Sunday, October 19, 2014

ராஜேந்திர சோழன் 1000


வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக்கேட்டோம்...

''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை.
கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது பட்டாபிஷேக விழாவைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டிருக்கிறார். நானும் கலந்துகொள்கிறேன். இந்த மாதிரியான விழாக்கள், தமிழர் சரித்திரம் மீது ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு உதவி செய்யும். தமிழ், மேலும் வாழும்!''

''ராஜேந்திர சோழனின் தீரம் எத்தகையது?''

'' 'அலைகடல் மீது பல கலம் செலுத்தி’ என்றுதான் அவன் மெய்கீர்த்தி சொல்கிறது. கடலின் தன்மை தெரிந்து, காற்றின் தன்மை தெரிந்து, இருட்டில் சுடர் மூலம் வழி தெரிந்து, ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து, நூற்றுக்கணக்கான நாவாய்கள் அதாவது மிகப் பெரிய மரக்கலங்களோடு அவன் கிழக்கே உள்ள நாடுகளுக்குப் போயிருக்கிறான். இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேசியா... எனப் பல நாடுகளில் அவன் கால்கள் பதித்திருக்கிறான். போரில் வென்று பெரும்பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறான்.

சோழர்களுக்கு நடு நாடு, தொண்டை நாடு, தாண்டி கீழைச் சாளுக்கிய நாட்டோடு மிக நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதாவது ஆந்திர மக்களோடு, தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், மேலைச் சாளுக்கியம் என்கிற கன்னட மக்களோடுதான் அவர்கள் எப்போதுமே முரண்பட்டு இருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியத்தை கன்னடர்கள் கபளீகரம் செய்யாதிருக்க, மணவினை ஏற்பாடு செய்து கீழைச் சாளுக்கியத்துக்கு மிகப் பெரிய படை அனுப்பவேண்டிய நிர்பந்தம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டது.
கீழைச் சாளுக்கியத்துக்கு மேல் இருந்து கலிங்க தேசமும் ஒட்ட தேசமும் அவனுக்குத் தொந்தரவு செய்ததால் அதைத் தண்டிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அவ்வளவு தொலைவு போய்விட்டதால் இன்னும் சற்று நகர்ந்து, வங்காளத்தில் புகுந்து மிகப் பெரிய கங்கை நதியையும், படகுகளையும், முகத்துவாரத்தையும் அவன் பார்த்து வியந்திருக்கிறான். யானைகள் வைத்து பாலம் கட்டி, அதன் மீது குதிரைகள் ஏற்றி மறுகரைக்குப் போயிருக் கிறான். இடைவிடாது மழை பெய்யும் அசாம் வரைக்கும் அவன் போயிருக்க வேண்டும்.

அங்கு இருந்த பெண்டிர், பண்டாரங்களை மட்டும் அல்ல... கோயில் சிலைகளையும் பெயர்த்து எடுத்து வந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பல சிலைகளை என்ன காரணத்தினாலோ கங்கை கொண்ட சோழபுரத்தில் வைக்காமல், அதன் அருகே செங்கமேடு என்ற கிராமத்தில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. எந்த வழிபாடும் இல்லாமல் இருக்கின்றன!''

''ராஜேந்திர சோழனின் சொந்த வாழ்க்கையில் என்ன செய்தி இருக்கிறது?''

''அவனுக்கு மனைவியர் பலர். அதில் வீரமா தேவி என்பவள் மிக நெருக்கம். ராஜேந்திர சோழன் தன் 84-ம் வயதில் மரணமடைந்தபோது அவளும் உடன்கட்டை ஏறினாள். ராஜேந்திர சோழன் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற தேவரடியாரை நேசித்தான். தேவரடியார் என்று அப்போது அழைக்கப்பட்டவர்கள், தங்களை கோயிலுக்கு எனத் தீர்மானம் செய்தவர்கள்; நித்யசுமங்கலிகள். அவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது ஒரு வைப்பாட்டி நிலையில்தான் இருக்கும். ஆனால், பரவையின் அறிவிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு, ராஜேந்திர சோழன் அவளை அவ்விதம் நடத்தாமல், தன் தேரில் ஏற்றி திருவாரூர் முழுவதும் சுற்றி வந்தான். அவள் விரும்பியதால் செங்கல்லால் அமைந்த திருவாரூர் கோயிலைக் கருங்கல்லால் உருவாக்கி, அதன் மீது தங்கத் தகடு வேய்ந்து, அவளை முதன்முதலில் சந்தித்த இடத்தில் ஒரு கல்வெட்டு பொறித்திருக்கிறான். அவள் உயரத்துக்கு ஒரு வெண்கலக் குத்துவிளக்குச் செய்யச் சொல்லி அதைக் கருவறையில் வைத்து ஏற்றியிருக்கிறான். இன்று இருக்கும் விளக்கும் அவன் கொடுத்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது!

இதே விதமாக ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் அனுக்கிக்கு... அதாவது காதல் தோழிக்கு ஒரு பள்ளிப்படை கோயில் எழுப்பியிருக்கிறான். அவளுக்கு பஞ்சவன் மாதேவி என்று பெயர். பஞ்சவன் மாதேவி பட்டமகிஷியும் அல்ல; மனைவியும் அல்ல; அனுக்கி. அதாவது, கேர்ள் ஃப்ரெண்ட்போல. ஆனால், அவள் ராஜேந்திரனால் அங்கீகரிக்கப்பட்டு, தாய் எனப் போற்றியிருக்கிறான். அந்தப் பள்ளிப்படை கோயில் இன்றளவும் நன்றாக இருக்கிறது!''

''நாட்டின் நிர்வாகம் எப்படி இருந்தது?''

''மிகச் சிறப்பாக இருந்தது. விவசாயத் தொழில்கள் மிக அற்புதமாக நடைபெற்றன. ஒரு காசுக்கு 150 வாழைப்பழம். ஒரு பொற்காசுக்கு இரண்டு பசு மாடுகள், ஓர் எருமை. ஒரு பொற்காசுக்கு ஆழாக்கு ஏலக்காய் என வியாபாரங்கள் நடந்திருக்கின்றன. பசு சல்லிசாகக் கிடைக்கும். ஆனால், ஏலக்காய் கேரளத்தில் இருந்து வரவேண்டும். அதனால் விலை அதிகம். கம்மாளர்களுக்கும் சிற்பிகளுக்கும் உலோகத் தச்சர்களுக்கும் மரத் தச்சர்களுக்கும் மிகப் பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் நல்லது கெட்டதுக்கு சங்கு ஊதிக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும், சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும், செருப்பு அணிந்துகொள்ளவும், பல்லக்கில் ஏறவும், தோளில் துணி போத்திக்கொள்ளவும், தலைப்பாகை அணியவும், பூணூல் அணிந்துகொள்ளவும் ராஜேந்திர சோழன் உரிமை கொடுத்திருக்கிறான். அளவான வரி, அனைவருக்கும் அத்தியாவசிய வசதிகள், கரை புரண்டோடிய செல்வம்... என வளமும் நலமுமாக இருந்தது சோழ சாம்ராஜ்ஜியம்!''

''இப்போது அந்தச் செல்வங்கள் எல்லாம் எங்கே?''

''400 வருட பகைமையைத் தீர்த்துக்கொள்ள, பாண்டியர்கள் படையெடுத்து வந்து சோழர்களைத் தாக்கி ஒரு தூணும் நிற்கவொட்டாது இடித்து, கோவேறு கழுதை பூட்டி, பேய் கடுகு விதைத்து ஊரை நாசம் செய்தார்கள். பொன் பொருட்களை வாரிக்கொண்டு போனார்கள். அவை அடுத்த தலைமுறையிலேயே டெல்லியில் இருந்து வந்த இஸ்லாமிய தளபதியால் கொள்ளையடிக்கப் பட்டன. 36 யானைகள் முழுவதும் பொன், பொருட்கள் டெல்லிக்குக் கொண்டுபோகப்பட்டன. டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களை அடுத்த 120 வருடங்களில் ஆங்கிலேயர்கள் தாக்கி, அந்தப் பொன் பொருட்களை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் பல சாலைகள், கட்டடங்கள் இந்தப் பொற்காசுகளால் நிர்மாணிக்கப்பட்டவை; தமிழக செல்வத்தால் வளர்ந்தவை!''

''பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் ஏன் பகை?''

''ஓர் இனம் மற்ற இனத்தால் அழிக்கப்படாது. எப்போதுமே ஓர் இனம் இரண்டாகப் பிரிந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். தமிழ் பேசும் பாண்டியர்களைக் கடுமையாகத் தாக்கி தமிழ் பேசும் சோழர்கள் துன்புறுத்தினார்கள். கன்னியாகுமரி வரை துரத்தினார்கள். பனங்காட்டுக்குள் வாழச் செய்தார்கள். அதே பாண்டியர்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வெஞ்சினத்தோடு, சோழர்களின் பல்வேறு பெருமைகளை அழித்தார்கள். மிகச் சிறந்த தமிழர் நாகரிகம் ஒன்று 10 சதவிகிதம் மட்டும்தான் பார்க்க, கேட்கக் கிடைத்தன!
இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான் என்று மனம் பதறுகிறது. 'இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு, அங்கே அந்தச் சிறிய கிராமத்தில் இறந்துபோனாயே... ஏனப்பா?’ என்று அலறத் தோன்றுகிறது!''

- கம்மியக் குரலில் முடிக்கிறார் பாலகுமாரன்.

No comments: