சூம்பிப் பள்ளத்தாக்கை ஒட்டி அமைந்துள்ள 'சோழக் கணவாய்' மற்றும் 'சோழ மலைத் தொடர்' ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதிதான் கரிகாலன் இமயமலையில் புலிச் சின்னத்தை பொறித்த இடம். இது கரிகாலனால் புதிதாக அமைக்கப்பட்ட பாதை, அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு மலையை கடந்து மறுபுறம் செல்ல வசதியாக இருந்ததால் அதை அமைத்துக் கொடுத்த கரிகால் சோழனுக்கு நன்றி கூறும் முகமாக, அந்தப் பாதைக்குச் 'சோழக் கணவாய்' என்றும் அதை ஒட்டிய மலைத்தொடருக்கு 'சோழ மலைத்தொடர்' என்றும் பெயர்கள் சூட்டி அழைத்துள்ளனர். அவ்வாறு, புதிய வழித் தடத்தை அமைத்த பின், கரிகாலன் அந்த வழித் தடத்தை ஒட்டிய இமயமலைப் பாறையின் மீது புலிச் சின்னத்தை பொறித்தான்.

புதிய வழி தடம் அமைப்பதிலும் பழைய வழி தடத்தை மூடுவதிலும் அவன் போர்ப் படையில் இடம் பெற்றிருந்த சேர நாட்டுப் படை வீரர்களும், பாண்டிய நாட்டுப் படை வீரர்களும் வேற்றுமை பாராட்டாமல் அவன் படை வீரர்களுடன் உற்சாகமாய் ஈடுபட்டனர். ஆதலால், சேர மன்னனின் 'வில்-அம்பு' சின்னத்தையும், பாண்டிய மன்னனின் 'கயல் மீன்' சின்னத்தையும், புலி சின்னத்துடன் பொறித்துத் தன் பெருந்தன்மையை வெளிபடுத்திக்கொண்டான்.

#இமயமலை_வழித்_தடம்

கரிகாலன் தன் போர்ப் படையுடன் கிழக்குக் கடற்கரையோர வழித் தடம் மூலமாகக் #கலிங்கநாடு, வங்காளத்தில் உள்ள '#வச்சிரநாடு' மற்றும் பீகாரைச் சேர்ந்த பகுதிகள் வழியாக இமயமலையை அடைந்தான். மலையின் மீது சோழ, சேர, பாண்டிய நாடுகளின் சின்னங்களை பொறித்த பின், வச்சிர நாட்டு மன்னனை வென்று அவன் கொடுத்த 'கொற்றப் பந்தரை'த் திரையாகப் பெற்றுக் கொண்டான். திரும்பும் பொது, மேற்குத் திசை வழியாக வந்து #மகதநாட்டு(பீகார்) மன்னனை வென்று அவன் அளித்த அரச குல பட்டி மண்டபத்தை திரையாக பெற்று கொண்டான். மேற்கு திசை நோக்கி மேலும் நகர்ந்து, தன் நண்பனாகிய அவந்தி நாட்டு மன்னன் மனமுவந்து அளித்த 'தோரண வாயிலை' அன்பளிப்பாக பெற்றுக்கொண்டு, தன் நாடு திரும்பினான்.நாடு திரும்பிய கரிகால் மன்னன் தான் பெற்று திரும்பிய மூன்று அரிய பொருட்களையும் பூம்புகார் நகரில் 'சித்திர மண்டபம்' என்னும் ஒரு மண்டபத்தை வடிவமைத்து, அந்த மண்டபத்துக்குள் நிலைநிறுத்தி தன் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சி பொருட்களாக வைத்தான்.

இந்த தகவல் டாக்டர் ரா.நிரஞ்சனாதேவி அவர்கள் எழுதிய 'கரிகால் சோழன்' என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது...

கரிகாலனுக்கு பிறகு மேலும் இரண்டு தமிழ் மன்னர்கள் இமயமலை வரை படையெடுத்து சென்று வெற்றிபெற்று, இமயமலையில் தங்கள் அடையாள சின்னங்களை பொறித்து விட்டு திரும்பியுள்ளனர்

3 comments:

Unknown said...

Vanakam

Unknown said...

Unga pathivai nan use panikalam ah.. YouTube la documentary film ah publish panalama?? Unga anumathi venum

Meenakshi Sundaram said...

Okay No problem. Go ahead,