Sunday, September 11, 2016

உலக இளம் அரசியல் தலைவர்கள் மாநாடு

லக இளம் அரசியல் தலைவர்கள் மாநாடு’ அமெரிக்காவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள, இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழன் பிரசன்னா. ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கிய அந்த மாநாடு, ஆகஸ்டு 30-ம் தேதி நிறைவடைந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக, அமெரிக்காவின் பல நகரங்கள், மகாணங்களில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்த பிரசன்னாவின் அனுபவங்களைக் கேட்டோம்.


உலக இளம் அரசியல் தலைவர்கள் மாநாட்டின் நோக்கம் என்ன?

‘உலக இளம் அரசியல் தலைவர்கள் மாநாடு’ 1906-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவில் நடக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில், அரசியல் தளத்தில் நம்பிக்கைக்கு உரியவகையில் செயல்படும் இளைஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுகின்றனர். அமெரிக்க அரசாங்கமே இதற்கான தேர்வைச் செய்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள, அமெரிக்கத் தூதரங்கள் இந்தப் பணியைச் செய்கின்றன. அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாகம் செயல்படும் முறை, நிர்வாக அமைப்பில் உள்ள படிநிலைகள் பற்றி விளக்குகின்றனர். இதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்.
‘உலக இளம் அரசியல் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்பவர்களை, அமெரிக்கா எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறது?

’அரசியல் தளத்தில் இளைஞர்களாக உள்ளவர்களில், நம்பிக்கைக்குரியவகையில், தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுபவர்களை அமெரிக்கா தேர்வு செய்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள, அமெரிக்கத் தூதரகங்கள், இதற்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்புகின்றனர். அப்படி மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து ஒருவரை வாஷிங்டன் தேர்ந்தெடுக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் அனுப்பப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நான் தேர்வு செய்யப்பட்டேன். என்னைப்போல், இஸ்ரேல், பிரேசில், காங்கோ, மசிடோனியா, தைவான், மொராக்கோ, ஜப்பான், உகாண்டா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து இளம் அரசியல் தலைவர்கள்  வந்திருந்தனர்.’
மாநாட்டில் கலந்து கொண்ட அனுபவம் எப்படி இருந்தது? 

‘வெளிப்படையான அரசாங்கம்’ என்பதுதான் இந்த மாநாட்டில் எங்களுக்கான மையமாக இருந்தது. அதுபற்றிய விவாதங்கள், விளக்கங்கள், நடைமுறைச் சாத்தியங்கள் குறித்த பரிசீலனைகள், அமெரிக்காவில் அது எப்படி சாத்தியப்பட்டுள்ளது என்பதை ஒரு பருந்துப் பார்வையில் அறிந்து கொண்டோம். வெளிப்படையான அரசாங்கம், கணக்குசார் நிர்வாகம், நல்ல அரசியல் பண்புகள் என்பது ஒரு நல்ல அரசாங்கத்திற்கு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள்.

இந்தியாவுக்கு டெல்லியைப்போல், அமெரிக்காவுக்கு  வாஷிங்டன். அமெரிக்காவின் மத்திய அரசு அங்கிருந்துதான் இயங்குகிறது. அதில், ‘டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட்ஸ்’ என்று ஒரு துறையை  உருவாக்கி உள்ளனர். அந்தத் துறைதான், அமெரிக்காவின் மூளை. அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையும் இங்குதான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், அதைக்கூட அவர்கள் வெளிப்படையாக வைத்துள்ளனர். இதோடு, எஃப்.பி.ஐ, பாதுகாப்பு அமைச்சகம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றைப் பற்றியும் விளக்கினார்கள். அங்குள்ள தேர்தல் நடைமுறைகளை அறிந்து கொண்டோம். அரசாங்கம் வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவதை அதன ஒவ்வொரு அடுக்கிலும், கவனமாக கண்காணிக்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நாடாளுமன்றம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு, இந்தக் கண்காணிப்பு நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தில், காங்கிரஸ், செனட் என்று இரண்டு அவைகள் உள்ளன. ‘ஒரு பயனாளியும், அவருக்காக செயல்படும் அரசு அதிகாரியும் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கும்வகையில், நிர்வாக முறையை அமைத்துள்ளனர். ஏனென்றால், நேருக்குநேர் அந்த இருவரும் சந்திக்கும்போதுதான், ஊழலுக்கான வழி உருவாகிறது. அதனால், அதைத் தவிர்க்கிறார்கள். எல்லாவற்றையும் இ-மெயிலில் வைத்துக் கொள்கின்றனர். அரசாங்கத்தின் சார்பில், கொடுக்கப்படும் அந்த இ-மெயில் வசதி மிகத் துல்லியமாக செயல்படுகிறது.

அதுபோல, அங்கிருக்கும் செனட்டர்களைச் சந்தித்தோம். செனட்டில், கட்சி சார்புடைய குழுக்கள், இரு கட்சி சார்புடைய குழுக்கள், கட்சி சார்பற்ற குழுக்கள் அங்கம் வகிக்கின்றன. இதைப்போல, அரசு ஊழியர்களுக்கான எத்திக்ஸ் கமிட்டி ஒன்றும் செயல்படுகிறது. அவர்கள் அரசு ஊழியர்களுக்கான கடமை, அவர்களின் நேர்மை என்பதையெல்லாம் வரையறுக்கிறது. ஓ.ஏ.ஜி என்று அமைப்பு, நம்முடைய சி.ஏ.ஜி.யைப்போல இருக்கிறது. ஆனால், சி.ஏ.ஜியிடம் இல்லாத அளவிற்கு அதிகாரங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வெளிப்படையான அரசாங்கம் என்பது அமெரிக்காவில் எந்தளவிற்கு சாத்தியப்பட்டுள்ளது? 

'ஒருவர் ஒரு தகவல், ஒரு கோப்பு, நாடாளுமன்ற செனட் நடக்கும் வீடியோக்கள் என்று எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். ஒருவர் நேரில் வந்து குறிப்பிட்ட ஆவணத்தைக் கேட்டு விண்ணப்பித்தால், 24 மணி நேரத்திற்குள் அதை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று விதி வைத்துள்ளனர். கொடுக்கவும் செய்கிறார்கள். இ-மெயில் மூலம் கேட்டால், 10 நாட்களுக்குள் கொடுக்கின்றனர். தபாலில் கேட்டால் ஒரு மாதத்திற்குள் கொடுக்கின்றனர். அந்தளவிற்கு வெளிப்படைத்தன்மையோடு அரசாங்கம் செயல்படுகிறது.

கலிபோர்னியாவில் அதை நேரடியாகக் கண்டோம். மாநில அரசின் செயல்பாடுகளைப்  பார்ப்பதற்காக அங்கு போய் இருந்தோம். அங்கு சட்டமன்ற நடவடிக்கைகள் எந்தளவிற்கு வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறது என்பதைப் பார்த்தபோது, தமிழகத்தில் இருந்து போன எனக்கு ஏக்கமாகவே இருந்தது.  அவையில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் டிஜிட்டல் பெயர் பலகை வைத்துள்ளனர். அவையில் இருப்பவர்களின் பெயர்களை ‘கிரீன் லைட்’டில் போடுகிறார்கள். வேலை நிமித்தமாக வெளியில் போய் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை, ‘மஞ்சள் லைட்’டில் போடுகிறார்கள்.  விடுமுறையில் சென்றிருப்பவர்களின் பெயர்கள் ‘ரெட் லைட்’டில் காட்டப்படுகிறது. அதற்கு கீழ், அவர்கள் என்ன காரணத்திற்காக விடுமுறை என்பதையும் குறிப்பிடுகிறார்கள். சட்டசபை தொடங்கியதும், அது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதை நம்மால் பார்க்க முடியவில்லை என்றால், அதற்கான வீடியோ லிங்க் கேட்டு நாம் மெயில் அனுப்பினால் போதும். 24 மணி நேரத்திற்குள் முழு வீடியோவிற்கான இணைப்பை நமக்கு மெயில் அனுப்புகிறார்கள்.'


அமெரிக்க அரசியல்வாதிகளிடம் இருக்கும் குறை-நிறைகள் என்று என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

’அவதூறு பேச்சுகள், அவதூறு பார்வைகள் மிகக் கடுமையாக அவர்களிடம் இருக்கிறது. அங்குள்ள அரசியல்வாதிகளை ஒரே இடத்தில் சந்திக்கவைக்கும்போது, அவர்கள் நம்மூர் அரசியல்வாதிகளைவிட அதிகமாக வெறுப்பை உமிழ்கின்றனர்; அவதூறாகப் பேசுகின்றனர். இது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஆனால், நேரம் தவறாமை, பொதுமக்களுக்கான மதிப்பை அவர்கள் கொடுப்பதில் நம்மூர் அரசியல்வாதிகளைவிட பல மடங்கு உயர்ந்து நிற்கின்றனர்.’
 

No comments: