Sunday, May 22, 2016

ராஜாராம் மோகன்ராய்

நவீன இந்தியாவின் முதல் பெருந்தலைவர் என்று ராஜாராம் மோகன்ராயை சொல்வது பொருத்தமாக இருக்கும். 1772 இல் வங்கத்தில் பிறந்தார் இவர். இவரின் குடும்பம் வைணவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. முகலாய ஆட்சியாளர்களின் கீழே வரி வசூல் செய்யும் பணியில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவரின் பால்ய காலத்திலேயே உயர் ஜாதியில் இயல்பாகஇருக்கும் வழக்கத்தால் அவருக்கு இருமுறை திருமணம் செய்துவைக்க பட்டது. முதலில் வங்காளி மற்றும் பாரசீகத்தை கற்று தேர்ந்த பின் பாட்னா போய் அராபிய மொழியை கற்றுக்கொண்டார். அங்கே அவரின் ஆசிரியர்கள் அவருக்கு அரிஸ்டாட்டில்,குரான் மற்றும் பைபிளை அறிமுகப்படுத்தினார்கள். பனாரஸில் அவர் சமஸ்க்ருதத்தை கற்றுத்தேர்ந்தார். இப்படி அவர் கற்ற மொழிகள் மட்டும் ஒரு டஜன் !
அவரின் அண்ணன் இறந்ததும் அவரின் கண் முன்னரே அவரின் எதிர்ப்பையும் மீறி அவரின் அண்ணி சதியால் தீக்கிரையாக்கப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனியில் அதிகாரியாக பல்வேறு ஊர்களில் அவர் பணியாற்றினார். அவரின் முதல் நூல் பாராசீகத்தில் அராபிய மொழியிலான முன்னுரையோடு வெளிவந்தது. அது உருவ வழிபாட்டை தாக்கியிருந்தது. கல்கத்தாவில் வாழ ஆரம்பித்ததும் ஆத்மிய சபையை துவங்கி இந்து மதத்தில் இருந்த மத மற்றும் சமூக தீமைகளுக்கு எதிராக போராட ஆரம்பித்தார்.
பிரம்ம சபையை நிறுவினார் ; பின்னர் அதுவே பிரம்ம சமாஜம் ஆனது. உருவ வழிபாட்டை எதிர்த்ததோடு இல்லாமல் ஜாதிய அமைப்பின் இறுக்கமான தன்மை,அர்த்தமற்ற மத சடங்குகள் ஆகியவற்றை விமர்சனம் செய்தார். ஒரே ஒரு இறைவனை தான் இந்து மதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் வலியுறுத்துவதாக உறுதிபட சொன்ன அவர் இந்திய மதத்தின் பல கடவுள் வழிபாடு,கிறிஸ்துவத்தின் இறைவன்,அவரின் மகன் மற்றும் புனித ஆவி வழிபாடு ஆகியவற்றை நிராகரித்தார். கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தின் தத்துவ வெளிச்சத்தை இந்துக்கள் அறிய வேண்டும் என்று அவர் இயங்கினாலும்,PERCEPTS OF JESUS நூலில் கிறிஸ்துவின் அற்புத செயல்களை சாத்தியமில்லை என்று நிராகரித்தார். இவ்வாறு இரு மதத்து மக்களின் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.
இந்து மதத்தை கிறிஸ்துவ மிஷனரிக்கள் தாக்குவதை தீவிரமாக எதிர்த்ததோடு மத மாற்றத்துக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்தார். மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு பகுதிகளின் தத்துவ சங்கமம் நிகழ வேண்டும் என்று அவர் இயங்கியதோடு எல்லா மதத்தின் நம்பிக்கையாளர்களும் சகோதர்களாக சேர்ந்திருக்க முடியும் என்று நம்பினார். அவரை பழமைவாதிகள் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் ; அதற்கான கூட்டத்தில் இவரை பெற்ற அன்னையே கலந்து கொண்டார். அவரை ஜாதியை விட்டு ஒதுக்கி வைத்தார்கள்.
பதினோரு ஆண்டுகள் சதிக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை அவர் தொடுத்தார். வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை.
மேலும் ஆங்கிலேயே நாடாளுமன்றத்துக்கு சதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சாரார் கடிதம் எழுதிய பொழுது கொண்டு வரக்கூடாது என்று உறுதிபட இவரும் கடிதம் எழுதினார். பல்வேறு இறுதி சடங்கு நடைபெறும் இடங்களில் பெண்கள் தீக்கிரையாக்கப்படாமல் இருக்க உறவினர்களிடம் நெடிய சமரச பேச்சுவார்த்தையை நிகழ்த்துகிற பண்பாளராகவும் அவர் இருந்தார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றும்,பல தார திருமணம் கூடவே கூடாது என்றும் அவர் வாதாடினார்.
ஆண்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளியை துவங்கி அதில் ஆங்கிலம் கற்பிக்க ஆரம்பித்தார். கூடவே இயங்கியல் மற்றும் வால்டேரின் தத்துவங்களை அவர் அங்கே கற்பித்தார். பல்வேறு இதழ்களை நடத்திய இந்தியாவின் பத்திரிக்கை துறை முன்னோடி அவர். வங்க மொழியில் இலக்கணம் சார்ந்து பல்வேறு நூல்களையும் அவர் இயற்றினார். ஜமீன்தார்கள் நிலத்தில் பாடுபடும் தொழிலாளியை சுரண்டுவதை அவர் சாடினார். ஆங்கிலேய அரசு ஒரு நிலத்தில் இருந்து எவ்வளவு வரி பெறப்பட வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை சாடியதோடு இந்திய பொருட்கள் மீதான கடுமையான வரி விதிப்பை நீக்க வேண்டும் என்றும் அவர் முயற்சிகள் எடுத்தார்.
லத்தீன் அமெரிக்காவின் மக்கள் புரட்சி வென்றதும் அவர் ஊரில் உள்ள எல்லாருக்கும் விருந்து போட்டார். அயர்லாந்து மக்களை ஆங்கிலேய அரசு ஒடுக்கிய பொழுது சீர்திருத்த சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக ஆங்கிலேய அரசு நிறைவேற்றா விட்டால் ஆங்கிலேய ஆதிக்கமே இல்லாத பகுதியில் போய் வாழ்வேன் என்று முழக்கமிட்டார். நேப்பல்ஸ் புரட்சி தோல்வியுற்ற பொழுது மனம் வெம்மி முக்கியமான அலுவல்களை ரத்து செய்கிற பண்பும் அவருக்கு இருந்தது. கத்தோலிக்கர்கள் உரிமையோடு பிரட்டனில் வாழ வழி ஏற்பட்ட பொழுது அதை வரவேற்றார்
1831 இல் முகலாய அரசருக்கான ஊக்கத்தொகையை ஆங்கிலேய அரசு ஏற்றித்தர இங்கிலாந்துக்கு பயணம் போன அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். சட்டம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நூல்களை அங்கே இருந்து இயற்றினார். பிரிஸ்டோல் நகரத்தில் தங்கியிருந்த பொழுது மரணமடைந்தார். அங்கே எரிக்க வசதிகள் இல்லாததால் புதைக்கப்பட்டார். அவரின் கல்லறையின் மீது இந்த வாசகங்கள் ஒளிர்கின்றன :
இந்திய மக்களின் சமூக,அற மற்றும் பொருளாதார நிலையை முன்னேற்ற அவரின் ஓயாத உழைப்புகள்,உருவ வழிபாடு மற்றும் சதியை நீக்க அவரின் அக்கறை மிகுந்த முயற்சிகள் இறைவனின் மகிமை மற்றும் மனிதனின் நலத்தை மேம்படுத்துவற்றுக்காக வாதிட்ட ,ஓயாது அவரின் செயல்கள் அவரின் நாட்டு மக்களின் நினைவுகளில் நன்றியோடு நிறைந்திருக்கும்.

எவரெஸ்ட்டை கண்டுபிடித்த இந்தியர் ராதாநாத் சிக்தர் !(Radhanath Sikthar)


ராதாநாத் சிக்தர் என்கிற இந்தப்பெயர் எவரெஸ்ட் சிகரத்தின் கதையோடு உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,துரோகம்,ஆங்கிலேயே ஆதிக்க மனோபாவம் எல்லாமும் அவரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்தன என்பது கசப்பான உண்மை. ஜார்ஜ் எவரெஸ்ட் இந்தியா முழுக்க அளவையியல் செய்கிற பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொழுது அவருக்கு நல்ல கணித மேதைமை உள்ள ஒரு ஆள் தேவைப்பட்டார்.
பத்தொன்பது வயது சிக்தரை கொண்டு வந்து நிறுத்தினார்கள். கோள திரிகோணவியலில் பையன் புலி என்று சொல்லியிருந்தார்கள். அசுர பாய்ச்சல் காட்டினார் அவர். இவரின் திறமையை பார்த்து அசந்து போன எவரெஸ்ட் வேறு வேலைக்கு போகிறேன் என்று சொன்ன இவரை அப்படியெல்லாம் போகக்கூடாது என்று தடுத்து தன்னுடனே வைத்துக்கொண்டார். பின்னர் வானிலைத்துறையில் முக்கிய பொறுப்புக்கு வந்து அங்கேயும் கலக்கி எடுத்தார்.
அவருக்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? ஜார்ஜ் எவரெஸ்ட் ஓய்வு பெற்று வெளியேறியதும் ஆண்ட்ரூ வாக் அப்பதவிக்கு வந்தார். அவரின் கீழே பணியாற்றிய சிக்தர் இமயமலையின் சிகரங்களின் உயரங்களை கணக்கிட்டார். சிக்தர் ஒளிவிலகலை கணக்கில் கொண்டு அளவையியல் செய்வதில் தன்னிகற்றவர்,அவர் ஒரு மனித கணிப்பான் என்றெல்லாம் ஆங்கிலேய அதிகாரிகள் பதிந்திருக்கிறார்கள். ஆறு வெவ்வேறு புள்ளிகளில் இருந்து XV சிகரத்தை அளந்து பார்த்தார் இவர். 8840 மீட்டர் என்று வந்தது ; கடல்மட்டத்துக்கு மேலே உலகின் மிக உயரிய சிகரம் XVஎன்று உறுதியாக வாக்குக்கு அறிக்கை சமர்ப்பித்தார். நான்கு வருடங்கள் காத்திருந்து உறுதி செய்துகொண்டு உலகுக்கு அதை அறிவித்தார் வாக்.
அந்த சிகரத்துக்கு அந்தந்த ஊரின் பெயரை வைப்பது என்பதே வழக்கம். ஜார்ஜ் எவரெஸ்ட்டுக்கு மரியாதை செலுத்த எண்ணிய வாக் எவரெஸ்ட் விரும்பாவிட்டாலும் அச்சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் சூட்டினார். சிக்தருக்கு இன்னொரு அநியாயமும் நடந்தது அளவையியல் வழிகாட்டி நூல் ஒன்றை ஆங்கிலேய அரசு வெளியிட்டது. அதை எடிட் செய்தவர்கள் துலீயர் மற்றும் ஸ்மித் எனும் இரு ஆங்கிலேய அதிகாரிகள். மிகத்தெளிவாக அந்நூலின் கடினமான தொழில்நுட்ப மற்றும் கணித சங்கதிகள் ராதநாத் சிக்தரால் எழுதப்பட்டது என்று குறித்திருந்தார்கள். ஆனால்,அந்த வழிகாட்டியின் மூன்றாவது பதிப்பில் சிக்தரின் பெயரை அப்படியே எடுத்துவிட்டார்கள்.
எவரெஸ்ட் சிகரத்தை கண்டே இராதவரின் பெயரை அது தாங்கி நிற்கிறது. அதனை உலகின் உயரமான சிகரம் என்று கண்டுபிடிதுச்சொன்ன சிக்தரை வரலாற்றின் இருட்டு மூலையில் தள்ளிவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். மிகப்பெரிய திரிகோணவியல் அளவையியல் என்கிற அந்த அளவையியலில் ஈடுபட்ட நைன் சிங் மற்றும் சிக்தர் ஆகிய இருவரின் நினைவாக அரசு ஸ்டாம்ப் வெளியிட்டது.

Saturday, May 21, 2016

கூகுள் அலர்ட்ஸை(Google Alerts) உருவாக்கியவர் விவசாயி ஆனார்...!

லிஃபோர்னியாவில் உள்ள தன் நிலத்தில் அந்த விவசாயி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். வேலையாட்களுக்கு அடுத்தடுத்த உத்தரவுகள் அவரிடமிருந்து பறந்துகொண்டிருக்க,  கையோடு அதை செய்து முடிக்கிறார்கள் அவர்கள். தேவைப்பட்டால் அவரும் நிலத்தில் இறங்கி வேலை செய்கிறார். அதை ஆச்சர்யமாக பார்க்கின்றனர் தொழிலாளர்கள்.
ஒரு விவசாயி தன் நிலத்தில் இறங்கி வேலை செய்வதை மற்றவர்கள் ஆச்சர்யமாக ஏன் பார்க்கவேண்டும் என்கிறீர்களா....? காரணம் அந்த விவசாயி நேற்றுவரை நிற்க நேரமின்றி உலகநாடுகளுக்கு விமானத்தில் பரபரப்பாக பறந்துகொண்டிருந்தவர்...ஆம் கூகுள் அலர்ட்ஸை (Google Alerts) உருவாக்கிய நாக கடாருதான் (Naga Kataru) அந்த நவீன விவசாயி.

இணையத்தில் நாம் உற்று கவனிக்க விரும்பும் விஷயங்களில் வரும் புதிய அப்டேட்கள், செய்திகளை பிரித்து நமக்கு அனுப்பி ‘அலர்ட்’ செய்யும் கூகுளின் ஒரு சேவையின் பெயர்தான் ‘கூகுள் அலர்ட்ஸ்’. உதாரணத்துக்கு நீங்கள் ரஜினி ரசிகர் எனில், ரஜினிகாந்த் பற்றி இணையத்தில் வரும் செய்திகள் மட்டும் தனியாக, (உடனடியாக படிக்க விரும்பினால் இந்த சேவையில் ‘ரஜினிகாந்த்’ பெயரை கொடுத்துவிட்டால்போதும்) அவரை பற்றி இணையத்தில் செய்திகள் அப்டேட் ஆகும்போதெல்லாம் உங்கள் மெயிலில் அந்த செய்திகள் நேரடியாக வந்துவிழும். 

ஆந்திரப்பிரதேசத்தில் ​கம்பலாகுடம் (​Gampalagudem​)​ எனும் ​ஊரில் பிறந்து வளர்ந்தவர் நாக கடாரு.​ ​அவ்வளவாக கல்வியறிவற்ற அந்த கிராமத்தில், தலைமையாசிரியரான அவரது தந்தை கடாருவை கணினி பொறியாளராக ​படிக்க வைத்தார். பிறகு, புகழ்பெற்ற ஐ.ஐ.டி யில் (IIT) கணினி படிப்பு​முடித்தார் கடாரு.

​கூகுள் அலர்ட்ஸ்

2003​ ம் ஆண்டு, ​​கூகுள் அலர்ட்ஸ் வெளியிடப்பட்டது. பெரும் முயற்சி எடுத்து இதை அவர் உருவாக்கியபோது,  இவருடைய ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர்,  இதனை​அங்கீகரிக்கவில்லை. இவரது முயற்சியை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் கடாரு சோர்வடையவில்லை. கூகுளின் அப்போதைய CEO க்களான​ Sergey Bring மற்றும் Larry Page ஐ சந்தித்து தன் கண்டுபிடிப்பை முன் வைத்தார். அதை ஆய்வு செய்த அவர்கள்,  அதன் தனித்தன்மையை உணர்ந்து அவரின் முயற்சியை பாராட்டியதோடு,  நாக கடாருவின் கண்டுபிடிப்பு​மிகவும் பிடித்துபோனதால், கூகுள் நிறுவனத்திலேயே அவருக்கு ஒரு பொறுப்பையும் அளித்தனர். 

இருப்பினும் நாக கடாருவுக்கு தொடர்ந்து கூகுளில் பணியாற்றுவது ஒரு சலிப்பை தந்தது. வித்தியாசமாக ஏதாவது சாதிக்கவேண்டும் என்பதில் விருப்பம் கொண்ட கடாரு,  வெகு சீக்கிரத்தில் கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறி, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தினார்.  ​ ​

இப்போது இவரின் புதிய அவதாரம், ​'​விவசாயி​'​.... ஆம், 2008 ல் தன் வருமானத்தில் கலிஃபோர்னியாவில் 320 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். முதலீடாக வாங்கிப்போட்ட அந்நிலத்தை,  5 வருடங்களுக்குப் பிறகு நல்ல விலைக்கு விற்றுவிடுவதுதான் அவரது திட்டம். ஆனால் விற்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு திடீரென ஒருநாள் உதித்ததுதான் விவசாயம் செய்யும் திட்டம். தன் சொந்த ஊரில் உள்ள பூக்களும், பழங்களின் வாசமும் அவருக்கு நினைவுக்கு வந்ததால், நிலத்தை விற்கும் திட்டத்தை கைவிட்டு உடனே ஒரு முடி​வை எடுத்தார். அந்த நிலத்தை விற்பதற்குப் பதிலாக, அதை பாதாம் தோட்டமாக மாற்றி​ விட்டார். இன்று கலிஃபோர்னியாவில் பெரிய பாதாம் விவசாயியாக கடாரு விளங்குகிறார்.
"எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. காரணம் சிறுவயதிலிருந்தே என்னை என் தந்தை பெரிய படிப்பாளியாக வேண்டும் என்றே திட்டமிட்டு வளர்த்தார். ஆனால், எனக்கு விவசாயம் பிடித்திருந்தது. இன்று விவசாயியாக மாறியிருக்கிறேன். அதனால் தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்கிவிடக்கூடாது என்பதால் நானே முறையாக விவசாயம் பற்றி படித்தேன்​.​ எனது முயற்சியால்  இன்று ​இந்த நிலத்தில் ​பாதாமும், மற்ற சில விளைபொருட்களையும் விளைவிக்கிறேன்.  என் நிலத்தில் 8 பேர் வேலை செய்கின்றனர். வருடத்திற்கு 2.5 மில்லியன் வருமானம்​ கிடைக்கிறது" என்கிறார் விவசாயி நாக கடாரு.

வெற்றிகரமான விவசாயி ஆன பின்னரும் கடாரு, தன் படிக்கும் ஆர்வத்தை விடவில்லை. இப்போது  ​'ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக'த்தில் சூழல் மற்றும் வளங்கள் தொடர்பான மேற்படிப்பை படித்து வருகிறார்.

"விவசாயத்தை இன்னும் தொழில்நுட்ப ​ ரீதியாகக் கொண்டு செல்வதற்கே​,​ இந்த படிப்பை படிக்கிறேன்" என வெற்றிப் புன்னகையை முகத்தில் தழுவ விட்டபடியே சொல்கிறார் நாக கடாரு. 

விவசாயத்தின் மீதான நம்பிக்கை கீற்றை விதைக்கிறார்கள் கடாரு போன்ற நவீன விவசாயிகள்... !

Friday, May 20, 2016

தமிழறிஞர் கால்டுவெல் பற்றி?

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்ததால் தன்னை 'இந்தியன்’ என்றே சொல்லிக்கொண்டவர் கால்டுவெல். 18 மொழிகள் அறிந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுதான் தீராக் காதல். 15 ஆண்டு கால உழைப்பின் பயனாக அவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற ஆங்கில நூல் தமிழ் மொழிக்கும் அதன் திராவிடக் குடும்பமான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்குமான உறவை உலகுக்குச் சொன்னது. அதனால்தான் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கால்டுவெல்லையும் மலையாள மொழியை ஆய்வுசெய்த டாக்டர் குண்டட் ஆகிய இருவரையும், 'அவர்களுக்கு திராவிடம் கடன்பட்டுள்ளது’ என்று சொன்னார்.
நற்கருணை தியான மாலை, தாமரைத் தடாகம், நற்கருணை, பரதகண்ட புராதனம் ஆகிய நூல்களை தமிழில் எழுதும் அளவுக்கு தமிழைக் கசடறக் கற்றவர். கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காகச் சென்னை வந்தார். கிறிஸ்துவம் கற்பிக்கவே தமிழ் படித்தார். அதன் பிறகு தமிழ் அவரை விடவில்லை. எங்கு போனாலும் நடந்தே போகும் பழக்கம் வைத்திருந்தார். சென்னையில் இருந்து நெல்லை வரை பல்வேறு ஊர்கள் வழியாக நடந்துபோய் தமிழ்நாட்டு மக்களை படித்தவர் அவர். ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான தொப்புள் கொடி உறவை முதலில் சொன்னவரும் கால்டுவெல்லே!

Saturday, May 07, 2016

சோழர்களின் நீர் மேலாண்மையும், நதி நீர் இணைப்பு திட்டமும்...!

(முன்குறிப்பு: ஆங்கிலத்தில்  'Romanticize' என்றொரு சொல் உண்டு. அதாவது இருக்கின்ற விஷயத்தை மிகைப்படுத்தி அதை சிறப்பாக கூறுவது. இந்த கட்டுரை அந்த வகையை சேர்ந்தது அல்ல. அதனால் இதை மற்றுமொரு தமிழ் பெருமை பீற்றல் என்று கடந்து விடாதீர்கள்.)

பெரிய திட்டங்களை கண்டு எப்போதும் வியப்பது, அந்த பெரிய திட்டங்கள் நமக்கு வேண்டும் என்று கேட்பது நம் பொதுவான இயல்பு. நீர் மேலாண்மை விஷயத்தில் எடுத்துக் கொண்டால் கூட, நமது கோரிக்கைகள் எப்போதும் பெரிய அணைகளாக, நதி நீர் இணைப்பாக இருந்துகிறது. இந்த இயல்பினால் தான் உலகின் பழமையான அணையை கட்டியவன் சோழன்  என்று பெருமை கொள்கிறோம். ஆனால், அதே சோழர்கள் வெட்டிய லட்சக்கணக்கான குளங்கள், ஏரிகளை  பற்றி பேச மறுக்கிறோம். 

கரிகாலனின் கல்லணை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்தான். இப்போது கட்டப்படும் அணைகள் போலானது அல்ல, சோழன் கட்டிய கல்லணை. சூழலுக்கு அதிகம் தீங்கிழைக்க்காமல், கல், மண் மற்றும் களிமண் கொண்டு கட்டப்பட்ட அணை அது. அதனால்தான், இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் பொறியியலை கண்டு வியந்து கல்லணைக்கு ‘கிரான்ட் அணைகட்’ என்று பெயர் சூட்டினார். இது பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால், சோழர்கள்  அணைகளை மட்டும் கட்டவில்லை. கல்லணைக்கு நிகரான தொழிற் நுட்பம் அவர்கள் வெட்டிய ஏரிகளிலும் இருந்தது. 

ராஜகேசரி பெருவழியும், நொய்யல் ஆறும்:
பிற்காலச் சோழர்கள் நாகப்பட்டினம் முதல் கேரள மாநிலம் கோழிக்கோடு வரை ஒரு பெரும் பாதையை உண்டாக்கி இருந்தார்கள். இந்த பாதை ராஜகேசரி பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த பெருவழியின் பக்கமாக ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஏரிகள்தான் நொய்யலாற்றின் உயிர் நாடி.  

எழுத்தாளர் இரா. முருகவேளிடம் இந்த பெருவழி குறித்து பேசியபோது, “இந்த பெருவழியில் பெரும் வணிக குழுக்கள் பயணித்தன. வணிக குழுக்கள் என்றால் பத்து இருபது பேர் அல்ல. குறைந்தது 1000 மாட்டு வண்டிகளில் தானியங்கள், பஞ்சுகள் மற்றும் பிறச் செலவங்களை ஏற்றிக் கொண்டு வணிகர்கள் பயணித்து இருக்கிறார்கள். கொடுமுடி முதல் பாலக்காடு வரை இந்த பெருவழியை ஒட்டிய பகுதிகள் மிகவும் வறட்சியானதாக இருந்து இருக்கிறது. அதனால், அந்த பாதையில் பயணிப்பவர்களின் நலனுக்காக கோவை பகுதியில் மட்டும் 32 நீர் நிலைகளை உண்டாக்கி இருக்கிறார்கள். இது குறித்த கல்வெட்டு இன்றும் இருக்கிறது. 

கோவை மாநகரத்தில் உள்ள அல்லிக்குளம், குறிச்சி குளம், நாகராஜபுர குளம், முத்தனங்குளம், பனங்காட்டு குளம், வாலாங்குளம் எல்லாம் அவர் வெட்டியதுதான். இந்த நீர் நிலைகள் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவை. நொய்யலாற்றிலிருந்து வரும் நீர் இந்த ஏரிகளை எல்லாம் நிரப்பிவிட்டு மீண்டும் நொய்யலாற்றோடு கலந்துவிடும்.

கோவை மாவட்டம் பீடபூமி பகுதி. அதனால் மற்ற ஆறுகளைவிட நொய்யலாற்றின் வேகம் அதிகமாக இருக்கும். பெரும் மழை பெய்தால் கூட வேகமாக பயணித்து காவிரி உடன் விரைவாக கலந்துவிடும். அதனால், இந்த ஆற்றின் பயன்களை அந்த பகுதி மக்கள், முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து இருக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் வெட்டபட்ட இந்த ஏரிகள், ஆற்றின் வேகத்தை ஆற்றுப்படுத்தியது மட்டும் இல்லாமல்,  அந்த பகுதியையும் எப்போதும் செழிப்பாக வைத்து இருந்து இருக்கிறது.

ஆனால், நாம் நம் மோசமான நீர் மேலாண்மையால், அந்த ஏரிகளையும் மெல்ல கொன்று வருகிறோம். அதன் மூலமாக நொய்யலையும். ஆம் நொய்யல் அழிவிற்கு சாயப்பட்டறைகள் மட்டும் காரணம் அல்ல. இந்த ஏரிகளின் அழிவும்தான். முன்பு ஒரு காலத்தில் நொய்யலில் ஏராளமான நீர் நாய்கள் இருந்து இருக்கின்றன. ஆனால், இப்போது ஒன்றை கூட பார்க்க முடியவில்லை. அந்த நிலை நாளை அதனை ஒட்டி வாழும் நமக்கும் ஏற்படலாம்...” என்கிறார் முருகவேள்.  

நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் வேலையா...?
இந்த நீர் நிலைகளை காக்க வக்கற்ற இந்த அரசும் நாமும்தான் இப்போது நதி நீர் இணைப்பை பற்றி அதி தீவிரமாக பேசி வருகிறோம்.  அனைத்து கட்சிகளும் நம்மை கவர்வதற்காக நதி நீர் இணைப்பு திட்டத்தையும் தம் தேர்தல் அறிக்கையில் முன் வைத்து இருக்கிறது. உண்மையில் இந்த நதி நீர் இணைப்பு சாத்தியமா...பயன் தருமா...? என்ற நம் கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் சூழலியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் பதிலாக இருக்கிறது. 

சூழலியலாளர் பியூஷ், “நதி நீர் இணைப்பு நன்மைகளை தருவதை விட மாநிலங்களுக்கிடையே  பிரச்னையைதான் உண்டாக்கும். இது போல் பெரிய திட்டங்களை நாம் யோசிப்பது மூலமாக, தீர்வை நோக்கி பயணிக்காமல் பிரச்னைகளை மேலும் மேலும் நாம் சிக்கலாக்குகிறோம்.” என்கிறார். 

“ஒரு வேளை இந்த நதிகள் இணைக்கப்படும் பட்சத்தில், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவுக்கு மக்கள் இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு என்ன திட்டத்தை வைத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல், டன் கணக்கில் கான்கீரீட் கலவைகள் ஆற்றில் கொட்ட்டப்படும். இது மேலும் மேலும் ஆற்றை மாசுப்படுத்துமே தவிர, எந்த நல் பயன்களையும் தராது...” என்கிறார் பியூஷ். 

ஏற்கெனவே, மேட்டூர் அணை கட்டப்படுவதற்காக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் இன்றும் கர்நாடக வனப்பகுதிகளில் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், பியூஷின் கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 

ஏறத்தாழ இதே கருத்தை வழிமொழியும், பூவுலகு அமைப்பைச் சேர்ந்த சுந்தராஜன்,  “இன்றைய மதிப்பில், இந்த திட்டத்தை செயல்படுத்த 20 லட்சம் கோடி தேவை. பராமரிக்க வருடத்திற்கு 2 லட்சம் கோடி தேவை. இவ்வளவு நிதி எங்கு இருக்கிறது. இது முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பி ஏமாற்றும் திட்டம்”  என்கிறார். 

அரசின் வாதம்:
இந்தியாவில் சில நதிகளில் மிகவும் செழிப்பாக வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கிறது. சில நதிகளில் பருவகாலத்தில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்கும் போது, அனைத்து நதிகளிலும் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்க செய்து விட முடியும். அதனால் நமது விவசாய பரப்பு 175 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு விரிவடையும்,  34000 மெகாவாட் புனல் மின்சாரம் தயாரிக்க முடியும். -  இது அரசின் வாதம்.

ஆனால், இந்த அடிப்படை புரிதலே தவறு என்கிறார் இந்திய நீர் நிலைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டெல்லி ஐஐடி பேராசிரியர் கோசைன்.
“பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த திட்டத்தை முன்வைக்கிறார்கள். வற்றாத நதிகள் அனைத்திற்கும் ஜீவனாக இருப்பது இமயமலை பனிப்பாறைகள். ஆனால், பருவநிலை மாற்றத்தால் இந்த பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இன்னும் சில காலத்தில்  முழுவதுமாக உருகிவிடும் பட்சத்தில், வற்றாத நதிகள் என்று ஒன்று இல்லாமலேயே ஆகிவிடும். பின்பு, நதிகளை இணைத்து என்ன பயன்...?” என்று அவர் வைக்கும் கேள்விகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. 

நதிகள் இணைப்பிற்கு அரசு சொல்லும் இன்னொரு காரணம், தேவையில்லாமல் கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியும் என்பது. ஆனால், இந்த வாதமும் தவறு என்கிறார் பூவுலகு சுந்தராஜன்.

சுந்தராஜன், ”கடல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் நதிகள் அதன் இயல்பில் கடலில் கலக்க வேண்டும். அதை தடுத்தால் கடல் மரணித்துவிடும். அதற்கு நம் சமகால உதாரணம்  'Dead Sea'. ஜோர்டான் நதியை கடலில் கலக்க விடாமல் செய்ததுதான் அந்த கடல் மெல்ல இறக்க காரணம். அது மட்டுமல்லாமல், நதி கடலில் கலக்கும் கழிமுகத்தில்தான், மீன்கள் குஞ்சு பொறிக்கும், அந்த பகுதியில்தான் அலையாத்தி காடுகள் உண்டாகும். நாம் நதி, கடலில் கலப்பதை தடுக்கிறோமென்றால், இவை அனைத்தையும் அழிக்கிறோம் என்று அர்த்தம்”


பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலேயே தீர்வு காணுங்கள்...?
சரி நம் நீர் பிரச்னைக்கு தீர்வென்ன...? நம் வரலாற்றை மீள்வாசிப்பது மூலமே நம் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியும். ஆம். சோழர்களின் நீர் மேலாண்மை.  

இவர்கள் பெரிய அணைகள், நதிகள் இணைப்பு ஆகியவற்றுக்காக திட்டமிடும் பணத்தில் பத்து சதவீதத்தைக் கொண்டே, நம் அனைத்து குளங்கள், ஏரிகளையும் மீட்டுவிட முடியும் மற்றும் ஆயிரக்கணக்கில் புது நீர் நிலைகளையும் உண்டாக்கிவிட முடியும். அதன்  மூலம் அந்தந்த பகுதியில் நீர் வளம் பெருகும். அந்த பகுதி பிரச்னை அந்த பகுதியிலேயே தீர்க்கப்படும்.

நாம் ஒரு பொருளை ஒரு இடத்தில் தொலைக்கிறோமேன்றால், தொலைத்த இடத்தில் தேடுவோமா அல்லது நமக்கு விருப்பமான இடத்தில் தேடுவோமா...? அது போலதான் நீர் பிரச்னையும். ஒரு இடத்தில் தண்ணீர் சிக்கலென்றால், அதே இடத்தில் அதிக நீர் நிலைகளை உண்டாக்கி தீர்க்க வேண்டுமே தவிர, இன்னொரு இடத்திலிந்து நீர் எடுக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. இது சிக்கலை மேலும் மேலும் அதிகமாக்குமே தவிர, நிரந்திர தீர்வை தராது.
 

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நான்கு ஆண்டுகளுக்கு  முன் சென்னையில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் வந்தது. அப்போது திருவள்ளூரிலிரிந்து தண்ணீர் எடுக்க அரசு முடிவு செய்கிறது. இரண்டு, மூன்று முறை தண்ணீர் எடுக்க அந்த பகுதி விவசாயிகளும் அனுமதித்தார்கள். ஆனால், அதன் பின் எதிர்ப்பு தெரிவித்து, தண்ணீர் எடுக்க சென்ற வண்டியை சிறைப்பிடித்து வைத்து விட்டார்கள். பக்கத்து பக்கத்து மாவட்டத்திலேயே இவ்வளவு சிக்கல் உண்டென்றால், பல மாநிலங்களின் சம்மதம் கோரும் இந்த திட்டத்தில் எவ்வளவு சிக்கல் இருக்கும்....?

இவர்கள் பெரிய அணைகள், நதி நீர் இணப்புகளை முன் வைக்க இன்னொரு காரணம் அதில் விளையாடும் பெரும் பணம் மற்றும் அதை ஒட்டிய ஊழல். அதனால்தான் சுலபமான தீர்வை கண்டு கொள்ள ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள். நாம் எளிய தீர்வை முன் வைத்து, அதை செயல்படுத்த அரசை நிர்பந்திக்கும் போது, இவர்களின் ஊழல்களையும் தடுத்து விட முடியும். இனியாவது நாம், கங்கையையும் காவிரியையும் இணைக்க கோராமல், நம் வசிக்கும் பகுதியில் இருக்கும் குளங்களையும், ஏரியையும், கண்மாயையும் மீட்க, புனரமைக்க, புதுப்பிக்க அரசை நிர்பந்திப்போம்.

தீர்வு எளிமையான ஒன்றாக இருக்கிறது. நாம் எந்த பாதையில் பயணிக்க போகிறோம்...?