Monday, August 10, 2015

One of the Kural which Kalam always says..

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.


 Ulluvadhu yellam uyarvullal; mattradhu
thallinum thallamai neerthu.


Meaning of the Above Thirukural

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்கட்டும். அவ்வுயர்வு கை கூடாவிட்டலும் உயர்ந்த அந்த எண்ணத்தைக் கைவிடுதல் கூடாது.

Let the thoughts be always great, even if it is not successful, let not those thoughts be left out.

புகழை தலையில் ஏந்திக் கொள்ளாதவருக்கு சலாம்! கலாமுக்கு கமல் கவிதாஞ்சலி

கலாம்களும் கமால்களும்
கமல்களும்
இலாதுபோகும்
நாள்வரும்
இருந்தபோது
செய்தவை
அனைத்துமே
கணிப்பது
ஹெவன்என்று
ஒருவனும்
பரம் என்று ஒருவனும்
ஜன்னத்தென்று ஒருவனும்
மாறி மாறிச் சொல்லினும்
இகத்திலேயவன்
நடந்த பாதையே
புகழ் பெறும்
நிரந்தரம் தேடுகின்ற
செருக்கணிந்த
மானுடர்
தொண்டருக்கடிப்பொடி
அம்மெய்யுணர்ந்த நாளிது
புகழைத் தலையிலேந்திடாது
பாதரட்சையாக்கிய
கலாம் சாஹெப்
என்பவர்க்கு
சலாம் கூறும் நாளிது
- கமல்ஹாசன்

ஜனாதிபதி மாளிகை: குரங்குகள் வாங்கும் பென்சன்

அந்த அலுவலகம் பிரம்மாண்டமானதாக, குடைந்து வைத்ததுபோல குறைவான வெளிச்சத்தில் இருந்தது. இடுப்பளவு உயரத்தில் இருந்து சீலிங் வரைக்கும் நீண்ட பிரெஞ்சு ஜன்னல்கள். பெரும்பாலான ஜன்னல்கள் வேலைப்பாடுகள் செய்த வெல்வெட் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டு டெல்லியின் சூரியனும், வெக்கையும் உள்ளே வராமல் தடுத்தன. புறாக்கள் ஜன்னல் விளிம்புகளில் உட்கார்ந்து சத்தமிட்டன. அண்மையில் இருந்த மரங்களிலும், கட்டடங்களிலும் குரங்குகள் நிறைய சஞ்சரித்தன. இயற்கையான வனப்பிரதேசச் சூழல் யன்னல்களை அங்காங்கே கறைபட வைத்திருந்தது. எந்த மனிதனுக்கு

இந்த யன்னல்களை கழுவும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் யோசித்தேன். அதுவரை ஒரு பெண் பணியாளரைக்கூட நான் காணவில்லை. அந்த அறையில் எதை எடுத்தாலும் அது பிரம்மாண்டமானதாகவே இருந்தது. பிரம்மாண்டமான சோபாக்கள், தடிப்பான கம்பள விரிப்புகள், ராட்சத தொங்கு விளக்குகள். அவருடைய மெய்க்காவலர்கள்கூட திடகாத்திரமாகவும், பாரமாகவும் இருந்தார்கள்.

பென்னம் பெரிய கதவுகள் வழியாக வந்துபோகும் மிலிட்டரி உடையணிந்த உதவியாளர்கள்கூட கனமான ஆகிருதிகளுடன் காணப்பட்டார்கள். எல்லாமே பெரியதாக இருந்தது, ஒரு மேசையின் முன் உட்கார்ந்து கம்ப்யூட்டர் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதரைத் தவிர. அவருடைய சிறிய உடலில் இருந்து சன்னமாகத்தான் குரல் எழும்பியது. அந்த அறையின் பரப்புக்குள், அவர் குரலை கேட்க வேண்டுமென்றால் சுற்றிவர கடுமையான மௌனம் தேவை. ஆனால் அந்தப் புறாக்கள் அவர் பேசுவதை மூழ்கடித்தன.'எல்' எழுத்துப்போல உயர்ந்த மரத்தில் வடிவமைக்கப்பட்ட அவருடைய தொன்மையான மேசை, ஒரு தூரத்து மூலையில் தள்ளப்பட்டு, இந்த ஆடம்பரங்களுக்கு மன்னிப்பு கேட்பதுபோல காட்சியளித்தது.

அப்துல் கலாம் ஆட்சி செலுத்துவது போலவே இல்லை. இந்தப்பெரிய படாடோபங்களில் அவர் சங்கடப்படுவது போலவே தோற்றமளித்தார். ஒரு கல்விக் கூடத்திலோ, ஒரு பல்கலைக் கழகத்திலோ அவர் இன்னும் கூடுதலான சௌகரியத்துடன் தன்னை உணர்ந்திருப்பார் என்று எனக்குப்பட்டது. என்னையும் ஒரு மாணவர் போலவே அவர் வரவேற்றார்.

நான் பிபிசி குழுவுடன் கடந்த ஒரு மாத காலமாக, விவரணப்படம் ஒன்று எடுப்பதற்காக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அலைந்திருந்தேன். உலக அழகி ஐஸ்வர்யராயின் பேட்டி அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்ததால், மூன்று மாதம் முன்பாகவே ஒழுங்கு செய்திருந்த ஜனாதிபதியின் பேட்டியிலும் கடைசி நிமிடங்களில் சிறு மாறுதல் செய்யவேண்டி நேர்ந்தது. ஒரு நாட்டின் ஜனாதிபதியிலும் பார்க்க ஒரு நடிகை பிஸியாக இருந்ததை கண்டு பிபிசி டீம் அதிசயித்தது. நாளைய பேட்டியே கடைசி. அத்துடன் வந்த காரியம் முடிந்து, நான் மறுபடியும் வாஷிங்டனுக்குப் பயணமாகி விடுவேன்.

பிபிசி குழுவில் நாங்கள் எட்டுப்பேர் இருந்தோம். எல்லாமே வெள்ளைக்கார முகங்கள், என்னுடையதை தவிர்த்து. பல பாதுகாப்பு அரண்களை தாண்டி, பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே வந்துவிட்ட எங்களை ஒரு வரவேற்பு அறையில் உட்காரவைத்திருந்தார்கள். அதுவே ஒரு ஜனாதிபதிக்கு தகுதியான கம்பீரத்தோடு இருந்தது. எங்கள் குழுவின் தலைவர், விவரணப் படக் கலையில் புகழ்பெற்ற பட்டி ஸ்மித் என்பவர். ஜனாதிபதியைப் பார்க்க உள்ளே போகவேண்டிய நேரம் வந்ததும் இரண்டு பாதுகாவலர்களும், ஓர் உயர் அதிகாரியும் எங்களை அழைத்துச் சென்றார்கள். நான் மட்டுமே ஜனாதிபதியிடம் கைகுலுக்கினேன். மற்றவர்கள் காமிராவுக்கு பின்னே நின்று கொண்டார்கள். எங்களை அழைத்து வந்த அதிகாரியின்
முகத்தில் ஆச்சரியத்திலும் பார்க்க ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

பாதுகாவலர் படக்கென்று திரும்பி,  தன் நேரம் வீணாகிவிட்டது என்பதை அப்பட்டமாகக் காட்டியபடி மறைந்துபோனார். ஜனாதிபதி என்னை சஞ்சயன் என்று உரிமையுடன் அழைத்தார்; நான் பதிலுக்கு ‘மிஸ்டர் பிரெசிடென்ட்’ என்றேன். எங்கள் சம்பாசணை தொழில் நுட்பம், இந்தியாவின் எதிர்காலம், சாதாரண மக்களின் அன்றாட சந்தோசம் இவற்றையெல்லாம் தொட்டது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் சிருஷ்டிகர்த்தாவான ஒரு ஜனாதிபதியின் சிந்தனைகள் கவித்துவமாகவே இருந்தது என்னை வியப்பிலாழ்த்தியது.
"இங்கே பாருங்கள் சஞ்சயன், நான் நூறு கோடி மக்களைச் சிரிக்கவைக்க விரும்புகிறேன். உங்களுக்குப் புரிகிறதா? நூறுகோடி மக்கள் சிரிக்கவேண்டும். இது முடியும்."-  அவர் அதை சொன்னவிதம், அறிவை மீறிய ஒரு தேவவாக்கு போல என் காதுகளில் விழுந்தது. என் தலை என்னையறிமால் அசைந்தது.

அவர் தன் கனவை சொல்ல ஆரம்பித்தார். "இந்தியாவைத் தொடுக்கவேண்டும். முக்கோண வடிவமான இந்தியாவை குறுக்கறுத்து ஆயிரம் புதுச்சாலைகள் ஓடவேண்டும்; இணையம் மூலமும், சாட்டிலைட் மூலமும் இந்தியா முழுவதையும் இணைக்கவேண்டும். ஒவ்வொரு நூறு கிராமத்துக்கும் ஓர் இணைய செர்வர். அதிலிருந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்னஞ்சல், இணைய தள வசதிகள். ஒரு புதிய EDUSAT என்ற செயற்கைகோளை விண்வெளியில் நிறுவுவதற்கான ராக்கெட் ஒன்று விரைவிலேயே ஏவப்படும். உலகத்திலேயே கல்விக்காக முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சாட்டிலைட் இதுவாகவே இருக்கும். இதிலிருந்து லட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களுக்கு கல்வி அறிவுப் போதனைகள் ஒலிபரப்பாகும்..." என்ற கலாம்,  'ignited minds' என்றார்.
இளம் மனங்களில் ஒரு தீ பற்றவேண்டும். வெளியே வரத் துடிக்கும் இந்திய இளைஞர்களின் உச்சமான திறமைகளை விடுவிக்கவேண்டும். இந்த அரிய மனிதர், சந்தேகமில்லாமல் தன் பரிவான உள்ளத்தில் கனவுகள் காணும் ஒரு நம்பிக்கைக்காரர்.

தேநீரும் பிஸ்கட்டும் பரிமாறினார்கள். தேநீரை சிறிய பீங்கான் கிண்ணத்தில் பருகியபடி, ஜனாதிபதி தன் மாளிகையைப் பற்றி சொன்னார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் காலத்து கட்டடக் கலைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட அந்த மாளிகையின் முதல் வைஸ்ராய் எர்வின்; கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன். என்றென்றைக்கும் அடக்கியாளலாம் என்ற எண்ணத்தில் பிரிட்டிஷார் எழுப்பிய மாளிகையில், அவர்கள் 17 வருடங்கள் மட்டுமே ஆட்சி செலுத்தினர்.

ஜனாதிபதி பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு இன்னொன்று புலப்பட்டது. இந்த கண்ணைப் பறிக்கும் சோடனைகளும், அலங்கார தூண்களும், மாளிகையும் அப்துல் கலாமின் மாபெரும் கனவுகளை தாங்குவதற்கு போதாத ஒரு சிறு குடிசையாகவே எனக்கு அப்போது தோன்றியது.

நான் விடை பெறுமுன் கேட்டேன். "மிகுந்த அழகுணர்வோடு பராமரிக்கப்படும் உங்கள் தோட்டத்துக்கு போவீர்களா? குரங்குகள் தொல்லைப் படுத்துவதில்லையா?"

"ஓ, குரங்குகள், அவை பெரிதாக என்னை தொந்திரவு செய்வதில்லை." -இப்படிச் சொல்லியவாறே தன் மேசையில் பதித்த சிவப்பு பொத்தானை ஜனாதிபதி அழுத்தினார். அந்தப் பொத்தானை அவருடைய மேசையில் ஒருவித ஒளிவு மறைவுமின்றி ஒட்டி வைத்திருந்தார்கள். அதிலே இருந்து தாறுமாறாக சென்ற வயர்கள் மேசையின் ஓரத்தில் ஸ்டேப்பிள் செய்யப்பட்டிருந்தன. ஒரு விண்வெளி விஞ்ஞானியும், மாபெரும் நாட்டின் ஜனாதிபதியுமான அவருடைய மேசையிலே ஓடும் வயர்களை மறைத்து வைப்பது அவ்வளவு கடினமான காரியமா என்று என்னை யோசிக்க வைத்தது.

"இந்தக் குரங்குகள் எங்களைத் தொந்திரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள சில உபாயங்கள் உண்டு" என்றார். அப்பொழுது ஜனாதிபதி எழுதிய இரண்டு புத்தகங்களை அவருடைய உதவியாளர் கொண்டு வந்து கொடுத்தார். ஆங்கிலப் புத்தகத்தில் கையப்பமிட்டு என்னிடம் தந்தார். மற்றது தமிழ் புத்தகம். அதில் தமிழில் கையெழுத்து வைத்து, "இதை எழுத்தாளரான உங்கள் அப்பாவிடம் கொடுங்கள்!" என்றார்.
நான் விட்ட இடத்தைப் பிடித்துக்கொண்டு என்ன உபாயங்கள்? என்றேன். "காவல்கார குரங்குகள். எங்களுக்கு ஓயாது தொல்லை தரும் சிறிய குரங்குகளுக்கு பெயர் லங்கர். பெரிய குரங்குகளின் பெயர் மக்காக்கி. பயிற்சி கொடுத்த மக்காக்கி குரங்குகளை சங்கிலியில் கட்டி, காவல்காரர்கள் சுற்றிலும் உலாத்துவார்கள். இவற்றைக்கண்டதும் சிறிய குரங்குகள் ஓடிவிடும், கிட்ட வராது".
என் முகத்தில் தோன்றிய ஆச்சரியத்தை என்னால் மறைக்கமுடியவில்லை. 

‘காவல் காக்கும் பெரிய குரங்குகளுக்கு சம்பளம் உண்டா?’ என்றேன், பாதி நகையுடன்,  "நிச்சயமாக. ராஷ்டிரபதி பவன் ஊழியர்களின் பட்டியலில் அவற்றின் பெயர்களும் உண்டே...!"- உலகத்தின் ஆகப்பெரிய ஜனநாயகத்தின் அதிபதி என்னுடைய முழங்கையை பிடித்து தன் அற்புதமான தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.
கருணையே உருவான அந்த நல்ல மனிதருக்கு என்னுடைய மனக்கிலேசம் எப்படியோ தெரிந்துவிட்டது. "அவை ஓய்வு பெற்றபிறகு அவைக்கு பென்சனும் இருக்கிறது" என்றார்

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது  பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.
அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வரும். வெளிநாடுகளில் இருந்தும் ஏகப்பட்ட பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கும். அவற்றையெல்லாம் அப்துல் கலாம் போட்டோ எடுத்து வைத்து வகைப்படுத்துவார். பின்னர் அப்படியே அதனை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி விடுவார். ஒரு பொருளை கூட திரும்பி பார்த்ததது இல்லை. ஒரு பென்சிலை கூட தனக்கு என்று எடுத்து கொண்டது இல்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் அன்பளிப்புகளை மறுத்தால், அந்த நாடுகளை அவமானப்படுத்துவது போல் அமைந்து விடும் என்பதால்தான் பரிசுபொருட்களை அப்துல்கலாம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் 'இப்தார்' விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு.  கடந்த 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம். என்னைஅழைத்த அப்துல் கலாம், இப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார். நான் 22 லட்ச ரூபாய் செலவழிப்போம் என்றேன். இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்? அந்த 22 லட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடுவோம். அந்த தொகைக்கு இணையாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய சொன்னார். பின்னர் தனியாக என்னை அழைத்து ஒரு லட்ச ரூபாய்க்கும் செக் அளித்து இதையும் சேர்த்து 23 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என அப்துல்கலாம் கூறிய போது, மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமையடைந்தேன். கலாம் இஸ்லாமியர்தான் என்றாலும் அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த வரை குடியரசு தலைவர் மாளிகையில் 'இப்தார்' விருந்து அளிக்கப்பட்டதில்லை.

அப்துல் கலாம் 'யெஸ் சார்' வகை அதிகாரிகளை பக்கத்தில் வைத்து கொண்டதில்லை. ஒரு முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் நின்ற என்னை பார்த்து மிஸ்டர். நாயர் நான் சொல்வது சரியா? என்று வினா எழுப்பினார். அது சரியாக இருக்காது என்றும் அதற்கான காரணங்களையும் நான் அடுக்கி கூறினேன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பிரமிப்பு. ராஷ்டிரபதியின் கருத்துக்கு சாதாரண அதிகாரி எதிர் கருத்து சொல்வதும் அதனை அவர் அனுமதிப்பதையும் கண்டு நீதிபதி அசந்தே போனார்.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்தனர். அவர்கள் டெல்லியை சுற்றிபார்க்க ஒரு பஸ் அமர்த்தி தரப்பட்டது. அந்த பேருந்துக்கான கட்டணத்தை அப்துல் கலாம் வழங்கி விட்டார். இவர்களில் யாருக்கும் எந்த சமயத்திலும் அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்தப்படவில்லை. கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவு செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது. அந்த தொகையை கலாம் தனது கையில் இருந்து செலுத்தி விட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை.

அப்துல் கலாமின் 5 ஆண்டு பதவி காலம் முடிய சில நாட்கள் இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் ஊழியர்கள் அவரை சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவரை சந்தித்தேன். என்ன மிஸ்டர் . நாயர் உங்கள் மனைவியை காணோம்? என்று கலாம்  கேட்டார். எனது மனைவி ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து வீட்டில் இருக்கிறார் என்றேன். அடுத்த நாள் எனது வீட்டை சுற்றி ஒரே போலீஸ். என்னவென்று பார்த்தால் கலாம் எனது மனைவியை பார்க்க வீட்டுக்கே வந்து விட்டார். ஒரு குடியரசுத் தலைவர் சாதாரண ஊழியரின் மனைவியை சந்தித்து பேசுகிறாரே என்று நான் வியந்து போனேன்.

இவ்வாறு முன்னாள் குடியரசுத் தலைவர் பற்றி பி.எம். நாயர் கூறியுள்ளார்

Tuesday, August 04, 2015

அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!

நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன்.
 
 
2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, 'இப்போது பயம்  போயிருக்குமே! என்பார்.  
கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்கு 2.5 மணிநேரம் காரில் பயணம். மொத்தமான 5 மணிநேரப் பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம், விவாதித்தோம். இதுவரை நூற்றுக்கணக்கான முறை அவருடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையுமே விஷேசமான அனுபவமாகவே இருக்கும். 
இந்தக் கடைசி பயணத்தில் இருந்து 3 முக்கிய சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...
முதலாவதாக, பஞ்சாபில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி மிகவும் கவலையுடன் இருந்தார் டாக்டர் கலாம். அப்பாவி உயிர்கள் பலியானது அவருக்கு பெரும் வேதனையை அளித்திருக்கிறது. ஷில்லாங் ஐஐஎம்மில் அவர் பேசவேண்டிய தலைப்பு ‘Creating a Livable Planet Earth’. இதனுடன் பஞ்சாப் சம்பவத்தை இணைத்து என்னுடன் பேசினார். ‘பொல்யூஷனைவிட மனிதர்களின் வேலைகள்தான் இந்த உலகுக்கு பெரிய அச்சுறுத்தல்’ என்றார்.
'வன்முறை, மாசு, மனிதர்களின் பொறுப்பில்லாத நடவடிக்கைகள்  போன்றவை தொடர்ந்தால் நாம் உலகைவிட்டு வேறு எங்காவது சென்றுவிட வேண்டியதுதான்...' என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தோம். ‘இப்படியே போனால் 30 வருடங்கள்தான். இளைஞர்களாகிய நீங்கள்தான் ஏதாவது செய்யவேண்டும். இது உங்களுடைய எதிர்கால உலகம் இல்லையா?’ என்றார் கலாம். 
இரண்டாவது. கடந்த 2 நாட்களாகவே பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து கலாம் கவலையாக இருந்தார். ‘நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது 2  முறை ஆட்சிகள் மாறியது.  பதவியில் இல்லாதபோதும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன். பாராளுமன்றம் செயலிழந்துதான் இருக்கிறது. இது சரியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் பாராளுமன்றத்தில் நடைபெற வேண்டும். இதற்கான வழியை நான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார். 
உடனே, என்னை ஷில்லாங் ஐஐஎம் மாணவர்களுக்காக, சர்ப்ரைஸாக ஒரு அசைன்மென்ட் கேள்வியைத் தயார் செய்யச் சொன்னார். இந்தக் கேள்வியை தன்னுடைய உரை முடித்தபின்தான் கலாம் மாணவர்களுக்கு சொல்வதாக இருந்தார். நம் பாராளுமன்றம் இன்னும் சிறப்பாக செயல்பட 3 புதுமையான ஐடியாக்களை மாணவர்கள் தரவேண்டும் என்பதே அது. ஆனால், ‘என்னிடமே இதற்கு பதில் இல்லாதபோது, எப்படி மாணவர்களிடம் பதில் கேட்பது?’ என்று வருந்தினார் கலாம். அடுத்த 1 மணிநேரம் இதுகுறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த ஆரோக்கியமான விவாதத்தை எங்களுடைய அடுத்த புத்தகமான ‘அட்வான்ட்டேஜ் இந்தியா’வில் சேர்க்கலாம் என பேசிக்கொண்டோம்.  
 
மூன்றாவது. இங்குதான் கலாம்-ன் உண்மையான, அழகான மனதை தெரிந்துகொண்டேன். ஆறேழு கார்கள் கொண்ட அணிவகுப்பில், 2வது காரில் நாங்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்பு, ஒரு ஜிப்ஸியில் 3 பாதுகாப்பு வீரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் மட்டும் பாதுகாப்புக்காக ஜிப்ஸி மேல் துப்பாக்கியுடன் நின்று கொண்டு வந்தார். ஒருமணிநேரம் இருக்கும். ‘ஏன் அவர் நின்றுகொண்டே இருக்கிறார். சோர்வடைந்துவிடுவாரல்லவா? பார்ப்பதற்கு ஏதோ தண்டனைக்காக நிற்பதுபோல் இருக்கிறது. உடனே அவருக்கு வயர்லெஸ்ஸில் அவரை அமரச் சொல்லி தகவல் அனுப்புங்களேன்’ என்றார் கலாம். பாதுகாப்புக்காக அவர் நிற்கக்கூடும் என்று கலாமை சமாதானப்படுத்தினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. எனவே, ரேடியோ மூலம் தகவல் அனுப்பினோம். அது வேலையும் செய்யவில்லை. அடுத்த ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மூன்று முறை அவரை அமரச்சொல்லுமாறு கை சைகை கொடுக்கச் சொல்லி என்னிடம் நினைவூட்டினார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, ‘நான் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்து நன்றி சொல்லவேண்டும்’ என்றார்.
 
 
ஷில்லாங் சென்றவுடன் அந்த பாதுகாப்பு வீரரைக் கண்டுபிடித்து கலாமிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் கலாம் அந்தப் பாதுகாப்பு வீரரை வரவேற்று வாழ்த்தினார். கைகுலுக்கி ‘thank you buddy’ என்றார். ‘நீ சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடு. என்னால் நீ அவ்வளவு நேரம் நிற்க வேண்டியிருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றார். கலாம் இப்படிச் சொன்னது அந்த வீரருக்கு ஆச்சரியமாக இருந்தது. வார்த்தைகள் இல்லாமல், ‘சார். உங்களுக்காக இன்னும் 6 மணிநேரம்கூட நிற்பேன்' என்றார். 
 
பின்னர், லெக்சர் அறைக்கு சென்றோம். ‘எப்போதும் மாணவர்களைக் காக்கவைக்ககூடாது!’ என்று அடிக்கடி சொல்வார் கலாம். எனவே, அவருடைய மைக்கை உடனடியாக செட் செய்து கொடுத்து, லெக்சர் குறித்து விளக்கினேன். மைக் செட் செய்யும்போது ‘Funny guy! Are you doing well?” என்றார் கலாம். அவர் ‘Funny guy’ என்று சொன்னால் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அவர் சொல்லிய விதத்தைப் பொறுத்து அர்த்தங்கள் மாறுபடும். நாம் நன்றாக இயங்கினாலோ, ஏதாவது சொதப்பிவிட்டாலோ என பல தருணங்களுக்கும் இதைச் சொல்வார் கலாம். இல்லாவிட்டால் சும்மா ஜாலிக்காகவும் சொல்வார். அவருடன் இருந்த 6 வருடங்களில் ‘Funny Guy’ என்ற அவருடைய வார்த்தை பிரயோகத்தை நான் முழுவதும் புரிந்துவைத்திருந்தேன். ஆனால், இதுதான் இறுதி முறை என்பது எனக்கு அப்போது புரியவில்லை. 
 
"Funny guy! Are you doing well?” என்றார் ‘ஆம்’ என்றேன். அவைதான் கலாம் என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள். 
 
மேடைப் பேச்சில் 2 நிமிடங்கள் பேசியிருப்பார். ஒரு வாக்கியத்தை  முடித்துவிட்டு, நீண்ட இடைவெளி விட்டார். நான் அவரைப் பார்த்தேன். மேடையில் இருந்து அப்படியே சரிந்தார். 
 
அவரை தூக்கி நிறுத்தினோம். மருத்துவர் ஓடி வந்தார். எல்லா விதத்திலும் முயற்சித்தோம். அவருடையை கடைசி தருணத்தை மறக்கவே முடியாது. முக்கால்வாசி கண்கள் மூடியிருந்த நிலையில் அவருடைய பார்வை இன்னும் நினைவில் உள்ளது. ஒருகையில் அவர் தலையைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கை என் விரல்களைப் இறுக்கிப் பிடித்திருந்தன. அவர் முகத்தில் ஒரு பேரமைதி. அவர் கண்களில் இருந்து ஞானம் பிரகாசித்தது. அவர் ஒருவார்த்தை பேசவில்லை. அவர் வலியையும் வெளிக்காட்டவில்லை. அவர் வாழ்க்கையின் அர்த்தம் மட்டுமே எங்களுக்குப் புரிந்தது. 
 
அடுத்த 5 நிமிடங்களில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தோம். சில நிமிடங்கள் கழித்து, கலாம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். கடைசி தடவையாக அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என் நண்பர் , என் வாழ்வின் வழிகாட்டி விடைபெற்றுவிட்டார். என் நினைவுகளிலும், அடுத்த பிறப்பிலும் உங்களை மீண்டும் சந்திப்பேன் சார்!
 
இப்போது என் நினைவுகள் என்னை ஆக்கிரமித்தன.   
 
'நீ இளைஞன். நீ என்னவாக நினைவில் கொள்ளப்பட விரும்புகிறாய்?’  என்று அடிக்கடி என்னைக் கேட்பார். நானும் ஒவ்வொரு முறையும் அவரைக் கவர்வதற்காக வித்தியாசமான பதில்களைக் கண்டுபிடிப்பேன். ஒருநாள் பொறுமையிழந்து அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இந்தியா 2020….சொல்லுங்கள்!’ என்றேன்.
 
'ஆசிரியர்’ என்றார் கலாம்.
 
 
2 வாரங்களுக்கு முன்பு அவருடைய நண்பர்களைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது,’பிள்ளைகள்தான் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டும். சில சமயங்களில் அப்படி நடக்காதது வருத்தமாக இருக்கிறது’. ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்பு, ‘2 விஷயங்கள் அனைத்து பெரியோர்களுக்கும். எப்போதும் உங்கள் இறுதிப் படுக்கையில் பணத்தை விட்டுச் செல்லாதீர்கள். இது குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும். இரண்டாவது. வாழ்வின் முடிவில் தான் நினைத்த வேலையைச் செய்துகொண்டே மரணிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நம் கடைசி தருணங்கள் டக்கென்று முடிந்துவிடவேண்டும்'  என்றார். 
 
இன்று, அவர் விரும்பியதை செய்தபடியே இறுதிப் பயணதை மேற்கொண்டிருக்கிறார். கற்பித்தல். இதற்காகத்தான் தான் நினைவு கொள்ளப்படவேண்டும் என்று விரும்பினார் கலாம். அவருடைய கடைசி தருணத்தில், அவருக்குப் பிடித்தவாறு, மேடையில் கற்பித்துக்கொண்டே மறைந்துவிட்டார் கலாம். ஒரு மகத்தான ஆசிரியராக நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவருடைய வங்கிகணக்கில் ஒன்றுமில்லை. நமக்கான வாழ்த்துக்களும், மக்களுக்கான காதலும் மட்டுமே அவர் விட்டுச்சென்ற சொத்துகள். வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டார் அப்துல் கலாம். 
 
உங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட தருணங்கள், உங்களுடைய தன்னடக்கம், எதையும் தெரிந்துகொள்ள விரும்பும் ஆர்வம் இனி எனக்கு தரிசிக்கக் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கையின் அர்த்தத்தை வாழ்ந்த விதத்திலும், வார்த்தைகளிலும் நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தீர்கள். நாம் விமானத்தைப் பிடிக்க விரைந்த தருணங்கள், நம் பயணங்கள், நம் விவாதங்கள் இனி நினைவுகள்தான். எனக்கு கனவுகள் கொடுத்தீர்கள்.  இப்போது நீங்கள் இல்லை. ஆனால், கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது! "
 
உங்கள் மாணவன்,
 
ஶ்ரீஜன் பால் சிங் 

அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள் - 2

தலைமை அறிவியல் ஆலோசகர்:
 
(நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்)


* 1992 முதல் 1999 வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பு அளித்தார்.

* 1998-ல் இதயம் சம்பந்தமான டாக்டர். சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவில் கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் 'கலாம்-ராஜூ ஸ்டென்ட்' என பெயரிடப்பட்டது.

* 2012-ல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக வடிவமைத்த டேப்லெட் கணினி 'கலாம்-ராஜூ டேப்லெட்' என்று பெயரிடப்பட்டது. 


 
இந்தியாவின் சக்தி - ப்ரமோஸ்
 

ஆயுதங்கள் உருவாக்கத்தில் இந்தியா கொஞ்சம் வீக்தான். சீனாவே பாராட்டினாலும், அர்ஜுன் டேங்க் இந்திய ராணுவத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட் ப்ராஜெக்ட் மிகவும் தாமதமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், BrahMos பிராஜெக்ட் மட்டும் சூப்பர் சக்ஸஸ். யார் காரணம்? அப்துல் கலாம்.
 

‘ரோஹிணி’ செயற்கைக் கோள் வெற்றிக்குப் பிறகு, Integrated Guided Missile Development திட்டத்தின் மூலம் ஏவுகணை மேல் ஏவுகணை விட்டு இந்தியாவின் சக்தியை உலகுக்கு பறைசாற்றினார் கலாம். ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும் அப்துல் கலாம் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட BrahMos ப்ராஜெக்ட்தான், உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது.
 
 

ரஷ்யாவுடன் இந்தியா இணைந்து BrahMos ஏவுகணையை உருவாக்கலாம்’ என்று அப்துல் கலாம் நினைத்த நொடி, இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையில் முக்கியமான தருணம். ப்ரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தில் கலாம் வகித்த பங்கைத் தெரிந்துகொள்ள ‘ப்ரமோஸ் ஏவுகணையின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஏ. சிவதாணு பிள்ளை எழுதிய ‘The Path Unexplored’ புத்தகத்தைப் படிக்கலாம். இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியதே அப்துல் கலாம்தான்.  
 
 

அதில், சிவதாணு பிள்ளை, அப்துல் கலாம் 1995-ல் தன்னிடம்  க்ரூஸ் ஏவுகணை உருவாக்கத்துக்கான  இந்தியா - ரஷ்யா கூட்டுமுயற்சிக்கு தலைமை செயல் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னார் என்று எழுதியிருக்கிறார். ப்ரமோஸ் உருவாக்கத்தில் பிள்ளை என்ன திட்டத்தைச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்வாராம் கலாம். அதேபோல், கலாம் இந்த ப்ராஜெக்ட் சம்பந்தமாக எந்தக் கோப்புகளை அனுப்பினாலும், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், முதலில் முக்கியத்துவம் கொடுத்து, கையெழுத்திட்டு திருப்பி அனுப்புவாராம்.

இன்று, ப்ரமோஸ் ஏவுகணைதான் உலகிலேயே மிகவேகமான க்ரூஸ் ஏவுகணை. ஏன், உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றுமே சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு இந்தியாதான். ப்ரமோஸ் வெற்றியில் முக்கியப் பங்கு அப்துல் கலாமுக்கு இருக்கிறது.
 
ப்ரமோஸ் சீறிப்பாய்வதைப் பார்ப்பதற்கே கெத்தாக இருக்கும்

 
 
 


 

கலாமின் கனவு இந்தியா 2020!
 
 

'எப்போது பார்த்தாலும் வீண் கனவு கண்டு கொண்டே இருக்காதே! எல்லாம் பகல் கனவு தான்!' இப்படி தான் 'கனவு' என்ற வார்த்தை நம் மனதில் இந்த மனிதர் பேசுவதற்கு முன் இருந்தது. கண்களை மூடிக்கொண்டு காணும் கனவை, கண்களை திறந்து கொண்டும் காண முடியும் என்று புரிய வைத்தவர் அப்துல் கலாம். இன்று இந்தியா 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டும் என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். அவர்கள் அனைவரது பேச்சிலும் 'அப்துல் கலாம் கனவு கண்டது போல் இந்தியா 2020க்குள் வல்லரசாகும்' என்றுதான் மேற்கோள் காணப்படும்.
 

இந்தியாவிற்காக அவர் கண்ட நம்மை காண சொன்ன கனவு மிகப்பெரியது, மிகச்சிறந்தது. ஒருவேளை அவர் இந்திய குடியரசு தலைவர் ஆகாமல் போயிருந்தால் இதே விஷயத்தை ஏதோ ஒரு கல்லூரியின் விழாவில் மாணவர்களிடையே புகுத்தி நமக்குள் இந்தியாவின் வல்லரசு கனவுக்கான விதையை விதைத்திருப்பார்.
 

 
அவர் கண்ட கனவில் முதலாவது, இந்தியாவில் உள்ள மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான். இந்தியாவின் வளர்ச்சியை அளவிடும் அளவுகளான ஜிடிபி மூலம் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி என்பது 1996களில் மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டால் 15வது இடத்தில் இருந்தது. அதனை 2020ல் 4வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கனவு. 
 

தொடர்ந்து உள்ளூர் சந்தைகளை ஊக்குவிப்பது, உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி என்பது நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் நிதித்துறையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தொழிநுட்ப மேம்பாடுகளை கொண்டுவர நிலையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடாக உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்பது தான் அவர் கண்ட முதன்மையான கனவு. மேலைநாடுகளில் இருந்த CAD மற்றும் CAM போன்ற இயந்திரவியலின் புதுமைகளை பற்றி கலாம் ஆரம்பத்தில் இருந்தே ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தார். அவரது சீரிய முயற்சியால் பல கல்லூரிகளில் இந்த பாடங்கள் இடம்பெற்றன.
 
 

இந்தியாவை உணவு பற்றாக்குறை இல்லாத நாடாகவும், விவசாய வளமிக்க நாடாகவும் மாற்ற வேண்டும், இந்தியாவில் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் உணவை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் இந்தியாவில் 40 சதவிகிதம் பேர் வறுமை கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இந்த நிலையை மாற்ற உணவுக்கான வழிவகைகளை செய்து விவசாயத்தை முன்னேற்ற வேண்டும்.
 

உற்பத்தி துறை தான் இந்தியாவின் வருங்காலம் என்று அவர் குடியரசு தலைவராக இருந்தபோது இந்தியா 2020 புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று மேக் இன் இந்தியா திட்டத்தில் அரசு கணித்திருக்கும் அளவுகள் அப்துல் கலாமின் கணிப்புகளுடன் பொருந்துகின்றன என்பது ஆச்சர்யமாக உள்ளது. தற்போது வந்துள்ள திட்டத்தை பல வருடங்களுக்கு முன் கணித்திருக்கிறார் என்றால் அவர் மாமனிதர் தானே!
 

இந்தியாவில் சிறப்பான சாலைகள் இல்லாதது தான் இந்தியாவின் உற்பத்திதுறை வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்பதை கூறி இருந்தார். அதன்படி தான் அன்றைய பிஜேபி அரசு தங்க நாற்கர சாலை திட்டத்தையும், துறைமுகங்களை இணைக்கும் சாலைகளையும் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

இங்குள்ள தொழில்களையும் அதில் பணிபுரியும் பணியாட்களின் திறனையும் அதிகரிக்க சிறப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும் அதன் மூலம் இந்தியாவுக்கு அனைத்து துறைகளிலும் வல்லமைமிக்க மனித வளத்தை அளிக்க முடியும் என்றார். இந்த கனவுகளை இந்திய இளைஞர்களால் எளிதில் சாத்தியப்படுத்த முடியும் என நம்பியவர் கலாம்.
 


 
ஒரு சினிமா நடிகரின் பேச்சையும், ஒரு கிரிக்கெட் வீரர் சொல்லும் குளிர்பானத்தை குடித்துக்கொண்டும் இருந்த இளைய சமுதாயம் 83 வயது இளைஞர் சொன்னால் இந்தியாவை உயர்த்த எண்ண வேண்டுமானாலும் செய்வோம் என மாறியது. இளைஞர்கள் நாட்டின் சொத்துக்கள். அவர்களது சக்தியை சிறப்பாக செயல்படுத்தினால் இந்தியா உலகின் அழிக்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் அச்சமில்லை என்றார்.

அவரது 'கனவு இந்தியா' இன்னும் உருவாகவில்லை. ஆனால் அவர் சொன்ன பாதையில் உருவாகி கொண்டிருக்கிறது. அவர் கனவு கண்ட தேசத்தை அவருக்காக உருவாக்கி தருவது அவர் நம்பிக்கை வைத்த இளைஞர்களின் கடமை. இங்கு ஊரைச் சுற்றும் இளைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகை சுற்றும் செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணைச் சுற்றுவார்கள். இந்தியா 2020-ம் ஆண்டில் அப்துல்கலாம் கண்ட 'கனவு இந்தியா'வாக உருவாகும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் செயலில், கோடிக்கணக்கான அப்துல்கலாம்களை பார்ப்பது மட்டுமே இந்தியாவின் தற்போதைய இலக்கு. 
 
 


கனவு காணுங்கள்! அப்துல் கலாம் மறையவில்லை! இந்தியாவின் வளர்ச்சிக்கான கனவுகள் உள்ளவரை கலாமை அழிக்க முடியாது!
 
 
- டிஜிட்டல் ஃபர்ஸ்ட் டீம், விகடன்
 
(நன்றி: ClaysonsSkitlibrary)

அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்


 
 
அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்  
 

டாக்டர் அப்துல் கலாம் - இந்தியாவின் விஞ்ஞானி

 
முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராணுவம், விண்வெளி, விமானம் உள்ளிட்ட ஆராய்ச்சி துறைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர். ஏவுகணை உருவாக்கம் கண்டுப்பிடிப்புகளில் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. சுமார் 40 ஆண்டுகால ஆராய்ச்சி பணிகளில் பல ஏவுகணைகளை உருவாக்கியுள்ளார். அதில் செயற்கைகோள்களை அனுப்பி பல  சோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

 
 
(நன்றி; தி இந்து) 
 
* ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை தொடங்கினார்.

* திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் 1954-ல் பட்டம் பெற்றார்.  
* சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) விண்வெளி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து, 1960-ம் பட்டம் பெற்றார்.

*  பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விமான அபிவிருத்தி பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு  சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்துக்காக வடிவமைத்துக் கொடுத்தார்.  

* பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த குழுவில் (INCOSPAR) ஒரு அங்கமாகவும் அப்துல் கலாம் இருந்தார்.

ஏவுகணை உருவாக்கம்:

 
* 1969-ம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு(ISRO) மாற்றப்பட்டார். அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுவதற்கான ஏவுகணை (launcher) (எஸ். எல். வி-III) தயாரிக்கும திட்டத்தின் இயக்குனர் ஆனார்.

* 1980-ல் எஸ். எல். வி-III ஏவுகணை 'ரோஹினி' என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக  விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாம் சேர்ந்தது போன்றவை மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. எஸ். எல். வி. திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறுவார்.

* கலாம் 1965-ல் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விண்கலத் திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969-ல், அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

* 1963–64 இல், அவர் நாசாவின் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்ஃபீல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜீனியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான தளம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார்.

* 1970க்கும் 1990க்கும் இடையில் உருவாக்கப்பட்டு ஏவப்பட்ட போலார் எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எல்.வி.3 ஆகிய ஏவுகணை திட்ட முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்தன.

* தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான  பொக்ரான் அணுகுண்டு திட்டத்தைக் காண்பதற்காக முனைய எறிகணை ஆய்வகத்தின் (TBRL) பிரதிநிதியாக அழைக்கப்பட்டார்.

* 1970-ல், எஸ். எல். வி ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோஹிணி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது இஸ்ரோவின் சாதனை!
 
* 1970களில், வெற்றிகரமாக ஏவப்பட்ட எஸ். எல். வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் (ballistic) தயாரிப்புக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வேலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும், பிரதமர் இந்திரா காந்தி தனது அதிகாரத்தின் மூலம்  விண்வெளி திட்டங்களுக்கு ரகசிய நிதி ஒதுக்கினார்.

* அப்துல் கலாமின் ஏவுகணை உருவாக்கும் திறமையால் 1980களில், அவரை மத்திய அரசு  கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் டாக்டர் வி.எஸ். அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும், அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.

என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில்..?