Thursday, February 25, 2016

Tale of Man who made forest in dharmapuri, in Tamilnadu

ருமபுரி என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் மனசித்திரம் எப்படி விரியும்...? அது ஒரு பாலை நிலம், பெண் சிசு கொலை அதிகம் நடந்த ஊர், சாதிக் கலவரங்கள், நக்சல் பகுதி... இப்படியானதாகதான் இருக்கும் உங்கள் எண்ணம்.
 
ஆம். எனக்கும் இப்படிதான் அந்த ஊர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அதில் உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால், அது மட்டுமே உண்மையும் இல்லை.... அந்த ஊருக்கென இன்னொரு முகம் இருக்கிறது, யாருக்கும் அதிகம் தெரியாத முகம். பசுமை முகம்.  இந்த கட்டுரை அந்த பசுமை முகத்தை பற்றி அல்ல. அதை விதைத்த ஒரு தனி மனிதனை பற்றி...  ஆம். வரலாறு நெடுகிலும் சில அற்புதங்கள் தனி மனிதர்களால் நிகழ்ந்து இருக்கிறது.
 
அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திய ஒரு மனிதனை பற்றி 
 
 
உங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜாதவ் பயேங்கை தெரிந்து இருக்கும். யாரது என்கிறீர்களா...?  அசாமில் பிரம்மபுத்திரா மணல் படுகையில் ஒரு காட்டையே உருவாக்கியவர். அதற்காக பத்ம ஸ்ரீ விருது வரை வாங்கியவர்.   நம் ஊரிலும் ஒரு ஜாதவ் பயேங் இருக்கிறார்... அதுவும் தருமபுரியில்.  அவரை அறிமுகப்படுத்தவே இந்த கட்டுரை....  
 
தமிழகத்தின் ஜாதவ் பயேங்:
 
ஜாதவ் பயேங் உருவாக்கிய காடு அரசுக்கு தெரிய வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. ஊருக்குள் வந்த யானைகளை துரத்திக் கொண்டே சென்றவர்கள்,  கடைசியில் அடைந்த இடம் ஒரு காடு. தங்கள் வரைப்படத்தில் இல்லாத  காட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், இது எப்படி உருவானது என்ற தேடலுக்கான விடைதான் ‘ஜாதவ் பயேங்’. இதுபோல்தான் எனக்கும் தமிழகத்தின் ஜாதவ் பயேங் அறிமுகமானார்.  வேறொரு வேலையாக தருமபுரி மாவட்ட எர்ரப்பட்டிக்கு சென்று, அரசு வரைபடத்தில் இல்லாத ஒரு கானகத்தில் சிக்கி கொண்டேன். என்னை தொலைத்து அந்த அற்புத கானகத்தை கண்டடைந்தேன்.  அங்குதான் அந்த காட்டை உருவாக்கிய ‘பியுஷ் மனுஷ்’ அறிமுகமானார்... ராஜஸ்தான் பூர்வீகம். போன தலைமுறையில் தமிழகம் வந்து குடியேறியவர். 
 
 தமிழ் ஜாடையில் இல்லாத, ஆங்கிலத்தில் உரையை துவங்கிய அவருடன் என்னால் உடனே ஒட்ட முடியவில்லை. ஆனால் பேச ஆரம்பித்த சில மணிநேரங்களில் அவரின் உற்சாகம், என்னையும் தொற்றிக் கொண்டது. அவருடன் மாலை நேரத்தில் துவங்கிய இந்த உரையாடல் பின்னிரவு வரை நீண்டது...
 
 
காடெனப்படுவது யாதெனில்...
 
இந்த காடு எப்படி உருவானது...? 
 
“2007 ல் இந்த பகுதிக்கு வேறு வேலையாக வந்தேன். இந்த பகுதியின் நில அமைப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போது மழை தொடர்ந்து பல ஆண்டுகள் பொய்த்து இருந்ததால், விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று,  நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டு இருந்தார்கள். சூழலியல் மீது அக்கறை கொண்ட நண்பர்களிடம் பேசி நிதி திரட்டி, இடம்பெயர்ந்து கொண்டிருந்தவர்களிடமிருந்து நிலத்தை வாங்கினேன். ஏறத்தாழ நூறு ஏக்கர். நான் விவசாயி கிடையாது, விவசாயமும் தெரியாது.... ஆனால் கல்லூரிக் காலங்களில் ஆயிரக்கணக்கில் மரங்கள் நட்டு இருக்கிறேன். அந்த  அனுபவத்தில் இந்த வறண்ட நிலத்தில், மரங்கள் நட துவங்கினேம். ஏக்கருக்கு 1300 மரங்கள் வீதம், இது வரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் நட்டேன்...இப்படியாகதான் இந்த கூட்டுறவு காடு உருவானது...” என்று பியூஷ் தன் மழலை தமிழில் சொன்னார்.  
 
காடெனப்படுவது யாதெனில், வெறும் மரங்களின் தொகுப்பு மட்டுமல்ல.... ஓடைகள், குளங்கள், இதெல்லாம் இருக்க வேண்டும். அப்போதுதான் வனவிலங்குகள் வரும்... இப்போது இந்த காட்டில் ஒரு வற்றாத ஓடையும், 8 குளங்களும், 2 ஏரிகளும், 17 தடுப்பணைகளும் இருக்கிறது. அவ்வபோது காட்டு பன்றிகளும், எப்போதும் மயில்களும் வந்து போகிறது...
 
வளங்குன்றா வாழ்வும், பசுமை தொழிற்களும்
 
 
இனி அவருடனான உரையாடலில் இருந்து...
 
வணிக குடும்பத்தில் பிறந்த உங்களை எது சூழலியல் செயற்பாட்டில் ஈடுபடத் தூண்டியது...?
 
நானும் ஒரு வணிகனாகத்தான் என் வாழ்க்கையை துவங்கினேன். கொசு வலை உற்பத்தி செய்யும் ஒரு சிறு தொழிற்சாலை வைத்து இருந்தேன். அப்போது, தினமும் காலையில் மிதிவண்டியில் செடிகளை சுமந்து கொண்டு வீதி, குளக்கரை ஓரங்களில் மரம் நடுவதை பழக்கமாக வைத்து இருந்தேன். ஆனால், இன்னொரு புறம், என் தொழிற்சாலையில் கொசு வலையில் சாயம் ஏற்றுவதற்காக நீர் நிலைகளை மாசுப்படுத்தி கொண்டிருந்தேன். இந்த முரணில் செயல்பட பிடிக்கவில்லை. தொழிற்சாலையை மூடினேன். பிறகு சூழலுக்கு மாசு உண்டாக்காத பசுமை தொழில்களை செய்ய துவங்கினேன். அதன் ஒரு பகுதிதான் இந்த காடும்.

என்ன... காடு உருவாக்குவது ஒரு தொழிலா...? அதிலிருந்து எப்படி வருமானம் வரும் ?
 
ஆம் தொழில்தான்... சொல்லப்போனால் இதுதான் நீடித்த வருமானம் வரும் தொழில். பிற தொழிற்சாலைகள் உற்பத்தியை உண்டாக்குகிறோம் என்று இயற்கையை சுரண்டும் போது, நாங்கள் இயற்கைக்கு கொடுத்து அதிலிருந்து உரிமையுடன் எங்களுக்கு வேண்டியதை பெறுகிறோம்.

புரியவில்லையே...? 
 
நாங்கள் பத்து விதமான பசுமை தொழிற்களை பட்டியலிட்டுள்ளோம். மூங்கிலிலிருந்து மேசை, நாற்காலி உற்பத்தி செய்கிறோம், பழங்களை மதிப்புக்கூட்டி விற்கிறோம், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு என இயற்கையை சுரண்டாத தொழில்கள் செய்கிறோம்...

என்ன விளையாடுகிறீர்களா.... இதிலிருந்து எப்படி வருமானம் வரும் ?
 
உங்களின் இந்த பொது புத்திதான், பலர் இது போன்ற பசுமை தொழில்களுக்கு வராமல் இருப்பதற்கான காரணம். நாங்கள் உற்பத்தி செய்யும் மூங்கில் சாமான்களுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.  சொல்லப்போனால், என்னால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. என்னிடம் ஒரு பெரிய ஜீப் இருக்கிறது, பெரிய வீட்டில் குடி இருக்கிறேன். நம்புங்கள்.... இது  அனைத்தும் இங்கிருந்து கிடைக்கும் வருமானம்தான்... 

ஹோ... பொருட்களை மதிப்புக் கூட்டி விற்றால், வருமானம் வரும் என்கிறீர்கள்...? 
 
ஆம். மதிப்பு கூட்டுதல் மட்டுமல்ல... காலத்திற்கு ஏற்றார் போல் விவசாயத்தையும் நவீனப்படுத்தாமல், விவசாயம் நஷ்டம் தருகிறது என்று கூறுவது வெற்று பிதற்றல் என்கிறேன்.
 
புரிகிறது. ஆனால், இதை எப்படி விவசாயிகள் செய்ய முடியும். அரசு தானே செய்ய வேண்டும்...?
 
ஆம். நான் அரசைத்தான் சொல்கிறேன். பன்னாட்டு நிறுவனங்கள், பல ஆயிரங்கள் முதலீடு செய்கிறது. ஆனால், அவர்கள் தரும் வேலை வாய்ப்பு சில ஆயிரங்கள்தான். ஆனால், நாங்கள் இது போன்ற பசுமை தொழிற்கள் மூலம், சில லட்சங்கள் முதலீட்டில், பல பேருக்கு வேலை தருகிறோம். வளங்குன்றா வாழ்விற்கு, இது போன்ற தொழிற்களே சிறந்தது என நான் நம்புகிறேன். இயற்கையை சுரண்டுவதும் இல்லை, சூழலை மாசுப்படுத்துவதும் இல்லை. இது போன்ற தொழிற்களை ஊக்கப்படுத்த அரசு முன் வர வேண்டும். அதேவேளை, இளைஞர்களும் பசுமை தொழிற் பக்கம் வர வேண்டும். நான் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். மகிழ்வானதும், நிரந்தர வருமானம் வரக்கூடியதும் இதுதான்.
 
இப்போது சூழலியல் குறித்து அதிக விழிப்புணர்வு  ஏற்பட்டு இருக்கிறது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த தளத்தில் மிக உற்சாகமாக வேலை பார்க்கிறார்கள். ஆனால், நான் ஆரம்பத்தில் செய்த தவறையே செய்கிறார்கள், இயற்கையை சுரண்டும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, இயற்கையை காக்க போராடுகிறார்கள்... அவர்கள் பசுமை தொழில் செய்ய முன் வர வேண்டும்.  
 
இரவு அவருடைய கானகத்திலேயே தூங்கிவிட்டு காலை கிளம்பும் போது,  “பசுமை தொழிற்களில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு இந்த கூட்டுறவு காட்டின் வாசற்கள் திறந்தே இருக்கிறது. அவர்கள் இந்த இடத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளாலாம்”  என்று சொல்லி விடை கொடுத்தார்.
 
நுரையீரல் முழுவதும், கானகத்தின் சுத்தமான பிராணவாயுவை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்

Wednesday, February 10, 2016

வீர மதராஸி... இந்தியாவின் அரண் மெட்ராஸ் ரெஜிமென்ட்!

டந்த சில நாட்களாக சியாச்சின் பனிச்சரிவு நிகழ்வு பற்றிதான் இந்தியாவே பேசிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் சியாச்சின் அவலாஞ்சி பகுதியில் பனிச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார். உலகிலேயே உயரமான போர்க்களமான சியாச்சினை  பாதுகாப்பதிலும் தமிழர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றர். ஆம் சியாச்சினை பாதுகாக்கும் பொறுப்பு தமிழகத்தை சேர்ந்த மெட்ராஸ் ரெஜிமென்டின் கையில்தான் இருக்கிறது.
இந்திய ராணுவத்திலேயே மிகப் பழமையான ரெஜிமென்டும் இதுதான். இந்தியா எடுக்கும் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையிலும் அல்லது ராணுவம் தொடர்பான எந்த ஒரு ரகசிய நடவடிக்கையிலும் மெட்ராஸ் ரெஜிமென்டின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். இதன் தலைமையகம் உதகை அருகேயுள்ள வெலிங்டனில் உள்ளது. சரி இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் எப்படி உருவானது?

கடந்த 1639-ம் ஆண்டு சென்னை நகரம் உருவானது. தொடர்ந்து 1644-ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை எழுப்பப்பட்டது. 1660-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால்,  முதன் முதலில் மெட்ராஸ் ரெஜிமென்ட் ஈரோப்பியன் என்ற பெயரில் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. எனினும்  1758-ம் ஆண்டுதான் 100 சிப்பாய்கள்  கொண்ட படையாக உருவானது.  மேஜர் லாரன்ஸ் என்பவர்தான் இதன் முதல் தலைவர். பிரிட்டிஷ் வீரர்களுடன் இந்தியர்களும் இந்த படைப்பிரிவில் இருந்தனர். தென்னகத்தில் இருந்த பிரெஞ்சு படையினருடன் போரிடுவதுதான் மெட்ராஸ் ரெஜிமென்டிடம் ஒப்படைக்கப்பட்டமுதல் பணி.

அந்த காலகக்கட்டத்தில் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர்களிலும் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் சுதந்திரத்துக்கு பின், இந்தியாவின் மிக முக்கியமான ரெஜிமென்டாக மெட்ராஸ் ரெஜிமென்ட் உருவானது. இந்தியாவை பொறுத்தவரை எந்த ஒரு ராணுவ நடவடிக்கையும் முதலில் ஒப்படைக்கப்படுவது மெட்ராஸ் ரெஜிமென்டிடம்தான்.
தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள்,  மெட்ராஸ் ரெஜிமென்டில் பணியில் அமர்வதை ஒரு பெருமையாகவே கருதினர்.  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைதான் முதலில் தேர்வு செய்வர். எனினும் தமிழகத்தை தலைமயிடமாகக் கொண்டு இயங்குவதால்,  இந்த ரெஜிமென்டில் தமிழர்கள்தான் அதிகமாக இடம் பெறுகின்றனர். 

பழமை வாய்ந்த இந்த ரெஜிமென்டின் பெருமைக்கு இரண்டே இரண்டு சான்றுகளை கூறலாம்.  ஒன்று இந்தியாவே அலறிய ஆபரேசன் புளூ ஸ்டார். இன்னொன்று உலகமே கதறிய பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு. பஞ்சாப் மாநிலம் அமிர்தரசரஸ் பொற்கோவிலுக்குள் சென்று காலிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடியது இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் படையினர்தான். அடுத்து வாஜ்பாய் அரசில்,  1998-ம் ஆண்டு அப்துல்கலாம் தலைமையில் பொக்ரானில் அத்தனை ரகசியமாக அணுகுண்டு வெடித்து காட்டியதும் இதே மெட்ராஸ் ரெஜிமென்ட்தான்.
அதுமட்டுமல்ல,  இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் பெருமை வாய்ந்த ராணுவத் தலைவர்கள் தங்களது கடைசிகாலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் கழிக்க விரும்புவார்கள். இந்திய ராணுவத்தில் ஜெனரல் கரியப்பா, ஜெனரல் ஷாம் மானக் ஷா ஆகிய இருவர்தான் பீல்டு மார்ஷல் அந்தஸ்த்தை பெற்றவர்கள். இதில் பீல்ட் மார்ஷல் ஷாம் மானக் ஷா,    தனது கடைசி காலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் கழித்தார்.

இப்படி பல பெருமைகளை பெற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள போர்முனையை  பாதுகாத்து வருகிறது.  கிட்டத்தட்ட மைனஸ் 50 டிகிரி  வரை குளிர் வீசும் போர் முனை இது. இந்தியாவில் எத்தனையோ ரெஜிமென்டுகள் இருக்க,  இந்த கடின பணியை மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் ஏற்று செய்து வருகிறது. பாகிஸ்தானும் இங்கு தனது ராணுவத்தினரை நிறுத்தியுள்ளது.  அந்த வகையில் பாகிஸ்தானை முதலில் எதிர்கொள்வதும் இந்தியாவின் வால் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.  

மெட்ராஸ் ரெஜிமென்டின் போர்க்கள வார்த்தை என்ன தெரியுமா? '' ஏ வீர மதராசி... அடி கொல்லு, அடி கொல்லு'' என்பதுதான். ஜெய் ஹிந்த்!