கடந்த திங்கள்கிழமை தனது 92-ஆவது வயதில் காலமான சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மரணத்துக்கு வேறு யார் அஞ்சலி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை, தமிழர்களும் தமிழகமும் அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
சிங்கப்பூரில் தமிழர்கள் கணிசமாக வாழ்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதற்குக் காரணம். இனத்தால் சீனரான லீ குவான் யூ சிங்கப்பூரைத் தனி நாடாக்கி அதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழர்களை அன்னியர்களாக ஒதுக்கி வைத்திருக்கலாம். அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கப் போவதில்லை.
ஆனால், ஆட்சி அதிகாரத்தில் தமிழர்களை இணைத்துக் கொண்டு அமைச்சரவையில் அவர்களுக்கு இடமளித்தது மட்டுமல்ல, தமிழும் சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்று என்று தமிழுக்கு அங்கீகாரம் அளித்தவர் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ!
20-ஆம் நூற்றாண்டின் சரித்திரம் எழுதப்படும்போது, அதில் லீ குவான் யூவுக்கு ஒரு தனி இடம் நிச்சயமாக உண்டு. உலக நாடுகள் பின்பற்றுவதற்கான நிர்வாக வழிமுறைகளை நிறுவிய பெருமையும், குறைந்தபட்ச சர்வாதிகாரத்துடன் கூடிய ஜனநாயக அமைப்பை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பாங்கும், முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் மக்கள் நலனையும் முன்னிலைப்படுத்த முடியும் என்கிற சாதனையும் லீ குவான் யூவின் தனிச் சிறப்புகள்.
ஒரு மிகச் சிறிய "சிட்டி ஸ்டேட்' என்று அழைக்கப்படும் நகர தேசத்தை நிர்வாகம் செய்தவர் என்றாலும்கூட, காலனிய காலகட்டத்திற்குப் பிந்தைய ஆசியாவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் லீ குவான் யூ. இத்தனைக்கும் சிங்கப்பூர் என்கிற அந்தக் குட்டியூண்டு தேசத்தில் அதன் தேவைக்கேற்ற அளவுக்கு தண்ணீர் கிடையாது. சுயதேவையை நிறைவு செய்யும் அளவிலான உணவு உற்பத்தி இல்லை. மின்சாரத்திற்கு அண்டை நாடுகளைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் இருந்தும் தட்டுப்பாடில்லாத தண்ணீர், தடையற்ற மின்சாரம், தேவைக்கேற்ற உணவு ஆகியவற்றைத் தனது நாட்டு மக்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.
1965-இல்தான் சிங்கப்பூர் என்கிற நாடு மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. அதுவரை இனக் கலவரங்களாலும் சர்சைகளாலும் பிரிந்து கிடந்த சிங்கப்பூரை ஒன்று படுத்தியதும் ஒழுங்குபடுத்தியதும் லீ குவான் யூதான். சீனர்களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே இருந்த கசப்புணர்வைப் போக்க தமிழர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட அவரது ராஜதந்திரம்தான் இன்றுவரை சிங்கப்பூர் எந்தவித இனக் கலவரமும் இல்லாமல் இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழும் நல்லிணக்க சமுதாயமாகத் திகழ்வதற்கு அடிப்படைக் காரணம்.
லீ குவான் யூவின் மற்றொரு சாதனை, அதுவரை பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சின்னஞ்சிறு ஆசிய நாடாக இருந்த சிங்கப்பூரை உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றியது. லீயின் "குறைந்தபட்ச சர்வாதிகாரம்' என்கிற நிர்வாக உத்தி உலகின் பல தலைவர்களையும் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, கம்யூனிச நாடான சீனா ஒரு கட்டத்தில் பொருளாதாரத் தேக்க நிலைமையில் சிக்கியபோது, அப்போதைய சீன அதிபர் டென் ஜியாபிங்கின் மனதைக் கவர்ந்த தலைவர் லீ குவான் யூதான்.
சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் அடையும் அசுர வளர்ச்சியும், ஒரு கட்சி ஆட்சி முறையை நிலைநிறுத்தும் அரசியல் வழிமுறையும் லீ குவான் யூவின் சிங்கப்பூரிலிருந்து டென் ஜியாபிங் கற்றுக்கொண்ட பாடங்கள். இன்று சீனா உலக வல்லரசாக வலம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் லீயின் அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அந்நாடு பின்பற்றியதுதான்.
1990-இல் தனது 67-வது வயதில் பதவி விலகிய நிகழ்வு,
உலக சரித்திரத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம்.
சொல்லப்போனால், ஏறத்தாழ சர்வாதிகாரி போன்றவர் லீ குவான் யூ. ஆனாலும், இளைய தலைமுறைக்கு வழிவிட்டுப் பதவி விலகியபோது அவர் நிஜமான ஜனநாயகவாதியாக மாறிவிட்டார். தான் பதவி விலகி இப்போதைய பிரதமரான தனது மகன் லீ சியன் லூங்கைத் தனது வாரிசாக அறிவித்துப் பதவியில் அமர்த்தினாரா என்றால் அதுவும் இல்லை. லீ குவான் யூவைத் தொடர்ந்து பிரதமரானது கோகோக் டோங்க். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்ற பிறகுதான் 2004-இல் லீ சியன் லூங் பிரதமரானார்.
லீயைப் பொருத்தவரை, தனிப்பெரும் தலைவராக அவர் திகழ்ந்தார் என்பது மட்டுமல்லாமல், தம் அளவிலும் தனது அரசு நிர்வாகத்திலும் லஞ்சம், முறைகேடுகள் போன்றவை இடம் பெறாமல் நேர்மையான அரசு நிர்வாகத்தை அவரால் உறுதிப்படுத்த முடிந்தது.
லீ குவான் யூவிற்குப் பிறகு சிங்கப்பூர் எப்படி இருக்கும், மாறிவரும் உலகச் சூழலில் சிங்கப்பூர் முதன்மையான பொருளாதாரமாகத் தாக்குப் பிடிக்குமா என்பதெல்லாம் காலத்தின் கையில்தான் இருக்கிறது.
சிங்கப்பூரில் இப்போதைய ஆட்சிக்கு எதிராக முணுமுணுப்பு எழத் தொடங்கி இருக்கிறது. உள்ளூர்வாசிகளுக்கு வேலையின்மை பிரச்னை அதிகரித்திருக்கிறது. லீ குவான் யூ உருவாக்கிய "குறைந்தபட்ச சர்வாதிகார ஆட்சி முறை' இன்னும் எத்தனை காலம் தொடரும் என்பதேகூட விவாதிக்கப்படுகிறது.
ஆனால், சிங்கப்பூரே இல்லாமல் போனாலும்கூட, உலக சரித்திரத்தில் லீ குவான் யூ என்கிற ஆளுமையின் பெருமை நிலைத்து நிற்கும். அதுதான் அவரது தனிச் சிறப்பு!
No comments:
Post a Comment