Wednesday, March 03, 2021

பாண்டிய வேந்தர்களின் மீன் கொடி!

 சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் பண்டைய தமிழ் நாட்டை ஆட்சி செய்தார்கள். பாண்டிய வேந்தர்கள் பற்றிய குறிப்புகள் நமக்கு சங்க இலக்கியங்களில் எராளமாகக் கிடைக்கின்றன.

அது போலவே அசோகர் கல்வெட்டுகள், கலிங்க நாட்டு காரவேலன் ஹித்திக்கும்பா கல்வெட்டுகள், மகாவம்சம், வான்மீகி ராமாயணம், மதுரை மாங்குளம் கல்வெட்டுகள் என வரலாற்று காலம் தொட்டே பாண்டிய வேந்தர்கள் பற்றிய குறிப்புகள் நமக்கு காலவாரியாக வகைப்படுத்தப்பட்டு கிடைத்துள்ளன.

பாண்டிய வேந்தர்களின் பெயருக்குப் பின்னால் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், வர்மன், செழியன், முது குடுமி என்ற ஒட்டுக்களைச் சேர்த்துக் கொண்டனர். பாண்டியர்கள் வேப்பம் பூ மாலை அணிகிற வழக்கம் உடையவர்கள் என்று சங்க கால குறிப்புகள் நமக்கு உணர்த்துகிறது.

பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை என்றும் கொற்கை துறைமுகத்தின் வழியேதான் பெரும் வணிகம் நடைபெற்றது எனவும் கடல் தங்களை வாழவைப்பதாக பாண்டியர்கள் கருதியதால் தங்களின் சின்னமாக மீனை வைத்துக் கொண்டனர். கொற்கையை ஆண்ட சடையவர்மன் வீரபாண்டியன் திரிகோணமலை பாறையில் மீன்கொடியைப் பொறித்திருக்கிறார். கொற்கை துறைமுகம் கடல்கோளால் சீரழிய கடல் கோள்களில் இருந்து தப்பிக்க, பாண்டியர் தலைநகரை மதுரைக்கு மாற்றினார்கள். கொற்கையை ஆண்ட கடைசி மன்னர் முடத்திருமாறன் ஆவார்.

சங்க இலக்கியம் பிற தமிழ் இலக்கிய பிரதிகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளிலும் பல பாண்டிய வேந்தர்களின் ஆட்சி காலம் பற்றிய செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. திருவிளையாடல் புராணங்களில் 70க்கும் மேற்பட்ட பாண்டிய வேந்தர்களும், நற்குடி வேளாளர் வரலாற்றில் 201 பாண்டிய வேந்தர்களும், இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரைகளில் 197 பாண்டிய அரசர்கள் இருந்தது பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன.

கி.மு நான்காம் நூற்றாண்டில் பாண்டிய அரசனின் மகளை இலங்கை வேந்தனாக இருந்த விசயன் மணந்ததாக மகாவம்சத்தில் குறிப்புகள் உள்ளது. அசோகர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர்களின் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்த தேசங்களாக பாண்டிய நாடு இடம் பெற்றுள்ளது. இது கிமு நான்காம் நுற்றாண்டிலேயே பாண்டிய அரசுகள் இந்திய நிலப்பகுதி முழுமைக்கும் அறிமுகமான ஓர் அரசாக இருந்தது என்பதை உணர்த்துகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்க நாட்டை ஆண்ட காரவேலன் ஹித்திக்கும்பா கல்வெட்டுகளில் பாண்டிய நாடு பற்றிய குறிப்புகள் உள்ளது. மதுரை மாங்குளம் கல்வெட்டுகளில் பாண்டிய வேந்தர் நெடுஞ்செழியனின் பெயர் இடம் பெற்றுள்ளது.

பாண்டிய வேந்தர்கள் காலத்தில் இந்தப் பகுதி வணிகத்தில் செழித்திருந்தது என்பதை மதுரை, அழகர்கோயில் அருகில் உள்ள கிடாரிப்பட்டிமலை கல்வெட்டுகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அந்த கல்வெட்டுகளில் உப்பு வணிகன், பணித வணிகன், கொழு வணிகன், அறுவை வணிகன், பொற்கொல்லன் போன்றவர்கள் கொடையளித்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. பாண்டிய வேந்தர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரத்தில் முத்து மற்றும் பொன்னால் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்துள்ளது.

பாண்டிய வேந்தர்கள் ஆட்சியில் வாணிப செலாவணிக்காக காசுகள் அச்சடிக்கப்பட்டன. அவை பாண்டிய வேந்தர்களின் பெயராலும், சிறப்புப் பெயர்களாலும் நாணயங்களாக வெளியிடப்பட்டன. பொன், செம்பால் செய்யப்பட்ட காசுகளை அரசுகள் வெளியிட்டதாக நாணயவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மீன் சின்னம் இந்த காசுகள் பலவற்றில் இடம் பெற்றிருந்தது. பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் முத்திரை காசுகளாகவும், கி.மு.3 - 2 ஆம் நூற்றாண்டில் பெருவழுதி நாணயங்களாகவும் வெளியிடப்பட்டன.

பாண்டியர் காலத்தில் ஊர்கள், கூற்றம், நாடுகள் என நிலப்பகுதிகள் பிரிக்கப்பட்டன. இரணிய முட்டநாடு, குடநாடு, புறப்பறளைநாடு, ஆரிநாடு, களக்குடி நாடு, திருமல்லிநாடு, தென்புறம்புநாடு, கருநிலக்குடிநாடு, வடபறம்புநாடு, அடலையூர்நாடு, பொங்கலூர்நாடு, திருமலைநாடு, தென்கல்லகநாடு, தாழையூர்நாடு, செவ்விருக்கைநாடு, கீழ்ச்செம்பிநாடு, பூங்குடிநாடு, விடத்தலைச்செம்பிநாடு, கீரனூர்நாடு, வெண்புலநாடு, களாந்திருக்கைநாடு, பருத்திக் குடிநாடு, அளநாடு, புறமலை நாடு, துறையூர்நாடு, துருமாநாடு, வெண்பைக் குடிநாடு, இடைக்குளநாடு, நெச்சுரநாடு, கோட்டூர்நாடு, சூரன்குடிநாடு, பாகனூர்க்கூற்றம், ஆசூர்நாடு, தும்பூர்க்கூற்றம், ஆண் மாநாடு, கீழ்வேம்பநாடு, மேல்வேம்பநாடு, தென்வாரிநாடு, வடவாரிநாடு, குறுமாறைநாடு, குறுமலைநாடு, முள்ளிநாடு, திருவழுதிநாடு, முரப்புநாடு, தென்களவழிநாடு, வானவன் நாடு, கீழ்களக்கூற்றம், கானப்பேர்க்கூற்றம், கொழுவூர்க்கூற்றம், முத்தூர்க்கூற்றம், மிழலைக்கூற்றம், மதுரோதயவளநாடு, வரகுண வள நாடு, கேளர சிங்கவளநாடு, திருவழுதி, வளநாடு, வல்லபவள நாடு, பராந்தகவள நாடு, அமிதகுண வளநாடு என அவை திகழ்ந்தன.

அளநாடு என்பது தேனி சின்னமனூர் கம்பம் வட்டாரத்தை உள்ளடக்கியது. பொங்கலூர்காநாடு, வைகாவூர் நாடு என்பது பழனி பகுதியை குறிக்கிறது. அண்டநாடு ஒட்டன்சத்திரம் பகுதி, ஆற்றூர்நாடு-அதம்ப நாடு திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள், வடகல்லகநாடு, தென்கல்லகநாடு, பாகனூர்கூற்றம் ஆகியவை நிலக்கோட்டை பகுதிகள், பூம்பாறை நாடு கொடைக்கானல் மலைப்பகுதி, நெடுங்களநாடு வத்தலக்குண்டு பகுதி, துவராபதிநாடு, புறமலை நாடு என்பது நத்தம் பகுதி, கானாடு என்பது திருமயம் வட்டாரம், கோனாடு என்பது புதுகோட்டை வட்டாரத்தை சாரும், மிழலை நாடு ஆவுடையார்கோவில் பகுதியும், பள்ளிநாடு வேடசந்தூர் வட்டத்தையும் குறிக்கிறது.

பாண்டியர் காலத்தில் வேளாண்மைதான் முதன்மை தொழிலாக இருந்துள்ளது. இதைத் தவிர்த்து நெசவு, முத்துக்குளித்தல், கொல்லன் தொழில் மற்றும் கப்பல் கட்டுதல் ஆகிய தொழில்கள் உப தொழில்களாக இருந்துள்ளன. கொற்கை முத்து வணிகத்தின் மையமாகத் திகழ்ந்துள்ளது. இங்கு எடுக்கப்பட்ட முத்துகள் தமிழகத்திலும் வட இந்தியாவிலும் மட்டும் அல்லாது மற்றும் கடல் கடந்து ரோம் நகரம் வரையிலும் வணிகமாகி சென்றுள்ளது. இதே காலகட்டத்தில் கட்டுமானம், மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி மற்றும் தச்சு போன்ற பல துணைத் தொழில்களும் சாமானிய மக்களுக்கு வேலைவாய்ப்பாகவும் பாண்டிய நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்துள்ளன.

சங்க காலம் தொட்டே பாண்டிய வேந்தர்கள், சிற்றசர்கள், குறுநில மன்னர்கள் அரசுருவாக்கம், மற்றும் நகர உருவாக்கங்களில் கவனம் செலுத்தியது போலவே தமிழ் மொழியின் பாலும் தீராபற்றுடையவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். தலைச்சங்கம் அல்லது முதல் சங்கம் (கி.மு. 5000 - கி.மு. 3000) பாண்டிய வேந்தனான காய் சினவழுதி என்பவரால் நிறுவப்பட்டது. பாண்டிய வேந்தர் கடுங்கோன் என்பவர்தான் கபாடபுரத்தை அமைத்து அதில் இடைச்சங்கத்தை (கி.மு. 3000 முதல் கி.மு 1500) நிறுவினார்.

கடைச்சங்கப் புலவராகிய சீத்தலைச்சாத்தனார் பாண்டியர்கள் சங்கம் வளர்த்ததை பற்றி மணிமேகலையில் விவரிக்கிறார். சின்னமனூர் செப்பேடு மதுராபுரிச் சங்கம் பற்றியும் பாண்டிய வேந்தர்கள் பற்றியும் விவரிக்கிறது.

பாண்டிய வேந்தர் முடத்திருமாறன் அவர்கள் மூன்றாம் சங்கம் அல்லது கடைச்சங்கத்தை (1500 முதல் கி.பி. 250) கூடல் என்னும் மதுரை மாநகரில் நிறுவினார்.

பெரிய புராணம், சிறு பாணாற்றுப்படை, கலித்தொகை, பெரிய திருமொழி பனுவல்களில் தொடங்கி ஆண்டாள், ஔவையார், திருஞானசம்பந்தர் எனப் பலரும் பாண்டிய வேந்தர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டைப் பற்றி விரிவாகப் பாடியிருக்கிறார்கள்.

முற்கால பாண்டிய வேந்தர்களாக வடிம்பலம்ப நின்ற பாண்டியன், நிலந்தரு திருவிற் பாண்டியன், முதுகுடுமிப்பெருவழுதி, பெரும்பெயர் வழுதி இருந்தனர். கடைச்சங்க கால வேந்தர்களாக முடத்திருமாறன், மதிவாணன், பசும்பூண் பாண்டியன், பொற்கைப்பாண்டியன், இளம் பெருவழுதி, அறிவுடை நம்பி,

பூதப் பாண்டியன், வெற்றிவேற் செழியன், கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், உக்கிரப் பெருவழுதி, மாறன் வழுதி, நல்வழுதி, குறுவழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, நம்பி நெடுஞ்செழியன் ஆகியோர் திகழ்ந்தனர்.

இடைக்காலப் பாண்டியர்களாக கி.பி. 575 முதல் கிபி 900வரை கடுங்கோன், அவனி சூளாமணி, செழியன் சேந்தன், அரிகேசரி, ரணதீரன், பராங்குசன், பராந்தகன், இரண்டாம் இராசசிம்மன், வரகுணன், சீவல்லபன், வரகுண வர்மன், பராந்தகப் பாண்டியன் ஆகியோர் ஆட்சி புரிந்தனர்.

பிற்காலப் பாண்டியர்கள் கி.பி. 900 முதல் கிபி 1281 வரை மூன்றாம் இராசசிம்மன், அமர புயங்கன், சீவல்லப பாண்டியன், வீரபாண்டியன், வீரகேசரி, மாறவர்மன் சீவல்லபன், சடையவர்மன் சீவல்லபன், பராக்கிரம பாண்டியன், சடையவர்மன் பராந்தக பாண்டியன், சடையவர்மன்குலசேகர பாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன், விக்கிரம பாண்டியன், முதலாம் சடையவர்மன் குலசேகரன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், இரண்டாம் சடையவர்மன் குலசேகரன், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் விக்கிரமன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் ஆட்சி புரிந்தனர்.

ஆரியப்படை வென்ற நெடுஞ்செழிய பாண்டியனின் காலத்தில் தான் காவேரிபூம்பட்டிணத்தில் இருந்து தன் மனைவி கண்ணகியுடன் மதுரைக்கு வந்து தன் மனைவியின் காற்சிலம்பை விற்பனை செய்த போது பொற்கொல்லரின் சூழ்ச்சியால் பாண்டிய வேந்தனின் அரசியான கோப்பெருந்தேவியின் காற்சிலம்பை திருடிய திருடன் தன் கணவர் கோவலன் அல்ல என்று நிரூபித்தாள், பாண்டிய வேந்தர் விழிப்புடன் நீதியை வழங்கியது என்பது போல் பாண்டிய ஆட்சிக் காலத்தில் நீதி பரிபாலனம் பற்றி ஏராளமான குறிப்புகள் கதைகள் உள்ளன.

மலையத்து வம்சத்தை சேர்ந்த பாண்டியனின் மகள்தான் மீனாட்சி, தந்தையின் இறப்பிற்குப் பிறகு பாண்டிய நாட்டில் அவர் ஆட்சி புரிந்ததை திருவிளையாடல் புராணம் நமக்கு கூறுகிறது. சங்க இலக்கியங்கள் முழுமையில் இந்த மண்ணில் இருந்து எப்படி விளைந்தன என்பதை அதை வாசிக்க வாசிக்க உணரலாம். சங்க இலக்கியங்கள் இந்த நிலத்தின் மிகப் பெரிய ஆவணம், ஆனால் இதை எல்லாம் தாண்டி இன்றும் நீங்கள் மதுரையில் கல்பாவிய வீதிகள் உலவினால் அங்கே அமர்ந்திருக்கும் இந்த நிலத்தின் தாத்தாக்கள் பாட்டிகள் இன்னும் ஆவணங்களில் பனுவல்களில் இடம்பெறாத கதைகளை கண்கள் விரிய யாருக்கேனும் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம், இது இன்றல்ல நேற்று அல்ல மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பின்நோக்கி செல்கிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு நகரத்தில் கதைகள் சொல்லப்படுகின்றன, ஒரு நகரத்தின் தெருக்கள் சதுக்கங்கள் கதைகளால் நிரம்பி வழிகின்றன. ஒரு நகரத்தின் மீது கருத்த மேகமூட்டம் ஆயிரம் கதைகள் சுமந்து நிற்கிறது, ஒரு பின்மாலைப் பொழுதில் அது கதைகளைத் தூரலாக, இடிமழையாக பொழிந்து செல்கிறது. மக்கள் கதைகளில் நனைகிறார்கள், கதைகளைப் பருகுகிறார்கள், கதைகளில் நீந்துகிறார்கள்.

இந்த நகரத்தில் உலவும் கதைகள் யாவையும் இந்த நிலத்தின் வரலாற்றை சுமந்து நிற்கிறது. பாண்டிய நாட்டின் மக்கள் வரலாற்றை சுவாசித்தே வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள்!