Sunday, September 19, 2021

யூரோ டூர் - 3 | புரட்சிகளில் தொடங்கிய ஐரோப்பாவின் எழுச்சி… ஏகாதிபத்திய நாடுகள் உருவானது எப்படி?!

 ஐரோப்பாவின் மறுமலர்ச்சி ஐரோப்பியர் வாழ்விலும் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தது. தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சுதந்திரமாக சிந்திக்கத் தொடங்கிய ஐரோப்பியர்கள் தம் வாழ்க்கைத் தரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல ஒரு நவீன ஐரோப்பாவை கனவு கண்டார்கள். கனவுகள் கைகூட காரியத்தில் இறங்கியதன் விளைவாக வெடித்தது பிரெஞ்சு புரட்சி.

ஐரோப்பிய மலர்ச்சிக்கு வித்திட்ட பிரெஞ்சு புரட்சி!

1789-ல் தொடங்கி 1799-களின் பிற்பகுதியில் நெப்போலியன் போனபார்ட்டின் வீழ்ச்சியுடன் முடிவடைந்த பிரெஞ்சு புரட்சி நவீன ஐரோப்பிய எழுச்சியின் முதல் புள்ளி. ஐரோப்பாவின் அரசியல், கலாசாரம், பண்பாடு என எல்லாவற்றையும் மாற்றி, மன்னராட்சிக்கு முடிவு கட்டி மக்களாட்சிக்கு அடித்தளம் போட்ட ஒரு தரமான சம்பவம் பிரெஞ்சு புரட்சி.

ஒரு நாட்டின் தலைமை சரியில்லை என்று மக்கள் ஒன்று கூடி வெகுண்டெழுந்தால் அது முடிசூடிய மன்னனாக இருந்தாலும் குடிகளால் தூக்கி எறியப்படுவார் என்ற வலுவான அரசியல் பாடத்தை உலகுக்கு சொல்லிச் சென்ற வரலாற்றின் முக்கிய நிகழ்வு. அக்காலகட்டத்தில் பிரான்சை ஆண்ட மன்னன் 16-ம் லூயி மக்களின் நலனின் அக்கறை செலுத்தாது, கத்தோலிக்க திருச்சபைக்கும், பிரபுக்களுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்ததன் விளைவு திருச்சபைகளின் கைகள் ஓங்கி இருந்தது. அதிக வரிச் சுமை, கடுமையான கட்டுப்பாடுகள் என மக்கள் முடக்கப்பட்டனர். எப்போதும் கீரியும் பாம்புமாக சண்டை போட்டுக்கொள்ளும் இங்கிலாந்துக்கு எதிராக அப்போது அமெரிக்கா போர் புரிந்து கொண்டிருந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல ஆயுத மற்றும் நிதியுதவிகளை அமெரிக்காவுக்கு வழங்கிய பிரான்ஸ் முடிவில் பெரிய நிதி நெருக்கடிக்கு ஆளானது. அதன் சுமையை மக்கள் மீது வரி வடிவில் சுமத்த, பொறுத்ததுபோதும் என பொங்கியெழுந்ததன் விளைவு பிரெஞ்சு புரட்சியாக வெடித்தது

போராட்டங்கள், சண்டைகள், பெரும் வன்முறைகள், படுகொலைகள், அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் எனப் பிரான்சில் நிகழ்ந்த அமளி துமளிகளை அடுத்து செப்டம்பர் 1792-ல் பிரான்சு ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. தேசியவாதம் ஒரு புரட்சிகரமான கூற்றாக உருவானது. பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயிக்கும் அவரது மனைவி மேரி அன்டோனெட்டுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மக்களால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் வந்த குடியரசின் புதிய ஆட்சியாளர்களுக்கிடையே நிகழ்ந்த அரசியல் அதிகாரப் போட்டிகளின் விளைவாக 1793-ல் மேக்சிமிலியன் ரோபெஸ்பியர் எனும் சர்வாதிகாரியின் பிடியில் சிக்கியது பிரான்ஸ்.

1794-ல் ரோபெஸ்பியர் கொல்லப்பட்ட பின் டைரக்டரேட் என்ற அமைப்பு பிரான்சை ஆண்டது. அதன் பின்னர் நெப்போலியன் போனபார்ட் ஆட்சியைக் கைப்பற்றி சில ஆண்டுகளில் தன்னைத்தானே பிரான்சின் பேரரசராக அறிவித்துக் கொண்டார். 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவின் பெரும்பகுதியை கைப்பற்றிய இவர் பிரெஞ்சு புரட்சியின் போது பிரெஞ்சு ராணுவத்தின் படை வரிசையில் (military ranks) வேகமாக உயர்ந்த ஒரு திறமையான, புத்திசாலியான ராணுவ வீரன். ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு கூட்டணிகளுக்கு எதிராக வெற்றிகரமாக போரை நடத்தி தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். ஆனால், 1812-ல் ரஷ்யாவில் கால்வைக்க போய் தோல்வியை சந்தித்தார் போனபார்ட். ஆட்சியை இழந்த நெப்போலியன் எல்பா தீவுக்கு பலவந்தமாக நாடு கடத்தப்பட்டார்.

1815-ல் மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தாலும் வாட்டர்லூ போரில் படுதோல்வி அடைந்த பின்னர் அவர் பதவி விலகினார். அதன் பின்னர் வந்த லூயிஸ் XVIII, ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட பின் பிரெஞ்சு மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்க்கை வாய்க்கப்பெற்றது.

10 ஆண்டுகள் நீடித்த பிரெஞ்சு புரட்சி November 9, 1799-ல் முடிவுக்கு வந்தது. ஆனால் அதே வேளை 17-ம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல துளிர்க்க தொடங்கிய தொழில்துறை புரட்சி ஐரோப்பா முழுவதும் ஆல விருட்சமாக வேர் விட்டு கிளை பரப்ப தொடங்கியிருந்தது.

தொழில்துறை புரட்சி & மேற்கு ஐரோப்பாவின் வளர்ச்சி!

18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கி, பின் மெல்ல மெல்ல உலகம் முழுதும் வியாபித்த தொழில்துறை புரட்சி ஐரோப்பா கண்டத்தின் தலையெழுத்தை திருத்தி எழுதிய ஒரு முக்கிய வரலாற்றுச் சம்பவம். இது ஐரோப்பியர்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக மக்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டு பண்ணியது.


அதுவரை வேளாண்மையையும் கைவினைத் தொழில்களையும் மட்டுமே சார்ந்து இருந்த நிலை மாறி தொழிற்சாலைகளின் பங்களிப்பு அதிகரித்தது. ஒரு காலத்தில் கைகளால் கடின உழைப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மூலம் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டது. குறைந்த நேரமும், மனித உழைப்புமே தேவைப்பட்ட அதே வேளை உற்பத்தித் திறன் பெரிய அளவில் பெருகி பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்தது. ஆனால், அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய சூழல் உருவானது.

கிராமப்புற விவசாய சமூகங்கள், தொழில் மயமாக்கப்பட்ட, நகர்ப்புற சமூகங்களாக மாறின. 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்கள் தொகையில் வழக்கத்துக்கு மாறாக காணப்பட்ட அதிக வளர்ச்சி தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அளவைக் கூட்டியது. அதிகரித்த மக்கள்தொகைக்கு ஏற்ப மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய, திறமையான உற்பத்தி முறைகள் தேவைப்பட்டன. இதனால் தொழில் புரட்சி மிக வேகமாகவும் வெற்றிகரமாகவும் ஐரோப்பாவை பற்றி படரத் தொடங்கியது.

கிராமப்புற சமூகங்களில் பலர் தங்கள் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, புதிய வேலை வாய்ப்புக்காக நகரங்களுக்குச் சென்றனர். தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் பிரிட்டிஷ் நகரங்களின் வளர்ச்சி மேலும் துரிதப்படுத்தப்பட்டது. மான்செஸ்டர் மற்றும் லீட்ஸ் போன்ற தொழில்துறை நகரங்கள் வியத்தகு முறையில் வளர்ந்தன. 1800-ம் ஆண்டில், பிரிட்டிஷ் மக்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் நகரங்களில் வாழ்ந்தனர். வெறும் 50 ஆண்டுகளில் அதாவது 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அந்த எண்ணிக்கை 50 சதவிகிதமாக உயர்ந்தது. பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நகர்ப்புற மக்கள் தொகையில் அதிகரிப்பு உண்டானது.


தொழில்மயமாக்கலுக்கு முன்னர் ஒப்பீட்டளவில் பழமையானதாக இருந்த ஐரோப்பாவின் சாலை நெட்வொர்க், விரைவில் கணிசமான முன்னேற்றங்களைக் கண்டது. வங்கிகளும் முதலீட்டு வணிகங்களும் இந்த காலகட்டத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றது. பெரிய தொழிற்சாலைகள் உருவாகின. 1770-களில் லண்டன் பங்குச் சந்தையும், 1790-களின் முற்பகுதியில் நியூயார்க் பங்குச் சந்தையும் நிறுவப்பட்டது.


விவசாய சங்கங்கள் மேலும் தொழில் மயமாக்கப்பட்டு நகர்ப்புறமாக மாறியது. கான்டினென்டல் ரயில், பருத்தி ஜின், மின்சாரம் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய சமூகத்தை நிரந்தரமாக மாற்றின. தொலைபேசி, நீராவி இயந்திரம், தையல் இயந்திரம், எக்ஸ்ரே, மின்விளக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய பல நவீன கண்டுபிடிப்புகள் வேர்விட்டன.


மேற்கு ஐரோப்பாவில், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் விரைவான முன்னேற்றங்களைக் கண்டன. குறிப்பாக இங்கிலாந்து அசுர வேகத்தில் முன்னேறியது. உலகிலேயே அதி முன்னேற்றமடைந்த நாடுகளாக மேற்கு ஐரோப்பா மாறத்தொடங்கியது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் இயந்திரங்கள் தரமானதாகவும், வலிமை வாய்ந்ததாகவும் இருந்தன. மதவாத பாகுபாடு காரணமாக ஸ்பெயின் மற்றும் பிரான்சில் இருந்து வெளியேறிய புராட்டஸ்டண்டு கைவினைஞர்கள் இங்கிலாந்தில் அடைக்கலம் தேடி வந்தபோது ஆங்கில அரசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைத்துக் கொண்டது. அவர்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ தேவையான சூழலை அமைத்துக் கொடுத்து அதற்கு கைமாறாக அவர்களின் நிபுணத்துவத்தையும் திறமையையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. இதனால் இங்கிலாந்து ஏனைய மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை விட பல மடங்கு பாய்ச்சலில் முன்னேறிச் சென்றது. இங்கிலாந்தின் அனைத்து இடங்களிலும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.


கிராமம் நகரம் என்ற பாகுபாடு மறைந்து அனைத்து பிரதேசங்களும் சம அளவில் முன்னேற்றம் காணத் தொடங்கின.

இதன் விளைவாக பெரிய நகரங்கள் தோன்றியதால் பாராளுமன்ற, சட்ட சீர்திருத்தங்கள் தேவைப்பட்டது. பல புதிய சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலாளிகளின் சுரண்டல்களில் இருந்து தொழிலாளர்களை காக்கவும், தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தவும் தொழிலாளர்களுக்கு சாதகமான பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

மேற்கு ஐரோப்பா முழுவதும் புதிய பாதைகள், பல கால்வாய்கள் மற்றும் ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டன. இது நாடு கடந்த வணிக்கத்துக்கு வழிகோலியது. ‘Father of Railways’ என்று அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் சிவில் இன்ஜீனியரான George Stephenson கண்டுபிடித்த ரயில் இன்ஜின் தொழிற் புரட்சியின் இன்னொரு முக்கிய மைல்கல். உற்பத்திக்குத் தேவையான பொருட்களைப் பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் சந்தைகளில் விற்கவும், தேவையான இடங்களுக்கு விரைவாக பொருட்களை அனுப்பவும் இவருடைய கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவின.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயந்திரப் பொறியியலாளரான ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்த நீராவி இயந்திரம், பிரிட்டிஷ் விஞ்ஞானி Michael Faraday கண்டுபிடித்த மின் காந்தவியல், மின்காந்த தூண்டல், மற்றும் டைனமோ, இங்கிலாந்தைச் சேர்ந்த மின்னியலாளரும் வேதியியலாளருமான சர் ஹம்ப்ரி டேவி கண்டுபிடித்த சுரங்கத் தொழிலாளர்களுக்கான பதுகாப்பு விளக்கு, அமெரிக்க ஓவியரான சாமுவேல் மோர்ஸ் கண்டுபிடித்த மின்சார தந்தி இயந்திரம், லூயிஸ் ரொபேர்ட் கண்டு பிடித்த பேப்பர் தயாரிக்கும் இயந்திரம் என தொழில் புரட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விதமான இயந்திரங்களும் கருவிகளும் தொழிற்புரட்சியை ஐரோப்பிய வரலாற்றில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குல வரலாற்றிலேயே ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக மாற்றியது.

தொழில்மயமாக்கலின் வெற்றிக்கு முதலாளித்துவம் மற்றொரு முக்கிய அங்கமாக இருந்தது. தொழில்துறை புரட்சியின் போதான முதலாளித்துவத்தின் வடிவத்தை வரலாற்றாசிரியர்கள் லைசெஸ்-ஃபேர் முதலாளித்துவம் (laissez-faire capitalism) என்று குறிப்பிடுகின்றனர். லெய்செஸ்-ஃபேர் என்றால் ‘எங்களை தனியாக விட்டுவிடு’ என அர்த்தம். அதாவது அரசாங்கம் தலையிடாது விலகி தனி நபர்கள் தங்கள் சொந்த பொருளாதார விவகாரங்களை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அந்த நேரத்தில், இது ஒரு புரட்சிகர யோசனையாக இருந்தது. ஏனென்றால் முந்தைய நூற்றாண்டுகளில் வணிகம் ஒரு மேலாதிக்க பொருளாதார அமைப்பாக இருந்தது. கடுமையான அரசாங்கக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைக்கு ஆதரவான ஒரு பொருளாதார அமைப்பாக கருதப்பட்டது.

பரந்த பேரரசுகளை ஆட்சி செய்த மன்னர்கள் பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தினர். இருப்பினும், ஆடம் ஸ்மித் உள்ளிட்ட முக்கிய சிந்தனையாளர்கள் தனிநபர்களுக்கு அதிக சுதந்திரம் கொண்ட பொருளாதார அமைப்புக்கு ஆதரவாக வாதிடத் தொடங்கியதன் விளைவாக சுதந்திரப் பொருளாதார முறை நடைமுறைக்கு வந்தது. ஐரோப்பா, வணிகத்தில் சுதந்திரமாகவும் அதே வேளை சிறப்பாகவும் செயல்படத் தொடங்கியது


இவ்வாறு மெல்ல மெல்ல தலைதூக்கிய முதலாளித்துவம் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தியம்!

தொழில்துறை புரட்சி ஐரோப்பாவில் பெரிய வெற்றி பெற ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தாக்கம் மற்றுமொரு முக்கிய காரணியானது. ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாடு மற்றொரு பிராந்தியத்தை அல்லது நாட்டை அதன் இராணுவம், அரசியல், கலாசார, பொருளாதார, இராஜதந்திர கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது. ஐரோப்பா உலகெங்கிலும் உள்ள காலனிகளைக் கைப்பற்ற வேண்டிய அவசியத்தை தொழில்துறை புரட்சி உருவாக்கியது.


வெளிநாடுகளில் பல காலனிகளை வெற்றிகரமாக உருவாக்கி, அதனை லாபகரமாக பராமரிக்கும் ஆளுமையையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிற்புரட்சி கொடுத்தது. ஏகாதிபத்தியத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட காலனிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவு மூலப்பொருட்களை வழங்கின. அவை தொழிற்சாலைகளில் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டன. அதேபோல ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பொருட்களுக்கு ஒரு பெரிய சந்தையை உருவாக்கியது.

உதாரணமாக, ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளில் குடியேறியதால், ஐரோப்பிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருட்களும் உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு விற்கப்படலாம் என்ற வர்த்தக விதிகளை நிறுவினர். இது ஐரோப்பிய தொழிற்சாலைகள் மிகப் பெரிய அளவில் பொருட்கள் உற்பத்தியை தூண்டி தொழில் மயமாக்கலை மேலும் விரிவாக்க உதவியது.

பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து போன்ற சக்தி வாய்ந்த ஐரோப்பிய நாடுகள் தங்கள் பேரரசுகளை உருவாக்க பல நாடுகளை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன. இந்த காலகட்டத்தில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா போன்ற உலகின் பெரும் பகுதிகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. காலனித்துவம் என்ற பெயரில் ஐரோப்பா அதன் கீழ்படிந்த நாடுகளின் மனித வளத்தையும் உழைப்பையும் மட்டுமல்லாது அவர்கள் நாட்டின் வளங்களையும் மொத்தமாக சுரண்ட ஆரம்பித்தது. அடிமைத்துவம் தலை தூக்கியது.

- ஆப்பிரிக்கா அடிமைகள் இங்கிலாந்து சந்தைகளில் விற்கப்பட்டனர்.

- இந்தியாவிலிருந்து மக்கள் மிருகங்களைப் போல கொத்து கொத்தாக பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளுக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர். 

ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளின் பெறுமதி மிக்க இயற்கை வளங்கள் அனைத்தும் ஐரோப்பாவால் மொத்தமாக வழித்து சுருட்டிக் கொண்டு செல்லப்பட்டன. இதனால் ஐரோப்பா பெருத்த செல்வத்தில் கொழுக்க ஆரம்பித்தது. ஆப்பிரிக்கா ஆசியா போன்ற கண்டங்கள் வறுமையில் மெலிய ஆரம்பித்தன.

தொழிற்புரட்சிக்கு முன்பே இந்த ஐரோப்பிய நாடுகள் ஏனைய சில நாடுகளை தம் காலனித்துவத்தின் கீழ் வைத்திருந்தாலும் தொழிற்புரட்சி அந்த எல்லையை மேலும் விரிவு படுத்தியது. அதுவரை மந்த கதியில் ஊர்ந்து கொண்டிருந்த ஐரோப்பா, தொழிற்துறைப் புரட்சியின் பின் டாப் கியரில் வேகமெடுத்து உலகின் மிகுந்த செல்வச் செழிப்பான கண்டமாக மாறத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களின் வீழ்ச்சியும் ஐரோப்பாவின் விஸ்வரூப வளர்ச்சியும் ஆரம்பமானது


9-ம் நூற்றாண்டை ஐரோப்பிய வரலாற்றில் ஒரு புரட்சிகரமான நூற்றாண்டாக வரலாறு குறித்து வைத்துக் கொண்டது. மனித உரிமை, ஜனநாயகம், தேசியவாதம், தொழில்மயமாக்கல், தங்கு தடையற்ற சந்தை அமைப்புகள், சர்வதேச வர்த்தகம், அறிவியல், கணிதம், இலக்கியம், தொழில்நுட்பம், என சகல துறைகளும் முன்னேறி, நூற்றாண்டின் இறுதியில் உலக சக்தியின் உச்சத்தை அடைந்தது ஐரோப்பா.

உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வலிமை மிக்க பேரரசாக விஸ்வரூபம் எடுத்த ஐரோப்பாவின் ஆதிக்கம் விரிவடைந்து காலனிகள் குவிந்தன. இவை அனைத்தும் தொழில்துறை புரட்சியின் உந்துதலால் முன்னோக்கி தள்ளப்பட்டன. ஐரோப்பாவில் அடிமைத்தனம் படிப்படியாக முடிவுக்கு வர ஏனைய உலக நாடுகளில் அது ஆரம்பமானது. இனவெறி புது வடிவம் எடுத்தது. சமூக, தேசிய வேறுபாடுகள், சர்வதேச போட்டிகள் அதிகரித்தன. இவை அனைத்தும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு மாபெரும் மோதலில் கொண்டுபோய் வெடிக்க வைத்தது.

WHAT IS THAT? SEE THAT IN NEXT PART.

Saturday, September 11, 2021

யூரோ டூர் - 2 | ஐரோப்பாவை முடக்கிய லிட்டில் ஐஸ் ஏஜ் காலம்… பஞ்சத்தில் வீழ்ந்தவர்கள் மீண்டது எப்படி?!?

 அதுவரை பின்னிப் பிணைந்திருந்த மதமும், மருத்துவமும் மறுமலர்ச்சிக் காலத்தில் பிரிந்து தெளிவு பெற்றது. 18-ம் நூற்றாண்டுக்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே முன்னேற ஆரம்பித்தது.

நாம் இன்று பார்த்து பிரமிக்கும் ஐரோப்பா ஆதி காலம் தொட்டே இந்த வளர்ச்சியையும் மலர்ச்சியையும் கொண்டிருந்ததா என்ற கேள்விக்கு விடை காண வரலாற்றை துளைத்துக் கொண்டு சென்றால் அது ஒரு முடிவற்ற பயணமாக நீளும் என்பதால் நவீன ஐரோப்பாவை பற்றி தெரிந்து கொள்ள ஜஸ்ட் ஒரு மூன்று நூற்றாண்டுகள் மட்டும் பின்னோக்கிச் செல்லலாம்.

தொழில்துறைப் புரட்சிக்கு முந்தைய ஐரோப்பா

நம் சினிமாக்களில் கதாநாயகன் ஒரே பாட்டில் முன்னேறி பணக்காரனாகி விடுவது போல ஐரோப்பிய மக்கள் ஒரே இரவில் பணக்காரர்களாகிவிடவில்லை. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை உலகின் பெரும்பகுதி கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரத்தையே கொண்டிருந்தது. ஐரோப்பாவும் அப்படியே...அதன் பின் வெடித்த தொழில்துறைப் புரட்சி சில நாடுகளை உயர் பொருளாதார வளர்ச்சியின் பாதையில் செல்ல விட்டு, ஏனையவற்றை மோசமான வறுமையில் தள்ளியது.

தொழில்துறை புரட்சிக்கு முந்தைய ஐரோப்பா சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் முற்றிலும் வேறுபட்ட அமைப்பில் காணப்பட்டது. என்னதான் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஒரு காலத்தில் கோலச்சினாலும் ஐரோப்பாவும் ஏனைய நாடுகளைப் போல பல சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது.

தொழில்துறை புரட்சிக்கு முன்னர், ஐரோப்பாவில் பெரும்பாலான மக்கள் விவசாயிகளாக அல்லது கைவினைப் பொருள் தயாரிப்பாளர்களாகத்தான் இருந்தார்கள். தொழில்துறை புரட்சி ஏற்படுவதற்கு முன்பான காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை இன்று இருப்பதைப் போல அவ்வளவு வசதியாக இருக்கவில்லை. உற்பத்திகள் பெரும்பாலும் வீடுகளில், கை அல்லது சிறு கருவிகள் அல்லது அடிப்படை இயந்திரங்களை பயன்படுத்தி மட்டுமே செய்யப்பட்டது. ஆடைகள் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டன. விலங்குகளின் தோல்கள் மற்றும் ரோமங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் அரிதாகவே அவர்கள் வாழ்ந்த கிராமங்களுக்கு அப்பால் பயணம் செய்தனர். அதனால் மக்கள் தம் தேவையை நிவர்த்தி செய்ய தத்தமது சமூகங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது.


கிராமப்புற மக்கள் வாழ்வாதார விவசாயிகளாகவே இருந்தனர். அதாவது அவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க மட்டுமே பயிர்களை பயிரிட்டும், விலங்குகளை வளர்த்தும் வந்தனர். மாறாக அவர்கள் வர்த்தகம் செய்யவோ விற்கவோ எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை.

பொதுவாக ஒரு நாளுக்கு 16 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனாலும் தங்கள் உழைப்புக்கு மிகக் குறைந்த ஊதியமே பெற்றனர். பெண்களும் சிறுவர்களும் கூட பல கடினமான வேளைகளில் ஈடுபட்டனர். கல்வி என்பது பணக்காரர்களுக்கும் பிரபுக்களுக்கும் மட்டுமே என்று ஒதுக்கப்பட்டு இருந்தது. பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் சாதாரண குடிமகன் உள்ளே கூட நுழைய முடியாத இடமாக இருந்தன.

Little Ice-Age

அன்றைய ஐரோப்பிய மக்களின் உலகம் மிகக் குறுகியதாக இருந்தது. அவர்களின் தேவைகள் பூரணமாக தீர்க்கப்படாமல் இருந்தன. குளிர் காலங்களில் மிகவும் சிரமங்களுக்கு ஆளானார்கள். குறிப்பாக 1303 முதல் 1860 வரையிலான காலப்பகுதியில் புவியில் உருவான Little Ice Age என்று அழைக்கப்பட்ட சிறிய பனி யுகம் ஐரோப்பாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

Little Ice-Age என அழைக்கப்பட்ட சிறிய பனி யுகம் என்பது 14 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை கடுமையாக பாதித்த ஒரு குளிர்காலம். 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஐரோப்பிய ஆல்ப்ஸ், அலாஸ்கா மற்றும் தெற்கு ஆண்டிஸ் உட்பட உலகின் பல இடங்களில் இது விரிவடைந்தபோது, வடக்கு அரைக்கோளத்தின் சராசரி ஆண்டு வெப்பநிலை 0.6°C க்கும் கீழ் குறைந்தது. Little Ice Age-இல் தேம்ஸ் நதி உட்பட பல ஐரோப்பிய ஆறுகள் பனிக்கட்டியாக மாறியது. வயல் நிலங்கள் உறைந்து போயின. இதனால் தலைவிரித்தாடிய பஞ்சம் விவசாயிகளை ஆயிரக்கணக்கில் கொன்றது. சிறிய பனி யுகத்தின் காலநிலை பேரழிவுகளை, பிரபலமான தொல்பொருள் ஆசிரியரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியருமான பிரிட்டிஷ் எழுத்தாளர் எமிரிடஸ் பிரையன் ஃபேகன் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த சிறிய பனி யுகம் ஐரோப்பியர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த விவசாய உற்பத்தியை குறைத்து, உணவுப் பற்றாக்குறை, உடல்நலக் கோளாறு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல பிரச்னைகளுக்கு வித்திட்டு இறுதியில் ஐரோப்பிய நெருக்கடிக்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய நெருக்கடி - வேளாண்மைப் புரட்சி!

ஒரு மனிதனின் அடிப்படை வாழ்வாதாரத் தேவையான உணவுக்கே சிக்கல் ஏற்படும் போது தான் அவன் அதற்கான மாற்றுத் தீர்வுகளை சிந்திக்கத் தொடங்குகிறான். பொதுவாக பிரச்னைகளும் சவால்களும் நெருக்கும்போது ஒரு சராசரி மனிதன் நிலை குலைந்து போவான். ஆனால் The European crisis என அழைக்கப்பட்ட ஐரோப்பிய நெருக்கடி ஐரோப்பியர்களை தெளிவாகச் சிந்திக்கத் தூண்டியது. இவ்வாறு சிந்திக்கத் தொடங்கியதன் விளைவுதான் The Agricultural Revolution என அழைக்கப்பட்ட வேளாண்மைப் புரட்சி.

முதல் வேளாண்மைப் புரட்சியாக கி.மு 10,000-ல் மனிதன் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடும் நிலையில் இருந்து மாறி தனக்கான உணவை தானே பயிர்செய்து தொடங்கியதைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், உண்மையான விவசாயப் புரட்சி என்பது 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய விவசாயம் பழைய நுட்பங்களில் இருந்து புதிய செயல்முறைகளுக்கு மாறியதையே குறிக்கின்றது. விவசாயப் புரட்சியின் முக்கிய குறிக்கோள் பஞ்சத்தைத் தடுக்க போதுமான உணவை உற்பத்தி செய்வதாக மட்டுமே ஆரம்பத்தில் இருந்தது

18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வேளாண்மைத் தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் அதிக அறுவடைக்கும், சிறந்த உணவு தரத்திற்கும் வழிவகுத்தது. இக்காலத்தில் விவசாயம் சார்ந்து வளர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக விவசாய நிலங்களை விரிவாக்குதல், பயிர் சுழற்சி முறை அறிமுகத்தினால் புதிய பயிர்களை விதையிடல் போன்ற பல புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டன. அதனால் வேளாண்மைப் புரட்சி உணவு விநியோகத்தை அதிகரித்து உழைப்பின் அளவைக் குறைத்தது.

விவசாயப் புரட்சியின் மற்றொரு மிக முக்கியமான கண்டுபிடிப்பு நார்ஃபோக் நான்கு-படி சுழற்சி முறை (Norfolk four-course system). இது மண் வளத்தை மேம்படுத்தி தரிசு நிலையை குறைப்பதன் மூலம் பயிர் மற்றும் கால்நடைகளின் கருக்கட்டலை பெரிதும் அதிகரித்தது. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இரண்டு பிரிட்டிஷ் விவசாயிகளான ராபர்ட் பேக்வெல் மற்றும் தாமஸ் கோக் (Robert Bakewell and Thomas Coke), மரபணு வேறுபாட்டைக் குறைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்க முறையை ஒரு அறிவியல் நடைமுறையாக அறிமுகப்படுத்தினர். 

பிரிட்டனில் விவசாயப் புரட்சி ஐரோப்பிய மக்கள் வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனையாக நிரூபிக்கப்பட்டது. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தித் திறனும் கணிசமாக வளர்ந்தது. 1700 மற்றும் 1870-க்கு இடையில் மொத்த விவசாய உற்பத்தி 2.7 மடங்கு அதிகரித்தது. 1900-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் விளைச்சளுடன் டென்மார்க், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளால் மட்டுமே போட்டியிட முடிந்தது. முதலாம் உலகப் போருக்கு முந்தைய நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலுமே தனித்தனி விவசாயப் புரட்சிகள் வெடித்ததால் தானிய விளைச்சல் சராசரியாக 60% உயர்ந்து ஐரோப்பா கண்டத்தின் உணவு வழங்கலை அதிகரித்தது.

இக்காலகட்டத்தில் இங்கிலாந்தில் மக்கள் தொகை விரைவாக வளர்ந்தது. 1700-ல் 5.5 மில்லியனாக இருந்த மக்கள் தொகை 1801-க்குள் 9 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தது. அதிகரித்த மக்கள் தொகை தேவைகளையும் சேர்த்து அதிகரித்தது. தேவைகள் இவர்களை தர்க்க ரீதியாக சிந்திக்கத் தூண்டியது. அதன் விளைவு ஐரோப்பிய மறுமலர்ச்சியாக மலர்ந்தது. 

18-ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய அரசியல், தத்துவம், அறிவியல் மற்றும் தகவல் தொடர்புகள் தீவிரமாக மறுசீரமைக்கப்பட்டன. ஐரோப்பா முழுவதிலும் உள்ள மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் அதுவரை இருந்து வந்த பாரம்பரிய அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தினர். பகுத்தறிவு மாற்றத்தின் மூலம் மனித குலத்தை மேம்படுத்த முடியும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டனர். பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டன. பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், சட்டங்கள், கோட்பாடுகள் உருவாகின. அது ஐரோப்பாவின் தலையெழுத்தையே மாற்றியமைத்த தொழிற்துறைப் புரட்சிக்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய மறுமலர்ச்சி 

இத்தாலியில் 14-ம் நூற்றாண்டில் உருவான மறுமலர்ச்சி (Renaissance) காலத்தில் போடப்பட்ட விதையில் இருந்து உருவான விருட்சமாக, 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் The Enlightenment Age என குறிப்பிடப்படும் ஐரோப்பிய அறிவொளிக் காலம் மலர்ந்தது. பல தத்துவவாதிகள், அரசியல் வல்லுநர்கள், அறிவியல் அறிஞர்கள், கணித மேதைகள், இலக்கிய படைப்பாளிகளை உருவாக்கிய ஐரோப்பாவின் பொற்காலமானது. நவீன ஐரோப்பிய சமுதாயத்தை சீர்படுத்திய உறுதியான அறிவியல், அரசியல், கலை, இலக்கிய மற்றும் தத்துவ சிந்தனைகளின் பிறப்புக் காலமாக இது வரலாற்றில் பதிவானது. ஐரோப்பாவின் அறிவொளி யுகம் எனக் குறிப்பிடப்பட்ட இந்த 18-ம் நூற்றாண்டில்தான் அங்கு அறிவியல் அடித்து ஆட ஆரம்பித்தது. 

இக்காலகட்டத்தில் கணிதம், அறிவியல், புவியியல், கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், இலக்கியம், சமயம், போன்ற எல்லாவற்றிலும் எழுச்சி உண்டானது. பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அரசியல் ரீதியாக அதுவரை இருந்து வந்த நிலமானிய முறை ஒழிந்து புதிய தேசிய அரசுகள் தோன்றின. தனிமனித ஒழுக்கமும் சமூக பண்பும் தழைத்தோங்கின.

அதுவரை பின்னிப் பிணைந்திருந்த மதமும், மருத்துவமும் இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் பிரிந்து தெளிவு பெற்றது. 18-ம் நூற்றாண்டுக்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே முன்னேற ஆரம்பித்தது. இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பல நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகளையும் கோட்பாடுகளையும் நிறுவினர். 

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமான முன்னோடிகளான 

  • ஆங்கிலேயர்கள் பிரான்சிஸ் பேகன் மற்றும் தாமஸ் ஹாப்ஸ் (Francis Bacon and Thomas Hobbes), 
  • பிரெஞ்சுக்காரர் ரெனே டெஸ்கார்ட்ஸ் (René Descartes) மற்றும் 
  • அறிவியல் புரட்சியின் முக்கிய இயற்கை தத்துவவாதிகளான கலிலியோ கலிலி (Galileo Galilei), ஜோஹன்னஸ் கெப்லர் (Johannes Kepler) மற்றும் கோட்ஃபிரைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் (Gottfried Wilhelm Leibniz) 
போன்றோர் ஐரோப்பிய மறுமலர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றனர். 

  • ஐசக் நியூட்டனின் ‘Principia Mathematica’ (1686) மற்றும் 
  • ஜான் லோக்கின் ‘Essay Concerning Human Understanding’ (மனித புரிதல் பற்றிய கட்டுரை - 1689) 
ஆகிய இரண்டும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கான அறிவியல், கணித மற்றும் தத்துவக் கோட்பாடுகளை வழங்கிய இரண்டு முக்கிய படைப்புகளானது.

இந்த Age of Enlightenment காலப்பகுதியை தொடர்ந்து ஐரோப்பாவில் புரட்சி வெடித்தது. மன்னராட்சிக்கு எதிராக வெடித்த பிரெஞ்சுப் புரட்சியும், அதைத் தொடர்ந்த தொழிற்புரட்சியும் பனி போர்த்திய இருண்ட இரவுகளில் சுருண்டிருந்த ஐரோப்பாவில் படர்ந்த முதல் ஒளிக்கீற்றுகள்.

அதிரடியாக ஆட்டத்தில் இறங்கிய ஐரோப்பிய புரட்சிகள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த ஐரோப்பிய சமூகத்தை அப்படியே மாற்றிப்போட்டது. ஏழு கண்டங்களில் ஏதோ ஒரு கண்டமாக அதுவரை இருந்த ஐரோப்பாவை, நவீன உலகின் அதி முன்னேற்றமடைந்த ஒரு பலமான வல்லரசாக மாற்றிய அந்த மேஜிக் பவர்!!!

WHO IS THAT? WHICH POWER??? LETS SEE IN NEXT UPDATES :)

Europe - A Background.

 ஐரோப்பா என்றால் எல்லோருக்கும் ஓர் மயக்கம்தான். சினிமாக்களிலும் நாம் பார்க்கும், கதைகளிலும் நாம் படிக்கும் ஐரோப்பா என்பது ஒரு கனவுலகம். தமிழ் திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் காதல் வசப்பட்ட உடனே காட்சி ஐரோப்பாவுக்கு மாறிவிடும். ஐரோப்பா என்றால் செல்வம், அழகு, காதல், திறந்த கலாச்சாரம், அதி உயர் வாழ்க்கைத் தரம், நிலையான அரசியல் என உலகின் அத்தனை ஆதர்சங்களும் நம் மனக்கண் முன் விரியும். ஏனெனில் இன்றைய இளைஞர்களின் கனவு தேசம் ஐரோப்பா. இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமே வியந்து பார்க்கும் பிரமாண்டம் அது.

உலக வரைபடத்தை எடுத்துக் கொண்டால் அதன் செழிப்பான இடங்களில் ஐரோப்பா முதலிடத்தை பிடிக்கும். உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் பல ஐரோப்பிய நாடுகள் பட்டியலின் முதல் வரிசையை நிரப்பியிருக்கும். உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் முதல் இடம் ஒரு ஐரோப்பிய நாட்டுக்கே கிடைத்திருக்கும். அதே போல உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை எடுத்தாலும் ஐரோப்பிய நாடுகளே முதல் இடத்துக்கு மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டிருக்கும்.

ஐரோப்பாவில் அப்படி என்னதான் இருக்கிறது, ஐரோப்பா உண்மையிலேயே சொர்க்க பூமியா, அங்கு மக்களுக்கு கவலைகளே இல்லையா, எல்லோரின் வாழ்க்கைத்தரமும் உச்சத்திலேயே இருக்கிறதா, எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தேனாறும் பாலாறும் ஓடுகிறதா... அப்படியென்றால் மற்ற கண்டங்களை விட ஐரோப்பியர்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த மேஜிக் பவர் என்ன?

இந்த கேள்விகளுக்கு விடைகாண நாம் வரலாற்றின் 4-ம் நூற்றாண்டு வரையாவது பின்னோக்கி செல்ல வேண்டும். ரோமன் பேரரசு உடைந்த Dark Ages என அழைக்கப்பட்ட இருண்ட யுகத்திலேயே ரோமன் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்கள் அனைத்தும் பிரிந்து, தமக்கான சுய ராஜ்ஜியத்தை கட்டமைத்துக் கொண்டன. பிளந்த நிலத்தின் உள்ளே இருந்து பசுமையான செடி வேர் விட்டு வெளிவருவது போல, பிளவுபட்ட ஐரோப்பாவில் மெல்ல மெல்ல வளர்ச்சியும் மலர்ச்சியும் துளிர் விட ஆரம்பித்தது. அப்போதிருந்தே ஐரோப்பா ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் செல்வத்திலும் அபிவிருத்தியிலும் முன்னோக்கியே இருந்தது. ஆனாலும் நவீன ஐரோப்பாவை பற்றி பார்க்க நாம் ஒரு 500 வருடங்கள் வரை முன்சென்று பார்த்தாலே போதுமானது என்பதால் வரலாற்றில் கொஞ்சம் முன்னே வருவோம்.

நாம் கண்டும், கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்ட அந்த பகட்டாக ஜொலிக்கும் பக்கம்தான் ஐரோப்பாவின் உண்மை முகமா இல்லை வெளிச்சத்துக்கு வராத இருள் பிரதேசம் உள்ளதா?

ஐரோப்பா எப்படி உருவானது?

உலகின் ஏழு கண்டங்களில் இரண்டாவது சிறிய கண்டமான ஐரோப்பா பூமியின் மேற்பரப்பில் சுமார் 2 சதவிகிதத்தை உள்ளடக்கியிருக்கிறது. 'ஐரோப்பா' என்ற பெயர் பண்டைய கிரேக்க புராணமான ஜீயஸ் (Zeus)-ல் இருந்து வந்ததாக ஒரு சுவாரஸ்ய கதை உண்டு. இந்த கதையின்படி, பண்டைய கிரேக்க மதத்தில் வானம் மற்றும் இடியின் கடவுள் ஜீயஸ், ஒலிம்பஸ் மலையில் ஆட்சி செய்தார்.

அவர் ஒரு நாள் ஒரு கடற்கரையோரத்தில் அழகான ஃபீனீசிய இளவரசியான யூரோபா குளிப்பதைப் பார்த்தாராம். பார்த்த முதல் பார்வையிலே காதலில் விழுந்த Zeus தன்னை ஒரு அற்புதமான வெள்ளை காளையாக மாற்றிக்கொண்டு வந்து அவளை அணுகியிருக்கிறார். அந்த காளை மிகவும் கம்பீரமாகவும் அழகாகவும் இருக்க உடனே அதன்பால் ஈர்க்கப்பட்ட யூரோபா இளவரசி தனது கழுத்தில் அணிந்திருந்த அழகிய வண்ண வண்ண பூக்களின் மாலையைக் கழற்றி அந்தக் காளையின் கழுத்தில் போட்டு அதன் முதுகில் ஏறி அமர்ந்தாளாம்.

அவள் ஏறி அமர்ந்ததும் அந்தக் காளை கடல் நீரின் மேற்பரப்பு முழுவதும் சுற்றிச் சுற்றி நீந்தி, கிரீட் தீவுக்கு இளவரசியை கடத்திச் சென்றுள்ளது. அதன் பின் கிரீட் தீவில் ஜீயஸ் மற்றும் யூரோபா இருவரும் காதலர்களாக மாறி, கலவி கொண்டு அவர்களுக்கு மூன்று மகன்களும் பிறந்துள்ளனர்.

அதேவேளை கடலில் குளிக்கச் சென்ற ஃபீனீசிய இளவரசியான யூரோபாவைக் காணாமல் கலங்கிய அவள் குடும்பத்தினர் அவளைத் தேட அவளின் மூன்று சகோதரர்களை அனுப்பியுள்ளனர் அந்தத் தேடல் தோல்வியிலேயே முடிவுற்றது. ஆனாலும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முக்கியமான நகரங்களை கண்டுபிடித்து ஏஜியனைச் சுற்றியுள்ள (ஏஜியன் கடல் என்பது ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான மத்திய தரைக்கடலின் ஒரு பகுதி) பல்வேறு பகுதிகளுக்கு அவளின் பெயர்களைச் சூட்டினார்கள் எனப்படுகிறது. பிற்காலத்தில் இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஐரோப்பா என்று அழைக்கப்பட்டது என்பது ஒரு கதையாக இன்று வரை சொல்லப்படுகிறது.

ஆனால், பண்டைய கிரேக்க எழுத்தாளரும், புவியியலாளரும், வரலாற்றாசிரியருமான ஹெரோடோடஸ் (Herodotus) என்பவர் ஃபீனீசிய இளவரசியின் கதைக்கும் ஐரோப்ப கண்டத்தின் பெயருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் எழுதிய நான்கு வரலாற்று புத்தகத்திலும் “உண்மையில் ஐரோப்பாவுக்கு அதன் பெயர் எங்கிருந்து வந்தது, அல்லது யார் கொடுத்தது என்பது யாருக்கும் தெரியாது. ஏனைய கண்டங்களைப் போல பெயரிடப்படாமல் இருந்த ஐரோப்பா, யூரோபா இளவரசியின் பெயரிலிருந்து வந்தது என்று சொல்வது சாத்தியமில்லை. ஏனெனில் யூரோபா இளவரசி ஆசியாவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ ஒருபோதும் சென்றதில்லை" என்கிறார்.

எது எப்படியோ 'ஐரோப்பா' என்ற பெயரின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள் பண்டைய கிரேக்கத்தை நோக்கித்தான் செல்கிறது. கிரேக்க மொழியில் யூரோபா என்ற பெயர் 'அகன்ற முகம்' என்று பொருள்படும். இது முழு நிலவைக் குறிக்கிறது. பண்டைய கிரேக்கர்கள் முதலில் யூரோபா என்ற வார்த்தையை மத்திய கிரேக்கத்தின் புவியியல் பகுதிக்கும், பின்னர் முழு கிரேக்கத்திற்கும் பயன்படுத்தினர். 500 BCE வாக்கில் யூரோபா என்ற வார்த்தை ஐரோப்பாவின் முழு கண்டத்தையும், கிரேக்கத்துடன் அதன் கிழக்குப் பகுதியையும் சேர்த்து குறிப்பிட்டது.

ஐரோப்பாவின் புவியியல்!

ஐரோப்பாவின் புவியியல் என்றதும் பள்ளி பாடபுத்தம் சிலருக்கு நினைவுக்கு வரலாம். ஆனால், ஐரோப்பாவின் புவியியலைத் தெரிந்துகொள்ளாமல் ஐரோப்பாவை புரிந்துகொள முடியாது. யூரேசியாவின் மாபெரும் ‘சூப்பர் கண்டத்தின்’ மேற்கு நிலம் ஐரோப்பா. அது ஆசியாவிலிருந்து யூரல் நதி, காஸ்பியன் கடல், கருங்கடல்கள் உள்ளிட்ட தொடர் நீர்நிலைகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது மிகச்சிறிய கண்டமான ஐரோப்பா யூரேசியாவின் மேற்கு நோக்கிய தீபகற்பங்களால் ஆனது. உலகின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பதினைந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள இது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலிலும், மேற்கில் அட்லான்ட்டிக் பெருங்கடலிலும், தெற்கே மத்தியதரைக் கடலிலும், கிழக்கில் ஆசியாவிலும் எல்லைகளைக் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் தகவலின் படி ஐரோப்பாவில் மொத்தம் 44 நாடுகள் உள்ளடங்குகின்றன. பொருளாதார மற்றும் அரசியல் தொழிற்சங்கமான ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

  • ஆஸ்திரியா, 
  • பெல்ஜியம், 
  • பல்கேரியா, 
  • குரோஷியா, 
  • சைப்ரஸ், 
  • செக் குடியரசு, 
  • டென்மார்க், 
  • எஸ்டோனியா, 
  • பின்லாந்து, 
  • பிரான்ஸ், 
  • ஜெர்மனி, 
  • கிரீஸ், 
  • ஹங்கேரி, 
  • அயர்லாந்து, 
  • இத்தாலி, 
  • லாட்வியா, 
  • லிதுவேனியா, 
  • லக்சம்பர்க், 
  • மால்டா, 
  • நெதர்லாந்து, 
  • போலந்து, 
  • போர்ச்சுகல், 
  • ருமேனியா, 
  • ஸ்லோவாக்கியா , 
  • ஸ்லோவேனியா, 
  • ஸ்பெயின் மற்றும் 
  • சுவீடன் 

போன்றவை இந்த லிஸ்ட்டில் அடங்கும்.

அதே வேளை ஐரோப்பிய பொருளாதார பகுதியில் (EEA) ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் மற்றும் நார்வே ஆகியவையும் சேர்ந்து மொத்தம் 30 நாடுகள் உள்ளடங்குகின்றன. ஐரோப்பா கண்டத்தில் இருந்தாலும் கூட சுவிட்சர்லாந்து EU மற்றும் EEA இரண்டிலும் உறுப்பினர் இல்லை. ஆனால், அது ஐரோப்பிய யூனியனின் ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகிறது. அதாவது சுவிஸ் நாட்டவர்களுக்கு ஐரோப்பிய யூனியனின் மற்ற நாடுகளில் வாழவும் வேலை செய்யவும் உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

வடக்கு ஐரோப்பா என்பது மேற்கு ஐரோப்பாவின் வடக்கு பகுதியான, ஆங்கில சேனல் மற்றும் பால்டிக் கடல் ஆகியவற்றைக் குறிக்கிறது. வடக்கு ஐரோப்பாவை ஸ்காண்டிநேவியா, பிரிட்டிஷ் தீவுகள் மற்றும் பால்டிக்ஸ் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 

  • நார்வே, 
  • ஸ்வீடன், 
  • டென்மார்க், 
  • பின்லாந்து, 
  • ஐஸ்லாந்து, 
  • ஐக்கிய இராஜ்ஜியம்(United Kingdom), 
  • அயர்லாந்து, 
  • லிதுவேனியா, 
  • லாட்வியா, 
  • எஸ்டோனியா 

போன்ற நாடுகள் வடக்கு ஐரோப்பாவில் வருகின்றன.

மத்திய தரைக்கடல் ஐரோப்பா என்று அழைக்கப்படும் தெற்கு ஐரோப்பா, பதினைந்து நாடுகளைக் கொண்டுள்ளது. 15 கோடி மக்களுக்கும் அதிகமாக வாழும் இங்கே 

  • அல்பேனியா, 
  • அந்தோரா, 
  • போஸ்னியா மற்றும் 
  • ஹெர்சகோவினா, 
  • குரோஷியா, 
  • கிரீஸ், 
  • இத்தாலி, 
  • மால்டா, 
  • மான்ட்டினீக்ரோ 
  • வடக்கு மசிடோனியா, 
  • போர்ச்சுகல், 
  • சான் மரினோ, 
  • செர்பியா, 
  • ஸ்லோவேனியா, 
  • ஸ்பெயின், 
  • வாடிகன் 

போன்ற நாடுகள் உள்ளன.


ஐக்கிய நாடுகள் சபையினால் கிழக்கு ஐரோப்பா என்று கருதும் 10 நாடுகள் அனைத்தும் ஒரு காலத்தில் பனிப்போரின் போது சோவியத் யூனியன் தலைமையிலான கிழக்கு கம்யூனிஸ்ட் கூட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருந்தது. 1990-களின் முற்பகுதியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பிராந்தியத்தின் பல நாடுகள் மேற்கு நாடுகளுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு, ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இவை கிழக்கு ஐரோப்பாவின் நாடுகள் என்ற கட்டமைப்புக்குள் உள்ளடங்குகின்றன. பெலாரஸ், பல்கேரியா, செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, மால்டோவா, ருமேனியா, ரஷ்யா, ஸ்லோவாக்கியா, உக்ரைன் போன்றவையே இந்த பத்து நாடுகள்.

சரி, இவ்வளவு செழிப்பான நாடுகளின் கூட்டணியை கொண்ட ஐரோப்பாவின் ஒரு பகுதி எப்படி பொருளாதார ரீதியில் அசைக்க முடியாத பெரும்பலம் கொண்டும், மறு பகுதி சற்று பலவீனமாகியும் போனது? மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்லலாமா?!