உங்கள் உணவில் விஷம்!
பூச்சிக்கொல்லி பயங்கரம்
ஆர்.குமரேசன், ஓவியங்கள்: ஹாசிப் கான்
இந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் 'பூச்சிக்கொல்லி...’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது.
தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான். இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி. ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள். வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை. பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!
கோவில்பட்டியில் உள்ள மண்வளப் பரிசோதனை நிலையத்தின் வேளாண் அலுவலரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம் இது தொடர்பாக விவரிப்பவை அனைத்தும் அதிரவைக்கும் உண்மைகள்...
''மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிக்கொல்லிகளும் ஒரு காரணம். பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சிவிடுகின்றன. இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன. 100 மில்லி பூச்சிக்கொல்லியைக் குடித்தால், உடனே மரணம். அதே பூச்சிக்கொல்லி பல்வேறு காரணிகள் வழியாக, மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போது, உடனடி மரணம் நிகழாவிட்டாலும் உள்உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போது, ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன. இதையெல்லாம்விட தற்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது!'' என்கிறார்.
அது என்ன ஐந்தாம் தலைமுறை?
தலைமுறை 5:
'நியோ நிக்கோடினாய்டு’ (neo nicotinoid) என அறிமுகம் ஆன ஐந்தாம் தலைமுறை பூச்சுக்கொல்லிகளால் பூச்சிகள் ஆடிப்போயின. பூச்சிகளை முட்டை பொறிக்கவிடாமல் செய்வது, வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பது, அதன் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்குவது எனப் பல்வேறு வகைகளில் இவை செயல்படுகின்றன. இத்தகைய கொடிய நஞ்சு நிறைந்த ஐந்தாம் தலைமுறை பூச்சிமருந்தைத் தெளித்து விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை உட்கொள்ளும் போது, மனிதர்களுக்குள்ளும் இந்த நஞ்சு சென்று அதே பாதிப்பைக் கொடுக்கிறது. உதாரணமாக ஐந்தாம் தலைமுறை நஞ்சுகள் அறிமுகம் ஆன பிறகு, தேன் எடுக்கச் செல்லும் தேனீக்கள் பூக்களின் வாசனை மற்றும் தாங்கள் பறந்து வந்த பாதையை மறந்துவிடுகின்றன. தங்கள் கூட்டுக்குச் சென்று சேர முடியாமல் இடையிலேயே இறந்துவிடுகின்றன. இதனால் தேனீக்கள் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவருகிறது. இதனால் இந்த வகை பூச்சிக்கொல்லிக்கு, ஐரோப்பிய யூனியன் 2012ம் ஆண்டு தடை விதித்திருக்கிறது.''
- இப்படி வல்லுநர் நீ.செல்வம் விவரிப்பதைக் கேட்க... கேட்க, நாம் ஒட்டுமொத்தமாக ஒரு விஷச் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருக் கிறோமோ என நடுக்கமாக இருக்கிறது. முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேனீக்கள், உயிர்ச்சூழல் கண்ணியில் மிகவும் முக்கியமான ஓர் உயிரினம். இந்த உலகில் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகை தாவரங்கள் இருக்கின்றன. இவற்றின் உற்பத்தி அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாகவே நடைபெறுகிறது. இந்த அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது பெரும்பாலும் தேனீக்கள் மூலம்தான். தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை இல்லை; தாவரங்கள் இல்லை; உணவு இல்லை; பிறகு மனிதகுலமே இல்லை. இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறார்.
'தேனீக்கள் இந்த உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்தால், தாவர இனமே அழியும். அதில் இருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்துபோகும்’ என்பது அவரது பகீர் எச்சரிக்கை!
இப்போது நமக்கு ஒரு நியாயமான சந்தேகம் எழுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து உயிர்வாழும் ஆற்றலை பூச்சிகள் பெற்றுவிடுகின்றன என்றால், மனிதர்களும் இத்தகைய எதிர்ப்பாற்றலைப் பெற வேண்டும் அல்லவா? என்ன விஷயம் எனில், மனிதர்களின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள், 70 ஆண்டுகள். ஆனால், பூச்சிகளின் ஆயுட்காலம் ஒருசில வாரங்கள்தான். ஒரே ஒரு வருடத்தில் பூச்சிகள் 20 தலைமுறைகளைக் கடந்திருக்கும். ஐந்து ஆண்டுகளில் 100 தலைமுறைகளைக் கடந்துவிடும். இதனால் பூச்சிகள், இந்தப் பூச்சிமருந்துகளை எதிர்கொள்ளும் ஆற்றலை வெகுவிரைவில் பெற்றுவிடுகின்றன. மனிதர்களால் அது முடியாமல் பாதிப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த 'அல்சைமர்’ என்ற மறதி நோய் இன்றைக்கு 60 வயதைக் கடந்த பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடுகிறது. பலர் ஏதோ ஒரு வேளையாகச் சென்றுவிட்டு, 'எதற்காக இங்கு வந்தோம்?’ என இடையில் நின்று யோசிப்பதைப் பார்க்கலாம். ஐந்தாம் தலைமுறை நஞ்சுகளால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதன் பக்கவிளைவு இது. மனித உடலுக்குள் செல்லும் நஞ்சுகளைச் செயல் இழக்கச் செய்யும் பணியைச் செய்வது ஈரல். அதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? தினமும் உணவின் மூலமாக உடலுக்குள் நஞ்சு தொடர்ந்து செல்லும்போது, ஈரலின் செயல்படும் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகச் சொல்லும் மருத்துவர்கள், இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி வேகமாகக் குறைந்து, உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடுகிறது என்கிறார்கள்.
'எல்லாம் சரிதான். ஆனால், பூச்சிக்கொல்லி தெளிக்காவிட்டால் பயிர்களை பூச்சிகள் கபளீகரம் செய்துவிடுமே... அதற்கு என்ன செய்வது?’ எனக் கேள்வி எழும். ஆனால், பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே பூச்சி தாக்குதலைத் தடுக்க முடியும்.
''முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதுபோல, பூச்சிகளைக்கொண்டே பூச்சிகளை அழிக்க முடியும். சில பூச்சிகள் பயிர்களை உண்பதுபோல, சில பூச்சிகளுக்கு மற்ற பூச்சிகள்தான் உணவு. இவற்றை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் என்கிறார்கள். இந்த நன்மை செய்யும் பூச்சிகளை நமது வயலுக்கு வரவழைத்துவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் பாடு திண்டாட்டமாகி விடும்!'' என்கிறார் வல்லுநர் நீ.செல்வம். இந்த இடத்தில் நம்மாழ்வார் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
'ஒரு விளைநிலத்தில் 100 வகைப் பூச்சிகள் இருக்கின்றன என்றால், அதில் 10 பூச்சிகள் நமக்கு எதிரிகளாக இருக்கலாம். 90 பூச்சிகள் நமக்கு நண்பர்கள். அந்த 10 பூச்சிகளை அழிக்கிறோம் என 90 பூச்சிகளையும் அழித்ததன் பாவத்தை நாம் இன்று அனுபவிக்கிறோம். கையில் தொடக்கூட அஞ்சும் எண்டோசல்பானையும், மோனோகுரோட்டோபாஸையும் சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல் பயிர்கள் மீது தெளித்துவிட்டு, அவை அனைத்து உயிர்களையும் கொன்ற பின், விளைச்சலில் ஊடுருவிக் கலந்த பின், அதை மேலோட்டமாகக் கழுவிவிட்டு தின்பதன் விளைவுதான் இத்தனை நோய்கள். ஒரு காலத்தில் வயல்வெளி முழுக்க தட்டான் பூச்சிகள் பறந்துகொண்டிருக்கும். உயிர்க்கொல்லி மருந்துகளினால் இன்று தட்டான் பூச்சிகள் காணாமல்போய்விட்டன. தட்டான் பூச்சிகள் உணவாக அதிகம் உண்டது கொசு முட்டைகளைத்தான். இன்றைக்கு தட்டான் பூச்சிகளை அழித்து, கொசுக்களைப் பெருகச் செய்து, அதில் இருந்து தப்பிக்க மின்விசிறியைப் போடுகிறோம். அதற்குத் தேவையான மின்சாரத்துக்கு நிலக்கரியை எரிக்கிறோம்; அணு உலை அமைக்கிறோம். ஆனால், எந்த மருந்தாலும் இன்னும் கொசுவை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை!’ என மனம் வெதும்பிச் சொன்னார்.
இப்போது நம் முன்னே இருப்பது 'இயற்கையா... செயற்கையா?’ என்ற எளிய கேள்வி. உயிர்போகும் ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து, ஆகக்கூடிய அனைத்து வழிகளிலும் ரசாயனங்களைத் தவிர்ப்பதும், இயற்கைக்கு இசைவான வாழ்க்கைமுறைக்குத் திரும்புவதும்தான் இதற்கு சாத்தியமான, நிரந்தரமான தீர்வு!
பூச்சிக்கொல்லிகளும் விவசாயிகளும்!
ஒரே பூச்சிக்கொல்லியை தொடர்ந்து தெளிக்கும்போது பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்கின்றன. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், பூச்சிகளை அழிக்க ஒவ்வொரு முறையும் மருந்து தெளிக்கும் அளவை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். எந்தெந்தப் பூச்சிக்கொல்லியை எந்தெந்தப் பயிர்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. உதாரணமாக, காய்கறிப் பயிர்களில் தடைசெய்யப்பட்ட 'மோனோகுரோட்டோபாஸ்’ (Monocrotophos) என்ற பூச்சிக்கொல்லியை மற்ற பயிர்களில் பயன்படுத்திப் பழகிவிட்ட விவசாயிகள், காய்கறி பயிர்களுக்கும் தெளிக்கிறார்கள். ஒரு லிட்டர் தண்ணீருக்கு எத்தனை மில்லி பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையையும் பின்பற்றுவது இல்லை.
கத்திரி, தக்காளியைத் தாக்கும் 'வெள்ளை ஈ’-க்கு எதிரான பூச்சிக்கொல்லியின் பரிந்துரை அளவு 20 கிராம். ஆனால், விவசாயிகள் அதிகபட்சமாக 100 கிராம் வரைகூட பயன்படுத்துகிறார்கள். இப்படிப் பயன்படுத்தும் ரசாயனங்களின் நச்சுத்தன்மை, நீண்ட நாட்களுக்கு அந்தப் பயிர்களிலேயே இருக்கும். உதாரணமாக, தென்னை மரங்களில் வரும் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த மரத்தின் வேரில் மோனோகுரோட்டோபாஸ் மருந்தைப் புகுத்துவார்கள். அப்படி மருந்து புகட்டிய நாளில் இருந்து குறைந்தது 15 நாட்களுக்கு அந்த மரத்தின் இளநீரைப் பறிக்கக் கூடாது. நடைமுறையில் ஒருபக்கம் மருந்தைக் கொடுத்துக்கொண்டே, மறுபக்கம் இளநீரையும் பறிக்கின்றனர். இதனால் நஞ்சு, இளநீரின் வழியே அதைக் குடிப்பவர்களின் உடலுக்குள் நேரடியாகச் சென்று கலக்கிறது. இதைத்தான் காய்கறிகளிலும் பயன்படுத்துகின்றனர். கத்திரிக்காயில் முதல் நாள் மருந்து தெளிக்கிறார்கள். அடுத்த நாள், அது கடைக்கு வந்துவிடுகிறது. அந்தக் காயில் உள்ள நஞ்சு எங்கே போகும்? நம் வயிற்றுக்குள்தான்!
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
பூச்சிமருந்துகளின் நச்சுப்பிடியில் இருந்து இந்தப் பூவுலகைக் காப்பாற்றவேண்டிய நெருக்கடி நம் முன்பு இருக்கிறது. இதில் அரசாங்கத்தின் முக்கியமான பாத்திரம் என்ன? வேளாண் பொருளியல் நிபுணர் பாமயன் சொல்லும் ஆலோசனை இதோ...
''முதலில் உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை, நம் நாட்டில் விற்பதை முழுமையாகத் தடுக்க வேண்டும். அவை தடை செய்யப்பட்டுள்ளன என்றால், மனிதகுலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்றுதானே பொருள். அதைப் பயன்படுத்த அனுமதிப்பது மிகவும் அபாயகரமானது. எண்டோசல்பான் போன்ற பல பூச்சிமருந்துகள் இப்படி இங்கே விற்கப்படுகின்றன. அதேபோல பூச்சிமருந்து பயன்படுத்துவது குறித்த குறைந்தப்பட்ச விழிப்பு உணர்வையாவது நமது விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பயிருக்குத் தண்ணீர்ப் பாய்ச்சுவதைப்போல பூச்சிமருந்து தெளிப்பது நமக்கு நாமே விஷம் வைத்துக்கொள்வதற்கு சமம். எனினும் இது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே.
நிரந்தரத் தீர்வு... ஒட்டுமொத்த மாநிலமும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதுதான். அரசாங்கமே கொள்கை முடிவுகள் எடுத்து மாநிலம் முழுவதும் இயற்கை வழி வேளாண் முறைகளை அறிமுகப்படுத்தி, பயிற்சி தந்து, ஊக்குவிக்க வேண்டும். இப்படிச் செய்வது இயலாத செயல் அல்ல. சிக்கிம் மாநில அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறது. அங்கு பெரும்பகுதி நிலத்தில் இயற்கை விவசாயம்தான். இப்போது கேரளாவும் இந்தப் பட்டியலில் இணைந்து, அங்கும் இயற்கை விவசாயக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் இதில் இணைய வேண்டும். அரசாங்கமே முன்னெடுத்துச் செய்தால் ஒருசில ஆண்டுகளில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக் காண முடியும். இயற்கை விவசாயத்துக்கு மாறினால் விஷம் இல்லாத காய்கறிகள் மட்டும் அல்ல... நம் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறை, உடல் நலம், பொருளாதாரம் அனைத்துமே மேம்பாடு அடையும்!''
40 ஆண்டு நஞ்சு!
2010-ம் ஆண்டு, 'தேசிய அளவில் பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கண்காணிக்கும்’ (Monitoring of Pesticide Residues at National Level) ஆய்வு ஒன்று இந்தியாவில் நடந்தது. அதில் நாம் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், முட்டைகள், பால் போன்ற அனைத்து உணவுப்பொருட்களிலும் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள், அபாய வரம்பில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. நிலத்தடி நீரிலும் பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் கலந்துவிட்டன. அதே 2010-ம் ஆண்டு புனேயில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம், கோலா குளிர்பானம் ஒன்றில் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் கலந்திருப்பதை ஆய்வில் கண்டுபிடித்தது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் குளிர்பானத்தில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட ரசாயனம் டி.டி.டீ. என்ன கொடுமை எனில், இந்தியாவில் 1970-களிலேயே டி.டி.டீ தடை செய்யப்பட்டுவிட்டது. அதற்கு முன்பு பயன்படுத்திய நஞ்சின் எச்சம் நிலத்தடி நீரில் அப்படியே இருந்திருக்கிறது. அதுதான் குளிர்பானத் தயாரிப்புக்காக நிலத்தடி நீரை உறிஞ்சும்போது, தண்ணீருடன் கலந்திருந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள்... கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அதன் எச்சம் நீரில் கலந்திருக்கிறது எனும்போது, உணவுப் பயிர்களில் நஞ்சைத் தெளித்து அடுத்த நாளே நாம் சாப்பிடுகிறோம். நன்றாகக் கழுவிவிட்டுச் சமைத்தால் பூச்சிமருந்து போய்விடும் என்றும் நினைக்கிறோம். கழுவினால் போய்விடுவதற்கு, அது தூசி அல்ல... விஷம்!
தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
எல்லா காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களிலும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண மக்கள் என்னதான் செய்வது? இவற்றில் இருந்து எந்த அளவுக்கு தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும்? - சித்த மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் ஆலோசனை என்ன?
''பளபளப்பான காய்கறிகளைத் தேடி வாங்குவதுதான் இன்றைய நுகர்வோரின் மனநிலை. காய்கறி பளபளப்பாக இருக்கிறது என்றால், அதில் ரசாயன மருந்து இருக்கிறது என்று அர்த்தம். உண்மையில் வாடிய சொத்தை காய்கறிகளிலும் கீரைகளிலும் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இருக்காது. அவற்றை வாங்கி, சொத்தைப் பகுதியை நீக்கிவிட்டு மீதியைப் பயன்படுத்தலாம். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை வழி விவசாய முறைக்கு மாறிவருகிறார்கள். பெருநகரங்களில்கூட இன்று ஆர்கானிக் பொருட்கள் கிடைக்கின்றன. நாம்தான் அவற்றைத் தேடிப்பிடித்து வாங்க வேண்டும். 'ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கின்றன என்பது தெரியாதே?’ எனப் பலர் சொல்லக்கூடும். பிடித்த திரைப்படம் எந்தத் தியேட்டரில் ஓடுகிறது, என்ன டிசைன் துணி எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை ஆர்வமாகத் தேடித் தெரிந்துகொள்வதைப்போல, இதையும் ஆர்வத்துடன் அணுகினால் எளிதில் கிடைத்துவிடும்.
இதுபோன்ற ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். அதற்குக் காரணம் உற்பத்திக் குறைவே. அதிகம் பேர் இயற்கைப் பொருட்களுக்கு மாறும்போது தேவை அதிகரிக்கும்; விவசாயமும் அதிகரிக்கும்; விலையும் குறையும். ஆகவே, விலை குறைய வேண்டும் என்றாலே அதிகம் பேர் ஆர்கானிக் பொருட்களை வாங்கும்போதுதான் அது நடக்கும்.
நச்சு நிறைந்ததாக மாறியிருக்கும் நமது இன்றைய சூழலை, ஆரோக்கியமான உணவின் மூலம்தான் மாற்ற முடியும். அந்த நல்ல உணவைப் பெறுவதற்கான தடைகளை நம் முயற்சியில் நாம்தான் கடந்தாக வேண்டும்!''
No comments:
Post a Comment