Wednesday, February 05, 2020

பெரியகோயிலை கட்டச்சொன்ன ராஜராஜன் தெரியும்; கட்டிய குஞ்சர மல்லனைத் தெரியுமா?

விரிந்து பரந்திருந்த சோழப் பேரரசின் எஞ்சிய அடையாளமான பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜனை இப்போது நாம் கொண்டாடுகிறோம். ஆனால், சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை ராஜராஜன்தான் பெரிய கோயிலைக் கட்டினார் என்பதே உலகத்துக்குத் தெரியாது. அதற்கு முன்பு, கரிகால் சோழன்தான் இதைக் கட்டினார், காடுவெட்டிச் சோழன் என்பவர்தான் கட்டினார், பூதங்கள் வந்து கட்டின என எக்கச்சக்க 'மித்'துகள். 1896-ல் ஜெர்மனைச் சேர்ந்த கல்வெட்டு அறிஞர் Hultz என்பவர்தான் முதன்முதலில் பெரியகோயிலின் கல்வெட்டுக்களை முழுமையாகப் படித்து இதைக் கட்டியவர் ராஜராஜ சோழன் என்று அறிவித்தார்.


  • நவீன தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாத காலத்தில் இத்தனை பிரமாண்டமான கோயிலைக் கட்டிய தமிழ்க் கட்டுமான அறிவைத்தான் எல்லோருமே வியக்கின்றனர். இப்போது, ஒரு சிறிய வீடு கட்டவே முறுக்குக் கம்பிகள் தொடங்கி சிமென்ட் வரை பயன்படுத்துகிறோம். ஆனால், இத்தனை பிரமாண்ட கோயில், பாறைகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கியே கட்டப்பட்டது. பூசுவதற்கு சாந்து பயன்படுத்தப்படவே இல்லை. அந்தப் பாறைகளில்கூட அத்தனை ஆச்சர்யங்கள். தஞ்சைப் பகுதியில் ஒரு சிறிய மலைக்குன்றுகூட இல்லை. கடந்த ஆயிரம் வருடங்களில், மலைக் குன்றுகள் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும் இல்லை. அப்படி என்றால், கோயில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இத்தனை பிரமாண்டமான பாறைகள் எங்கிருந்து வந்தன? புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, குன்றாண்டார் கோயில் ஆகிய இரண்டு ஊர்களில் இருந்த மலைகளை உடைத்துப் பெயர்த்துக்கொண்டு வந்து கட்டப்பட்டதுதான் பெரியகோயில் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


  • குஞ்சர மல்லன் என்பவர்தான் பெரியகோயிலைக் கட்டிய தலைமை கட்டடப் பொறியாளர். இவருக்கு, ராஜராஜப் பெருந்தச்சன் என்று பட்டம் கொடுத்திருக்கிறார், ராஜராஜன். கோயிலின் மற்ற வேலைகளைச் செய்தவர்களையும் சமமாகவே மதித்திருக்கிறார். கோயிலில் நாவிதராக வேலை பார்த்தவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம், ராஜராஜப் பெரு நாவிதன்!


    • தாஜ்மஹால் உள்ளிட்ட நாட்டின் பல பிரமாண்ட கட்டுமானங்கள், அப்போதைய அரசர்களால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களைக்கொண்டு கட்டப்பட்டன. ஆனால் பெரியகோயில், முழுக்க முழுக்க இறைப்பணியில் ஆர்வம் உள்ளவர்களைக் கொண்டு உருவானது!


  • கோயிலின் உருவாக்கத்துக்கு நிதியாக கொட்டிக் கொடுத்தவர்கள் முதல் ஒரே ஒரு செப்புக் காசு கொடுத்தவர் வரை அத்தனை பேர் பெயர்களையும், என் பெயருக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் கல்வெட்டில் குறிப்பிட வேண்டும் என்பது ராஜராஜன் பிறப்பித்த முதல் உத்தரவு. அனைவரது பெயர்களும் கல்வெட்டுக்களில் இருக்கின்றன


  • யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை, பெரியகோயிலின் கோபுர நிழல் தரையில் விழாது. அந்த அளவுக்கு நுணுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று பலரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் உண்மை இல்லை. 216 அடி உயரம்கொண்ட கோயில் விமானத்தின் நிழல் தரையில் விழும். அதுபோலவே உச்சியில் இருக்கும் கோபுரம் ஒரே கல்லில் செய்யப்பட்டது என்பதும் தவறானது. கோயிலின் ஒரு பக்கத்தில் தொப்பி அணிந்த நிலையில் ஒரே ஒரு வெள்ளைக்காரரின் உருவம் பதிக்கப்பட்டிருக்கும். இதை வைத்து ஏராளமான கதைகள் உண்டு. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வரவே இல்லை. அப்புறம் எப்படி? பின்னால் வரப்போகிறார்கள் என்பதை முன்னரே தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறார்கள் அல்லது அப்போதே தமிழர்கள் மேற்கு நாடுகளுடன் கடல்வழித் தொடர்பைக் கொண்டிருந்தார்கள் என்று பலவித கருத்துகள். எதுவுமே உண்மை இல்லை. ராஜராஜனுக்குப் பிறகு, 1620-ல் தஞ்சாவூரை நாயக்கர்கள் ஆண்டபோது, டேனிஷ் நாட்டு வெள்ளையர்களுடன் வியாபார உறவு வைத்திருந்தார்கள். அவர்களை மரியாதைசெய்ய ,பெரியகோயிலில் நாயக்கர்களால் பொறிக்கப்பட்டதுதான் அந்த உருவம்!

    • பெரியகோயிலின் நிஜப் பிரமாண்ட பெருமை வேறு. பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே இருக்கும் லிங்கத்தின் பீடம், 3 அடி உயரமும் 55 அடி சுற்றளவும், 6 அடிக்கு கோமுகமும்கொண்டது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த விஸ்வரூபப் பீடத்தைச் செய்வதற்கு, குறைந்தபட்சம் 500 டன் எடையுள்ள பாறையை மலையிலிருந்து வெட்டி, நகர்த்திக் கொண்டுவந்திருக்க வேண்டும்! 


    • சோழர் காலம் தொடங்கி, விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம், மராட்டிய ஆட்சிக் காலம், ஆங்கிலேயர்களின் காலம் எனக் கடந்த 1000 வருட இந்திய ஓவியங்கள் அனைத்தும் பெரிய கோயிலில் உண்டு. இந்தியாவில் வேறு எங்கும் இப்படி ஓர் ஓவிய சங்கமத்தைக் காண முடியாது!