Saturday, September 12, 2015

செப் 11( 1893): சிகாகோவில் விவேகானந்தர் நிகழ்த்திய எழுச்சியூட்டும் உரை

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் எழுச்சியூட்டும் உரையை விவேகானந்தர்  இன்று தான் 1893-ல் நிகழ்த்தினார் என்றும் வழிகாட்டும் அவரின் உன்னத வாசகங்கள் இவை

* வாய்மை எந்தச் சமூகத்துக்கும் மரியாதை செலுத்துவதில்லை. வாய்மையைச் சமூகம் மதிக்க வேண்டும். இல்லையேல் அந்தச் சமூகம் அழிந்துபோகும்.


* இளம் நண்பர்களே! வலிமையோடு இருங்கள் என்பதே என் அறிவுரை. நீங்கள் பகவத் கீதை படிப்பதன் மூலம் சொர்க்கத்தை நெருங்குவதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் வேகமாக அடைய முடியும். இவை தைரியமிகுந்த வார்த்தைகள்; இருந்தாலும் உங்களை நேசிப்பதால் இதனைச் சொல்கிறேன். ... தோள்களின் வலிமை கூட்டுங்கள். தசைகளை மேலும் உறுதிப்படுத்துங்கள்.

* முரடர்களை எதிர்கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கைக்கான பாடம். கடுமையனவற்றைத் தீரத்தோடு எதிர்கொள்ளுங்கள். குரங்குகளைப் போல வாழ்க்கையின் துயரங்கள் நாம் அஞ்சி ஓடாத பொழுது பின்னோக்கி செல்லும்.

* ஒரு சிந்தனையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை வாழ்க்கையாக்கி கொள்ளுங்கள். அதைப்பற்றிக் கனவு காணுங்கள், அதனோடு வாழுங்கள். உங்கள் மூளை, தசை,நரம்பு, எல்லாப் பாகங்களும் அந்தச் சிந்தனையால் நிரம்பி வழியட்டும். இதுவே வெற்றிக்கான வழி.

* உயர்ந்த பொருட்கள் உங்கள் காலடியில் உள்ளன, ஏனெனில், நீங்கள் தேவலோக நட்சத்திரங்கள். எல்லாம் உங்கள் காலடியில் உள்ளன. உங்களில் கைகளில் அள்ளி விண்மீன்களை நீங்கள் விரும்பினால் விழுங்க முடியும். இதுவே உங்களின் உண்மையான பண்பு. வலிமையோடு இருங்கள். எல்லா மூடநம்பிக்கைகளையும் கடந்து விடுதலையுற்று இருங்கள்.

* நாம் 'என்னைத் தீண்டாதே' என்பவர்களாக இருக்கிறோம். நம்முடைய மதம் சமையலறையில் இருக்கிறது. நம்முடைய கடவுள் சமையல் சட்டியில் இருக்கிறார், நம்முடைய மதம்,'நான் புனிதமானவன், என்னைத் தீண்டாதே' என்பதாக இருக்கிறது. இது இன்னுமொரு நூறு ஆண்டுகாலம் தொடர்ந்தால் நாம் எல்லாரும் பைத்தியக்கார விடுதியில் தான் இருப்போம்.

* எல்லா விரிவடைதலும் வாழ்க்கை. சுருங்கிக்கொள்ளுவது எல்லாம் மரணம். எல்லா அன்பும் விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிக்கொள்ளுதல். இதுவே வாழ்க்கையின் ஒரே சட்டமாகும். அன்பு செய்கிறவர் வாழ்கிறார், சுயநலத்தோடு இருப்பவன் இறக்கிறான். அன்புக்காக அன்பு செய்யுங்கள், அதுவே வாழ்க்கையின் ஒரே சட்டம் என்பதற்காக அன்பு செய்யுங்கள். சுவாசிப்பதற்காக அன்பு செய்யுங்கள். இதுவே சுயநலமற்ற அன்பு, செயல் அனைத்துக்குமான ரகசியமாகும்.

* ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை, செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை, மறந்து விடாதீர்கள். அவர்களும் ரத்தமமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள். வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள். பெருமையோடு, 'நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!' என்று ஆராவரியுங்கள்.

* நீங்கள் சுயநலம் அற்றவரா என்பதே இப்போதைய கேள்வி. ஆமாம் என்றால் எந்த ஒரு மதப்புத்தகத்தையும் படிக்காமலேயே, எந்த ஒரு தேவாலயத்திற்குள்ளோ கோயிலுக்குள்ளோ போகாமலேயே நீங்கள் முழுமையானவர் ஆகிறீர்கள்.

* கோடிக்கணக்கான மக்கள் பசியிலும், அறியாமையிலும் உழல்கிற பொழுது அவர்களின் நசிவில் கற்றுவிட்டு அவர்களின் குறைகளுக்குச் செவிமடுக்காமல் இருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் தேசத்துரோகியாகவே கருதுவேன்.

* வெற்றி பெற உங்களுக்கு அளவில்லாத உத்வேகமும், முனைப்பும் இருக்க வேண்டும். "நான் பெருங்கடலைப் பருகுவேன்' என்று உத்வேகம் மிகுந்த ஆன்மா கூறவேண்டும்; "என் விருப்பத்தில் மலைகள் பொடிப்பொடியாகும்!' அப்படியொரு ஆற்றலோடு இருங்கள்; அப்படியொரு முனைப்போடு முன்னேறுங்கள். ஓயாமல் உழையுங்கள், உங்களின் இலக்கை அடைவீர்கள்.


* பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போராட்டங்களை எதிர்கொள்ள உதவாத கல்வி, அவர்களின் பண்பின் ஆற்றலை வெளிப்படுத்தாத கல்வி, வாரிக்கொடுக்கும் தயாள உள்ளத்தைத் தராத கல்வி, சிங்கத்தின் தீரத்தை தராத கல்வி - கல்வி எனப்படும் தகுதியுடையது அல்ல. தன்னுடைய சொந்தக் கால்களில் ஒருவன் நிற்கச் செய்வதே உண்மையான கல்வியாகும்.

* யாரையும் நிந்தனை செய்யாதீர்கள். உங்களால் முடியுமென்றால் உதவிக்கரம் நீட்டுங்கள். இல்லை என்றால், கைகளைக் கூப்பி உங்கள் சகோதரர்களை வாழ்த்தி அவர்களின் பாதையில் அவர்களைச் செல்ல அனுமதியுங்கள்.

* கோழையும், மூடனுமே 'இது என்னுடைய விதி' என நொந்து கொள்வார்கள். ஆனால், வலிமை மிகுந்தவன் எழுந்து நின்று 'என் விதியை நான் தீர்மானிப்பேன்' என்பான். வயதாகிக்கொண்டிருப்பவர்கள் தான் விதியைப் பற்றிப் பேசுவார்கள். இளைஞர்கள் ஜோதிடத்தை நோக்கி செல்வதில்லை.

* கண்மூடித்தனமாக எதையும் நம்புவது ஆன்மாவை அழிப்பதாகும். நீங்கள் நாத்திகவாதியாகக் கூட இருங்கள், ஆனால், எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.

Saturday, September 05, 2015

செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

'கப்பலோட்டிய தமிழன்'வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
 September 5.  விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய
பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில்
பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில்
வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு
இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின்
விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில்
வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று
அழைத்தார்கள் தலைவர்கள்.



இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில்
தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி
உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ்
கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார்.
ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து
கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா
எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ்.
எஸ். லாவோ" கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம்
பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும்
குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று
அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது

தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில்
கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்
வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல்
ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார்.
விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது
தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு
விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர்
வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால்
அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து
ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி
ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி
ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு
மசியவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே  சிதம்பரம்பிள்ளையின்
பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்
பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்
விடுதலை பெறும்" என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்
முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து
புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த
கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்
நோவதுவுங் காண்கிலையோ?'
என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார். விடுதலைபெற்று
வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு.

அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை
வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,"இந்நூலின்
எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !" என்று குறிப்பிட்டார்.
சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார்.
மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார்.

அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக
தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை
நீங்காமலே வாழ்ந்து  தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர்
மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின்
மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய உயிர் துறந்தார்.