Wednesday, December 14, 2016

Michel de Nostredame - An update

குறி சொல்லும் நிபுணர், இயற்பியலாளர், இயற்கை மருத்துவர் நாஸ்ட்ராடமஸ்ஸுக்கு இன்று பிறந்தநாள். ஹிட்லர் தனது சர்வாதிகாரத்தால் பெற்ற வெற்றி, செப்டம்பர் பதினொன்று தாக்குதல், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர், ஹிரோஷிமா, நாகசகி அணுகுண்டுத் தாக்குதல் உள்ளிட்டவை நாஸ்ட்ராடமஸ்ஸின் கணிப்பின்படியே நடந்துள்ள பகீர் சம்பவங்கள். கடந்த நான்கு நூற்றாண்டுகளாக நாஸ்ட்ராடமஸ் கூறிய அனைத்து சம்பவங்களும் நடைபெற்றதால் இனி வரும் காலங்களிலும் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் கண்டிப்பாக நடந்தே தீரும் என உலகம் முழுதும் ஒருசாரரால் நம்பப்பட்டு வருகிறது.


ரஷ்ய-அமெரிக்க உறவு முறிவு, இஸ்லாமிய கிருத்துவ நாடுகளுக்கிடையே நடக்கப்போகும் மூன்றாம் உலகப்போர், துருவப் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் கடல்மட்ட உயர்வு போன்ற அவரது எதிர்கால கணிப்புகள் சில நாட்டு மக்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளுக்குள் பீதி அடையச்செய்கின்றன. இப்படி உலகத்தையே உலுக்கும் உண்மைகளை வெளிக்கொண்டுவரும் 'தி ப்ரோபேசீஸ்' புத்தகத்தின் ஆசிரியர் நாஸ்ட்ராடமஸ்ஸின் வாழ்க்கை வரலாறு பற்றி நாமும் தெரிந்துகொள்வோம்.


நாஸ்ட்ராடமஸ்ஸின் இயற்பெயர் மைக்கேல் டி நாஸ்ட்ராடேம் (Michel de Nostredame). 1503-ம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, ஃபிரான்ஸ் நாட்டின் செயின்ட்-ரெமி-டி மாகாணத்தில், ஜாக்வஸ் டீ நாஸ்ட்ராடேம் ( Jacques de Nostredame ), ரேனைர் ( Reynière) தம்பதியருக்கு மகனாகப்பிறந்தார். யூதப்பூர்வீகம் கொண்ட இவரது முன்னோர்கள் கிருத்துவமதத்தின் கத்தோலிக்கப் பிரிவில் இணைந்தனர். நாஸ்ட்ராடமஸ், பள்ளி முடித்ததும் தனது பதினைந்தாவது வயதில் அவிக்னன் பல்கலைக்கழகத்தில் வானவியல், கணிதம், ஜோதிடம், இயற்பியல் பாடங்கள் பயின்றார். அப்போது பிரான்சில் பிளேக் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கு இயற்கை மூலிகை மருத்துவத்தின் மூலமாக மருந்து கண்டுபிடிக்க 1521-ம் ஆண்டுமுதல், எட்டு வருடங்கள் ஃஃபிரான்ஸ் நாட்டின் கிராமப்புறங்களில் பயணம் செய்தார். பின்னர் மாண்ட்பெல்லியார் பல்கலைக்கழகத்தில் (University of Montpellier) மருத்துவம் பயின்றார்.


ஓவியர் ஜூல்ஸ் ஸீசர் ஸ்காலிகர் (Jules-César Scaliger) அழைப்பின் பேரில் ஏகன் (Agen) நகருக்குச்சென்ற நாஸ்ட்ராடமஸ், அங்கு தனது வருங்கால மனைவி ஹென்ரிட் டி என்காஸ்ஸை (Henriette d'Encausse) சந்தித்தார். இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மலர, நாஸ்ட்ராடமஸ் ஹென்ரிட்டைக்கரம் பிடித்தார். இந்தத் தம்பதியருக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஃபிரான்ஸ் முழுவதும் பரவிய பிளேக் நோய் நாஸ்ட்ராடமஸ்ஸின் குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை. திருமணமான மூன்றே ஆண்டுகளில் மனைவி, இரண்டு குழந்தைகள் ஆகியோர் பிளேக் நோயின் தாக்கத்தால் மரணமடைந்தனர். துக்கத்தில் ஆழந்த நாஸ்ட்ராடமஸ், ஃபிரான்ஸில் இருந்து இத்தாலி நோக்கிப் பயணம் செய்தார்.


11 வருடத் தொடர்பயணத்தின் முடிவில் 1545-ம் ஆண்டு மருத்துவர் லூயிஸ் சேர்ரேவுடன் (Louis Serre) சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பிளேக் நோய்க்கு, தடுப்புமருத்து கண்டுபிடித்தார். இந்தத் தடுப்புமருந்தை, பின்னாட்களில் தான் வாழ்ந்த ஃபிரான்சின் சலோன் டி மாகாணம் (Salon-de-Provence) முழுவதும் பரப்பினர். இதனால் மக்களிடையே பிளேக் தாக்கம் குறைந்தது. அந்த நகரத்தில் வாழ்ந்த ஆன் போன்சார்ட் (Anne Ponsarde) என்ற பணக்கார விதவையை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உட்பட ஆறு குழந்தைகள் பிறந்தனர். இந்த காலத்தில் நாஸ்ட்ராடமஸ் தன் வாழ்வில் செல்வசெழிப்பில் திளைத்தார்.


இதுவரை மருத்துவத்தின்மேல் ஈர்ப்பு கொண்டிருந்த நாஸ்ட்ராடமஸ் பின்னர் ஒருமுறை இத்தாலி சென்றபோது தனக்குக் குறி சொல்லும் கலை மேல் ஆர்வமும் திறமையும் உள்ளதென்பதை உணர்ந்தார். இதனையடுத்து 1550ம் ஆண்டுக்கான எதிர்காலத்தைக் கணிக்கும் புத்தகத்தை எழுதினார். ஆல்மனாக் (Almanac) என்று கூறப்படும் இப்புத்தகத்தில் பருவமாற்றங்கள், விவசாயிகள் பயிர்நட ஏற்ற காலங்கள், நல்லநேரம், கெட்டநேரம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது. நாஸ்ட்ராடமஸ்ஸின் குறிசொல்லும் திறமையைப்பார்த்து வியந்த இரண்டாம் ஹென்ரி மன்னரின் மனைவி, அவரது வாழ்நாளின் இறுதி காலமான 1566ம் ஆண்டு, அவரைத்தனது குழந்தைகளுக்கு ஆசிரியராக நியமித்தார். ஜூலை ஒன்றாம் தேதி மாலை நாஸ்ட்ராடமஸ், தன் பணியாளர் ஜீன் டி சாவிங்கியிடம் (Jean de Chavigny) 'நாளை சூரியன் உதிக்கும் போது என்னை நீ உயிரோடு பார்க்க முடியாது' என்று கூறிச் சென்றார். அவர் சொன்னதுபோலவே மறுநாள் காலை முட்டு வாதத்தால் பாதிக்கப்பட்டு அவரது படுக்கைக்கு அருகே இறந்துகிடந்தார்.


தனது மரணத்தையே கணிக்கும் ஆற்றல் பெற்றவர் என்று புகழப்பட்டாலும் விமர்சனங்கள், சர்ச்சைகள் மற்றும் மாற்றுக்கருத்துக்களுக்கு பஞ்சமே இல்லாததுதான் நாஸ்ட்ராடமஸ்ஸின் கணிப்புகள். நாஸ்ட்ராடமஸ்ஸின் குறிசொல்லும் பாணி, ஒருதலைப்பட்சமாக உள்ளது, கிருத்துவ மதத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக உள்ளது என்ற விமர்சனம் அவர் வாழ்ந்த காலத்திலேயே எதிராளிகளிடமிருந்து கிளம்பியது. இன்றளவும் புகழ்பெற்ற இவரது குறி சொல்லும் புத்தகமான 'தி ப்ரோபேசீஸ்' (The Prophecies) பிற மதத்தினரை இழிவுபடுத்துவதாக நினைத்த சிலர் இவரை மனநலம் பாதிக்கப்பட்டவர், முட்டாள் என்று கடுமையாக விமர்சித்தனர். லத்தின், கிரீக் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட இவரது குறி சொல்லும் வாசகங்கள் நான்கு வரிகள் கொண்ட குழப்பமான கவிதை வடிவிலே இருக்கும். இவை குவாட்ரெய்ன்ஸ் (quatrains) என்று அழைக்கப்படும்.


'தி ப்ரோபேசீஸ்' நூலில் இடம்பெற்றுள்ள குவாட்ரெய்ன்ஸ் கவிதைகளைப் படித்து, எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களின் இடம், காலம், நேரம் போன்ற விவரங்களை சரியாத்தெரிந்துகொள்வது கடினம். தான் வாழ்ந்த காலத்தில் தனது எதிராளிகளால் தனக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே நாஸ்ட்ரடமஸ் இவ்வாறு யாருக்கும் எளிதில் புரியாத கணிப்புகளை எழுதினார் என்ற கருத்தும் நிலவிவருகிறது.


நாஸ்ட்ராடமஸ் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரகஅமைப்புகளை வைத்து எதிர்காலத்தைக் கணிக்கிறார். இது சரியான கணிப்பாகாது என்று இன்றளவிலும் பிரபல ஜோதிடர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். மற்றொரு சாரார், அவரை இறைதூதராகவே எண்ணுகின்றனர். அவரது கணிப்பின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்துள்ளனர். இன்றளவும் நாஸ்ட்ராடமஸ்ஸின் ' தி ப்ரோபேசீஸ்' புத்தகத்தின் மூன்று பாகங்களுக்கு, பல உலகஅறிஞர்கள், ஜோதிடர்கள் விளக்கஉரை எழுதிக்கொண்டிருக்கின்றனர்.


 பல உலக மொழிகளில் அவரது புத்தகங்கள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. நாஸ்ட்ராடமஸ் கணிப்பு குறித்த சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், சில நாட்களுக்கு முன், நம்மைக் கடந்துபோன 'வர்தா' புயல் உட்பட கனமழை, பஞ்சம், போர், நிலநடுக்கம் ஆகிய நிகழ்காலப் பேரிடர்கள், நாஸ்ட்ராடமஸ்ஸின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்குமா? என்ற சந்தேகம் நம்மில் பலர் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலாது.